தென்றல் கல்லூரி வளாகத்தில் தன் வகுப்பு எது என்று தெரிந்து கொண்டவள் உள்ளே சென்று தான் அமர இடம் எங்கே என்று பார்க்க அவளுக்கு வலது புறம் இரண்டாவது வரிசையில் இருந்து “ஏய் காத்து…” என்று கத்தினாள் ரூபிணி…
Thank you for reading this post, don't forget to subscribe!அவளை பார்த்து சிரித்த தென்றல் “ஏய் கருப்பு…” என்று உற்சாகமாக கத்திக் கொண்டு அவள் அருகில் செல்ல செல்லமாக முறைத்தாள் ரூபி.
“ஏன்டி நான் கருப்பா?” என்று அவள் கோபித்துக் கொள்ள
“பின்ன நீ மட்டும் என்னை காத்து னு கூப்பிட்ட… அதான் ஒரு ரைமிங்கா இருக்கட்டுமே னு கூப்பிட்டேன்…” என்று ரூபியை இடித்துக் கொண்டு அமர்ந்தாள் தென்றல்..
“ம்ம்… உன் பெயருக்கு அதானே அர்த்தம்… நீயும் காத்து மாதிரி ஒரு இடத்துல நிக்காம சுத்திட்டே இருப்ப…” என்று ரூபா சொல்ல
“அது சரி… ஆமா மதுரை ல இல்லாத காலேஜ்னா தேனிக்கு படிக்க வந்தவ…” தென்றல் கேட்க
“ம்க்கும்… நான் அப்படியே மதுரைல தான் வளர்ந்தேனாக்கும்… குடிகார அப்பனுக்கு சம்பாதிக்க துப்பில்லை னு எங்க ஆச்சி சின்ன பிள்ளைல இருந்து என்னை இங்க தானே கூட்டிட்டு வந்து வச்சுருக்கு… தெரியாத மாதிரி கேட்குற” ரூபா சொல்ல
“தெரியும் டி… காலேஜ்க்கு அங்க போயிருப்ப னு நினைச்சேன்… சரி இந்த காலேஜ் ஏன் சேர்ந்தீங்க மேடம்?” குறுஞ்சிரிப்புடன் தென்றல் கேட்க
“ம்ம்… நீ என்னத்துக்கு வந்தியோ அதுக்கு தான்…” ரூபி சொல்ல
“நான் படிக்கிறதுக்காக வந்தேன்…” தென்றல் தோளை குலுக்கி சொல்ல
“நான் மட்டும் என்ன களை எடுக்கவா வந்தேன்… படிக்க தான்..” ரூபா சொல்ல
“ம்ம்… ம்ம்… தெரியும் டி நீ படிச்ச லட்சணம்… எங்க அம்மா உனக்கு தூரத்து சொந்தத்துல அத்தை னு வருஷா வருஷம் திருவிழாக்கு ஊருக்கு கூட்டிட்டு வந்தா இந்த வருஷம் திருவிழால காதல் பாடம் படிச்சிருக்க எங்க அண்ணன் கூட… இல்ல?” தென்றல் கூர்மையாக பார்த்து கேட்க தலை குனிந்தாள் ரூபிணி.
“எனக்கு தெரியும் ரூபி.. அண்ணன் எல்லாம் என்கிட்ட சொல்லிடுச்சு… ஆமா.. நீ இங்க படிக்க வரது குமார் அண்ணாக்கு தெரியுமா? “
“இல்ல தென்றல்… நானே உங்க வீட்டுக்கு வரும் போது தான் உன் அண்ணனை எப்பவாவது பார்த்து பேசிப்பேன்… இப்போ நான் வந்தது தெரியாது…” ரூபி சொல்ல
“சரி புள்ளை… நீ ஏன் பாட்டி வீட்ல இருந்து வரனும் நானும் அப்பாவும் வந்து உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுறோம்…” தென்றல் கூற
“இல்ல புள்ளை… பாட்டிக்கு அடிக்கடி நோவு வருது… நான் கூட இருந்தாலாவது ஏதாவது பார்த்துப்பேன்…” என்று கூறிய ரூபா
“ஆமா நான் தான் சரியா படிக்க மாட்டேன் ஆர்ட்ஸ் க்ரூப்ல சேர்ந்தேன்… நீ பெரிய படிப்பாளி ஆச்சே… ஏன் இந்த க்ரூப் எடுத்த?” என்று தென்றலை பார்த்து ரூபி கேட்க
“படிப்பேன் தான்… ஆனா பாவம் டி அப்பா… பீஸ் கட்டனுமே… ஏற்கனவே தீரன் இன்ஞினீயரிங் படிக்கவே டைம்க்கு ஃபீஸ் கட்ட சிரம படுது…” சோகமாக சொல்ல
“ஏன் ஆதீரன் அண்ணாக்கு அவங்க அப்பா நிலத்துல குத்தகை பணத்துல ஃபீஸ் கட்றதா வேலு சொன்னாரே…” சந்தேகமாக ரூபி கேட்க
“ரூபி… நீ யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன் னு சொன்னா நான் சொல்றேன்…” என்று தென்றல் நிபந்தனை போட
“ஏய்… நாம பேசுறதை யார்கிட்ட நான் சொல்லப் போறேன்…” ரூபி சொல்ல
“அது… ரூபி தீரனோட அப்பா அன்னபூரணி அத்தைக்கு அப்பா கல்யாண சீரா கொடுத்த நிலம் நகை னு எல்லாத்தையும் குடி சூது னு செலவு பண்ணி கடன் ல தான் விட்டுட்டு போனாரு… ஆனா, ஆதீரன் சின்ன வயசுல இருந்தே தன்மானம் பார்க்குறான் னு எங்க நிலத்தை தீரனோட இடம்.. அதை அப்பா குத்தகை எடுத்திருக்கிறதா சொல்லி வைச்சுருக்காங்க… அவங்க அப்பாவால வந்த கடனை கூட அப்பா தான் கட்டினாரு…
இந்த விஷயம் எல்லாம் நாம பத்தாவது படிக்கும்போது அப்பா அம்மா அத்தை னு எல்லாரும் சேர்ந்து பேசிட்டு இருந்தாங்க… மாப்ளை இந்த வயசுலயே ரொம்ப கௌரவம் பார்க்குறாப்ல… ரொம்ப நல்லது தான் அப்போ தான் அவங்க அப்பா மாதிரி செலவு பண்ணாம பொறுப்போட வளருவான். அதனால அவன் படிப்பு முடியிற வரைக்கும் நிலத்தை மச்சானோட நிலம் னு சொல்லி வைக்கலாம்… அதுக்கப்புறம் எல்லாம் சொல்லிக்கலாம் னு அப்பா சொல்லிட்டு இருந்தார். நான் கேட்டது அவங்க யாருக்கும் தெரியாது. நானும் காட்டிக்கலை…” தென்றல் சொன்னதை கேட்டு வாயில் விரல் வைத்திருந்தாள் ரூபிணி..
“பரவாயில்ல தென்றல்… மாமா எவ்வளவு நல்லவரு… அண்ணனும் அதுக்கு ஏத்தாப்புல நல்லா படிக்குது.. சீக்கிரம் படிச்சு முடிச்சிட்டு நல்ல வேலைக்கு போகும்…” ரூபி சொல்ல வகுப்பு ஆசிரியர் உள்ளே நுழைய இவர்கள் பேச்சு தடைபட்டது. முதல் நாள் வகுப்பு படிப்பை தவிர ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்ய அவரவர் விருப்பம் பகிர என்று கலகலப்பாக இருந்தது.
தென்றல் வீட்டில் தன் அன்பை வெளிப்படையாக காட்டினாலும் கல்லூரியில் தீரனை தேடிச் செல்வதே இல்லை… மேலும் ஒரே கல்லூரி என்றாலும் கலை அறிவியல் வளாகம் தனியாகவும் பொறியியல் வகுப்பு தனியாகவும் இருக்க அடிக்கடி பார்க்கும் வாய்ப்பும் இல்லை…
ஆனால் ரூபிணியும் குமாரவேலும் வெளியே சந்திக்க வாய்ப்பின்றி அவ்வப்போது கல்லூரி செல்லும் போதும் முடிந்து வரும் போதும் பார்த்துக் கொள்ள அவர்களுக்கு துணை நிற்கிறேன் என்ற பெயரில் வரும் தீரனும் தென்றலும் கள்ளப்பார்வை பார்த்துக் கொள்வர்.
கல்லூரி வந்தும் கூட தென்றலின் சேட்டைகள் குறைந்த பாடில்லை… வீட்டில் ரகளை செய்து பொன்னியை கத்த வைப்பது பொன்னி அடிக்க துரத்தினால் ஓடி வந்து அன்னபூரணியிடம் தஞ்சம் புகுவது… அந்த சாக்கில் தீரனிடம் வம்பிளுப்பது சமயங்களில் ஏதாவது சாக்கு சொல்லி ரூபியை தங்கள் கிராமத்திற்கு வரவழைத்து குமார் காதலுக்கு உதவுவது அதை காரணமாக வைத்து தீரனையும் வரவழைத்து அவனை சீண்டுவது என்று நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது தென்றல் வாழ்க்கை..
இந்த நிலையில் “தீரா எப்போ டா என்னை உனக்கு பிடிக்கும் னு உண்மையை ஒத்துக்க போற?” தென்றல் எதார்த்தமாக கேட்க தீயாக முறைத்தான் ஆதீரன்.
“நான் ஏன் டி சொல்லனும்?” கோபமாக கேட்க
“தீரா… நடிக்காதடா உனக்கு என்னை பிடிக்கும் டா… எனக்கு தெரியும்.. ப்ளீஸ் டா ஒரு தடவை சொல்லு…” என்று கெஞ்சினாள் தென்றல்.
‘உஃப்…’ என்று இடுப்பில் கை வைத்து பெருமூச்சு விட்டு கொண்டான். அப்போ எனக்காக நீ என்ன வேணும்னாலும் செய்வ அப்படி தானே? தலை சாய்த்து கேட்க
“ஆமா தீரா… நீ சொல்லு நான் என்ன செய்யனும் சொல்லு… நான் முடிச்சு காட்றேன்…” தெளிவான குரலில் தென்றல் கூற சற்று யோசித்த தீரன்
“ம்ம் சரி அப்போ… நம்ம ஊர் கரடு ல ஒரு கோவில் இருக்கே…” தீரன் கேட்க
“நம்ம ஊர்ல கார்த்திகை தீபம் போடுவாங்களே அந்த கோவிலா தீரா? “
“ம்ம்… ஆமா அங்க நாளைக்கு ஆறு மணிக்கு சரியா வந்திடு தனியா… அங்க வச்சு சொல்றேன் உன்னை எனக்கு பிடிக்குமா பிடிக்காதா னு..” என்று தீரன் காலை மாலை என்று குறிப்பிட்டு கூறாமல் பொதுவாக ஆறு மணிக்கு என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்திட தென்றல் காலை ஐந்து மணிக்கு எழுந்து தலைக்கு குளித்து விட்டு தீரனுக்கு பிடித்த எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் தாவணியை அணிந்து கொண்டு தனியாக சென்று விட்டாள் அந்த கரடில் அமைந்துள்ள கோவிலுக்கு…
அது அந்த ஊரில் உள்ள குறிப்பிட்ட சில குடும்பங்கள் பங்காளி வகையறா என்று வைத்து வருடம் ஒருமுறை கார்த்திகை மாதம் மட்டுமே ஊரில் அனைவரையும் அழைத்து திருவிழா நடத்துவர்… மற்ற நேரங்களில் ஆள் அரவமின்றி தனியே இருக்கும் இடம்… அதனால் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு நிறைய இருக்கும் இடம் அது… ஆபத்து என்று அறிந்தும் புரியாமல் தீரனை தேடி சென்றாள் தென்றல்.
- தொடரும்…
ACHO THENDRAL KU ENA AGA POTHU