Skip to content
Home » தாமரையின் தழலவன் அத்தியாயம் 4

தாமரையின் தழலவன் அத்தியாயம் 4

அத்தியாயம் 4

இரண்டு மாதங்களுக்கு முன்னால்,
உயர் ரக ஹோட்டல் ஒன்றினுள் தமிழரசனும் அவனது இஸ்லாமிய நண்பன் நஸ்ரூலும் அமர்ந்து இருந்தார்கள்.

இருவருக்கும் நடுவில் காரசாரமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அந்த விவாதத்தில் தமிழரசனே வெற்றி பெற்றான்.

“தமிழ்.. எனக்கு இது அவ்வளவு சரியாப் படேல்லை..”

“நான் முடிவு எடுத்தா எடுத்தது தான்.. அது உனக்கே தெரியும்..”

“அது தெரிஞ்சதால தான் நானும் இவ்வளவு தூரம் கதைச்சுக் கொண்டு நிக்கிறன்.. இதால பின்னுக்கு ஏதாவது பிரச்சினை வர வாய்ப்பு இருக்கு..”

“என்ன பிரச்சினை வந்தாலும் அதை நான் பாத்துக் கொள்ளுறன்..”

“சரி என்னமோ சொல்லுறாய்.. ஆனா எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்லை.. நீ இவ்வளவு தூரம் கேக்கிறாய் என்றதால எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான் அவனை இதுக்குள்ள இறக்குறன்..”

“ஏய் என்ன விளையாடுறியா..”

“நான் எங்கடா விளையாடுறன்.. நீ தான் தேவையில்லாமல் உன்ரை வாழ்க்கையில நீயே விளையாடுறாய்..”

“இதைப் பாரு நஸ்ரூல்.. இதை வேறை யாரும் செய்யக் கூடாது.. நீ தான் செய்யோணும்.. அது தான் இவ்வளவு தூரம் மினக்கெட்டு உனக்கு விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கிறன்..”

“நானா.. ஏன்டா உனக்கு இந்த விஷப் பரீட்சை.. இது தெரிஞ்சா என்ரை லவ்வர் என்னைக் குழி தோண்டியே புதைச்சிடுவாடா..”

“இதை நீ செய்து குடுக்கலைனா.. நான் உன்னைக் குழி தோண்டாமலே புதைச்சிடுவன்..”

“டேய் டேய்.. இப்புடிச் செய்யிறது எல்லாம் ரொம்பப் பாவம்டா..”

“உன்னால முடியுமா முடியாதா..”

“அடேய்.. நாளைக்கு நீ அந்தப் பிள்ளையைக் கட்டும் போது.. உங்கடை கலியாணத்துக்கு நான் எந்த முகத்தோட வாரது.. எல்லாம் புரிஞ்சு தான் கதைக்கிறியா..”

“அதை நான் சொன்னால் அவ புரிஞ்சுக்குவா..”

“நீ என்னையச் சாவடிக்காமல் விட மாட்டாய்.. ஏதவோ உன் கூட சேந்த பாவத்துக்குச் செஞ்சு தொலைக்கிறேன்..”

“ம்ம்.. இது நல்ல பிள்ளைக்கு அழகு..”

“நல்ல பிள்ளை செய்யக் கூடிய வேலையாடா எனக்குத் தந்து இருக்கிறாய்..”

“மூடிட்டுப் போடா.. உனக்கு ஒரு மாசம் தான் அவகாசம்..”

“பார்ரா என்ன ஒரு பெருந்தன்மை.. எனக்கு ரெண்டு மாசம் வேணும்..”

“என்னவோ செஞ்சு தொலை.. நானும் மூணு மாசத்துக்கு அவுஸ்திரேலியாவுல நிப்பேன்.. சோ உனக்கு அவகாசம் இருக்கு..”
என்று கொண்டு தன் பேச்சுவார்த்தையை முடித்து விட்டு, தமிழரசன் போய் விட, தலையில் கையை வைத்தபடி அப்படியே அமர்ந்து விட்டான் அவனது ஒரேயொரு நண்பனான நஸ்ரூல்.

இருவருக்கும் இடையே இவ்வளவு நேரமும் நடந்த விவாதத்தின் விசயம் என்னவென்றால், தமிழரசனின் காதலி வரலக்சுமி உண்மையிலேயே தமிழரசனை நேசிக்கிறாளா, அல்லது அவனை விடவும் பணக்காரன் யாராவது அவளிடம் வந்து நான் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னால் அவன் பின்னால் போய் விடுவாளா என்பதை அறிய அவளுக்கு ஒரு சோதனை வைக்க வேண்டும் என தமிழரசன் முடிவு எடுத்திருக்கிறான்.

அந்தச் சோதனைக்கான கருவியாக அவன் தன் நண்பன் நஸ்ரூலை தான் பாவிக்க நினைத்தான். அதாவது நஸ்ரூல் நிஜமாகவே தமிழரசனது தந்தையை விடவும் பணக்காரன் என்பதால், அவனே வரலக்சுமியிடம் சென்று தன் சொத்துக்களை காட்டி நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். அவள் உண்மையான பாசம் உடையவளாக இருந்தால், அவனைத் துச்சமாகத் தூக்கிப் போடுவாள் என்றே தமிழரசன் கணக்குப் போட்டுத் தன் நண்பனை அனுப்பி வைத்தான்.

நஸ்ரூலுக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. இருந்தாலும் தன் நண்பனது குணம் அறிந்ததால் அரை மனதாக இதற்கு ஒப்புக் கொண்டான்.

அவனுக்கு வரலக்சுமியின் சுயரூபம் வெளிப்பட மூன்று மாதங்கள் எல்லாம் தேவைப்படவில்லை. மூன்று கிழமைகளே போதுமானதாக இருந்தது.

நஸ்ரூலை அவளுக்கு முன்பே தெரியும். ஆனாலும் அவனுக்கும் தமிழரசனுக்குமான நட்பு அவளுக்குத் தெரியாது. அவளைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் இரண்டு நபர்களிடம் இருந்து தான் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தாள்.

வரலக்சுமியின் குணம் அறிந்த நஸ்ரூலுக்குத் தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. போயும் போயும் இவளையா தன் நண்பன் விரும்ப வேண்டும். இவள் பற்றிய விசியத்தை அவனிடம் சொன்னால் அவன் எவ்விதம் எடுத்துக் கொள்ளுவானோ தெரியவில்லையே, இதை முதலில் அவனிடம் எப்படிச் சொல்வது என்கிற குழப்பத்தில் நஸ்ரூல் சுற்றி வர, இந்த எண்ணம் எதுவும் இல்லாமல் அவுஸ்திரேலியாவில் தன் வேலைகளில் மூழ்கிப் போயிருந்தான் தமிழரசன்.

அவனுக்கு வரலக்சுமி தான் வைத்த சோதனையில் நிச்சயம் தேறி விடுவாள் என்கிற அபார நம்பிக்கை இருந்தது. அதனாலேயே கொடுத்த வேலை எப்படி என்று நஸ்ரூலிடம் அவன் அடிக்கடி எடுத்துக் கேட்டுத் தொந்தரவு செய்யவில்லை.

நண்பனின் குணம் அறிந்த நஸ்ரூலுக்குத் தான் தர்மசங்கடமாகப் போய் விட்டது. அவன் வந்த பின்னரே இது பற்றி அவனிடம் சொல்ல வேண்டும் என அவன் ஒரு வழியாக முடிவு எடுத்த வேளை, அவுஸ்திரேலியா போயிருந்தவன் சீக்கிரமாகவே திரும்பி வந்து விட்டிருந்தான்.

தமிழரசன் அத்தனை சீக்கிரம் வந்து விடுவான் என்பதை நஸ்ரூலும் எதிர்பார்க்கவில்லை.

“மச்சான்.. என்னடா இவ்வளவு சீக்கிரமா வந்திட்டாய்.. மூணு மாசம் ஆகுமேணு சொன்னியே..”

“போன வேலை முடிஞ்சுது.. சுத்தி பாக்க இஷ்டம் இல்லை.. பார்த்த இடத்தேயே திரும்பத் திரும்பப் பாக்கறதா..”

“அது சரி..”

“அப்புறம்.. வரலக்சுமி என்ன சொன்னா.. உனக்கு நல்லாக் கிளாஸ் எடுத்தாளா..”

“மச்சான்.. உனக்கு என்மேலே நம்பிக்கை இருக்கா.. நான் எது சொன்னாலும் அதுல உண்மை இருக்கும்னு நம்புறியோ..”

“என்னை வசனம் பேச வைக்காத எருமை..”

“நீ சொல்லு..”

“நான் எங்கப்பாம்மாவை விடவே உன்னை தான்டா நம்புறன்.. அவங்க எனக்கு எதிரா செயற்படுறாங்கனு நீ சொன்னா.. அதையே கண்ணை மூடீட்டு நம்புவன் போதுமா..”

“அந்தளவுக்கு நீ என்னைய நம்புறாய்னு எனக்கும் தெரியும் தான்.. இருந்தாலும்..”

“இருந்தாலும் என்னடா.. வரலக்சுமி உன்னை ரொம்பக் கேவலமாத் திட்டீட்டாளா..”

“அதைப் பத்தி பிறகு சொல்றேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு உன்கிட்ட சில கேள்விகள் இருக்கு.. கேக்கவாடா..”

“கேளு கேட்டுத் தொலை..”

“உனக்கு நிஜமாவே வரலக்சுமியைப் பிடிச்சு இருக்கா இல்லாட்டிக்கு..”

“அவ எனக்காக சாகப் போனவடா.. எப்புடியோ ஒருத்தியைக் கட்டீட்டுக் குப்பை கொட்டத் தானே போறேன்.. அதுக்கு இவளைக் கட்டிக்கிட்டா என்ன..”

“ஓ.. அப்போ ஒரு வேளை அவ உன்னை விட்டுப் போயிட்டா என்ன செய்வே..”

“ம் என்ன செய்வேன்.. அவளா வந்தா அவளாப் போனானு இருந்திடுவேன்.. என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா..”

“தெரிஞ்சதாலே தான்டா கேக்கிறேன்.. ஒரு வேளை அவ உனக்குத் துரோகம் செய்றானு தெரிஞ்சா..”

“கொலை செய்வேனு நினைக்கிறியா..”

“தெரியலியே.. நீ செய்யக் கூடிய ஆளு தானே..”

“என்னோட கையால சாகுறதுக்கே ஒரு தகுதி வேணும்டா..”

“அப்போ என்ன செய்வாய்..

“சொல்லத் தெரியலைடா.. ஆனா அவளைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேனு நினைக்கிறன்..”

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மச்சான்.. இப்புடி ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைடா..”
என குரல் லேசாகத் தடுமாறச் சொன்ன நண்பனைப் புருவம் சுருக்கிப் பார்த்த தமிழரசனிடம் உண்மையைச் சொல்ல நஸ்ரூல் வெகுவாகத் திணறித் தான் போனான்.

2 thoughts on “தாமரையின் தழலவன் அத்தியாயம் 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *