Skip to content
Home » மகிழ்ந்திரு-17

மகிழ்ந்திரு-17

அத்தியாயம் 17

பவேஷின் நண்பர்கள் ஒவ்வொருவராய் விடைபெற்று செல்ல, பணியை முடித்துவிட்டு வந்தான் கீர்த்திவாசன்.

“என்னடா எல்லாம் ஓவரா.?”

“ம்ம், முடிஞ்சது மாம்ஸ்.”

உள்பக்கம் திரும்பியவனின் பார்வையில், லவனி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து முன்பக்கமாய் மேஜையில் சரிந்து படுத்திருப்பது விழுந்தது. 

“அந்தப் பொண்ணு இன்னும் போகலயா.?”

“நீங்க வர்ற வரைக்கும் எனக்குக் கம்பெனி கொடுக்கச் சொன்னேன். அதான், இருக்காங்க மேடம்.”

“தெளிவா தான இருக்கா? இல்ல ஃப்ளாட்டா.?”

“அது பிரச்சனை இல்ல. பேபியோட டிரைவர் இருக்கான்.”

கண்களைச் சுழற்றிய கீர்த்தி, “டிரைவரைக் காணோமே.?”

“என்னை அவளுக்கு வாட்ச்மேனா நிக்க வச்சிட்டு, சாப்பிட போயிருக்கான் மாம்ஸ்.”

குழப்பத்துடன் நோக்கியவன், “சாப்பிடவா.? இங்கதான் ஃபுட் இருக்கே பவேஷ்.?”

“நானும் சொன்னேன்‌. எனக்கு இங்க இருக்க சாப்பாடு எல்லாம் செட் ஆகாது சார். தகுதிக்கு மீறினது அது. நான் வெளிய போயே சாப்பிட்டுக்கிறேனு போயிருக்கான். இதுல இன்னொரு மேட்டர், சரி போயிட்டு வானு பேபி‌ பணம் கொடுத்து அனுப்பி இருக்கா.”

ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தான் கீர்த்தி.

“நீ அவளை மட்டும் தான பார்ட்டிக்கு இன்வைட் பண்ண? அவளோட டிரைவரை கூப்பிடலயே.? அதான் வெளிய அனுப்பி இருக்கா.”

திகைப்புடன் பார்த்த பவேஷ், “மாம்ஸ்?”

மற்றவன் சிரித்து, “என்னடா?”

“ரியலி? அதுனால தான் செண்ட் பண்ணாளா.?”

“ரெஸ்பெட் இஸ் தி ரைட்ஸ் ஆஃப் எவ்ரி ஹியூமன் பீயிங்‌, நேத்து சொன்னாளே ஞாபகம் இருக்கா.? பார்ட்டி முடியிற டைம்ல சாப்பிட சொல்லி, அவனை டிஸ்ரெஸ்பெட் பண்ணுறதா நினைச்சிருக்கலாம். அவளோட கேரெக்டரை வச்சு, ஜெஸ்ட் ஐ கெஸ்ட். பட், உண்மை என்னனு தெரியல.”

“ம்ம். நீங்க சொன்னதுலயும் ஒரு பாய்ண்ட் இருக்கு. ஷீ இஸ் சம்திங் மோர் மாம்ஸ்.”

“எஸ்!” எனப் புன்னகைத்தவனின் பார்வையில், லவனியுடனான முதல் சந்திப்பின் பிம்பம் முற்றிலுமாய் உடைந்து போனது.

பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்தான் மகிழ்ந்தன்.

எஜமானியைக் கண்டவன், “மேடம் தூங்கிட்டாங்களா.?”

பவேஷ், “அப்படித்தான் நினைக்கிறேன். லைட்டா கொஞ்சம் போதையில இருக்கா.”

“ஏன் சார்.? உங்களை நம்பிதான பார்ட்டிக்கு வந்தாங்க. அவங்களை இப்படிக் குடிக்க விடலாமா.?”

“ஏன்பா, நான் என்னமோ கிளாஸ்ல ஊத்தி குடிக்க வச்சமாதிரி பேசுற.?”

“போதும்னு இடையிலயே அவங்களை நிறுத்தி இருக்கலாம்ல.?”

“ம்ம், செஞ்சிருக்கலாம் தான். பட், அவளைக் கண்ட்ரோல் பண்ணுற மாதிரி இருக்காதா.?”

“வெள்ளம் வர்றதுக்கு முன்னாடி தடுப்பு போடுறது எல்லாம் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தானே தவிர, மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறதுல சேராது!”

“கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுறியா? ஐ டோண்ட் அண்டர்ஸ்டேண்ட், மிஸ்டர் டிரைவர்.”

“இதுக்கு மேல எப்படிச் சொல்லுறது.?” என மகிழ் விழிக்கும் பொழுதே, “பாய் பவேஷ்!” என்று மீதம் இருந்தவர்களும் விடை பெற்றனர்.

அவர்களை வழியனுப்புவதற்காக அவன் சென்றிட, “சார்..” என்றான் கீர்த்தியை.

அவன் கேள்வியாய்ப் பார்த்திட, “நீங்க யாரு, இங்க எதுக்காக வந்திருக்கீங்க? பவேஷ் சாருக்கும் உங்களுக்கும் என்ன உறவு எதுவும் தெரியாது எனக்கு. நான் இப்பப் பேசுறது உங்களுக்குக் கோபத்தைக் கூட வர வைக்கலாம். ஆனாலும் கொஞ்சம் நீங்க பொறுமையா என்னோட கோரிக்கையைக் கேட்கணும்.”

“உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே? என்ன ரெக்குவெஸ்ட்.?”

“நான் கவனிச்சேன் வெளிய இருந்து‌. நீங்களும் மேடமும் எதுவும் பேசல தான். ஆனாலும் உங்களுக்கு நடுவுல ஏற்கனவே கொஞ்சம் பிரச்சனை நடந்துச்சு இல்ல. அதை அப்படியே விட்டுடுங்களேன். அன்னைக்கு ஹோட்டல்ல வச்சு‌ என்னமோ சொன்னீங்களே, வெயிட் அண்ட் வாட்ச்னு. அந்த வார்த்தையில ரொம்ப கோபம் இருந்துச்சு. மேடம்‌ ஏற்கனவே தன்னோட குடும்ப மனுசங்களாலேயே மனசுல ஆழமான காயத்தை அனுபவிச்சுட்டு இருக்காங்க. நீங்களும் கோபத்துல ஏதாவது செஞ்சிட்டா…?”

“என்ன, நான் உன்னோட மேடமை எதுவும் செஞ்சிடுவேன்னு பயப்படுறியா?”

“பயம்னு இல்ல சார். அப்படியே ஏதாவது நடந்தாலும், அவங்க அதைச் சரி பண்ணிக்குவாங்க. தைரியமான பொண்ணு தான். ஆனாலும் வலிக்கும்ல.? அது வேணாம்னு நினைக்கிறேன். வலி, வடுவா பதிஞ்சிட்டா காலத்துக்கும் மறையாது!”

“உங்க மேடம் மேல ரொம்பதான் அக்கறை!”

மகிழ் மறுமொழி உரைக்காமல் சிரிக்க, கீர்த்தி ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.

“சிகரெட் பிடிக்காதீங்க சார். உடம்புக்கு நல்லதில்ல. நம்மளோட சேர்த்து சுத்தி இருக்கிறவங்களையும் பாதிக்கும்!”

அவனை ஆழ்ந்து பார்த்தவன், “டிரிங்க் பண்ணுறது மட்டும் நல்லதா.? உன்னோட மேடம்கிட்ட சொல்லலாம்ல இதை.? மூச்சு முட்ட குடிச்சிட்டுப் படுத்திருக்கா பாரு!”

“சொல்லுறதை, சக மனுசனா என்னோட கடமையா நினைக்கிறேன். அதை ஏத்துக்கிறதும் விலக்குறதும் உங்க உரிமை.‌ நான் வற்புறுத்த முடியாது‌. அப்புறம் சார், மேடம் மூச்சு முட்ட எல்லாம் குடிக்கல. அவங்க அப்படிப்பட்ட ஆளும் இல்ல. நான் வெளியப் போகும் போது ஓரளவுக்கு நிதானத்துல தான் இருந்தாங்க. இன்னைக்கு காலையில இருந்து, பவேஷ் சாரோட வீடு, டீவில பேசுனது, இங்க வந்ததுனு ரொம்ப சோர்ந்துட்டாங்க. அதான் இப்ப கொஞ்சம் ஓய்வா படுத்திருக்காங்க.”

“ஹோ..‌” என்றவனின் கண்கள் ஏனோ அனுமதியின்றி லவனியின் பக்கம் தானாய் சென்றது.

நெருப்பை பற்ற வைக்காத சிகரெட்டை மீண்டும் அதனின் பெட்டியில் அடைத்து, கால்சராயின் பையில் வைத்துக் கொண்டான்.

“கிளம்புறோம் சார்!” என்றுவிட்டு அவன் நகர, “ஹேய்..”

சற்றே நிதானித்தவன், “என்ன சார்?”

“உன் பேர் என்ன.?”

“மகிழ்ந்தன்!”

“ம்ம்..” என நொடி இடைவெளி விட்டவன், “மிஸ்டர் மகிழ்ந்தன், ஸாரி!”

திடுக்கிடலுடன் பார்த்த மகிழ், “அச்சோ! என்ன சார், திடீர்னு என்னமோ சொல்லுறீங்க.?”

“அன்னைக்கு உன்னோட மேடம் சொன்னது சரிதான்.‌ நான் நினைச்சிருந்தா, என்னோட கையைக் கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம்‌. பட், அவமேல இருந்த கோபத்தை உன்மேல காட்டிட்டேன். சம்பந்தமே இல்லாம, என்னால நீ காயப்பட்டுட்ட!”

“அது பரவாயில்ல சார்.‌ உடம்பைப் பார்த்துக்கோங்க!” என்றுவிட்டு லவனியின் அருகே சென்றான் மகிழ்ந்தன்.

“மேடம்.. மேடம்..” என அழைத்திட லேசாய் தலையைத் திருப்பி அவனை நோக்கினாள்.

“தூங்கிட்டீங்களா.? போகலாமா.?”

“தூங்கல மேன். கொஞ்சம் ஹெட்ஏக்கா இருந்தது, அதான் படுத்திருந்தேன்.”

“வாங்க, வீட்டுக்குப் போயி பானுமா கையால சூடா அரை டம்ளர் சுக்குமல்லி காபிக் குடிச்சா, தலைவலி எல்லாம் காணாம போயிடும்.”

மெலிதாய்ப் புன்னகைத்தவள், “சாப்பிட்டியா.?”

“ம்ம்.”

“சரி, கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் வாஸ்ரூம் போயிட்டு வந்திடுறேன்.”

“உதவி வேணுமா மேடம்.?”

“ஏன், நல்லாதான் இருக்கேன்.”

“குடிச்சிருக்கீங்களே அதான்.”

‘ஆம்’‌ என்பது போல் தலை “அசைத்தவள், போதையில முழுசா என்னைத் தொலைக்கிற ஆள் இல்ல, நான்!”

“கார்க்கிட்ட இருக்கேன் மேடம்‌. வாங்க!” என்றவன் அவளது கைப் பையை வாங்கிக் கொண்டு செல்ல, ஓய்வறையை நோக்கி நடந்தாள் லவனிகா.

இருவரையும் பார்த்தபடி சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான் கீர்த்தி. அவனைக் கடந்து சென்றவள் ஒரு நொடி நிதானித்து, நோக்கினாள்.

“என்ன மேடம், செம போதையா.?”

“நீங்க குடிக்க மாட்டீங்களோ.?”

அவளுள் சென்றிருக்கும் மது வேலை செய்கிறது எனப் புரிந்து கொண்டவனிற்கு, இத்தனைக்கும் இடையே இதை கவனித்து இருக்கிறாளே என வியப்பு தோன்றிட,‌‌
“எனக்கு டிரிங்க் பண்ணுற பழக்கம் இல்ல.”

“ஹோ.. நைஸ். ஒரு ஆம்பளைக்கிட்ட இருந்து இதைக் கேட்கிறப்ப ஒருமாதிரி நல்லாதான் இருக்கு!”

அவன் மெலிதாய்ச் சிரிக்க, “ஐம் ரியலி வெரி ஸாரி மிஸ்டர் கேவி!” என உரைத்தவளின் குரலில் உண்மையிலேயே வருத்தம் நிறைந்து இருந்தது.

குழப்பமாய் பார்த்தவன், “எதுக்கு இந்த ஸாரி?”

“தப்பு என்மேல தான.? அன்னைக்கு மகிழ் சொன்னான், ‘இப்ப நீங்க ஒரு நிரபராதிக்குத் தண்டனைக் கொடுத்துட்டு வந்திருக்கீங்க’னு. செய்யாத தப்புக்கு பனிஷ் பண்ணுறது நியாயம் இல்ல. நான், அநியாயம் செய்யிறவளா இருக்க விரும்பல. அதோட, இப்ப நீங்க மகிழ்கிட்ட ஸாரி கேட்டதும்.. ஐ.. ஐம்.. ரியலி ஸாரி!”

“தூங்கலயா நீ? எல்லாத்தையும் கேட்டுக்கிட்டா இருந்த.?”

“யா!” என ஒரு நீண்ட மூச்சை வெளிவிட்டவள், “தப்புக்குத் தண்டனைதான் சரியான முடிவுனு நினைக்கிற ஆள் நான். அதுனால தான், யோசிக்காம உங்களை அடிச்சிட்டேன். பட், இப்ப அந்த தப்பைச் செஞ்சதே நான்தான்னு ரியலைஸ்ட். அந்த கில்ட்டோட என்னால மூவ் ஆக முடியாது. சோ..”

“சோ.?”

“அன்னைக்குச் சொன்னீங்க இல்ல? ‘அந்த அடியை நீ வாங்கிக்கோ, நான் அவன்கிட்ட ஸாரி சொல்லுறேன்’னு..”

சற்றே அதிர்ச்சியுடன் அவளை நோக்கியவன், “நீ ரொம்ப குடிச்சிருக்கனு நினைக்கிறேன்‌. போதும் பேசினது. வெயிட், உன்னோட டிரைவரை கூப்பிடுறேன். கிளம்பு.” என்றுவிட்டு நகர, “கேவி, நான் குடிச்சிருக்கேன் தான். பட், ஐ க்நோ வாட் ஐம் டூயிங்.”

சற்றே நிதானித்தவன், “ஆர் யூ ஸுயூர்.?”

“யா!”

“பின்னால வருத்தப்பட மாட்டியே.?”

“நோ ரெக்ரேட்!”

“எங்க, நீ சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்லு பார்ப்போம்.?”

“எதை.?”

“நிரபராதி தண்டனைனு..”

“ஏன்.?”

“தெளிவா தான் இருக்கியானு எனக்குத் தெரியணும்ல.? நீ சொல்லுற மாதிரி எதையாவது செஞ்சு, நான் குற்றவாளியாக விரும்பல.”

அவள் தனக்கு நினைவில் இருந்த மட்டும் மீண்டும் உரைக்க, அதனை அப்படியே காணொளியாய் தனது கைப்பேசியில் பதிவு செய்து கொண்டான் கீர்த்தி.

“ஹேய், என்ன செய்யிறீங்க.?” என அவள் கைப்பேசியைப் பறிக்க முயல, “நீதான் நோ ரெக்ரேட்னு சொன்ன. சோ, வீணா என்கூட போட்டிப் போடாம, முதல்ல கிளம்புற வழியைப் பாரு‌. நீ நிதானத்துல இல்ல. இந்த டைம்ல, உன்கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்க நான் விரும்பல. எனக்கு உன்மேல கோபம் இருக்குதான். அதுக்கு நான் எப்படிப் பதிலடி கொடுக்கணுமோ, அப்படிக் கொடுத்துக்கிறேன். ஆனா, இப்படி இல்ல!”

லவனி ஒன்றும் புரியாமல் மதுவின் லேசான போதையில் கண்கள் சொருகிய படி நிற்க, “ரெஸ்ட் ரூம் போகலயா?”

“ம்ம் போகணும்!”

“தட் சைட்!” எனக் கையை நீட்டி வழி காட்டியவன், அவளின் இரு தோளிலும் கரம்பதித்து அத்திசையை நோக்கித் திருப்பி நிற்க வைத்து, “போ!” என்றான்.

தலையைத் திருப்பி அவனை ஒருமுறைப் பார்த்துவிட்டு நகர‍, “ஃபேஷ் வாஸ் பண்ண மறந்துடாத!” என்ற சொற்கள் அவளைப் பின்தொடர்ந்தது.

நண்பர்களை அனுப்பிவிட்டு வந்த பவேஷ், “எங்க மாம்ஸ், பேபியைக் காணோம்?”

“ரெஸ்ட் ரூம் போயிருக்கா‌. செண்ட்ஆஃப் பண்ணீட்டு வா.‌ கேர்ஃபுல், ஓகே!”

“யா மாம்ஸ்!” என்றவன் லவனிகா வரும்வரை காத்திருந்து அவளைப் பத்திரமாய் வண்டியில் ஏற்றி‌ விடைகொடுக்க, “தேங்க்ஸ் பவேஷ்!”

“ஐம் ஹேப்பி ஃபார் யூ பேபி. மேரேஜை கேன்சல் செஞ்சு, அந்த சுச்சுவேஷனை ரொம்ப அழகாவே ஹேண்டில் பண்ண!”

“நான் மேரேஜ் ஹாலை விட்டுப் போகாமலேயே, அதைச் செஞ்சிருக்கலாம். பட், பாஸ்ட் இஸ் பாஸ்ட்!”

சின்னதாய்ச் சிரித்தவன், “நீ என்னை ஃப்ரெண்டா அக்செப்ட் பண்ண யோசிச்சதால தான், மேரேஜுக்கு இன்வைட் பண்ணல. தப்பா நினைக்காத!”

“ஐ அண்டர்ஸ்டேண்ட்!”

“டேக்கேர் பேபி!”

“ம்ம்!” எனத் தலையசைத்தவளின் வாகனம் கிளம்பிச் செல்ல, மேல் தளத்தில் தனது நிறுவனத்தில் நின்று கண்ணாடித் தடுப்பின் வழியாக நடந்த நிகழ்வினைப் பார்த்திருந்தான் கீர்த்திவாசன்.

4 thoughts on “மகிழ்ந்திரு-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *