Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 8

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 8

தனக்கு வந்த செல்ஃபோன் அழைப்பை பற்றிக் குறிப்பிட்ட பார்த்திபன், சரியான நபருக்கு அழைப்பு விடுக்கும்படி கூறிவிட்டு நிற்க, வரவேற்பறையில் கூறியதைக் கேட்டு மீண்டும் குழப்பமுற்றான்.

“சார் பேஷண்ட் செல்ஃபோன் வெச்சு தான் உங்களுக்கு ஃபோன் செஞ்சோம். சின்ன ஆக்சிடென்ட் தான் சார். மயக்கத்தில் இருக்காங்க வார்டு போய் பாருங்க” என்று அறை எண்ணையும் சொல்ல, அவனோ யாருடா அது என்று எண்ணியவாறே அவ்விடம் சென்றான்.

அறை வாசலில் நின்று கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான். அங்கே மயக்கத்தில் கண் மூடிக் கிடந்த பெண்ணைக் கண்டதும் திகைப்புற்றான் பார்த்திபன்.

“இவளா?” என்று சன்னக் குரலில் கேட்டுக் கொண்டான். அப்பெண்ணின் இடதுக்கையில் வேதி நீர்மம் செலுத்தப்பட்டு கொண்டிருக்க, அவளது வலதுக்கையை தொட்டு எழுப்பினான்.

“சாயா..?”, “மிஸ் சாயா?” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது மாடல் சாயா தான்.

பார்த்திபன் குரலில், அவள் விழிப்பு வந்து கண் மலர்த்தினாள்.

கண் விழித்து சற்று நேரம் அவளுக்கு சுற்றுப்புறம் ஏதும் விளங்கவில்லை. பேந்த பேந்த முழித்தவள், மீண்டும் பார்த்திபன் விளித்த பின் அவன் முகத்தில் பார்வையை பதித்தாள்.

“வாங்க பார்த்தி. நான் எப்படி உங்கள் வீட்டுல இருக்கேன்? இங்கே எப்படி வந்தேன்?”

“சுத்தம்… நல்லா சுத்திப் பாருங்க! இது என் வீடு இல்ல. மருத்துவமனை. உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு எனக்கு கால் வந்துச்சு அதான் இங்கே வந்தேன்” என்றான் அமைதியாக, தன்னுள் எழுந்த சலிப்பை மறைத்தப்படி!.

“ஓஹோ… ஸ்… ஆ” என்று தன் இடக்கையை வேகமாக நகர்த்தியதால் வந்த சுருக்கென தைத்த வலியில் முனகினாள்.

“காம் டௌன். டிரிப்ஸ் ஏறுது.” அவள் அடுத்து தன் இடதுக்கையை மீண்டும் பார்த்தாள்.

“என்னாச்சு? எப்படி விபத்து ஏற்பட்டுச்சு?” என்று பார்த்திபன் வினவ,

“எனக்கும் இந்த மருத்துவமனைக்கும் ஏதோ பந்தம் உண்டாகிடுச்சு போல… இரண்டாவது முறை இந்த ஹாஸ்டலுக்கு வரேன்” என்று அசடு வழிந்தாள் சாயா.

அவனோ உக்ர பார்வையை அவள் மீது வீசினான்.

“என்னாச்சு?”

“வேகத்தடையை பார்க்காம வண்டி ஓட்டி விழுந்துட்டேன்” என்றாள்.

“கண்ணு என்ன பின்னாடியா இருக்கு உங்களுக்கு? கவனமா ஓட்டத் தெரியாதுன்னா எதுக்கு வண்டி எடுக்கறீங்க?” என்று குரலை உயர்த்தாமல் அவளிடம் காய்ந்தான்.

“சாரி… கால் பேச ஃபோனை எடுக்கும் போது கவனம் மாறிடுச்சு”

“என்கிட்ட சாரி சொல்ல வேண்டிய அவசியமில்லை மிஸ்.சாயா. வாகனம் ஓட்டும் நேரம், அலைபேசி உபயோகிக்கக் கூடாதுன்னு தெரியாதா? அந்த பொது அறிவு கூட கிடையாதா?. உங்களால் மற்றவர்களுக்கும் இடைஞ்சல்.”

“உங்ககிட்ட தான்…”

“ஒரு மாடலுக்கு தன் உடம்பு எவ்வளவு முக்கியம்? அந்த அக்கறையும் இல்லை. இப்படி கைகாலில் அடிப்பட்டு கிடந்தால், என்னாவது?” என்று கேட்டவனை பாவமாகப் பார்த்தாள்.

அப்போது மறுபக்கம் திரைச்சீலை விலகும் சத்தம் கேட்கவும், அப்பக்கம் முகத்தை திருப்ப, அங்கே கை புஜத்தை தேய்த்துக் கொண்டு இருந்தவள் சிவாஞ்சலி. மீண்டும் திகைத்தான் பார்த்திபன். கூடவே செவிலியர் ஒருவர் நிற்க, அவர் பார்த்திபனின் பக்கம் திரும்பி, “ஏன் தம்பி அந்த பொண்ணே அடிப்பட்டு கிடக்குது. ஆறுதலா நாலு வார்த்தை பேசாம இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க. லேசான சிராய்ப்புகள் தான். ஆனால் வலி என்பது பொது தானே.” என்றுவிட்டு போனார்.

பார்த்திபன் சிவாஞ்சலியை நோக்கினான். ஆனால் அவள் அவனை மேலோட்டமாக கண்டு விட்டு வெளியே சென்றுவிட்டாள். பார்த்திபன் சாயாவை அப்படியே விட்டுவிட்டு அவளை நோக்கி விரைந்தான்.

“சிவாஞ்சலி, சிவாஞ்சலி ஒரு நிமிஷம் நில்லு”

“..”

“அஞ்சு நில்லுன்னு சொல்லிட்டே இருக்கேன், நீ பாட்டுக்குப் போனா என்ன அர்த்தம்?” அவள் அஞ்சு என்று கேட்டதுமே சட்டென நின்றாள்.

அவனும் அவள் முன்னே நின்று உற்று நோக்கினான். “நீ இங்க என்ன பண்ற?”

“அதை கேட்க நீங்க யாரு? அண்ட் நான் சிவாஞ்சலி; செல்ல பேர் வெச்சு கூப்பிடற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்று உக்ர பார்வையுடன் மொழிந்து விட்டு நகர்ந்தாள்.

அவள் விலகி நகரும் போதே மீண்டும் அவளை வழிமறித்து நின்றான். அவளது முறைப்பை சட்டை செய்யாமல், “எதுக்கு ஹாஸ்பிடல் வந்திருக்க? என்னாச்சு உன் உடம்புக்கு? நீ நல்லாருக்க தானே? உன் கணவர் எங்க?” என்று வருத்தமாக வினவினான்.

“ஏன் நான் ஹாஸ்பிடல் வரக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கா என்ன? நீங்க கூடத்தான் மருத்துவமனை வந்திருக்கீங்க நான் ஏதாவது கேட்டேனா?” அவள் விழிகள் மட்டும் அல்லாது அவளது வார்த்தைகளும் சூடாக அனலை கக்கியது.

“எவ்வளவு திமிரா…?” என்று கோபமாக தொடங்கியவன், சற்று நிதானத்துடன் மீண்டும் அவளிடம், “எனக்கு புரியல… உனக்கு என்ன பிரச்சனை? திடீர்னு காணாமல் போனது நீ? அன்னைக்கு திடீர்னு திரும்ப கண்ணு முன்னால வந்து நல்லா இருக்கீங்களா பார்த்தின்னு கேட்டதும் நீ தான்! இப்ப அக்கறையா விசாரிக்க வந்தால், என் மேலே எரிஞ்சு விழற… உன்னை என்னால புரிஞ்சுக்க முடியல… எப்படியோ போ… உன்கிட்ட பேச வந்தேன் பாரு என்னை தான் சொல்லணும்?!” என்று அவளுக்கு ஏட்டிக்குப் போட்டியாக அவனும் கனலென வார்த்தைகளை கொட்டினான்.

சிவாஞ்சலி பதில் பேசாமல் அவனையே உற்று நோக்கினாள்.

“என்ன முறைக்கிற? எதுக்கு திரும்ப என் முன்னாடி வந்த?” என்று பார்த்தி கோபமாய் கேட்க, “சிவா ஊசிப் போட்டுடியா இல்லையா?” என்று அங்கே வந்தான் அன்றைக்கு மாலில் சந்தித்த இளைஞன். பார்த்திபன் அவனை கண்டதும் பார்த்திபனின் தலை வலிக்க ஆரம்பித்தது. பின்பு ஒரு சிறு தலையசைப்புடன் விலகிச் சென்றான்.

‘அவளை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள, அவள் கணவன் இருக்கிறான்? நீ ஏன் பதறிட்டுப் போய் அவள் முன்னாடி நின்று அவளையே திட்டிட்டு வர?’ என்று அவனது மனமே எகத்தாளமாக கேட்டது.

சாயா இருந்த அறைக்கு வந்தான் பார்த்திபன். அவள் அவனையே ஆர்வமாக பார்த்தாள். “பார்த்தி?”

அவன் அமைதியாக அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பதித்தான்.

“ஹலோ… பார்த்தி?”

“ஹான்”

“நான் எதுக்கு உங்களுக்கு கால் பண்ணேன், எதுக்கு பேச நினைச்சேன் எதுவும் கேட்க மாட்டீங்களா?”

“ம்ம்”

அவனின் கவனம் எங்கோ இருப்பதை உணர்ந்த சாயா “என்னாச்சு பார்த்தி? என் மேல கோபமா இருக்கீங்களா?”

“என்ன?” என்று புரியாமல் கேட்டான்.

“இல்ல இந்த நேரத்துக்கு ஹாஸ்பிடல் வர வேண்டியதை நினைச்சு என் மேல கோபமான்னு கேட்டேன். உங்களுக்கு தொந்தரவு கொடுக்க நான் நினைக்கலை. ஆனா”

“ம் சரி நான் கிளம்பறேன்..” என்று இருக்கையிலிருந்து எழுந்தவன், “டேக் கேர்” என்று சாயாவிடம் மேம்போக்காக நாகரீகம் கருதி கூறிவிட்டு வெளியே செல்ல எத்தனித்தான். அதே நேரம் சாயாவின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.

“பார்த்தி?”

“இன்னும் என்ன?”

“நான் ஏன் கால் பண்ணேன் என்று…”

“ஏதாவது ஃபோட்டோஷூட் தானே? முதலில் உங்களோட உடம்பு மேல் கொஞ்சம் அக்கறை காட்டுங்க அப்புறம் வேலையைப் பத்தி யோசிக்கலாம்” என்றான் அவன் அழுத்தமாக!

“இல்ல இது என் சொந்த விஷயம்..”

“உங்க சொந்த விஷயத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டுக் கொண்டே வாயிலில் இருந்து அவளின் படுக்கை அருகே வந்தான் பார்த்திபன்.

“அது… நான் கொஞ்ச நாளாவே உங்களிடம் பேச நினைச்சேன். “

“சீக்கிரம் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று அவளிடம் கட்டளையிட்டான்.

“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களை பார்த்தாலே எனக்கு சந்தோஷமா இருக்கு. உங்களோட பேச, பழக ஆர்வம் எனக்குள் தானா தோணுது. நானும் கொஞ்ச நாளில் இதெல்லாம் போயிடும்ன்னு நினைச்சு தான் மனசுக்குள் ஓரமா தூக்கி போட்டேன். ஆனா நான் உங்களை நினைக்க கூடாதுன்னு உறுதி எடுத்தப்புறம் தான் இன்னும் அதிகமாக உங்க நினைப்பு வர ஆரம்பிச்சது. எனக்கே என்னை நினைச்சா பைத்தியமா நான்னு கேட்டுக்க தோணுது ஆனால் அந்த கேள்வி கூட எனக்கு அழகா தெரிஞ்சுது. இது காதல் தான்னு நான் நினைக்கிறேன்.”

“வாட் ரப்பிஷ்?” என்று எகிறினான் பார்த்திபன்.

“இல்ல நான் முழுசா சொல்லிடறேன்… இதுக்கு அப்புறம் எனக்கு சொல்ல தைரியம் வருமான்னு தெரியாது…” என்றவள் அவன் முகத்தை நோக்கினாள். அவன் அமைதியாக நிற்கவும்,

“அன்னைக்கு இராத்திரி உங்ககிட்ட பேச தான் கால் பண்ணேன். ஆனால் என்ன பேசுவது, எப்படி சொல்றதுன்னு புரியாம ஃபோட்டோஷூட்டை காரணம் காட்டினேன். உங்களை தைரியமா வர சொன்னாலும், உள்ளே உதறிட்டே இருந்தது அதனால கவனத்தை திசை திருப்ப ஜுஸ் ஆர்டர் பண்ணினேன் ஆனால் அந்த பார்-டெண்டருக்கு என்ன காதில் விழுந்துச்சுன்னு சத்தியமா தெரியல… ஜுஸ் கூட மிக்ஸ் பண்ணி கொடுத்திருக்கிறான். அது முதல் சிப்பிலேயே எனக்கு புரிஞ்சாலும், ஒன்றில் ஒன்னும் ஆகி விடாதுன்னு நினைச்சேன். ஆல்கஹால் சதவீதம் நான் பார்க்கலை அதான்…” மீண்டும் இடைவெளி விட்டு அவனை பார்த்தாள். அவனோ சிலையென நிற்கவும் ஆழ்ந்த மூச்சொன்றை வெளியிட்டவள்,

“உங்களை இப்பவே பதில் சொல்ல நான் வற்புறுத்த மாட்டேன்… நீங்க யோசிச்சு பதில் சொல்லுங்க… பட் யோசிங்க… அது போதும்…” என்றாள்.

கொஞ்ச நேரம் அவன் எதேனும் பேசுவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள் சாயா.

“நான் பேசி முடிச்சிட்டேன்… நீங்க எதுவும் சொல்லலையே” என்று கேட்டாள் சாயா.

“சாயா. நீங்க எதிர்பார்க்கிற பதிலை நான் சொல்ல மாட்டேன். ஏன்னா எனக்கு உங்க மேல எந்தவித அபிப்ராயமும் இல்ல. அதுவும் குடிக்க காரணம் காரியம் தேடறவங்களை பத்தி என் நினைப்புல கூட வைக்க கூடாதுன்னு நினைக்கிறவன் நான்.”

“என்னை பார்த்தா குடிகாரி மாதிரி இருக்கா உங்களுக்கு?”

“அன்னிக்கு அதானே நடந்துச்சு? நான் கண்ணால் பார்த்தது பத்தி தானே சொன்னேன்.”

“அதான் என்னோட முதல் ட்ரிங்க் பார்த்தி!”

“சோ அவார்ட் ஏதாவது கொடுக்கப் போறாங்களா?”

“சாரி பார்த்தி இனிமே அப்படி பண்ண மாட்டேன்..”

“நீங்க என்ன வேண்டுமானால் பண்ணலாம் மிஸ் சாயா… நான் ஏற்கனவே சொன்னது தான். உங்க ஹெல்த் மேலே உங்களுக்கு தான் அக்கறை இருக்கணும் அண்ட் ஏதோ காதல் கீதல் சொன்னீங்களே… வெயிட்… நான் சொல்லி முடிச்சிடறேன்” என்று இடையிட்டவளை கையமர்த்தி மீண்டும் பேசினான்.

“எனக்கு உங்க மேல விருப்பம் இல்ல மிஸ் சாயா சோ தேவையில்லாம உங்க வாழ்க்கையை என்னோட பிணைக்கப் பார்க்காதீங்க” என்று ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரிக்கை குரலில் மொழிந்துவிட்டு விருட்டென கிளம்பிவிட்டான்.

பார்த்திபன் பேசியதைக் கேட்டு சாயாவுக்கு கண் கலங்கியது. அப்போது, “உள்ளே வரலாமா?” என்று ஒரு குரல் கேட்டது. வாயிலில் சிவாஞ்சலி நின்றாள்.

“எஸ் பிளீஸ்.”

“பக்கத்து படுக்கையில் என் ஃபோனை வெச்சிட்டுப் போயிட்டேன் அதை எடுக்க தான் வந்தேன்” என்றாள் சிவாஞ்சலி. ஃபோனை எடுத்துக் கொண்டு நடந்தவள், வெளியேறும் முன் சாயாவை நோக்கி ஆழ்ந்தப் பார்வை ஒன்றை வீசிவிட்டு சென்றாள்.

மறுநாள் அலுவலகம் சென்ற சிவாஞ்சலியை பிடித்துக் கொண்டான் ஹரி.

“அஞ்சலி… என்னோட சந்தேகத்தை தீர்த்து வைங்களேன்” என்று அவளிடம் மீண்டும் மீண்டும் நச்சரித்தான்.

“ஐயோ என்ன ஹரி?”

“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்று பட்டென்று கேட்டான் ஹரி. சுற்றி இருந்த நாலு தட்டியிட்டு (cubicle) அமைத்திருந்த அறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் சத்தமாக வினவ, அஞ்சலி பதறிப் போனாள்.

நல்லவேளையாக, அவர்களை தவிர அனைவரும் தேநீர் அருந்த சென்றிருக்க, நிம்மதி பெருமூச்செரிந்தாள்.

“யாரும் இல்லைங்கிறத கவனிச்சு தான் சத்தமா கேட்டேன். சொல்லுங்க அஞ்சலி உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?”

“ஏன் கேட்கறீங்க?”

“தெரிஞ்சுக்க கேட்கிறேன்”

“ப்ச். அதான் தரவுத்தளத்தில் இருக்குமே…” என்றுவிட்டு தன் கோப்பையை எடுத்துக் கொண்டு உக்கிராணம் (pantry) சென்றாள்.

அவள் சென்றதும் ஹரி உடனடியாக பார்த்திபனை அழைத்தான். “டேய் மச்சி நான் சொன்னது தான் கரெக்ட். அஞ்சலிக்கு கல்யாணம் ஆகலை” என்று சவாலில் வென்றுவிட்ட உணர்வை குரலில் புகுத்திக் கூறினான்.

“டேய் வேலை நேரத்துல கூப்பிட்டு யாருக்கு கல்யாணம் ஆச்சு, ஆகலைன்னு எனக்கு சொல்றியே… இதை தெரிஞ்சு நான் என்ன செய்யப் போறேன்..?” என்று அலுத்துக் கொள்ள,

“மச்சி அஞ்சலி மச்சி.. மாலில் பார்த்தோமே. உன் எக்ஸு” என்று ஞாபகப்படுத்தியபடி ஹரி பேசிக் கொண்டே இருந்தான்.

ஆனால் எதிர்முனையில் மச்சி அஞ்சலி என்று தொடங்கும் போதே அழைப்பு துண்டிக்கப் பட்டிருப்பதை உணராமலேயே பேசிக் கொண்டிருந்தான் ஹரி.,

“ஹலோ ஹலோ” என்று குரலை உயர்த்தினான். மனதுள் பார்த்திபனை கண்டபடி திட்டினான்.

“நான் அப்புறம் பேசறேன் மச்சி” என்று ஹரி பேசுவதை முழுவதும் கேட்காமலே அழைப்பை துண்டித்த பார்த்திபன், அடுத்த நொடியே ஹரிக்கு அழைத்துவிட்டான். ஹரி கூறியதில் மச்சி அஞ்சலி என்ற இரு வார்த்தைகளை காதில் வாங்கி உணர்ந்ததும் மீண்டும் தொடர்பை அலைபேசியில் உயிர்பித்தான்.

“ஹரி..”

“சொல்லு டா ஃபேஷன் இண்டஸ்ட்ரியை தலையில் தாங்குபவனே” என்றான் நக்கலாக!

“யாருக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னே?”

“யாருக்கோ? எவருக்கோ மச்சி… நீ வேலையை பாரு! பை”

“மவனே இப்ப நீ சொல்லலன்னு வையேன்; மியா கிட்ட எடக்கு மடக்கா எதாவது சொல்லிடுவேன்…”

“அவளுக்கு தான் என்னை பத்தி தெரியுமே… நீ என்ன புதுசா சொல்ல போறே… ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன், நான் எதையும் ரம்மிகிட்ட மறைக்கிறதில்ல மச்சி”

“எது வேணாலும் சொல்லுவேன்.. வீக்கென்ட் குடும்பத்தோட கோயிலுக்குப் நீ போறேன்னு சொல்லிட்டு ஃப்ரெண்ட்சோட கோவா போயிருக்கன்னு சொல்லுவேன்.” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“அதெப்படி..”

“அவள் நம்பும்படி சொல்லுவேன் மச்சி. எப்படி வசதி?”

“ஐயையோ நீ செஞ்சாலும் செய்வ! சரி நான் சொல்லிடறேன், இப்ப தான் அஞ்சலிகிட்ட கேட்டேன்… தரவுத்தளத்தில் இருப்பது தான் கரெக்ட்ன்னு சொல்லிட்டா. அப்படின்னா கல்யாணம் ஆகலைன்னு தானே அர்த்தம்.” என்றான் ஹரி.

“ம் சரி மச்சி. நான் ஃபோனை வைக்கிறேன்” என்று எதிர்முனையில் பேசும் முன் வைத்துவிட்டான்.

பார்த்திபன் அவளுக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதை கேட்டவுடன், மகிழ்ச்சியில் துள்ளி குதித்து விடவில்லை. மாறாக, அன்று மருத்துவமனையில் அவள் பேசியதே மனதில் தோன்றி கோபப்படுத்தியது.

அவள் என்ன பேசினாலும், அவளை பார்க்கும் ஆவல் மட்டும் அவனுள் சற்றும் குறையவில்லை. ஏதாவது காரணம் காட்டி மீண்டும் மருத்துவமனை சென்றால், அவளை சந்திக்க இயலுமா என்ற கேள்வியும் அவனை குடைந்து எடுத்தது.

அப்போது அவனது மனமோ, ஹரியும் அவளும் ஒரே அலுவலகத்தில் தானே வேலை செய்கிறார்கள். அவனை காண சென்றதுப் போல சென்றால் அவளை காணவும் வாய்ப்பு அமையும் அல்லவா? என்று உரைத்தது.

6 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 8”

  1. CRVS 2797

    எஸ்… ஹரியும் அஞ்சலியும் ஒரே ஆஃபிஸ்ல தானே வேலை பார்க்குறாங்க… பேசாம அங்கே போய் பார்க்க வேண்டியது தான் !
    😜😜😜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *