Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 6

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 6

சற்று நேரம் கோவிலில் அமர்ந்து இருந்த சிவாஞ்சலி, மெதுவாக மருத்துவமனை நோக்கி நடந்தாள். அவளின் மனச்சோர்வு அவள் காலில் பிரதிபலித்தது. மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல அவளுக்கு விருப்பமில்லை தான். ஆனால் அங்கே இருப்பது அவள் தாய் ஆயிற்றே. அவள் அம்மா அடிக்கடி கூறும் பெற்ற கடன் அவளை அலைகழித்தது. அந்த கடனை அடைக்கத்தான் அவள் பல வருடமாக போராடுகிறாள். அவர்களின் பெற்ற கடன் பற்றிய பேச்சின் காரணம் கூட அவளுக்கு இன்று வரை புரியாத புதிராகத் தான் இருந்து வருகிறது.

அன்று ரம்யா மற்றும் ஹரிரஞ்சனின் நிச்சயதார்த்தம் வெகு விமர்சையாக நடந்தது.

வெளிப்பார்வைக்கு பார்த்திபன் கலகலப்பாக தென்பட்டாலும், உள்ளுக்குள் அவனுக்கு ஏனோ சிவாஞ்சலி ஞாபகமாகவே இருந்தது.

ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாக, எந்த அறிவிப்புமின்றி தன்னிடமிருந்து மறைந்தவளை அவன் எப்போதோ தன் மனதில் கைவிட முடிவெடுத்து அதை பழக்கப்படுத்தியும் கொண்டான். ஆனால் கடந்த சில நாட்களாக அவனுள் ஓர் எண்ணம் ஆர்பரித்தது. அவளை காண வேண்டும், அவள் நன்றாக இருக்கிறாளா என்று கேட்டறிய வேண்டும், அவளிடம் பேச வேண்டும் என்று மிகவும் தோன்றியது. ஆனால் எப்படி? ஏன் தனக்கு இப்படி ஒரு ஆவல் என்றே அவனுக்கு புதிராக இருந்தது.

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை; மனதில் எழும் எண்ணங்கள் அனைத்திற்கும் தன்னால் கடிவாளம் இட முடியும் என்று தனக்கு தானே மொழிந்து, தற்போது தன் காதல் இருக்கும் இடம் (நிலை) கருதி தன்னை சமன் செய்தவாறு அன்றாடம் வாழ்க்கையை அதன் போக்கில் பயணிக்க விட்டான்.

நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக கடந்து சென்றது.
ரம்யா – ஹரிரஞ்சன் திருமணத்திற்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்க, இரு வீட்டரோடு ஆடை, ஆபரணம் என்று ரம்யா மற்றும் ஹரி இருவரும் மும்முரமாக தேர்ந்தெடுக்க, என்று ஓடிக் கொண்டிருக்க, வார இறுதியில் மூவரும் சந்திப்பதே அரிதாகிப் போனது. அன்று வெகு நாட்கள் கழித்து மூவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.

அதன்படி, ஹரியும் ரம்யாவும் ஒன்றாக வர, பார்த்தி பைக் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு இருவருக்காகவும் காத்திருக்க, அவர்கள் வந்தபாடில்லை. அவனுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தது சலிப்பை ஏற்படுத்தியது.

உச்சு கொட்டிக் கொண்டே, ரம்யாவுக்கு அழைத்தான் பார்த்திபன்.
“ஸ்வீட் பன், இதோ வந்துட்டோம்.. டூ மினிட்ஸ்” என்றதும்

“ம் நான் அப்படியே சுத்திட்டு இருக்கேன், வந்ததும் கால் பண்ணு” என்று துண்டித்தவன், ஒவ்வொரு தளமாக தானியங்கி படிகட்டில் ஏறிப் போனான். இலக்கில்லாமல் சுற்றியவன், மூன்றாவது தளத்திற்கு சென்றான். அது உணவுக்கான பிரத்யேக தளம் என்பதை உணர்ந்ததும் அடுத்த தளம் செல்ல எத்தனிக்க, அப்போது ஓரக்கண்ணில், ஒரு பரிச்சயமான உருவம் தென்பட, ஒரு நொடி நின்றவன், உறுதிபடுத்திக் கொள்ள வேண்டி மீண்டும் திரும்பி உற்று நோக்கினான்.

அவ்வாறு ஒரு உருவத்தை கண்டதும் சிலையென வடித்தார் போல நின்றுவிட, சுற்றுப்புறம் முழுவதும் தெளிவின்றிப் போனது அவனுக்கு. அது சிவாஞ்சலி.

சட்டென்று அவனுக்கு அருகில் இருந்த தடுப்புக் கைப்பிடியை இறுக்கமாக பற்றிக் கொண்டான். இவன் கண்டாலும், அவளுக்கு இவன் தென்படும் தூரத்தில், கவனத்தில் இருப்பதற்கு நியாயம் இல்லை.

எவ்வளவு நேரம் அவ்வாறு ஸ்தம்பித்து நின்றான் என்று அறியவில்லை.

அவனையும் அறியாமல் சிவாஞ்சலி அமர்ந்திருந்த உணவு மேஜைக்கு சற்று தள்ளி, அவனது பார்வையில் தென்படும் அமைப்பில் ஆனால் அவள் கண் மறைவில் அமர்ந்துக் கொண்டான் பார்த்திபன்.

அவள் முகத்தில் புதிதாக திருமணம் செய்த பெண்ணிற்கு உண்டான எந்த ஒரு சந்தோஷமும், மகிழ்ச்சியும் பூரிப்பும் காணவில்லை மாறாக புரியாத ஒரு பாவனை தோன்றியது. அவள் அருகில் உள்ள பெண்மணியிடம் ஏதோ கேட்க, அவரோ சுற்றும் முற்றும் தேடிவிட்டு ஒரு திசையில் கைகாட்டினார்.

அதே திசையில் பார்த்தியின் கண்ணும் நோக்க, அங்கே ஒரு இளைஞன் உணவு தட்டோடு அவர்கள் பக்கம் வந்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞன் வந்ததும் மூவரும் உணவருந்திக் கொண்டு இடைஇடையே பேசவும் செய்தார்கள்.

அவனை நோக்கிய பார்த்திபன், அவன் தான் சிவாஞ்சலியின் கணவனாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்திற்கு வந்தான். அவர்கள் மூவரும் என்ன பேசினார்கள் என்பதை பார்த்திபன் கேட்கவில்லை. ஆனால் காரசாரமான விவாதப் பொருளுக்கு உண்டான விடயம் என்பது மட்டும் விளங்கியது.

பார்த்திபன் அவன் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு துளிக் கூட அசையவில்லை. அவன் கண்கள் சிவாஞ்சலி மேஜையை தவிர எதையும் கவனிக்கும் நிலைமையிலும் அவன் இருக்கவில்லை.

ஒரு கட்டத்தில் சிவாஞ்சலி தன் எதிரில் இருந்த இளைஞனை நோக்கி தலையாட்ட, அவனோ கையில் பிடித்திருந்த தேக்கரண்டியைப் பட்டென்று ஓசை வரும் மாதிரி வைக்க, அவள் திடுக்கிட்டாள்.
அந்த பெண்மணியோ அந்த இளைஞனின் கையைப் பற்றினார். இவை அனைத்தையும் கண்ட பார்த்திபன் சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு எட்டு முன்னே எடுத்து வைத்து சிவாஞ்சலியின் அருகே செல்ல முயற்சிக்க, அவனின் அலைபேசி தன் இருப்பை உணர்த்தி அவனின் முயற்சிக்கு அணையிட்டது.

அழைப்பை எடுத்து யாரென்று கூட கவனிக்கவில்லை, “ராங் நம்பர்” என்று கூறி வைத்துவிட்டான்.

அதே நேரம், சிவாஞ்சலியின் மேஜையில் மூவரும் எழுந்து விட, ஏனோ பார்த்திபன் பதட்டத்துடன் அவள் பார்வையிலிருந்து திரும்பி நின்று கொண்டான்.

ஹரியும் ரம்யாவும் ஒவ்வொரு தளமாக பார்த்தியை தேடிக் கொண்டு வர, ரம்யா கூடவே பொரிந்துத் தள்ளினாள். “என்னாச்சு அவனுக்கு… என் அழைப்பை ராங் நம்பர்ன்னு சொல்லி கட் பண்ணிட்டான். உச்சி வெயிலில் நின்று பைத்தியமாகிட்டானா?”

“கூல் ரம்மி… இப்ப எதுக்கு டென்ஷனா இருக்க? அவனை நாம இவ்வளவு நேரம் காக்க வெச்சதுனால கோபத்தில் அப்படி சொல்லிருக்கலாம். நான் அப்பவே சொன்னேன்… நீ தான் எனக்கு இப்பவே கரும்பு ஜுஸ் குடிக்கணும்ன்னு சொல்லி, தேடி அலைஞ்சு லேட் பண்ணி இப்ப ஒயாம பொங்கிட்டு இருக்க…”

“அட நீங்க ஒன்னு ரஞ்சன். நாம லேட்டா வந்தா அதுக்கு கோபப்படுகிற ஆள் கிடையாது அவன். ஸ்வீட் பன் கொஞ்ச நாளாக சரியில்லை… எதையோ தொலைச்சிட்டு காணும்னு தேடற மாதிரி மூஞ்சியை உர்-ன்னு வெச்சிட்டு சுத்தறான். காரணம் கேட்டா பதில் இல்லை.” என்று புலம்பியபடி ஹரியுடன் நடந்தாள்.

அவள் மனநிலையை மாற்ற எண்ணி, “உனக்கு மாலுக்கு ஏன் மால்-ன்னு பெயர் வந்ததுன்னு தெரியுமா?” என்று தீவிரமாக வினவினான்.

அவளோ அவனை முறைத்து விட்டு, “தெரியாது” என்கவும்,

“எனக்கும் தெரியாது” என்றான் ஹரி.

“உங்களை… “

“ஹே இரு நோ வைலன்ஸ்” என்று அவன் பம்ம, ஒருவழியாக மூன்றாவது தளம் வந்தடைந்தனர் இருவரும்.

மூன்றாவது தளத்தில் இருந்து, சிவாஞ்சலியும் மற்ற இருவரும் சில பல பைகளுடன் கிளம்பும் போது, ஹரியும் ரம்யாவும் எதிரில் வர, அதில் நான்கு விழிகள் சந்தித்துக் கொண்டது.

சிவாஞ்சலி, மெல்லிய புன்னகை ஒன்றை தன் முகத்தில் ஒட்ட வைத்துக் கொள்ள, “ஹாய் அஞ்சலி. என்ன இந்தப் பக்கம்? ஷாப்பிங்கா?” என்று கேட்க,

“மாலுக்கு வேற எதுக்கு வருவாங்க? அதான் அவ்வளவு பைகள் கையில இருக்கு தானே?” என்று மெல்லிய குரலில் கூறியது சிவாஞ்சலி அல்ல. ரம்யா!!

அவளின் குரலில் மெல்லிசாக தோன்றிய பொறாமையைக் கண்டுக்கொண்டாலும், அவள் அன்பு ஹரிக்கு வெகுவாகப் புலப்பட்டது.

உள்ளத்தை பிரதிபலித்த முகிழ்நகையோடு, “மீட் மை ஃபியான்சே ரம்யா. இவங்க சிவாஞ்சலி… எங்க ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறாங்க” என்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

ரம்யா அசடு வழிந்த முகத்தோடு, “ஹலோ” என்கவும், “ஹாய்” என்றாள் அவளும்.

“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு?!! ஆனா எங்கன்னு எனக்கு ஞாபகம் இல்ல”

“என்ன ரம்மி இது, பொதுவாக பசங்க தான் பொண்ணுங்ககிட்ட பேச, இப்படி பேச்சை ஆரம்பிப்பாங்க.. வாட்ஸ் தீ மேட்டர்?” என்று விளையாட்டாக இரு புருவங்களையும் உயர்த்திக் கேட்டான்.

“ச்சே உண்மையாவே எனக்கு பரிச்சயமான முகமாக தெரியுது..” என்றாள் அவள்.

“தெரியலங்க… எனக்கு அப்படி தோணல” என்றாள் சிவாஞ்சலி.

பின்னர் சில பல பேச்சுக்களுக்கு பிறகு, சிவாஞ்சலி விடைபெறும் சமயம், இவர்களின் சம்பாஷனைகளை பார்த்தவாறு அங்கே வந்து சேர்ந்தான் பார்த்திபன். வெகு இயல்பாக இவர்களை கண்டு அங்கே வந்ததுப் போலவும் காட்டிக் கொண்டான்.

“உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது?” என்று சிவாஞ்சலி மீதும் ஒரு கண்ணை வைத்தவாறு வினவினான்.

“ஹே ஹாய் மச்சி… எல்லாம் உன் ஃப்ரெண்டை கேளு.” என்றவன், பார்த்திபனின் விழிகள் சிவாஞ்சலியை நோக்கி இருக்க, மீண்டும் ஒருமுறை அறிமுகம் செய்தான்.

“பார்த்திபன்.. என்னோட ஃப்ரெண்ட்” என்று அவளுக்கும், “சிவாஞ்சலி ஆஃபீஸ் கலீக்” என்று அவனுக்கும் பரஸ்பரம் அறிமுகம் செய்யவும்,

“எப்படி இருக்கீங்க பார்த்தி…” என்று கேட்கவும் பார்த்திபன் அதிர்ச்சியில் உறைந்தான். மற்ற அனைவரும் அவளையே கூர்ந்து நோக்க, “எனக்கு மிஸ்டர் பார்த்திபனை நல்லாவே தெரியும்” என்கவும், இப்போது அனைவரும் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தனர்.

பார்த்திபன் கற்சிலையென நிற்க, சிவாஞ்சலி மேலும் நிற்காமல், சிறு தலையசைப்புடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அதன் பிறகு ரம்யா ராங் நம்பர் விடயத்தை ஒதுக்கிவிட்டு சிவாஞ்சலி விஷயத்தை கையில் எடுத்து பார்த்திபனை ஆர்வமாக பிடித்துக் கொண்டாள்.

“ஸ்வீட் பன் உனக்கு எப்படி அந்த பொண்ணை தெரியும்? மாடலாக இருப்பாளோ? இல்லையே பார்த்தா அப்படி தெரியல… ரஞ்சனோடு வேலை பார்ப்பவள் உன்னை ஏற்கனவே தெரியும் என்றுவிட்டு போகிறாள்? உனக்கும் அவளுக்கும் எப்படி பழக்கம்..? சொல்லு சொல்லு…” என்று மூச்சு விடாமல் ரம்யா வினவ, ஹரி இட வலமாக தலையை சிரிப்புடன் ஆட்டினான்.

மேலும் ரம்யா, பார்த்திபனை சிவாஞ்சலியைப் பற்றி கேள்வி கேட்டு குடைந்தாள், உலுக்கினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

“நிறுத்து மியா… அவள் உன் வருங்கால கணவரோடு தானே வேலை பார்க்கிறாள் என்று ஹரி சொன்னாரு… என்கிட்ட வந்து அவளை பற்றி கேட்டால், நான் என்ன சொல்வது!?” என்று பார்த்திபன் அப்போதும் தடுக்கில் புகுந்தான்.

அவன் தடுக்கில் புகுந்தால், இவள் கோலத்தில் புகாமல் இருப்பாளா என்ன?

“ஓஹோ ரஞ்சனோடு வேலை பார்க்கிறவ உனக்கு எப்படி பழக்கம்? நீ என்ன ரஞ்சன் கம்பெனியில ஃபேஷன் ஃபோட்டோகிராஃபிக்கு மாடலை போய் தேடினாயா அல்லது அவரோட கம்பெனியை உன்னை விளம்பரம் செய்ய ஃபோட்டோ எடுக்க சொன்னாங்களா?” என்று கேட்டாள் ரம்யா.

“ரம்மி விடு… தொல்லை பண்ணாதே… சொல்ல விருப்பம் இல்லனா விட்டுடனும்… பார்த்திக்கு எப்ப சொல்ல விருப்பம் இருக்கோ சொல்லட்டும்” என்று இடைப் புகுந்தான் ஹரி.

உடனே தன் வலதுகாலை மட்டும் மெதுவாகத் தரையில் தட்டியவள், நேரே உணவு கவுன்டர் சென்றாள். பின்னோடு இவர்கள் இருவரும் செல்ல, அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில், “தேங்க்ஸ் மச்சி” என்றான் பார்த்திபன்.

ஏதும் பேசாமல் அவனையே உற்று நோக்கினான் ஹரி. பார்த்திபனுக்கோ உள்ளூர உதறல் எடுத்தது. எங்கே ஹரி ஏதேனும் கேட்டு விடுவானோ என்று அஞ்சினான். ஆனால் அவனோ லேசாக அவனது தோளை தட்டிவிட்டு அமைதியாக நின்றான்.

ரம்யா மூவருக்கும் உணவு வாங்கி வர செல்லவும், ஆண்கள் இருவரும் ஒரு மேஜையில் சென்று அமர்ந்தார்கள். ரம்யாவை ஒருமுறை திரும்பிப் பார்த்த ஹரி, பார்த்திபனை பார்த்து, “எனக்கும் உனக்கும் வெகுகாலம் பழக்கம் இல்லை தான். பட் ரம்யாவையும் உன்னையும் சந்திச்சது எனக்கு வாழ்க்கையில் நடந்த முக்கியமான தருணம். இப்படி ஒரு ஃபிரெண்ட்ஷிப் எனக்கு அமையவே இல்லையேன்னு நான் ஃபீல் பண்றேன் தெரியுமா? உங்களோட ஃப்ரெண்ட்ஷிப் என்றைக்குமே விரிசல் இல்லாம இருக்கணும்னு நான் ஆசை படறேன்”

“ஹரி, மியா இப்ப கோவிச்சிட்டுப் போனதுக்கா நீ ஃபீல் பண்ணி பேசிட்டு இருக்க… பிளீஸ் வேண்டாம். நாங்க இதுக்கு முன்னாடியும் சண்டைப் போட்டிருக்கோம் ஆனா அதை பெருசாக விட்டதில்லை. சோ கவலையே வேண்டாம். அது மட்டுமில்லாம உன்னோட முகத்துக்கு செண்டிமெண்ட் ஒத்து வரலை” என்று பேச்சை மாற்றினான்.

பார்த்திபனின் கண்ணை நேராகப் பார்த்து, “என்னால் உன்னை புரிஞ்சுக்க முடியுது. ஆனால் ஒன்னு மட்டும் சொல்லு மச்சி பிளீஸ். உனக்கும் அஞ்சலிக்கும் இடையில் இருப்பது… இருந்ததுன்னு சொல்லனுமோ…” ஹரி வாக்கியத்தை முடிக்கும் முன் “உன் கற்பனையை மூட்டைக் கட்டி வைங்க ஜி”. என்றான் பார்த்திபன்.

“அது லவ் தானே” என்று பார்த்திபன் பின்னாடி வந்து நின்று ஹரி கேட்க நினைத்த மீதி வார்த்தைகளை கேட்டாள் ரம்யா.

“நீ எப்ப வந்த?” என்று அதிர்ச்சியுடன் திரும்பினான் பார்த்திபன்.

“பதில்… பதில் வேணும்” என்று கைகளை மார்போடு கட்டிக் கொண்டாள்

பெருமூசொன்றை வெளியிட்டு இரு கைகளையும் உயர்த்தி, “சரி சொல்றேன்.”

“ம்ம் சொல்லு”

“எனக்கு அவளை பிடிக்கும் ஆனால் அவளுக்கு என்னை பிடிக்குமா என்று கேட்டால் பதில் தெரியாது” என்றான்.

“ஒன்னும் பிரச்சனை இல்லை. அந்த பொண்ணு ரொம்ப தூரம் போயிருக்க மாட்டாள்… இப்பவே போய் கேட்டுட்டு வரலாம் வா” என்றாள் ரம்யா.

“ஐயோ ரம்மி. சமயத்தில் உன் மூளை ஷட்டௌன் மோடுக்கு போயிடும். என்னிடம் தான் அவளது ஃபோன் நம்பர் இருக்கே.. எதுக்கு பின்னாடி ஓடிப் போகனும்” என்று ஹரி கேட்கவும், அவள் அசடு வழிந்தாள்

“ஜாடிகேத்த மூடி தான் ரெண்டு பேரும்” என்று முணுமுணுத்தான் பார்த்திபன்.

“என்ன சொன்ன?” இருவரும் ஒரே நேரத்தில் கேட்க,

“ஒன்னுமில்லை. நீங்க போய் கேட்பது எல்லாம் வேஸ்ட் தான்.” என்றான்

“ஏன்? அவள் உன்னை பிடிக்கலை என்று ஏற்கனவே சொல்லிட்டாளா?” என்று ஹரி கேட்க,

“அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு” என்றான் பார்த்திபன் தலையை தாழ்த்தி.

“என்னது” என்று ஹரி இருக்கையிலிருந்து எழ, ரம்யா கண்களை விரித்து அவனை நோக்கினாள்.

மேலும் தன் மனதில் உள்ளதை அவனையும் அறியாது வெளிப்படுத்தினான் பார்த்திபன். “அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு இனிமே அவள் என் வாழ்க்கையில் இல்லைன்னு எனக்கு தெரியும் ஆனால் இருந்தால் நல்லா இருக்கும்-ன்னு தோணுது.

என்னால் அந்த எண்ணத்திலிருந்து மீண்டு வர முடியல.. வெளி தோற்றத்திற்கு நான் நல்லா இருக்கேன் என்று காட்டிக்க முயற்சி செய்றேன். இதுவும் கடந்து போகும் ஆனால் மறந்து போகுமா?? என்று எனக்குள்ளேயே இந்த கேள்வி குடைஞ்சு எடுக்குது”

சற்று நேரம் அங்கே அமைதி நிலவ, ரம்யா பார்த்திபன் தோளில் கை வைக்க, ஹரி சட்டென்று, “வாய்ப்பே இல்ல” என்றான்.

8 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 6”

  1. Avatar

   அவன் மனசுல காதல் இருக்கு ஆனா அவளுக்கு இருக்கா இல்லையா என்பது கேள்விக்குறி தான்? அது அவனுக்கு புரியனுமே

   மிக்க நன்றி

 1. Avatar

  பார்த்தி என்று அவனைப் பார்த்ததும் அவள் கூப்பிட்டதிலேயே அவன் மீதான பாசம் புரிகிறது. ஆனால், ….. சில கேள்விக்கான பதிலுக்காக வெயிட்டிங்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *