Skip to content
Home » தாமரையின் தழலவன் அத்தியாயம் 6

தாமரையின் தழலவன் அத்தியாயம் 6

அத்தியாயம் 6

மாடியில் இருந்து சின்னப் பையன் போல வேகமாகப் படியிறங்கி வந்த கவிவாணனை, விழி விரியப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் மதிவேணி.

“என்ன என்ன நடந்தது.. எந்தக் கோட்டையைப் பிடிக்க உந்த ஓட்டம்..”

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறன் மதிம்மா..”

“அது தான் ஓடிவாற ஓட்டத்துலயே தெரியுதே.. அப்புடி என்ன நடந்திட்டு..”

“அதை உங்கிட்டே சொல்லவோ வேண்டாமோனு தான் யோசிச்சுக் கொண்டு வந்தனான்..”

“அச்சோ சொல்லுங்கோப்பா.. இல்லாட்டிக்கு என்ரை தலையே வெடிச்சிடும் தெரியுமோ..”

“அதனால மட்டும் தான் சொல்லப் போறேன்.. இல்லாட்டிக்கு எனக்கெல்லோ பாவம் வந்து சேரும்..”

“கதையளக்காமல் விசியத்தைச் சொல்லுங்கோ..”

“நம்ம தமிழ் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லீட்டானே..”

“நிஜமாவா..”

“சத்தியமா..”

“அச்சோ இப்ப தானே கொஞ்சம் முதல் சாவியும் சாயும் போகினம்.. கொஞ்சம் முன்னாடி வந்து சொல்லியிருக்கலாமே நீங்கள்..”

“அதுக்கு.. இப்ப நீ என்ன சொல்ல வாறாய்..”

“சீக்கிரமாவே சாவிக்கிட்டே சொல்லி நல்ல நாள் பாக்கச் சொல்லியிருப்பன்..”

“என்னத்துக்கு நல்ல நாள் பாக்கச் சொல்லியிருப்பாய்..”

“கல்யாணத்துக்கு தான்..”

“நம்ம பையன் கல்யாணத்துக்கு அவ எதுக்கு நல்ல நாள் பாக்கோணும்..”

“அவ பொண்ணைத் தானே நம்ம பையன் கட்டிக்கப் போறான்..”

“அப்புடினு நீயே முடிவு செய்தால் சரியா..”

“இல்லாட்டிக்கு நீங்கள் உங்கடை லோட்டஸ்ஸை இறக்கீடுவீங்களே என்ற பயம் தான்..”

“பார்ரா பயப்பிடுற ஆள் தான் நீ..”

“இல்லையா பின்னே..”

“நீயும் நானும் சண்டை போடுறதுல ஒரு பிரயோசனமும் இல்லை.. ரெண்டு பொண்ணுங்க போட்டோவையும் தமிழ்கிட்டே காட்டுவோம்.. அவன் அதுல தனக்கான மனைவியைத் தேர்வு செய்யட்டும்..”

“என்னடா இது.. இப்புடி ஒரு முடிவு சொல்லுறீங்கள்.. இதுக்குப் பின்னால ஏதாவது விவகாரம் இருக்குமோ..”

“ஒரு காரமும் இல்லை இனிப்பும் இல்லை.. போட்டாவைக் காட்டுவம்..”

“அவன் கண்டிப்பா சயிரேகாவுக்கு தான் ஓகே சொல்லுவான்..”

“அதை அவன் ஓகே சொல்லும் போது பாத்துக்கலாம்..”
என்றபடி மனைவியின் பக்கத்தில் கவிவாணன் அமர, இருவருக்கும் நேர் எதிரே இருந்த சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான் தமிழரசன்.

“என்ன தமிழு.. கல்யாணத்துக்கு சரி சொல்லீட்டியாமேனு அப்பா சொன்னாங்க..”

“ம்ம்..”

“அம்மா.. உனக்காக ரொம்ப ஹைலெவல் பமிலில ஒரு பொண்ணு பாத்து வைச்சிருக்கிறன்.. ஆனா உங்கப்பாவைப் பாரு.. ஒரு மிடில்கிளாஸ் பமிலில உனக்குப் பொண்ணு பாத்து வைச்சிருக்காரு.. இப்போ தெரியுதா யாருக்கு உம்மேல பாசம் அதிகம்னு..”

“ஹேய் என்ன மதி இது.. பமிலியோட அந்தஸ்தை விட குண நடை தான் முக்கியம் என்றது உனக்கு எப்போ தான் புரியப் போகுதோ..”

“நீங்கள் கொஞ்ச நேரம் வாயை மூடிக் கொண்டு இருக்கிறீங்களா.. நான் தான் அவன் கூட பேசீட்டு இருக்கேன்ல..”

“தாராளமாக பேசும்மா.. ஆனா நான் பாத்து வைச்ச பொண்ணை யாரு கூடவும் ஒப்பிட்டு பேசாதே..”

“ஒப்பிட்டு பேசுற அளவுக்கு அவளுக்கு என்ன தகுதி இருக்கு..”
என மதிவேணி எகிறிக் கொண்டு வரவும், தமிழரசன் வேகமாக எழுந்து விட்டான்.

அப்போது தான் இருவருமே மகனைப் பார்த்தனர். மதிவேணி சட்டென்று முந்திக் கொண்டு, தன் அலைபேசியில் இருந்த சயிரேகாவின் புகைப்படத்தை மகனுக்குக் காட்ட, நவநாகரிக உடையில் இருந்த அந்தப் பெண்ணை ஏனோதானோவென்று பார்த்து வைத்த தமிழரசன், தந்தையைக் கேள்வியாகப் பார்த்தான்.

அவனது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட கவிவாணன், மெல்லிய முறுவலோடு தன் அலைபேசியில் இருந்த தாமரையின் புகைப்படத்தை அவனிடம் காட்டினார்.

மகன் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறானோ என்கிற பதட்டம் அவருக்கு நிறையவே இருந்தது.

“செல்வச் சந்நிதியானே எப்புடியாவது எம்பையன் தாமரைக்கு தான் தலையை ஆட்டோணும்.. ஆட்ட வைச்சுடுப்பா.. அப்புடி மட்டும் நடந்திச்சுன்னா நான் பொடிநடையாவே உன்கிட்டே வந்து உன்னைத் தரிசனம் செஞ்சுக்கிறேன்..”
என மானசீகமாக வேண்டிக் கொண்டார்.

ஒரு நிமிடம் திரையில் தெரிந்தவளின் முகத்தை உயர்த்திப் பார்த்தவனோ தன் தலையை அழுந்தக் கோதியபடி
“இவ ஓகே..”
என்று விட்டு அங்கிருந்து போய் விட்டான்.

அவனது அந்தப் பதிலை நிஜமாகவே கவிவாணன் எதிர்பார்க்கவில்லை. எங்கே தாமரையை அவனுக்குக் கட்டி வைக்கத் தான் சரியாகக் கஷ்டப் பட வேண்டி வருமோ என அவர் நினைத்திருக்க, அவனோ ஒரு நிமிடத்தில் அவளைத் திருமணம் செய்வதற்கு சம்மதம் என சொல்லி விட்டு போய் விட்டானே என சந்தோஷ மிகுதியில் பேச்சற்று நின்றிருந்தார்.

தாமரையை செலக்ட் செய்து விட்டு சென்ற மகனையும், அதைக் கேட்ட சந்தோஷத்தில் பேச்சற்று நின்ற கணவனையும் மாற்றி மாற்றி முறைத்த மதிவேணிக்கு, எப்படி சயிரேகாவையும் அவளது தாயையும் சமாதானம் செய்யப் போகிறோம் என்பதே மூளையில் ஓடிக் கொண்டிருந்தது.

ஏனெனில் தன் மகன் தமிழரசனைப் பற்றி அவருக்கு தெரியாததா, அவன் ஒரு முடிவு எடுத்து விட்டால், அவன் நினைத்தால் மாத்திரமே அதில் மாற்றம் செய்ய முடியும். மற்றவர்கள் அதனை மாற்ற சொல்லி ஒரு வார்த்தை சொல்லி விட்டால் அவ்வளவு தான், அந்த முடிவில் இருந்து இம்மியளவு கூட விலக மாட்டான்.

பார்க்கலாம் இந்தக் கல்யாணத்தை நிறுத்தி, தான் நினைத்த பெண்ணை உள்ளே கொண்டு வர வழியில்லாமலா இருக்கும் என நினைத்தவர், எதற்கும் அமைதியாக ஏதாவது திட்டம் போடலாம் என்றும் எண்ணிக் கொண்டார்.

சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு, பெருமூச்சு விட்டபடி தன் அறையினுள் சென்ற மனைவியைப் பார்த்த கவிவாணன்
“சந்நிதியானே.. முதல் கேட்ட வேண்டுதலை செய்து குடுத்திட்டாய் அப்புடியே உந்த ஜீவனுக்கும் கொஞ்சம் நல்ல புத்தியைக் குடுப்பா.. எனக்கும் உன்னை விட்டா யாருக்கிட்டே கேக்கிறதுனே தெரியலைப்பா..”
என்று கொண்டே அப்படியே சோபாவில் விழுந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

இனி என்ன கல்யாண வேலைகளை ஆரம்பித்து விட வேண்டியது தான் என அவர் தன்னுள் திட்டம் போடத் தொடங்க, அங்கே தாமரையை ஓகே சொன்னவனோ குறுக்கும் நெடுக்குமாக தீவிர யோசனையோடு நடந்து கொண்டிருந்தான்.

தாமரையைப் பார்த்தாலே வெறுப்பை உமிழ்பவன் எப்படித் தான் அவளைக் கட்டிக் கொள்ளத் தேர்வு செய்தானோ என்பது அவனுக்கே விளங்காத புதிர்.

அறையை தன் வேக நடையால் அளக்கும் போதே, வரலக்சுமியை கதற விட வேண்டும் என்றால் இந்த திருமணத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என முடிவாக முடிவு செய்தான்.

ஏற்கனவே அவனுக்கு ஒரு கல்யாணத்தை கட்டி வைத்து விட வேண்டும், அதுவும் தன் நண்பன் மகள் தாமரையைக் கட்டி வைத்து விட வேண்டும் எனத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் கவிவாணனுக்கு, மகனது ‘ம்’ எனும் சம்மதமே போதுமானதாக இருக்க, வெகு வேகமாக கல்யாண வேலைகள் ஆரம்பமாகத் தொடங்கின.

3 thoughts on “தாமரையின் தழலவன் அத்தியாயம் 6”

  1. Avatar

    அச்சோ பாவம் தாமரை … ஆவங்க போட்டிக்கு அவளோட வாழ்க்கையை பாழாக்க பாக்கறாங்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *