அத்தியாயம் 13
காலை எழுந்ததில் இருந்து இதோ இப்போது மணமகளாக மேடையில் நிற்கும் வரை, அவளைப் பற்றி எத்தனை விதமான எள்ளல் பேச்சுகள்.
அவை எல்லாவற்றையும் கவிவாணன் ஒருவருக்காக மட்டும் தான் அவள் சகித்துக் கொண்டு நின்றிருந்தாள் என்பது, அவர் மட்டுமே அறிந்த உண்மை.
ஆனால் இதுவரை அவளைப் பற்றி ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லோருமே கவிவாணனுக்கும் மதிவேணிக்கும் ஏதோவொரு வகையில் வேண்டப்பட்டவர்களாக இருக்க, தாமரையாலும் அவர்களை எல்லாம் எடுத்தெறிந்து பேச முடியவில்லை.
ஆனால் இப்போது வந்திருந்த வரலக்சுமி அப்படியல்ல, இருவருக்கும் ஒரே வயது இருவருக்கும் இருவரைப் பற்றியும் ஓரளவுக்காவது தெரிந்திருந்தது.
அதோடு வரலக்சுமி எப்போதுமே அவளை மட்டம் தட்டிப் பேசுவதுண்டு, அப்போதெல்லாம் அதற்கு பதிலடி கொடுக்காமல் தாமரை எப்போதும் இருந்ததும் இல்லை, இப்போதும் அதே போலத் தான் அவள் பேசுவதற்கு பதில் பேச்சு கொடுத்தால்தான் தாமரைக்கும் நிம்மதியாக தூக்கம் வரும்.
இவள் யார் என்னைப் பற்றிப் பேசுவதற்கு, தமிழ் ஒரு காலத்தில் இவளைக் காதலித்தார் என்பதற்காக எல்லாம், நீ என்ன வேண்டுமானாலும் கிண்டலடி நான் அதை ஈ என்ற இளித்துக் கொண்டே கேட்டுக் கொண்டு சுரணையில்லாமல் நிற்கிறேன் என இவளுக்காக நிற்க முடியாது தானே, என நினைத்தவள் சொடக்குப் போட்டு வரலக்சுமியைத் தன் பக்கம் திரும்ப வைத்தாள்.
அவள் அப்படி சொடக்கிட்டு தன்னை அழைப்பாள் என வரலக்சுமியோ, அவள் அவ்விதம் நடந்து கொள்வாள் என தன் மருமகளையே பார்த்துக் கொண்டிருந்த கவிவாணனோ கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
“ஹேய்.. என்னடீ திமிரா.. யாரு யாரை சொடக்கு போட்டுக் கூப்பிடுறது.. என்ன தகுதி இருக்குனு நீ இங்கே நிக்கிறாய்.. என்ன தகுதி இருக்குனு நீ என்னைப் பார்த்து சொடக்கு போடுவே..”
“ஏன் கண்ணு தெரியலியா.. தாமரையாகிய நான் மூளையே இல்லாத இந்த வரலக்சுமியை பார்த்து சொடக்கு போடுறேன்.. நீ என்ன தகுதி இருக்குனு இங்கே வந்திருக்கிறாய்.. உன்னைய விட எல்லா விதமான தகுதியுமே எனக்கு நல்லாவே இருக்கு.. இதைப் பாரு வந்தமா ஃபோட்டோக்கு போஸ் குடுத்தமா.. போடுற சாப்பாட்டை மூக்கு முட்ட ஒரு புடி புடிச்சமா.. வந்த சுவடே தெரியாமல் போனமானு இருக்கணும்.. அதை விட்டிட்டு அடுத்தவைக்கு என்ன தகுதி இருக்கு தராதரம் இருக்குனு உன்னோட தகுதியை மறந்து அலட்டிக் கொண்டு நிற்கக் கூடாது..”
“ஏய்..”
“அடச்சீ எதுக்கு காதுக்குள்ள வந்து கத்துறாய்.. அது சரி என்னைய மிடில்கிளாஸ்னு சொன்ன போல இருந்திச்சே.. நான் மிடில்கிளாஸ் தான் அதை நான் எங்கயும் இல்லைனு சொன்னதில்லை.. ஆனா மேடம் என்ன பெரிய ரிச்வுமன் என்ற நினைப்புல சுத்திக்கிட்டு திரியிற மாதிரி இருக்கே.. எனக்காவது சொந்தமா ஒரு வேலை இருக்கு.. உங்களுக்கு என்ன இருக்கு..”
என்ற தாமரையின் கேள்விக்கு வரலக்சுமிக்கு பதிலே வரவில்லை, மாறாக கோபத்தில் உதடுகள் துடித்தது தான் மிச்சம்.
இவை எல்லாவற்றையும் பேசாமல் பார்த்துக் கொண்டு நின்றானே தவிர, தமிழ் வாயே திறக்கவில்லை, அவனது அந்த அமைதி தாமரைக்கு கடுப்பைக் கொடுத்தது.
தாமரைக்கு நேரம் ஆக ஆக கோபம் எகிறியது, வரலக்சுமி எப்படி தன்னை இழுத்துப் பேசலாம், அவளை விட்டு திருமணம் செய்தது தமிழ் தானே, அவனை மட்டந் தட்டிப் பேச வேண்டியது தானே, அதை விட்டு தன்னை மட்டம் தட்டலாமோ, சரி அவள் தான் தன்னை மட்டம் தட்டிக் கதைக்கிறாள் என்றாள், இவன் கல்லுப் பிள்ளையார் போல நிற்கிறானே கல்லுளிமங்கன் என மானசீகமாக கணவனையும் திட்டித் தீர்த்தாள்.
அதற்குள் நஸ்ரூல் இரண்டு பெண்களுக்கும் பக்கத்தில் வரவும், சட்டென்று தன் முகபாவனையை மாற்றிக் கொண்ட வரலக்சுமி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து விட்டு கீழே இறங்க போக, மீண்டும் அவளை சொடக்குப் போட்டு அழைத்தாள் தாமரைச்செல்வி.
“இப்போது என்னடி..”
என்பது போல வரலக்சுமியும்
“அவளை நீ இன்னும் விடவில்லையா..”
என்பது போல தமிழும் ஒரே நேரத்தில் தாமரையைப் பார்த்தார்கள்.
தாமரையும் தமிழுக்கும் வரலக்சுமிக்கும் மட்டும் கேட்கும் குரலில்
“இந்தா பாரும்மா.. உன்னைய அம்போனு விட்டிட்டு கல்யாணம் கட்டிக் கிட்டது இந்தா நிக்கிறாரே சீமைத்துரை இவரு தான் சரியா.. நியாயமாப் பார்த்தா நீ அவரைத் தான் கழுவி ஊத்தணும் இல்லாட்டிக்கு போனால் சபிச்சுத் தள்ளோணும்.. அதை விட்டு பக்கத்துல நின்ன ஒரே குத்தத்துக்காக என்னைய இழுத்துப் பேசக் கூடாது.. நான் ஒரு நேரம் போல ஒரு நேரத்தில நீ என்ன என்றாலும் பேசும்மா நான் கேட்டிட்டு சும்மா இருக்கேன்ற போல இருக்க மாட்டேன்.. கோபம் வந்தால் யாரு எவருனு பாக்காமல் கிடக்கிறதால தூக்கி அடிச்சிருவன்.. மரியாதையா அந்த மனுஷனை ஒரு மூணு வார்த்தையாவது திட்டீட்டு போ.. பாவம் செய்றது அவரு பழிப் பேரு வாங்கிறது நானாக்கும் நல்லா இருக்குதே கதை..”
என்க, அவள் பேச்சில் வரலக்சுமி முழிக்க, தமிழோ வேகமாகத் திரும்பி தாமரையைத் தான் பார்த்தான்.
அவன் பார்த்து வளர்ந்த தாமரைக்கு இப்படிப் பேசவே தெரியாது. யார் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுக் கொண்டு நிற்பாள், ஓரிரு வார்த்தைகள் மெதுவாக வெளியே வரும், மிஞ்சி மிஞ்சி போனால் அழுவாள் அவ்வளவு தான் தமிழ் கண்ட தாமரை.
இந்த தாமரை அவனுக்கு புதிது, அதிலும் அவளது
“உன்னைய அம்போனு விட்டிட்டு கல்யாணம் கட்டிக் கிட்டது இந்தா நிக்கிறாரே சீமைத்துரை இவரு தான் சரியா.. மரியாதையா அந்த மனுஷனை மூணு வார்த்தையாவது திட்டீட்டு போ..”
என்ற வார்த்தைகள் லேசாக சிரிப்பு வர வைக்கவே, அவன் நஸ்ரூலை இழுத்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கி விட்டான்.
“டேய் தமிழ்.. எங்கடா இழுத்திட்டுப் போறாய்..”
“அவ பேசின பேச்சைப் பார்த்தியாடா..”
“யாருடா.. வரலக்சுமி ஏதும் சொன்னாளாடா..”
“அவளை யாருடா பார்த்தா.. நானு.. என்னோட பொண்டாட்டியை சொன்னேன்..”
“ஓஹோ.. உம் பொண்டாட்டியா..”
“எம் பொண்டாட்டினா சொன்னேன்..”
“அப்புடி தான்டா சொன்னாய்..”
“ஓ..”
“என்ன ஓ..”
“எனக்கு இன்னுமொரு உதவி நீ செய்யணுமே..”
“அடேய் நீ உதவினு கேட்டாலே எனக்கு உள்ளுக்குள்ள உதறுதடா..”
“ஏன் அப்புடி.. ஏதும் வியாதியா இருக்க போது..”
“நீ ஏன்டா சொல்ல மாட்டாய்.. உதவிங்கிற பேரில ஏதாவது ஏழரையைக் கூட்டி விடுவாய்.. அதை முடிக்கிறதுக்குள்ள முழி பிதுங்கிப் போறது எனக்கு தானே..”
“ஒரு நண்பன்னு இருக்காய் இதைக் கூட எனக்காக செய்ய மாட்டியோ..”
“ஆ ஊனா இது ஒண்ணை சொல்லிடு ராசா.. நீ நல்லா வருவே.. நான் தான் நாசமாப் போகப் போறேன்..”
“அதெல்லாம் போக நான் விட மாட்டேன்..”
“அது என்னமோ உண்மை தான்.. ஏன்னா உன்ரை கையால என்னைய குழி தோண்டிப் புதைச்சு புதைச்சு வெளியால விடுறது தானே உன்னோட பொழுதுபோக்கே.. நான் நாசமா போனால் அது உன்னால முடியாதே..”
என்றவனை தமிழ் வழமை போல முறைக்க,
“சரி சரி.. உடன மலை ஏறிடாத.. என்ன செய்யணும்னு சொல்லு.. செய்து தொலைக்கிறேன்.. யார் யார்கிட்டேலாம் இடி வாங்க வைக்க போறானோ..”
என நஸ்ரூல் பணிய, தான் கேட்க நினைத்த உதவியை தமிழ் கேட்க, அவன் கேட்ட உதவியில் தன்னை மறந்து தன் நண்பனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்த நஸ்ரூலின் கண்கள் கோபத்தில் சிவக்கத் தொடங்கின.
Interesting😍😍
Paya pulla apdi yenna kettu erukkum 🤔🤔 oruvela lotus ah asinga paduthura maari yetthum solli erupano🙄🤔
அச்சோ அப்படி என்னதை கேட்டான் தமிழு
interesting . appadi enatha ketutan tamil