அத்தியாயம் 3
அந்தப் பெரிய பங்களாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தார் கவிவாணனின் மனைவி மதிவேணி.
அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வாசலையே அடிக்கொரு தரம் பார்த்தபடி கவிவாணனும் அமர்ந்து இருக்க, இருவரையும் கண்டு கொள்ளாமல் உள்ளே வந்தான் அவர்களின் ஏக புத்திரன் தமிழரசன்.
“தமிழ்.. கொஞ்சம் நில்லு..”
“எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க.. ஐ டோண்ட் ஹாவ் டைம்..”
“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலியேப்பா..”
“என்ன கேட்டீங்க.. என்ன பதில் சொல்லணும்..”
“நீ சுத்தமா மறந்துட்டியோ.. அது தான்பா உன்னோட கல்யாண விசயம்..”
“இப்போதைக்கு அதைப் பத்தி நோ ஐடியா.. சோ அதைப் பத்தி இப்போதைக்கு பேச வேண்டாம்..”
என்றவன் வேகமாக மாடிக்குப் போய் விட்டான்.
அவன் போன திக்கையே ஒரு இயலாமையோடு பார்த்திருந்த கவிவாணனைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்தார் மதிவேணி.
“இப்போ எதுக்கு மேடம்.. இப்புடிக் கஷ்டப் பட்டுச் சிரிக்கிறீங்கள் என்று தெரிந்து கொள்ளலாமா..”
“பின்னே என்னவாம்.. நானே நல்ல வசதியான குடும்பத்துப் பொண்ணு சயிரேகாவை தமிழுக்கு கட்டி வைக்கலாம்னு ஓடாத் தேஞ்சிட்டு இருக்கேன்.. நீங்கள் என்னடானா போயும் போயும் அந்த ஒண்ணும் இல்லாதவளை அவனுக்கு கட்டி வைக்கப் பாக்குறீங்க.. அதெல்லாம் நடக்குற காரியமா.. பாத்தீங்களா என்ன சொல்லீட்டு போறான்னு..”
“அடி விசரி.. அவன் கல்யாணம் தான்டி இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லீட்டு போறானே தவிர.. தாமரையை வேண்டாம்னு சொல்லலை.. வந்திட்டா பெரிசா கதை சொல்ல.. முதல்ல போயி உந்த கெயார்கட்டை மாத்து பாக்கவே சகிக்கலை.. ஏதவோ சூனியப் பொம்மைக்குக் குஞ்சம் வைச்ச மாதிரி கிடக்கு..”
“வாட் நான்சென்ஸ்..”
“கோபம் வருதில்லே கோபம் வருதில்லே.. என்னைய மட்டும் தும்புக்கட்டைக்கு மீசை ஒரு கேடானு கேட்டப்போ இனிச்சிதோ போடி போ.. அவன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி.. தாமரையைத் தான் பொண்டாட்டியா ஏத்துக்குவான்.. அப்புடி மட்டும் நடக்கலை நானே காவி சுத்திக் கொண்டு சந்நியாசம் போறேன்டி..”
“ஓஹோ அப்புடியோ.. அப்புடி எல்லாம் போய் நொந்து நூடில்ஸ் ஆக வேண்டாம்.. அப்புடி நடக்காட்டிக்கு நான் சொல்றதை தான் நீங்கள் கேக்கோணும்..”
“ரைட்டு விடு.. அந்த சலரோகத்தை தமிழ் கட்டினால்..”
“அது சயிரேகா..”
“ஏதவோ ஒரு குஷ்டம் அதை தமிழ் கட்டினால் நீ சொல்றதை நானும்.. லோட்டஸை தமிழ் கட்டினால் நான் சொல்றதை நீயும் கேக்கணும் இது தான் நமக்கான டீல்.. டீல் ஓகேயா..”
“டபுள் ஓகே.. ஐம் வெயிட்டிங் ஃபோர் நீங்கள் மண்ணைக் கவ்வுறதுக்கு..”
“நானும் வெயிட்டிங் ஃபோர்டி நீ மண்ணைக் கவ்வுறதைப் பார்க்க..”
எனக் கவிவாணன் சவால் விட்டுக் கொண்டு இருக்கும் போதே, மதிவேணி தன் மகனுக்காகப் பார்த்து வைத்த பெண் சயிரேகாவும், அவளது அன்னையும் அங்கே தரிசனம் கொடுத்தார்கள்.
“ஹாய் சாவி ஹாய் சாய்..”
என்று கொண்டு வேகமாக எழுந்த மனைவியைத் தலையில் அடித்துக் கொண்டு பார்த்த கவிவாணன்
அவரது காதுக்கு மட்டும் கேட்கும் வகையில்,
“அதென்னெடி சாவி காவி.. சாய் பாய்னு கொண்டு.. பேசாமல் ஒழுங்கான பேர் சொல்லி கூப்பிடு.. அதுகளோட பேரைக் கொல்லாத பாவம்..”
என்று கொண்டு உள்ளே போய் விட்டார்.
“ஹேய்.. உன்னோட ஹஸ்பெண்ட் எங்கே போறாரு..”
என வந்த சாவி கேட்க,
“அவரு ஒரு மீட்டிங் சூம்ல அட்டென்ட் செய்ய போறாரு..”
என மதிவேணி சொல்ல,
“ஆமான்டி உங்களோட தொல்லை தாங்காமல் இல்லாத மீட்டிங்கை உருவாக்கி கதைக்க போறன்.. ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு உசிரே போனாலும் கீழ மட்டும் இறங்கக் கூடாதுடா சாமி.. சீக்கிரமா என்னோட ரூம்ல இருந்து வெளியால தப்பிச்சுப் போறதுக்கு மட்டும் அஞ்சாறு பாதை வைச்சிடோணும்..”
என முணுமுணுத்துக் கொண்டு தன் அறைக்குள் தஞ்சம் புகுந்தார் கவிவாணன்.
அவரது அறைக்கு பக்கத்து அறையில் தான், தமிழரசனது உடற்பயிற்சி கூடம் இருந்தது. அங்கே அவன் பன்சிங் பையைப் போட்டுக் குத்திக் கொண்டு இருப்பது அவருக்கு நன்றாகவே கேட்டது.
“இவன் யாரை நினைச்சு இந்தக் குத்துக் குத்துறான்னு தெரியலையே.. யாராவது வேண்டாத வேலை பாத்து இருக்குதுகள் போல.. இப்ப உள்ள போனால் நான் தான் குத்து வாங்க வேண்டி வரும்.. எதுக்கும் ஓரமா இருந்து ரெண்டு பாட்டுக் கேப்பம்..”
எனக் கவிவாணன் தனக்குப் பிடித்த பாடலைக் கேட்கத் தொடங்கினார்.
அங்கே உள்ளே தமிழரசன் கை முஷ்டிக்கு எதுவும் போடாமல், தன் வெறும் கையாலேயே பன்சிங் பையைக் குத்திக் கொண்டிருந்தான்.
அவனால் வரலக்சுமி செய்த துரோகத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. போயும் போயும் அவளையா நேசித்தோம் எனத் தன் மீதே கோபங்கொண்டு தன்னைத் தானே இப்படித் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.
அவன் லண்டன் சென்று படித்த காலத்தில் தான் வரலக்சுமி அவனுக்கு அறிமுகமானாள். பெண்கள் என்றாலே பெரிதாக நாட்டம் காட்டாமல் தான் உண்டு தன் படிப்பு உண்டு என இருந்தவனைப் பார்த்த உடனேயே வரலக்சுமிக்குப் பிடித்து விட்டது.
அதிலும் அவனது தந்தை இலங்கையிலேயே பிஸினஸில் பெரும்புள்ளி என்பதைத் தெரிந்து கொண்டவளுக்கு, அவனைத் தவிர எவருமே கண்ணில் படவேயில்லை.
தானாகவே அவனோடு சிநேகிதமாகி அவனைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் தொடங்கினாள். அது தமிழரசனுக்குப் பிடிக்கும் என நினைக்க அவனுக்கோ அவளையும் பிடிக்கவில்லை. அவளது செயல்களையும் பிடிக்கவில்லை.
ஆனாலும் வரலக்சுமியும் விடுவதாக இல்லை. இறுதி ஆயுதமாக அவனது பெயரைக் கையில் பச்சை குத்திக் கொண்டு, ஒரு போத்தல் மருந்தை எடுத்துக் குடித்து விட்டு வைத்தியசாலையில் கிடந்தாள்.
தனக்காக ஒருத்தி உயிரை இழக்கத் துணிந்தது அந்தக் கல் நெஞ்சக்காரனையும் லேசாக அசைத்துத் தான் பார்த்தது.
அதற்குப் பிறகு அவளது காதலுக்குச் சம்மதித்தான். அன்றிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருவரது காதலும் பயணிக்கத் தொடங்கியிருந்தது. தமிழரசன் தன் பெயருக்கு ஏற்றார் போல தமிழுக்கு அரசனாகத் தான் இருந்தான்.
அவனுக்கு தன் தாய்நாட்டின் பாரம்பரிய முறைகள் மிகவும் பிடிக்கும். அதை வரலக்சுமியிடம் எதிர்பார்த்தான். ஆனால் அவளோ வெளிநாட்டு மோகத்தில் சுற்றி வரும் நவநாகரீகத்தில் இருந்து வெளியே வரக் கொஞ்சங் கூட விரும்பவில்லை.
சரி அவளது இஷ்டம் போல அவள் இருக்கட்டும் என நினைத்தான், ஆனாலும் தன் வருங்கால மனைவி ஆகப் போகிறவள் தன் குடும்பத்துக்கும் தன் அன்புக்கும் தகுந்தவள் தானா என்பதைச் சோதித்துப் பார்க்க விரும்பினான்.
அவன் அப்படி ஒரு முடிவுக்கு வந்ததற்கான முதல் காரணம், எப்படியும் வரலக்சுமியை தான் நேசிப்பதைத் தந்தையிடம் சொன்னால் அவர் நிச்சயமாக அவளை ஏற்றுக் கொள்ள மாட்டார். தான் தந்தையை எதிர்த்துத்தான் திருமணமே செய்ய வேண்டும். அப்படிச் சண்டை போட்டுக் கொண்டு திருமணம் செய்யும் அளவுக்கான தகுதி அவளுக்கு உண்டா என்கிற கேள்விக்கான பதில் அறியும் முயற்சி தான் அவளுக்கான சோதனை.
ஆனால் தமிழரசன் வரலக்சுமியை நேசிக்கத் தொடங்குவதற்கு முன்பாக அவளைச் சோதித்துப் பார்த்திருக்கலாம். அவனுக்கு அந்த எண்ணங்கள் எதுவுமே தோன்றாது. தான் செய்வது தான் சரி என்கிற ரகம்.
அப்படி அவன் செய்த சோதனையில் அவளின் முகத்திரை கிழிந்ததால் தான், அவளை நம்பிய தன் மீது இவ்வளவு ஆக்ரோஷம்.
apadi ena paninan ippadi pesama iruka alavuku
Very interesting