Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 7

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 7

ஹரி, சிவாஞ்சலிக்கு திருமணம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்றதும் பார்த்திபன் நிமிர்ந்து ஹரியை பார்க்க, ரம்யா புரியாமல் விழித்தாள்.

“அவளுக்கு கல்யாணம் ஆனது எனக்கு நல்லாவே தெரியும். இன்னைக்கு அவள் கூடவே இருந்தானே ஒருத்தன்; அவன் தான் அவளோட புருஷன்.” என்றான் பார்த்திபன்.

பார்த்திபன் கூறிய அஞ்சலியின் கணவன் என்றவனின் முகத்தை தன் மனக்கண்ணில் கொண்டு வர முயன்றான் ஹரி.

ஆனால் அவன் குழப்பத்தோடு தன் பின் தலையை சொரிந்தப் படி அப்ப அவளோட கம்பெனி தரவுத்தளம் புரோஃபைலில் ஏன் சிங்கிள் என்று கொடுத்திருந்தாள்?” என்று கேட்டான் ஹரி.

“வாட்?” இப்போது விழிப்பது பார்த்திபனின் முறையானது.

“ஆமாம். நான் தான் அவளோட ஆன் போர்டிங் வேலைகளை கவனித்தேன். எங்களோட தரவுத்தளத்தில் ஒவ்வொரு பணியாளர்கள் பற்றிய அடிப்படை விவரங்களையும் சேகரிப்போம். அப்படி சேகரிக்கும் போது தான் அஞ்சலியின் விவரங்களை சரிப் பார்த்து எங்க அலுவல் துறையில இருக்கும் குறிப்பிட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வெச்சேன். நாங்க ரெண்டு பேருமே மனிதவள மேம்பாட்டு பகுதியில தான் வேலை பார்க்கிறோம். அப்படி தான் இது எனக்குத் தெரியும்.”

“ஆனா…” என்று பார்த்திபன் இழுக்க,

“அவளுக்கு திருமணம் ஆயிடுச்சுன்னு உனக்கு எப்படி தெரியும்? அவள் உனக்கு பத்திரிக்கை கொடுத்தாளா என்ன?” என்று ரம்யா கேட்க,

“நீ வேற… அவளை ஒரு வருஷம் கழிச்சு இப்போது தான் பார்த்தேன். அவள் ஊருக்கு போன உடனே அவளுக்கு கல்யாணமும் நடந்து முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன். இன்னும் சொல்லனும்னா, அவள் ஊருக்கு போறதா கூட சொல்லல. அவள் என்கிட்ட எதுவுமே சொல்லாம திடீர்னு மறைஞ்சு போயிட்டா. பல நாள் ஏன், எங்க போனா, எதுக்கு சொல்லல?; இந்த மாதிரி நிறைய கேள்விக்கு பதில் தேடி நான் களைச்சுப் போயிட்டேன். .” என்றான் சோகமாக.

“அப்ப நீ உன் காதலை வாயைத் திறந்து சொன்னியா இல்லையா?” என்று ரம்யா கேட்க, அவனோ இல்லை என்று மௌனமாக தலையாட்டினான் பார்த்திபன்.

“அவளுக்கு கல்யாணம் என்று உனக்கு யார் சொன்னது பார்த்தி?” என்று மீண்டும் ஹரி கேட்க,

“அவளோட கசின் ஒரு மாடல். அவ தான் எனக்கு சொன்னாள்.”

“அவள் ஏன் பொய் சொல்லிருக்கக் கூடாது?”

“அவளுக்கு என்ன அவசியம் இருக்கப் போகுது ரம்மி..? இதென்ன சினிமாவா? அது மாதிரி முக்கோணக் காதல் வாழ்க்கையில் வருவதற்கு?!!” என்று ஹரி கேட்கவும் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு தலையில் தட்டிக் கொண்டான் பார்த்திபன்.

“ஏ அறிவு கொழுந்துகளா?! இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே சொன்னேன். அவள் கணவனும் தான் இங்கே வந்திருக்கிறான் என்று…”

“ஆ… எனக்கு குழப்பமா இருக்கு!. நீ முன்னாடியே சொல்லியிருந்தா நான் அவள் முகத்தை ஒழுங்காகவாதுப் பார்த்திருப்பேன்… ஏ ஸ்வீட் பன் வரவர நீ பிட்டர் பன் ஆகிட்டு வர… என்கிட்ட இத்தனை விஷயங்களை மறைச்சிருக்க? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்?” என்று சீறினாள் ரம்யா..

பார்த்திபன் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க, “ரம்மி இன்னொன்னு மறந்துட்ட… அந்த ராங் நம்பர் விஷயம்?!” என்று ஹரி ஓரக்கண்ணால் அவனை நோட்டம் விட்டுக் கொண்டே ரம்யாவுக்கு எடுத்துக் கொடுத்தான்.

“நீ வேற அவளை ஏத்தி விடாதே ஹரி”

“ஹான்… என்னோட அழைப்பை நீ ராங் நம்பர்-ன்னு சொல்லி கட் வேற பண்ணியிருக்க? என்ன நினைச்சிட்டு இருக்க நீ உன் மனசுல? நீ மாறிட்ட பார்த்திபா” என்று கோபத்தில் கண்கள் கனலாக மாறி முடிவில், கண்கள் கலங்கியது அவளுக்கு.

அவள் கண்களில் வருத்தத்தைக் காட்டியதும், பார்த்திபன் பதறினான்.

“அச்சோ மியா… அப்பவே நான் ஃபோனை கட் பண்ணது யாருன்னு தெரியாம தான் பண்ணேன். அதுக்கு ஒரு காரணம் இருக்கு”

“என்ன பொல்லாத காரணம் இருக்கப் போகுது?”

“அப்ப தான் சிவாஞ்சலியை பார்த்துவிட்டு அவள் அறியாமல் ஒரு ஓரமா உட்கார்ந்து அவளையே பார்த்துட்டு இருந்தேனா; அப்ப தான் நீ ஃபோன் பண்ணியிருக்க..”.

“ஃபிகரை கண்டதும் ஃப்ரெண்டை கட் பண்ணிட்டே. அப்படித் தானே?”

“இல்ல டா… எனக்கு ஃபோன் வந்த போது அவள் இருந்த டேபிளில் அவளுக்கும் அவள் புருஷனுக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்த மாதிரி இருந்துச்சு… அதை கவனிக்க போய், உன் அழைப்பை கவனம் இல்லாம கட் பண்ணிட்டேன்… சாரி ஓகேவா”

“நீ கட் பண்ணதுக் கூட எனக்கு பிரச்சனை இல்லை. இதுக்கு முன்னாடியும் நீ என் காலை புறம் தள்ளியிருக்க.. ஆனால் ராங் நம்பர்ன்னு சொன்னதில்லை தெரியுமா” அவளின் சிறுபிள்ளைத்தனமான பேச்சில் பார்த்திபனுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மற்றொரு புறம் அனாயாசமாக இருந்தது.

“அட பைத்தியமே மியா.. என்னிக்கும் நான் உன் ஃப்ரெண்ட் தான்… நீ என் வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப முக்கியமானவள். திடீர்னு என்ன ஆச்சு உனக்கு?” பார்த்திபன் இவ்வாறு கேட்டதும், ரம்யா ஹரியை பார்த்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க… நான் இப்ப வந்துடறேன்” என்று நகர்ந்துப் போனான்.

“அது வந்து… எனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகப் போகுது.”

“அதுக்கு?”

“இல்ல… உனக்கும் கல்யாணம் நடக்கும்”

“அது நடக்கும் போது பார்க்கலாம்…” என்றதும் அவள், “நடக்கும்” என்று கூறி அவனை முறைத்தாள். ஆனால் அவன் அவளது கருத்துக்கு எதிர் சொல் கூறாமல் அமைதியாக இருக்க, தன் மனதில் தோன்றியதை அவனிடம் மறைக்காமல் கொட்டிவிட்டாள் ரம்யா.

“நம்ம வாழ்க்கையில் புதுசா இன்னொரு நபர் வரும் போது நீயும் நானும் இதே மாதிரி எப்போதும் இருக்க முடியுமான்னு திடீர்னு எனக்குள் சந்தேகம் வர ஆரம்பிச்சிருச்சு.”

“லூசு மியா… அப்படி ஆகக் கூடாதுன்னு தானே நீ ஹரிக்கு அவ்வளவு கண்டிஷன் போட்டு இப்ப கல்யாணமும் பண்ணிக்கப் போறே… வீணா மனசை போட்டுக் குழப்பிக்காதே… வர போற நாட்களை சந்தோஷமா எதிர் கொள்ள ரெடி ஆகுற வழிய பாரு. மிஸ் ஆக இருக்கும் நீ இன்னும் சில நாட்களில் மிசஸ் ஆகப் போறே… உனக்கு ஒரு குடும்பம் அமைய போகுது… லைஃப் முழுவதுமே அது போற வழில எடுத்துக்கோ மியா.. நீயும் நானும் முதன்முதலில் சந்திக்கும் போது, நாம இவ்வளவு வருஷம் ஒன்றாகவே இருப்போம்-ன்னு நினைச்சோமா? சின்ன வயசில் இருந்து ஒவ்வொரு நாளும் நாம பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நம்ம நட்பு நல்லா தானே இதுவரைக்கும் போயிட்டு இருக்கு…?”

“பொறுப்புகள் வரவர கவலைகளும் பயமும் நிறையவே இருக்கு ஸ்வீட் பன்”

“எந்த ஒரு உறவும் நாம பார்க்கிற பார்வையில் தான் இருக்கு மியா… இங்க இருக்கு; இங்க இருக்கு” என்று நெஞ்சையும் தலையையும் சுட்டிக் காட்டியவன்,

“ஹரி உன்னை பத்திரமா பார்த்துப்பாரு. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நானும் எங்கேயும் போகப் போறதில்லை. சோ சில்லாக்ஸ்” என்று பொறுமையாக பேசி அவளின் கவலைகளை ஓரம் கட்டினான். முற்றிலும் போக்குவதற்கு அவள் தான் முயற்சிக்க வேண்டும் அல்லவா!

திருமணம் செய்யும் பெண்ணிற்கு பல விதமான கவலை பயம் இருப்பது இயல்பு. எதையோ ஒன்றை நினைத்து குழப்பமும் சூழத் தான் செய்யும். பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். பதட்ட உணர்வுகள், குழப்பம், சோகம் மற்றும் பயம் அனைத்தும் மிகவும் பொதுவானவை தான். ஏனோ பார்த்திபனுக்கு ரம்யாவின் இந்த உணர்வு குழந்தைத்தனமான விஷயமாக எண்ணினாலும், அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிதானத்தைக் கடைப்பிடித்தான்.

சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார்கள் இருவரும். சிறிது நேரத்தில் ஹரி வந்ததும் அதற்கு மேல் எதையும் மாலில் ரசிக்க அவர்களுக்கு மனம் இல்லாமல் போக, மூவரும் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்கள்.

பார்த்திபன், “ஹரி, மியாவை நீயே ட்ராப் பண்ணிட முடியுமா? எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு.”

“ஓகே மச்சி பை” என்று ஹரியும் ரம்யாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

பார்த்திபனுக்கு தனிமை தேவைப்பட்டது. அதனால் மன மாறுதலுக்காகவும் இலக்கின்றி வண்டியை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் நகரத்தில் சுற்றித் திரிந்தவன், நேரே தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு வண்டியை விரட்டினான். அவன் இருக்கும் மனநிலையில் வண்டியும் விருட்டென்று சாலையில் விரைந்தது.

உடற்பயிற்சி கூடத்தை அடைந்தவன், தீவிரமாக ஒவ்வொரு சாதனத்தையும் உபயோகிக்கத் தொடங்கினான். எவ்வளவு நேரம் நீண்டது என்று அவனுக்கு நினைவில்லை. இறுதியில் ஜிம்மில் இருக்கும் பயிற்சியாளர் அவனை தடுத்து நிறுத்தியதும் தான் சற்றே சமநிலையை மனதில் வலுக்கட்டாயமாக கொண்டு வந்தான்.

“இப்படி ஓவரா வொர்க் அவுட் செஞ்சு, செத்து கித்து போயிடாதே பார்த்தி. நானும் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன்.. நீங்க இங்க வந்து ரொம்ப நேரம் ஆகுது. நீ நிதானமா இல்லை. எடுத்து வெச்சிட்டு இங்கிருந்து கிளம்பு” என்று கறாராக மொழிந்தார் அந்த மத்திம வயது பயிற்சியாளர்.

பார்த்தி அந்த உடற்பயிற்சி கூடத்தின் வாடிக்கையாளர் என்பதால், பயிற்சியாளர் அவனை அறிவார். வெறும் தொழில் முறை பேச்சுகளோடு நில்லாமல், எப்போது பார்த்தாலும், ஒரு சிறு தலையசைப்பும், புன்னகையும் பரிமாறிக் கொள்வார்கள். சமயம் கிடைத்தால் பொதுவாக சில வார்த்தைகளை பேசி செல்வார்கள். அன்று அவன் வந்ததிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தவர், அவன் செய்யும் பயிற்சிகள் அவனின் முழு செறிவுத் தன்மையோடு செய்கிறானா என்றே புரியவில்லை அவருக்கு. முதலில் மெதுவாக பயிற்சிகளை செய்தவன், பின்பு மெல்ல மெல்ல ஒவ்வொன்றிலும் அவன் தீவிரத்தைக் கூட்டினான். அதனை கண்டதும் தான் ஜிம் பயிற்சியாளர் அவனை தடுத்து நிறுத்தினார்.

அவன் ஜிம் சென்ற நேரம், கூட்டமாக இல்லை. ஆதலால் சில சாதனங்களை பராமரித்துக் கொண்டு இருந்தார் பயிற்சியாளர். “என்னாச்சு பார்த்திபா.?”

“ஒன்னுமில்லை பாஸ்..” என்றவன் அங்கே கூரை வரை இருந்த நெடிய காலதர் முன் நின்று வெளியே தார் சாலையில் ஓடும் வாகனங்களை மேலோட்டமாக நோக்கினான்.

பிறகு, “எதுக்கு பாஸு காரணம் இல்லாம இதெல்லாம் நடக்கணும்..? வாழ்க்கையில் ஒன்றாக இருக்கவோ, கூட வாழ்வதற்கோ வாய்ப்பே இல்லாத போது விதி ஏன் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க வெக்கணும்.?” என்று ஆழ்ந்த வருத்தத்தோடு வினவினான் பார்த்திபன்.

ஜிம் பயிற்சியாளர் அவனை ஒருமுறை மேல்நோக்கி பார்த்தவர், “பார்த்திபா வாழ்க்கை ஒன்னும் அச்சடிக்கப்பட்ட புத்தகமோ இல்லைன்னா படத்துக்கான ஸ்கிரிப்ட் மாதிரி டக்குன்னு ஆரம்பிச்சி பெரும்பாலும் எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதுன்னு சொல்லி சுபம் போட்டு முடிச்சிட முடியாது. பாதி புத்தகம் படிக்கும் போதே கடைசிப் பக்கத்தை திருப்பி வாசிக்கவும் கூடாது. சில ஆச்சரியமான இதமான விஷயங்களும் நாம் அறியாமல் நிகழலாம். அந்த நிகழ்வுகள் நமக்கு சில பாடங்களை கற்றுத் தர வேண்டி நம் வாழ்விற்குள் வந்திருக்கலாம். அவர்கள் கத்துக் கொடுத்தப் பாடம் நமக்கு புரிஞ்சா, அதுக்கப்புறம் அவர்களுக்கான தேவை இல்லாமல் போகலாம். ஆனால் உனக்குன்னு இருக்கும் ஒரு விஷயம், நீ எங்கு போனாலும், உன்னை விடாது. அவங்க உன்கிட்ட வந்தா அவங்க உனக்கானவங்க அப்படி வரவில்லையென்றால், அவங்க என்னிக்குமே உன்னோடது கிடையாது அதனால சிலரை சந்திப்பதுக் கூட வாழ்க்கையில் ஒரு வரம் தான்.” என்று ஆழமான கருத்துக்களை கூறவும்,

“ஐயோ பாஸு சித்தாந்தம் பேசாதீங்க பாஸு காது வலிக்குது” என்று காதை குடைந்து கண் சிமிட்டினான்.

அவரோ அவன் அருகில் வந்து, “பார்த்திபா.. காரணக் காரியம் இல்லாம இங்க எதுவும் நடக்காது. ஒரு பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருட்டுன்னு அது நினைச்சுகட்டும்… மற்ற பூனை எல்லாம் எதுக்கு அதை அனுபவிக்காமல் ஒத்துக் கொள்ள வேண்டும்.. சோ நீயா நான் சொன்னதை உணர்ந்துப்ப” என்று கூறினார்.

“பேசாம நீங்க ஜிம் தொழிலை விட்டுட்டு தத்துவம் சார்ந்த அகத் தூண்டுதல் வகுப்பு எடுங்க; பிசினஸ் பிச்சிக்கும்” என்றான் கண்ணடித்து.

“எனக்கு வேற பிசினஸ் பண்ணனும்ன்னு தோணும் போது உன்கிட்ட அட்வைஸ் கேட்டுக்கறேன். இப்ப இடத்தை காலி பண்ணுங்க அட்வைசர். வந்து புலம்புவதை புலம்பிட்டு, மனபாரம் கொஞ்சம் குறைஞ்சதும் எகத்தாளத்தைப் பாரு” என்று அவரும் அவனை நக்கலடித்தார்.

இதுவும் கடந்து போகும் என்பது போல, தெளிந்த நீரோடையின் உள்ளே அடியில் கற்களோ மணலோ எது இருந்தாலும், மேலோட்டதில் தெளிவான நீர் ஓடுவதுப் போல ஒவ்வொருவருக்கும் ஏழு நாட்கள் அதன் போக்கில் சென்றது.

ஹரிக்கு தான் மனம் குதித்துக் கொண்டே இருந்தது. அன்று மாலில் சந்தித்த பிறகு, சிவாஞ்சலியை பார்த்து அவனுக்குள் இருந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்துக் கொள்ள இயலாமல் ஆர்வம் அவனை பிராண்டிக் கொண்டிருந்தது. மூன்று நாட்கள் அவள் விடுப்பு எடுத்திருக்க, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஹரி திருமண விஷயமாக விடுப்பு எடுத்திருந்தான்.

மீண்டும் வார இறுதியில் நிற்க, திங்கட்கிழமை முதல் வேலையாக அஞ்சலியிடம் அவள் திருமணம் பற்றி கேட்டு விட வேண்டும் என்று உறுதிப் பூண்டான். சம்பந்தப்பட்ட ஜீவன்கள் அமைதியாக கழிக்க, சுற்றி இருக்கும் நபர்கள் நால்வருக்கு தான் இருவரை பற்றியும் ஆர்வம் மேலோங்கியது. ஆம் சிவாஞ்சலியோடு மாலுக்கு வந்த இருவருக்கும் பார்த்திபனை அவள் தெரியும் என்று கூறியதைப் பற்றிக் கேட்டு அவளை குடைந்து எடுத்தார்கள். ஆனால் அவளுக்கு தான் பதில் சொல்ல விருப்பம் இல்லாமல் தட்டிக் கழித்தாள். ஏதேதோ காரணங்களை அடுக்கி வைத்திருந்தாள்.

பார்த்திபனும் வார இறுதியில் மாற்றம் வேண்டி, தன் பெற்றோர் வீட்டுக்கு கிளம்பிவிட்டான். பொழுது இனிமையாக கழிந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலையில் வீடு வந்து சேர்ந்தவனுக்கு, அலைபேசி யாரோ அழைப்பதை உணர்த்தியது. தெரியாத நம்பராக இருப்பதைக் கண்டு சந்தேகத்துடன் எடுத்துக் காதில் ஒற்றினான்.

“ஹலோ” என்கவும், எதிர்முனையில், “ஹலோ சார். இங்க ஒரு பொண்ணுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. அவங்க உங்க நம்பருக்கு தான் கடைசியாக கால் பண்ணியிருக்காங்க அதான் நானும் செஞ்சேன். சீக்கிரம் மருத்துவமனைக்கு வாங்க.” என்று கூறியவர் மருத்துவமனை விலாசமும் தெரிவித்தார்.

அவனுக்கு சட்டென்று ரம்யா நினைப்பு மட்டும் தான் வந்தது. பதட்டத்துடன் அவளுக்கு அழைத்தவன், அவள் அழைப்பை எடுக்கவில்லை என்று ஆனதும் பயத்துடன் சாவியை கையில் எடுத்துக் கொண்டு பார்க்கிங் விரைந்தான். அந்த இடைப்பட்ட நேரத்தில் மீண்டும் மீண்டும் அழைக்கவும் அவள் எடுக்கவே இல்லை. பார்த்திபன் பீதியடைந்தான். அவனது இடது கண்ணில் இரு சொட்டு கண்ணீர் கூட வந்து விட்டது. மனதுக்குள் “மியா மியா” என்று ஜபம் செய்தான்.

அவளுக்குத் தான் ஏதோ ஆகிவிட்டது என்று முடிவே செய்துவிட்டான். நேராக மருத்துவமனை விரைந்து வரவேற்பு பகுதியில் விசாரிக்க எத்தனிக்கும் நேரம், மீண்டும் அவனுக்கு அலைபேசி ஒலியெழுப்பியது. எடுத்தவன் நம்பரைக் கண்டதும், “ஹலோ” என்று குரல் நடுங்க மொழிய, மறுபக்கம், “ஹே ஸ்வீட் பன் எதுக்கு இவ்வளவு தடவை கால் பண்ணியிருக்க? எனி பிராப்ளம்?” என்று சாதாரனமாக கேட்க,

பார்த்திபன் சந்தேகத்துடன் இருமுறை தொண்டையை செருமி, “ரம்யா?” என்று கேள்வி தொக்கி நிற்க,

“ஹே என்ன ரம்யான்னு முழு பெயர் சொல்ற?” என்று அவன் நிலைமை தெரியாமல் சாவகாசமாக கதைக்க,

பார்த்திபன் எரிச்சல் ததும்ப, “இப்ப அது ரொம்ப முக்கியமா?… ” என்று கேட்டான்.

“எனக்கு முக்கியம் தான்”

“லூசு… நீ ஏன் என் அழைப்பை எடுக்கலை?” என்று சீற்றத்துடன் வினவினான்.

“டேய் நான் ஃபோனை சார்ஜ்ல வெச்சிட்டு நேச்சர் கால் அட்டென்ட் பண்ண போனேன்… ஆமா எதுக்கு இவ்வளவு தடவை கால் பண்ணிருக்க?”

அவளின் கேள்வியை சட்டைப் பண்ணவில்லை அவன். மாறாக, “நீ நல்லா இருக்க தானே… எங்க இருக்க?” என்று சிறு அச்சத்துடன் பார்த்திபன் வினவ,

“ம்… நான் நல்லா தான் இருக்கேன்… வீட்டில் சுகபோகமா பொழுதை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்”

“தேங்க் காட்” என்றான் மெலிதான குரலில். அவனுக்கு உயிர் போய் உயிர் வந்தது எனலாம்.

மேலும் சிறிது நேரம் அவளுடன் கதைத்து விட்டு ஃபோனை அணைத்தவன், தனக்கு யார் அழைத்திருக்கக் கூடும்…? ஒருவேளை தப்பாக எனக்கு கால் செய்து விட்டார்களா? என்று யோசித்தவன், எதற்கும் வரவேற்பறையில் கேட்டு விடலாம் என்று அங்கே சென்றான்.

6 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 7”

  1. CRVS 2797

    ஒருவேளை, ஆக்சிடணட் ஆனது சிவாஞ்ஜலிக்கா இருக்குமோ…???
    😥😥😥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *