Skip to content
Home » தீரனின் தென்றல் – 11

தீரனின் தென்றல் – 11

தென்றல் அதிசயமாக தன் வீட்டில் மதிய உணவை சாப்பிட அமர்ந்தவள் தாய் சோற்றை தட்டல் போட நேரமெடுக்க தட்டில் தாளமிட்டுக் கொண்டு இருக்க ஏற்கனவே மனைவி கோபத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்த ரங்கநாதன் மகளை அடக்குவது போல

Thank you for reading this post, don't forget to subscribe!

“பாப்பா… சாப்பிடும் போது தாளம் போடக் கூடாது டா…” என்று மென்மையாக கூற

“ப்பா..‌ சோறு போட்டா நான் ஏன் தாளம் போடப் போறேன்..‌. ஆமா எங்க உன் பொண்டாட்டி… பொண்ணுக்கு பசிக்கும் நேரத்துக்கு சோறு போட நினைப்பு இருக்கா… இன்னும் அடுப்படியில என்ன தான் பண்ணுது?” தாயை சத்தமாக வம்பிளுக்க

“எடு அந்த வெளக்கமாத்து கட்டையை…” என்று கோபமாக வந்து சாப்பாடு பாத்திரத்தை ‘டொம்’ என்று வைத்திட ‘போச்சு… இன்னைக்கு சாப்பாடு நேரம் சண்டை நேரம் தான்.‌‌…’ தனக்குள் புலம்பிக் கொண்டார் ரங்கநாதன்.

“என்ன பொன்னி… இன்னைக்கு பொண்ணு மேல பாசம் மழையா பொழியுது?” இன்னும் சீண்டினாள் அன்னையை…

“ஏங்க… இன்னும் எவ்வளவு காலம் தான் இவளுக்கு இப்படியே செல்லம் கொடுப்பீங்க..‌ கொஞ்சம் அதட்டி வைங்க உங்க பொண்ணை…” கணவரிடம் குரல் உயர்த்த “சரிமா…” என்று தலையை ஆட்டினார் ரங்கநாதன் வயிறு பசிக்கிறதே… இந்த நிலையில் மகளா மனைவியா என்று மனம் கேட்க எனக்கு சோறு தான் முக்கியம் என்று வயிறு கூப்பாடு போட மகளை டீலில் விட்டு மனைவிக்கு தலையாட்ட முறைத்தாள் தென்றல்.

“அவரை ஏன்டி முறைக்கிற…. உனக்காக பார்த்து பார்த்து நகை நட்டு னு வாங்கி போட்டு அழகு பார்த்தா நீ யார்க்கிட்டேயும் சொல்லாம ஆதீரன் கையில கழட்டி கொடுத்திருக்க… நல்லவேளை பூரணி அண்ணி பையன் நல்லவன் அதனால நகை தப்பிச்சது..‌ இதுவே எவனாவது அயோக்கிய பயலா இருந்தா நகைய லவட்டிக்கிட்டு போயிருக்க மாட்டான்…” மகளை திட்டி தீர்த்தார் பொன்னி.

“அம்மா… ஏன் இப்படி சவுண்ட் விடுற… நான் ஒன்னும் நீ சொல்ற மாதிரி எவனுக்கோ ஒன்னும் கொடுக்கலையே… தீரனுக்கு தானே கொடுக்க போனேன்… அதுவும் தீரனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டனும் ம்மா… அதான்…” தானே பாத்திரத்தை இழுத்து வைத்து தட்டில் சாதம் போட்டு குழம்பை ஊற்றியபடி தென்றல் பேச

“பார்த்தீங்களா இவளை… அதை என்கிட்ட சொல்லி இருந்தா என்னவாம்? நான் பணம் கொடுத்திருக்க மாட்டேன்?” கணவரிடம் மீண்டும் புகார் கூற

“அம்மா.. அது என்ன நீ மளிகை சாமான் வாங்குற மாதிரி ஐநூறு ஆயிரம் ரூபாய் ல முடியும் னு நினைச்சியா? கிட்டத்தட்ட இருபதைஞ்சு முப்பது ஆயிரம் வேணும்… அப்பா சேர்க்குற சொத்து நகை பணம் எல்லாமே எனக்கு தானே… என்னோட சொத்து தீரனுக்கும் சொந்தம் தானே… இல்லையா ப்பா…” தந்தையை துணை சேர்க்க ரங்கநாதன் எதுவும் புரியாமல் விழிக்க தந்தை தட்டிலும் தானே பரிமாறிய தென்றல்

“அப்பா… நான் தீரனை கல்யாணம் பண்ணிக்கிட்டா இதெல்லாம் நடக்கும் தானே…” என்று கேட்க அதுவரை பொரிந்து கொண்டு இருந்த பொன்னி அமைதி ஆனார். ஆனால் ரங்கநாதன் ஏதோ யோசிக்க

“என்னப்பா?” தென்றல் அவரை உலுக்க

“தென்றல் குட்டி… என் பொண்ணு நீ எனக்கு தேவதை… ஆதீரனும் நல்லவன் தான்… என் தங்கச்சி பையன் ங்கற உறவு உரிமை அவனோட குணம்… எல்லாம் சரிதான்… ஆனா அவனுக்கு உன்னை பிடிச்ச மாதிரி பேசவே மாட்டேங்குறான்… உனக்கு மட்டும் பிடிக்குதே னு உன்னை எப்படி நான் அவனுக்கு கட்டி வைக்க… அதுவே உன் வாழ்க்கையை பாழக்கிடுமே…” பொறுமையாக அவளுக்கு விளக்கி அறிவுரை கூற

“அப்பா… இப்போ எதுக்கு இப்படி க்ளாஸ் எடுத்திட்டு இருக்க?” தென்றல் பொறுமை இழந்து கேட்க

“அம்மாடி… உனக்கும் ஆதீரனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல எனக்கு பிரச்சினை இல்ல…. ஆனா ஒருவேளை அவனுக்கு உன்னை பிடிக்காட்டி நான் இதைபற்றி பேசவே மாட்டேன்… சரியா?” ரங்கநாதன் சொல்ல கண் சுருக்கி தென்றல் முறைத்தாள்.

“ஏன்டா?” ரங்கநாதன் பாவமாக கேட்க

“உன்னை என்ன இப்போவேவா ப்பா கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொன்னேன்… தீரன் படிச்சுட்டு வேலைக்கு போகட்டும்… நானும் ஒரு டிகிரி முடிச்சிடுறேன்… அப்பறம் கல்யாணம் பண்ணி வை… அதுக்குள்ள உன் தங்கச்சி பையன் அவனே நம்ம வீடு தேடி வந்து என்னை பொண்ணு கேட்பான்…” என்று பேசிக் கொண்டே உணவை முடித்துக் கொண்டு எழுந்து சென்றாள் தென்றல்.

ரங்கநாதனுக்கும் அப்படி நடந்தால் மகிழ்ச்சி என்றே தோன்ற பொன்னிக்கு பெருத்த நிம்மதி… ‘மகளின் அடாவடி சுட்டி தனத்திற்கு எவ்வளவு சொத்தை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்தாலும் கண்டிப்பாக ஒரு நாள் கூட சந்தோஷமாக இருக்க முடியாது.

ஆனால் பூரணி அண்ணி… தன்னை விட தென்றலை நன்றாக பார்த்துக் கொள்வார்… ஆதீரனும் கூட மிகவும் நல்லவன் பொறுப்பானவன். பல சமயங்களில் தென்றலின் சேட்டைகளை அவன் ஒருவனை தவிர வேறு யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது…’ அதனால் தென்றலின் இவ்வகை ஆசையை மறைமுகமாக ஊக்குவிக்க தான் செய்தார் பொன்னி.

தென்றலின் தேர்வு முடிவுகள் வெளிவந்தது. தென்றல் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல மதிப்பெண் பெற்றிருக்க ரங்கநாதன் பொன்னி அன்னபூரணி குமார் என்று அனைவரும் மகிழ ஆதீரனுக்கு மட்டும் ‘எப்படி இவ இம்புட்டு மார்க் எடுத்தா?’ என்ற சந்தேகம் மூளையை குடைந்தது.

தென்றல் கேட்டது போலவே ஆதீரன் படிக்கும் கல்லூரியிலேயே வேறு பிரிவிற்கு ரங்கநாதன் தென்றலுக்கு சீட் வாங்கி தர மகிழ்வோடு கல்லூரிக்கு கிளம்பினாள் தென்றல்…

ஆனால் அவள் கிளம்புவதற்குள் வீட்டையே தலைகீழாக திருப்பி பொன்னியை தலையை பிய்த்துக் கொள்ளும் படி செய்து விட்டாள்…

“இங்கன இருக்குற பள்ளிக்கூடம் போகவே சாதாரண யூனிபார்ம் போடுறதுக்கு இவ கலைச்சு போட்டு போறதை அடுக்கி வைக்க எனக்கு ஒரு நாள் போதாது… இதுல டவுன் காலேஜ் ல யூனிபார்ம் இல்ல… காலையில இருந்து பத்து சுடிதார் மாத்திட்டா… இன்னும் முடிவு பண்ணலை எது போடனும் னு…” என்று சத்தமாகவே புலம்பிக் கொண்டே சமையலை கவனித்தார் பொன்னி.

“ம்மா… அதான் பகல் எல்லாம் சும்மா வீட்ல தானே இருக்க… அதான் உனக்கு வேலைக்கு ரெடி பண்ணி வைக்கிறேன்…” என்று தென்றல் கேலியாக கூற சல்லிக் கரண்டியை தூக்கிக் கொண்டு அடிக்க வந்தார் பொன்னி.

“ஐயோ அப்பா… காப்பாத்து” என்று ரங்கநாதன் பின்னால் போய் ஒளிந்து கொண்டு “அப்பா… இதுக்கு தான் முதல் நாள் காலேஜ் போக புது சுடிதார் கேட்டேன்… இந்த அம்மா அதையும் வாங்க விடலை… இப்போ எந்த ட்ரெஸ் நல்லா இருக்கு னு போட்டு பார்த்தா அதையும் குறை சொல்லுது…” என்று தாயை புகார் கூற

“என்ன டா இது… நீ எத்தனை ட்ரெஸ் வேணும்னாலும் மாத்து… ஆனா அதை நீயே திரும்ப அடுக்கி வைச்சிட்டா அம்மாக்கு வீட்டை ஒதுங்க வைக்க கொஞ்சம் லேசா போகுமே…” என்று மென்மையாக கூற

“ம்ம் என்ன இருந்தாலும் இந்த பொன்னியை நீ லவ் பண்ணி ல கல்யாணம் பண்ணின.. அதான் பொண்ணு மேல பாசம் இருந்தாலும் இந்த பொன்னியை விட்டுக் கொடுக்க முடியலை…” நீட்டி முழக்கி தென்றல் தாய் தந்தையை கிண்டல் செய்ய ரங்கநாதன் மனைவியை காதலாக பார்க்க பொன்னி வந்த வெட்கத்தை மறைத்துக் கொண்டு

“போய் சீக்கிரம் கிளம்புற வழியை பாரு… அப்பறம் மினிபஸ் போயிடுச்சு னா முதல் நாளே ஒன்றரை மைல் நடந்து போகனும்..‌” என்று மகளை எச்சரித்து விட்டு செல்ல

“ஆமா..‌ நேரமாச்சு” என்று தென்றல் மீண்டும் பரபரப்பானாள். தென்றலின் கிராமத்தில் இருந்து மணிக்கு ஒரு பேருந்து தான் அதுவும் சில நேரங்களில் சரியான நேரத்தில் வருவதே இல்லை.. என்று மனதில் புலம்பிக் கொண்டே எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தபடியே தாய் தந்தைக்கு கையசைத்து வெளியேறிய தென்றல் வழக்கம் போல தீரனின் வீட்டிற்கு வந்து அன்னபூரணியிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு தீரனை கொஞ்சம் கலாய்த்து அவன் கண் இடுங்க முறைக்க அதை ஆசை தீர ரசித்து விட்டு சரியாக பேருந்தை பிடித்து கல்லூரிக்கு வந்திறங்கினாள் தென்றல்.

  • தொடரும்…

1 thought on “தீரனின் தென்றல் – 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *