“நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி…
இல்லல்ல சிந்தாமணி இல்ல… தென்றல்… இல்ல தென்னுக்குட்டி இல்லையா தீரா?” அந்த பாடலில் வருவது போலவே தீரனின் கழுத்தை கட்டிக் கொண்டு முதுகில் உப்பு மூட்டை தொங்கி கொண்டு வந்தாள் தென்றல்.
காலை தீரன் நீவி விட்டாலும் இன்னும் வலிக்கிறது… என்று அழுவது போல முகத்தை வைத்திருக்க வேறு வழியின்றி அவளை தூக்கிக்கொண்டு கீழே இறங்க முடிவு செய்தான் ஆதீரன்.
மகிழ்வாக அவனை கட்டிக் கொண்டு பாடிக்கொண்டே வர கடுப்பான ஆதீரன் “ம்ம்… சிட்சூவேஷன் சாங்.. பாடுவடி பாடுவ… ஆமா… பாட்டு பாடுறியே… அந்த படத்தை முழுசா பார்க்குற பழக்கம் இருக்கா உனக்கு?” அவளை தூக்கிக்கொண்டு கீழே பாதையில் ஊன்றி மிதித்து நடந்தபடி தீரன் கேட்க
“ரெண்டு மூனு மணிநேரம் உட்கார்ந்து படம் பார்க்க எனக்கு எங்க தீரா பொறுமை இருக்கு… சரி இப்போ ஊருக்குள்ள பாதிபேரு ‘உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்’ னு காதல் படம் பாட்டை பாடிட்டு சுத்துறாங்க… அவனுங்க யாரும் அந்த படம் க்ளைமாக்ஸ் பார்த்திருக்காமலா இருப்பாங்க… பாட்டு நல்லா இருந்தா நம்ம சூழலுக்கு பொறுந்துனா போதாதா?” என்று தென்றல் கேட்க
“ம்ம்… உனக்கு மாமா தென்றல் னு பெயரு வைச்சதுக்கு வாயாடி னு பேரு வச்சிருக்கலாம்… பொறுத்தமா இருக்கும்..” தீரன் சொல்ல தென்றல் சிணுங்கினாள்.
“ஏய்… ஆடாம இருடி… இல்ல இங்கிருந்து உருட்டி விட்டுடுவேன்…” என்று தீரன் மிரட்ட உதட்டை சுழித்து கொண்டவள் அடங்காமல் காதருகே சென்று ஊதுவது கன்னத்தில் உரசுவது என்று சேட்டைகள் செய்து கொண்டு தான் இருந்தாள் தென்றல்.
ஒருவழியாக குமாரின் பைக்கை நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு கொண்டு வந்து தென்றலை இறக்கி விட்ட தீரன் பைக்கை உயிர்ப்பிக்க அவன் பின்னால் அமர்ந்து அவன் முதுகில் சாய்ந்து இன்னொரு பாடலை தொடங்க
“அடியே… திரும்ப ஆரம்பிச்சா வண்டியை நிறுத்தி இறக்கிவிட்டு போய்டுவேன் டி…” தீரன் அதட்ட அமைதியாக ஆனால் அவன் முதுகில் தாளமிட்ட படி அமர்ந்து கொண்டாள் தென்றல்…
நேராக தென்றல் வீட்டில் கொண்டு விடாமல் தெருமுனையில் இறக்கி விட்ட தீரன் “இங்க பாரு… நான் சொன்னேனு தான் நீ மலைக்கோவில் போனதோ இல்ல.. இப்போ அங்க நடந்ததோ வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம்… உன் உளறு வாயை கொஞ்சம் மூடி வை..” என்று எச்சரிக்க
“ஏன் தெரிஞ்சா என்ன?” இடக்காக தென்றல் கேட்க கண் இடுங்க முறைத்த தீரன் “படிக்குற வயசுல இதெல்லாம் அவசியமா னு தப்பா நினைப்பாங்க தென்னுக்குட்டி…” என்று சொல்ல
‘தென்னுக்குட்டி’ என்ற வார்த்தை அவளை மொத்தமாக கட்டிப் போட்டது.
எப்போதும் போல துள்ளளோடு தென்றல் வீட்டினுள் செல்ல அன்னையும் அத்தையும் ஆளுக்கொரு பக்கம் வந்து நின்று “எங்கடி போன?” என்று இன்னும் பதட்டம் தீராமல் கேட்க
“ம்மா.. கோவிலுக்கு தான் போனேன்… பதறாதே அத்த… ஒரு வேண்டுதல் அவ்வளவு தான்…” தென்றல் அமைதி படுத்த முயல
“ஏன்டி இவ்வளவு களைப்பா இருக்க?” ஆதூரமாக தலை கோதினார் பூரணி..
“காலையில இருந்து சாப்பிடலை அத்த…” தென்றல் சொன்ன அடுத்த நிமிடம்
“ஏன்டி பட்னி கிடைந்து வேண்டிக்கிற அளவுக்கு என்னடி பெரிய வேண்டுதல்?” என்று கடிந்தபடி தட்டில் சாதம் போட்டு பிசைந்து ஊட்டி விட்டார் பொன்னி.
அதன் பிறகு வந்த ரங்கநாதன் தென்றலை கட்டிக் கொண்டு அழவே செய்து விட்டார். தென்றலுக்கு மிகவும் வருத்தமாக போனது தந்தை அழுவதை பார்த்து… அவரை அமைதி படுத்தி அவரும் இன்னும் உண்ணாமல் இருக்க தந்தைக்கு தன் கையால் ஊட்டி விட்டாள் தென்றல்.
ஆதீரன் பைக்கை விடுவதற்கு குமார் வீட்டிற்கு வர அவன் வீட்டில் இல்லை… அதுவே நல்லது என்று அவன் அம்மாவிடம் பேசிவிட்டு சாவியை கொடுத்து விட்டு வந்து விட்டான்.
மறுநாள் காலை எப்போதும் போல தீரனை கல்லூரி அழைத்துச் செல்ல வந்த குமார் எதுவும் பேசாமல் உள்ளே வந்து அமர தீரனும் அவன் முகம் பார்க்காது தலை குனிந்து இருக்க எதுவும் புரியாமல் பூரணி தான் இருவரையும் பார்த்து முழித்து நிற்க உள்ளிருந்து வந்த தென்றல் எதுவும் பேசாமல் குமாருக்கு தட்டில் உணவை பரிமாற அவளை முறைத்தான் குமார்.
அவளோ “ஈஈஈ” என்று சிரித்தவள் “சாப்பிடு ண்ணே… காலேஜ்க்கு லேட் ஆகுது ல…” என்று தென்றல் சொல்ல
“நீ காலேஜ்க்கு வா… உன்னை பார்த்துக்கிறேன்…” என்று பல்லிடுக்கில் கூற
“ஆமா குமாரு.. எங்க அண்ணே சொன்னா தான் அடங்க மாட்டா… அவளுக்கு அண்ணனா நீயாவது அதட்டி அடக்கி வைப்பா… நேத்து முழுக்க எப்படி கலங்க வைச்சுட்டா…” என்று சொல்லியபடி அடுப்படி சென்று விட்டார் பூரணி.
“டேய் என்னடா பண்றீங்க ரெண்டு பேரும்…” தீரன் தென்றலை பார்த்து குமார் கேட்க
“புரியலை.. லவ் பண்றோம்…” என்று உதட்டுக்குள் மறைத்த சிரிப்போடு தெனவெட்டாக தீரன் சொல்ல அழகாய் வெட்கப்பட்டாள் தென்றல்…
“டேய் என் தங்கச்சி தென்றலா இது? வெட்கம் எல்லாம் படுறா டா…” ஆச்சரியமாக கேட்க
“ச்சீ… போண்ணே…” என்று முகத்தை மூடிக் கொள்ள
“அடியே… பஸ் ஊருக்குள்ள போயிடுச்சு திரும்பி வரதுக்குள்ள வெளியேறி போ டி…” என்று பூரணி உள்ளிருந்து சத்தமிட “சரி அத்த… நான் வாரேன்” என்று பூரணியிடம் கூறி விட்டு
“அண்ணே… நான் வாரேன் என்னாச்சு ஏதாச்சு னு உங்க ஃப்ரண்ட் கிட்ட கேட்டுக்கோ…” என்று விளையாட்டாக கண்ணடித்து விட்டு தன் புத்தக பைகளை தூக்கி கொண்டு கிளம்பியவள் அவசரமாக தீரன் அருகில் சென்று குனிந்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு அடுத்த நொடி அங்கு நிற்காமல் ஓடி இருக்க தீரன் அவள் எச்சில் பதிந்த கன்னத்தில் கை வைத்து குமாரை பார்க்க அவனோ நடந்தது கனவா நிஜமா என்று குழப்பத்தில் கண்ணை விரித்தான்.
“டேய் என்னடா நடக்குது?” அதிர்ந்து போய் குமார் கேட்க அசடு வழிந்தான் ஆதீரன்.
“டேய் சும்மா இரு… அப்படியே உனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி தான்…” வெட்கத்தை விழுங்கிக் கொண்டு தீரன் பேச
“ம்ம்… நல்லா இருக்கு டா… ஆனாலும் உன்னை இப்படி நான் எதிர் பார்க்கவே இல்லை..” குமார் சொல்ல
“எல்லாத்தையும் உன் தங்கச்சி… இல்லல்ல என் தென்றல் மாத்திட்டா டா…” கர்வமாக கூறிய ஆதீரன் அறியவில்லை இன்னும் சில நாட்களில் அவனே தன் வாழ்க்கையை மொத்தமாக தலைகீழாக மாற்றி விடுவான் என்று…
- தொடரும்…
VERY INTERESTING