Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் 15

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் 15

சிவாஞ்சலியின் திருமண ஏற்பாடே திடீரென்று தான் அவளுக்கு தெரிய வந்தது. பார்வதி அவளை பார்க்க வருமாறு அழைத்ததால், சந்தோஷத்துடன் ஊருக்கு புறப்பட்டாள்.

ஊரில் இரண்டு நாட்கள் இனிமையாக சென்றது. மூன்றாவது நாள், இன்னும் ஒரு வாரத்தில் அவளுக்கு திருமணம் நிச்சயித்து இருப்பதாக பார்வதி உரைத்தார். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். பின்பு பல விதமாக முயன்றவள், அன்று அஞ்சனாவை உதவி கேட்டு, பார்த்திபனின் அழைப்புகாக காத்திருந்தாள். ஆனால் அது நடக்கவேயில்லை. மாறாக, அவளின் திருமணம் மூன்று நாட்கள் முன்னதாக நடக்க வேண்டி தேதியை மாற்றிவிட, அவளுக்கு தலைகால் புரியவில்லை.

அவளின் தவிப்பை உணர்ந்து உதவ வந்த கௌதமை நாடி, அவளின் அழுகைக்கு காரணத்தைக் கூறாமல் சர்வேஷின் எண்ணை மட்டும் கேட்டுப் பெற்றாள். ஒருவேளை சர்வேஷால் நிச்சயித்த திருமணத்தை நிறுத்த முடியும் என்று நம்பினாள். ஆனால் எவ்வளவு முயன்றும் அவனோடும் பேச இயலவில்லை. அவளின் தவிப்புக் கூடியதே அன்றி அதை போக்க யாரை எதிர்பார்த்தாளோ அவன் ஒருமுறை கூட அணுகவில்லை. ஒரு கட்டத்தில் திருமணம் மறுநாள் என்று வந்துவிட்டது.

அஞ்சனா அவளது பெற்றோரோடு சிவாஞ்சலியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அஞ்சனா காணும் போது அவளின் முகத்தில் பொலிவு இல்லாமல், களையிழந்து தனக்கும் அங்கு நடக்கும் எந்த நிகழ்வுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல இருந்தாள். அதே சிவாஞ்சலி அஞ்சனாவை கண்டதும், ஆயிரம் பலம் வந்தது போன்று தாவி ஓடி அவளை அணைத்துக் கொண்டு, கண்ணீர் உகுத்தாள். எவரும் அறியாமல் கண்ணீரை துடைத்து, தனியே அழைத்துப் போய், “அஞ்சனா, பார்த்தி என்ன சொன்னாரு? அவர் ஏன் எனக்கு கால் பண்ணவே இல்ல? இன்னிக்கு கூட அவருக்கு கால் பண்ணேன். அவர் ஃபோனை எடுக்கவே இல்ல. அவர் இங்க வந்து எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தி என்னை கூட்டிட்டு போயிடுவாரு தானே. அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்குவார் தானே…” என்று பேராவலுடன் வினவினாள். அதே சமயம் பார்வதி அவ்விடம் வர, அஞ்சனாவின் கண்கள் பார்வதியிடமே நிலைகுத்தி நின்றது.

“இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? சிவா வா உனக்கு நலுங்கு வைக்க நேரமாகிடுச்சு” என்று கூறி சிவஞ்சலியை அழைத்துச் சென்றார் பார்வதி. அவள் அஞ்சனாவை திரும்பி திரும்பி பார்த்தவள், அதன் பிறகு அவள் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும் வரை, அஞ்சனாவை அவள் தனிமையில் நெருங்க முடியவில்லை. தங்கு தடையின்றி திருமணம் நடைபெற்று, இறுதியில் ஏமாற்றத்தோடு சர்வேஷின் சரிபாதி ஆனாள். அவ்வளவுதான் இனிமேல் தன் வாழ்க்கையில் பார்த்திபனுக்கு இடமில்லை; தன் முதல் காதல் கருகி சமாதியை அடைந்துவிட்டது என்று வலியோடு எண்ணினாள்.

சர்வேஷின் வீட்டிற்கு சென்றவளுக்கு வேறு விதமான வாழ்க்கை காத்திருக்கிறது என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை. அவள் எதையும் எதிர்பார்க்காமல் தான் சென்றாள். கணவனை கொண்டாடிக் கொண்டு அவள் மனைவியாகவில்லை. ஆனாலும் தனக்கு சர்வேஷை ஏற்றுகொள்ள சற்று காலம் தேவை என்பதை அவனிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்று எண்ணினாள்.

மருமகளாக உள்ளே நுழைந்ததும், அவனது தாயார், “இந்தாமா, சிவாஞ்சலி வேலையை விட்டுட்டு வந்துட்ட தானே, இப்ப நீ அவனோட வெளிநாட்டுக்குப் போக முடியாது அதனாலே வேலைக்குப் போகலாம்னு நினைக்காத, உன் விசா ரெடியாகி அவன் வந்து உன்னை கூட்டிட்டுப் போகற வரைக்கும் நீ இந்த வீட்டுல தான் இருக்கணும். மருமகளுக்கான கடமை இருக்குப் பாரு… அவன் வெளிநாடு போகவே இன்னும் ஒரு மாசம் இருக்கு அதுக்குள்ள உன் வயத்துல புழுப்பூச்சி உண்டாகிட்டா, அதுவும் நல்லது தான். நான் என் மகனையே, இந்த முறை வெளிநாட்டுக்கு அனுப்ப வேணாம்னு தான் பார்க்கிறேன்; ஆனா அவன் அங்க முடிக்க வேண்டிய வேலை இருக்கு அதுக்கு இன்னும் சில வருஷமாவது ஆகும்னு அடம் பிடிக்கிறான்.” என்று அவளது மாமியார் பேசிக் கொண்டே இருக்க, அவள் தெளிவில்லாமல் விழித்தாள்.

“என்னது வெளிநாட்டுக்கு போறாரா?; ஆனா நான் இன்னும் வேலையை விடல; நான் ரெண்டு வாரம் லீவு எடுத்து தான் வந்திருக்கேன். திடீர்னு தான் என் அம்மா கல்யாணம்னு சொன்னாங்க. நான் இன்னும் ஒரு வாரத்தில் வேலைக்கு போகனும்.” என்றாள்

“வேலைக்கா? இப்ப தானே சொன்னேன்? அதெல்லாம் போகக் கூடாது?! வந்த முதல்நாளே, என்னை எதிர்த்துப் பேச வந்துட்டியா? வேணும்னா ஃபோன் பண்ணி சொல்லிடு… இதெல்லாம் உன் அம்மாகிட்டே சொன்னேனே!” என்றார் கலாதேவி கோபத்துடன்.

சற்று ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த சர்வேஷை, உதவிக்காக நோக்கினாள்; ஆனால் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அங்கிருந்து விலகி சென்றான்.

முதலிரவுக்கு உள்ளே சென்றவள், அவனிடம் பேசிவிட வேண்டும் என்று உறுதியுடன் எண்ணியவள், கணவனின் பாராமுகம் குழப்பத்தைத் தந்தது. இவளாகவே பேச முற்பட்டும், அவன் தூங்குவது போல பாசாங்கு செய்தான்.

அதற்கு பிறகு ஆழ்ந்த பெருமூச்சுடன் தன் மனதில் உள்ளதை தள்ளிப்போட்ட சிவாஞ்சலி, தரையில் படுத்து பார்த்திபனின் முகத்தை ஆத்திரமாக நினைத்தாள்.

ஒரு நாள் இல்லை; தொடர்ந்த அத்தனை நாட்களும் சர்வேஷின் பாராமுகம் அதே போலவே இருந்தது. சிவாஞ்சலியும் அவன் வதைப்பதாக எண்ணாமல், நிம்மதியாக உணர்ந்தாள். தனக்கும் இந்த நேரமும், இடைவெளியும் தேவை என்று நினைத்தாள். சரியாக அவளின் திருமணம் நடந்த நான்காவது நாள், சர்வேஷும் மாமியார் கலாதேவியும் வீட்டின் பின்புறத்தில் நின்று, யாருமில்லை என்று நினைத்துக் கொண்டு காட்டமாக வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தார்கள்.

“தேவையில்லாம நீங்க என்னை இங்க பிடிச்சு வைக்க முடியாது. எப்படி இருந்தாலும் நான் இங்கிருந்து கிளம்பி போகப் போறேன். எனக்காக அங்க ஒரு ஜீவன் காதலோட காத்துட்டு இருக்கு.”

“ஜீவனாம்ல ஜீவன். அறைஞ்சேன்னா தெரியும். உனக்கு ஒரு பொண்டாட்டி வந்தாச்சு. ஒழுங்கு மரியாதையா அவளோட வாழ்ந்து இந்த வீட்டுக்கு வாரிசு பெருக்கும் வழியைப் பாரு. ஆம்பளையா லட்சணமா இருகறதை விட்டுட்டு வீட்டை விட்டு ஓடிப் போகப் பார்த்திருக்க? உனக்கு வெட்கமா இல்ல. நீ பண்ண வேலை மட்டும் இந்த ஊருக்கு தெரிஞ்சா, நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? தெருவுல போறவன் எல்லாம் காரி துப்புவான். இது வரைக்கும் தலை நிமிர்ந்து நிற்கும் இந்த குடும்பம், நாளைக்கு உன்னால எவனாவது தப்பா பேசினா, நான் சும்மா இருக்க மாட்டேன். உங்க அப்பா ஒரு அரசாங்க ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவரு. அவருக்கு மரியாதை குறைஞ்சுதுனா, அவ்வளவு தான் சொல்லிட்டேன். ஊர் உலகம், உன்னை தப்பா வளர்த்துட்டோம்னு எங்களை தூற்றும். பெத்த பையனா இது தான் நீ செய்யற கடமையா?”

“அம்மா நீங்க இப்படி அடாவடியாக நடக்கிறதே, அப்பாக்கு அவமரியாதைனு உங்களுக்கு எப்ப புரியும்? எல்லாமே உங்க இஷ்டத்துக்கு தான் நடக்கணுமா? ஊருக்குள்ள இருக்கிறவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். நம்ம வீட்டுல நடக்கிறதை பார்க்க அவங்களுக்கு நேரம் கிடையாது… வீணா கத்தாம, நீங்க கூட்டிட்டு வந்த பொண்ணை நீங்களே திருப்பி அனுப்பிடுங்க.” அவர்களுக்கு தெரியாமல் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாஞ்சலி அதிர்ச்சி அடைந்தாள். அதே சமயம், சர்வேஷ் பேசியதைக் கேட்டு, அவனை ஓங்கி அறைந்திருந்தார் கலாதேவி. அமைதியாக திரும்பி உள்ளே சென்றவளை பரிதாபப் பார்வையோடு எதிர்கொண்டார் சர்வேஷின் தந்தை ராஜசேகர். அவள் தலையில் கைவைத்து “எல்லாம் சரி ஆகும் சிவாஞ்சலி” என்றுவிட்டு போனார். சரியாகுமா என்றக் கேள்வி அவளுள் தொக்கி நின்றது. அப்போது பார்வதி அவளை அழைத்தார். “ஹலோ சிவா… எப்படி இருக்க?”

“நல்லாருக்கேன் ம்மா” என்றாள்.

“ம்ம். மாமியார்கிட்ட நல்ல பேர் வாங்கி, குடும்பத்தை நல்லா ஓட்டப் பாரு. அதை விட்டுட்டு வேலைக்குப் போகனும், சாதிக்கணும் அப்படி இப்படின்னு ஏதாவது உளறிட்டு இருக்காதே. உன் புருஷனை விட, மாமியார் தான் முக்கியம். புரிஞ்சு நடந்துக்கோ. உன் மாமியார் இல்லனா, நான் இங்க உன்னையும் கட்டிக் கொடுத்துட்டு, நிம்மதியாக வாழ முடியாது. காலம் பூரா, உன் மாமன் குடும்பத்தையே ஒண்டி வாழும் நிலை இப்ப எனக்கு இல்ல.” என்று தன் புராணத்தையே பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு சலிப்பாக இருந்தது. உன் உடம்பை பத்திரமா பார்த்துக்கோ; எதுவாயிருந்தாலும் அம்மா இருக்கேன் இப்படியான ஆறுதல் வார்த்தைகள் எதிர்பார்த்தால், கிடைத்தது மாமியார் பெருமை தான்.

மேலும் இரண்டு நாட்கள் அவளுக்கு தெரியாமல், அவ்வப்போது அவளின் கணவனும் மாமியாரும் மாறி மாறி எடுத்தெறிந்து பேசுவது அவள் காதில் விழுந்தது. ஆனாலும் அதில் தலையிடாமல் அமைதிக் காத்தாள். இனிமேல் இது தான் தன் வாழ்க்கை; இதை எப்படி கொண்டு செல்வது என்பது தன் கையில் தான் உள்ளது என்று தீவிரமாக எண்ணினாள். சர்வேஷ்-கலாதேவி பேச்சினூடே சத்யா என்ற பெயரைக் குறிப்பிடுவதை அறிந்து அவனுக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது என்பதையும் உணர்ந்து இருந்தாள்.

இருவருக்குமே அவகாசமும் தேவைப்படுகிறது; எல்லாவற்றையும் காலம் நிச்சயம் சரி செய்யும் என்று நம்பினாள். இந்த பேச்சுக்களுக்கு இடையில் ஒரு நாள் அவனின் நண்பன் என்றொருவன் வந்ததும், கலாதேவி ஒருபக்கம் கடுப்புடன், நண்பனை கடிந்துக் கொண்டிருக்க, சர்வேஷ் அன்னையை அடக்க, ராஜசேகர் அமைதியாக அறைக்குள் செல்ல, என்று களேபரம் நடக்க, சமையலறையில் இருந்து காபி, பலகார தட்டுடன் வெளிவந்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள் சிவாஞ்சலி.

அன்று தான் முதல்முறையாக சர்வேஷ், “நீங்க என் அம்மாவை சமாதானம் செய்ய முடியுமா? நான் என் நண்பனோடு வெளியே போயிட்டு வரேன். பிளீஸ்.” என்றான் கெஞ்சலாக. அவள் மாமியாரை நெருங்கி வர, விருட்டென்று அவளை தள்ளிவிட்டு, “அப்படியே வீட்டைவிட்டு வெளியே போயிடலாம்னு நினைக்காத சர்வேஷா… நீ ஏடாகூடமாக ஏதாவது செஞ்சா, நானும் உன் அப்பாவும் தூக்குல தான் தொங்குவோம்.” என்று மிரட்டினார் கலாதேவி. அவரை ஒரு பார்வை பார்த்தவன், திரும்பி நண்பனோடு சென்றான்.

மறுநாள் மாலையில், வாசல் திண்ணையில் அமர்ந்து ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த சர்வேஷ், அதிர்ச்சியில் சத்யா என்று கத்தினான். அப்போது தான் அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்தாள் சிவாஞ்சலி. அவன் கத்தியதில் என்ன என்று விசாரித்தாள். பதில் கூறாமல் அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

சிவாஞ்சலி நேரே கலாதேவியிடம் உரைக்க, அவரோ, “அவன் இப்ப கோபத்துல இருக்கான். கொஞ்ச நேரம் விடு, அவனே சரியாகிடுவான்” என்றார். அவளும் எப்போதும் போல அமைதியாக வேலையை செய்துவிட்டு, இரவு உறங்க அறைக்குச் சென்றாள். அறைக்குள் செல்லும் முன், கலாதேவியிடம், “உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்.? கேட்கட்டுமா அத்தை” என்று வினவியவள், “சத்யான்னு அவர் கத்தினாரு. அது யாரு?” என்று கேட்டாள்.

உடன் இருந்த ராஜசேகர் “அது அவனோட காதல்…” என்று தொடங்க, உடனே கலாதேவி இடைமறித்து, “அவனை பற்றின விஷயம் நீ அவன்கிட்ட தான் கேட்கணும் சிவா… அவன் உன் புருஷன் தானே… அதுவும் இல்லாம, இந்த அநாவசிய கேள்வியை விட்டுட்டு சீக்கிரம் எங்களுக்கு பேரப்பிள்ளைகள் பெத்துக் கொடுக்கப் பாரு… என்ன சொல்றது புரியுதா?” என்று உதட்டில் ஒட்ட வைத்த சிரிப்போடு சொல்லிட்டுப் போனார். சிவாஞ்சலி அயற்சியடைந்தாள்

திருமணம் நடந்து சரியாக ஏழாவது நாள், வழக்கம் போல விடிந்தது; சிவாஞ்சலியும் தன் கடமையை செய்ய, புதிதாக ஒரு பெண் வந்தாள். சர்வேஷ் வீட்டிற்குப் பின்னால் நடுத்தர தோட்டம் ஒன்றை அமைத்திருந்தார்கள். கலாதேவி அப்பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருப்பதை சமையலறை ஜன்னல் வழியாக கண்டாள். அதை பெரிதாக எண்ணாமல், சர்வேஷை தேடி காபி கோப்பையொடு அறைக்குச் சென்றாள். உள்ளே அவள் கண்டக் காட்சி, அவள் வாழ்நாளில் மறக்காது. அங்கே சர்வேஷ் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டான். இவளின் அலறல் சத்தத்தில் வீட்டிலுள்ள அனைவரும் வர, நடந்த சம்பவம் ஊருக்குள் உலா சென்றது.

பொம்மை போல வருவோர் போவோருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாள் சிவாஞ்சலி. பார்வதி, கௌதம், அவனது பெற்றோர் எல்லோரும் பதறியடித்துக் கொண்டு அவளை தழுவினார்கள். பார்வதியின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. பெற்ற மகளுக்கு என்ன ஆறுதல் வார்த்தை சொல்வது என்றே புரியவில்லை.

ஒரு பக்கம் கலாதேவி அழுதுப் புரண்டு தன் வேதனையை வெளிக்காட்ட, அவரிடம் சென்ற பார்வதி, “சம்பந்தியம்மா, என்னாச்சு? எதுக்கு இப்படி உங்க பிள்ளை பண்ணாரு? இப்ப என் பொண்ணோட வாழ்க்கை?”

“உங்களுக்கு உங்க பொண்ணு உசுரோட தானே இருக்கா? அவளுக்கு ஒன்னும் ஆகாம கல்லு பிள்ளையார் கணக்கா உட்கார்ந்து இருக்காளே… ஆனா நான் என் ஒரே புள்ளையை பரிக்கொடுத்துட்டேனே… உங்க பொண்ணு நல்லா இருப்பாளா? அவளால தான் என் பையன் செத்துப் போயிட்டான். புருஷனை கைக்குள்ள போட்டுக்கத் தெரியாதவ எல்லாம் பொம்பளையா!?

அவனோட காதலை தடுத்து உங்க பொண்ணை கட்டி வெச்சேன். கட்டி வெச்சு என்ன பிரயோஜனம்? அவனை பத்திரமா பார்த்துக்க தெரியாதவளிடம் கொடுத்து, இன்னிக்கு என் புள்ளை இல்லாம போயிட்டானே?” என்று ஆத்திரத்தில், வேதனையில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், பழியை தூக்கி சிவாஞ்சலி மேல் போடவும், ஊரே அதிர்ச்சியுடன் வேடிக்கைப் பார்த்தது.

சிவாஞ்சலிக்கு, மனம் ஒரு நிலையில் இல்லை. ஏன் தனக்கு மட்டும் இப்படி ஆனது? என்ற சுயபச்சாதபத்தில் துடித்தாள்.

அப்போது கலாதேவியோடு பார்வதி தன் மகளுக்கு வரிந்துக் கட்டிக்கொண்டு பேச, இழவு வீடு போர் வீடு ஆனது. ஒரு கட்டத்தில் பார்வதி, உங்க பையனைப் பற்றி உங்களுக்கே தெரியல? என் பொண்ணை குறை சொல்ல வந்துட்டீங்க? எனக்கு இப்பவே உண்மையான காரணம் தெரியணும்?” என்று பார்வதி கூச்சலிடவும்,

அருகில் நின்றிருந்த பெண்ணை கூப்பிட்டு, “சத்யா இந்த குடும்பத்தையே வெளியே அனுப்பு… அப்புறம் நான் வெளியே வரேன்” என்று கலாதேவி கட்டளையிட்டார்.

“சத்யா” என்ற பெயரில் திடுக்கிட்டுத் திரும்பிய சிவாஞ்சலி, அவளிடம் சென்று, “சர்வேஷ் விரும்பிய பெண் நீங்க தானா? அவர் அடிக்கடி சொன்ன சத்யா நீங்க தானா?…” என்று கேட்க, கலாதேவி மிரண்டார்.

ஒரு வேகத்தில், “ஆமா அதுக்கென்ன? அவ இப்ப முழுகாம இருக்கா. சர்வேஷை பார்த்து குழந்தைப் பற்றி சொல்ல வந்திருக்கா… ஆனா அதுக்குள்ள அவன் போய் சேர்ந்துட்டான்” என்று கூறி சிவாஞ்சலியையும், அவள் குடும்பத்தையும் அடிக்காதக் குறையாக விரட்டினார். அவர்களும் நிற்காமல் வெளியேறிவிட்டார்கள்.

ஒரு வருடம் கழித்து மீண்டும் அதே சத்யாவை சர்வேஷின் காரியத்தில் கண்டதும் அவள் தலை வின்னென்று தெறிக்க ஆரம்பித்தது.

காரியத்தின் நடுவே, யாருமறியாமல் சத்யா தனியே அழைத்து சிவாஞ்சலியிடம், “இன்னிக்கு விட்டால் உங்களிடம் இதை பற்றி பேச முடியாமல் போயிடும். சோ நான் பேசறது மட்டும் கேளுங்க. நான் இங்க நிற்பது எனக்கு தான் ஆபத்து. நீங்க நினைக்கிற மாதிரி சர்வேஷுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என் பெயரை தவிர.” என்றாள்.

சிவாஞ்சலி கூர்ந்து நோக்க, “நான் அவங்க தோட்டத்து கணக்குப் பிள்ளை பொண்ணு. என்னை படிக்க வெச்சதே இந்த குடும்பம் தான். சர்வேஷ் எனக்கு நல்ல நண்பன் மட்டுமே. ஆனா அவன் என் பேரிலேயே ஒருவரை விரும்புவான்; அது எனக்கு பாதகமா போய் முடியும்னு சத்தியமா எதிர்பார்க்கல. நான் சொன்ன ஒருவர் உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்.” என்று கூறிவிட்டு அவளை நோக்கினாள் சத்யா.

“எனக்கு புரியல… சீக்கிரம் சொன்னா நல்லது.”

6 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் 15”

  1. CRVS2797

    அட.. எங்களுக்கும் தான் அவ என்ன சொல்ல வரான்னு புரியலை…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *