Skip to content
Home » தேவதையாக வந்தவளே 32

தேவதையாக வந்தவளே 32

தேவதை 32

அந்த நாளையும் மொத்தமாக செலவழித்து விட்டு மறுநாள் காலையில் ஏர்போர்ட்டுக்கு சென்று அரவிந்த் அவர்கள் இருவரையும் ஒன்றாக பிளைட்டில் ஏற்றி விட்டவன். காரை வேறொருவரின் மூலமாக அங்கு அனுப்பி வைப்பதாக கூறிவிட்டான். பாண்டிச்சேரி வேலையை அவனைப் பார்த்து முடிப்பதாகவும் கூறிவிட சாருவை அழைத்துக் கொண்டு எத்திராஜ் தூத்துக்குடிக்கு பயணப்பட்டானர்.

இவ்வளவு நாள் தனியாக இருந்தவள் இப்பொழுது துணையுடன் இருக்க. அமைதியாக தன் வழியை பார்த்துக் கொண்டு செல்பவள். அவனுடன் சரளமாக பேச ஆரம்பித்திருந்தாள் . அவன் பேசி பேசி அவளையும் பேச வைத்தான் என்றும் சொல்லலாம். ஆனால் அதிகமாக பேசுவது அல்லது சரளமாக பேசுவதை அவன் தவறாக புரிந்து கொள்கிறான் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது அவளுக்கு. மீண்டும் நத்தை போல தன் கூட்டுக்குள் அடங்க ஆரம்பித்தாள். அன்றைய அவனுடைய பேச்சு அவளை தடுமாற செய்திருந்தாலும். அவளாக தன் சந்தேகத்தைக் கேட்கவில்லை. ஆமாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வாள் பேதை அவள்??. நான் உன்னை எதிர்பார்க்கிறேன். உணர்வுகள் வந்தாலும் உன்னிடம் தான் வந்து நிற்பேன் என்று சொல்பவனிடம் என்ன பேச முடியும்??. அதனாலேயே சற்று ஒதுக்கம் காட்ட ஆரம்பித்தால் என்றும் கூறலாம்

.……

இப்படியே மேலும் ஒரு வாரம் சென்று இருந்தது. அன்று அப்படி பேசினானே தவிர அதன் பிறகு அதைப் பற்றிய எந்த பேச்சுக்களும் இல்லை பார்வையும் இல்லை, பரிமாற்றங்களும் இல்லை என்று கூறலாம். அது அவளுக்கு நிம்மதியை அளித்ததா அல்லது ஏமாற்றத்தை கொடுத்ததா என்று அவளுக்கு தெரியவில்லை. அந்த வார விடுமுறையில் லோகநாதன் வந்திருந்தார். வாரா வாரம் அவர் வந்து செல்வது வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான். பிள்ளை பேத்தி என்று பார்க்க வருகிறார்.

“போன வாரம் நீங்க ஏன் வரல மாமா?”, என்று உரிமையாகவே பேசும் அளவிற்கு அவரிடம் சகஜமாகி இருந்தாள்.

“எத்திராஜ் வந்தான் இல்லையாமா. அதான் நான் வரல. இங்க இருக்கிறது மூணு ரூம்.அவனும் அவன் வருங்கால பொண்டாட்டியும் வரும்போது அறையில்லாமல் கஷ்டப்படுவாங்க. அதனால ஒரு வாரம் நான் வராம இருந்துட்டேன். வரலையே தவிர மனசு முழுக்க நீங்க மூணு பேரும் தான் இருந்தீங்க”, என்று கூறினார்.

தன்னைத் தவிர மற்றவர்களுக்கு எல்லா விஷயமும் தெரிகிறது போல??, என்று நினைத்துக் கொண்டாள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.வார்த்தைக்காக மட்டும் இல்லாமல் மருமகளின் சமையலை மனமார பாராட்டினார்.

ஷாலினியும் சிறிது சிறிதாக அவரிடம் பழக ஆரம்பித்து இருந்தாள். ஆனால் அரவிந்திடம் தூரம் தான் நின்றாள். சில நேரங்களில் அவன் முகத்தை பார்க்கும் போது மாலினிக்கு பாவமாக இருக்கும். அதில் அப்பட்டமாக ஏக்கமும் பாசமும் அன்பும் கலந்து இருக்கும். அவளும் தன் மகளுக்கு எவ்வளவோ சொல்லிக் கொடுத்து விட்டாள். ஆனால் அவள் போக மாட்டேன் எனும் போது மாலினியாலும் எதுவும் செய்ய முடியவில்லை. எதிர் வீட்டு குழந்தைகளிடம் ஒட்டிக் கொண்டு விட்டாள். அவர்கள் அந்த வீட்டுக்கு வந்தாலும் சரி, இவள் அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் சரி நன்றாக விளையாட ஆரம்பித்து இருந்தாள். அவளை பிரிந்து இருக்கும் சில நொடிகள் மாலினிக்கு வருத்தத்தை கொடுத்தாலும். மற்றவர்களுடன் பழகினால் தான் அவளுக்கு பேச்சும் சரளமாக வரும். நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொள்ள பாடமாக இருக்கும். அதனால் தன்னை அடக்கிக் கொள்வாள். பெரும்பாலும் அவர்கள் தான் அந்த வீட்டில் வந்து விளையாடுவார்கள். அதனால் சமைத்துக் கொண்டே அவர்களையும் சேர்த்து பார்த்துக் கொள்வாள். எந்த குழந்தைகளாக இருந்தால் என்ன??, குழந்தைகள் என்று இருந்தால் போதாதா??, அவர்களைப் பார்ப்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

கடை திறப்பு விழா நாள் நெருங்கிக் கொண்டிருக்க. அந்த ஞாயிறு தன் தந்தையுடன் கடைக்குச் சென்றவன். அவர்களுக்கு வேண்டிய உடைகளை எடுத்தான். குழந்தைக்கு வேண்டிய பொம்மைகளையும் வாங்கி கொடுத்தான். மொத்தத்தில் அவர்கள் குடும்பமாக பழகி விட்டிருந்தார்கள். அவள் மனதிலும் அவன் கணவனாக அது குடும்பமாக பதிய தொடங்கி விட்டது. ஆனாலும் மனதினுள்ளே ஒரு ஓரத்தில் சிறு பயம் இருந்து கொண்டே இருந்தது. எப்பொழுதாவது இது மாறிவிடுமோ என்று. அவன் தன்னிடம் நடிக்கிறானோ என்று சிறு சந்தேகமும் இருந்து கொண்டே இருந்தது. உடனே எல்லாம் அது மறைந்து விடாது சிறிது சிறிதாக அதை மறக்கடிக்க வேண்டியவன் அரவிந்த் மட்டும்தான்.

எல்லாவற்றையும் தீர யோசித்து தான் அவளை திருமணம் செய்ய முடிவை அவன் எடுத்திருந்தான். சில நேரங்களில் மனது தடுமாறினாலும். சில நேரங்களில் கோபத்தில் வார்த்தைகளை விட்டிருந்தாலும். பல நேரங்களில் அதை அடக்க பழகிக் கொண்டான் கடந்த இந்த நாட்களில்.

வாழ்க்கை நமக்கு பலவற்றை கற்றுக் கொடுக்கும். அவனுக்கும் நிதானத்தை நிதர்சனத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருந்தது

.…….

லோகநாதன் மட்டுமல்ல. சாருமதி எத்திராஜ் என்று எல்லோருமே அவ்வப்போது அலைபேசியில் அவளுடன் பழக ஆரம்பித்திருந்தனர். அவளும் தயக்கங்களை ஒதுக்கிவிட்டு அவர்களுடன் பேசி பழக ஆரம்பித்து இருந்தாள்.சொன்னது போல அவன் வேலை தொடங்க இரண்டு வாரங்கள் எடுத்துக் கொண்டது.

ஏற்கனவே பார்த்து வைத்த இடங்கள் என்றாலும்முழு மூச்சாக வேலையில் இறங்கி கட்டிடத்தை ஒழுங்காக வடிவமைத்து பிசினஸ் ஸ்டார்ட் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தான். பெரிதாக யாரையும் வரவேற்கவில்லை. ஆனால் யாராவது ஒரு வி.ஐ.பியை வரவேற்றால் தான் அவர்கள் பிசினஸ் சூடு பிடிக்கும். சென்னையில் வியாபாரம் என்பது பெரிய விஷயம் தான். அதில் வெற்றி அடைவதும் அதன் நெளிவு சுழிவுகளை அறிந்து வைத்து கொள்வதும் சூதானமாக செயல்படுவதும் அவசியமான ஒன்று..வியாபார நுணுக்கம் தெரிந்தவன் அவன். ஐந்து வருடங்களாக வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கிறான்.. ஆனால் மனைவி கையால் அவனுடைய அந்த வியாபாரத்தை தொடங்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. எத்திராஜ் உடன் பேசி ஒரு முடிவெடுத்தான்.

வீட்டில் இருப்பவர்களை வைத்து முதலில் கடையை திறந்து விடுவது பிறகு மாலை இரண்டு மூன்று விஐபிகளை அழைத்து அதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாக்களில் போட்டு பிரசுரிப்பது என்று.

அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அவ்வப்போது பேச்சுவாக்கில் மாலினியிடம் தெரிவித்துக் கொண்டுதான் இருப்பான். ஆனால் அவளோ பெரிதாக அதற்கு எந்த எதிர்வினையும் மாற்றுக் கருத்து கூறுவதில்லை . ஆனால் மனதில் உள்ளே ஒரு இதம் பரவியது. தன்னைக் கேட்டு செய்கிறான் என்ற சந்தோஷம். தன்னையும் ஒரு மனுசியாக மதிக்கிறான் என்ற நிம்மதி. தனக்காக குழந்தைக்காக அங்கேயே அவன் தொழிலை விருத்தி செய்வதில் ஒரு ஆனந்தம்.

இப்படி பல கலவையான எண்ணங்கள் இருந்த போதும் அதை அவள் வெளியிட்டுக் கொள்ளவில்லை. அவனும் அவளிடம் அதை எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடை திறப்பு விழாவும் நெருங்கி இருக்க. ஊரிலிருந்து எத்திராஜின் குடும்பமும் வந்திருந்தார்கள். அவர்களுக்கென்று ஒரு பெரிய வீட்டையே மூன்று நாள் வாடகைக்கு பிடித்திருந்தான் அரவிந்த். அவனுக்குத்தான் யாரும் இல்லை. எத்திராஜின் குடும்பம் ஒரு பெரிய கூட்டு குடும்பம் அனைவருக்கும் என்றால் கண்டிப்பாக பெரிதாக ஒரு வீடு வேண்டும்.

சென்னையில் பெரிய வீடு கிடைப்பதெல்லாம் பெரிய விஷயம் இல்லை வாழ்வதற்கு சிறிய வீடு கிடைப்பது தான் கஷ்டம்.லோகநாதன் வந்திருந்தார். ஆனால் அரவிந்தனின் தாய் மட்டும் வரவில்லை. மாலினி அவரையும் சேர்த்து எதிர்பார்த்து இருப்பாள் போல. அது அவள் பார்வையிலேயே தெரிந்தது. ஆனால் கேட்க தயக்கமும் இருந்தது யாரிடமும் கேட்கவில்லை. அரவிந்தின் தாயை எதிர்கொள்வதற்கும் அவளுக்கு நிறைய தயக்கங்கள் இருந்தது. தந்தையும் மகனும் வேறு அவரைப் பற்றி பூதாகரமாக கூறி விட மனதின் ஓரத்தில் பயமும் இருந்தது என்று கூறலாம். அதனால் வாயை திறந்து அவரைப் பற்றி எந்த கேள்வியும் அவள் எழுப்பவில்லை.

மனைவி மகள் என்று புது உடையில் அனைவரும் ஜொலித்தனர். மூவருக்கும் ஒரே வண்ண உடையை தான் அரவிந்த் எடுத்திருந்தான். அவனுக்கு என்று வந்தது அவனுடைய தகப்பன் மட்டுமே அவருக்கும் கூட . அதே வண்ணத்தில் தான் உடையை தேர்ந்தெடுத்து இருந்தான்..

தன் உடையை போட்டுக் கொண்ட ஷாலினி தன் தாத்தாவிடம் வந்து பாவாடையை விரித்து காட்டினாள். சிறு குழந்தைகளுக்கு புது உடை போடும்போது ஏற்படும் ஜொலிப்பு அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது

“ஏய், என் ஷாலினி குட்டி தேவதை மாதிரி அழகா இருக்காள்”, என்று அவளை தூக்கி சுற்றினார். கைச்சட்டையை மடித்து விட்டுக் கொண்டே வந்தவன். மகளின் அழகில் சொக்கி போய் விட்டான். அந்த குட்டி முடியில் ஜடை பின்னி சுங்கு வைத்து. மல்லிகைச் சரத்தையும் ஈட்டு. அஞ்சனத்தை விழிகளில் இட்டு. அதில் சிறு துளியை திருஷ்டிக்காக கன்னத்தில் ஓரமாக வைத்து இருந்தாள் மாலினி. மொத்தத்தில் விளம்பரங்களில் உடைகளுக்கு உடுத்தி வரும் அழகான குழந்தையை போல இருந்தாள் ஷாலினி. அதே ஆவல் கண்களில் மின்ன தன் மனையாளை எதிர்நோக்கி காத்திருந்தான் அரவிந்த்.

கதவு திறக்கும் சத்தத்தில், மகளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவன். அப்படியே திரும்பி மனைவியை பார்த்தான் அவளும் அதே வண்ண உடையில் தேவதையாகவே தெரிந்தாள். எந்த ஒப்பனையும் இல்லாமல் அவன் கண்களுக்கு அப்படித்தான் தெரிந்தாள். மகளைப் போல சிறு ஒப்பனையில் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு ஏமாற்றம் இருந்தாலும்நேர்த்தியான அவளுடைய உடை நிதானமான அலங்காரம் அவளை நன்றாகவே காட்டியது.

தலையை ஒரு பக்கமாக சாய்த்து அவளை ரசிப்பது போல பாவனை செய்தான். அவன் செயலில் அவளுக்கு வெட்கம் ஏற்பட தலையை தாழ்த்தி திருப்பிக் கொண்டாள் மாலினி.

பார்வதியின் குடும்பத்தைக் கூட திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் வீடும் கிளம்பி கொண்டு தான் இருந்தது. அது ஆரவாரத்திலேயே தெரிந்தது. குடும்பமாக காரில் சென்று இறங்கினார்கள்.

அவர்கள் சென்ற பத்து நிமிடங்கள் கழித்து தான் எத்திராஜின் ஒட்டு மொத்த குடும்பமும் வந்திருந்தது. குழந்தையை கையில் தூக்கிப் பிடித்தபடி ஒவ்வொரு இடமாக பார்வையை சுழற்றிக் கொண்டிருந்தாள் மாலினி.

“அண்ணி”, என்று சாரு அழைக்கவும் தான் நிகழ் உலகிற்கு வந்தாள்.

“ஹாய் சாரு, நேத்தே வந்துட்டேன்னு சொன்னாங்க. ஏன் வீட்டு பக்கம் வரல??, நீ வருவன்னு, நான் எதிர்பார்த்தேன்”, என்று உரிமையாகவே கேட்டாள் மாலினி.

“ ஐயோ அண்ணி அதை ஏன் கேக்குறீங்க??, அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையும் கட்டி காப்பாத்துறது என்னோட பொறுப்புல இருந்தது. அதான்”, என்று பெரிய மனுஷி தோரணையில் கூறிக் கொண்டே இல்லாத சோலியின் காலரை தூக்கி விட்டுக் கொண்டாள் சாரு. கட்டிடத்தின் வெளியே பிரம்மாண்டமாக இருந்த இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தவள். சாருவுடன் அங்கேயே நின்றிருக்க . அரவிந்த் பெயர் சொல்லி அவளை அழைத்தான். அவளும் என்னவோ ஏதோ என்று குழந்தையைப் பிடித்தபடி வேகமாக வர.

“மெதுவா வா”, என்று கூறினான். கட்டிடத்தின் வாசலில் ரிப்பன் ஒன்று கட்டப்பட்டிருக்க. ஷாலினியின் கையில் கத்திரிக்கோல் கொடுத்து அதை கட் பண்ண சொன்னான் அரவிந்த். மாலினி அதிர்ந்து அவனைப் பார்த்தாள். இரண்டு குடும்பத்திலும் பெரியவர்கள் என்று இத்தனை பேர் இருக்க சிறு குழந்தையை செய்ய சொல்கிறானே?. யாராவது அவனைத் தவறாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற பதட்டம் அவளுக்கு.

ஆனால் அந்த பதட்டம் ஏன் என்பது போல அங்கு இருந்தவர்கள் எல்லோரும் சாதாரணமாக சிரித்துக் கொண்டு குழந்தையை பார்த்திருந்தார்கள்.

5 thoughts on “தேவதையாக வந்தவளே 32”

  1. Kalidevi

    Paar da ellaraium vachitu site adikira aravind . ethuku ivlo pathatam malini papa ribbon cut pana pora nu ellarkum therium thairiyama cut pana vei . eni un life la elam matha poran aravind

  2. Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *