Skip to content
Home » தேவதையாக வந்தவளே 31

தேவதையாக வந்தவளே 31

தேவதை 31

“என்னடா பிரச்சனை??, நானும் பாத்துகிட்டு இருக்கேன். நீ ஜாட மாடையா பேசுற. அவளும் அமைதியா போறாள்.. எனக்கு தெரியும் உங்க ரெண்டு பேருக்குள்ள எல்லாம் ஸ்மூத்தா இல்லன்னு. ஆனா இவ்வளவு நாள் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு??, திடீர்னு இப்ப என்ன ஆச்சு? “, அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு பனிமூட்டம் படர்ந்து இருக்கிறது என்று தெரிந்து தான் அதை விசாரிப்பதற்காக எத்திராஜ் அவனை வெளியில் அழைத்து வந்தான்.

சாலையில் நடந்த படி முதல் நாளில் இருந்து அன்று காலை வரை நடந்ததை நண்பனிடம் மனம் விட்டு பகிர்ந்து கொண்டான்.

“என்ன போய் அப்படி பேசிட்டா டா மச்சி??, மனசே ஆறல, எவ்வளவு ஹார்டிங்கா இருக்கு தெரியுமா??, இந்த பொண்ணுங்களே இப்படித்தான் மச்சி. என்னதான் பார்த்து பார்த்து செஞ்சாலும் திடீர்னு எதையாவது பேசி நம்ம மனசு நோகடிச்சிடுவாங்க.சத்தியமா சரக்கு அடிக்கணும் போல இருக்குடா. புண்பட்ட மனத புகை கொண்டு ஆத்த முடியாது. அதனால சரக்கடிச்சு ஆத்தலான்னு நினைச்சேன். ஆனா அவள் ஓரு பார்வை பார்த்தா பாரு. சான்ஸ இல்ல. முதல் முறையா அப்படி ஓரு பார்வை??, அந்த பார்வையில உரிமை இருந்துச்சு. வேண்டாம் என்ற மன்றாடல் இருந்துச்சு. ஜம்பமா டயலாக் விட்டுட்டு வந்துட்டேனே??, அதுக்காக பொறுத்து போறேன்”. அரவிந்த் பேசிக் கொண்டே இருக்க. அவனை ஆழமாக பார்த்தான் எத்திராஜ்.

“என்னடா கேட்ட உனக்கு கோவம் வரல??, நம்ம நண்பன போய் இப்படி பேசிட்டாளேன்னு?”, என்று கேட்டான் அரவிந்த்.

“வரல”, என்றான் எத்திராஜ்.

“அவள் பேசுனது சரின்னு சொல்ல வரியா??”, என்று கேட்டான் அரவிந்த்.

“மாலினி பேசுனது தப்புதான். ஆனா நீ பண்ணதும் தப்புதான். மாலினியோட முன் கதை உனக்கு நல்லா தெரியும். சாதாரண பொண்ணா இருந்தாலும் இதுக்கு இப்படித்தான் ஓவர் ஆக்ட் பண்ணுவாங்க, அவள் சிட்டுவேஷன்ல இருந்து யோசிச்சா, அவள் ரியாக்ட் பண்ணதே ரொம்ப கம்மின்னு தான் தோணுது. கொஞ்சம் யோசிச்சு பாரு நம்ம நாலேட்ஜ் இல்லாம நம்ம கம்பெனில யாராவது சிசிடிவி வச்சிருந்தா நாம எவ்வளவு டென்ஷன் ஆவோம்”, எத்திராஜ் சொல்லும்போது தான் அவனுடைய தவறு பூதாகரமாக தெரிந்தது. அவன் அமைதியாக தலை கவிழ்ந்தான்.

“அவள் புருஷனோட ரூமையே கிட்டத்தட்ட கொளுத்தி இருக்கா, அவள் புருஷனை போட்டு கொளுத்தலைன்னு அவன் சந்தோஷப்பட்டு இருக்கணும். நீதிமன்றத்தில் தாலியை தூக்கி அவன் மூஞ்சில அடிச்சி இருக்கா, அந்த தாலியால அவன் கழுத்த நெறிக்கலயேனு சந்தோஷப்பட்டு இருக்கணும் அவன். பெண்கள் எப்பயும் அப்படித்தான், அடங்கி போகணும்னு நினைப்பாங்க. ஆனா அன்புக்கு தான் அடங்கி போவாங்க. சிலதுக்கு எல்லாம் அவங்களால் அடங்கி போக முடியாது. சில தவறுகளை அவர்களால் பொறுத்துக்க முடியாது.அப்ப எரிமலை குழம்பா பொங்கிடுவாங்க. அப்படி பொங்கும் போது யார் இருந்தாலும் அதில் பஸ்பம் தான். அப்பாவா இருந்தாலும் சரி, புருஷனா இருந்தாலும் சரி, இல்ல புள்ளையா இருந்தாலும் சரி கதம் கதம்”, என்று கட்டை விரலை கழுத்தில் இடமிருந்து வலமாக இழுத்தபடி நாக்கை வெளியே துருத்தி தலையை ஒரு பக்கமாக சாய்த்து கூறினான்.

நண்பனின் செயலில் சிரிப்பு வந்தாலும். அவன் கூற வருவது அரவிந்திற்கு தெளிவாக புரிந்தது.

“நீ கொடுத்த எக்ஸ்பிளநேஷன ஓரளவுக்கு மாலினி ஏத்துக்கிட்டதுனால தான். அவள் அமைதியா போய் இருக்கா. நீ அதை ட்ரிகர் பண்ணிக்கிட்டு இருக்காத. பட் ட்ரஸ்ட் உடையும்போது கொஞ்சம் ஹர்ட்டிங்கா தான் இருக்கும். நீயா கேள்வி கேட்டு அவளை நோண்டும் போது, ஏதோ அதிகமாக வார்த்தையை வெளியிட்டு இருக்காள். அதுக்காக நீ கொடுக்கிற பில்டப் ரொம்ப ஓவர் டா மச்சான்”, என்று நண்பன் கூறும் போது தான். அவன் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது.

மாலினி அமைதியின் சொரூபமாக இருந்தாலும், அவள் பொங்கும் போது எப்படி பொங்குவாள் என்று அவனும் பார்த்திருக்கிறான். ஆக தன் மீது தவறு இல்லை என்பதால் தான் அவள் அமைதியாக இருக்கிறாள். இல்லையென்றால் கண்டிப்பாக தன்னையும் ஒரு வழி செய்திருப்பாள்.

“அப்படின்னா அவள் ரூம்ல செக் பண்ணி இருப்பானு சொல்ல வரியா??”, அரவிந்த் தன் சந்தேகத்தைக் கேட்க.

“கண்டிப்பா,,, கண்டிப்பா செக் பண்ணி இருப்பா. ஆனா எதுவும் இல்லன்னு மனசு உள்ள சந்தோஷமும் பட்டு இருப்பா. நீ ஒரே நாள்ல கட்டம் கட்டி தூக்கி அவளை கல்யாணம் பண்ணி இருக்க. குழந்தைக்காக பண்ணாலும் எதுக்காக பண்ணேன்னு அந்த சந்தேகம் இருக்கத்தானே செய்யும். கொஞ்ச நாளா தான் அது எல்லாத்தையும் ஓரம் வைத்து கொஞ்சம் பழக ஆரம்பிச்சதா சொன்ன, அதுக்குள்ள இந்த கேமரா விஷயத்துல மாட்டிக்கிட்ட”, என்றான் எத்திராஜ்.

அரவிந்த் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான். “வீட்டுக்கு போய் ஒழுங்கா அவள் கிட்ட மன்னிப்பு கேளு”, என்று எத்திராஜ் கூற.

“டேய் அதெல்லாம் நேத்துல இருந்து போதும் போதுன்ற அளவுக்கு நிறையவே மன்னிப்பு கேட்டுட்டேன்”, என்று கூறினான் அரவிந்த்.

“பரவால்ல இன்னொரு வாட்டி கேட்கிறதுனால நீ ஒன்னு கொறஞ்சி போயிட மாட்ட”, என்றான்.

“சரி கேட்டுடலாம் ”, என்று சிரித்துக் கொண்டே கூறினான் அரவிந்த். நண்பனிடம் பேசிய பிறகு ஏதோ மனதில் இருந்த பாரம் இறங்கியது போல இருந்தது. தன்னுடைய தவறுக்கு அவள் மீது கோபப்பட்டது புரிந்தது. அவன் மன்னிப்பை எப்பொழுது கேட்பான் என்று எத்திராஜ்க்கு தெரியாது. ஆனால் கேட்பான் என்ற நம்பிக்கை இருந்தது. அன்றும் அதே போல படுத்து கொண்டவர்கள். மறுநாள் காலையிலேயே வெளியில் கிளம்பினார்கள். ஈஸியார் ரோட்டில் இருக்கும் வீ. ஜீ. பி ஒன்டர்லாண்டுக்கு தான் வந்தார்கள். வீ. ஜீ. பி அக்வாரியம் மிகப் பிரம்மாண்டமாக பல வண்ண மீன்களால் அழகாக காட்சியளித்தது பார்ப்பதற்கே கண்கள் கோடி வேண்டும் என்று தோன்றியது. எல்லா அழகையும் மொத்தமாக பார்க்கும் சந்தோஷம் ஒவ்வொருவரின் முகத்திலும். கடலுக்குள்ளே சென்றுவிட்ட ஒரு உணர்வு. வெளிநாட்டிற்கு போட்டி போடும் அளவிற்கு அவ்வளவு அழகாக வடிவமைத்திருந்தார்கள். ஷாலினியை கேட்கவே தேவையில்லை சந்தோஷத்தில் குள்ளி குதித்தாள். கண்ணாடியில் தன்னை நோக்கி வரும் மீன்களை பிடித்து விட கைகளை நீட்டினாள். ஷாலினியின் சந்தோஷம் மாலினியை தொற்றிக் கொள்ள. அவர்கள் இருவரின் சந்தோஷம் அரவிந்தையும் தொற்றிக் கொண்டது. மனைவி மகள் என்று இருவரையும் அவர்கள் சந்தோஷத்தையும் தன் மனதிற்கும் பொக்கிஷமாக சேமித்துக் கொண்டிருந்தான். அதை முடித்துவிட்டு வெளியில் வந்தார்கள் . அருகிலேயே ஸ்நோ வேர்ல்ட் என்று இருக்க. அதைப் பற்றி கேள்விப்பட்டிருந்த சாரு அங்கே போகலாம் என்று அடம் பிடித்தாள்..

“பாப்பாக்கு ஒத்துக்காது, நீங்க எல்லாம் போயிட்டு வாங்க. நான் இங்க வெயிட் பண்றேன்”, என்றால் மாலினி. அவளை ஒரு பக்கமாக பார்த்தவன்.

“நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க. நாங்க இங்க வெயிட் பண்றோம்”, என்று கூறிவிட்டான் அரவிந்த். மொத்தமாக சென்றால் தான் சந்தோஷமாக இருக்கும். ஆனால் குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டம் தான். அதனால் தன் மாமனுடன் தன் மனதை தேற்றிக்கொண்டு சென்று விட்டாள் சாரு.

“நீங்களும் போங்க நான் தனியா இருந்துக்கறேன்”, என்று மாலினி கூற.

“நீங்க ரெண்டு பேரும் இல்லாம அங்க போய் நான் என்ன பண்ண போறேன்? “, என்று நேரடியாக கேட்டான். மாலினி அமைதியாகி விட்டாள்..

“டேய், வெளிய வந்த பிறகு போன் பண்ணுடா”, என்று அரவிந்த் கூற.தலையாட்டிவிட்டு அவர்கள் இருவரும் சென்று விட்டார்கள். இவன் வாகனத்தை எடுத்து சற்று தொலைவில் இருந்த பீச்சுக்கு அழைத்து வந்தான். ஈசிஆர் ரோட்டில் இருக்கும் சாதாரண கடற்கரை. குழந்தை மணலை பார்த்ததும் இறங்கி ஓடி விளையாட ஆரம்பித்தாள். பெரிதாக அங்கு கூட்டம் இல்லை தூரத்தில் ஆங்காங்கே ஒருவர் இருவர் என்று இருந்தனர். மதிய நேரம் என்பதால் அப்படி இருந்தது. மாலையாக இருந்திருந்தால் கூட்டம் அங்கு அலை மோதும் தான். குழந்தையை பார்த்துக்கொண்டு மாலினி கையை கட்டிக் கொண்டிருக்க. அவள் முன்னாள் வந்து நின்றான் அரவிந்த். விழி உயர்த்தி அவனை பார்த்தாள்.

“நீ நேத்து பேசுனது ரொம்ப அதிக படின்னு உனக்கு தோணலையா?“, என்று அவள் கண்களை ஆழமாக பார்த்துக் கொண்டு கேட்டான்.

அவள் எச்சிலை உள் கூட்டி விழுங்குவது அவள் தொண்டை குழி ஏறி இறங்குவதில் அவனுக்கு தெரிந்தது. ஆமாம் என்று தலையாட்டி விட்டு தலையை தாழ்த்திக் கொண்டாள்.

“எனக்கு உன்கிட்ட எல்லா உரிமையும் இப்ப இருக்கு. ஆனா உனக்கு பிடிக்காதுன்னு ஒதுங்கி இருக்கேன். அப்படி உரிமை இருக்கிறவன் எதுக்காக? “, என்று கேட்டுவிட்டு முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டான். அவள் கீழ் உதட்டை மடித்து கடித்தபடி உதடு துடிக்க நின்று இருந்தாள். அவன் என்ன கேட்க வந்தான் என்று அவளுக்கு புரிந்தது.

“சத்தியமா உங்க பாதுகாப்புக்காக தான் வெச்சேன். நான் எந்த பொய்யும் சொல்லல. நான் என்ன சொன்னேனோ அது தான் உண்மை. ஒருவேளை எனக்கு அந்த பீலிங் வந்துச்சுன்னா”, என்றவன் நிறுத்த. அவள் மீண்டும் அவனை விழி உயர்த்திப் பார்த்தாள்.

“கண்டிப்பா உன்கிட்ட தான் வந்து கேட்பேன். ஏன்னா நீ தானே என்னோட பொண்டாட்டி?? அப்போ உன் கிட்ட தானே கேட்டாகணும்? “, என்று கூறினான்.

அவள் அவனை அதிர்ந்து பார்த்தாள்..அன்று அவன் கூறியது என்ன??, இன்று அவன் பேசி கொண்டு இருப்பது என்ன??.

“என்ன முழிக்கிற??, நான் உனக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன். உன் விருப்பம் இல்லாம உன்கிட்ட நெருங்க மாட்டேன்னு. நீயும் என்னோட உணர்வுகளை அடக்க வேணாம், அதுக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க எனக்கு ஒரு சொல்யூஷனை காட்டின தான். பட் ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட் வித் தட். எல்லாரையும் பார்த்தா பீலிங் வந்துடாது.. ஒருத்தர பார்த்தா மட்டும் தான் வரணும் அப்படி வந்தா தான் அது ஃபீலிங். இல்லனா அதுக்கு பேரு வேற. அந்த வேறயா இருக்க நான் விரும்பல. எனக்கு மனைவின்னா அது நீ மட்டும் தான். உன்ன பார்த்தா மட்டும் தான் எனக்கு வேற உணர்வுகள் வரும். மத்த யாரை பார்த்தாலும் இல்லை. ஏன்னா நீ தான் என்னோட மனைவி அதுவும் உன் கழுத்துல தாலி கட்டின பிறகுதான் எனக்கு அப்படி தோணுது. எனக்கு ஃபீலிங் வந்தா கண்டிப்பா உன்கிட்ட தான் வந்து கேட்பேன். அதுக்காக உன்னை நான் வற்புறுத்துவேன்னு சொல்ல வரல. கண்டிப்பா உனக்காக காத்துட்டு இருப்பேன். அதுல உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். என்ன அடக்கிறது எனக்கு கஷ்டம் தான். ஆனா கண்டிப்பா உனக்காக பண்ணுவேன்”, அவன் பேசிக் கொண்டே இருக்க.

அவள் கண்கள் நீரை வெளியேற்றியது. அவனுடைய இரண்டு கரங்களையும் உரிமையாக அவள் கன்னத்திற்கு கொடுத்து. இரண்டு கட்டை விரல்களால் அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை ஒரே நேரத்தில் துடைத்து விட்டான். அவள் மீண்டும் அவனைப் பார்க்க.

“சும்மா சும்மா அழாத மாலினி. நீ ரொம்ப தைரியமான பொண்ணு. உன் தைரியம் தான் உனக்கு அழகு. கண்டிப்பா நேத்து ரூம்ல நீ செக் பண்ணி இருப்ப. கேமரா இல்லைன்றது உனக்கு தெரிஞ்சி இருக்கும். அப்படி இருந்தும் எதுக்காக அந்த வார்த்தையை உபயோகிச்சேன்னு எனக்கு தெரியல. ஆனா எதுவா இருந்தாலும் இனிமேல் நான் உன்கிட்ட சொல்லிட்டே செய்யுறேன். ஆக்சுவலா கிரஷ்ல கேமரா வைக்கிறது நல்லது. உங்க ரெண்டு பேரோட பாதுகாப்புக்காக மட்டும் இல்ல. மத்த குழந்தைகளோட பாதுகாப்புக்கும் நல்லது தான். அதோட அக்சஸ் நீயும் நானும் வச்சுக்கலாம். ஓகேவா??”, என்று கேட்டான் அரவிந்த்.

அவள் சரி என்பது போல தலையாட்டினாள். பெண்கள் அப்படித்தான் அன்பாக சொன்னால் எல்லாவற்றிற்கும் அடிபணிவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது அன்பையும் அரவணைப்பையும் நான் உனக்கு இருக்கிறேன் என்று உணர்த்தலையும் தான். அது கிடைத்தால் அடிமையாக இருக்க சொன்னாலும் இருப்பார்கள்.திரும்பி மகளைப் பார்த்தான். விளையாடிக் கொண்டிருந்த இன்னொரு குழந்தையை பார்த்துக்கொண்டே அவளிடம் சென்றாள் ஷாலினி.

“அங்க பாரு உன் பொண்ண”, என்று கூறினான் அரவிந்த். மாலினி எட்டி பார்த்தாள். குழந்தை இன்னொரு குழந்தையை தேடிச் செல்வது தெரிந்தது. இருவரும் இரு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்க.

“ஐ திங்க் எதிர் வீட்டு பார்வதி ஆன்ட்டி சொன்னதை நாம யோசிக்க வேண்டிய நேரம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன்”, என்று கூறினான். முதலில் மாலினிக்கு புரியவில்லை. பிறகு புரிந்தது. ஒரே மாதத்தில் கேட்கிறானே என்று கடுப்பாக இருந்தது.

“நான் உங்களுக்கு வேண்டாம் நான் செகண்ட் ஹாண்ட் “, என்றாள்.

“படிச்ச பொண்ணு தானே நீ??, ஏன் இப்படி முட்டாள் தனமா பேசுற?. நீ ஒரு அம்மாவா இருந்து உன் பொண்ணுக்கு இதே அட்வைஸ் கொடுப்பியா??, அந்த பொண்ணு சந்தோஷமா கணவனோட வாழனும்னு தானே நினைப்ப? “. அவன் ஷாலினி என்று குறிப்பிடாது பொதுவாக பேசுவது அவளுக்கு புரிந்தது. தீ என்றால் நாக்கு சுட்டு விடாது. இருந்தாலும் எதற்காக எடுத்துக்காட்டுக்கு குழந்தையின் பெயரை உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கிறான் போல!.

“இப்பவே யோசின்னு சொல்ல வரல ஒரு மாசத்திலேயே கேட்கிறானேன்னு நீ மனசுக்குள்ள சகிச்சுக்கிறது எனக்கு புரியுது”, என்றான்.“இவன்தான் தன் மனதில் இருப்பதையும் படிப்பானே அது தெரியாமல் யோசித்து விட்டேனே??’ என்று அவள் நொந்து கொள்ள. அவன் சூழ்நிலையில் லகுவாக்க சகஜமாக்க வேறு பேசினான்.

“நீ ஷாலினிக்கு யார் கிட்ட ட்ரீட்மெண்ட் பாக்குற??, அவங்க கிட்ட நெக்ஸ்ட் வீக் அப்பாயின்மென்ட் வாங்குறியா? “, என்று கேட்டான் அரவிந்த்.

“எதுக்கு? “, என்று கேட்டாள்..

“இன்னொரு வாட்டி செக் பண்ணிக்கலாம் அவளுக்கு ஏன் இன்னும் சரியா பேச்சு வரல?. அதுக்கு ஏதாவது ட்ரீட்மென்ட் இருந்தா பண்ணலாம் இல்லையா? “, என்று அரவிந்த் கூறினான்.

“மத்த குழந்தைகளோட விளையாட பேச ஆரம்பிக்க எல்லாம் சரியாகும்னு தான் சொன்னாங்க டாக்டர். நான் எல்லா டெஸ்டும் பண்ணிட்டேன்”, என்றாள்.

“சரி அந்த ரிப்போர்ட் மட்டுமாவது கொடுக்கிறியா?, நான் வேற யார்கிட்டயாவது செகண்ட் ஒபினியன் கேட்கிறேன்? “.

“வீட்டுக்கு போன உடனே எடுத்து கொடுக்கிறேன்”. “நான் பண்ணதுக்கு என்னை மன்னிச்சிட்டியா இல்லையா?”.அவனை விழி உயர்த்திப் பார்த்தாள். அவன் பதிலை எதிர்பார்த்து இருப்பது தெரிந்தது.

“எனக்கு சரியா சொல்ல தெரியல. முதல்ல கோவம் வந்துச்சு. அப்புறம் நீங்க சொல்லும் போதும் புரிஞ்சுது. நீங்க பண்ணது சரியா? தப்பான்னு என்னால தெளிவா சொல்ல முடியல”, என்று கூறிவிட்டு அவள் தலை தாழ்த்தினாள்.

“நீ சொன்னது சரிதான். என்னதான் இருந்தாலும் உன்னை ஏழு மாசமா நான் கண்காணிச்சிட்டு இருந்தது உனக்கே தெரியாம, கண்டிப்பா தப்புதான். நான் வேற இன்டென்ஷன்ல பண்ணலனாலும் , தப்பு தப்பு தான்”, என்று ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவன்.

“ஆனா பொண்டாட்டிய சைட் அடிக்கிறது தப்பு இல்ல!, என்று கூறிவிட்டு ஷாலினியை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்

“சைட் அடிக்கிறானா??, பொண்டாட்டியா??, இவனோட பொண்டாட்டி நாம தானே??, அப்படின்னா நம்மள சைட் அடிக்கிறானா?”, அவள் மூளையில் இருந்த பல்ப் மெது மெதுவாக எரிந்தது போலும் .

“நம்மள இல்ல, உன்ன சைட் அடிக்கிறான்”, என்று அவள் ஆழ் மனது எடுத்துக் கூற.

“என்னையா ???”, என்று மிகப் பெரிய கேள்வி குறி அவள் முன்னாள் தேங்கி நின்றது.

5 thoughts on “தேவதையாக வந்தவளே 31”

  1. Ethiraj friend ah correct ah than irukan support pannarathu thappu ah eduthu sollurathu la yum
    Malini kum avan mela kobam irundhalum avan seyal kana karanatha purinchi kita ah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *