Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் 19 (இறுதி அத்தியாயம்)

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் 19 (இறுதி அத்தியாயம்)

அவளது உக்ரப் பார்வையில், பார்த்திபன் தன் இரு கைகளையும் உயர்த்தி சரணடைந்தான். பின்பு அவன் தன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு, “சத்தியமா அது என்ன பரிசுன்னு எனக்கு தெரியாது. நான் என்னோட ஆஃபீஸ் டேபிளுக்கு அன்னிக்கு போகவே இல்ல.”

“My love for you is like a circle — it has no beginning and will know of no end (ஒரு வட்டம் போன்றது உனக்கான என் காதல். அதற்கு ஆரம்பப் புள்ளியும் இல்லை முடிவும் இல்லை.)

இந்த வரிகளை நெஞ்சு பகுதியில் உட்புறமாக எம்ப்ராய்டரி பண்ணியிருந்தேன். அது வெளிப்புறத்தில் வெறும் வட்டவடிவமாக காட்சியளிக்கும். அதை நான் பார்க்கும் போது அந்த சாயா தான் அணிந்திருந்தாள். நான் உங்களுக்காக ப்ரெசெண்ட் பண்ணது அவ கைக்கு எப்படி போச்சு? அப்ப நீங்க என் காதலை மதிக்கவே இல்ல அப்படி தானே. இன்னிக்கு வந்து லவ் பண்றேன்னு சொன்னா நான் எப்படி நம்பறது?”

பார்த்திபன் திகைத்தான். “ஒரு வருடம் முன்பாக சாயா ஸ்டுடியோ வந்ததே நீ சொல்லித்தான் எனக்கு ஞாபகம் வருது. அவ என்னோட கிளையண்ட். அவளுக்கு போய் நீ கொடுத்ததை எப்படி கொடுப்பேன். முதல்ல நீ என் கையில் தரவே இல்ல. அன்னிக்கே நீ தெளிவா சொல்லியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதில்ல.?”

“ஓ… அப்ப நான் தான் தப்பா?” என்று எகிறினாள்.

“நான் அப்படி சொல்லல… எனக்கு யோசிக்க டைம் கொடு. அந்த பொக்கிஷம் எப்படி சாயாவிடம் போச்சுன்னு சொல்றேன்”

“தாராளமா யோசிங்க… நான் போறேன். என் பதில் இது தான்” என்று மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.

அன்றைய நினைவுக்காக மூளையை கசக்கவும் தயாராக இருந்தான் பார்த்திபன். சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவன், கண்டுபிடித்த தோரணையோடு பார்வதி அறையை நோக்கி நடந்தான்.

அங்கே பார்வதி சிவாஞ்சலியை நோட்டம் விட்டார். அவள் ஒரு நிலையில் இல்லை என்பதை யூகித்து, “சிவாஞ்சலி இங்க வா” என்றழைத்தார்.

பல நாட்கள் கழித்து பெயர் சொல்லி அழைத்த அன்னையை சந்தோஷமாக ஏறிட்டு கட்டிலின் அருகே சென்றாள். சுற்றி வளைக்காமல் பார்வதி, “பார்த்திபன் உன்கிட்ட பேசினாரா?”

“அம்மா… உங்களுக்கு எப்படி பார்த்திபனை தெரியும்?”

“எனக்கு தெரிஞ்சதுனால தான் உனக்கு கல்யாணம் நடந்துச்சு. நான் அஞ்சனாவை உதவி செய்ய விடாமல் தடுத்தது எல்லாமே நடந்துச்சு. எனக்கு தெரிஞ்சு அந்த தம்பி தப்பு செய்யல. எனக்குள்ள ஒரு பயம். எங்கே என் வாழ்க்கை மாதிரியே உன்னோட வாழ்க்கையும் காதலால் வழி மாறிடுமோன்னு. முட்டாள்தனம் தான்… ஆனா அன்னிக்கு எனக்கு சரின்னு பட்டுச்சு செஞ்சுட்டேன். இனிமேலும் பொய் சொல்லி, அந்த தம்பியை விரட்டாதே…” என்றார்.

“உங்களால் இல்லம்மா… எங்களுக்குள்ள ஏற்கனவே மனஸ்தாபம் தான். நீங்க காரணம் இல்ல. எனக்கு அவர் மேல விருப்பமும் இல்ல. நீங்க தேவையில்லாம குழப்பிக்காதீங்க.”

“நான் சொல்றதை கேளு”

“அம்மா, டாக்டர் இயன் மருத்துவத்துக்கு நாளைக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுத்திருக்காங்க… பதினொரு மணிக்கு போகனும்.” என்று பேச்சை மாற்றினாள். பார்த்திபனை பற்றி பேசினால், எங்கே தன் பலவீனம் வெளிப்பட்டு விடுமோ என்று உள்ளூர அஞ்சினாள்.

“உன்னை பத்தி எதுவும் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா? இப்ப நீ காது கொடுத்து கேட்கலன்னு சொன்னா, நான் டிரீட்மெண்ட் எடுத்துக்க மாட்டேன்.” என்று பார்வதி மிரட்டினார்.

“ஏன்மா படுத்தரீங்க? நான் ரொம்பவே சோர்ந்துப் போயிட்டேன். இனிமே நானும் மிரட்டதான் போறேன்… நீங்க சிகிச்சை எடுத்துக்காட்டி நான் கண் காணாத இடத்துக்கு போயிடுவேன். உங்களுக்கு இருக்கிற பிடிவாதம் எனக்கும் இருக்கு” என்று சிவாஞ்சலியும் பயமுறுத்தினாள்.

பார்வதி உடனே அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கி, தொகுப்பில் தேடி ஒரு காணொளியை அவள் முன் நீட்டினார்.

“இதை இவ்வளவு நாளும் பத்திரமா பாதுகாத்து வெச்சிருக்கியே; எதுக்கு? ஆசையே இல்லாமலா? இது எனக்கு எப்படி தெரியும் பார்க்கரீயா? உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு எப்பவுமே முக்கியம் தான். அதிலும் கடந்த ஒரு வருட காலமாக இன்னும் கூர்ந்து கவனிக்கிறேன்” என்றார்.

அந்த காணொளியில், சிவாஞ்சலி பிரத்யேகமாக பார்த்திபனை எண்ணி பதிவு செய்தது. அவளின் திருமணத்தன்று, பார்வதிக்கு தெரியாமல், அவளின் மனதை பதிவு செய்திருந்தாள்.

“ஐ மிஸ் யூ பார்த்தி… உங்களுக்கு எவ்வளவோ தடவை கால் பண்ணியும் நீங்க எடுக்கவே இல்ல. உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? நீங்க நல்லா தானே இருக்கீங்க? ஒரு தடவை உங்க குரலை கேட்க தோணுது. உங்களோட பழகின நாளில் எத்தனையோ தடவை உங்க குரலை கேட்கிறதுக்காகவே கால் பண்ணிருக்கேன். அதுக்கு பல காரணம் தேடி பல்ப் வாங்கியிருக்கேன். இன்னிக்கு நான் இன்னொருத்தர் மனைவியாக போறேன். என்னால அதை தடுக்க முடியல. அம்மாவை மீறி வரவும் எனக்கு வழி தெரியல. நீங்க எனக்காக இங்க வந்து கூட்டிட்டுப் போனா நல்லாருக்கும். ஆனா நீங்க அஞ்சனா அழைப்பையும் எடுக்கலையே… நான் உங்களுக்கு முக்கியமே இல்லையா பார்த்தி. ஏன் பார்த்தி ஏன்? நான் கொடுத்த கிஃப்ட் கூட நீங்க மதிக்காம தூக்கிப் போட்டுட்டீங்க. ஏன்? ஆனாலும் என் மனசு உங்களை தான் தேடுது?! வலிக்குது பார்த்தி… மனசு ரொம்ப வலிக்குது… என்னால தாங்க முடியல… நீங்க வர மாட்டீங்களா? உங்களை மறக்க முடியுமான்னு தெரியல பார்த்தி…

மனசுக்கு பிடிச்சவங்களுக்கு குட்பை சொல்றது கொடுமை பார்த்தி. அதை தான் நான் இப்ப அனுபவிச்சிட்டு இருக்கேன். அமையப் போற வாழ்க்கையை என்னால ஏத்துக்க முடியுமா தெரியல. ஆனா அதுக்கு நான் முயற்சி பண்ணுவேன். மனசுக்குள்ள நிறைய முறை சொல்லியிருக்கேன். பட் இப்ப ஒன் லாஸ்ட் டைம் சொல்றேன்… ஐ லவ் யூ பார்த்தி… குட்பை” அழுகையும், ஆற்றாமையும் சேர, காணொளி பதிவு செய்து அதை கடவு குறியீட்டுடன் சேமித்து வைத்தாள். இன்றும் அவள் அதே கண்ணீரோடு பதிவை காண்கிறாள். அவள் அறியாதது பார்வதிக்கு தெரியும் என்பது தான்.

“இதுக்கு மேல நடிச்சு உன்னை நீயே ஏமாத்திக்காத… உனக்கான வாழ்க்கையை இனி சந்தோஷமா வாழ வேண்டிய தருணம் சிவா.” என்றார் பார்வதி.

“அம்மா… எனக்கு மட்டும் ஆசையில்லையா… என்னால பார்த்தியை மறக்க முடியாது தான். அதுக்காக கல்யாணமும் பண்ண முடியாது. ஒருவேளை எல்லாரும் சொல்ற மாதிரி என் ராசி அவருக்கும் அவரோட குடும்பத்துக்கும் கெடுதல் ஆகிடுச்சுன்னா, நான் என்ன செய்யறது? என்னால அதை தாங்க முடியாது… வேண்டாம்மா நான் இப்படியே இருந்துக்கறேன்…” என்று அழுதாள்.

அப்போது அங்கே வந்த பார்த்திபன், “பைத்தியக்காரத்தனமான பேச்சு இது. நீ எனக்கு இல்லாம போனா, நான் சந்தோஷமா இருப்பேன்னு நினைக்காத… சரி நீ எனக்கு இல்லாம போயிட்டா, நானும் தனியா இருந்திடறேன்; அப்ப நம்ம ரெண்டு குடும்பமும் சந்தோஷமா இருக்குமா என்ன?” சிவாஞ்சலி கண்களை விரித்தாள்.

“இன்னொரு விஷயம், எனக்கும் சாயாக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்னிக்கு அவளோட ஷூட் முடிச்சிட்டு போறப்ப ட்ரெஸ் மேல ஜுஸ் கொட்டிடுச்சு. என்னோட ஆபீஸ்ல போய் ஏதாவது ட்ரெஸ் எடுத்து கொடுக்க என்னோட அசிஸ்டன்ட்கிட்ட சொல்லியிருந்தேன். அவன் நீ கொடுத்த கிஃப்ட்டை அவகிட்ட கொடுத்தான்னு சத்தியமா எனக்கு தெரியாது. என்னை நம்பு அஞ்சு. யூர் மை ஒன்லி லவ்.” என்றான். அவளுக்கு அனைத்தையும் தெளிவுபடுத்தி விட வேண்டும் என்று உறுதியாக இருந்தான்.

அவனே எதிர்பாராதது, அவனுடைய மொத்த குடும்பமும் அந்நேரத்தில் மருத்துவமனைக்கு வருமென்பது தான். கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பியவன் முன், அவனின் தம்பி அமலன், “ஹலோ அண்ணி நான் அமலன்” என்று சிவாஞ்சலி பார்த்துச் சொன்னான்.

பின்பு, “உங்களோட வருங்கால மாமியார் மாமனார், தாத்தா, பாட்டி எல்லாரும் உங்களை பார்த்தேயாகனும்னு வந்திருக்காங்க… உள்ளே வாங்க… எல்லாரும் அங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி” என்று அமலன் சிவாஞ்சலி மற்றும் குடும்பத்திடமும் கூறி, சூழ்நிலையை சுமூகமாக்கினான். சிவாஞ்சலி பார்த்திபனை பார்த்துவிட்டு விக்கித்து நின்றாள். அவளுக்கு நா எழவில்லை.

“இதுக்கும் நான் பொறுப்பில்லை” என்று பதறிய பார்த்தி, அமலனிடம், “நீ இங்க என்னடா பண்ற?” என்றும் எகிறினான்.

“அண்ணா… எல்லாம் அம்மா ஐடியா தான்… நான் இல்ல…” என்றான் அமலன்.

கூடவே உள்ளே வந்த ரம்யா, “ஆமா அஞ்சலி… உனக்கு தெரியுமா பார்த்தி உன்னை ரொம்ப லவ் பண்றான். முதல் தடவை உன்னை பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குனு சொன்னேனே… அது பார்த்தி வீட்டுல உன் ஃபோட்டோ பார்த்தால தான். அவன் ஏதோ பொக்கிஷம் மாதிரி கவருக்குள்ள போட்டு பாதுகாத்து வெச்சிருக்கான். கல்யாணத்துக்கு அப்புறம் அவனை அந்த போட்டோசை காட்டச் சொல்லு. கலைநயம் கொட்டும்…” என்றாள் கண்ணடித்து. அவள் கூறிய விதத்தில் சிவாஞ்சலியின் முகத்தில் புன்னகை படர்ந்தது. ஏற்கனவே பார்வதி பேசியதிலும் அவள் பதிவு செய்திருந்த காணொளியை பார்த்ததும் சற்றே இளகினாள் சிவாஞ்சலி. இப்போது ரம்யா கூறிய விதத்தால், மேலும் தளர்ந்தாள்.

அப்போது உள்ளே வந்த ஜானகி சிவாஞ்சலி கையைப் பற்றி, “இங்க பாரும்மா… எல்லாரும் ஒன்னா வந்து உன்னை வற்புறுத்துவதா நினைச்சிக்காத… எங்களை நம்பி நீ தாராளமா பார்த்தியை கல்யாணம் பண்ணிக்கலாம். உனக்கு இன்னொரு குடும்பம் கிடைக்கும்.” என்றார்.

சிவாஞ்சலி பார்வதியை பார்க்க, அவரும் தலையாட்ட, பாட்டி வேல்விழி அவளை ஆதுரமாக தலையை வருடினார். “உன்னோட கடந்த காலத்தின் சோகமும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும் நிகழ்காலத்தின் மகிழ்ச்சியைக் கெடுக்க விட்டுடாதம்மா”

சிவாஞ்சலி, குழுமி இருந்த அவனின் குடும்பத்தை ஏறிட்டவள், பிறகு எதிரே நின்றிருந்த ஜானகி மற்றும் வேல்விழியை சுற்றிச் சென்று அடுத்து ஒரு எட்டு பார்த்திபனை நோக்கி வைத்தாள். அவள் அடுத்த எட்டு வைப்பதற்குள், அவன் அவளிடம் வந்துவிட்டான். அவனின் செயலில் சுற்றியிருந்த அனைவரின் முகத்திலும் சிரிப்பு படர்ந்தது.

சிவாஞ்சலி எதையும் பேசும் முன், அவளின் உள்ளங்கையைப் பற்றி, “இனிமேல் உன்னை யாரும் அழ வைக்க முடியாது. கண்ணுல தண்ணியோட பார்த்தா, உன் கண்ணுல நான் கலங்கலா தெரிவேன்…. சரியா?! அப்புறம்… இப்ப நான் உனக்கு புரியும்படி சொல்றேன் ஐ லவ் யூ” என்றதும், சிவாஞ்சலி சிரிப்போடு தன்னவனை அணைத்துக் கொண்டாள்.

மீண்டும் அவன், “எனக்கு ஒரு சின்ன உறுத்தல் இருக்கு. நீ இன்னும் நேரடியாக உன்னோட காதலை சொல்லல. அப்புறம் நீ தந்த கிஃப்ட் என் கைக்கு வரவே இல்ல. திரும்பவும் உன் கையால செஞ்சு அதை எனக்கு நேரடியாக நீ தரணும். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு தடவை உன் காதலை என்கிட்ட சொல்ல முடியுமா?” என்று கேட்டான் ஏக்கம் நிறைந்த குரலில்.

அவளோ அமைதியாக அவனை ஏறிட்டுப் பார்க்கவும், அவள் சொல்லப் போவதில்லை என்று எண்ணினான்.

சிவாஞ்சலி, சற்று எம்பி நின்று அவன் காதருகில் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “சொன்னா மட்டும் தான் காதல் புரியுமா பார்த்தி?”

“ஐயோ ஆமா தாயே… இதுக்கு மேலயும் என்னால பொறுத்துக்க முடியாது…” என்று அவன் கைகூப்பவும்,

“இயல்பா இனிமையா நடப்பது தான் காதல்… அது எனக்குள்ளும் உங்களோடு பழகினதும் வந்துச்சு… இப்ப வரைக்கும் உங்க மேல வெச்ச லவ் தான் எனக்கு பூஸ்ட்… சீக்ரெட் எனர்ஜி… அவர் ஃபீலிங்க்ஸ் ஆர் மியூச்சுவல் பார்த்தி (our feelings are mutual)” என்றாள் இதழில் பூத்த வெட்கப் புன்னகையோடு. அவளின் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.

அவர்களுக்குள் பூத்த காதல் அவர்களை ஒன்றிணைக்க, இருவரின் குடும்பமும் அவர்களை திருமணம் என்னும் பந்தததில் சேர்க்க, நாள் குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டார்கள்.

முதலில் நிச்சயத்தை முடித்த ரம்யா ஹரி ஜோடிக்கு முன், பார்த்திபன் சிவாஞ்சலியின் திருமணம் நடந்தது. இதில் பெரு மகிழ்ச்சிக்கு உரித்தானவன் உடன்பிறவா அண்ணன், அவளின் மாமன் மகன் கௌதம் தான். அவனின் உவகைக்கு அளவில்லை.
திருமணத்தன்று கௌதமை, ஹரியை ஆரத்தழுவி தன் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டான் பார்த்திபன்.

அப்போது ஹரி, “டேய் விடுடா…. இனிமே அஞ்சலியை போய் கட்டிக்கோ டா…. எங்களை ஆள விடு… ஒருவழியா உன் கல்யாணம் முடிஞ்சுது… இருக்கிற கொஞ்ச நாளில் நாங்க காதலர்களாக இருக்கோம்” என்று ரம்யாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

அனைவரின் முகத்திலும் உண்மையான மகிழ்ச்சி பொங்கியது. இன்பமான உறவாக இனிக்கவும் வாழ்வு சிறக்கவும் அவர்களை குடும்பம் மொத்தமும் வாழ்த்தியது.

வாழ்க்கைத் துணை அவசியமா அவசியமற்றதா என்றக் கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், துணை என்று ஒருவரை கரம் பற்றினால், அப்போது காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல அது ஒரு உணர்வு (love is not just a word it’s an emotion).

நம் வாழ்க்கைக்கு ஒரு பெண்/ஆண் அல்லது மனைவியை/கணவனைப் பெறுவது ஒரு சாதனை அல்ல. இதயத்திற்கு துடிப்பு தேவை என்பது போல, அவள் அல்லது அவன் இன்றியமையாததாக இருக்க வேண்டும்.

சுபம்.

8 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் 19 (இறுதி அத்தியாயம்)”

 1. CRVS2797

  வாவ்…! ரொம்ப அழகான கருத்து அன்ட் அழகான நட்பு, அழகாக காதல், அருமையான குடும்பம், ஆத்மார்த்தமான காதல்.

  1. Avatar

   தொடர்ந்து கதையை வாசித்து உங்களின் கருத்துகளை பதிவிட்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

   நன்றி 😍

 2. Kalidevi

  Yes correct kadaisiya sonna varthai periya unmai iruku kandipa oru nalla purithala kadhala ennaikum alaga valakum superb congratulations

  1. Avatar

   தொடர்ந்து கதையை வாசித்து உங்களின் கருத்துகளை பதிவிட்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

   நன்றி ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *