Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 5

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 5

அஞ்சனா கூறிய தகவல்கள், அவனுக்கு வலிகள் நிறைந்ததாக தோன்றியது. மின்னல் தாக்கியதா, இடி இறங்கியதா குண்டு வெடித்ததா என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு அவனின் எண்ணம் முழுவதும் ஒரே வார்த்தையில் ஸ்தம்பித்து, உணர்ச்சிகள் யாவும் ஏமாற்றத்தின் பிடியில் நின்று வெறும் கண்கள் மட்டும் அவனின் வலியை மௌனமாக பிரதிபலித்தது.

அஞ்சனா மேற்கொண்டு எதுவும் பேச இயலாமல், பார்த்தியிடம் விடை பெறுவதற்குள் அவளை அவளது நட்பு இழுத்துச் சென்று விட, அவன் தனித்து விடப்பட்டான்.

அப்போது மூளையும் மனமும் ஒரு சேர மாற்றி மாற்றி இடித்துரைத்துக் கொண்டது. ‘பார்த்தி, சிவாஞ்சலி பற்றி நினைக்க வேண்டாம், அவள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று உன்னை நீ தேற்றிக் கொண்டாய் அல்லவா? பின்னே எதற்கு இந்த உணர்ச்சிப் போராட்டம்?’

‘சொன்னேன் தான். ஆனால் எனக்குள் ஒரு சிறு ஆசை இருக்கத்தான் செய்தது. அவளை திரும்பவும் பார்ப்பேன், அவள் அன்று கூற வந்ததுக் அவளின் நேசமாக இருக்கும்; மீண்டும் சந்தித்து எங்களுக்குள் அந்த காதலை புதுப்பிக்க நினைத்தேன். ஆனால் திடீரென்று அவள் இனிமேல் ஒருபோதும் என் வாழ்க்கையில் இல்லை. அவள் எனக்கானவள் இல்லை என்று உறுதியாக தெரிந்த பின்னர், வலிக்கத்தான் செய்கிறது.’

‘வலியா.. நேசம் வைத்தப் பெண் உனக்கில்லை என்றால், வலிக்குதா?’

‘ம்.. வேதனையா இருக்கு, ரொம்ப மூச்சு முட்டுது.. மரண வலியாக இருக்கு தெரியுமா?’

‘ஓஹோ.. அப்ப போய் உடனடியாக ஒரு பல்லை பிடுங்கிட்டு வா, இல்லனா எங்கேயாவது அடிப்பட்டுக் கொண்டு, டாக்டரை பாரு.. பல்லைப் பிடுங்கியப் பிறகு இல்லையென்றால் கைகாலை உடைச்சப் பிறகு எந்த வலி பெருசுன்னு பார்த்துடலாம்.’

‘உனக்கு கிண்டலா இருக்கா? காதல் வலியை உன்னை வெச்சு அணுக முடியாது, என்னை கொண்டு அணுக வேண்டும் அறிவுகெட்ட மூளையே! முழுமைப்பெறாத காதல்கள் வலியாக இருந்தாலும் அழகானவை. அந்த உணர்வுகளில் இல்லாமல் இருந்தால், அந்த நேசத்துக்கு அர்த்தமில்லை.’

இவ்வாறு அவனின் அறிவும், அன்பும் போட்டிப் போட, இந்த போராட்டத்தின் இடையிலேயே, அவன் கேளிக்கை விருந்திலிருந்து எப்படியோ வெளியே வந்து, தன் போக்கில் காலாற, இடம் பொருள் ஏதும் உணராமல் நடந்து போனான்.

மறுநாள் காலையில் தன் ஓட்டல் அறையில் கண் விழித்தவன், முந்தைய இரவு எங்கே சென்றான், எப்படி அறைக்கு வந்து சேர்ந்தான், எப்போது கண்ணயர்ந்தான் என்று புரியவில்லை அவனுக்கு. பின்பு ஒவ்வொன்றாக கண் முன் தோன்ற, முகம் சுருங்க மெத்தையில் அமர்ந்திருந்தான்.

அவனின் நேசம், வலி உணர்ச்சிகள் அனைத்தையும் இறுக முடிச்சிட்டு, ஒரு சில பெரிய ஆழ்ந்தப் பெருமூச்சில் மொத்தமாய் மனதின் ஓரத்தில் தேக்கி வைத்து விட்டான் பார்த்திபன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இதில் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் கடந்து சென்று வாழ வேண்டும் என்று கடைசியில் மூளையின் பக்கம் சாய்ந்தான்.

அவன் மும்பையில் மேலும் சில நாட்கள் அவனது வேலைக்காக செலவிட, ரம்யாவின் நிச்சயதார்த்தமும் அவன் நினைவில் இருந்தது. அவளின் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு இரண்டு நாட்கள் முன்னாடி தான் அவனால் ஊருக்கு திரும்ப முடிந்தது.

வந்ததும் வராததுமாக ரம்யாவை பார்க்க அவள் வீட்டிற்கு விரைந்தான்.

அவனைக் கண்டதும் ரம்யாவின் தந்தை நந்தகோபால், “பார்த்தி வாடா வாடா… என்னடா இவ்வளவு தாமதமா வந்திருக்க, நான் உன்னை எதிர்பார்த்துட்டே இருந்தேன்” என்று இன்பம் பொங்க வரவேற்றார்.

“ஐயோ அங்கிள் சத்தம் போட்டு நான் வந்துட்டேனு காட்டிக் கொடுக்காதீங்க.. உங்க பொண்ணு ஆல்ரெடி என் மேல செம்ம கோபத்தில் இருக்கிறாள். நீங்க இன்னும் தூபம் போட்டு ஏற்றி விடாதீங்க.. அப்புறம் என்னால் அவளை மலையிறக்கிறது பெரும் கஷ்டம் ஆகிடும்..”

“ம் வந்துட்டான் ரஞ்சன்.. அப்பாகிட்ட கதை அளந்துட்டு இருக்கான். என்னை பக்கத்தில் வெச்சுகிட்டு என்னை பத்தி ரகசியம் பேசறானாம்.” என்று நந்தகோபால் பின்னாடி இருந்த அறையின் கதவில் சாய்ந்து நின்றவாறு ஃபோனில் ஹரிரஞ்சனிடம் பேசினாலும், அவளது விழிகள் பார்த்திபனை முறைத்தது.

“ஹாய் மியா… சொன்ன மாதிரி உன் நிச்சயதார்த்த நிகழ்வை மிஸ் பண்ணாம வந்துட்டேன்.. எப்படி? கல்யாண பொண்ணு ஜொலிக்கிறாள்.. இல்ல அங்கிள்..” என்று சமாளித்தான்.

“உங்க சண்டையில் என்னை இழுக்காதீங்க.. எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு..” என்று நந்தகோபால் கழண்டுக் கொள்ள,

பார்த்தி, “என்ன அங்கிள். அந்த வேலையெல்லாம் செய்ய தான் நானே வந்திருக்கேன். என் மியா கல்யாணத்துல நான் வேலை செய்யாமல் இருப்பேனா.. இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டாட்டமா மாத்தறேன்னு பாருங்க.. வாங்க வாங்க போகலாம்.. அப்புறம் மியா நீ போய் உன்னவரோடு கடலைப் போடு.. போ.. போ..” என்று பார்த்தி அவளுக்கு வாய்ப்பே கொடுக்காமல் நந்தகோபால் பின்னால் செல்ல,.

“டேய் நில்லுடா.. நடிக்காத பிட்டர் பன்.. உன்னை.. ” என்று அவனை பொரிந்தாள். அதற்குள் ஹரி அவளுக்கு அழைக்க, அவளின் மனநிலை சற்றே மாறியது. ஹரியிடம் நண்பனை பற்றி புகார் வாசித்தவள், ஹரியின் பேச்சு சாதுரியத்தில் சுற்றி இருக்கும் உலகம் மறந்து, அவர்களின் காதல் உலகம் மட்டும் விரிந்தது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், மருத்துவர் முன்பு அமர்ந்திருந்தவளுக்கு, பதட்டம், தடுமாற்றம் எதுவும் முகத்தில் தென்படவில்லை. மாறாக அமைதி, ஒருவித பிடிவாதம் மட்டுமே காணப்பட்டது.

“மிஸ் சிவாஞ்சலி நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போவது தான் சிறந்தது. வீட்டில் வைத்தே சிகிச்சை கொடுக்க முடியும். இயன்முறை மருத்துவம் செய்ய வீட்டிலிருந்து சொல்லும் நாட்களில் வந்து போங்கள். கூடவே இயற்கை சூழலில் சில புனர்வாழ்வு மையங்களும் இந்த இயன் மருத்துவத்தை செய்கின்றனர். அங்கே கூட நான் பரிந்துரை செய்கிறேன். தேவையில்லாமல் ஹாஸ்பிடல் படுக்கையிலேயே கிடந்தால், பெரிய பயன் எதுவும் அடையப் போவதில்லை” என்று மருத்துவர் சிவாஞ்சலியிடம் பொறுமையாக எடுத்துக் கூற

சிவாஞ்சலியும், “எனக்கு நீங்க சொல்வது புரியுது டாக்டர் ஆனால் அவர் இங்கே பெட் ரெஸ்டில் இருந்தால் தான், உடல்நிலை சரியாகும் என்று நினைத்து பிடிவாதம் செய்கிறார்கள். அதையும் மீறி நான் ஏதாவது சொன்னால், அவர்களை கவனித்துக் கொள்ளவும், செலவு செய்யவும் நான் யோசிப்பதாக எண்ணி கோபம் கொள்கிறார்கள். பரவாயில்லை டாக்டர். அவர்களின் மன அமைதி தான் எனக்கு முக்கியம். எவ்வளவு நாட்கள் அவர்களுக்கு இங்கே இருக்கத் தோணுதோ, இருக்கட்டும்” என்று முடிக்க,

“புரியாமல் பேசாதீர்கள் சிவாஞ்சலி. உங்களால் ஒரு நோயாளிக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படுக்கையை வீணாக நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் டிஸ்சார்ஜ் செய்ய உத்தரவு இடுகிறேன் நீங்களானால் வேண்டாம் என்று மறுக்கிறீர்கள். இதற்கு மேல் என் மேலிடத்திற்கு தான் நான் சொல்ல வேண்டியிருக்கும்” என்றார் மருத்துவர் கட்டளையாக!

“எப்படியோ உங்களுக்கும் உங்கள் மருத்துவமனைக்கும் நான் நேரம் தவறாமல் பணத்தை செலுத்தி விடுகிறேன் அல்லவா? பிறகென்ன.. என் ஒருத்தியால் தான் ஒரு நோயாளியின் சிகிச்சைக்கு இடவசதி பறிப் போகிறதா என்ன? இவ்வளவு பெரிய மருத்துவமனையில் இடவசதிக்கா பஞ்சம்?” என்று அவள் எரிச்சலுடன் மொழிந்துவிட்டு அகன்றாள். மருத்துவர் அவளை கோபப்பார்வை பார்க்க, அதுவரை அமைதியாக அங்கேயே நின்றிருந்த செவிலிய பெண், “பாவம் டாக்டர் அந்த பொண்ணு. டெய்லி அந்தம்மாகிட்ட எத்தனை கொடுமை அனுபவிக்குது என்று எனக்கு தெரியும். ஒருசில நாள் அந்தம்மா பேச்சு பறிபோனது கூட நல்லது தானோன்னு நினைப்பேன். பேசாத போதே, அந்த பொண்ணை ஏசுது..”

“ஒவ்வொரு நோயாளியின் சொந்த பிரச்சனையில் தலையிட்டால், நம் வேலையை ஒழுங்காக செய்ய முடியாது” என்று பட்டென்று கூறினார் மருத்துவர்.

சிவாஞ்சலி அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் தலையை தாங்கியபடி உட்கார்ந்து கண்களை திறவாமல் மன அலைகளை அசைப் போட்டபடி இருந்தாள்.

தன் வாழ்கை ஏன் இப்படி ஆனது என்று சுய பச்சாதாபம் கொள்ள கூட அவளுக்கு சலிப்பாக இருந்தது. அவள் மிகவும் அயர்ந்து விட்டாள்.

அவளின் அலைபேசி அவளின் குழப்பத்தை ஒதுக்குமாறு ஒசையிட்டப்படி குறிப்பாக உணர்த்த, எடுத்து காதில் ஒற்றினாள்.

“சொல்லுங்க மாமா.. அம்மா நல்லாருக்காங்க. அடுத்து இயன் மருத்துவத்துக்கு டாக்டர் பரிந்துரை செஞ்சிருக்காங்க” என்று அனிச்சை செயலாக கூறவும், எதிர்முனையில் சில நொடி அமைதி நிலவியது.

“ஹலோ மாமா.. நான் பேசுவது கேட்குதா?”

“எனக்கு அக்காவை பற்றி கவலையில்லை சிவா.. அவளை பார்த்துக் கொள்ள தான் நீ இருக்கியே.. வேலைக்கும் போயிட்டு, மருத்துவமனைக்கும் அல்லாடிட்டு இருக்க.. நம்ம ஊருல இல்லாத மருத்துவமா. சொன்ன பேச்சை கேட்கவே இல்ல உன் அம்மா.” என்று புலம்பினார் சிவாஞ்சலியின் தாய்மாமன்.

“என்ன விஷயம் மாமா?”

“எனக்கு சொல்ல கஷ்டமா தான் இருக்கு.. இருந்தாலும் கேட்க வேண்டியது என் கடமை.”

“சொல்லுங்க மாமா..”

“அந்த பாழாப்போனவன் சர்வேஷ் திதி நாள் இன்னும் ஒரு மாதத்தில் வருதாம். அவனோட அம்மா ஃபோன் பண்ணி சொன்னாங்க. நீயும் அன்றைக்கு அங்கிருந்தால், அவனோட ஆன்மா சாந்தியடைஞ்சுடும்; அதனால் வரும்படி சொன்னாங்க.. நான் முடியாதுன்னு திட்டவட்டமாக சொல்லிட்டேன்.. ஆனால் அவங்க நீ கட்டாயமா வந்தே ஆகனும்ன்னு சொல்லி ஃபோனை வெச்சுட்டாங்க. உனக்கும் கால் பண்ணுவாங்க.. நீ ஃபோனையே தயவு செஞ்சு எடுக்காத.. உன் அம்மாவையும் அவங்க வந்து பார்க்க விடாத”

தன் மாமா ஃபோனில் இந்த விஷயத்தை சொன்னதும் அவளின் முகம் கடுங்கோபத்தை தத்தெடுத்துக் கொண்டது. ‘அந்த சர்வேஷனின் காரியத்தில் நான் பங்குக் கொள்வதா? என் வாழ்க்கையை நாசமாக்கியவனை அமைதியாக துயில் கொள்ள நான் பரிகாரம் செய்ய வேண்டுமா? நான் என்ன கிள்ளுக் கீரையா?’ என்று சினம் கொண்டவள், உடனே, ‘என்னால் அல்லவா ஒரு சிசு தன் தந்தையை இழந்துவிட்டது. வாழ வழியில்லாத பெண்ணுக்கு சீற்றம் ஒரு கேடா’ அவளின் இன்னொரு மனமே எள்ளி நகையாடியது. இதற்கிடையில் தாய்மாமன் சொல்லி முடிக்கும் போது மீண்டும் அவளின் முகம் அமைதியைக் காட்டியது. இது எதுவும் அறியாத மாமனோ, “சிவா ஹலோ ஹலோ” என்று பதற

“நான் கேட்டுட்டு தான் இருக்கேன்”

“அதான்மா என் பிரச்சனையே.. நீ கேட்டுட்டு தான் இருக்க..? உனக்கு பிடித்ததை செய்ய என்னிக்காவது யோசனை செஞ்சிருக்கியா..? உன் மனசுல என்ன இருக்குன்னு என்னால புரிஞ்சுக்க முடியல. உன் அம்மா எது சொன்னாலும் சரி என்று உன் வாய் சொல்வதற்கு முன், உன் தலை ஆடி விடுகிறது. ஒருமுறை ஒரே ஒருமுறை உன் மனம் சொல்வதை கேளு சிவா?!!
இந்த மாமனின் ஆசை நீ நல்லாயிருக்க வேண்டும் என்பது தான். எதிர்த்து பேசினால் மரியாதை இல்லைன்னு அர்த்தமில்லை.. நீ யோசித்து முடிவு சொன்னால், உனக்கு வேற வாழ்க்கை…”

“எனக்கு புரியுது மாமா.. டாக்டர் கூப்பிடுகிறார்.. நான் ஃபோனை வைக்கிறேன்” என்று மாமன் முழுவதும் சொல்லி முடிக்கும் முன்னரே அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால், அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே வந்து டாக்டரை சந்தித்து முடித்தவள், இன்னும் நேரம் இருப்பதை உணர்ந்து மருத்துவமனையிலிருந்து சற்று தள்ளி அமைந்திருந்த முருகன் கோயிலுக்கு சென்று வர எண்ணம் கொண்டு, செவிலியரிடம் சொல்லி விட்டு புறப்பட்டாள்.
வெள்ளிக்கிழமை பின் மாலை பொழுதாகி போனதால், பெரிய கூட்டம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கோயில் நடை சாத்தும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கோயில் சுற்று பிராகாரத்தில் நேரே முருகன் முகம் தெரியுமாறு அமர்ந்தாள்.

முருகன் மேல் உள்ள அலங்காரம், மந்தகாச புன்னகைக் கொண்ட வடிவமைப்பு அவளை ஈர்த்தது. அங்கேயே தூண்களில் சில வாக்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருக்க, அவைகளை ஒவ்வொன்றாக மெல்லிய குரலில் வாசித்தாள்

“அவனின்றி ஓர் அணுவும் அசையாது”

“யாமிருக்க பயமேன்”, “அமைதி காக்கவும்”, “ஓம் சரவணபவ’

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’,

‘வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை’

‘அப்ப முருகனிடம் கேளு சிவா.. உன் கவலையை போக்க ஒரு துணை கிடைச்சா, அதை விடக்கூடாது’ எங்கோ ஒரு மூலையில் அவளின் மனதின் குரல் எழும்பியது.

‘என் கவலையை தீர்க்கணும்னா, நான் பிறந்திருக்க கூடாது.. என்னால் என் அம்மாவுக்கும் தொல்லை இருந்திருக்காது.. அட்லீஸ்ட் அவங்க சந்தோஷமா இருந்திருப்பாங்க. ஆனால்
பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது என்பார்கள். எனக்கு என்னை விட என்னை சுற்றி உள்ளவர்கள் தான் முக்கியம்.’

தன் மனதினுள் எழுந்த எண்ணங்களை அடக்க வழி அறியாமல், எவ்வளவு நேரம் மருகினாலும் பிரயோஜனம் இல்லை என்றும் உணர்ந்தே இருந்தாள். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருக்கும் இந்த நிலையும் அவளுக்கு பிடிப்படவில்லை. இவையெல்லாம் அவளை அலைகழித்தாலும், எல்லாவற்றையும் விட தன் தாயின் அன்பும் அரவணைப்பும் முக்கியம் என்ற எண்ணமே அவளை முழுவதும் வியாபித்து இருக்கிறது.

8 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 5”

  1. Avatar

   Sarvesh பற்றியும் அவனோடு சிவாக்கு இருக்கும் தொடர்பு என்ன என்பது பற்றியும் இனி வரும் அத்தியாயங்களில் தெரியும்.

   மிக்க நன்றி

 1. Avatar

  சர்வேஷ் அவளது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என்று நினைக்கிறேன்.

  அந்த மருந்துவரும் அவளும் பேசும் இடம் நல்லா இருந்தது.

  மியா & பன் சூப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *