தேவதை எபிளாக்
மூன்று வருடங்கள் கழித்து. தூத்துக்குடியில் இருக்கும் ஸ்ரீ பெரிய பாளையத்து அம்மன் கோயில் மிகப்பிரமாண்டமாக காட்சியளித்தது. அதன் உள்ளே தெய்வ சன்னதியில் முன்பு பயபக்தியாக நின்று கொண்டிருந்தாள் மாலினி. அவளை இமை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த் லோகநாதன் இரண்டரை வயது பேரனை கையில் பிடித்து இருக்க. விசாலாட்சி தன் மகளின் உருவில் இருக்கும் பேத்தியைப் தூக்கி பிடித்திருந்தார்.
ஒரு வருடத்திற்கு முன்னால் நடந்த விபத்தில் அவருக்கு காலில் அடிபட்டு விட. மாலினி தான் மகளாக இருந்து அவரைப் பார்த்துக் கொண்டாள்..
முதலில் முகம் திருப்பினார். ஆனால் முகம் கோணாமல் அவள் அவரை கவனித்துக் கொள்ள. தாயைத் தேடி வந்து,
“அம்மா பசிக்குது”, என்று நின்ற பேத்தியை பார்த்ததும் அவர் மனதும் இளகியது. எத்தனை நாள் தான் வீம்பை இழுத்து பிடித்துக் கொண்டு இருக்க முடியும்??, எத்தனை நாள் தான் கோபமாக இருப்பது போல் நடிக்க முடியும், மகளை இழந்து, மகனையும் பிரிந்து கணவனையும் ஓரம் நிறுத்தி என்ன சாதிக்க போகிறார் அவர்?. எதுவும் இல்லை என்ற நிதர்சனம் அவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. அதை புரிய வைத்தனர் தம்பதிகள் இருவரும்.
அவர்களை பிரிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியடைய. ஒரு கட்டத்துக்கு மேல் அவரே சோர்ந்து போய்விட்டார். வேண்டாம் என்று தடுத்தும் அவரை பார்த்துக்கொள்ள குடும்பம் சகிதமாக அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
எவ்வளவு ஒதுக்கினாலும் முகம் கோணாமல் மாலினி அவரைப் பார்த்துக் கொள்ள. அவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை சிறிது சிறிதாக தான் விசாலாட்சியின் சிந்தைக்கு தெரிய வந்தது. குடும்பமாக வாழும் கூட்டை கலைக்க வேண்டாம் என்று அமைதியாகி விட்டார். அரவிந்த் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் மாலினி அப்படி இருந்திருக்கவில்லை.
வளர்ந்துவிட்ட ஷாலினியும் அவ்வப்போது வந்து பாட்டிக்கு ஏதாவது கொடுத்துவிட்டு செல்ல. ஒன்றரை வயது மகனையும் வைத்துக்கொண்டு தன்னையும் பார்த்துக் கொள்ளும் மருமகளை அவர் கவனிக்க ஆரம்பித்தார். தான் தேடிப்பிடித்து இருந்தாலும், இவளை போல ஒரு குணவதியை தன்னால் கண்டிப்பாக மகனுக்கு திருமணம் முடித்திருக்க முடியாது என்ற நிதர்சனம் அவருக்கு புரிந்தது.
அறிவுத்திறனும் அதிகம் என்பது லோகநாதனின் வேலை பளுவை குறைக்க அவளே நிறைய வேலை செய்து கொடுப்பாள். அதுபோல கணவனுக்கும்.
லோகநாதன் தான் மருமகளின் அறிவு திறனை அவ்வப்போது பறைசாற்றி கொண்டே இருப்பார். அத்தனை வருட தொழில் சாம்ராஜ்யத்தில் இருப்பவருக்கு, அவளின் திறன் நன்றாக தெரிந்தே இருந்தது. ஆனாலும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள மனம் வரவில்லை. அவளுக்கு இரண்டாம் திருமணம் என்பதை தவிர அவளிடம் வேறு எந்த குறையையும் காண முடியாது. ஆனால் அதிலும் அவள் தவறில்லை என்று தெளிவாகவே தெரிந்தது. முதல் கணவன் என்று சொல்லப்படுபவனும் இறந்து விட்டான். அதையே ஏன் தான் இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார் அவர்.எட்வர்ட்டின் குடும்பக் கதை. அவன் தகப்பன் கதை என்று எல்லாமே அறிந்தவருக்கு.
நல்ல வேளை எட்வர்ட்டின் மனைவியை போல தன் மருமகள் இல்லை என்று மனதளவில் சந்தோஷப்பட்டு கொண்டார். அதை அவர் வெளிப் படுத்தவில்லை என்பது வேறு விஷயம் . பேரன் பேத்திகளை கொஞ்சினார். சற்று தன் கர்வத்திலிருந்து இறங்கி வந்தார். ஆனால் மகனிடமும் மருமகளிடமும் இன்னும் முகம் தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிகிறார் . மாலினி அதைக் கண்டு கொள்ளவில்லை. தன் கடமையை செய்தாள். லோகநாதன் மட்டும் மனைவியை வைத்துக் கொண்டு சிரமப்படுவது தெரிந்துதான் உதவிக்கு மாலினி தன் கணவனோடு அங்கு வந்து சேர்ந்தாள். அரவிந்த் அதை பொருட்படுத்தவே இல்லை. எப்பொழுதும் போல அனைவருக்கும் பாலமாக இருந்தது லோகநாதன் தான். பிறகு அந்த பொறுப்பை பேரனும் பேத்தியும் எடுத்துக் கொண்டனர்.அரவிந்தை பொறுத்த வரைக்கும் அவன் தாய் மன்னிப்பு கேட்டதனால் அவர்களை மன்னித்து விடவில்லை. அரவிந்தை வற்புறுத்தி அங்கு அழைத்து வந்ததே மாலினிதான். தன் குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டி வேண்டும் என்பதற்காக அழைத்து வந்தாள். முக்கியமாக லோகநாதனுக்காக. சென்னையில் இருந்த கிரஷை அங்கு இருந்த அந்த இரண்டு ஆசிரியர்களிடமும் முழு பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு. அவர்கள் பெயரிலேயே அதை மாற்றி எழுதி கொடுத்துவிட்டு. மாலினி தூத்துக்குடிக்கு கணவனோடு வந்து சேர்ந்தாள். அவர்கள் வரவேற்பார்கள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. காலம் கடக்கும் போது அவர்களுக்கு புரியும் என்று நினைத்தாள். அர்ச்சனை கூடையை தூக்கிப்பிடித்தபடி இது யாருடையது என்று கேட்டுக் கொண்டிருந்தார் அர்ச்சகர்.
“ராஜா அது நம்மளுடையது தான் வாங்குங்க”, என்று விசாலாட்சி குரல் கொடுக்க. மாலினி தன் கணவனின் புறம் சாய்ந்து.
“மாமா பேரு லோகநாதன் தானே அங்க அத்தை என்ன செல்லமா ராஜான்னு கூப்பிடுறாங்களா??, வெளியில தான் சண்டை போடுற மாதிரி பிகு பண்ணிக்கிறாங்க போல. மனசுக்குள்ள காதல் இருக்கு”, என்று மெல்லிய குரலில் கூறினாள்.
“நீ வேற அவரோட பேரு லோகநாதன் தான். ஆனா எங்க தாத்தா அவருக்கு மகாராஜ லோகநாதன்னு பெயரை நுழைச்சிருந்தார். தாத்தா போனதுக்கு அப்புறமா அவர் லோகநாதன் என்ற பெயரை மட்டும் முன்னிறத்த ஆரம்பிச்சுட்டாரு. ஆனா அம்மாவுக்கு எப்பயும் அவர் மகாராஜா தான். அதுல மகாவ கட் பண்ணிட்டு ராஜான்னு கூப்பிடுவாங்க”, என்றான்.
நமட்டு சிரிப்புடன் “ஓ” என்று அவள் கூறினாள். பெயருக்கே இப்படி ஒரு கதை இருக்கிறது என்று அவள் இந்நாள் வரையில் அறியவில்லை. அவரும் வெகுவாக வீட்டில் தன் கணவனை அழைக்காததால் அவளுக்கு அது தெரியவும் இல்லை. இப்பொழுது தான் சத்தமாக அழைத்திருந்தார். அவளுக்கும் தெரிய வந்தது. தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்தனர். கணவன் மனைவி முன்னால் நடக்க. குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிய படி நடக்க. விசாலாட்சியும் லோகநாதனும் பின்னோடு பொறுமையாக நடந்து வந்தார்கள்.
முதல் போல விசாலாட்சியால் வேகமாக நடக்க முடியவில்லை. மனைவிக்கு ஈடு கொடுத்து அவரை விட்டுக் கொடுக்காமல் அவருடன் நடந்து வந்தார் மகாராஜ லோகநாதன். இதற்கு நடுவில் மாலினி குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி மனைவிக்கு புரிய வைக்க முயன்றார் லோகநாதன்.
“எல்லா குழந்தைகள் மேலயும் அம்மாங்க பாசம் வச்சு இருப்பாங்க தான். என்னமோ ஊரு உலகத்துல இல்லாததை பார்த்துட்ட மாதிரி, அப்படியே மருமகள மேல தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறீங்க? “, என்று விசாலாட்சி கேட்க.
“நீ சொல்றது சரிதான். ஆனா உன் பொண்ணோட பொண்ண, அவள் தன் பொண்ணு மாதிரி பார்த்துக்குறது பெரிய விஷயம் இல்லையா?“, என்று கேட்டார்.
முதலில் அவருக்கு புரியவில்லை, புரிந்த பிறகு தன் கணவனை கேள்வியாக பார்த்தார். குழந்தை மாலினியிடம் வந்து சேர்ந்ததையும் அதன் பிறகு குழந்தைக்காக அவள் வீட்டை விட்டு வெளியில் வந்து குழந்தையை பிரிய முடியாமல் கிரஷ் வைத்து நடத்தியதையும். குழந்தை உயிருடன் இருப்பது தெரிந்து குழந்தையை வாங்கச் சென்ற அரவிந்த் அவர்கள் இருவரின் பாச பிணைப்பை பார்த்து. பிரிக்க முடியாமல் தயங்கி நின்று. அது உண்மையா என்று ஆராய்ந்து தெரிந்து கொள்ள நினைத்து. அது அப்படியே மாலினியின் மீது காதலாக மாறியதையும் கூறினார்.
அது தெரிந்த பிறகு. அவன் தன் மகனையும் மருமகளையும் ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தார். பேத்தியின் மீது ஒரு தனி அன்பு எப்போதுமே அவருக்கு இருந்தது. இப்பொழுது அது இன்னும் இரட்டிப்பானது. அதற்காக பேரனின் மீது குறைந்த அன்பு என்று சொல்ல முடியாது. அந்தக் குடும்பத்தின் வாரிசு ஆயிற்றே அவன்.
ஆனால் பிரிந்து சென்ற தன் மகளே தன் கை வந்து சேர்ந்து விட்டதாக நினைத்தார். அரவிந்த் மனைவியோடு பேசிக்கொண்டு செல்வது தெரிந்தது. அவன் மீது யாரோ ஒரு பெண் இடிப்பது போல வர. அதை கவனித்து விட்ட மாலினி, கணவனை தன் புறம் இழுத்தாள். அதை பார்த்ததும் விசாலாட்சியின் இதழ்கள் தாராளமாக விரிந்து கொண்டது.ஒரு சுற்று முடியும் தருவாயில் இருக்க குழந்தை ஒன்று எங்கிருந்தோ ஓடி வந்து அவர்கள் முன்னாள் விழுந்து அழ ஆரம்பித்தது. மாலினி அவசரமாக ஓடி சென்று அந்த குழந்தையை அள்ளி அணைத்து தூக்கி ஆறுதல் படுத்திய படியே. அந்த குழந்தையின் காலை தடவி கொடுத்தாள். பிறகு ரத்தம் வந்த இடத்தில் தன் கையில் இருந்த கர்ச்சிப்பால் கட்டு கட்டினாள். இதைப் பார்த்து விட்ட ஷாலினி ஓடி வந்து தன் தாயை உரசி கொண்டு நிற்க. அதற்குள் அந்த குழந்தையின் பெற்றோர் வந்துவிட அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு ஷாலினியை தூக்கிக் கொண்டாள்.
“நீங்க ஏன் அந்த பாப்பாவ தூக்குனீங்க?, தம்பிய மட்டும் தான தூக்குறதுக்கு நான் உங்கள அலோ பண்ணி இருக்கேன்?“, என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கேட்டாள்.
“யாருக்கு அடிபட்டாலும் நாம உதவி பண்ணனும். அதுக்காக அந்த பாப்பாவநாம தூக்கிட்டு போக போறோம்னு அர்த்தம் கிடையாது. ஸ்கூல்ல யாருக்காவது அடிபட்டா கூட நீ அவங்களுக்கு உதவி பண்ணனும். சரியா?”, புத்திமதி சொல்லிக் கொடுக்க. அவள் நன்றாக தலையை ஆட்டினாள். என்னதான் ஷாலினியை மற்றவர்கள் கொஞ்சினாலும், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைத்தாலும் மாலினியிடமிருந்து தூர நிறுத்தலாம் என்று செயல்பட்டாலும். யாராலும் அது முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். விசாலாட்சியை தவிர வேறு யாரும் அதை செய்ய நினைக்கவில்லை.
ஆனால் அரவிந்தும் லோகநாதனும் கூட மாலினி கர்ப்பமாக இருக்கும் போது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஷாலினியை வைத்துக் கொள்ள நினைத்தார்கள். ஆனால் அது இன்றளவும் முடியவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
……….
இப்படியே இரண்டு நாட்கள் சென்று இருந்தது. தோட்டத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு அரவிந்த் விளையாடிக் கொண்டிருந்தான். லோகநாதன் அமர்ந்து பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்தார். விசாலாட்சியும் தன் மகனையும் பேரக் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டிருக்க. அனைவருக்கும் தேநீரை எடுத்துக் வந்தாள் மாலினி. அப்பொழுது அவர்கள் வீட்டிற்குள் வாகனம் வருவதை பார்த்து. அனைவரின் கவனமும் அங்கே சென்றது. அந்த வாகனத்தை பார்த்ததும் மாலினிக்கு மனதில் திக் கென்றானது. அரவிந்த் விளையாடுவதை நிறுத்திவிட்டு, தந்தைக்கு குழந்தைகளை பார்த்துக்கொள்ள சொல்லி கண் ஜாடை காட்டியவன். வந்தவர்களை நோக்கி முன்னெடுத்துச் செல்ல ஆரம்பிக்க. அதற்குள் அவர்களுக்கு முன்னால் சென்று நின்றாள் மாலினி.
“இப்ப எதுக்கு இங்க வந்து இருக்கீங்க??, என்னதான் செத்துட்டேன்னு தலைமுழுகிட்டிங்கல திரும்பத் திரும்ப ஏன் என்னை தேடி வந்து என்ன அசிங்கப் படுத்தணும்னு நினைக்கிறீங்கப்பா??, அப்படி என்னதான் நான் தப்பு பண்ணிட்டேன்?”, என்று ஆதங்கமாக கேட்டால் மாலினி.
“நாங்க உன்ன பாக்க வரல. அவர பாக்க வந்தோம்”, என்று அவளுக்கு பின்னால் நடந்து வந்த அரவிந்தை சுட்டிக்காட்டினார்.
“அப்பா ப்ளீஸ், என் புருஷனை ஒரு வார்த்தை சொன்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன். நீங்க என் அப்பா என்றதையும் நான் மறந்துருவேன். பெத்த தகப்பன இழிவு படுத்துற நிலைக்கு என்ன ஆளாக்காதீங்க. தயவு செஞ்சு இங்க இருந்து போயிடுங்க”, என்று நெத்திக்கு மேலே கும்பிடு போட்டபடி கூறினாள்.
“அக்கா நாங்க மாமாக்கு நன்றி சொல்றதுக்காக வந்தோம்”, என்றான் மாலினியின் சகோதரன். அவள் புருவம் இடுங்கியது. ஆனாலும் தன்னை சுதாரித்து மீட்டு எடுத்துக் கொண்டவள்.
“திருப்பி ஒரு டிராமா பண்ணாதீங்க இங்க இருந்து கிளம்புங்க “, என்றாள்.
அவளை தாண்டி கொண்டு முன்னாள் வந்து நின்ற அரவிந்த்.“நீங்க நன்றி சொல்லுவீங்கன்றதுக்காக நான் இதை பண்ணல. என்னோட தங்கைய காப்பாத்தாம போயிட்டேன் என் மனைவியோட தம்பிய காப்பாத்தலாம்னு நினைச்சேன் அவ்வளவுதான். இனிமே தொழில் பண்ணும் போது கவனமா இருக்க சொல்லுங்க. நாம திறம்பட தொழில் நடத்துவது பெரிய விஷயமில்ல. அதையே நம்ம பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கணும். அவங்களுக்கு ஒரு துணை தேடும் போது அதை சரியா பார்த்து தேர்ந்தெடுக்கணும். இல்லனா நம்மோட குழந்தைங்க கஷ்டப்படுறத தான் பார்க்க வேண்டியது இருக்கும்“, என்றான் அழுத்தமாக. அவன் எதற்காக கூறுகிறான் என்று அவருக்கு புரிந்தது. மீண்டும் மன்னிப்பு கேட்டனர். கிளம்பிச் சென்றனர். அவள் என்ன ஏது என்று கேட்க.
“உன் தம்பி பிசினஸ் பண்றேன்னு உங்க அப்பா கிட்ட இருந்து ஒரு பெரிய முதல் வாங்கி எடுத்துட்டு போயிட்டு ஒரு பிசினஸ் ல இன்வெஸ்ட்மெண்ட் பண்ணான். ஆனா அவனோட ப்ரெண்ட் உன் தம்பிக்கு நாமம் போட்டுட்டு ஊர விட்டு காணாமல் போயிட்டான். அந்த கம்பெனியோட பிரச்சினைல உன் தம்பி மாட்டிக்கிட்டான். போலீஸ் கேஸ்னு ஆயிடுச்சு. அந்த ஏரியா சர்கிள் இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சவரு தான். விஷயம் கேள்விப்பட்டு. அவனுக்கு முன் ஜாமீன் நான் தான் எழுதி கொடுத்தேன். அவனுக்குன்னு ஒரு அமௌன்டயும் கட்டி இருக்கேன்”, என்றான் அரவிந்த்.
“எதுக்காக இதெல்லாம் பண்ணிங்க?, அவர் பிள்ளையை அவரே பார்த்துக்கிட்டம் “, என்றாள்.
“என் தங்கச்சிய காப்பாத்த முடியாம போயிடுச்சு. உன் தம்பியையாவது காப்பாத்தலாம்னு தோணுச்சு. நாம இந்த இடத்துல பிறக்கணும், இவங்க கூட சகோதர சகோதரியா பிறக்கணும்னு நாம ஆசைப்படுவதில்லை. கடவுள் நமக்கு அதை விதிச்சிடுறாரு. அவங்கள காப்பாத்துற ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது. நாம அதை மிஸ் பண்ண கூடாது. உன் இடத்தில் இருந்து நான் இதை பண்ணேன். நீயா இருந்தாலும் பண்ணியிருப்ப”, என்றான். அவனைக் காதலாக பார்த்தாள் மாலினி.
ஒரே நாளில் தன் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டவன். எதற்கும் இறங்கி போகாதவள் இவனுக்கு எப்படி இறங்கிப் போனேன் என்ற குழப்பம் இன்னுமே அவளுக்கு இருந்தது. குழந்தைக்காகவே என்றாலும் திருமணம் செய்து கொண்டு, இதோ இவனுக்காக மற்றவர்களிடம் சண்டை இடுகிறேன். அதுவும் தன்னைப் பெற்றவரிடமே இதெல்லாம் தன் வாழ்க்கையில் நடக்கும் என்று யாராவது சொல்லி இருந்தால் கூட நம்பி இருக்க மாட்டாள். ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இவன் நடத்தி வைத்துக் கொண்டிருக்கிறான். தனக்காக மட்டுமல்லாமல் தன் குடும்பத்திற்காகவும் பார்க்கிறான்”, என்று தன் கணவனை பார்த்தாள்.
முதல் பாதி அவள் வாழ்க்கையில் கோணலாக போய்விட்டது. அதை சீர்செய்து நேராக மாற்றியமைத்து இருந்தான் அரவிந்த் எனும் ஆண்மகன். ஆண்களாய் பிறப்பதெல்லாம் ஆண்மை இல்லை. ஆணுக்கு இலக்கணம் பெண்மையை போற்றுவது. பெண்களாய் பிறப்பதெல்லாம் பெண்மை இல்லை. தாய்மையுடன் நடந்து கொள்வது தான் பெண்மையின் இலக்கணம். அரவிந்த் ஒரு நல்ல ஆண்மகன் என்பதில் ஐயமில்லை. மாலினியும் தாய்க்கு இலக்கணமாணவள் தான்.
இருவரையும் இணைத்து வைத்த பாலமாக ஷாலினி இருந்தாலும். அவர்கள் வாழ்க்கையில் வசந்தத்திற்கு குறைவில்லாமல் பார்த்துக் கொண்டனர் எனலாம். தேவதைகள் எல்லாம் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள். நாம் தேவதைகளை உருவாக்குவோமாக. தேவதையாக வந்தவளே கதை முடிவுற்றது
.……..
நன்றி வணக்கம்.
கதை படித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்ட நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி. எனக்கு இந்த சைட்டில் கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை மன்னிக்கவும். தெரியவில்லை கதை முடிந்து பிறகு கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
.வாய்ப்பளித்த பிரவீனா தங்கராஜிற்கும் நன்றி.
Super super super ending👏👏👏👏 Good story😍😍
Semma nice nad sweet ending
😍😍😍😍😍💝💝💝💝💝
Rombhavae azhaga story athuvum starting kutty kutty twist ellam.vachi story ah super ah kondu poniga really unga story flow rombhavae nalla irundhuchi .
Superrrrrrana story
Azhaghana ending sis
Maalini aravind rendu perum chance eh illa, nalla jodi
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
Ithu aravind ku💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Superb ending . kandipa malini manasu mari vanthu santhosama vazhakaiya vazhva ninacha mari nadanthuchi aravind kitta manasukulla ninaikurathu eppadi kandu pidikiringa nu ketuta vai vitu eppadiyo shaliniyala ivanga rendu perum serthutanga past life rendu perkume oru happiness kodukala athuku niraya vali tha koduthuchi athuku la serthu tha ipo motha santhosathaium anupavikiranga . oru appa amma vuku santhosam avanga pasanga santhosama irukurathu tha atha appa parthalum amma eppadiyathu pirikanum ninachanga but mudila avangalala kadaisila avanga ella unmaium therinjitu manasu maritanga. atha pathu manasu niranji irkanga . Good move , Good story , Good content , congrats