அத்தியாயம் 17
தமிழ் தன் வீட்டு மெத்தையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்க, நித்திராதேவியோ நான் உன் பக்கத்தில் வருவேனா என்பது போல பத்தடி தள்ளி நின்று அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில் தன் வீட்டில் படுத்திருந்த தாமரையையும் நித்ராதேவி சோதனை செய்ததால் அவளுக்கும் தூக்கம் வர மாட்டேன் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.
அதன் காரணம் என்னவென்றால் சில நாட்களாகவே, தமிழின் நண்பர்கள் வட்டாரத்தில் இருக்கும் ஒருவன் அவளுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கத் தொடங்கியது தான்.
ஆரம்பத்தில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தவளால் அப்படியே அலட்சியமாக இருக்க முடியவில்லை.
அவள் போகும் இடமெல்லாம் வருவதும், அவளைப் பார்த்துக் கண்ணடிப்பதும், அவள் பொருட்கள் வாங்கப் போனால் கூடவே சென்று, அதற்கான பணத்தைத் தான் கொடுப்பதுமாக இருந்த அவனை அவளுக்கு இழுத்துப் போட்டு அறைய வேண்டும் என்ற கோபம் வந்தாலும், வழமை போல நிதானமாக அவனிடம் பேசப் போனவள் தலையைப் பிய்த்துக் கொண்டு திரும்பி வந்தது தான் மிச்சம்.
“நீங்கள் ரூபன் தானே..”
“யெஸ் ஸ்வீட்டி..”
“என்னோட பேரு தாமரைச்செல்வி..”
“நான் ஸ்வீட்டான லேடீஸை ஸ்வீட்டினு தான் கூப்பிடுவேன்..”
“பட் அது எல்லாப் பொண்ணுங்களுக்கும் புடிக்காது.. எனக்கும் நீங்கள் அப்புடிக் கூப்பிடுறது புடிக்கலை..”
“ஓ.. அப்போ எப்புடிக் கூப்பிட்டால் புடிக்கும்..”
“உங்களுக்கு நான் யாருனு தெரியுமா.. நான் உங்களோட பிரெண்டு தமிழரசனோட மனைவி..”
“சோ..”
“சோவா.. இப்புடி தான் உங்க பிரெண்ட்ஸோட மனைவிமாரை ஸ்வீட்டினு கூப்பிடுவீங்களா..”
“எல்லாரையும் கூப்பிட மாட்டேன்.. உங்களை மட்டும் தான் கூப்பிடத் தோணுது.. ஏன்னா நீங்க தான் பார்க்கிறதுக்கு பொண்ணா லட்சணமா இருக்கீங்க.. இன்னும் என்னென்ன எல்லாமோ தோணுது.. சரி நாம தியேட்டருக்கு போலாமா.. அங்க தான் அந்த இருட்டுக்கு நம்மளை யாரும் பார்க்க மாட்டாங்க உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்..”
“ஹலோ மிஸ்டர் என்ன பழக்கம் இது.. கல்யாணம் ஆகாத பொண்ணுக்கிட்ட போய் நீங்கள் இந்த மாதிரி பேசுறதே தப்பு.. இதுக்குள்ள கல்யாணம் ஆன பொண்ணுகிட்டே பேசுற பேச்சா இது.. என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க..”
என்று கொண்டு விலகி நடக்க முயன்றவளின் கையை ரூபன் இழுக்கவும், அப்படியே வியர்த்து விறுவிறுத்துப் போனாள் தாமரை.
ஒரு கணம் ஒரே கணம் தான் நிதானித்தவள், உடனே கைகளை உதறி விட்டு அங்கே இருந்து வேகமாக வந்து விட்டாள். அதன் பிறகும் அவனது தொல்லை குறையவே இல்லை, எங்கே தான் ஏதும் திட்டப் போய், அந்த வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு தன் தங்கைகளை ஏதும் செய்து விடுவானோ அவன் என்கிற பயத்தில் அமைதி காத்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் இதை யாரிடமாவது செல்லி உதவி கேட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, முதலில் அவளுள் தோன்றிய கேள்வி இதை யாரிடம் சொல்லி உதவி கேட்க முடியும் என்பது தான்.
அதைப் பற்றி யோசனை செய்து கொண்டு படுத்திருந்தவளுக்கு தூக்கம் தூரமாகிப் போவது இயல்பு தானே.
இதே எண்ணத்தோடு இருந்தவளுக்கு மெல்லத் தமிழின் நினைவு வந்தது, இதே போன்ற இரண்டு தருணங்களில் அவன் தான் அவளுக்குத் துணைக்கு வந்திருக்கிறான்.
உயர் கல்வி படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருவன் அவளது கையைப் பிடித்து இழுக்க, இவள் கையைக் கூட இழுக்காமல் அழுது வடிந்து கொண்டு நிற்க அதைத் தமிழ் பார்த்து விட்டு, வேகமாக வந்து கையைப் பிடித்திருந்தவனை அடி பின்னி விட்டான்.
அந்த நேரத்தில் இவளைத் திட்டவும் மறக்கவில்லை.
“அவன் கையைப் பிடிக்கிறான்.. அப்புடியே பொம்மை மாதிரிக் கையைக் குடுத்திட்டு நிக்கிறே.. கையை உதறீட்டு கன்னத்துல ரெண்டு குடுக்க வேண்டாம்.. கண்ணுக்குள்ள என்ன குடமா வைச்சிக்காய்.. ஆ ஊனா கவுத்து விட்டுறதுக்கு..”
என அவளைத் திட்டிக் கொண்டு வகுப்பறைக்குள் கொண்டு போய் விட்டான்.
அடுத்த முறை பல்கலைக்கழகம் படித்துக் கொண்டிருந்த காலத்திலும், யாரோ இருவர் அவளோடு சேட்டை செய்து கொண்டிருக்க, அதை அப்படியே அவனது நண்பர்கள் பார்த்து விட்டுத் தமிழிடம் ஒப்புவிக்க, எங்கே இருந்தானோ தெரியவில்லை ஐந்து நிமிடங்களில் அந்த இடத்தில் ஆஜர் ஆனான்.
இருவருக்கும் முன்னால் அவளது தலையில் ஒரு கொட்டுக் கொட்டி
“அவனுங்க ஏதும் சேட்டை பண்ணா.. இப்புடியாடி முழிச்சிட்டு நிப்பாய்.. நீ எப்ப தான் திருந்தப் போறியோ.. வருசா வருசம் வளர்ந்து கொண்டு போறியே தவிர மூளை மட்டும் ஒரு இஞ்ச் கூட வளர மாட்டன் எண்டுதே.. இனி அவனுங்க ஏதும் சேட்டை பண்ணா திருப்பி ரெண்டு ஏச்சாவது ஏசுடீ..”
என அதற்கும் அவளைத் தான் திட்டினான்.
அவன் தன்னைத் திட்டினாலும் பரவாயில்லை, அவர்களிடம் இருந்து காப்பாற்றியதே பெரிய விஷயம் என்பது போல அவளுக்கு அந்த வயதில் இருந்தே தமிழ் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு கண்டிப்பான ஆசிரியர் கண்டிப்போடு தானே அன்பையும் காட்டுவார் அந்த மாதிரி தான் இருவரது உறவும் அப்போது இருந்தது.
இப்போதும் இதைத் தமிழிடம் சொன்னால் என்ன என அவளுக்குத் தோன்றவே, ஒரு தைரியத்தில் தொலைபேசியில் அவனது எண்ணுக்கு அழைப்பு விடுத்தவள், உடனேயே என்ன நினைத்தாளோ சட்டென்று அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
அங்கு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவனுக்கோ, மெல்லச் சிணுங்கி அணைந்த அலைபேசித் திரை தாமரையின் பெயரைக் காட்டவே, யோசனையோடு அதைக் கையில் எடுத்தான்.
தாமரை பொதுவாக அவனுக்கு அழைக்க மாட்டாள், அது தான் அவனுக்குமே என்னவாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றவே, பதில் தேடி அவளுக்கு மீண்டும் அழைத்தான்.
“சொல்லு.. தூங்கலையா..”
“ம்ம்.. தூக்கம் வரலை..”
“ஏன் என்னாச்சு.. உடம்பு ஏதும் சரியில்லையா..”
“ம்ம் இல்லை.. மனசு கொஞ்சம் சரியில்லை..”
“ஏன்டி ஏதும் பிரச்சனையா..”
“ம்ம்.. உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்.. ஆனா..”
“ஆனா என்ன இழுக்காமல் சொல்லு..”
“திட்டுவீங்களோனு பயமா இருக்கு..”
“ஏன்டி எனக்கு அது தான் வேலையா..”
“ம்ம்.. அது தானே உங்கடை பொழுதுபோக்கு.. என் கிட்டே பேசுறதே என்னைத் திட்டுறதுக்கு தானே..”
என்றவளின் குரல் லேசாகக் கமறியதோ என்னவோ, சில நொடிகள் தமிழின் பக்கம் இருந்து எந்தச் சத்தமுமே வரவில்லை.
“இருக்கீங்களா.. நான் பேசுறது கேக்குதா..”
என அவள் ரெண்டு தடவைகள் கேட்ட பின்னர் தான் அவனிடம் இருந்து மீண்டும் பதிலே வந்தது.
“சரி சொல்லு என்ன பேசணும்..”
“நீங்கள் திட்ட மாட்டீங்க தானே..”
“இல்லைடி திட்ட மாட்டேன் சொல்லு..”
“உங்களுக்கும் தூக்கம் வரலையா..”
“இல்லை வரலை..”
“ஏன் என்னாச்சு..”
“உனக்குத் தூக்கம் வரலை என்றதாலே எனக்கும் வரலை..”
“எனக்கு தூக்கம் வரலைங்கிறது நான் சொன்ன பிறகு தானே தெரியும்..”
“இப்போ இது ரொம்ப முக்கியம்.. விசியத்துக்கு வாடி..”
“திட்ட மாட்டேனு சொன்னீங்களே..”
“ஓ மை ஹாட்.. இதுவாடி திட்டுறது.. ஜஸ்ட் சொன்னேன்டி..”
“நீங்கள் சாதாரணமா பேசுறதே என் மேல எரிஞ்சு விழுற மாதிரி.. என்னையத் திட்டுற மாதிரி இருக்கு..”
“சரி இனி ஒழுங்கா பேச முயற்சி செய்றேன் போதுமா..”
“ம்ம்..”
“சரி சொல்லு என்னாச்சு.. என்ன பேசணும்..”
“அது.. உங்களோட பிரெண்டு ஒருத்தன் இருக்கானே ரூபன் அப்புடீனு சொல்லி..”
“ஆமா அவனுக்கு என்ன..”
“அந்தாளோட நடவடிக்கையே சரியில்லை..”
“என்ன செஞ்சான்.. மேல ஏதும் கை வைச்சானா..”
“ம்ம் ஆமா.. கையைப் புடிச்சு இழுத்தாரு..”
எனும் போதே அவளுக்கு அழுகை வருவது போல இருக்க, அடுத்த முனையில் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
Interesting😍 tamil wanted’a matta poran pola
தமிழு அவள் ரூபன் வேனும் பண்றான் சொன்னதுனால தங்கை நிலைமையை நினைச்சு பயந்து உன் கிட்ட சொல்லறா ஆனா நீ தான் பண்ன சொன்னது தெரிஞ்சிது நீ காலி
summave una ethana panna kovam varum avanuku ithula ip nee wife apo ena panuvano