Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 10

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 10

அன்பு இல்லை ஆத்திரம் தான் பார்த்திபன் மேல் இருப்பதாக சிவாஞ்சலி கூறவும், கௌதம் ஒரு நொடி அவளை ஏற இறங்க நோக்கினான்.

சிவாஞ்சலியை கூர்ந்து நோக்கிய கௌதம் நிதானமாக, “நீ சொன்ன கோபம் கூட நாம அன்பு வெச்சவங்க மேல தான் நிலைச்சு இருக்கும். ரோட்ல போற யாரோ சம்பந்தமில்லாத ஒருத்தர் மேல வரும் கோபம் கொஞ்ச நாளில் கடந்து போயிடும். ஆனா அவரை பிரிஞ்சு ஒரு வருஷம் ஆகியும் இன்னும் அந்த கோபம் இருக்கே… உன் கண்களில் வலி தெரியுதே? இதுக்கு என்ன பதில் சொல்ல போற?”

“…” கௌதமின் கேள்விகளுக்கு அவளது மௌனமே பதிலாக இருந்தது.

“கண்கள் பொய் சொல்லாது சிவா. அதோடு நீ எவ்வளவு பூட்டு போட்டாலும் கண்களால் உன் அன்பை ஒளிச்சு வைக்க முடியாது. நான் சொல்றதை கேளு சிவா, நீயே உன் வாழ்க்கையை கெடுத்துக்காத பிளீஸ்.” என்று இறுதியில் கெஞ்சினான் கௌதம்.

“கௌதம்… காதலோ கல்யாணமோ அது என்ன வாழ்க்கையோட இலக்கா என்ன? இல்ல சாதனையா? கண்டிப்பா அடைஞ்சே ஆகனும் என்று நினைக்க? நடந்து முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும் கௌதம். எனக்கு பார்த்தி ஒரு முடிக்கப்பட்ட அத்தியாயம் அதை ஆல்ரெடி படிச்சு முடிச்சாச்சு… மீண்டும் திருப்பி பார்க்க எனக்கு இஷ்டம் இல்ல..” என்று கூறியவள் சற்று நேரம் மௌனமாக இருந்தவள்,

மீண்டும் தன் எதிரில் இருந்த சுவற்றில் கரம் பதித்து “கௌதம் எனக்கு இப்ப தேவையெல்லாம் ஒன்றே ஒன்று தான்; என் அம்மாவோட அன்பு, ஆறுதல், அணைப்பு. இது நடந்தால் எனக்கு இந்த லைஃப்ல இது போதும். என் வாழ்க்கை பூர்த்தியாகும்.” என்றாள் சிவாஞ்சலி.

“ஆண்டவன் உனக்கு மூளையை வைக்க மறந்துட்டான் போல… கண்டபடி உளறிட்டு இருக்க… ஒன்னு மட்டும் சொல்றேன் சிவா… பார்த்திபனை அத்தியாயம்னு சொன்னியே, அந்த அத்தியாயம் பிடிக்கலன்னு சொல்ல முடியுமா உன்னால? நீ ஆயிரம் தடவை மறந்துட்டேன், விலகிட்டேன் அப்படின்னு சொன்னாலும், எங்க போனாலும், நீ உண்மையாவே அந்த பார்த்திபனை காதலிச்சிருந்தா, உன் மனசுல இருந்து அவரை தூக்கிப் போடவே முடியாது.”

“நீயென்ன லவ் குருவா?” என்றாள் நக்கலாக!

அவளை கூர்ந்து நோக்கியவன், “நான் அத்தையை பார்க்க கிளம்பறேன்… நீ ரெஸ்ட் எடுத்துட்டு காலையில் வா” என்று கூறிவிட்டு வேகமாக மருத்துவமனை சென்றான்.

சிவாஞ்சலிக்கும் தற்போது இருக்கும் மனநிலையில் மருத்துவமனை செல்ல விருப்பம் இல்லை. அப்படியே தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கண்களை மூடினாள்.

“அஞ்சனா பிளீஸ் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். நான் ரொம்ப நேரமா பார்த்திக்கு கால் பண்றேன் அவர் எடுக்கவேயில்ல. எனக்காக அவருக்கு ஃபோன் பண்ணி பாரேன். அவருக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு ரொம்ப பயமா இருக்கு”

“ஹே டென்ஷன் ஆகாதே.. நான் கால் பண்ணி பார்க்கறேன். பட் நீ இன்னும் நாலு நாளில் கல்யாணம் வெச்சுகிட்டு எதுக்கு பார்த்திக்கு கால் பண்ணிட்டு இருக்க?”

“அது.. அது”

“என்ன.. லவ்வா? உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?” என்று மெல்லிய சிரிப்போடு, குரலில் கிண்டல் தொனிக்க வினவினாள் அஞ்சனா.

“கொஞ்சம் அவருக்கு கால் பண்ணி பாரேன். எனக்கு சீக்கிரமா கூப்பிட சொல்லு… பிளீஸ்” என்று கெஞ்சினாள் சிவாஞ்சலி.

உடம்போடு மனதும் அயர்ச்சியில் தவிக்க, உட்கார்ந்தே உறங்கியவள், ஒரு வருடம் முன்பு அஞ்சனாவுடன் பேசியது கனவாக மனக்கண்ணில் தோன்றவும் சட்டென கண்களை திறந்தாள் சிவாஞ்சலி.

அதன் பிறகு யாரும் யாரையும் சந்திக்கவில்லை. சிவாஞ்சலி ஹரியை தவிர.

மறுநாள் ஹரி அவளை தேடிச் சென்று, “நீங்க ஏன் இப்படி பொய் சொன்னீங்கன்னு எனக்கு சுத்தமா புரியல” என்றான் கடுப்புடன்.

“மிஸ்டர் ஹரி. எனக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்களும் நானும் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம் அவ்வளவு தான். உங்ககிட்ட என்னை பத்தி பேசியே ஆகனும்னு என்ன அவசியம் இருக்கு? நான் எதுவும் சொல்லாத போதே நீங்க என்னை பற்றிய தகவலை உங்க நண்பருக்கு பாஸ் பண்றீங்க? இந்த காரியம் செய்ய உங்களுக்கு தப்பா தெரியலையா?”

“எனக்கும் உங்களுக்கும் அவ்வளவா பழக்கம் இல்ல தான். ஆனால் பார்த்திக்கும் உங்களுக்கும் இருக்குற பழக்கம் அர்த்தமற்றது இல்லையே..? எதுக்கு அவன்கிட்ட நீங்க பொய் சொன்னீங்க?”

“நான் என்ன பொய் சொன்னேன்? எனக்கு கல்யாணம் நடந்தது உண்மை.” என்றதும் ஹரிக்கு தலை சுற்றியது.

“அப்ப ஆஃபீஸ் தரவுத்தளத்தில்?”

“அதுவும் உண்மை” என்று இரத்தின சுருக்கமாக பதிலளித்து நகர்ந்தாள் சிவாஞ்சலி.

“ஐயோ குழப்பறீங்களே” என்று தலைக் கோதியவன்

மீண்டும் அவளோடு நடந்துக் கொண்டே, “அப்ப நீங்களும் உங்க கணவரும் பிரிஞ்சுட்டீங்களா?” என்று சந்தேகமாக வினவினான்.

“ஏன் கேட்கறீங்க? உங்கள் நண்பர் உங்களை கேட்க சொன்னாரா?” என்று நக்கலாக வினவினாள்.

“இல்ல நான் தெரிஞ்சுக்க கேட்கிறேன்.”

“ஓ அப்படியா சரி நம்பிட்டேன்?.. என் கணவர் இறந்துட்டாரு.” என்றவள் குரலில் எந்த உணர்ச்சியும் கவனத்துடன் காட்டாமல் தவிர்த்து, “இதை உங்கள் நண்பரிடம் சொன்னாலும் எனக்கு கவலையில்லை. ஏன்னா என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் தெளிவாக தான் இருக்கேன்” என்று மொழிந்து விட்டு தன் வேலையை கவனிக்கச் சென்றாள்.

சிவாஞ்சலி பேசிய அத்தனையும் ஹரியின் காதுகளில் திரும்ப திரும்ப முரசிட்டது. அதிர்ச்சியில் உறைந்துப் போனான் ஹரி. ஆனால் அவள் நினைத்தது போல ஹரி பார்த்திபன் மற்றும் ரம்யாவிடம் எதுவும் கூறவில்லை.

பார்த்திபன் ரம்யா இருவரும் வழக்கம் போல நாளுக்கு ஒரு முறை பேசினார்கள் ஆனால் சிவாஞ்சலியை பற்றிய பேச்சை மட்டும் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு பேசினார்கள் எனலாம்.

வழக்கம் போல பார்த்திபன் வேலையை பார்க்க இரவு பகல் என்று ஓட, சிவாஞ்சலி, அலுவல் தன் அன்னை, மாமன் குடும்பம் என்று சுழல,

ரம்யா-ஹரி இருவரும் காதல் பேச்சுகளை குறைத்து பார்த்திபன் பற்றி சிந்தித்தார்கள்.

“ரம்மி நான் ஒன்னு சொல்லட்டுமா?”

“சொல்லுங்க ரஞ்சன்..”

“நம்ம கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்குல்ல? அதுக்குள்ள பார்த்திக்கு அவனோட வீட்டுல பேசி கல்யாணத்துக்கு பொண்ணை பார்க்க சொல்றியா? நம்ம கல்யாணம் நடக்கும் போது அவனும் அவனோட வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு தயாராக இருந்தால், நல்லாருக்கும் தானே?” என்று பொறுமையாக கேட்டான் ஹரி.

சிறிது நேரம் அமைதியாக இருந்த ரம்யா, “ரஞ்சன் அவனோட அம்மாக்கு அவன் கல்யாணத்தை பத்தி எவ்வளவு கனவு இருக்கு தெரியுமா? அவன் தனியாக இருக்க காரணம் அவனோட வீட்ல கல்யாணம் செய்ய சொல்லி வற்புறுத்துவது தான். அவன் மனசுல இருக்கும் பாரத்தால் அவன் ஓட ஆரம்பிச்சுட்டான். எனக்கு காரணம் தெரியாத போதே அவனை ஒத்துக்க வைக்க முடியல. இப்ப காரணம் தெரிஞ்ச பின்னாடி என்னால எப்படி அவனோட கல்யாணம் பத்தி பேச முடியும்? அவனை ஒரு விஷயம் செய்ய சொல்லி ஃபோர்ஸ் பண்ணா வேணும்னே மாத்தி செய்வான். அதுவும் இப்ப வாய்ப்பே இல்ல. அவனா மாறினா தான் உண்டு.” என்று வேதனையோடு குறைப்பட்டாள்.

அவர்களின் ஃபோன் அழைப்பில் வெகு நேரம் பார்த்திபனை பற்றியதாக தான் இருக்கும். ஹரிக்கு கூடவே சிவாஞ்சலி பற்றி சொல்லி விட நா துடித்தாலும் கடைசியில் அடக்கி விடுவான்.

அவனுக்கு சில குழப்பங்கள் இருந்தது. அஞ்சலியின் கணவர் இறந்துவிட்டார். அதற்காக நீ இன்னொருவனை மணந்து கொள்ள இப்போது தயாராக இருக்கிறாயா என்று அவன் கேட்பது அநாகரீகம்.. அவளின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேச ஹரிக்கு உரிமையும் கிடையாது. அஞ்சலிக்கும் அவனுக்கும் இருப்பது வெறும் பணி நிமித்தம் உறவு தான்.

அதே போல பார்த்திபன் அஞ்சலியை விட்டு விலகி அவனின் வாழ்க்கையை சிந்திக்க முயற்சிக்கிறான் என்றும் ஹரி அறிவான். மீண்டும் சில உண்மைகளை கூறி குழப்ப சூழ்நிலையை உண்டாக்கி அவர்களை ஒன்றாக சேர்ப்பது சரி இல்லை என்றும் எண்ணினான். பிரிந்தவர்கள் பிரிந்தவர்களாகவே இருக்கட்டும்! சம்பந்தப்பட்டவர்கள் எதுவாயினும் தீர்மானிக்கட்டும் என்று முடிவெடுத்து மௌனம் சாதித்தான் ஹரிரஞ்சன்.

கௌதம் அஞ்சலியின் மாமன் மகனாக இருந்தாலும், அவளை விட வெறும் இரண்டே மாதங்கள் பெரியவனாக இருந்தாலும், அவளை கூட பிறந்தவளாக பாவித்தான். இருவரும் ஒன்றாக வளர்ந்தார்கள். அஞ்சலியின் தந்தை இல்லாத குறையை தாய்மாமன் பூர்த்தி செய்ய, மாமியும் அஞ்சலியை ஆதரித்து தன் பெண் போலவே காத்தார். கௌதம் அஞ்சலியின் கல்யாண வாழ்க்கையை எண்ணி துயரம் கொண்டான். சில விடைகளுக்கு கேள்விகளை தேடி அலுத்துப் போனான். அன்றே அவன் அஞ்சலியிடம் பார்த்திபனை பற்றி தீவிரமாக கேட்டறிந்து செயல்பட்டிருக்க வேண்டுமோ என்று இன்று விசனப்பட்டான். ஆனால் அன்று பார்த்திபனை பற்றி தெரிந்திருந்தாலும், தன் அத்தையை மீறி அஞ்சலியின் கல்யாணத்தில் குளறுபடி செய்திருப்பானா என்பதும் அவனுக்கு சந்தேகமே! அவ்வளவு பயம் அத்தை மேல்.! இப்போதும் உண்டு தான்! ஆனால் அத்தையா அத்தை மகளா என்று கேட்டால், தயங்காமல் சிவாஞ்சலி பக்கம் சாய்ந்து விடுவான்.

அன்றிரவு, அஞ்சலியோடு பார்த்திபனை பற்றி பேசிய பிறகு, அவன் மனம் ரொம்பவே அவனை சாடியது. எப்படியாவது பார்த்திபனை பார்த்துப் பேச வேண்டும் என்று எண்ணினான்.

மறுநாள் காலையில் பனிமலர் தந்த காபியை அருந்தியபடி ‘அஞ்சலியிடம் நேரடியாக கேட்டால், அவனின் நம்பர் கிடைக்குமா? அவனின் நம்பர் அவள் வைத்திருப்பாளா?’ என்று மனதுள் கேட்டுக் கொண்டான்.

அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு வெளிப்படையாகத் இடவலமாக தலையாட்ட, “என்ன கௌதம் எதுக்கு இப்படி தலையாட்டின? கழுத்து வலிக்குதா என்ன?” என்று மகனிடம் பனிமலர் விசாரிக்க,

“நம்ம சிவா பத்தி யோசிச்சேன்”

“என்ன செய்ய? உன் அத்தையும் பிடிவாதமா இருக்காங்க.. அவளும் அந்த சர்வேஷோட காரியத்துக்கு போகனும்னு தீர்மானமாக சொல்லிட்டா!”

“என்ன சொல்றீங்க?”

“ம். உன் அத்தைக்கு பேச முடியாலனாலும் ஆணவம், பிடிவாதம் எதுவும் குறையவே இல்ல.. பெத்த பொண்ணு மேல எதுக்கு இவ்வளவு ஆத்திரம் வெறுப்பு? நான் பல நாள் யோசிச்சிருக்கேன் அதெப்படி தன் பொண்ணு மேல் ஒரு தாய்க்கு இப்படி மூர்க்கமாக கோபம் வரும்? உண்மையிலேயே அவங்க தான் சிவாவை பெற்றெடுத்தாங்களா?!”

“அம்மா. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. மருத்துவமனையில் நான் அந்த பார்த்திபனை பார்த்தேன்.”

“யாரு டா அது?”

“அம்மா உங்களுக்கு ஞாபகம் இல்லையா? ஒருநாள் மாலில் சந்தித்தோம்.. சிவா கூட நல்லா இருக்கீங்களா பார்த்தின்னு கேட்டாள்.”

“ஹான்..”

“அந்த பையனை நான் மருத்துவமனையில் பார்த்தேன். அத்தை சிவாவை கையில் கடிச்சாங்களே அன்னிக்கு தான்… அவள் டிடி இஞ்செக்சன் போட்டுகிட்டு வர போனப்ப தான் சிவாவும் அவனும் வாக்குவாதம் செஞ்சிட்டு இருந்தாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் பேசினதை கேட்டிருக்கணும் என்று எனக்கு இன்னிக்கு தோணுது. அன்றைக்கு அவர்கள் சண்டை போடும் போது குறுக்கே புகுந்து நான் போய் சிவாகிட்ட ஊசி போட்டாச்சா என்று கேட்டதும், அந்த பையன் கிளம்பி போயிட்டான். அதுக்கப்புறம் நான் அவனை சிவா வேலை பார்க்கும் அலுவலகம் முன்பு பார்த்தேன்.”

“சரி அதுக்கு என்னடா இப்ப? சிவா தான் அன்னிக்கே சொன்னாளே. அவள் இங்கே வந்த புதிதில் அவன் பழக்கம்…. ஆனா ஊருக்கு திரும்ப வந்ததும் பழக்கம் விட்டு போச்சு என்று!.. இப்ப ஒரே ஊரில் திரும்ப சந்திக்கிறார்கள். பழைய நட்பு மீண்டும் தொடருது.. அதுக்கென்ன..” என்று பனிமலர் கூறவும்,

“ஐயோ அம்மா.. நல்லா யோசிச்சு பாருங்க. அவள் பழக்கம் என்று கூறியது நட்பு ரீதியாக இல்லை. அதையும் தாண்டி ஆழமானது..” என்றான் கௌதம்.

“சுத்தி வளைக்காம சொல்றியா.. நீயும் உங்க அப்பாவும் ஒரு விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடி, விரிவுரை விளக்கவுரை கொடுக்காம நேரடியாக விஷயத்தை சொல்லவே மாட்டீங்க” என்றார் பனிமலர்

“அந்த பார்த்திபனும் நம்ம சிவாவும் லவ் பண்ணிருக்காங்க” என்று பிரேக்கிங் நியூஸ் இதோ என்பது போல் கூறவும்

“என்ன?” என்று பனிமலர் அதிர்ந்தார்.

“எனக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஒரு டவுட் இருந்துச்சு.. ஆனா அது யாருன்னு அப்ப எனக்கு தெரியாது.. இப்ப உறுதியாக தெரிஞ்சு போச்சு” என்று முடித்தான் கௌதம்.

பனிமலர் அமைதியாக இருக்கவும், “அம்மா எதாவது பேசுங்க.. நான் நினைக்கிறது தான் நீங்களும் நினைக்கிறீங்களா?”

“ப்ச்… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல”

“சிவா இப்படியே இருக்க கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்க தானே… எப்படியாவது அவள் மனசை மாற்றி அவள் ஆசைப்பட்ட பையனையே கல்யாணம் பண்ணி வெச்சா என்ன?”

“அத்தை..” என்று வெளியிலிருந்து குரல் கொடுத்தவாறே வீட்டினுள் வந்தாள் சிவாஞ்சலி.

9 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 10”

 1. Avatar

  ‘திங்க் ஆஃப் தி டெவில்’ அது இவளைத்தான் சொல்லி வைச்சதோ…???
  😜😜😜

 2. Kalidevi

  Nadula anjana tha etho pani vitu iruku apram avanga ammavum. Siva konjam parthi kitta pesi pakalam pesuravanga kittaum porumaiya ethum solla matra

  1. Avatar

   ஆமால்ல கௌதம் தான் பாவமும் கூட…

   😜😜😀😀 ஹரியை என்ன சொல்றது… இன்னும் இருக்கே…
   மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *