Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் 18

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் 18

பார்த்திபன் தன் அம்மாவை பெருமிதத்துடன் பார்த்தான். ஜானகி பேசியதும், பார்வதியால் அன்றைய கலாதேவியின் தற்பெருமை, ஜம்பமான பேச்சோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அரசியல்வாதிகள் ஓட்டுகளை பெறுவதற்காக, அள்ளி தெளிக்கும் வாக்குறுதிகளைப் போலப் பேசியதெல்லாம் பார்வதியின் எண்ணங்களில் ஓடியது. ஆனால் ஜானகி நிதர்சனத்தை உரைத்தார் என்று நினைத்தார் பார்வதி.

“இதுல முடிவெடுக்க இப்ப எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல.” என்று வருத்தம் இழையோடியக் குரலில் கூறவும்,

பார்த்திபன், “நேத்து சிவாஞ்சலி சொன்னாளே ஆன்டி. அவளுக்கு நீங்க தான் அம்மா. அது என்னிக்கும் மாறாதுன்னு. அப்ப உங்களை தவிர யாருக்கு தகுதியும் உரிமையும் இருக்கு.? நீங்க சம்மதம் சொன்னதும் தான், உங்க பொண்ணையே நான் சரி கட்டணும். கொஞ்ச நஞ்ச பிடிவாதமா இருக்கு உங்க பொண்ணுக்கு… அப்பப்பா… நான் எவ்ளோ பிளான் போட வேண்டியிருக்கு தெரியுமா… நீங்களும் முடியாதுன்னு சொல்லிட்டா, என்னோட பிளானிங் வேலை இரண்டு மடங்கு ஆகிடும் ஆன்டி பிளீஸ். மீ ரொம்ப பாவம்…” என்று இருகரம் கூப்பி தொபுகடீரென்று பார்வதியின் காலை பிடித்தான் பார்த்திபன்.

அவன் செயலில் முதலில் திடுகிட்டாலும், பின்பு சிரித்துவிட்டார் பார்வதி. இந்த காட்சியை அப்போது அறைக்குள் வந்த பனிமலர் மற்றும் வடிவேலன் கண்டு அதிசயித்துப் போனார்கள்.

“டேய் போதும்டா எந்திரிடா…” என்று ஜானகி அவனது டிஷர்ட் காலரை பிடித்து தூக்கினார்.

“நான் சரின்னு சொல்லிடறேன் தம்பி. நீங்க பண்றதை பார்த்து உங்க அம்மா கோபப்பட்டு இந்த கல்யாணமே வேணாம்னு சொல்லிடப் போறாங்க தம்பி”

“காலில் விழும் ஐடியாவை சொல்லிக் கொடுத்ததே என் அம்மா தான் ஆன்டி” என்றதும் திக்குமுக்காடிப் போனார் பார்வதி.

அதன் பிறகு இரு குடும்பத்தாரின் மொத்த உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து பரஸ்பரம் அறிமுகப் படலம் நிகழ்ந்தது. நல்ல குடும்பம் என்ற நம்பிக்கையும் அவருள் எழுந்தது.

சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டால், வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை.

இரண்டு குடும்பத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்ட பார்த்திபனுக்கு பெரும் போராட்டம் அவனின் அஞ்சுவிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்தே இருந்தான்.

அவளை எப்படி ஒத்துக்கொள்ள வைப்பது என்று ரம்யா ஹரியை தொடர்புக் கொண்டு உதவி கேட்டான் பார்த்திபன்.

நான்கு நாட்களாக சிவாஞ்சலியின் அலுவலகம் முன் நிற்காமல் இருந்தான் பார்த்திபன். அவனின் வரவுக்கு பழக்கப்பட்டிருந்த சிவாஞ்சலிக்கு அவனை காணாமல் எதையோ பறிகொடுத்ததுப் போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

“ஹாய் அஞ்சலி குட் மார்னிங். இன்னிக்கு என்ன புது பொலிவோடு வந்திருக்கீங்க… மூஞ்சி டாலடிக்குதே” என்று ஹரி அவளை வம்பிழுக்க, “ப்ச் இன்னிக்கு தான் நான் செம்ம கோபத்துல வந்திருக்கேன்… பேசாம போங்க ஹரி” என்றாள்.

“என்னாச்சு?…” அவள் அலுவலக வாயிலில் நான்கு நாட்களாக கண்களை சுழற்றி பார்த்திபனை தேடியதை அவனும் அறிவான்; இருந்தாலும் அவனை பற்றி ஏதாவது தன்னிடம் கேட்பாளா என்று ஆவலுடன் காத்திருந்தான்.

“எப்ப பாரு கரெக்டா தப்பான நேரத்துல காணாம போயிட வேண்டியது. ஒன்னும் சொல்றதும் கிடையாது… இப்ப தான் கோபம் குறைஞ்சுது… இனிமே திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்” என்று முணுமுணுத்தாள் சிவாஞ்சலி.

“சொல்ல மறந்துட்டேன் அஞ்சலி. என் ஃபியான்சே ரம்யா உங்களை மீட் பண்ணனும் சொன்னாங்க.”

“ஓ.. நான் கூட வேறெதோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்” என்றாள்

“வேறென்ன…”

“ஒன்னுமில்லை… நாங்க இன்னிக்கு சாயந்திரம் மீட் பண்றதா இருக்கோம்… இப்ப வேலையை பாருங்க” என்றாள் சிவாஞ்சலி. ஹரிக்கு அவளது மனநிலையை எண்ணி கொண்டாட்டமாக இருந்தது. அவன், ரம்யா பார்த்திபன் – மூவருக்குமான வாட்ஸ்அப் குரூப்பில் சிவாஞ்சலி பற்றி செய்திப் பறந்தது. பார்த்திபனுக்கு தற்போது அவளின் மனதாங்களுக்கான அனைத்து காரணங்களும் தெரியும் என்பதால், சற்று கவலையோடு காணப்பட்டான். ஏற்கனவே அவன் முன்னர் அவளுக்கு தேவைப்பட்ட நேரத்தில் நிற்கவில்லை என்பதால் தான் கோபத்தில் இருக்கிறாள். தற்போது மீண்டும் அவள் கண்களிலிருந்து மறைந்து நின்றால், அவளின் ஆத்திரம் பன்மடங்காக பெருகாதா என்று வியாக்கூலம் அடைந்தவனை, இருவரும் தேற்றினார்கள்.

அன்று மாலை ரம்யாவும் சிவாஞ்சலியும் சந்திக்க, ” என்ன பேசணும் ரம்யா? முக்கியமான விஷயம் சொன்னீங்க?”

“ஹரிக்கு பார்த்தி எப்படி பிரெண்ட்னு தெரியுமா?” சிவாஞ்சலி நெற்றியை சுருக்கினாள்.

“நானும் அவனும் ரொம்ப வருஷமா ஃப்ரெண்ட்ஸ். ஹரிக்கு எங்க ஃபிரெண்ட்ஷிப்க்காக கண்டிஷன் போட்டு தான் ஓகே சொன்னேன். அதுவுமில்லாம ஹரிக்கும் அவனை பிடிச்சுது.

ஆனா அவன் மேல எனக்கொரு சின்ன வருத்தம் இருக்கு. உங்களை பத்தி முன்னாடியே என்கிட்ட மூச்சு கூட விடவில்லை தெரியுமா? நான் என் ஆஃபீஸ் விஷயமா பெங்களூர் டிரெய்னிங் போயிருந்தப்போ, உன்னை உஷார் பண்ணிட்டான். இதை நான் அப்புறமா டீல் பண்ணிக்கலாம் இருந்தேன். ஆனா பாவம் பார்த்து சும்மா விட்டுட்டேன்.” என்ற ரம்யா, சிவஞ்சலியின் முகத்தை தீவிரத்துடன் நோக்கிவிட்டு பிறகு மீண்டும் பேசத் தொடங்கினாள்.

“என் ஃப்ரெண்ட்ங்கிறதுக்காக சொல்லல… அவன் ரொம்ப நல்ல பையன். பார்த்தி ஒரு பக்கா மேரேஜ் மெட்டிரியல்… அவனை அக்செப்ட் பண்ணும்மா பிளீஸ்… அவன் எங்களை ரொம்ப டார்ச்சர் பண்றான். நானும் ஹரியும் இப்பல்லாம் ரொமான்டிக் டயலாக் பேசறது இல்ல… அவனை எப்படி உன் கூட சேர்க்கிறதுன்னு பிளானிங் பண்றதுலேயே ஃபோன் பில்லு எகுறுது. பாரு இப்ப ஆர்டர் பண்ண டிஷ் கூட அவன் உனக்காக சொன்னது தான். பில் கூட கட்டிட்டான்… நீ என்ன சொல்ற அஞ்சலி?”

“கிளம்பலாம்… நான் ஹாஸ்பிடல் போகனும்…” என்றாள் சிவாஞ்சலி.

“அஞ்சலி… நான் என்ன சொல்ல வரேன்னு…”.

“எனக்கு மேரேஜ் மெட்டீரியல் வேணாம் ரம்யா… சப்போர்டிவ் மெட்டீரியல் வேணும். என்ன நடந்தாலும் பாதியிலேயே விட்டுட்டுப் போகாம, உனக்கு நான் இருக்கேன்னு சொல்லும், வெளிப்படுத்தும் பார்ட்னர் வேணும். எப்ப பேசுவாங்க, எப்ப காணாம போவாங்கன்னு பயந்து கவலையோடு வாழற வாழ்க்கை எனக்கு இனிமேலும் வேணாம்…” என்றவள், “பை ரம்யா” என்று சென்றுவிட்டாள்.

சிவாஞ்சலி பேசிய அனைத்தையும் பார்கிங் லாட்டில் நின்று ரம்யா ஃபோன் மூலம் தொடர்பில் கேட்டுக் கொண்டு இருந்தார்கள் பார்த்திபன் மற்றும் ஹரியும். சிவாஞ்சலி சென்றதும் பார்கிங் விட்டு உள்ளே வந்து, தன்னோடு வந்த ஹரியையும் மேஜைக்கு எதிரில் அமர்ந்திருந்த ரம்யாவையும் முறைத்தான். “நான் தான் சொன்னேன்ல.. இந்த ஐடியா வேணாம்னு… கேட்டீங்களா? என்ன சொன்னீங்க ரெண்டு பேரும்?! புத்தி காதலை மறக்கலாம்; இதயம் இல்லை… காதலை பத்தி வைரமுத்து என்ன சொல்லிருக்காரு, நா.முத்துகுமார் என்ன சொன்னாரு, ஹிப்ஹாப் ஆதி என்ன சொல்லிருக்காருன்னு மூளை சலவை செஞ்சது நீங்க தானே… இப்ப நான் என்ன பண்றது? ஜான் ஏறி முழம் சறுக்கிடுச்சு” என்றான்.

“எங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்? ஒன்னும் பிரச்சனை இல்ல… நாம வேற யோசிக்கலாம் ஸ்வீட் பன்.”

“இனிமே டைரக்டு டீலிங் தான்.” என்ற பார்த்திபன் அவளுக்கு அழைத்தான். முதல் ரிங்கிலேயே எடுத்தவள் வழக்கம் போலவே மௌன கொடியைக் உயர்த்தினாள்.

“சிவாஞ்சலி நாம மீட் பண்ணனும்… இப்படி டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு இல்லாம, நாம நேரடியாக பேச நினைக்கிறேன். நீ எப்ப ஃப்ரீயா இருக்கேன்னு சொன்னா, நான் வரேன்…” என்றான்.

“ம்ம் இப்பவே மீட் பண்ணலாம்… நான் ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கேன்… முடிஞ்சா அங்க வாங்க…”

பார்த்திபனும் தன் நேசத்தை அவளுக்கு ஒருமுறையாவது புரிய வைத்துவிடும் முனைப்போடு வண்டியை மருத்துவமனை நோக்கி ஓட்டினான். அவனுக்கு இனிமேலும் யாரையும் துணைக்கு அழைத்து தன் காதலை தன்னவளுக்கு உணர்த்த அவசியமில்லை என்று முடிவெடுத்தான்.

அவளை தேட அவசியம் இல்லாமல், மருத்துவமனை வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். அவனை கண்டதும், எழுந்தவள், கேன்டீன் அழைத்துச் சென்றாள்.

இருவரின் கையிலும், தேநீர் கோப்பையுடன் ஓரமாக நிற்க, முதலில் பேசியது பார்த்திபன் தான். “சிவாஞ்சலி, நீ என் மேல கோபப்பட எல்லா உரிமையும் இருக்கு. ஆனா உண்மையான விஷயத்தை தெரிஞ்சுக்க கூட நீ முயற்சி பண்ணல… என் மேலயும் தவறு இருக்கு. நானுமே வருவதை அப்படியே ஏத்துகிட்டு நீ பிரிஞ்சு போன காரணத்தை தெரிஞ்சுக்க எந்த ஸ்டெப்சும் எடுக்கல. நாம இப்படி ஆளுக்கொரு திசையில் மாறி போக காரணம் எது வேனா இருக்கட்டும்; அதை இப்ப சரி செய்ய நான் நினைக்கிறேன். அதுக்கொரு வாய்ப்பு மட்டும் கொடு.”

“அப்படியென்ன உலகமகா காரணம் இருக்கப் போகுது.? எனக்கு நடந்த கல்யாணம் தான் நம்ம பிரிவுக்கு காரணம்னு நினைக்கிறீங்களா? இல்ல என் கல்யாணத்தை நிறுத்த நீங்க வரலை அதனாலே நான் கோபமா இருக்கேன்னு நினைக்கிறீங்களா?” என்றவள், இல்லை என்பதாக தலையை இடவலமாக ஆட்டினாள். “மே பீ இதுவும் ஒரு ரீசன் அவ்வளவுதான்.”

“இல்ல எனக்கு புரியல… எதுவுமே தெளிவா பேச மாட்டியா? நாம பழகின காலத்திலிருந்தே இதே வேலையா வெச்சிட்டு இருக்க… நானா உன் மண்டைக்குள்ள என்ன ஓடுதுன்னு யோசிச்சு கண்டுபிடிச்சு என்னால இதுக்கு மேல குழம்ப முடியாது… நான் ஒன்னு நினைச்சா, அது எக்கு தப்பா போய் முடியுது… இன்னிக்கு உடைச்சு பேசு… நீயும் நானும் வெளியே சொல்லிக்கலன்னாலும் நமக்குள்ள காதலிச்சோம் தானே?… அந்த காதல் எங்க போச்சு?”

“காதலா?! அது காணாம போச்சு…”

“அப்படியா? அப்ப வெறுப்புக்கான காரணத்தை சொல்லு?”

“ஒருத்தரை வெறுக்கவும் காதல் இருக்கணும்… எப்ப நீங்க என்னை ஒதுக்கினீங்களோ, அன்னிக்கே உங்களை பத்தி நான் மறந்துட்டேன்… உங்க மேல இருந்த ஃபீலிங்ஸை ஒதுக்கி வெச்சுட்டேன்… இப்ப எனக்கு உங்க மேல எந்த வித அபிப்பிராயமோ, எதிர்பார்ப்போ கொஞ்சமும் இல்ல… அதனாலே உங்க நேரத்தை வீணாக்காமல் உங்க வழியைப் பார்த்துப் போங்க…” என்று கண் கலங்கி அவள் கூறவும், அவளது கண்களில் வழியும் கண்ணீரை சுட்டிக் காட்டினான் பார்த்திபன்.

“உன் கண்ணுல வழியிற கண்ணீர் எனக்கு வேற பதில் சொல்லுதே?… அதுல காதல் தான் எனக்கு தெரியுது”

“நீங்க ஏன் லவ்வு லவ்வுன்னு நச்சரிக்கறீங்க?”

“பிகாஸ் ஐ லவ் யூ டாம்மிட்…” என்று அவளின் தோள்பட்டையை அழுத்தமாகப் பிடித்து உரக்கக் கூறினான் பார்த்திபன். இருவரின் விழிகளும் ஒருவரை விட்டு ஒருவர் அகலவில்லை.

“இதுநாள் வரை நான் என் காதலை உனக்கு சொன்னதில்லை. எந்த பொண்ணுகிட்டயும் இப்படி பேசினதும் இல்ல. நீ மட்டும் தான் என் மனசுக்கு சொந்தக்காரி. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு என் மேல இருக்கும் கோபம் எல்லாம் மறைஞ்சு, எப்ப பிடிக்கும்னு எனக்கு தெரியல… எனக்கு பழசு எதுவுமே முக்கியம் இல்ல.” என்றவன் சில நொடிகள் அவள் கண்களை ஊடுருவி மனதில் பதிய வைக்க நினைப்பதுப் போல பார்த்தான்.

மீண்டும் பார்த்திபன் அவளது கைகளை இறுக்கமாகப் பிடித்து, “ஒருநாள் உனக்கு புரியும்; நம்மளை ஒருத்தன் உண்மையா லவ் பண்ணிட்டு இருக்கான்; நமக்காக காத்துட்டு இருக்கான்; அப்படி புரியும் போது, உன் வாழ்க்கையை எப்ப அவனோட வாழனும்னு தோணுதோ, எனக்கு ஒரு கால் பண்ணு. நான் என்ன வேலையில் இருந்தாலும், தூக்கிப் போட்டுட்டு வருவேன். எனக்கு எந்த குழப்பமும் இல்ல. நீ மட்டும் தான் எப்பவுமே என்னோட காதலி, மனைவி… உனக்கு அந்த சந்தேகமே வேணாம். நான் குடுகுடு கிழவனாக இருக்கும் போதும் நான் உன்னை மட்டும் தான் பார்ப்பேன்.” என்றான்.

அவளது கைகளை ஒருமுறை அழுத்தி விட்டு விடுவித்தவன், “நான் கிளம்புறேன்.” என்று நகர்ந்தான்.

“ஒரு நிமிஷம்… ஒரு வருஷத்துக்கு முன்னாடி, உங்க ஸ்டுடியோ வரேன்னு சொன்னேன், கையில ஒரு கிஃப்ட்; நீங்க என்ன பதில் சொல்லுவீங்க என்கிற எதிர்பார்ப்போடு… ஆனா எனக்கு உங்க முகத்தை பார்த்து சொல்ல தைரியம் இல்ல. நீங்க உங்க ஆஃபீஸ் அறையில் வெயிட் பண்ண சொன்னதும், அந்த கிஃப்ட்டை மட்டும் உங்க ஆஃபீஸ் டேபிளில் வெச்சிட்டு வந்துட்டேன்.

ஹாஸ்டல் வந்தும், எனக்கு உங்க பதிலை தெரிஞ்சுக்க ஆர்வம் இருந்துச்சு. ஒருவேளை நீங்க அந்த பரிசை பார்க்கவே இல்லையோ; பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்ன பண்றது இப்படி ஏகப்பட்ட பயம். சரி நேரடியாகவே கேட்டிருலாம்ன்னு கொஞ்சம் மனசில் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு திரும்பவும் உங்களை சந்திக்க மறுநாள் ஸ்டுடியோ வந்தேன்.” கண்களில் கரை புரண்டு ஓடியது கண்ணீர். பார்த்திபன் அவள் பின்னந்தலையை வருடினான்.

“அந்த சாயா நான் கொடுத்த கிஃப்ட்டை போட்டுட்டு இருந்தா. அதை நீங்க தராம அவளால எப்படி அணிந்திருக்க முடியும்?”

“திரும்ப திரும்ப இதை சொல்ல எனக்கு பிடிக்கல தான். ஆனா வேற வழியில்லை. நான் என்ன தந்தேன்? என்ன கிஃப்ட் அது? எனக்கு புரியல?” என்று அவன் கூறியதும், உறுத்து விழித்தாள்.

6 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் 18”

  1. CRVS2797

    அதானே…! அவனுக்கு என்ன கிஃப்ட் கொடுத்தான்னு எங்களுக்கே தெரியலை.
    இதுல அவனுக்கு எப்படி தெரியும்…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *