அத்தியாயம் 14
தாமரையினதும் தமிழினதும் திருமண வரவேற்பு முடிந்து நான்கு தினங்கள் ஆகி விட்ட நிலையில், கவிவாணனின் அறையில் தாமரைக்கும் அவருக்கும் ஏதோ காரசாரமான விவாதம் போய்க் கொண்டிருந்தது.
அங்கே என்ன பேச்சு அப்படிப் போகிறது என்ற எண்ணம் தமிழுக்கு வராமல் இல்லை, அவனாகப் போய் எட்டிப் பார்த்தாலும் யாரும் ஒன்றும் சொல்லப் போவதுமில்லை, ஆனாலும் சரக்கு மலிந்தால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும் என்பது போல அவர்களாகவே வந்து சொல்வார்கள் என அவன் வழமை போல அலட்சியமாகக் கடந்து செல்ல, அவனை வேகமாகக் கடந்து கொண்டு மாடிக்குப் போனாள் தாமரை.
இவ என்ன நான் ஒருத்தன் இங்க இருக்கிறதைக் கூடக் கண்டுக்காமல் போறாளே என்பது போல தமிழ் அவளைப் பார்க்க, அவளுக்கு இருந்த ஆதங்கத்தில் அவள் எங்கே இவனைப் பார்த்தாள்.
போன வேகத்தில் கீழே வந்தவள், தன் தங்கைகளை அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட, எங்கே போகிறாய் என தமிழும் கேட்கவில்லை, எங்கே போகிறேன் என தாமரையும் சொல்லவில்லை.
சில நொடிகள் தாமதித்தவன் வேகமாகத் தந்தையிடம் சென்றான், ஏற்கனவே தன்னுள் எதையோ முனகிக் கொண்டிருந்தவர் உள்ளே வந்தவனைக் கவனிக்கவில்லை.
“இந்தப் பிள்ளை ஏன் தான் இப்புடி நடந்துக்குதோ.. எவ்வளவு சொன்னாலும் காது குடுத்து கேட்க மாட்டேங்கிறாளே.. இவ்வளவு பெரிய வீட்டுல ரெண்டு பிள்ளைங்க தங்கிக்க இடமா இல்லை.. அப்புடியே அவங்க அப்பனை மாதிரி தான் வைராக்கியமான பொண்ணா இருக்காளே..”
“என்னாச்சு.. எந்தப் பிள்ளை நீங்கள் சொன்னதைக் காது குடுத்துக் கேக்கலை.. எம் பொண்டாட்டியா..”
“யாரு தமிழா வா வா.. உம் பொண்டாட்டி வெளிய போயிட்டாளா..”
“ஆமா போயிட்டா..”
“ஏதாச்சும் உன் கிட்டே சொன்னாளா..”
“இல்லையே..”
“ஓ..”
“ஏன் என்னாச்சு..”
“நீ ஏதும் அவ கிட்டே தேவையில்லாமல் பேசினியா..”
“நான் என்ன அவ கிட்டே தேவையில்லாமல் பேச போறேன்..”
“அப்போ உங்கம்மா தான் ஏதும் பேசியிருக்கணும்..”
“புரியலை.. அவங்க என்ன பேசியிருப்பாங்க..”
“ஏண்டா.. தாமரையோட தங்கச்சிங்க இந்த வீட்டுல இருக்கிறதால உனக்கு ஏதும் பிரச்சனையா..”
“அவங்க இருக்கிறதால எனக்கு என்ன பிரச்சினை.. அவங்க அவங்களோட அக்கா வீட்டுல அவ கூட இருக்காங்க இதுல எனக்கென்ன பிரச்சினை..”
“டேய் நீ நல்லவனா இல்லை கெட்டவனானு உன்னை பெத்த அப்பன் எனக்கே இன்னும் தெரியலியே.. பாவம் தாமரை உன் கூட எப்புடிக் குப்பை கொட்டப் போறாளோ கடவுளுக்கு தான் வெளிச்சம்..”
“என்னது புரியலை..”
“உங்கம்மா எங்க போனானு கேட்டேன்..”
“உங்க பொண்டாட்டி எங்க போனானு எனக்கென்ன தெரியும்..”
“ஓ..”
“அது சரி.. அவ எங்க போறா..”
“எவ உம் பொண்டாட்டியா..”
“ம்ம்..”
“உம் பொண்டாட்டி எங்க போறானு எனக்கென்ன தெரியும்..”
என்று பதிலடி கொடுத்த தந்தையைப் பார்த்து முறைத்தவன், வேகமாக வெளியே போக
“அவ தன்னோட பழைய வீட்டுக்கு போயிட்டாடா.. அங்க நாலு நாள் இங்க மூணு நாளுனு தான் இனிமேல் தங்கிப்பாளாம்..”
எனச் சத்தமாகக் கத்தினார் கவிவாணன்.
சட்டென்று பிரேக் போட்டது போல நின்றவனோ தந்தையைக் கேள்வியாகத் திரும்பிப் பார்க்க,
“உந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்..”
என்று கேட்டார் அவர்.
“அதெப்படி அங்க நாலு நாளு.. நீங்களும் அதுக்கு சரினு சொல்லி அனுப்பி வைச்சீங்களா..”
“நான் சரினு சொல்லிக்க முதலே அவ போயிட்டா.. அதோட அவளுக்கு அனுமதி குடுக்க நான் யாரு..”
“என்ன கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் பேசுறீங்க.. அவ கேட்டாளாம் இவரு அனுமதி குடுக்க முதலே போயிட்டாளாம்.. இவரும் அப்புடியே விட்டிட்டாராம்.. என்னை கூப்பிட்டு இருக்க வேண்டியது தானே..”
“கூப்பிட்டு அவ கூட அனுப்பி வைச்சிருக்கணும் என்று சொல்றியா..”
“அவளை போக விடாமல் செய்து இருப்பேன்..”
“யாரு நீ.. சரி இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை.. அவளையும் அவ தங்கச்சிகளையும் போய் கூட்டீட்டு வா..”
“நீங்கள் சொன்னாலும் சொல்லலைனாலும் அதை தான் செய்ய போறேன்..”
“நிஜமாவாடா..”
“உங்க பொண்டாட்டி எங்கேனு தேடுற வழியை பாருங்க..”
என்று கொண்டே அவன் சென்று விட, ஆழப் பெருமூச்சு எடுத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார் கவிவாணன்.
இங்கே தன் தங்கைகளோடு தங்கள் வீட்டுக்கு வந்த தாமரைக்கு, புகுந்த வீடே மறந்து போனது.
தவச்செல்விக்கும் தனுச்செல்விக்கும் தான், தங்களால் அக்கா அலைய வேண்டி உள்ளதே என்ற கவலையும், அக்கா இல்லாது போனால் தங்களின் நிலை என்ன என்கிற மலைப்பும் போட்டு பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது.
“பெரியக்கா..”
“என்ன தனு..”
“எங்களைப் பேசாமல் ஏதாவதொரு ஹாஸ்டலில சேர்த்து விடேன்..”
“புரியலை..”
“இல்லை.. எங்களால பாவம் உனக்கு தான் ரொம்ப சிரமம்.. எங்கையாவது ஹாஸ்டல்ல சேர்த்து விட்டால் உனக்கும் எங்களைப் பத்தி யோசிச்சுக் கவலைப் பட வேண்டி இருக்காது தானே..”
“அப்புறம்..”
“தேவைப் படும் போது வந்து நாங்கள் உன்னையப் பாத்துக்கலாமே..”
“பார்ரா.. மேடம் ஐடியா எல்லாம் குடுக்கிறாங்க.. இதைப் பாரு தனு.. உன்னோட பெரியக்கா ஒண்ணும் செத்துக்கித்துப் போயிடலை..”
“அச்சோ அப்புடி எல்லாம் சொல்லாதேக்கா..”
“வேறை எப்புடி சொல்லணும்.. நான் செத்துப் போன பிறகு வேணும்னா நீங்கள் ரெண்டு பேரும் ஏதாவது ஹாஸ்டல்ல போய்த் தங்கிக்கோங்க.. நான் சொல்ல வாறது புரியுதா நீங்கள் ரெண்டு பேரும் ஹாஸ்டல்ல இருக்கீங்கனா நான் செத்துப் போயிட்டேனு அர்த்தம்..”
“அப்புடி எல்லாம் பேசாதே பெரியக்கா..”
“ஏன் அப்புடி எல்லாம் பேசக் கூடாது.. நான் பேசுற விசியம் உனக்கு பிடிக்கலையோ..”
“ம்ம்..”
“ஆ.. அதே மாதிரி தான் நீ பேசுற விசயமும் எனக்கு பிடிக்கலை..”
“சாரி பெரியக்கா..”
“உங்களைக் கொண்டு போய் ஹாஸ்டல்ல விடவாடி நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்..”
“சாரி சாரி..”
“சாரியும் வேண்டாம் ஒரு பூரியும் வேண்டாம்.. கிளாஸ் போக ரெடி ஆகிற வழியைப் பாரு.. போற வழியில உன்னைய ட்ராப் பண்ணீட்டு நான் மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வரோணும்..”
என்றவள் வேக வேகமாக வீட்டை ஒதுக்க ஆரம்பித்தாள்.
அந்த நேரத்தில் தயங்கித் தயங்கி அருகில் வந்தாள், தாமரையின் மூத்த தங்கை தவச்செல்வி.
“அக்கா..”
“உனக்கென்னம்மா.. நீ எங்க போய்ச் சேரப் போறாய் ஏதாவது ஆசிரமம் பார்த்து வைச்சிக்கியோ..”
“அது ஒண்ணும் தப்பு இல்லையேக்கா..”
“எது ஒண்ணும் தப்பு இல்லை..”
“ஹாஸ்டல்ல போய் இருக்கிறது..”
“இல்லை எனக்கு புரியலை.. இப்ப ரெண்டு பேரும் ஹாஸ்டல்ல போய்த் தங்கிக்கிற அளவுக்கு இங்க என்ன நடந்து போச்சு.. என்ன என்னோட சமையல் அலுத்துப் போச்சா..”
“என்னக்கா நீ..”
“அப்புறம்.. உங்களை நான் ஒழுங்காப் பார்த்துக்கலையா..”
“அச்சோ அக்கா..”
“அப்புடித் தான்டி எனக்குத் தோணுது.. நான் தான் ஏதவோ குறை வைச்சிட்டன் போல..”
“என்ரை கடவுளே அப்புடி எல்லாம் இல்லைக்கா.. புதுசா கலியாணம் ஆன பொண்ணு நீ..”
“எல்லாருக்கும் புதுசாத்தான்டி கலியாணம் ஆகும்..”
“அக்கா நீ உன்னோட கலியாண வாழ்க்கையை விட்டிட்டு.. எங்களுக்காக ஓடுறது எங்களுக்கு கஷ்டமா இருக்கு..”
“நான் ஓடவே இல்லையேடி.. இங்க பாரு நின்ன இடத்துல தானே நிக்கிறன்..”
“அக்கா உனக்கு எப்புடிச் சொல்லிப் புரிய வைக்கிறதுனு எனக்கு தெரியலை..”
“தெரியலை தானே.. அதை அப்புடியே விட்டிடு..”
“அக்கா..”
“போதும் தவம்.. இந்த டாபிக் பத்தி இனி நீங்கள் ரெண்டு பேரும் மூச்சுக் கூட விடக் கூடாது.. இது நம்மளோட வீடு நாம மூணு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையானவங்க.. என்ன காரணத்துக்காகவும் இந்த வீட்டை விட்டு என்னை விட்டு விலகிப் போயிடணும்னு இனிக் கனவுல கூட நினைக்கக் கூடாது.. எனக்கு எதுவுமே கஷ்டம் இல்லைடீ.. ஒரு வேளை அந்த வீட்டில என்னையத் தனியா விட்டிட்டு நீங்கள் ரெண்டு பேரும் தனிச்சுப் போனாத்தான்டி எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்..”
என்றவள் வேக வேகமாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே
“நீங்கள் ரெண்டு பேரும் உண்மையிலயே என்னில பாசம் மரியாதைனு ஏதாச்சும் வைச்சு இருந்தீங்கனா இனிமேல் இது சம்மந்தமாப் பேசக் கூடாது.. பேச மாட்டீங்கனு நம்புறேன்..”
என்றவள் அதோடு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
Interesting😍😍
nice
தமிழோட அம்மா எதாவது சொல்லி இருப்பாங்க