அத்தியாயம் 5
தலையைத் தொங்கப் போட்டபடி அமர்ந்திருந்த நண்பனது, உடல் மொழியிலும் பேச்சிலும் ஏதோ சரியில்லை என்பது தமிழரசனுக்கு விளங்கினாலும், அவனே சொல்ல வந்ததைச் சொல்லட்டும் என்பது போல அமைதியாக இருந்தான் அவன்.
“தமிழ்.. சாரிடா.. நீ நினைக்கிற மாதிரி இல்லை அந்தப் பொண்ணு..”
“புரியலை..”
“இதை எப்புடி உன்னட்டைச் சொல்லுறது எண்டு ரொம்பக் கஷ்டப் பட்டுப் போனன்.. ஆனாலும் உண்மையை உடைச்சுச் சொல்லித் தானே ஆகோணும்..”
“சொல்லு என்ன விசியம்..”
“நான் சொல்லுறதை விடவும் நீயே பாரு..”
என்றபடி தன்னோடு வரலக்சுமி கதைத்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் இருவரும் பகிர்ந்து கொண்ட குறுஞ்செய்திகள் என அனைத்தையுமே தன் நண்பனுக்குக் காட்டினான் நஸ்ரூல்.
அவன் காட்டிய அத்தனை ஆதாரங்களுமே வரலக்சுமியின் குணத்தைப் படம் பிடித்துக் காட்டவே, தமிழரசனின் கண்கள் மெல்ல மெல்லச் சிவப்பேறத் தொடங்கியது.
அவனையே பார்த்திருந்த நஸ்ரூலுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற பதட்டம் ஒட்டிக் கொள்ள, மெல்ல அவனைத் தொட்டுத் தன் பக்கம் திருப்ப முயன்றான்.
தமிழரசனோ பக்கத்தில் நின்றிருந்த ஹோட்டல் மனேஜரை கை தட்டித் தன்னருகே அழைத்து, அவனிடம் தன் கிரெடிட் கார்டைக் கொடுத்து விட்டு அவனது காதுகளில் ஏதோ சொல்ல, இவன் என்ன செய்கிறான் என்பது போல நஸ்ரூல் அப்படியே அமர்ந்திருந்தான்.
அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தது ஹோட்டலின் மேல் மாடி, அங்கே இவர்களோடு சேர்த்து நான்கு டேபிள்கள் மட்டுமே புக் ஆகி இருந்தன.
தமிழரசனிடம் கிரெடிட் கார்டை வாங்கிக் கொண்டு மேனேஜர் அந்தப் பக்கம் சென்றதும் இந்தப் பக்கம் அமர்ந்திருந்தவர்களை உள் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள்.
சில நிமிடங்களில் அந்த இடத்தில் தமிழரசனையும் நஸ்ரூலையும் தவிர யாருமே இருக்கவில்லை. அது போக தமிழரசனுக்கு முன்னால் மார்பிள் பாத்திரங்கள் கொண்டு வந்து அடுக்கப்பட்டன.
என்னடா நடக்கிறது இங்கே என்பது போல ஒரு கணம் சுற்றும்முற்றும் பார்த்த நஸ்ரூல் விசயம் அறிந்து சுதாரிப்பதற்கு முன்பாக, ஒவ்வொரு பாத்திரமாகத் தூக்கி எதிரே இருந்த சுவர் மீது அடித்து நொருக்கத் தொடங்கி விட்டிருந்தான் தமிழரசன்.
கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து மார்பிள் பாத்திரங்களுக்குக் கிட்ட, சொற்ப வினாடிகளில் அடித்து நொருக்கியவனை எப்படிச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு நின்றிருந்தான் நஸ்ரூல்.
நொடிகள் நிமிடங்களாக இப்படியே நின்று கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது என்கின்ற எண்ணத்தில், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனருகே போய், அவன் கைகளை இறுகப் பிடித்த நஸ்ரூலை அனல் கக்கும் விழிகளால் திரும்பிப் பார்த்து முறைத்தான் தமிழரசன்.
“டேய்.. போயும் போயும் அவளுக்காக நீ இவ்வளவு தூரம் ஆக்ரோஷமாகிறது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை மச்சான்.. யாருடா அவ நேத்து வந்தவ.. தூக்கிப் போட்டிட்டு அடுத்த வேலையைப் பாப்பியா அதை விட்டிட்டு எதுக்குடா உன்னோட காசையும் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டு நிற்கிறாய்..”
என நஸ்ரூல் சொன்ன வார்த்தைகளுக்குப் பலன் இருந்தது.
நஸ்ரூலிடம் இருந்து தன் கரத்தை விடுவித்து, தலையை அழுந்தக் கோதி ஆழ்ந்த பெருமூச்சை எடுத்து விட்டுத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன், நஸ்ரூலை நிமிர்ந்து பார்த்தான்.
“உன்னோட உதவிக்கு ரொம்ப நன்றிடா..”
“டேய் இதுக்குப் போய் நன்றியெல்லாம் சொல்லிக் கொண்டு..”
“இல்லைடா நான் எதிர்பார்த்தது என்னவோ ஆனா நடந்தது என்னவோ.. என்ன இருந்தாலும் நீ எனக்காக ரொம்ப மினக்கெட்டு இருக்கிறாய்..”
“அதெல்லாத்தையும் விடு.. இப்போ என்ன செய்யப் போகிறாய்..”
“தெரியலைடா.. ஒரு ஐடியாவும் இன்னும் வரேல்லை.. ஆனா இப்போதைக்கு அவகிட்டே அவ பத்தி தெரிஞ்ச மாதிரிக் காட்டிக்க மாட்டேன்..”
“அப்போ..”
“சமயம் வரும்போது அவளைக் கதற விடணும்..”
“நீ முதல்ல வீட்டுக்குக் கிளம்பு..”
என நஸ்ரூல் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, வரலக்சுமியிடம் இருந்து தமிழரசனுக்கு அழைப்பு வந்தது.
எதையும் காட்டிக் கொள்ளாமல், அழைப்பை ஏற்றுக் காதில் வைத்துக் கொண்டவனோ, அவள் சொன்னதை மட்டும் கேட்டானே தவிர வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
சில நிமிடங்களிலேயே இரண்டு நண்பர்களும் அங்கிருந்து புறப்பட, வரலக்சுமியை கடற்கரையோரம் சந்தித்த தமிழரசனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது.
அவளைப் பற்றி அறிந்த உண்மைகளோடு, அவளோடு முகம் கொடுத்துப் பேச முடியாமல் வேகமாக வந்து தான் தாமரைச்செல்வியோடு மோதப் போய் அவளைத் திட்டியது, பின்னர் வீட்டிற்கு வந்து இதோ தன் பன்சிங் பையோடு குத்துச் சண்டை போட்டுக் கொண்டு நிற்பது எல்லாமே அரங்கேறியது.
எப்படி ஏமாந்தேன் போயும் போயும் ஒரு பெண் பணத்துக்காக என்னோடு பழக நினைப்பதா? என்னைக் காதலிக்கிறேன் என்று அவள் பொய் வேஷம் போட்டதை அப்படியே நம்பியதை நினைக்க நினைக்க அவனது தன்மானம் அடிபட்டுப் போனது.
பன்சிங் பையில் குத்துவதை நிறுத்தியவன், நேராகக் குளியலறையினுள் புகுந்து ஷவரைத் திறந்து விட்டு, கைகளை இறுகக் கட்டிக் கொண்டு நெடுநேரமாக நின்றான்.
உள்ளே கனன்று கொண்டிருந்த கோபத்தால் உடலின் வெப்பம் கூடிக் கொண்டு போனதே தவிர, சில்லென்று இறங்கிய குளிர் நீரால் கூட அந்த வெம்மையைக் குறைக்க முடியவில்லை.
கன நிமிடங்கள் அப்படியே கரைய, துவாலை ஒன்றால் தலையைத் துவட்டிக் கொண்ட படியே, தந்தையின் அறையை நோக்கி நடந்தான் தமிழரசன்.
அவன் ஒரு முடிவு எடுத்திருந்தான். தலைக்கு குளித்து விட்டு தன்னறையில் வந்து நின்ற மகனை இவன் என்னடா நேரங் கெட்ட நேரத்துல தலைக்கு வார்த்திட்டு வந்திருக்கிறானே. நிற்கிற தினுஷே சரியில்லையே என்ன ஏழரையைக் கூட்டுறதுக்குத் திட்டம் போட்டுக் கொண்டு வந்தானோ என்பது போல தனக்குள் தானே பேசிக் கொண்டு, தன் மகனை என்னடா மகனே என்பது போல பார்த்து வைத்தார் கவிவாணன்.
அவன் சொன்ன வார்த்தைகளுக்கு எல்லாம் தன் மனதினுள் கவுண்டர் கொடுத்தாரே தவிர, மகன் பேசி முடிக்கும் வரை அவர் வாயே திறக்கவில்லை.
பிறகு அவன் மலையேறி விட்டால் அவனை மலையிறக்க அவர் படாதபாடு பட வேண்டி இருக்கும். அதனாலேயே எதற்கு வம்பு என வெளியே வார்த்தைகளை விடாமல் நின்றிருந்தார்.
“நானும் யோசிச்சுப் பார்த்தேன்..”
‘என்னத்தை..’
“நீங்கள் சந்தோஷப் படுற மாதிரி இதுவரைக்கும் நான் எதையுமே செய்ததில்லை..”
‘அது தான் ஊருக்கே தெரியுமே..’
“சோ..”
‘சோ.. ஏதவோ சொல்லப் போறான்.. என்னவா இருக்கும்.. எதுவா இருந்தாலும் உங்கம்மா வர முதல் சொல்லுடா.. அவ வந்தான்னா தன்ரை சயிரேகாவோ சலரோகவோ அவளோட புராணத்தைப் படிச்சு என்னை ஒரு வழி செஞ்சிடுவா..’
என கவிவாணன் யோசனை போய்க் கொண்டிருந்த வேளை,
அடுத்து அவன் சொன்ன சங்கதியில் விழிகள் விரிய இது கனவா நனவா என்பது போல அமர்ந்திருந்தார் அவர்.
vera vali kadaisila appa sonna ponnuku ok solli irupan . but nee eduthathu oru nalla mudivu tha tamil
😂😂😂 ivlooo vevaramana aalu yepdi yemanthannn avaluku nallaa paadam kodukanum…
இவன் செல்வியை என்னபாடுபடுத்த போறானோ