நேசன் 1
இயற்கையின் எழில் தாராளமாகக் கொட்டிக்கிடக்கும் சுந்தர வனத்தின் மரங்கள் தங்களோடு பேசும் சலசலப்பும், மென்காற்று சுழற்றி சுழற்றி அடிக்கும் மெல்லிசையும், இதுவே அழகின் பிறப்பிடம் என்று சொக்க வைக்கும் விடியலின் அதிகாலைப் பொழுதில் பாற்கரனின் மஞ்சள் ஒளி பூமியெங்கும் பூசும் வண்ணம் வானம் விடிந்திருந்தது.
அந்த அழகிய தருணத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் வனத்தில் ஒருவன் பின்னாடி திரும்பித் திரும்பி பார்த்து மூச்சு வாங்க ஓடிக்கொண்டிருந்தான். எதற்கோ பயந்தது போல முகத்தில் பயத்தை தேக்கி நில்லாமல் ஓடிக்கொண்டிருந்தான். அவன் பயந்த அந்த அஃறிணை அவனுக்கு நெருக்கமாக வரவும் அலறியபடி பதற்றத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தான் ப்ரிய நேசன்.
வதனமெங்கும் பனித்துளியென வியர்வை துளிகள் பூத்திருக்க இதயமோ தாறுமாறாக தன் இறுப்பை காட்டியது.
கண்களை கைகளால் அழுத்தி மூடி திறந்தவன் கனாவிலிருந்து நடப்புக்கு வந்தான். ஆம் கனவே தான்!
படுக்கையிலிருந்து எழுந்தவன் குளியலறை செல்ல எத்தனிக்க கால்கள் தடுமாறியது. தன்னை குனிந்து பார்த்தவன் புதுப்பட்டு வேஷ்டி சட்டையை அணிந்து இருப்பதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டு அறையை ஒரு தடவை சுற்றிப் பார்த்தான்.
அறையெங்கும் வண்ண மலர்கள் அலங்காரமாக இடம் பெற்றிருக்க வாசனை மெழுகுவர்த்திகளோ பாதி எரிந்து அணைந்த நிலையில் இருந்தன. படுக்கையை பார்த்தான் அது காலியாக இருந்தது.
விறுவிறுவென்று குளியலறை நோக்கி ஓடியவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வேகமாக கிளம்பி மாடியிலிருந்த தனதறையில் இருந்து கீழிறங்கி வந்தான்.
அவனது விழிகள் தன்னவளை அணுஅணுவாய் தேடியது. முன்தினம் தான் திருமணம் முடிந்திருந்தது. திருமணத்தை கிராமத்தில் இருக்கும் தங்கள் சொந்த ஊரில் நடத்த வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் பிரியப்பட்டதால் அங்கு திருமணத்தை முடித்த கையோடு விமான பயணத்தில் வந்திறங்கி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்திருந்ததனர். அன்றைய தினம் அதீத அலைச்சல் விளைவாக களைப்பில் இருந்ததால் உறங்கி விட்டிருந்தனர்.
அவனின் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு தரிசனம் தந்தாள் நேசனின் பிரியமானவள். ஹேசல் விழிகளுடன் மிளிர்ந்தவளை இமைக்காது இதயத்தில் நிறைத்தவன் புன்னகைத்தபடியே மெத்திருக்கையில் வந்தமர்ந்தான்.
அவன் வருவதை கண்டு ஒரு வித துள்ளளுடனே தேநீர் கொண்டு வந்து தந்தாள் இஷியா பிரியவாகினி.
“இஷா இங்க வாமா. இன்னைக்கு ஸ்வீட் நீதான் செய்யனும். என்ன செய்யலாம் பாரு. மேல் வேலையை நான் செய்து தந்துரேன்” என்று மாமியார் அலர்விழி அழைத்தார்.
தேநீர் அருந்தியபடி தன்னவளை அழைத்துக்கொண்டு சமையற்கூடத்திற்கு வந்தவன் “மாம் நேத்து தான் எங்களுக்கு மேரஜ் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள என் பொண்டாட்டியை வேலை வாங்குறீங்களே? அவளும் தானே டயர்டா இருப்பா?” என்று ஆதரவாக பேசி வம்பில் மாட்டிக்கொண்டான்.
இடுப்பில் கையை வைத்து தன் மகனை பார்த்தவர் “ஓ பொண்டாட்டி மேலே அவ்வளவு பிரியமா பிரியனுக்கு. சரிடா அப்ப ரெண்டு பேரும் சேந்தே ஸ்வீட் செய்துட்டு சாப்பிட்டு சீக்கிரமே போய் ரெஸ்ட் எடுங்க” என்று நடையைக் கட்டினார்.
“மாம் மாம் எனக்கு கிச்சன் ஒர்க்லாம் ஆகாது நான் ரூம் போறேன் நீங்களே அவளை வச்சிகோங்க” என்று கட்சி மாறி பேசியவனின் காது மடலை பிடித்து திருகியவர்
“படுவா ஒழுங்கா போய் ஸ்வீட் செய்டா இல்லை இன்னிக்கு புல்லா மருமகள என்கூடவே வச்சிக்குவேன்” என்று விரட்டினார்.
“என் பொண்டாட்டியை நானே வச்சிக்கிறேன் ம்மா நீங்க வேணா எங்கப்பாவ வச்சிகோங்க”
“டேய் பேச்ச பாரு போடா”
இவர்களின் சம்பாஷணைகளைக் கேட்டு பிரியவாகினி சத்தமாகவே சிரித்திருந்தாள். இருவரும் உணவறைக்கு செல்ல அவர்களின் பின் நின்ற அலர்விழி திருஷ்டி கழித்தார்.
ப்ரிய நேசன் இருபதுகளின் முடிவில் இருக்கும் மென்பொறியாளன். பிரியவாகினி இருபதுகளின் மத்தியில் இருக்கும் வரைகலை வடிவமைப்பாளினி மற்றும் சமூக சேவகியும்.
“என்ன ஸ்வீட்ங்க செய்யலாம்?” பிரியவாகினி கேட்க
“உனக்கு என்ன பிடிக்கும் பிரியா?”
“ஸ்வீட்னு சொன்னாலே பிடிக்கும்” என்று கலகலவென முத்துக்களை சிதறவிட்டு நேசனின் நெஞ்சத்தை சிதறடித்தாள்.
“அத்தை மாமா உங்களுக்கு எல்லாம் என்ன பிடிக்கும் சொல்லுங்க. நான் செய்துடுரேன்” என்றவள் தன் அலைபேசியில் மெல்லிசையை ஒலிக்க விட்டவள் அவனின் பதிலை எதிர்நோக்கியிருந்தாள்.
“பைனப்பிள் ஹல்வா செய்யலாம்” என்று இருவரும் வேலையை பகிர்ந்து செய்தனர்.
அவள் பழத்தை வெட்டும் போது வரும் சத்தத்தை ரசித்து பார்த்திருந்தான்.அல்வா தயார் செய்து வெளியே வந்தவர்களைப் பார்த்து
“அலர் என்ன அதிசயமா உன் பையன் கிச்சன்ல இருந்து வரான்? முகமெல்லாம் பிரகாசமா வேறு இருக்கானே. ஓ கல்யாணம் ஆகிடுச்சில்ல மறந்துட்டேன் பாரேன்” என்ற பொழிலன் நடைப்பயிற்சி முடிந்து அப்போது தான் வீட்டில் நுழைந்திருந்தார்.
“ஓ கமான் டாடி நீங்களுமா?”
“எல்லாம் மருமக வந்த நேரம்தாங்க. நான் சொன்னேன்ல்ல இனி என்பையன் வாழ்க்கை நல்லா இருக்கும். எங்கே அவனை நினைச்சே ஒண்டிக்கட்டையா இருந்துடுவானோனு பயந்துட்டேன்” என்றவர் உணர்ச்சி வேகத்தில் கண்கலங்கினார்.
“மாம் எத்தனை தடவை சொல்றது இப்படி பேசாதீங்கனு” என்று கண்டனப்பார்வை பார்த்த மகனின் விழிகளை தவிர்த்தவர் பொழிலனுக்கு தேநீர் தர சமையலறைக்கு சென்று விட்டார்.
“நீங்க ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கடா” என்று அனுப்பி வைத்தார் பொழிலன்.
அறைக்குள் வந்தவன் படுக்கையில் அமர்ந்து பெருமூச்சுகளை விடுத்தான். பிரியவாகினி சாளரகதவுகளை திறந்து விட்டு அவனை கைப்பற்றி இழுத்து அங்கு நிற்க வைத்து கண்களை மூடி ஆழ மூச்செடுக்க வைத்தாள்.
“ரிலாக்ஸ் நேசன். இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன்? உங்க அண்ணன் மேரஜ் வேண்டாம்னு சொல்லி ஃபாரீன் போய் இருந்தா அது அவங்க விருப்பம். அவங்க அவங்க வாழ்க்கை தீர்மானத்தை எடுக்க அவங்களுக்கு உரிமை இருக்கு. சேம் டைம் அம்மாவா அவங்க ஆதங்கமும் சரிதானே. கீழே போனதும் அவங்க கிட்டே சாரி கேளுங்க.” என்றவளை குற்றவுணர்வுடன் விழிகளை உயர்த்தி பார்த்தவன் சம்மதமாக தலையசைத்தான்.
அவன் மறைத்த விஷயம் அருகிலேயே இருக்க அது தெரிய வரும் போது என்ன சங்கடங்கள் நேருமோ?
உணவு மேசையில் இட்லி சாம்பார் கொத்தமல்லி சட்னியுடன் பைனப்பிள் ஹல்வாவும் ருசித்திட காத்திருந்தது. நால்வரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க பொழிலன் மௌனத்தை கலைத்தார்.
“அலர் இதென்ன இத்தனை நாள் இல்லாமல் இன்னைக்கு இந்த ஸ்வீட் செய்துருக்க?”
“ம்ம் உங்க பையன் தான் செய்தான் அவனையே கேளுங்க”
“அப்ப உங்களுக்கு நான் பையன் இல்லையா? என்னை என்ன தவிட்டுக்கு வாங்குனீங்களாப்பா? இல்லை பக்கத்து வீட்டில் களவாண்டீங்களா?” என்று நேசன் கேட்ட பாவனையில் அனைவரும் சிரித்திருந்தனர்.
“மாம் சாரி” விழிகளில் கெஞ்சும் பாவனையுடன் கேட்டான் நேசன்.
“பஸ்ட் சாப்பிடுடா. ஈவ்னிங் ரிசப்ஷன்க்கு ரெடியாகனும்ல்ல எல்லாம் எடுத்து வச்சிடுங்க” என்று பொதுவாக கூறினார்.
“மாம் ரிசப்ஷன் நேத்தே முடிஞ்சிடுச்சு. இது எங்க ஆபிஸ் கொலிக்ஸ்கான பார்ட்டி.”
“சாப்பிட்டு நாங்க கோவிலுக்கு போய்ட்டு வந்துரோம் அத்தை” பிரியவாகினி.
“என்னவோடா எல்லாம் ஒன்னுதான் போய் ஆக வேண்டியத பாரு. இவன் கூட்டிப்போறேனு சொன்னானாம்மா? சரிம்மா ரெண்டு பேரும் போய்ட்டு நல்லா வேண்டிட்டு வாங்க” என்று சாப்பிட்ட தட்டுகளை எடுத்து கொண்டு உணவறைக்கு போனார். அவரோடு பிரியவாகினியும் இணைந்து கொண்டாள்.
நேசன் ஒரு கிண்ணத்தில் பைனப்பிள் ஹல்வா எடுத்து வைத்து மாடியேறினான்.
சிறிது நேரம் கழித்து அறைக்குள் வந்த பிரியவாகினி நேசனை காணாது திகைத்தாள்.
சாளரகதவு வழியே வீட்டின் வெளிப்புறத்தை பார்வையிட்டாள். விசாலமாக இடமிருந்தும் வெற்றிடமாக காணப்பட்ட மணல் பரப்பில் செடிகளை நடலாம் என்றும் என்னென்ன செடிகள் நடலாம் என்றும் யோசனை செய்து கொண்டிருந்தாள். அவளின் அருகில் அரவம் கேட்க திரும்பினாள்.
“இவ்வளவு நேரம் எங்கே இருந்தீங்க? ரூம்ல உங்களை காணோமே”
“ஆங்.. அது.. நான் இங்க தான் இருந்தேன். நீ கவனிச்சிருக்க மாட்ட”
“ஓ அப்படியா ஹல்வாவ ஒளிச்சி வச்சு சாப்பிட்டுட்டு இருந்தீங்களா?”
“இல்லை அது என் அண்ணணுக்கு..”
“வாட்?”
“ம்ம் ருத்துவுக்கு ரொம்ப பிடிக்கும்”
“ஓகே ஓகே பீல் பண்ணாதீங்க. நான் வந்துட்டேன்லா இனி உங்களை எதுக்கும் பீல் பண்ண விட மாட்டேன்” என்று கைகளை பற்றிக் கொண்டாள்.
அவளது மெய்யன்பில் பனியாய் உருகியவன் அணைத்துக் கொண்டான். அவன் முதுகை அன்புடன் தட்டிக்கொடுத்தவள் மெத்தையில் அமர வைத்தாள் தானும் அருகில் அமர்ந்து கதைக்க ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு நான் இப்ப மனைவி. உங்களோட அனைத்து உணர்வுகளிலும் நான் பங்கு பெறுவேனு வாக்கு கொடுத்திருக்கேன். சோ எதுனாலும் என்கிட்ட ஷேர் பண்ணுங்க ஓகேவா” என்று தோளில் சாய்ந்தாள்.
“சரிங்க எஜமானி” என்றவனை விழி உயர்த்தி பார்த்தவள்
“கிண்டல் பண்றீங்களா?” என்று முறைத்தாள்.
“இல்லை நிஜமாவே தான் சொல்றேன் இனி நீ எனக்கு எஜமானி தானே” என்று புன்னகையுடன் சொல்லியவன் அவளோடு கோவிலுக்கு கிளம்பி சென்றான். ஆனால் உள் நுழைந்திடுகையில் அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வரவே வெளியேவே நின்று பேசிக்கொண்டிருந்தான்.
கிளம்பும் தருவாயில் தான் உள்நுழைந்து அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான்.
மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றனர்.
“உங்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லைனு அத்தை சொன்னாங்க”
“இருந்துச்சு அண்ணா கூட இருக்கும் வரைக்கும்”
“ம்ம்ம்…”
சிறிது நேர மௌனத்திற்கு பின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். அவளது கன்னங்களை பற்றினான். நயனங்களோ வெட்கத்துடன் சம்மதம் மொழிந்தன.
🎶இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே
அடங்காத ஆசை தந்ததே
எனக்குள்ளே ஏதோ
மின்னல் போலே தொட்டு சென்றதே🎶
கணவனாய் தன்னவளை ஆட்கொண்டிருந்தான் பிரியமானவளின் நேசன். அணைத்தபடியே உறங்கியிருந்தனர்.
எழும் போது நேசனின் காது மடலை மூடியிருந்த காதொலிப்பானை பிரியவாகினி கண்டு திகைத்தாள். அதனை எடுத்து அருகிலிருந்த மேஜையில் வைத்ததும் உடனே பதற்றத்துடன் எழுந்தான் நேசன்.
“என்னங்க என்ன ஆச்சு?”
“என்கிட்ட கேக்காம எதுக்கு இதை எடுத்த?” என்றவன் மீண்டும் காதில் பொருத்தினான். அவன் செய்கையில் திகைத்தவளை பார்த்தவன்
“ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு பிரியா. எப்ப வேணாலும் என்னை கூப்பிடலாம்”
மெலிதாக தலையசைத்தவள் ‘ஏன் வினோதமா நடந்துகிறார்?’ என்று யோசித்தாள். பின் நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு
“அதென்ன எல்லாரும் என்னை இஷானு கூப்பிடும் போது நீங்க மட்டும் பிரியானு கூப்பிடுறீங்க?”
“நேசனின் பிரியமானவள்” என்று கைகளை இதயமாக அபிநயித்து காட்டினான்.
“நல்லாருக்குங்க”
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“டேய் பிரியன் இப்பவே கிளம்பினாதான் நேரத்துக்கு போக முடியும். அப்புறம் நேரமாயிட்டுனு உன் பொண்டாட்டியை கத்தாத. இனி இந்த கோவத்தை எல்லாம் ஏரம்கட்டி வை” என்று அலர்விழி சொல்லிவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.
“உங்க அம்மாவும் அப்பாவும் எவ்வளவு அன்பா இருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நேசன் நீங்களும் உங்க குடும்பமும் எனக்கு கிடைச்சதுக்கு” என்று சொன்னவள் கிளம்ப ஆயத்தமானாள்.
நேசன் அவளின் அன்பில் தான் மறைத்து வைத்திருந்த விஷயத்தை சொல்லி விடலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தான். கைகளோ தன்னிச்சையாக தேவையான அனைத்தையும் எடுத்து வைத்து என்று அவனும் தயாராகினான்.
முடிவாக சொல்லலாம் என்று எண்ணி திரும்ப பிரியவாகினி இளஞ்சிவப்பு நிறத்தில் லெஹங்கா அணிந்து அதற்கேற்ப அலங்காரம் செய்து அவன் முன் வந்து நின்று சொக்க வைத்தாள்.
“அழகா இருக்க பிரியா”
அழகாக புன்னகைத்தாள்.
“உன்கிட்ட ஒன்னு சொல்லனும். அது.. அண்ணா இருகாங்கள்ள அவங்க எங்….” அவன் பேசுவதற்குள்
“அம்மாடி இஷா என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்று சொல்லியபடி அங்கு வந்த அலர்விழி திருஷ்டி கழித்தார்.
“கிளம்பிட்டீங்கனா வாங்க கார் வந்துடுச்சு” என்று கீழே இறங்கினார்.
இருவரும் அவரது பின்னே இறங்கி சென்று மகிழுந்தில் ஏறி அமர்ந்தனர்.
அந்த பார்ட்டி ஹாலின் வெளியே இவர்களது பெயர்களை மலர்களால் அலங்கரித்த பலகை ஒன்று வண்ண ஒளிகளுடன் ஜொலித்தபடி இருந்தது.
ப்ரிய நேசன்❤️இஷியா பிரியவாகினி
மகிழுந்தில் இருந்து இறங்கியவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குப் போய் ஓய்வாக அமர்ந்து இருந்தனர்.
பிரியவாகினியின் பெற்றோர் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். பார்ட்டி ஆரம்பிக்க இன்னும் சிறிது நேரம் இருக்க மணப்பெண் பிரியவாகினி அறையில் இல்லை என்ற செய்தி நேசனின் காதுக்கு சென்றது.
பிரியமானவள் வருவாள்…
🎶
சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா
மேல் கீழாக அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா
அன்பின் நிழல் வீசுதே
இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம் இலை ஓடுதே
வெயில் வரம் துாறுதே
காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அரங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா
மேலே கிடையாதும்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா
முட்கள் கிழித்தாலுமே மொத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே
காலம் இளைப்பாருமே
தெய்வம்கூட இங்கே பசியாறுமே
இது நாம்தானடி மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி
🎶
Flow is good. Best wishes.. Description is more but nice.
நன்றி அண்ணா
வாசித்து கருத்து பகிர்ந்ததில் மகிழ்ச்சி
ஆரம்பமே அமர்க்களம். .. கதையின் நகர்வை யூகிக்க முடியவில்லை. .. செம
நன்றி சிஸ்
story started nice . Good move
நன்றி சிஸ்