Skip to content
Home » மகிழ்ந்திரு-14

மகிழ்ந்திரு-14

அத்தியாயம் 14

அன்றைய தினத்தின் நண்பகலில் அந்த செய்திதான், தொழில் வட்டாரத்தில் உள்ளவர்களைப் பரபரப்பாக்கி இருந்தது.

லவனிகா, ‘திருமண நிகழ்வில் தன் மீதுதான் தவறு என்றும், அதற்காக சர்வேஷின் குடும்பத்தாரிடம் மனதார மன்னிப்பு வேண்டுவதாகவும்’ செய்தியாளர்களை அழைத்து தெரிவித்து இருந்தாள்.

“நான், மேரேஜ் ஹால்ல இருந்து சொல்லாம போனது என்னோட பெரிய தப்பு!” என்றுதான் உரைத்திருந்தாளே தவிர, ‘தான் திருமணத்தை நிறுத்தியதும், சர்வேஷைத் துணையாக ஏற்க மறுத்ததும் தவறு!’ என ஒப்புக் கொள்ளவில்லை.

பழச்சாறை அருந்தியபடி அக்காணொளியை தனது கைப்பேசியில் பார்த்திருந்தான் கீர்த்திவாசன்.

எவரை எண்ணியும் அச்சம் கொள்ளாது, தனது எண்ணங்களைச் செயல்படுத்தும் அவளின் நிமிர்வு உண்மையில் அவனுள் வியப்பை உண்டாக்கி இருந்தது.

இரு குடும்பமும் இருக்கும் சூழலில், ஒரு பெண்ணிற்கு இவை எல்லாம் எளிதானவை அல்ல.

‘சர்வேஷின் இல்லத்திற்கான வருகை, பூபதியூடனான பேச்சு, பத்திரிக்கையாளர் சந்திப்பு என இவற்றிற்கு முன்னர் அவள் தன் சொந்த குடும்பத்தினரையே எதிர்கொண்டிருப்பாள் தானே.?’ என்று தோன்றியது.

எதிரில் இருப்பவர்களின் முரணான கருத்துகளைக் கையாள்வதை  விட, நம்மவர்களிற்கு எதிராய் நிற்பதற்கு எத்தனை பெரிய தைரியம் வேண்டும்? உண்மையில் அவளின் மீது ஒருவித மரியாதை உருவாகத்தான் செய்தது.

சர்வேஷின் இல்லத்தில் அவள் பேசியதை கேட்ட கீர்த்திவாசனால், லவனியின் நிலையை நன்றாகவே உணர முடிந்தது. பவேஷை சிறுவயதில் இருந்தே பார்ப்பதால், இருவரது மனநிலையையும்
யூகிப்பது அவனிற்கு அத்தனை ஒன்றும் சிரமமாய் இல்லை.

முன்தினம் மூர்க்கக்குணம் கொண்டவளாய் அவனின் பார்வையில் விழுந்தவளின் பிம்பம், தற்போது சுயமரியாதை உடையவளாய் மாற்றம் கண்டிருந்தது.

“ரெஸ்பெட் இஸ் நாட்‌ எ ஸ்மால் திங். திஸ் இஸ் தி ரைட் ஆஃப் எவ்ரி ஹியூமன் பீயிங்‌.” என உரைத்தது நினைவிற்கு வர, “அவளோட தாட் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா, அதை என்கிட்ட மட்டும் ஏன் அப்ளை பண்ணல நேத்து.?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

விடையை அவள்தான் அறிவாள். இவனுக்கும் அறிந்து கொள்ள விருப்பம் தான். ஆனால், கேட்கும் சூழலில் இல்லை தற்போது.

“பாஸ், நேத்து அப்பாய்ன்மெண்ட் ஃபிக்ஸ் பண்ண கஸ்டமர்ஸ் வந்திருக்காங்க!” என அவனின் உதவியாளன் சொல்லிச் செல்ல, பணி செய்யும் அறைக்குச் சென்றான் கீர்த்தி.

குளிரூட்டியில் இருந்த குறைவான வெப்பத்திற்கு ஏற்றபடி, அவனின் உடல் உடனே மாற்றம் கொண்டது. கண்களைக் கூசச் செய்யாத அதேநேரம் பளிச்சிடும் விளக்குகள், அவ்வறையின் அழகை மட்டும் அல்லாது நீள அகலத்தையும் எடுத்துக்காட்டுவதாய் சரியான நிறக் கலவையில் பொருத்தப்பட்டு இருந்தன‌.

கதவைத் திறக்கும் ஒலிக் கேட்டிட, வாயிலின் புறம் திரும்பினான்.

ஒரு பெண்ணும் ஓர் ஆணும் உள்ளே வந்தனர்.‌ அவர்கள் கைகளைக் கோர்த்திருந்த தோரணையில் காதலர்களாய் இருக்கலாம் என யூகித்துக் கொண்டான். இருவரின் தோற்றமும், பொருளாதார ரீதியில் உயர் அடுக்கில் உள்ளவர்கள் என்று கட்டியம் சொன்னது.

“சொல்லுங்க, எங்க போடணும்.?”

“எனக்குக் கையில, இவளுக்கு சொல்டர்ல.” என்றான் அந்த ஆடவன்.

“சரி, வந்து உட்காருங்க. முதல்ல அந்த பொண்ணுக்குப் போட்டுடுறேன். எந்தப்பக்க சோல்டர்ல போடணுமோ, அந்த சைடு டிரஸ்ஸை ரிமூவ் பண்ணிக்கோங்கமா.” என்றவன் கையுறையை அணிந்து கொண்டு, தேவையான கருவிகளை எடுத்தான்.

முன்னரே அவர்கள் வடிவமைப்பைத் தேர்வு செய்து தந்திருக்க, அதனைக் காட்டி‌ உறுதி செய்து கொண்டான்‌.

காதலனின் முதல் எழுத்தை அவளும், நேசிப்பவளது பெயரின் முதல் எழுத்தை அவனும் பச்சைக் குத்திக் கொண்டனர்.

‘இந்தக் காதல் சக்ஸஸ் ஆகுமா? லவ் பண்ணா டாட்டூ போட்டுக்கணுமா என்ன.?’ என அவனுள் இருந்த எதார்த்த மனிதன் வினா எழுப்பிட, “இப்படி எல்லாம் ஆளுங்க இருக்கிறதால தான், உன்னோட பிஸினஸ் ஓடுது!” என்று விடையளித்தது தொழில் சார்ந்த மூளை.

“பேமண்ட் சார்.?”

“வெளிய ரிசப்ஷன்ல!” என்றவன், கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு இல்லத்திற்குச் செல்ல தயாரானான்.

“பானுமா, இந்த பிஸ்கட் நல்லா இருக்கே. இன்னும் ரெண்டு கிடைக்குமா‌?” எனக் கேட்ட மகிழ்ந்தனைக் கண்கள் சுருக்கிப் பார்த்தவள், “அது எவ்வளவு விலைனு தெரியுமா.?”

“எவ்வளவு.?”

இருவரையும் கவனித்திருந்த லவனி, “பானு!” என்று அவளிற்குப் பார்வையாலேயே கட்டளையிட, எதுவும் பேசாது ஒரு தட்டு நிறைய எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

“நான் ரெண்டு தான கேட்டேன்.?”

“அதை சாப்பிட்டு முடிச்சிட்டு, மேல ரெண்டு கேட்க மாட்டனு என்ன நிச்சயம்?”

“இல்ல, கேட்க மாட்டேன். என்னோட தேவை எவ்வளவுனு எனக்குத் தெரியும்.” என்றவன் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை மீண்டும் அவளிடமே கொடுத்தான்.

பானு கடுப்புடன் அதை வாங்கி வைக்க, “நிஜமா, போதுமா மகிழ்.?” என வினவினாள் லவனி.

“போதும் மேடம். ஆனா, இது எவ்வளவு.?”

“ஏன் கேட்குற?”

“சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்.”

அவள் சொல்வதற்கில்லை என்பது போல் மறுத்துத் தலையசைத்துச் சிரிக்க, “இப்படி எக்ஸ்ட்ரா சாப்பிடுறதுக்கு எல்லாம் என் சம்பளத்துல இருந்து பிடிக்க மாட்டீங்க தான.?”

“வாட் யூ மீன்‌‍?”

“இல்ல, பொதுவா எல்லா இடத்துலயும் அப்படித்தான.? தொழிலாளிக்கு ஆகுற செலவை, அவங்க சம்பளத்துல இருந்து எடுத்துக்குவாங்க‌. இந்த பிஸ்கட், அப்புறம் அன்னைக்கு ஹோட்டல்ல எனக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தீங்க. விலை அதிகமா, ரெண்டு டிரஸ். ஃபோனுக்கு ரீசார்ஜ். இதுக்கெல்லாம் ரொம்ப காசு செலவாகி இருக்கும்ல.? அதைச் சம்பளத்துல கழிச்சா எவ்வளவு மீதி இருக்கும்.?”

“டிரஸ்ஸும், ஹோட்டல் சாப்பாடும், அன்னைக்கு ஒருநாள் முழுசா எனக்கு நீ கம்பெனி கொடுத்ததுக்கான கிஃப்ட்‌. அந்த நாள், உன்னோட வேலைநாள்ல சேராது. மறுநாள்ல இருந்துதான் கணக்கு! அதேபோல, உனக்கான சாப்பாடும் சம்பளத்துல வராது. அது என்னோட பொறுப்பு. ரீசார்ஜும் அப்படித்தான். சோ, சேலரி முழுசாதான் உன்னோட கைக்குக் கிடைக்கும். என்ன, டவுட் கிளியர் ஆகிடுச்சா.?”

“உண்மையாவா மேடம்? ஆனா, எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை.?”

அவள் புன்னகைக்க, “உனக்குனு மட்டும் இல்ல. இங்க வேலை செய்யிற எல்லாருக்குமே அப்படித்தான்!” என்றாள் பானு‌.

“அப்புறம் ஏன், எக்ஸ்ட்ரா ரெண்டு பிஸ்கட் கேட்டதுக்கு அப்படிப் பார்த்தீங்க பானுமா.?”

“உன்மேல கொஞ்சம் கூடுதல் அக்கறையா நடந்துக்கிறாங்களே மேடம், அதான்.”

‘அப்படியா.?’ என்பது போல் அவன் லவனியைப் பார்க்க, “என்ன?” என்றாள் அவள்.

மகிழ்ந்தன், “ஒன்னும் இல்லையே.?” என்றுவிட்டு எழுந்து செல்ல, “நானே கேட்கணும்னு நினைச்சேன்‌. ஏன் மேடம் அந்த டிரைவர்கிட்ட இவ்வளவு நெருக்கமா பழகுறீங்க? இதுவரைக்கும் என்னைத் தவிர வேற யாருக்கூடவும் நீங்க இவ்வளவு க்ளோஸா இருந்தது இல்லையே.?” என வினவினாள் பானு.

“என்ன பொறாமையா?‌ உன்னோட வேலைக்கு எதுவும் ஆபத்து இல்ல. அதுனால கண்டதையும் யோசிக்காத!”

“ஆமா, இந்த வேலைதான் முக்கியம் பாருங்க? நான், உங்கக்கூட மூனு வருசமா இருக்கேன். அவன் வந்து மூனு நாள் தான ஆகுது?”

“எவ்வளவு காலமா இருந்தா என்ன.? ஒருத்தரை நான் அளவிடுறது, அவங்க நடந்துக்கிற முறையை வச்சுத்தான்! யாருனே தெரியாத ஒரு பொண்ணுக்காக, தன்னோட உயிரைப் பத்திக் கவலைப்படாம ரிஸ்க் எடுத்தான்‌. அது ஒன்னு போதும், அவன் யாருன்றதுக்கு.

சேலரிக்காக ஓனர் சொல்லுற எதையும் செய்யிற விசுவாசியான சர்வண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க. நீ உள்பட. ஆனா, அந்த பணத்தைப் பெருசா நினைக்காம, தான் வேலை செய்யிற முதலாளி தப்பு செஞ்சிடக் கூடாதுன்ற எண்ணம் இருக்கிறவன், எனக்குத் தெரிஞ்சு இவன் ஒருத்தன் தான்.

சோ, ஐ பிலீவ் ஹிம் அண்ட் வாண்ட் டூ கீப் ஹிம் பை மை சைட்.”

“என்னமோ மேடம்! ஆனா, யாரா இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க!” என்றுவிட்டு அவள் செல்ல, “பானுமா, பழைய துணி ஏதாவது இருந்தா கொடுங்களேன். என்னோட ரூம்ல கொஞ்சம் தூசியா இருக்குத் துடைக்கணும்!” எனக் கேட்டபடி சமையல் அறைக்குள் சென்றான், மகிழ்ந்தன்.

“காலையில தான, கிளீன் பண்ணேன்‌. அதுக்குள்ள எப்படித் தூசி வந்துச்சு.?”

“ஜன்னலைத் திறக்கும் போது வந்திருக்கும்னு நினைக்கிறேன்.”

“ரூம்ல தான் ஏசி இருக்கே, அப்புறம்‌ ஏன் ஜன்னலைத் திறக்குற?”

“எனக்குத்தான் ஏசி அலர்ஜி ஆச்சே.?”

“ஹான்.?” என அவள் புரியாமல் விழிக்க, “ஆமா, சில்லுனு இருந்தா தூக்கம் வராது‌. கொஞ்சம் இதமா சூடா வேணும்.”

“ஏது, இதமா சூடாவா.? அடிக்கிற வெயிலுக்கு வெந்து போயிடாத.”

“ஈஈ.. அப்படி எல்லாம் வேக மாட்டேன்‌. துணி, துணி..” என அவன் மீண்டும் கேட்க, எடுத்துத் தந்தாள் அவள்.

“ஆமா, இன்னைக்கு என்ன சமையல்?”

“ஏன் கேட்குற.?”

“எனக்கு மிளகுக் கொஞ்சம் அதிகமா போட்டு கொஞ்சமா ரசம் வச்சுத் தர்றீங்களா.?”

“நான், லவனி மேடமுக்கு வேலைக்காரியா? இல்ல உனக்கா.?”

“இப்படி எல்லாம் ‌கேட்டா, எப்படிப் பானுமா?”

“பின்ன, ஆர்டர் போடுற.?”

“நான் எங்க ஆர்டர் போட்டேன்? கேட்கத்தான செஞ்சேன்? நேத்து கண்ணப்பன் ஐயா சுக்குமல்லி காபி கேட்டப்ப மட்டும் செஞ்சுக் கொடுத்தீங்க.?”

“அவரு வயசானவரு‌. உடம்புக்கு முடியலனு கேட்டாரு.”

“எனக்கும் தொண்டையில கிச் கிச். அதுனால தான் கேட்கிறேன்.”

“சரியான இம்சை பிடிச்ச ஆளுய்யா நீ!”

“ரசம் ரசம், ப்ளீஸ் ப்ளீஸ்‌..”

“முடியாது!”

“சரி போங்க!” என்றுவிட்டு அவன் முகத்தைத் தொங்கப் போட்டபடி செல்ல, இருவரது உரையாடல்களையும் கேட்டுச் சிரித்தபடி தனது மடிக்கணினியில் பணியைத் தொடர்ந்தாள் லவனி.

கண்ணப்பன் வந்து செல்லும் பொழுது மட்டும் தான், அவ்வீட்டில் சப்தம் என்பதே வரும். உள்ளே வரும் பொழுது பானுவிடமும், வெளிப்பக்கம் வேலை செய்யும் பொழுது காவலாளியிடமும் ஏதேனும் பேசிக் கொண்டே இருப்பார்‌.

மற்ற நேரங்களில் எல்லாம், நிசப்தப் போர்வை போர்த்திக் கொள்ளும் சூழல்‌.

லவனிக்கு பானு நெருக்கம்தான் என்ற பொழுதும், தனக்கு வேலை கொடுப்பவர் என்ற எண்ணத்தில் சற்று எச்சரிக்கையுடனே பழகுவாள். அவசியம் இன்றி எதையும் பேச மாட்டாள்.

ஆனால் தற்போது மகிழ்ந்தனின் வரவிற்குப் பின்னர், ‘அமைதி என்றால் என்ன?’ எனக் கேட்கும் அளவிற்கு மாறிவிட்டது.

வெளிக் காவலாளி, கண்ணப்பன், லவனி, பானு என்று பாரபட்சம் இன்றி அனைவரிடமும் ஒன்றுபோல் பழகினான். ‘தான் இங்குதான் இருக்கிறேன்!’ என ஒவ்வொரு நொடியும் தனது இருப்பை வீட்டில் இருப்போருக்குத் தெரியப் படுத்திக் கொண்டே இருந்தான்.

“மேடம்!” என்று தன் எதிரே வந்து நின்றவனை கேள்வியாய்ப் பார்த்தவள், “என்ன மகிழ்?”

“சமையலறையை உபயோகிக்க உங்க பர்மிஷன் வேணும் மேடம்.”

“எதுக்கு?”

“கொஞ்சமா ரசம் வைக்கணும். பானுமா, வச்சுத் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதான்.”

“ஓ.. உனக்குச் சமைக்க எல்லாம் தெரியுமா.?”

*ஏதோ கொஞ்சமா.”

“சரி போ, அப்படியே எனக்கும் சேர்த்து செய். இன்னைக்கு உன்னோட ப்ரீபரேஷனை டேஸ் பண்ணிப் பார்ப்போம்.”

“சரிங்க மேடம்!” என்றுவிட்டுச் சமையல் அறைக்குச் சென்றவன் வேலையில் இறங்க, வெளியே வந்து நின்று கொண்டாள் பானு.

“மிக்ஸியில அரைச்சா நல்லா இருக்காது.” என உரைத்து பருப்பு கடையும் மத்தால் சீரகம், மிளகு, பூண்டை தட்டிப் போட்டு‌ அதனோடு தக்காளியைக் கடைந்து தயார் செய்தவனை வியப்போடு பார்த்திருந்தாள், அவ்வீட்டின் பொறுப்பாளினி.

மேல் பக்கம் நுரைக்கட்டி நிற்க அளவான டம்ளரில் ரசத்தைக் கொண்டு வந்து கொடுத்த மகிழைப் புரியாமல் பார்த்த லவனி, “என்ன மேன் இது.?”

“ரசம் மேடம்.”

“இப்படி கிளாஸ்ல கொண்டு வர்ற? சாப்பாடுக்கு ஊத்தி சாப்பிடுறது இல்லையா இது?”

“முதல்ல குடிங்க. அப்புறம் சாப்பாடுக்கு சாப்பிடலாம்! பானுமா நிறையா தான் செஞ்சேன். உங்களுக்கும் வேணும்னா எடுத்துக்கோங்க!” என உரைத்து தனக்காகவும் ஒரு டம்ளர் நிறைய ஊற்றிக் கொண்டு நகர்ந்தவனிடம், “ஈவ்னிங் சிக்ஸ் ஓ கிளாக், ஒரு பார்ட்டிக்குப் போகணும் மகிழ்!” என்று நினைவு படுத்தினாள் லவனிகா.

6 thoughts on “மகிழ்ந்திரு-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *