Skip to content
Home » நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 1

நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 1

பாமேட் அபார்ட்மெண்ட்ஸ்

தன் இரு சக்கர வாகனத்தை நேராக ‘பி’ பிரிவு பார்க்கிங் லாட்டில் நிறுத்திவிட்டு லிஃப்ட் நோக்கி நடந்தாள் ரம்யா.

லிஃப்ட் அந்த நேரத்திற்கு சரியாக கீழ் தளத்தில் இருக்க, உள்ளே மின் தூக்கியில் ஏழாம் தளத்திற்கான பொத்தானை அழுத்தி நேரம் பார்த்தாள்.

ஏழாம் தளத்தில் ஐந்தாவது வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அழுத்தினாள். சிறிது நேரம் காத்திருந்தவள், “எப்பவும் போல நானே தான் திறக்கணுமா..? இவன் எப்ப வரான், எப்ப தூங்கறான் ஒன்னும் தெரியல” என்று தனக்கு தானே பேசிக் கொண்டவள், தன்னிடம் இருந்த சாவியை கொண்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

அந்த வீட்டினுள் நுழைந்து, முதலில் எதிரே அமைந்திருந்த பலகணி திரைச்சீலைகள் அனைத்தும் ஒதுக்கிவிட்டு சூரிய ஒளியை உள்ளே படரச் செய்தாள்.

அவனது குட்டி சமயலறையில் (kitchenette) தனக்கு தேநீர் தயாரித்துக் கொண்டு, அவனுக்கு பால் சேர்க்காமல் கொட்டை வடிநீர் (காஃபி) தயாரித்துக் கொண்டிருந்தாள்.

அதுவரை கூட அவன் எழுந்து வரவில்லை என்றதும், “எருமை. சூரியன் சுட்டெரிக்கும் நேரம் கூட வந்தாச்சு இவன் இன்னும் தூங்கிட்டு இருக்கான். இவனை எழுப்பி விடத்தான், எங்க வீட்டுல என்னை பெத்துப் போட்டிருக்காங்க.” என்றவாறே, வீட்டின் ஒரு படுக்கையறை கதவை தள்ளி உள்ளே சென்று இடுப்பில் கை வைத்து நின்றாள் ரம்யா.

“டேய் பன்னு.. எழுந்திருக்க மனசில்லையா..?” என்று கேட்டாள்.

“..”

“ஸ்வீட் பன் எழுந்திரு மணி பதினொன்று. இன்னும் என்ன தூக்கம்?”


“ம்ம்..”

“நாள் பூரா ரெஸ்ட் தானே எடுத்திட்டு இருந்த. உனக்கு இன்னும் தூக்கம் பத்தலையா” என்று படுக்கையின் பக்கப்பீடத்தில் மெதுவாக அமர்ந்தாள்.

“ம்ம் இல்ல. நேத்து அவசரமா ஒரு ஷூட் இருந்தது. மதியம் கிளம்பி போய் காலைல மூன்று மணிக்கு தான் வந்தேன்.. பிளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடேன்.” என்று கண்களை திறக்காமலே பேசினான் ஸ்வீட் பன் என்கிற பார்த்திபன்.

“ஒழுங்கு மரியாதையா எழுந்து பல் துலக்கி வா.. உன்னோட ட்ரிங்க் ரெடியா இருக்கு” என்று அவன் தோளில் தட்டினாள் ரம்யா.”

டக்குன்னு கண்களை திறந்து, “பிளாக் லேபிள் இல்லனா கோல்ட் லேபிள் எது வாங்கிட்டு வந்த மியா? ” என்று கேட்கவும், ரம்யா முறைத்தாள்.

“உன்கூட சின்ன வயசிலிருந்து நண்பியா பழகறதுக்கு உன்னை எழுப்பி விட வந்ததே பெருசு.. இதுல உனக்கு சரக்கு வேற வாங்கனுமா.. எருமை எருமை..” என்று தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள் மியா என்கிற ரம்யா.

அதை லாவகமாக பிடித்து, படுக்கையை விட்டு எழுந்து நின்றான் பார்த்திபன்.

“எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் டா.. தண்ணி அடிக்காதவனுக்கு எப்படி பிராண்ட் பெயர் எல்லாம் தெரியும்? இல்ல வீட்டுக்கு மட்டும் நீ டீட்டோடலர் வேஷம் போட்டுட்டு இருக்கியா?” என்று கேட்டு கண்ணடித்தாள்.

“ஏய்.. ஒரு விஷயம் பார்த்தும் தெரிஞ்சுக்கலாம் அதை நாம அனுபவிச்சா தான் தெரிஞ்சுக்கணும் என்று அர்த்தமில்லை” என்று அவளது உச்சந்தலையில் லேசாக சிலுப்பினான்.

“முடியை கலைக்காத பன்னு.. சீக்கிரமா கிளம்பி வா. ஒரு மணிக்கு வர சொல்லியிருக்கேன். அவன் கூடப் நாம ரெண்டு பேரும் பேசிப் பார்த்தப் பிறகு தான் அப்பாகிட்ட ஓகே சொல்லணும்.” என்று அறையை விட்டுப் போனாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் தயாராகி கிட்சன் வந்து ரம்யா கொடுத்த காபி கோப்பையில் ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெய் கலந்து குடிக்கலானான்.

“என்ன காம்பினேஷன் டா இது உவேக்”

“நீயும் ட்ரை பண்ணி பாரு.. அப்ப தெரியும்”

“எனக்கு வேணாம் நீயே குடி.. இதெல்லாம் விடு.. உன் ஸ்டுடியோ ரூமை கொஞ்சம் க்ளீன் பண்ணலாம் தானே.. குப்பை கிடங்கு மாதிரி போட்டு வச்சிருக்க.” என்று குறை பாட ரம்யா தொடங்கவும், பார்த்திபன் அவசரமாக காபி கோப்பையை மேடையில் வைத்துவிட்டு, “இப்ப வா, உன் அவரை பார்க்கப் போகலாம்.” என்று கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

“ஹலோ மிஸ்டர், அவரை துவரை எல்லாம் கிடையாது. முதலில் பேசி, என்னோட கருத்துக்கு, நிபந்தனைக்கு எல்லாத்துக்கும் சம்மதம் சொன்னா மட்டும் தான் ஹலோ, ஹாய் இல்லனா பை பை தான்” என்றாள் அவளும்.

பார்த்திபனும் ரம்யாவும் சிறு வயது முதலே நண்பர்கள். தங்கள் பெயரை சரியாக சொல்ல தெரியாத பருவத்திலிருந்தே தோழமை பாராட்டுபவர்கள்.

பள்ளியில் பார்த்து, அறிமுகம் ஆக, இருவருக்குள்ளும் நட்பு விரிந்து இன்று வரை தொடர்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் அவளது வண்டியை விட்டுவிட்டு, அவனது பைக்கில் இருவரும் பயணம் செய்தார்கள்.

“அந்த பையனை எங்க வர சொல்லியிருக்க?”

“ரைன் ட்ரீ கிளப், நீலாங்கரை” என்றதும், சட்டென வண்டியை பிரேக்கிட்டு நிறுத்தவும், அவள் திடுக்கிட்டு அவனது தோள்பட்டையை அழுத்தமாக பிடித்தாள்.

“என்னாச்சு ஸ்வீட் பன்”

“ஒன்னுமில்லை.. சாரி” என்று ஒரு விதமான உள்ளே சென்ற குரலில் கூறிவிட்டு, மீண்டும் வண்டியை உயிர்ப்பித்து சாலையில் செலுத்தினான்.

பழக்கத்தில் வண்டியை செலுத்தினாலும், பார்த்திபன் மனதிற்கு கடிவாளம் போட இயலாமல், பழைய நினைவுகள் நெஞ்சை கீற, அதிலிருந்து மீள வழி தெரியாமல் தத்தளித்தவாறே ஓட்டினான்.

ஒரு வழியாக உணவு விடுதிக்கு வந்தவர்கள், ரிசர்வ் செய்த டேபிளில் அமர்ந்தார்கள்.

பார்த்திபன் தன் முக மாறுதலை மறைக்க, தன் அலைபேசியை நோண்ட, ரம்யா, “என்ன ஸ்வீட் பன்.. திடீர்னு ஏன் உம்முனு மாறிட்டீங்க..”

“ஒன்னும் இல்லையே. சரி அந்த மாப்பிள்ளைக்கு ஃபோன் போட்டு எங்க இருக்காருன்னு கேளு.” என்று பேச்சை அவள் பக்கம் மாற்ற,

ரம்யா, தன் வலது கன்னத்தில் கை வைத்து அவனையே ஊடுருவிப் பார்த்தாள்.

“என்கிட்ட உன்னால எதையாவது மறைக்க முடியுமா.. உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி.. என்ன விஷயம் சொல்லு”

“ஒன்னுமில்லை மியா.. எனக்கு தலை வலிக்குது”

“ஓ.. அப்படியா.. ஒரு நிமிஷம்.. இந்தா.. இதை தடவிக்கோ.. தடவிட்டு நிஜ காரணத்தை சொல்லு” என்று தன் கைப்பையை குடைந்து நீலகிரி தைலம், ரோல் ஆன், கோடரி தைலம், சண்டு தைலம், புலி குறியிட்ட தைலம் என பையில் இருந்த அனைத்து வித வலி நிவரணியையும் எடுத்து உணவு மேஜையில் வைத்தாள்.

“என்ன மியா இது.?! ஏதாவது ஏஜென்சி ஒப்பந்தம் எடுத்திருக்கியா என்ன? இவ்வளவு வலி நிவாரணி தைலம் சந்தையில் இருக்கா?” என்று சிரித்தான்.

“பேச்சை மாத்தாத.. நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்.. கொஞ்ச மாசமாகவே நீ அப்பப்ப ஆஃப் ஆகிடற.. எனக்கு இன்னிக்கு காரணம் தெரிஞ்சாகணும்.”

“இந்தம்மா பெரிய துப்பறிவாளி. கண்டுப்பிடுச்சிட்டாங்க. சில்லாக்ஸ் பூனை. நான் தான் அப்பவே சொன்னேன் தானே!, நைட்டு ஷூட் இருந்தது. தூக்கம் சரியா இல்ல”

“ஆஹா ஹாஹா.. நீ இப்ப தான் நைட் ஷூட் புதுசா போயிட்டு வரே, உனக்கு செட் ஆகலை. யாருகிட்ட கதை விட்டுட்டு திரியற? இப்ப சொல்ல முடியுமா முடியாதா?”

“நான் இப்ப பேசலாமா? உங்க டாக்ஸ் முடிஞ்சுதா?” என்று கைகளை மார்போடு கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ஒருவன்.

“நீங்க..” என்று வார்த்தைகளை கோர்க்க தேடி இழுத்தாள் ரம்யா

“ஐம் ஹரிரஞ்சன்” என்று பார்த்திபனின் கைகளை குலுக்கி தன்னை அறிமுகம் செய்தான் ரம்யாவுக்கு அவள் அப்பா பார்த்த மாப்பிள்ளை.

“ஹலோ ஐம் பார்த்திபன்”

“இவர் தான் நீங்க சொன்ன ஸ்பெஷல் நபரா மிஸ் ரம்யா”

“ம்ம் ஆமா என்னோட க்ளோஸ் ப்ரெண்ட், சோல்மேட் எல்லாமே.” என்றாள் பெருமையாக.

“ம்ம்ஹ்ம்ம் ஐ சீ”

மூவரும் அமர்ந்து சற்று நேரம் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தார்கள். வேண்டிய உணவுகளை தருவித்துக் கொண்டார்கள். இதற்கிடையே ரம்யா ஹரிரஞ்சனிடம், “பார்த்திபனும் நானும் இருபத்தி இரண்டு வருஷமா பழகிட்டு இருக்கோம். அவன் எனக்கு ரொம்ப முக்கியம். எங்க உறவை புரிஞ்சுக்க தெரிஞ்சவங்க அண்ட் மதிக்க தெரிஞ்சவரை தான் நான் கல்யாணம் செஞ்சுக்க நினைக்கிறேன். எனக்கு என் அப்பா எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி பார்த்திபன் எனக்கு முக்கியம். சோ என்றைக்குமே எங்க விஷயத்தில் தெளிவா சந்தேகமில்லாமல் இருப்பீங்கன்னு உங்களுக்கும் எனக்கும் உறுதி அளித்தால் மட்டும் தான் இந்த கல்யாணம் ஓகே ஆகும் மிஸ்டர் ஹரிரஞ்சன். எனக்கு வேற எந்த நிபந்தனையும் இல்ல.” என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள் ரம்யா.

பார்த்திபன் எதுவும் பேசாமல் அமைதியாக, கண்களில் பாசத்துடன் ரம்யாவை பார்த்தான். ஹரிரஞ்சன் அவளை ஆச்சரியமாகவும் குறுகுறுப்பு நிறைந்த பார்வையுடனும் எதிரில் இருப்பவளைக் கண்டான்.

அவன் என்ன பதில் சொல்ல போகிறான் என்று ஆவல் எதுவும் இல்லாமல், “நீங்க இன்னிக்கே உங்க பதிலை சொல்லனும்னு அவசியம் இல்லை மிஸ்டர். நீங்க யோசிச்சு நிதானமா சொன்னாலும் ஓகே தான் பட் தெளிவா நான் சொன்னதை யோசிச்சு முடிவெடுங்கள். வாழ்க்கை ரொம்ப பெருசு என் வருங்கால வாழ்க்கைத்துணை என் நண்பனை என்னிக்கும் குறைச்சு மதிப்பிடுவது மற்றும் சந்தேகப்படுவது என்பதெல்லாம் எனக்கு ஒத்து வராது அதான் சொல்றேன்” என்று முடித்தாள் ரம்யா.

மெல்லிய புன்னகையுடன், “சோ நான் உங்க லைஃப் பார்ட்னர் என்று ஓரளவுக்கு உங்க மனசுக்குள்ள பதிஞ்சுடுச்சு போல” என்றான் ஹரிரஞ்சன்.

“வாட்?”

“ஜஸ்ட் ஜோகிங். நான் நல்லா சிந்திச்சு என் முடிவை உங்களுக்கு சொல்றேன். நாளைக்கே எனக்கு கல்யாணம் பண்ணிக்க எந்த எண்ணமும் இல்ல. எனக்கும் ஸ்மூத்தாக கொண்டுப் போக ஆசை” என்று ஹரிரஞ்சன் சொன்னதும், பார்த்திபனும் உதடுகளை மலர்த்தினான்.

அதன் பிறகு ரம்யா என்ற ஒரு ஜீவன் அங்கே இருப்பது போல உணராமல் ஆண்கள் இருவரும் பேசிக் கொள்ளவும், அவளும் அவர்களை அவதானித்துப் பேசாமல் உணவை மட்டும் வாய்க்குள் மாவாக்கி வயிற்றுக்குள் தள்ளினாள்.

“உங்க வேலை பற்றி நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று பார்த்திபன் உரையாடலை அவர்களுக்குள் ஆரம்பிக்க,

ஹரிரஞ்சன் அதன் பிறகு பேசவும், பொழுது இனிமையாக கடந்தது.

“நான் பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள துறையில் பணியாளர் உறவு மேம்பாட்டு வடிவமைப்பாளரா இருக்கேன். ஓகே லைஃப் ஸ்மூத்தாக டிராவல் ஆகுது..” என்று இதழ்களை வளைத்தவன்

“நீங்க என்ன பண்றீங்க பார்த்தி.. பார்த்தின்னு கூப்பிடலாம் தானே” என்று ஹரிரஞ்சன் வினவ, சம்மதமாக தோள்களை குலுக்கினான்.

“ஃபேஷன் ஃபோட்டோகிராஃபர்”

“வாவ்” என்று ஆச்சரியமாகி, “நீங்களும் ஒரு மென்பொருள் பொறியாளராக இருப்பீங்கன்னு நினைச்சேன் ஆனா வித்தியாசமா ஃபேஷன் இண்டஸ்ட்ரில இருக்கீங்க.” என்றான் ஹரிரஞ்சன்.

அதற்கு பார்த்திபன் மெல்லிய புன்னகையை மட்டும் பரதிபலித்தான்.

9 thoughts on “நம்முள் பூத்த காதல் எ(இ)ங்கே அத்தியாயம் – 1”

 1. CRVS 2797

  வாவ்…! அழகான நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைன்னு நினைக்கிறேன் சூப்பர்.

 2. Avatar

  அருமையான ஆரம்பம்.

  ரொம்ப வேகமா யூடி ஓடி விட்டது.

  பார்த்திபன் & மியா நட்பு மனதில் அழகாக தடம் பதிக்கிறது.

  கல்யாண மாப்பிள்ளையும் கூட நன்றாகவே பேசிப் பழகுகிறார். இப்படியே, இறுதி வரை இருப்பின் மகிழ்ச்சியே…

  வாழ்த்துகள் சகோதரி💐💐💐

 3. Avatar

  அருமையான ஆரம்பம்!!… நட்புக்கு மரியாதையும், ஹரியும் சூப்பர்!!!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *