அத்தியாயம் 2
கரையை வந்து தழுவிச் சென்று கொண்டிருந்த கடல் அலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழரசன்.
அவனை விட்டு சற்றே தள்ளி நின்று கடலலைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள் வரலக்சுமி, நேற்று வரை அவன் நேசித்த பெண்.
அவளோ அவனின் கவனத்தைக் கவரப் பெரும் பாடு பட்டுக் கொண்டிருக்க, அவனோ உள்ளே உலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருந்தான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், ஓடி வந்து அவனைப் பின்னால் இருந்து அணைத்துக் கொள்ள, ஒரு கணம் உடல் இறுக நின்றவன், மறுகணமே அவளை விலக்கித் தள்ளி நிறுத்தினான்.
அவனது அந்தச் செயலில் குழம்பிப் போனவள், அவனிடம் விளக்கம் கேட்பதற்கு முன்பாக அங்கிருந்து வேகமாகப் போய்த் தனது வாகனத்தில் ஏறிப் புறப்பட்டு விட்டான் அவன்.
வேகமாக விரைந்து சென்ற அவனது வாகனத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனது அந்த விலகலுக்கான காரணம் புரியவில்லை. ஆனாலும் அவனும் ஒன்றும் எப்போதும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் ரகம் இல்லை தானே பிறகு பார்த்துக் கொள்ளலாம். வேறு ஏதாவது டென்ஷனாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள்.
வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கோ, வரலக்சுமியை இழுத்து வைத்துக் கன்னங் கன்னமாக அறைய வேண்டும் என்கிற அளவிற்கு வெறி ஏறியிருந்தது.
அந்த ஆத்திரத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தவன், கார்ன் அடிக்க வேண்டிய திருப்பத்தில் கார்ன் அடிக்காமல் வேகமாகத் திருப்ப, திருப்பத்தில் வந்து கொண்டிருந்த பெண்கள் மேல் மோதிக் கொள்ளப் போய் மோதாமல் வாகனம் ஒரு குலுக்கலோடு நின்றது.
தன் மேல் தான் தவறு என்பதை உணரும் நிலையில் அவன் இல்லாததால், எட்டிப் பார்த்து அந்தப் பெண்களைப் பேசக் கையை நீட்டியவன், அங்கே நின்றிருந்த தாமரைச்செல்வியைப் பார்த்து விட்டான்.
காரிலேயே இருந்து கொண்டு பேசப் போனவன், அவளைப் பார்த்ததும் வேகமாக இறங்கி அவளருகில் வந்தான்.
“ஏய் அறிவு இருக்கா உனக்கு.. ரோட்டுல வரும் போது பார்த்து வரத் தெரியாதா.. ஏதோ உங்கப்பன் வீட்டு ரோடு மாதிரி வர்ரே.. நான் ஒழுங்கா கவனிக்காமல் போயிருந்தா கார் தூக்கி அடிச்சிருக்கும்..”
என ஏதோ அவள் தான் தவறாக வந்து விட்டாள் என்பது போலத் திட்ட, அவளோ அவனது முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல், தன் தங்கைகளை மறைத்தார் போல பேசாமல் நின்றிருந்தாள்.
அவள் வாயைத் திறந்து இரண்டு வார்த்தைகள் பேசி இருந்தால் பேசாமல் போய் விட்டிருக்க கூடியவனோ, அவளது அமைதியான தோற்றத்தில் கடுப்பாகிப் போனான்.
“வாயில என்ன கொழுக்கட்டையா.. வாயைத் திறந்து எதையாவது பேசு..”
என மீண்டும் திட்டியவன், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“என்னவோ தெரியலை உன்னைப் பாத்தாலே கடுப்பாகுது எனக்கு..”
என்று சொல்ல, வாயை மூடி அமைதியாய் நின்றிருந்தவளோ
சட்டென்று அவன் முகம் பார்த்து
“என்னைப் பாருங்கோ எண்டு நான் சொன்னேனா..”
என்று கேட்க, அவளை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தபடி காரை நோக்கிப் போனவன், அப்போது தான் தன் கார் நின்றிருந்த இடத்தைப் பார்த்தான்.
தான் வந்தது தான் தவறு என்பது அப்போது தான் அவனுக்கே புரிந்தது. இருந்தாலும் அவளிடம் மன்னிப்புக் கேட்க அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை.
மீண்டும் ஒரு முறை திரும்பி அவளை முறைத்து விட்டு அவன் போய் விட, அப்போது தான் ஒரு பெருமூச்சு விட்டுத் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள் தாமரைச்செல்வி.
“அக்கா.. அத்தான் ஏன் இப்புடி எப்ப பாத்தாலும் உன்னையப் பாத்தாலே எரிஞ்சு எரிஞ்சு விழுறாரு..”
என அவளது மூத்த தங்கை தவச்செல்வி கேட்க,
“அது தானே பெரியக்கா.. ஏன் அவருக்கு என்ன வந்ததாம்..”
என இளைய தங்கை தனுச்செல்வியும் கேட்க, லேசாகச் சிரித்தாள் தாமரைச்செல்வி.
“இப்ப ஏனக்கா சிரிக்கிறாய்..”
“அது தானே பெரியக்கா.. அவரை நீ திருப்பிப் பேசி நான் பார்த்ததே இல்லை..”
“அடியேய்.. அந்த மனுஷன் என்னட்டை மட்டுமா எரிஞ்சு எரிஞ்சு விழுது.. பாக்கிற எல்லாருட்டையும் தான் எரிஞ்சு விழுது..”
“இருந்தாலும் உன்னை பாத்ததும் கொஞ்சம் எக்ஸ்ராவா தான் எரிஞ்சு விழுறாரு.. நான் நினைக்கிறன் அக்கா.. அவரை வயித்துல வைச்சிருக்கும் போது வேணிம்மா மிளகாய் அரைச்சு யூசாக் குடிச்சிருப்பா போல..”
“ஓம் சின்னக்கா.. அப்புடியாத் தான் இருக்கும்.. அது தான் ஒரே காரமா இருக்கிறார்..”
“எங்க இதை அவரைப் பாத்துச் சொல்லுவீங்களோ ரெண்டு பேரும்..”
“ஏன் எங்களுக்கு வாங்கிக் கட்ட வேண்டுதலே.. நீ தான் அவருக்குக் கழுத்தை நீட்டி வாழ்க்கை குடுக்கப் போறாயே அக்கா.. கேக்க வேண்டியது எல்லாத்தையும் நீயே கேளு..”
“ஓம் ஓம்.. அதுவும் சரி தான் பெரியக்கா நீ இனியாவது அவர் ஏதும் சொன்னால் ரெண்டு வார்த்தையாவது திருப்பிக் குடு.. அப்ப தான் அவருக்கு எங்கடை பெரியக்காடை அருமை தெரியும்..”
“அவருக்கு ஒரு எருமையும் தெரியாது.. அவரும் கதைக்க நானும் பதிலுக்குக் கதைச்சால் சண்டை தான் வரும்.. அது தான் இந்த அமைதி..”
“இல்லாட்டிக்கு மட்டும் நீ அப்புடியே பதிலுக்குப் பதில் கதைச்சுடுவாய் தானேக்கா.. எங்கக்கா ஒரு வாயில்லாத பூச்சி எண்டு எல்லாருக்கும் ஒரு இளக்காரமாப் போச்சுது.. இனி யாராவது ஏதாவது கதைக்கட்டும் பிறகு கிடக்கு..”
“ஓம் ஓம் அப்புடிச் சொல்லு சின்னக்கா.. இனி யாராவது பெரியக்காவை ஏதும் சொல்லட்டும் பிறகு கிடக்கு.. பாய்ஞ்சு குரல் வளையைக் கடிச்சுத் துப்பி விடுறன்..”
“ம்ம்.. கடிச்சுத் துப்பாத அப்புடியே விழுங்கீடு.. அப்பவாச்சும் உனக்குச் சத்து ஏறுதோண்டு பாப்பம் தனு..”
“பாரன் பெரியக்கா.. சின்னக்காவை..”
“தெய்வங்களே போதும் போதும்.. இது ரோடு எதுவா இருந்தாலும் வீட்டுல போய்ப் பேசுவம் வாங்கோ.. உங்கடை கொத்தான் திரும்பி வந்து அடுத்த கிளாஸ் எடுக்க முதல் வீட்டுக்குப் போவம் நடவுங்கோ..”
“அதுவும் சரி தான்.. முதல் அக்காவை அறிவு இருக்கோ எண்டு கேட்டவர் திரும்பி வந்து.. உங்கள் ரெண்டு பேருக்கும் அறிவு இருக்கோ.. என்ரை பொண்டாட்டியை எங்கேடி வேகாத வெயில்ல கூட்டிக் கொண்டு அலைய வைக்கிறியள் எண்டு கேட்டாலும் கேட்பார்..”
“யாரு உங்களோட அத்தான் அப்புடிக் கேட்பாரா.. கேட்பாரு கேட்பாரு.. அப்புடியே கேட்டிட்டாலும்.. விட்டா உவளைக் கூட்டிக் கொண்டு போய் கடலோரமாக் கருவாடு காயப் போட விடுங்கோனு உங்களுக்கு எடுத்துக் குடுப்பாரே தவிர வேறை ஒண்டும் கேக்க மாட்டாரு..”
என்று நொடித்தபடி நடக்கத் தொடங்கிய அக்காவைத் தொடர்ந்து
“இதுவும் கடந்து போகும் அக்கா..”
என்று கொண்டு நடந்தார்கள் தவச்செல்வியும் தனுச்செல்வியும்.
Very interesting
nice going