Skip to content
Home » தேவதையாக வந்தவளே 30

தேவதையாக வந்தவளே 30

தேவதை 30

அடுத்த ஒரு மணி நேரத்தில் குடும்பமாக ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருந்தனர் . சாரு அவர்களைப் பார்த்ததும் கையை ஆட்டியபடி இறங்கி வந்தாள். பார்க்கும்போதே தெரிந்தது சிறிய பெண் என்று. எத்திராஜ் கட்டியணைக்கும் விதமாக கையை விரித்து அவளை வரவேற்க நின்று கொண்டிருக்க. அரவிந்த் கைகளை கட்டிக் கொண்டு.

“ஹாய் சாரு”, என்று கூறியபடி இருக்க. அவளோ அவர்களை தாண்டி கொண்டு வந்து, மாலினியை கட்டி அணைத்துக் கொண்டாள். மாலினிக்கே இது அதிர்ச்சி தான். புதிதாக பார்க்கும் ஒரு பெண்ணை இத்தனை அன்புடன் கட்டி அணைக்கிறாளே என்று. அவளிடமிருந்து பிரிந்தவள் ஷாலினியின் கன்னத்தில் முத்தம் பதித்தாள். குழந்தையோ முகத்தை சுருக்கி, எச்சில் பட்ட கன்னத்தை துடைத்துக் கொண்டாள்.

“பாருடா அத்தை முத்தம் கொடுத்தா தொடச்சிப்பியா?”, என்று அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்ட.

அந்த சிறுவாண்டோ அவளை முறைத்துக் கொண்டே அவள் கரத்தை தட்டி விட்டாள்.

“ஹாய் அண்ணி, எப்படி இருக்கீங்க??, பாப்பா செம கியூட். ஆனா என்கிட்ட வர மாட்டேங்குறாள்,, ரொம்ப கோபம் வரும் போல. இந்த ரெண்டு நாள்ல என்கிட்ட ஃப்ரெண்டாகி விடுங்களேன்”, என்று மாலினியிடம் சலுகையாக கொஞ்சினாள்.

“அவள் கொஞ்சம் ரிசர்வ் டைப் தான். பட் சீக்கிரம் பழகிடுவாள்“, என்று தயக்கத்தோடு கூறினாள் மாலினி. அவள் ஏதோ நீண்ட காலம் பழகியவளைப் போல பேசுவதும் பழகுவதும் மாலினிக்கு புதிதாக தான் இருந்தது. எத்திராஜின் அத்தை மகள் அவனுடைய பியான்சி. ஐந்து மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள். தங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று கூறி தான் அவளை அழைத்து வந்திருந்தார்கள். ஆனால் அந்த பெண்ணுக்கு தன்னை முன்பே தெரிந்திருக்கிறது போல என்று நினைத்தாள் மாலினி. அதன்பிறகு அவளுக்கு பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சாரு மட்டுமே அங்கு பேசிக் கொண்டிருந்தாள். ஆண்கள் கூட சிரித்தபடி அவள் பேச்சை தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள். படப்பட என்று பேசினாலும் வெகுளித்தனமான குணம் என்று பார்க்கும்போதே தெரிந்தது. அவளைப் பற்றி பேசினாள். அவள் குடும்பத்தை பற்றி பேசினாள். அவளுடைய மாமன் எத்திராஜை பற்றி பேசினாள். திருமணத்தைப் பற்றி பேசினாள்.

மொத்தத்தில் பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே இருந்தாள். கேட்பதற்கு மாலினிக்கும் சலிக்கவில்லை. இனிமையாக பேசும் பெண்ணை அவளுக்கும் பிடித்திருந்தது. அவள் சொல்லி தான் அவர்கள் இரண்டு நாள் அங்கே தங்கப் போகிறார்கள் என்ற விஷயமே அவளுக்கு தெரிந்தது.

“அண்ணா சென்னைக்கு வர்றது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். உங்க பேர சொல்லி தான் என் அப்பா கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வந்து இருக்கேன். இந்த ரெண்டு நாளை என்னன்ன இடம் எல்லாம் சுத்தி காட்ட முடியுமோ, அது எல்லாத்தையும் சுத்தி காட்டிடுங்க”, என்றபடி சீட்டில் சற்று முன்னால் சென்றபடி வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த அரவிந்திடம் கூறினாள்.

“அதெல்லாம் தாராளமா சுத்தி காட்டிடலாம். ஆனா இன்னைக்கு மாலினிக்கு கிரஷ் இருக்கு. உனக்காக ஹாப் டே லீவு போட்டுட்டாள். அவளை அங்க விடனும். நாளைக்கு நாளன்னைக்கு வேணா வெளிய போகலாம் சுத்தி பாக்கலாம்”, என்றான்.

“கிரஷ் தானே அங்கேயே போகலாம். விதவிதமா, அழகழகா குழந்தைகள் இருப்பாங்க. இந்த ஷாலினி குட்டி என்கிட்ட எப்ப வருவான்னு தெரியல. ஷாலு குட்டி அத்தை கிட்ட வாடா?“, என்று இரு கையை நீட்டி கெஞ்சினாள். அவள் வரமாட்டேன் என்று தலையசைத்தாள்..

“ஒரு மாசம் ஆகப்போகுது, என்கிட்டையே வரல உன் கிட்ட உடனே வந்துருவாளா? “, என்று அரவிந்த் கேட்க.

“நான் வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது என்கிட்டயே வரல, உன்கிட்ட வந்துருவாளா?“, என்று எத்திராஜ் கேட்டான். மாலினிக்கு எத்திராஜ் பேச்சில் சிரிப்பு தான் வந்தது. அங்கிருந்து நேராக ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு மாலினியை கிரஷில் விட்டுவிட்டு அவர்கள் மூவரும் கிளம்பினார்கள். அவர்கள் வாங்க இருக்கும் சைட்டை பார்த்தார்கள். பிடித்திருந்தது எத்திராஜ் அங்கிருந்த வக்கீல் மூலமாக அரவிந்திற்கு தொழிலை அங்கு தொடங்குவதற்கான விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திட்டு அவனிடம் கொடுத்தான்.

“இதுக்கு நீங்க என்ன கிரஷ்லையே விட்டு இருக்கலாம்”, என்று சாருதான் சலித்துக் கொண்டாள். வெயிலில் வெளியே சுற்றிப் பார்ப்பது, அதுவும் தொழில் செய்யும் இடத்தை பார்ப்பதற்கு அவளுக்கு போர் அடித்தது.

“என் வருங்கால பொண்டாட்டி எல்லாத்தையும் பார்க்க வேண்டாமா?“, என்று எத்திராஜ் அவளை சமாதானம் செய்தான்.இங்கு கிரஷ்சில் முதல் நாள் நடந்த பிரச்சனைகள் மாலினியின் மனதில் எழுந்து நின்றாலும். உடனே சாருவின் அந்த வெகுளி தனமான பேச்சு அதை எல்லாம் மறக்கடித்து கொண்டிருந்தது.இரண்டு நாள் தங்களுடன் தங்கப் போகிறார்கள். வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்காமல் தான் மட்டும் கிரஷுக்கு வருவது மாலினிக்கு சரியாக படவில்லை. அன்று மாலை கிளம்பும்போது அடுத்த நாள் தான் வரமாட்டேன் என்று பொறுப்பாக பார்த்துக்கொள்ள சொல்லி ஒரு ஆசிரியரிடம் கூறிவிட்டே கிளம்பியிருந்தாள். சரியாக அவள் கிளம்பும் நேரத்தில் அரவிந்த் வண்டியை எடுத்து வந்து நிறுத்தினான். அங்கு வேலை செய்யும் ஆயம்மா இன்னும் போயிருக்கவில்லை. பொறுப்புகளை ஒப்படைக்கும் ஆசிரியரும் அங்கு இருந்தார். அவர்கள் எதிரில் இவள் வண்டியில் ஏறாமல் சென்றால், அது அவனை அவமானப்படுத்துவது போல ஆகிவிடும் என்று நினைத்தவள். அமைதியாக பின் சீட்டில் ஏறி மகளுடன் அமர்ந்து கொண்டாள். அவனும் அவளை எதுவும் சொல்லவில்லை. மாறாக ரியர் வீவ் கண்ணாடி வழியாக அவள் முகத்தை அவதானித்துக் கொண்டிருந்தான். அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது . காலையில் அவள் பேசியது அவனுக்கும் கோபத்தை தான் கொடுத்து இருந்தது.

“அந்த சூப்பர் மார்க்கெட் கிட்ட நிறுத்துங்க. கொஞ்சம் திங்ஸ் வாங்கனும்”, என்று கூறினாள் மாலினி. அவன் அமைதியாக நிறுத்தினான் .

அவள் உள்ளே ட்ராலியை தள்ளிக் கொண்டு சென்று தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தாள். மாலினி கவுண்டர் செல்ல போக அந்த ட்ராலியை அவள் கையில் இருந்து அழுத்தமாக பிடித்து இழுத்தவன். அவனே தள்ளிக் கொண்டு சென்று அதற்கான பணத்தைக் கட்டி விட்டு பொருளை வாங்கிக் கொண்டு வந்து காரில் ஏற்றினான்.அவனுடைய செயலே அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று அவளுக்கு உணர்த்தியது. ஆனால் அவளும் பதில் பேசவில்லை. மீண்டும் அவள் பின்னால் தான் ஏறி அமர்ந்தாள். சற்று நேரத்தில் அவர்கள் வீட்டை அடைந்து இருந்தார்கள். அவன் பொருட்களை எடுத்து வர மாலினி முன்னாள் சென்றாள். வீட்டை நெருங்கும் போதே சாருவின் குரல் அதிகமாக கேட்டது.

“ஐயோ மாமா அடிக்காதீங்க”, என்று அந்த வீட்டை சுற்றி ஓடிக் கொண்டிருக்க. அவளை துரத்தியபடி ஓடிக் கொண்டிருந்தான் எத்திராஜ். மாலினி அமைதியாக வாசலில் நின்றுவிட. பின்னால் வந்த அரவிந்த் தான் குரல் கொடுத்தான். “என்ன நடக்குது இங்க? “, என்று.

“அண்ணா பாருங்க இவரை, என்ன அடிக்க வராரு”, என்று ஓடிவந்து அரவிந்த் பின்னால் ஒளிந்து கொண்டாள் சாரு.

“பாருடா என் மூஞ்ச “, என்று எத்திராஜ் நிற்கும்போதுதான். மற்ற இருவரும் அவன் முகத்தை கவனித்தார்கள். அவன் முகத்தில் மீசை தாடி என்று எதையோ வரைந்து வைத்து லிப்ஸ்டிக்கிலும் ஏதோ கோலம் போட்டு வைத்திருந்தாள். சிரிப்பை தன் கை கொண்டு அடக்கிக் கொண்டாள் மாலினி. நைட்டெல்லாம் டிரைவ் பண்ணிட்டு வந்தது கொஞ்சம் அசதியா இருக்குன்னு தூங்கிட்டேன் டா. என்ன பண்ணி வச்சிருக்கா பாரு? “, என்று முகத்தை காட்டியபடி எத்திராஜ் புகார் பட்டியல் வாசித்தான் .

“அவள் இவ்வளவு வரையற வரைக்கும் முகத்தை காட்டிட்டு இருந்துட்டு. நைசா நாங்க வர நேரத்துல எங்க கிட்ட நடிக்கிறியா??“, என்று கேட்டான் அரவிந்த். “இவன் எப்பவுமே இவளுக்குதாமா சப்போர்ட் பண்ணுவான். நீயாவது என்னன்னு கேளுமா? “, என்று எத்திராஜ் மாலினியை துணைக்கு அழைத்தான்.

அவள் திருதிருவென்று விழிக்க.

“கூப்பிடுற ஆளப்பாரு அந்தமாவுக்கே பத்து பேர் துணை வேணுமாம்“, என்று கூறிவிட்டு அரவிந்த் எத்திராஜை அழைத்து சென்று விட்டான். அவன் கூறி சென்றது. அவள் காதுகளில் நன்றாக கேட்டது. ஆனால் அமைதியாக இருந்தாள்.

“சாரு, ஷாலினியை தன்னிடம் அழைப்பதற்காக கெஞ்சி கொண்டிருக்க. அவள் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். குழந்தைக்கு விளையாட்டு சாமான்களை கீழே போட்டுவிட்டு சமைத்துவிட்டு வருவதாக அவளிடம் சொல்லிவிட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சமையலறையில் நுழைந்தாள் மாலினி. அவள் பாத்திரங்களில் கையை வைக்கப் போக அங்கு வந்து நின்றான் அரவிந்த்.

“நைட்டுக்கு பீட்ஸா ஆர்டர் பண்ணி இருக்கேன். சாரு ஆசைப்பட்டு கேட்டாள். எல்லாருக்குமே ஆர்டர் பண்ணி இருக்கேன். பாப்பாக்கு மட்டும் ஏதாவது செஞ்சுக்கலாம்“, என்றான்.

“எனக்கு பீசா பிடிக்காது”, என்று அவள் மெல்லிய குரலில் கூற.

“உனக்கு பாஸ்தா ஆர்டர் பண்ணி இருக்கேன்”, என்று கூறிவிட்டு நடந்து விட்டான். தனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று கூட இவனுக்கு தெரியுமா??, அதிர்ச்சியுடன் தான் நின்றாள்.அதன் பிறகு வீடு ரணகளமாக தான் இருந்தது. எப்பொழுதும் அமைதியாக இருக்கும் வீட்டில் பேச்சு சத்தமும் ஆரவாரமும் கேட்க. எதிர்வீட்டு பார்வதி கூட வந்து அவர்களை நலம் விசாரித்து விட்டு சென்றார். ஒன்றாக அமர்ந்து உணவை உட்கொண்டார்கள். “இங்க மூணு ரூம் இருக்கு. எனக்கு எந்த ரூம்?, அவருக்கு எந்த ரூம்? “, என்று கேட்டாள் சாரு.

“அவன் என் கூட தங்கிப்பான். உனக்கு அந்த ரூம்”, என்று அரவிந்த் கூற. “உங்க கூட தங்கி பாரா??, அய்யய்ய”, என்று கூறியவள். மாலினியை நெருங்கி அவள் தோளின் மீது முழங்கையை வைத்துக் கொண்டு.

“என்ன அண்ணி நீங்க இதெல்லாம் கேக்க மாட்டீங்களா? “, என்று கேள்வி எழுப்பினாள். மாலினிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

“அதெல்லாம் அவள் கேக்க மாட்டாள். ரொம்ப நாள் கழிச்சு ஃபிரண்ட்ஸ் மீட் பண்றோம். நாங்க கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறோம்னு அவளுக்கு தெரியும். அதனால அவள் குழந்தை ரூம்ல தூங்கிப்பாள்”, என்று மாலினிக்கு பதிலாக அவனே கூறியிருந்தான்.

“அண்ணி இவங்க கிட்ட உஷாரா இருங்க. ரெண்டு பேரும் சரியான கேடிங்க”, என்று கூறி அரவிந்திடம் முதுகில் ஒரு அடியை வாங்கிக் கொண்டாள். இரவு அனைவருமே படுக்கச் சென்றார்கள் அடுத்து வந்த இரண்டு நாட்களும் அப்படித்தான் இருந்தது. மாலினி கிரஷுக்கு செல்லவில்லை. குழந்தையை தூக்கிக்கொண்டு முதல் நாள் நால்வருமாக டி நகர் அடைந்தார்கள். அவர்களுக்கு திருமணம் வர இருப்பதால் அவர்களுக்கு வேண்டிய உடைகளை அரவிந்த் வாங்கி கொடுத்தான். கடை திறப்பு விழா வேறு ஆரம்பிப்பதாக இருக்க அதற்கான உடைகளையும் எடுத்தார்கள். சாருவும் மாலினியும் உடைகளை தேர்ந்தெடுக்க. ஷாலினி கூட அந்த புது விதமான அனுபவத்தில் லயித்து இருந்தாள் எனலாம். டி நகர் சுற்றி வருவதற்குள் ஒரு நாள் எப்படி கழிந்தது என்று தெரியவில்லை அவர்களுக்கு. சாரு சிறு பிள்ளையென பொருட்களை வாங்கி குவித்து இருந்தாள்.

“இது எல்லாத்தையும் எப்படி ஊருக்கு எடுத்துட்டு போவ? “, என்று எத்திராஜ் கேட்க.

“நீ கார்ல தான் மாமா வர? உன் கார் டிக்கில போட்டு எடுத்துட்டு வந்து வீட்ல கொடுத்துடு”, என்று தோள்களைக் குலுக்கி விட்டு சென்றாள் சாரு.

“நான் என்ன கொரியர் சர்வீஸ்சா? “, என்று எத்திராஜ் கேட்க.

“ச்சீ ச்சீ நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். அதுக்கும் மேல . என்னோட வருங்கால புருஷன் எனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யப் போறவரு. பல முகங்களை ஏற்படுத்திக்க போறவரு. கொரியர் சர்வீஸ் மட்டும் இல்லை, டிரைவர் வேணும்னா டிரைவர். லிப்ட் வேணும்னா லிஃப்ட்மேன்”, என்று அவள் அடுக்கிக் கொண்டே போக.

அவள் முதுகில் மீண்டும் போட்டான் எத்திராஜ். எவ்வளவு அழகான ஜோடிகள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை மாலினியால். காதலித்து திருமணம் செய்வது மட்டுமல்ல, பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கிறார்கள். தங்களை மறந்து சிரிக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் இதழ்கள் லேசாக விரிய. அதை அரவிந்த் கண்டு கொண்டான். அவள் பார்வையில் இருக்கும் ஏக்கங்களையும் புரிந்து கொண்டான்.

“கூட்ட விட்டு வெளியே வாடி. இதுபோல சந்தோஷமா நாமளும் வாழலாம்”, என்று மனதிற்குள் கூறிக் கொண்டிருந்தான். இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்கள். பெண்களை விட்டு விட்டு வெளியில் கிளம்பினார்கள்.

“நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்துக்கோங்க. நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம் “, என்று கூறினான் எத்திராஜ். மாலினி,

“சரி’ என்று தலையாட்டிவிட்டு உள்ளே செல்ல போக.

“திருட்டுப் பயலே குடிக்குறதுக்கு தான போற?? “, என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்துக் கொண்டு கேட்டாள். அவள் கேட்ட பாவணையில் மாலினிக்கு சிரிப்பு தான் வந்தது.

“ஐயோடா, அறிவாளி பொண்டாட்டி கண்டுபிடிச்சிட்டாள்”, என்று எத்திராஜ் கூறும்போதே, மாலினி அவசரமாக அரவிந்தை பார்க்க. அரவிந்தின் பார்வையும் அவளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தது. குடிக்க போகிறானா?? மனம் பரிதவித்தது. ஆனால் கேட்கும் உரிமை அவளுக்கு இல்லை, அப்படி அவள் நினைத்துக் கொண்டாள். அவள் வாயைத் திறந்து கேட்பாள் ஏதாவது கேட்பாள் என்று அவளையே பார்த்துக் கொண்டிருக்க. அவள் பார்வையால் தான் எதையோ உணர்த்தினாளே தவிர கடைசிவரை கேட்கவே இல்லை.

“நீ கேட்கவில்லை என்றால் என்ன நான் பதில் கூறுகிறேன்”, என்று நினைத்தவன்.

“சாரு நான் குடிக்கிறத விட்டு ஏழு மாசம் ஆகுது. அது எத்திராஜுக்கு தெரியும். இங்க பக்கத்துல ஒரு கடை இருக்கு. அந்த கடைக்கு போறோம்”. பேச்சு சாரு விடமிருந்தாலும் பார்வை மாலினியிடம் இருந்தது. அவள் மனதிலும் ஒரு இதம் பரவியது.

6 thoughts on “தேவதையாக வந்தவளே 30”

  1. Kalidevi

    Aravind solra mari koota vitu veliya va malini neeum ithe mari santhosama irukalam . intha parvaiyalaye ungakulla evlo understanding iruku paru apo next step move pannu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *