Skip to content
Home » மகிழ்ந்திரு-12

மகிழ்ந்திரு-12

அத்தியாயம் 12

“இது மகிழ்ந்தன். டிரைவரா ஜாய்ன் பண்ணி இருக்கான். இனிமேல் இங்கதான் தங்கப் போறான். ஃபுட்டும் நம்ம கூடதான். ரூம் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்திடு!”

“மகிழ், இது பானு. இங்க எல்லாமே இவதான். எது வேணும்னாலும், பானுக்கிட்ட கேளு. தேவைப்படும் போது, என்ன காரணம்னு சொல்லி பணம் வாங்கிக்கோ. டேங் ஃபில் பண்ணி, காரை பார் மேனேஜர்கிட்ட ரிட்டர்ன் கொடுத்திடு. அப்படியே நான் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு. நான், அப்புறம் அவர்கிட்ட கால் பண்ணிப் பேசிக்கிறேன்.

பானுக்கிட்ட என்னோட மொபைல் நம்பர் வாங்கிக்கோ. உன்னோட நம்பருக்கும் ரிசார்ஜ் பண்ணிடு. வந்து வண்டியைக் கிளீன் பண்ணீட்டு, நல்லா ரெஸ்ட் எடு. நாளைக்கு ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும்!” என இருவருக்கும் வரிசையாய்க் கட்டளையிட்டு விட்டு, தனதறை நோக்கிச் சென்றாள் லவனிகா.

பானுமதி அவனை மேல் இருந்து கீழ்வரை பார்க்க, “வணக்கம் மேடம்!” எனக் கைக்கூப்பிப் புன்னகைத்தான்.

“எப்ப வேலையில சேர்ந்த.?”

“நேத்து நைட் மேடம்.”

“இதுவரைக்கும் லவனி மேடம் டிரைவர் வேலைக்குனு யாரையும் வச்சது இல்லையே.?”

“இவ்வளவு நாளும் தேவைப்படாம இருந்திருக்கலாம். இப்ப, அவசியம்னு தோணுச்சோ என்னவோ?”

“ஹோ.‌.‌ அர்த்த ராத்திரியில திடீர்னு ஒருத்தன் இப்படி முளைச்சு வருவான்னு நான் நினைக்கல.”

“பானு மேடமுக்கு என்னைப் பிடிக்கல போல.?”

அவள் மறுமொழி எதுவும் பேசாமல் வீட்டிற்குள் செல்ல, ‘உள்ளே செல்வதா வேண்டாமா.?’ என்ற‌ குழப்பத்தில் வாயிலிலேயே நின்று இருந்தான் மகிழ்‌.

நான்கு நிமிடங்கள் கடந்திருக்கும்.

“ஏன் தம்பி வெளியவே நிக்கிறீங்க? உள்ள போங்க!” என்றபடி அவனை நோக்கி வந்தார், ஐம்பது வயதான கண்ணப்பன்.

அவரைக் கேள்வியாய்ப் பார்த்தவன், “நீங்க.?”

“இந்த ஏரியால இருக்குற எல்லா வீட்டுக்கும் நான்தான் தோட்ட வேலைப் பார்க்கிறேன். தினமும் ராத்திரிக்குச் சாப்பாடு லவனி பாப்பா வீட்டுல தான். அதுக்குத்தான்‌ இப்ப வந்தேன். என்னையவே உள்ள கூப்பிட்டுத்தான் சோறு போடுவாங்க. அப்படி இருக்கும் போது நீங்க ஏன் வெளிய நிக்கிறீங்க.?” என்றபடி அவர் உள்ளே செல்ல, யோசனையுடன் காலடி எடுத்து வைத்தான்.

நடுக்கூடத்தில் நின்று கைகளைக் கட்டிக் கொண்டு தனது இல்லத்தை முழுமையாய் ஒருமுறை பார்வையால் அளவிட்டாள் லவனிகா.

அன்றைய தின இரவில்‌ திருமணம் முடிந்து நேராக புகுந்த வீட்டிற்குச் செல்வதாக ஏற்பாடு. அதற்குத் தகுந்தது போல் தனது பொருள்களைத் தயார் செய்து வைத்திருந்தாள்.

இல்லத்தைச் சுத்தம் செய்வது, திரைச் சீலைகளை மாற்றுவது, அலமாரியை‌ அடுக்குவது என ஒவ்வொன்றையும் எஜமானி இட்ட கட்டளையின் பெயரில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே செய்ய துவங்கி விட்டாள் பானுமதி.

சில தினங்கள் மட்டும் கணவனின் வீட்டில் இருந்துவிட்டு, பின்னர் அவனிடம் பேசி தன்னோடு இங்கு அழைத்து வந்துவிட வேண்டும் நினைத்திருந்தாள்.

துணைவனை அவனின் குடும்பத்தாரிடம் இருந்து பிரிக்கும் எண்ணம் இல்ல அவளிற்கு. புதுமண தம்பதியருக்குத் தனிமை அவசியம் என தோன்றியதால் இந்த திட்டம்.

ஆனால், நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் காலத்திற்கும் இயற்கைக்கும் தான் என்ன வேலை? அது தன் பணியைச் சரியாய்ச் செய்தால் தானே, மனிதனைக் கட்டுக்குள் வைக்க இயலும்.‌ இல்லையேல், அவனை விட குரூரமான உயிரினத்தை இவ்வுலகில் எங்கும் கண்டுவிட முடியாது.

ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

மகிழ்ந்தனிற்கு வீட்டின் உட்புறத்தைப் பார்த்ததுமே புரிந்து போயிற்று, ஏதோ விழாவிற்கான அலங்கரிப்பு என்று. ஆனால்‌ என்னவென்று தான் புரிபடவில்லை.

“பாப்பா..” என்ற‌ அழைப்பில் திரும்பியவள், “வாங்க, மிஸ்டர் கண்ணப்பன்.”

முகத்தில் கவலை ரேகைப் படர்ந்திட, “கல்யாணம் நின்னுப் போச்சுனு, பானு பாப்பா சொல்லுச்சு. ஏன் பாப்பா இப்படிச் செஞ்ச.? எதுவா இருந்தாலும் பேசி இருக்கலாம்ல? இப்படியா மண்டபத்துல இருந்து யார்க்கிட்டயும் சொல்லாம போவாங்க? காலையில உன்னோட அப்பாவும் போலீஸும் வந்து விசாரிச்சுட்டுப் போனாங்க. எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்?”

மெலிதாய்ச் சிரித்தவள், “உங்களுக்குப் பசங்க இருக்காங்களா?”

“ம்ம்.. ரெண்டு பொண்ணு. காலேஜ் படிக்கிறாங்க.”

“ஃபியூச்சர்ல அவங்களுக்கு எப்படியான மாப்பிள்ளையைத் தேடுவீங்க .?”

“என்ன, சண்டை எதுவும் போடாம நல்லபடியா பார்த்துக்கிற மாதிரி மாப்பிள்ள தேடுவேன்.”

“ஒரு தொழில் பண்ணப் போறேன். பணம் வேணும். அதுக்காகத்தான் இந்த கல்யாணம். நீங்க கொடுக்கிற வரதட்சணையில, நான் எனக்குத் தேவையானதைச் செஞ்சுக்கிறேன். வர்ற லாபத்துல உங்களுக்கும் பங்கு தர்றேன். பொண்ணைக் கட்டிக் கொடுங்கனு கேட்டா, கொடுப்பீங்களா?”

“இது என்ன அநியாயமா இருக்கு? அவனுக்குத் தேவையானதை கேட்கிறது சரிதான். என்‌ பொண்ணோட வாழ்க்கைக்காக நான் கொடுக்கத் தயார்.‌ அதுக்குப் பதிலா லாபம் எதுவும் வேணாம். என்னோட பொண்ணுக்கு உண்மையா எப்பவும் துணையா இருந்தா போதும்.”

“ம்ம், நைஸ்.” எனப் புன்னகைத்தவள், “ஆனா, இங்க பெத்தப் பொண்ணு எப்படி போனாலும் பரவாயில்ல. தனக்கு லாபம் கிடைச்சா போதும்னு நினைக்கிற அப்பாக்களும் இருக்காங்க. எனக்கு நடக்க இருந்தது கல்யாணம் இல்ல அக்ரிமெண்ட்! சோ.” என்று தோளைக் குலுக்க, மூவரும் மூன்று விதமாய் அவளை நோக்கினர்.

மகிழ்ந்தனிற்கு, முதல் தினம் அவள் ஏன் மதுபான விடுதிக்கு வந்திருந்தாள் எனப் புரிய, சற்று பரிதாபமாய் கூட இருந்தது.

‘வசதி படைத்தோர்களின் இல்லத்தில் இதெல்லாம் வாடிக்கை!’ என்பது போல் எவ்வித எதிர்வினையும் காட்டாது பானு இயல்பாய் இருக்க, கண்ணப்பனிற்குத் தான் அதிர்ச்சி.

உலகம் அறிந்த மற்றும் அனுபவம் வாய்ந்த மனிதர் தான். எனினும் தந்தை அல்லவா? அதுவும் பெண்பிள்ளைகள் எனும் பொழுது, அவருக்கு திகைப்பாய்த்தான் இருந்தது. லவனியின் இடத்தில் தன் மகள்களைப் பொருத்திப் பார்த்தவரால், அவள் உரைத்ததை ஜீரணிக்கவே இயலவில்லை.

“பாப்பா..”

“ம்ம்.”

“வருத்தமா இல்லயா உனக்கு.?”

மெலிதாய்ச் சிரித்தவள், “இருந்துச்சு, நேத்து. ஆனா, இப்ப இல்ல.”

“எப்படி உன்னால சிரிக்க முடியிது?”

“எனக்கு அழுகுறதுல இஷ்டம் இல்ல. பானு, டின்னரை ரூமுக்குக் கொண்டு வந்துடு. நீங்க சாப்பிடுங்க கண்ணப்பன். மகிழ்!” என அவனுக்குச் சொன்னப் பணிகளைப் பார்வையாலேயே நினைவூட்டி விட்டுச் சென்றாள்.

மறுநாளைய விடியல் லவனியையும் மகிழையும் தவிர்த்து மற்ற அனைவருக்குமே‌‌ எப்பொழுதும் போல் இயல்பாகவே புலர்ந்தது.

ஆடவனிற்கு முதல் வேலை நாள்.‌ 

எத்தனை மணிக்கு எழுவாள், பொதுவாய் எப்பொழுது வீட்டில் இருந்து கிளம்புவாள் என எஜமானியைப் பற்றி சில அடிப்படை விபரங்களைப் பானுவிடம் கேட்டறிந்து கொண்டான்.

காலையில் வெளிக் காவலாளியோடு இணைந்து அவனிற்கும் தேநீர் வந்து சேர்ந்தது‌.

அருந்தி முடித்து தயாரானவன் வண்டியைச் சுத்தம் செய்து, அதனருகே நின்று கொண்டான். காலை உணவை முடித்துக் கொண்டு, சரியாய் பத்து மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்தாள் லவனி.

“குட்மார்னிங் மேடம்!” என வாழ்த்தியவனைக் கண்டு அனிச்சையாய் அவளின் முகமும் மலர்ந்தது.

“குட்மார்னிங் மகிழ்.”

வாகனத்தின் பின் கதவைத் திறந்து விட்டவன், “உட்காருங்க மேடம்.”

“இதெல்லாம் நானே பார்த்துக்கிறேன்‌. டோரைக் குளோஸ் பண்ணீட்டுப் போ!” என்றவள், முன்பக்க இருக்கையில் அவன்‌ அருகிலேயே அமர்ந்தாள்‌.

அங்கங்கே தேங்கியிருந்த போக்குவரத்து நெரிசல்களைக் கடந்து, அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவள் உரைத்த முகவரிக்கு வந்து சேர்ந்தனர்.

கருவிழிகளை நிறைத்தபடி சற்றே பிரம்மாண்டமாய் காட்சியளித்த அந்த இல்லத்தின் வெளித்தோற்றத்தை வியப்புடன் நோக்கினான்.

ஆடவனைக் கவனித்தவள், “என்ன மேன் பார்க்குற.?”

“இவ்வளவு பெரிய வீட்டை முதல் தடவையா நேர்ல பார்க்கிறேன் மேடம்.”

“இதுவே சுச்சுவேஷன் வேறமாதிரி இருந்திருந்தா, உன்னை உள்ளேயும் கூட்டிட்டுப் போயிருப்பேன். இப்ப முடியாது!”

“எனக்கு உள்ள போய் பார்க்கிறதுல ஆர்வம் இல்ல.”

“இப்பதான்‌ ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன்னு சொன்ன. அதுக்குள்ள எப்படி இண்ட்ரெஸ்ட் இல்லாம போகும்.?”

“வெளிப் பார்வைக்கு அழகா தெரியிற பல விசயங்கள், உள்ள‌ சொதப்பலா இருக்கும். அதுனால தள்ளி நின்னு பார்க்கிறதே நல்லது. அதுமேல நமக்கு இருக்குற போலி ‌பிம்பமாவது கடைசி வரைக்கும் உடையாம இருக்கும். உள்ள போயி எதுக்கு அதை உடைச்சு,  வருத்தப்படணும்?”

மெலிதாய்ச் சிரித்தவள், “ஐ லைக் யுவர் விஷன். பட் எனக்கு வேற வழியில்ல. உள்ள போயித்தான் ஆகணும்.”

“யாரோட வீடுனு தெரிஞ்சிக்கலாமா மேடம்?”

“மை எக்ஸ் ஃபியான்சி!”

“போயிட்டு வாங்க மேடம்!” என்றவன் அவள்‌ உள்ளே சென்றதைப் பார்த்துவிட்டு, மீண்டும் வாகனத்திற்குள்ளேயே ஏறி அமர்ந்தான்.

எவ்வித ஒலியும் இன்றி அருங்காட்சியகம் போல் காட்சி அளித்தது இல்லம். பரந்து விரிந்திருக்கும் அதன் பரப்பில், ஒரு அறையில் இருந்து அழைத்தால், பக்கத்து அறையில் இருப்பவருக்குக்கூட கேட்காது‌. அத்தனை பெரியது.

மனைப் பெரிதானால், மனிதருக்கு இடையேயான இடைவெளியும் பெரியதாய் இருக்கும் என எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது.

இதற்கு முன்னரும் சில முறை அங்கு வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் பார்வையில் படாதவை, இப்பொழுது பெரும் குறைகளாகத் தெரிந்தன.

மனித மனம் தான் எத்தனை விதித்திரமானது? ஒன்று தனக்கு வேண்டும் என்றாலோ அல்லது பிடித்து விட்டாலோ, அதை அடைவதற்கு சாதகமான காரணங்களை நொடிப் பொழுதில் அடுக்கிவிடும். அதுவே வேண்டாம் என்றால், அதனை விலக்குவதற்கான சமாதானத்தைத் தேடித் தேடி வரிசைப்படுத்தும். தற்போது லவனியும் அம்மனநிலையில் தான் இருந்தாள்.

வாயில் காவலாளி மூலம் விருந்தினரின் வருகை முன்னரே வேலையாட்களிற்குத் தெரிவிக்கப் பட்டிருக்க, எஜமானருக்கும் அது போய் சேர்ந்திருந்தது.

கண்ணாடி டம்ளரில் பழச்சாறைக் கொடுத்துவிட்டுச் சென்றாள், பணிப்பெண் ஒருத்தி.

சிறிது நேரத்தில் லவனி திருமணம் செய்வதாய் இருந்த சர்வேஷின் தந்தை பூபதி வந்தார்.

மரியாதை நிமித்தமாய் அவள் எழுந்து நிற்க, கண்டு கொள்ளாதது போல் அமர்ந்தார்.

நீண்ட‌ மௌனம் நிலவியது. அவர் எதுவும் பேசுவது போல் தெரியவில்லை. லவனிதான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டியதாயிற்று.

“ஸாரி அங்கிள்.”

“இந்த ஸாரி, எங்க குடும்பம் பட்ட அவமானத்துக்கு ஈடாகும்னு நினைக்கிறியா.?”

“ஐ அண்டர்ஸ்டேண்ட். நான் செஞ்சது பெரிய தப்புதான். அதைச் சரிசெய்ய என்ன பண்ணணும்னு சொல்லுங்க, செய்யிறேன். பட் அப்பார்ட் ஃப்ரம் திஸ் வெட்டிங்.”

“ஹோ.. நியூஸ் பார்த்தியா.?”

அனைத்தையும் பார்த்து விட்டுத்தான் வந்திருந்தாள். ஒரு திருமணம் நிற்பது என்பது, ஊராருக்கு ஒரு செய்தி. சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமே அதன் வலி தெரியும்.‌ அந்நிகழ்வின் எதிர்வினையானது அன்றாட வாழ்வோடு சேர்த்து பணி செய்யும்‌ இடத்திலுமே எதிரொலிக்கும்.

ஒரு இயல்பான குடும்பத்திற்கே இந்நிலை என்றால், எட்டு ஒன்பது இலக்கங்களில் தொழில் செய்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களைச் சொல்லவும் வேண்டுமா? அதிகாரத்தைச் செலுத்தி அனைவரது வாயையும் மூடிவிடலாம் தான்.‌ எனினும் பின்னால் பேசுபவரை‌ என்ன செய்ய இயலும்‌?

அவமரியாதை என்பது நம்முடன் பயணிக்கும் நிழல் போன்றது. ஒளியின் பரப்பு மற்றும் நீளத்திற்கு ஏற்ப‍, நிலத்தில் சிறிதாகவும் பிரமாண்டமாகவும் விழும். அப்படியான நெருக்கடியைத் தான் சந்தித்துக் கொண்டிருந்தது, பூபதியின் தொழில் சாம்ராஜ்ஜியம்.

வர்த்தக உலகில் பெயர் சொல்லும் படியான இடத்தில் இயங்கி வருகின்றன, அவர்களின் நிறுவனங்கள். அதை தற்போது நிர்வகித்து வருபவன், அவரது மூத்த மகன் சர்வேஷ்.

அவனின்‌ திருமணம் நின்று போவது என்பது சாதாரணம் அல்லவே, தொழில் வட்டாரத்தில். தங்களின் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருந்த முக்கியஸ்தர்கள் யாவரும், உடனே திரும்பி வேண்டியது ஆயிற்று.

காரணம் காரியம் இல்லாமல் எதுவும் நிகழ்வது இல்லைதான். அவர்களின் வருகைக்கான காரணம், இன்றோ நாளையோ என்றோ ஒருநாள் தொழில் உலகில் உருவாகப்போகும் உறவுக்காகத்தான்.

லவனியின் நடவடிக்கையால் அனைத்தும் தலைகீழாய் மாற்றம் கண்டது. பூபதியின் நிறுவனங்களின் மதிப்பு, பெருமளவில் குறைந்தது. பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து இருந்தனர். அதனை சரிசெய்திட போராடிக் கொண்டிருந்தான் சர்வேஷ்‌.

ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு என்பதெல்லாம், வெறுமனே பெயரிற்கு மட்டுமே‌! தற்போதைய சூழலில் அவர்கள் அடைந்திருக்கும் நஷ்டத்தை ஈடுகட்ட சொன்னால், லவனியின் குடும்பம் தெருவில் நிற்க வேண்டியது தான்.

‘திருமணம் மற்றும் அதன்பின்பான நிகழ்வுகளைப் படம்பிடித்துக் கொள்ளலாம். அதற்கு முன்னர் தங்களை இடையூறை செய்ய வேண்டாம்‌!’ என ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்களிடம் கேட்டிருந்தனர்.‌ செய்தி சேகரிக்க காத்திருந்தவர்களிற்கு இதுபோல் விசயம் கிடைத்தால், விட்டு விடுவார்களா என்ன.?

முந்தைய நாள் முழுவதும், இந்த இருவரின் குடும்ப வரலாறு தான் தலைப்பு மற்றும் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருந்தது‌.

அனைத்தையும், இரு மாடுகளைப் பூட்டிய வண்டி பாரத்தை இழுத்துச் செல்வது போல் சமாளித்துக் கொண்டிருந்தனர், பூபதியும் சர்வேஷும்.

“எனக்குப் பணம் பெருசில்ல. இப்ப ஆன நஷ்டத்தை எப்படியும் சரி செஞ்சிடுவேன். ஆனா கௌரவம்.? நீ எதுக்கு‌ ஓடிப் போனியோ, அது எனக்குத் தேவை இல்லாதது. அதுனால என் பையனுக்கு ஏற்பட்ட‌ அவமானம்.? அதுக்கு என்ன‌ காம்பென்சேஷன் தரப் போற.?” என அவர் நிதானமாய் வினா எழுப்பிட, இயலாமையுடன் எழுந்து நின்றாள் லவனி.

“உங்களுக்குத் தேவை இல்லனு சொன்ன விசயம் தான், என்னோட ஃபர்ஸ்ட் ப்ரியாரிட்டி. இதுலயே தெரியிது உங்க குடும்பத்துக்கும் எனக்குமான வேறுபாடு. நான் கல்யாணம் செஞ்சிக்க நினைச்சேன். ஆனா, நீங்க என்னை வச்சு பிஸினஸ் பேசி இருக்கீங்க.

என்னை மனுசியா நினைக்காம, ஒரு பிராப்பர்ட்டியா டிரீட் பண்ணதுக்கு நானுமே காம்பென்சேஷன் கேட்கலாம் சார். இருந்தாலும் நான் செஞ்சது தப்புதான். இந்த விசயத்தால, நீங்க செஞ்சது சரினு ஆகிடாது. எனிவே, என்னால உங்களுக்கு ஏற்பட்ட உணர்வு ரீதியான லாஸுக்கு, என்ன செய்ய முடியும்னு பார்க்கிறேன். ஐ டிரை மை பெஸ்ட் சார்‌. உங்க பையன்கிட்ட ஸாரி சொன்னேன்னு சொல்லிடுங்க.” என்றவள் வாயிலை நோக்கித் திரும்ப, அவளின் வழியை மறைத்தபடி வந்து நின்றான் சர்வேஷ்.

“உன்னை யாரு உள்ள விட்டது.? செக்யூரிட்டி! இவளை வெளிய அனுப்பு. இனி, என் கண்ணுலயே படாத. உன்னோட பேரைக் கேட்கக்கூட நான் விரும்பல. கெட் லாஸ்ட்!” என அடிக்குரலில் உரைத்தவனைக் கண்டு சிரிப்புதான் வந்தது அவளிற்கு.

“ஐ திங்க், ஐ மேட் தி ரைட் டிசிஷன் அங்கிள். உங்க பையனுக்கு வீணா கல்யாணம் செஞ்சு வச்சு, ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துடாதீங்க!” என உரைத்து வெளியேற, நடந்த நிகழ்வை மேல் மாடியில் நின்று பார்த்திருந்தனர் பவேஷும் கீர்த்தியும்.

6 thoughts on “மகிழ்ந்திரு-12”

  1. ஆமா…இவே என்ன அர்த்தத்துள்ள சொல்லிட்டு போறா…,,😃

  2. Kalidevi

    Right decision tha eduthu iruka lavaniinumnalla yosichi avanuku ena pani satisfy aaka pora ellarkum panam than mukiyama iruku nee ethathu idea vachi irupa pakalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *