Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 4

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 4

ஒரு வருடமாகவே அவனின் திருமணம் பற்றிய பேச்சு வீட்டில் அடிப்படும். ஆனால் சமீபத்தில் பெரியவர்களின் தீவிரம் கண்டு பார்த்திபன் நடுங்கித் தான் போனான். அதற்காகவே அவனது வருகையைக் குறைத்துக் கொண்டான். வாராவாரம் தலைக் காட்டுபவன், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆகி, இப்போது மாதம் ஒருமுறை என்று அவனது வரவு வற்றிப் போனது. அடிக்கடி ஃபோனில் பேசி நலம் விசாரித்துக் கொண்டு இருந்தான் ஆனாலும் அவன் வீட்டாருக்கும் அவனுக்கும் நேரில் கொஞ்சி மகிழ்வதுப் போல இல்லை.

இதெல்லாம் அவனின் கல்யாணம் என்ற ஒரு சொல்லில் அடங்கியிருப்பதாக பார்த்திபன் நினைக்கிறான்.

வண்டியை நிறுத்திவிட்டு, மதில் சுவர் கேட்டை திறக்க, வீட்டு வராண்டாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த இரத்தினமூர்த்தி எட்டிப் பார்த்தார்.

“வாடா ராஸ்கல்.. இப்ப தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா? எவ்வளவு நாளாச்சு டா உன்னை பார்த்து” என்று வினவினார் தாத்தா இரத்தினமூர்த்தி.

“செம்ம வேலை தாத்தா”

“எப்பவுமே இதே காரணத்தை சொல்ற.. வேலம்மா யாரு வந்திருக்காங்க பாரு..” என்று உள்ளே குரல் கொடுத்தார்

“அம்மா எங்க தாத்தா?”

“உங்க அம்மா அமலோட ஸ்கூல் பேரன்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் போயிருக்காங்க.. உன் அப்பா..” அவர் முடிக்கும் முன்னரே வேல்விழி அவர்கள் அங்கே வந்துவிட்டார்.

“குட்டிப்பா வந்துட்டியா… இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?.. இந்தா காஃபி குடி” என்று பார்த்திபனை காண வரும்போதே கையில் காஃபி டம்ளர் ஏந்தி வந்தார்.

“என் வேலம்மா போட்ட காப்பியை குடிக்க கொடுத்து வெச்சிருக்கணும்” என்று ஓரக்கண்ணால் தன் சரிபாதியை நோட்டம் விட்டபடி மோவாயைத் தாங்கினார் இரத்தினமூர்த்தி.

“இப்ப எதுக்கு சந்துல சிந்து பாடறீங்கன்னு எனக்கு தெரியாதா.. நீங்க எத்தனை ஐஸ்கட்டி வெச்சாலும் ஒன்னும் நடக்காது” என்று தோளை இடித்தார் பாட்டி.

“பாவம் பாட்டி தாத்தா.. காஃபி தானே…” என்று பார்த்தி சிபாரிசு கரம் நீட்ட,

“நீ சும்மா இரு பார்த்தி.. ஏற்கனவே மூன்று முறை காஃபி அவருக்கு கிடைச்சாச்சு. வயசு என்பதாகுது இன்னும் உடம்பை அக்கறையா பார்த்துக்க ஆள் வரணுமாக்கும்” என்று நொடித்தார்.

அதே நேரம், பார்த்திபனின் தந்தை நன்மாறன் உள்ளே நுழைய, பார்த்திபனிடம், “எப்படா வந்த? எப்படி இருக்க? ஏன் இவ்வளவு நாள் இங்க எட்டிக் கூடப் பார்க்கலை?” என்று கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவனது தாத்தா இடைப்புகுந்து, “கொஞ்சம் மூச்சு விடுடா.. நீ வரிசையா கேள்வியை அடுக்கிட்டே போனால் என் பேரன் எப்படி பதில் சொல்லுவான்.?” என்றார்.

“மூன்று கேள்விகள் தானே கேட்டேன்.. அதுக்கு அவனால் பதில் சொல்ல முடியாதா?.. அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கறீங்க ப்பா. விட்டா மூணு கண்ணா வாடான்னு பயம் காட்டி இடுப்பில் வைத்து சோறு ஊட்டுவீங்கப் போல” என்று நன்மாறன் அங்களாய்க்க, பக்கென சிரித்து விட்டான் பார்த்திபன்.

அவன் தலையில் தட்டி, “இந்நேரம் நம் தெரு முனையில் ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தால், சீசனுக்கு கல்யாணம் காது குத்துன்னு விழாக்களுக்கு ஃபோட்டோ பிடிச்சு நாலு காசு கல்லா கட்டியிருக்கலாம்.. குறைந்தபட்சம் நாளுக்கு பத்து பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோ எடுக்கலாம்.. ஆனா இவன் ராத்திரி பகல் நேரம் காலம் இல்லாம பொண்ணுங்களை ஃபோட்டோ எடுக்கிறேன், துணிமணியை ஃபோட்டோ எடுக்கிறேன் என்று சுத்தறான்..” என்று அவர் தொடங்கவும்,

“அப்பா நீங்க சொல்றதை விஷயம் தெரியாதவன் காதுல விழுந்தா, என்னை பைத்தியமா இவன் என்று கேட்டுட்டு போவாங்க” என்று சிரித்தான்.

“உன் வேலை எனக்கும் தானப்பா புரியல” என்று அவனது தந்தை நக்கலாக கூறவும்,

“என்னை போன்ற புகைப்பட கலைஞனுக்கு அழகைக் கண்டறியும் கண்கள் இருக்க வேண்டும். அது எல்லா மனிதனுக்கும் இருக்கும்ன்னு சொல்ல முடியாது. என் திறமை என்பது வழக்கமான ஸ்டுடியோவின் எல்லைக்குள் நின்றுவிடாது. என் ஸ்டுடியோ வேற மாதிரி..” என்றான் அவனும்.

“வாய் துடுக்குத்தனம் குறையுதா பாரு” என்று இதழ் வளைத்து குறுநகையோடு சொன்னவர், “உனக்கு பிடிச்ச விஷயத்தை தெளிவா யோசிச்சு உன் மனசுக்கு ஒப்பி செய் பார்த்தி. நான் இதுக்கு முன்னாடி சொன்னது ஒரு அப்பாவா என்னோட ஆதங்கம்.. அது மாறாது. ஆனா இப்ப சொன்னது ஒரு நண்பனோட பார்வையில்!” என்றார்.

“எனக்கு தெரியும் ப்பா”

சற்று நேரத்தில் அவனது அம்மா தம்பி இருவரும் வந்துவிட, வீடே குதூகலமாக மாறியது.

ரம்யாவின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் பற்றிய பேச்சும் நிகழ, அவனது மணக்கோலத்தை காணும் ஆவல், ஆசை என்று பெரியவர்கள் அவனை சூழவும், அவர்களை சமாளித்து, பேச்சு மாற்றி அப்போதைக்கு தப்பித்தோம் என்று நிம்மதியற்ற மூச்சை உடல் மொழியாக வெளியே காண்பித்தான்.

அடுத்த நாள் வேலை விஷயமாக, ரன்வே நிகழ்ச்சிகள் மற்றும் பேஷன் வாரம் உட்பட ஃபேஷன் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் அவனுக்கு வேலை இருக்க, மும்பை செல்ல வேண்டியிருந்தது.

வீட்டாரிடமும், ரம்யா மற்றும் ஹரியிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டான். ரம்யா, “என் நிச்சயதார்த்தம் நடக்கும் போது நீ அங்க இல்லன்னு வையேன்; உன்கூட ஜென்மத்துக்கும் பேச மாட்டேன்” என்றாள்

“ஓ.. ரியலி” என்று புருவத்தை தூக்க, அவள் முகத்தைத் தூக்கி வைத்தாள்.

“நோ மியா இந்த முகம் உனக்கு நல்லாயில்ல.. என் மியா எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்.. கவலைப்படாத உன் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயத்தை நான் மிஸ் பண்ணவே மாட்டேன்” என்று ஆறுதல் அளித்து மும்பைக்கு பறந்தான்.

அங்கே அவன் எதிர்பார்க்காமல் அறிந்த விஷயம், அவனை நிலைகுலைய வைத்தது.

மும்பையில் ஆண்கள் மற்றும் பெண்கள் மாடலாக நடந்து வர, அவர்களை ஒளிப்படக் கருவியின் வில்லை வழியாக குவியத்தில் கொண்டு வந்தான் பார்த்திபன்.

வெறும் ஒரு நாள் வேலை அன்று.. முன் கதை சுருக்கங்கள் பல கடந்து, அரங்கத்தில் மாடல் வந்து செல்லும் வரை இருக்கும். அவனது ஏஜென்ட் அவனுக்கு வேலைகளை பட்டியலிட்டு அமைத்துக் கொடுத்தாலும் அவன் மென்மேலும் முன்னேறுவது அவனின் உழைப்பில் தான்.

ஒரு பத்திரிகை அல்லது ஆவணப் பாணியில் என்ன அணிந்திருக்கிறார்கள் அல்லது எப்படி அவர்களை காட்சியில் எடுத்துச் செல்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் மாதிரிகள் நடைபயிற்சி அல்லது கேட்வாக் செல்லும் போது அவர்களின் கண்ணசைவு, பாவனை என்று மிக நேர்த்தியாகவும், வேகமாகவும், லாவகமாக கைப்பற்றும் கலை.

பேஷன் ஷோக்கள் முடிந்த பின்னரும், அதற்கான திருப்பங்கள் மிக விரைவாக இருக்கும். அச்சு காலக்கெடுவை உருவாக்கவும், வடிவமைப்பாளர்கள் மற்றும் அவர்களின் புதிய பாணிகளை விரைவாகக் காட்டவும் வாய்ப்புகள் அமையும். இது ஒரு நல்ல பணிப்பாய்வு மிகவும் முக்கியமானது. எடுக்கும் புகைப்படங்கள் எந்த வடிவத்தில் எடுக்கப்பட்டது என்று தெளிவாக இருக்க வேண்டும். ஒருவேளை RAW இல் படமெடுத்தால், அதனை JPEG-க்கு ஏற்றுமதி செய்ய வேண்டியிருக்கும்; காட்சிகளை விரைவாகச் சென்று சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் ஒரு நல்ல வரிசையாக்கம் மற்றும் பட்டியல் அமைப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாடல் அல்லது ஆடையைத் தேடி ஒரு பத்திரிகை அல்லது வடிவமைப்பாளர் புகைப்படக் கலைஞரை தேடி வரும்போது இது எளிதாக்கும். சரியான ஒன்றைத் தேடும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களைப் பார்த்து அவர்களின் நேரத்தை வீணடிக்க யாரும் விரும்புவதில்லை.

அப்படி தான் அன்றும் அரங்கில், அவன் படமியை (கேமரா) பிடித்து காட்சிகளை படமெடுக்க, ஒரு நொடி அவனது புகைப்படம் குவியமில்லா காட்சி ஆகிப் போனது. அதில் ஒரு ஆணும், பெண்ணும் அவனின் கவனத்தை ஈர்த்தனர்.

கண்ணை படமி வில்லையிலிருந்து அகற்றி தன் கண்வில்லையில் அவர்களை கண்டான். அந்த ஆண் அவனுக்கு பரிச்சயமில்லை.. ஆனால் அப்பெண்ணோ!!?

அவள் ஒரு மாடல் தான். ஆனால் அவன் மனதில் வியாபித்திருப்பவளோடு தொடர்புடையவள்.

‘இவளை கேட்டால், அவள் எங்கே இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? என்று தெரிந்துக் கொள்ளலாமே’ என்று நினைத்தான்.

அதனால் முதலில் ஃபோட்டோ எடுப்பதை கவனிப்போம் என்று அவனின் சலனங்களை மூட்டைக் கட்டி ஓரமாக தூக்கிப் போட்டான். ஆனால் இன்று அவளோடு பேசிவிட வேண்டும் என்று விடாப்பிடியாக நினைத்தான்.

அதன் படியே நள்ளிரவு நேரம் பார்ட்டி நடக்க என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அவள் அங்கிருந்து கிளம்பும் முன் ஒருவழியாக அவள் எதிரே சென்று நின்றான் பார்த்திபன்.

தன் எதிரே திடிரென வந்து நின்றவனைக் கண்டு திடுக்கிட்டாள் அவள், அஞ்சனா.

“ஹாய் அஞ்சனா” என்றான். முதல்முறையாக அவனின் சொந்த விஷயம் சம்பந்தமாக அஞ்சனாவிடம் பேசுகிறான் பார்த்திபன்.

அஞ்சனா இதழ்களை விரித்து, “ஹாய் பார்த்தி.. நீ இவ்வளவு வேகமாக செயல்படுவாய் என்று நினைக்கவில்லை. எப்படியும் நாளைக்கு என்னை தேடி வந்து பேசுவாய் என்று நினைத்தேன்.. “

“நான் இங்க இருக்கேன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?”

“தெரியும்! இந்த தொழிலில் பார்த்தியின் பெயர் எவ்வளவு பிரபலம் என்று எனக்கு தெரியும்.. அதுவும் இல்லாம, நான் அரங்கில் நடக்கும் போதே உன்னை பார்த்துவிட்டேன்.” என்று சிரித்தாள்.

அவனோ மேற்கொண்டு பேச தயங்க, “அப்புறம் எப்படியிருக்க? லைஃப் எப்படி போகுது?” என்று கேட்டாள் இலகுவாக!

“ம்ம் போகுது.. நீ எங்க கொஞ்ச நாளாக எந்த நிகழ்ச்சியிலும் காணும்.. ” என்று வினவினான்.

“ஹான்… அது மாடலிங் டிரெய்னிங்.. அடுத்த கட்டத்துக்கு போகனும்..” என்றாள் முகத்தை வேறு புறம் திருப்பி. அவள் குரல் இறங்கியும் போனது.

ஆனால் அவனுக்கு இருந்த உறுத்தலில், அவனால் அதை கண்டுக் கொள்ள இயலவில்லை.

சிறிது நேரம் சுற்றியிருந்த சூழ்நிலையை கவனமின்றி ஆராய்ந்தார்கள் இருவரும். இருவருமே வெவ்வேறு எண்ணத்தில் மூழ்கியிருக்க, ஆனால் அந்த எண்ணத்தின் மையப்புள்ளி ஒருவர் தான். அவள் சிவாஞ்சலி

முதலில் மீண்டும் பேச்சை தொடங்கினான் பார்த்திபன். அக்கறையின்றி சாதாரனமாக கேட்பதுப் போல, “அப்புறம் உன் உறவுப் பெண் சிவாஞ்சலி எப்படி இருக்கிறாள்?” இந்த கேள்வியை அவன் கேட்கத்தான் அஞ்சனாவும் காத்திருந்தாள் போல!

“இதை தானே நீ முன்னாடி கேட்டிருக்க வேண்டியது? அஞ்சலியை பற்றி கேட்கத்தான் நீ என்னை தேடி வருவாய் என்று எதிர்பார்த்தேன்” என்று அஞ்சனா கிண்டலடிக்கவும், அவன் முகம் சிறு வெட்கத்தில் சுழித்தான் உடல் நிதானம் இன்றி நெளிந்தது.

அவள் அவ்வப்போது ஆங்காங்கே தென்படும் மனிதர்களிடமும் பேச்சு கொடுத்து சிரித்து, சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல நடந்தாள்.

ஆனால் பார்த்திபனின் உணர்ச்சிகள் வேறு நிலையில் இருந்தது. பெயருக்கேனும் உதட்டை இழுத்து வைத்துக் கொள்ளக் கூட அவனுக்கு அப்போது தோன்றவில்லை.

“சொல்லு பார்த்திபன் என்ன பேசிட்டு இருந்தோம்?” என்று அவன் பக்கம் திரும்ப, அவனோ அவளை உறுத்து விழித்தான்.

தன் கூந்தலைக் கோதி விடுவது, ஃபோனில் மணி பார்ப்பது என்று அவன் கண்ணை நோக்காமல், கழுவுற நீரில் நழுவுற மீனாக அங்கிருந்து கிளம்ப சமயம் தேடினாள்.

அவனை அஞ்சனா தட்டிக் கழிக்க, மிகப் முக்கியமான காரணம், அவளின் குற்றவுணர்ச்சி தான். ஆம் குற்றவுணர்ச்சி அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் பார்த்திபன் அதை அறியாமல், “நான் சாதாரனமாக தான் கேட்டேன் அஞ்சனா!? அவளை நான் அன்று ஃபோட்டோஷூட் செய்து லுக்புக் புகைப்படம் எடுத்த நாள் தான் அவளை பார்த்தேன். அந்த புகைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்கு நான் ஏற்பாடு செய்யும் வேலைகளில் இருக்க, என்னிடம் ஏதோ கூற வேண்டும் என்றாள். நான் அவளது அழைப்பை தட்டிக் கழித்தேன். ஆனால் அதன் பிறகு அவள் எனது எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று மிகவும் எதிர்பார்ப்பை கண்களில் தேக்கி வினவினான் பார்த்திபன்.

அவனது பேச்சை செவி சாய்த்த அஞ்சனா என்ன நினைத்தாளோ, “சிவாஞ்சலிக்கு திருமணம் ஆகி விட்டது. அவளின் கல்யாணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது” என்று போட்டுடைத்தாள் அஞ்சனா.

7 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 4”

  1. CRVS 2797

    ஓ மை காட்! இதுக்கூட தெரிஞ்சுக்காமலா இத்தனை நாள் இருந்திருக்கான்.

  2. Avatar

    அருமை.

    சிவாஞ்சலி தான் அவன் விரும்பும் பெண்ணாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அஞ்சனாவால் ஏதோ இடர்பாடு உருவாகி இருப்பதாகவும் தெரிகிறது.

    அவளுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகி விட்டதாம் பார்த்தி. ஆக, லட்டு உனக்கு இல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *