Skip to content
Home » நாயகன் உந்தன் வசம்! 1

நாயகன் உந்தன் வசம்! 1

நாயகன் 1

சீரான வேகத்தில் கார் அந்த தார் சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் அதை ஓட்டிக் கொண்டிருந்தவன் மனம் தான் சீரில்லாமல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

‘என்னென்ன பேசி விட்டார்கள்! அதுவும் அவனைப் பார்த்து!’ இந்த ஏழு ஆண்டுகளில் அவன் எத்தனை சாதித்திருக்கிறானோ அதே விகிதத்தில் அவன் சரிந்தும் இருக்கிறான் தான்.

நேற்று இரவு வரை இது சாதனைக்கான நேரம் என்று எண்ணி அவன் பெருமைப்பட்டுக் கொண்டிருக்க, இல்லை இல்லை என்று அவன் தலையில் அடித்து சோதனையாக மாற்றியது காலம்.

ஸ்டியரிங் வீலில் பதிந்திருந்த கரங்கள் தன் கோபத்தை அதைப்பிடித்திருந்த பிடியில் காட்டிக் கொண்டிருக்க, ஒவ்வொரு நரம்பும் புடைத்துக் கொண்டு அவன் கோபத்தின் அளவைக் காட்டிக் கொண்டிருந்தது.

அருகில் இருந்த இருக்கையில் அநாதையாகக் கிடந்த அவனின் ஐ போன் வேறு அலறிக் கொண்டே இருந்தது.

அதில் தெரிந்த எண்ணைக் கண்டவன் உள்ளம் மேலும் கோபத்தில் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.

‘இந்த மனிதனை நான் எவ்வளவு நம்பினேன். என்னை ஏமாற்றி விட்டான் என்பதையும் தாண்டி என்னை இவன் முட்டாளாக்கியது தான் ஜீரணிக்க முடியாமல் நெஞ்சை வதைக்கிறது.’ என்று எண்ணிக் கொண்டு தன் வீட்டின் போர்ட்டிகோவில் காரை நிறுத்தினான்.

ஏற்கனவே தகவல் வந்திருக்க வேண்டும். முன் அறையில் லேசான பரபரப்பு தெரிந்தது.

அவன் காரைக் கண்டதும் டிரைவர் ஓடி வந்து சாவியை வாங்கிக் கொண்டான்.

வீட்டினுள் கால் வைத்த நொடியே, “என்ன தம்பி உன்னைப் பத்தி இப்படி பேசுறாங்க? அந்த மலை முழுங்கி அப்படியே சிலை மாதிரி நிக்கிறானே! அப்பா ஆரம்பத்துல இருந்தே அவனை நம்பாதேன்னு சொன்னார்ல பா!” என்று  சில வருடங்களாக மேல் தட்டு வர்க்கமாக வாழ்ந்தாலும் நடுத்தட்டு வர்க்க மனநிலை மாறாத அவன் அன்னை புலம்பியதும், பதில் கூறாமல் மாடியில் இருக்கும் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

கழுத்தில் இருந்த டையை தளர்த்தி விட்டவன், அப்படியே சரிந்து கட்டிலில் விழுந்தான்.

ஏழு ஆண்டுகள்… ஒன்றல்ல இரண்டல்ல… ஆனால் அதற்கு முன் நான்கு ஆண்டுகள் இந்த துறையில் இந்த இடத்தைப் பிடிக்க அவன் போராடிய போராட்டம் சிறியதல்ல!

நடிக்க வேண்டும் என்பது அவனது ஆசை அல்ல. அது அவன் லட்சியம். கனவு. உயிர் என்று சொன்னால் கூட மிகையல்ல.

படிப்பில் படு சுட்டியான அவனை அவன் தந்தை படிப்பில் மட்டுமே கவனம் வைக்கச் சொல்ல, அவன் கவனமெல்லாம் இருந்ததென்னவோ நடிப்பில் தான்.

பள்ளி நாடகங்கள் துவங்கி, நண்பர்களுடன் மேடை நாடகங்கள், கல்லூரி விழா என்று அவன் நடிப்பில் கலக்க, ஒரு உதவி இயக்குநர் அவர் இருக்கவிருக்கும் குறும்படம் ஒன்றில் சிறு பத்திரம் ஒன்றில் நடிக்க அவனை கல்லூரி விழாவில் பார்த்து அழைத்தார்.

அன்று தொட்டு இன்று வரை நடிப்பு தான் அவன் மூச்சு. அந்த உதவி இயக்குநர் அவன் வாழ்கையில் முக்கிய அங்கமானார். இன்று அவன் முதுகில் குத்திய துரோகியானார்.

நினைக்க நினைக்க நெஞ்சம் எரிந்தது.

கைபேசி விடாமல் ஒலி எழுப்ப, எடுத்தவன் விழிகளில் கேள்விக் குறி. ‘இவர் ஏன் என்னை அழைக்கிறார் அதுவும் இந்த வேளையில்!’ என்று தன் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் அழைப்பை அவன் தயக்கத்துடன் ஏற்க,

“தம்பி, எப்படி இருக்கீங்க? நியூஸ் பார்த்தேன். ஒன்னும் டென்ஷன் ஆகாதிங்க. இதெல்லாம் இந்த ஃபீல்டுல சகஜம் தம்பி.” என்று எடுத்ததும் ஆறுதலாகப் பேச, அவன் மனம் சற்று நிம்மதி அடைந்தது.

‘ஆனால் நீ எப்படி நிம்மதி அடையலாம்?’ எனும்படி,

” அப்பறம் தம்பி… நம்ம பிராஜெக்ட் மட்டும் கொஞ்சம் தள்ளி வச்சுக்கலாம் தம்பி. என்ன டா ஆறுதல் சொல்லிட்டு இப்படி சொல்றானே இந்த ஆளுன்னு எண்ணாதீங்க. நான் வியாபாரி தம்பி. பணம் போட்டு பணம் எடுப்பவன். ஓடுற குதிரை மேல தான் பணம் கட்டணும். நான் உங்களை வச்சு படமே எடுக்க மாட்டேன்னு சொல்லல. இப்ப நீங்க அடிபட்ட குதிரை. ரெஸ்ட் எடுத்து சரியாகி ரேஸ் ஓட்ட தகுந்த நேரம் வரும்போது கண்டிப்பா நாம படம் பண்ணுவோம். போட்ட அகிரிமெண்ட் அப்படியே இருக்கட்டும். அட்வான்ஸ் பணமும் வச்சுக்கோங்க. ஆனா படம் மட்டும் அப்பறம் பண்ணுவோம். சரிங்களா?” என்று கேட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்.

இன்று அவன் சென்று வந்த வெற்றி விழாவுக்குப் பின் படத்தை துவங்கலாம் என்று அவன் தான் அந்தப் படத்தைத் தள்ளி வைத்திருந்தான். இல்லாவிட்டால் அவர் கூறிய படத்தின் வேலைகள் துவங்கி இருக்கும்.

அந்த படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்க தானே இந்த படத்தை துவங்காது காத்திருந்தான். இப்படி நடந்து விட்டதே! மனம் அவனையே மன்னிக்க மறுத்தது.

தந்தை பல முறை கூறினார். யாரையும் முழுமையாக நம்பாதே என்று. ஆனால் அவன் கேட்கவில்லையே!

இரண்டு நாட்கள் அறையை விட்டு வெளியே செல்லாமல் முடங்கிக் கிடந்தான்.

எல்லாம் அந்த ஒரு அழைப்பு வரும் வரை தான்.  அவன் வாழ்க்கையை மாற்ற அந்த அழைப்பு அவனது கைபேசியை வந்தடைந்தது. வாழ்வும் தான் சென்று கொண்டிருந்த திசையிலிருந்து மாறியது!

“வணக்கம் சார்! நான் ‘கியூ’ டிவில இருந்து ஆதவி பேசுறேன்.”

இதே குரல் இன்னொரு அழைப்பாளரின் எண்ணுக்கும் சென்று இனிமை சேர்த்தது.

நான்கு வாரங்களாக எந்த ரெக்கார்டிங்கும் இல்லாமல் வீட்டில் இருந்த அவனுக்கு விண்ணை முட்டும் அளவுக்கு எரிச்சல்.

சமீபமாக வந்த சில இளம் பாடகர்கள் சுருதி, தாளம் என்ற எந்த கோட்பாடுகளும் இல்லாமல் குரல் என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அவனுக்கு வரவிருந்த பல வாய்ப்புகளை தட்டிப் பறித்தனர். அதற்கு ஒரு முக்கிய இசையமைப்பாளரும் காரணம்.

அவர் இசையில் இவன் பாடிய பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் மேடையில் அதனை அவனை பாட விடாமல் காபிரைட் என்று தடுத்து நிறுத்தி விட்டார்.

அதனால் அவனது பல வெளிநாட்டு கச்சேரிகள் கேன்சல் ஆனதும் கோபத்தில் திட்டி விட்டான். அதை மனதில் வைத்து இன்று அவனுக்கு பாடும் வாய்ப்பே இல்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தார் அவர்.

மனம் நொந்து கிடந்தவன் செவிகளில் தேன் போல வந்து இனித்தது ஆதவியின் அழைப்பு.

அந்த நடிகன், இந்த பாடகர் போல ஆதவி இன்னும் பலரைத் தொடர்பு கொண்டு பேசி இருந்தாள்.

ஆம். ஆதவி ‘கியூ’ டிவியின் முக்கிய பொறுப்பில் இருப்பவள். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளர்.

இந்த ஆண்டின் மிக முக்கிய ஒரு நிகழ்ச்சிக்கு தான் அவள் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தாள்.

அப்படி அவள் தேடித் தேடிக் கண்டு அழைத்த பலரில் மிக முக்கிய நபராக ஒருத்தி இருந்தாள்.

அதற்கு முக்கிய காரணம் அவள் அந்த பட்டியலில் முதலில் இல்லை.

முதலில் அழைத்துப் பேசிய சில அழைப்புகளுக்குப் பின் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு பல வழிகளில் ஆதவியைப் பாடாய் படுத்தி அந்த நிகழ்ச்சியின் பட்டியலில் இணைந்து கொண்டாள்.

அவளுக்காக ஏற்கனவே தீர்மானம் செய்திருந்த ஒரு நபரை ஆதவி கைவிட வேண்டிய சூழல் உருவானாலும் இந்த நபரை சேர்ப்பது மூலம் கண்டிப்பாக நிகழ்ச்சியின் டிஆர்பி அதிகரிக்கும் என்று அவளது உள்ளுணர்வு கூறியதால் அந்த நிகழ்ச்சியின் இயக்குனரான ஜஸ்வந்த்துக்குக் கூடத் தெரியாமல் இந்த மாற்றத்தை ஆதவி கொண்டு வந்திருந்தாள்.

அனைவரிடமும் பேசிக் களைத்திருந்த அவளுக்கு உடனடியாக சூடான காபி தேவைப்பட, ஆபிஸ் பாயிடம் காபி சொல்லிவிட்டு அடுத்து அவள் அழைக்க வேண்டிய அவர்கள் தேர்வு செய்த அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கு அழைப்பை மேற்கொண்டாள்.

‘பவித்ரன் ‘ இந்த பெயரைச் சொன்னால் திரை உலகில் தெரியாதவர்கள் யாருமில்லை. அப்படி ஊரே உலகமே புகழ் மாலை சூட்டும் ஒரு மனிதர் தான் பவித்ரன்.

தனது இருபதாவது வயதில் இருந்து நடிப்பை சுவாசமாகக் கொண்டவர். ஐம்பத்தி ஐந்தில் தனது நடிப்புக்கு ஓய்வை அறிவித்து விட்டு, திரைப்பட விமர்சகராகக் கொடி கட்டிப் பறப்பவர்.

அவரை இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக அழைக்க வேண்டும் என்பது ஜஸ்வந்தின் ஆசை.

ஆதவிக்கு அதில் பெரிதாக ஆர்வமில்லை. காரணம் அந்த ‘நிகழ்ச்சி’யின் தன்மை தான்.

ஏற்கனவே சில தொலைக்காட்சிகளில் இது போன்ற ரியாலிட்டி ஷோக்கள் நடக்கத் துவங்கி இருக்க, அதை முதலில் ஆரம்பித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவர்கள் சேனலில் அதை நடத்த ஆவன செய்து ஜஸ்வந்த் எடுத்த எல்லா முயற்சியிலும் முதுகெலும்பாக இருந்தவள் ஆதவி.

அவளுக்கு இளமை ததும்பும் நிகழ்ச்சிகள் நடத்தத் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது.

ஆனால் ஜஸ்வந்த் அப்படி எண்ணவில்லை.

ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சி பல மொழிகளில், பல மாநிலங்களில் நடந்து கொண்டிருந்தாலும் தமிழில் அதனைத் தனித்துவமாகக் காட்ட, நல்ல மொழி ஆளுமையுடன் கூடியவரும், ஆட்களை எடைபோடத் தெரிந்தவரும் ,அதே நேரம் யார் மனதையும் புண்படுத்தாத மேன்மை குணமுடையவராக இருந்தல் வேண்டுமென்று கூறி பிடிவாதமாக பவித்ரன் தான் வேண்டும் என்று விட்டான்.

ஆதவியின் அழைப்பை ஏற்றது பவித்ரனின் உதவியாளர் தான். இவள் வேண்டிய தகவல்கள் தந்து அவரின் பதிலுக்கு அவள் எதிர்ப்பார்த்து இருப்பதாகவும், சம்பளமாக என்ன தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் விளக்கி விட்டு வைத்து விட்டாள்.

மொத்தமாகக் களைத்துப் போனவள் ஆறிப்போன காபியைக் கண்டு மிகவும் சோர்வுற்றாள்.

“என்ன ஆதவி, எப்பவும் எல்.ஈ.டி பல்ப் மாதிரி பளிச்சுன்னு இருப்ப, இப்ப என்ன ஜீரோ வாட்ஸ் பல்ப் மாதிரி மந்தமா இருக்க?” என்று அவள் தலையில் பேனாவால் தட்டிவிட்டு எதிர் இருக்கை ஆக்கிரமித்தான் ஜஸ்வந்த்.

“ஜஸ் பிளீஸ்… என்னால முடியல. ஆயிரம் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க ஒவ்வொருத்தரும். அதுலயும் அந்த பவித்ரன் சார் பிஏ என் காதுல ஓட்டை போடல. அவ்வளவு தான். அதைத்தவிர எல்லாமே செஞ்சுட்டார். சரியா சொல்லணும்னா ‘என்னை செஞ்சு விட்டுட்டார்’.” என்று அழுத்திச் சொன்னாள்.

“போன் காலுக்கே இப்படியா? அடுத்து புரோகிராம் செட் போடணும். ஷோ செட் போடணும். பிராபர்ட்டீஸ் டிசைட் பண்ணனும். லாஞ்ச் ஷோவுக்கு ஏற்பாடு பண்ணனும். கேரவேன் ரெடி பண்ணனும். பிளானிங் டைமில் அவங்க தங்க ஹோட்டல்ல ரூம் புக் பண்ணனும். செட் பிராப்பர்ட்டீஸ் ரெடி பண்ணனும். அவங்கவங்க லைஃப் பத்தி சொல்ற வீடியோஸ் ரெடி பண்ணனும். ப்ரோமோ ஷூட் பண்ணனும்…” என்று அடுக்கிக் கொண்டே போக,

“ஓ மை காட்! ஜஸ்வந்த் ஜஸ்ட் ஸ்டாப். நினைக்கவே மயக்கமா வருது.” என்று அவள் தலையில் கைவைக்க,

“நாம எப்பவும் செய்யற வேலை தானே ஆதவி இது? இப்ப என்ன புதுசா உனக்கு இவ்வளவு சலிப்பும் பொருமலும்! வா பிளான் பண்ணலாம்.” என்று பேசிக்கொண்டே காபி மிஷினில் இருந்து ஒரு காபி எடுத்து அவளுக்கு நீட்ட,

“எப்பவும் பண்றது தான். ஆனா இந்த ஷோ இது தானே முதல் முறை. அதான் கொஞ்சம் பதட்டமா இருக்கு. சேனல் ஹெட் எல்லாத்தையும் நீயும் ஜஸ்வந்தும் பார்த்துக்கோங்கன்னு முழு பொறுப்பையும் கொடுக்கவும் சட்டுன்னு பேலன்ஸ் பண்ண முடியல ஜஸ்.” என்று காபியைப் பருகி விட்டு இருவருமாக அமர்ந்து வேலைகளை பங்கு போட்டு செய்யத் துவங்கினர்.

வேலையைப் பிரித்துப் பிரித்து, அதற்கான குழுக்களை ஏற்படுத்தி, துரிதமாக செயல்பட்டதால் ஒரே வாரத்தில் அவர்களின் செக் லிஸ்ட் அனைத்தும் டிக் செய்யபட்டு, லான்ச் ஷோவுக்கான ப்ரோமோ தயாரிப்பில் வந்து நின்றது.

பவித்ரன் இதற்கு இசைந்து விட்டதால் ப்ரோமோ ஷூட் பற்றி தகவல் கொடுத்து அனைவருக்கும் ஏற்கனவே அனுப்பி கையொப்பம் பெறப்பட்ட காண்ட்ராக்ட் பேப்பர்கள் அனைத்தும் முறையாக ஆவணம் செய்யப்பட்டது.

ப்ரோமோ ஷூட் செய்யபட்டு சேனலில் வெளியிடப்பட, எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு கிடைத்தது.

சோஷியல் மீடியா முழுவதும் அந்த நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சுக்கள் தான். அதற்கு சேனலின் சோஷியல் மீடியா டீமும் கடுமையாக வேலை செய்தது.

பல பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் என்று பத்து நாட்கள் சென்ற விதம் தெரியாமல் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் நாளும் வந்து சேர்ந்தது.

‘லாஞ்ச் ஷோ’ ஸ்பாட்டில் ஆதவி தவிப்புடன் கையில் டேப்லெட்டை வைத்துக் கொண்டு ‘டாக் பேக் ‘ ஸ்கிரிப்டை ஒரு முறை பார்த்தபடி, செலிபிரிட்டிகள் வந்து விட்டார்களா? அவர்கள் உறவினர்களை எங்கெங்கே அமர வைக்க வேண்டும்? டி.ஜே டீம் தயாரா? என்று காதில் இருந்த கருவி மூலமாக அனைத்தையும் சரி பார்த்து முடிக்க,

“ரோலிங்” என்ற குரல் ஜஸ்வந்திடம் இருந்து சத்தமாக ஒலித்தது.

அதுவரை அந்த செட்டில் ‘கயமுய’ என்று கேட்டுக் கொண்டிருந்த சத்தமெல்லாம் சட்டென்று அடங்கிப் போக, அங்கே முழு அமைதி நிலவியது.

டி.ஜே டீமில் அந்த நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட இசை முழு சத்தத்தில் ஒலிபரப்பப்பட்டதும்,

“வணக்கம்! வந்தனம்! வெல்கம்! நமஸ்தே! டு தி ஒன் அண்ட் ஒன்லி மெஸ்மெரைசிங் கேம் ஷோ”  என்று தன் ஆளுமையான குரலில் ஆரம்பித்த பவித்ரன் ஒரு இடைவெளி விட்டு ‘முதல்வன்’ என்று அந்த ரியாலிட்டி ஷோவின் பெயரைக் கூற அரங்கமே அதிரும் படி கைத்தட்டல் கேட்டது.

22 thoughts on “நாயகன் உந்தன் வசம்! 1”

  1. திறமை இருந்தும் புறக்கணிக்கப் படுபவர்களுக்கான நிகழ்ச்சி.. A good start…

  2. ஆரம்பமே அதிரடியா இருக்கு!!… அப்படி என்ன துரோகம்???… அந்த ஷோலதான் பிரச்சினை ஆரம்பமா???… இன்ட்ரஸ்டிங் எபி😍

  3. கதை தொடக்கமே விருவிருப்பா இருக்கே 😍😍😍…. பவித்ரன் நல்ல பெயர். அப்படி என்ன பிரச்சினை அவன் வாழ்க்கைல வந்துச்சு…

    ஆதவி… சூப்பர் நேம்.
    ஜஸ்வந்த்… என்னோட திங்கிங்ல இவன்.. யாருக்கு என்ன ஆனால் எனக்கு என்ன. என் வேலை கரெக்டா நடக்கணும்னு நினைக்குற ஆள் போல தெரியுறான்… 🙄

    கதை தொடக்கம் அருமை ரைட்டரே 🤩🤩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *