Skip to content
Home » மகிழ்ந்திரு-20 (முடிவுற்றது)

மகிழ்ந்திரு-20 (முடிவுற்றது)

அத்தியாயம் 20

ஆடவனின் ஆழ்ந்த இதழ் முத்தத்திற்கு ஈடு கொடுத்தபடி, அவன் மீதான தனது விருப்பத்தையும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தாள் லவனிகா.

இருவரும் கீர்த்திவாசனிற்கு உரிமையான கே.வி டாட்டூஸில் இருக்கும், அவனது தனிப்பட்ட அறையில் இருந்தனர்.

குளிரூட்டி இயங்கிக் கொண்டிருக்கும் அந்த அறையிலும், முத்தச் சூட்டினால் இருவருக்கும் லேசாய் வியர்வை உற்பத்தியாகி இருந்தது.

சற்றே விலகி, அவளின் தோளில் தனது தாடையைப் பதித்து அணைத்துக் கொண்டான் கீர்த்தி.

“ஹனி!”

“ம்ம்.”

“எப்ப, மேரேஜ் பண்ணிக்கலாம்?”

“என்ன அவசரம்.? மெதுவா செய்யலாம்.”

“திஸ் இஸ் நாட் ரைட், ஹனி!”

“எது.?”

“ஓகே சொல்லிட்டு, மேரேஜ் டேட்டை மட்டும் தள்ளிப் போட்டா என்ன அர்த்தம்.?”

“எனக்கு உன்னோட லவ்வரா இருக்க பிடிச்சிருக்குனு அர்த்தம்.”

“ம்ம்..” என ஒரு பெருமூச்சை வெளிவிட்டவன், “சர்ட் பட்டன் ப்ரோக் ஆகுற அளவுக்கு கிஸ் பண்ணதுக்கு அப்புறம் கண்ட்ரோலுக்கு வர்றது எல்லாம் எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா உனக்கு.?”

“நான் படிச்சது எல்லாம் அப்ராட்ல தான்.‌ அங்க டேட்டிங், ரொம்பவே நார்மல். என்னையும் ஒரு நாலஞ்சு பசங்க டிரை பண்ணாங்க. ஆனா, எனக்குத்தான் அதுல உடன்பாடு இல்ல. கமிட்மெண்ட் இல்லாம, எந்த ஆணோடவும் பழகக்கூடாதுனு ஒரு பிரின்ஸிபல்லோட இருந்தேன்.

எங்கேஜ்மெண்ட்டுக்கு அப்புறம், அங்க நான் பார்த்துப் பழகின இந்த மாதிரியான டேட்டிங் எக்ஸ்பீரியன்ஸை ரொம்பவே மிஸ் பண்ணேன் கேவி. என்னோட ஃபியூச்சர் ஹஸ்பெண்ட் கிட்ட இருந்து, அதை எதிர்பார்த்தேன். உனக்குத்தான் தெரியுமே, நடந்தது எல்லாம்.?”

“சோ, இப்ப என்னை வச்சு அதை எல்லாம் செஞ்சுக்கிற!”

அவள் சிரித்தபடி ஆடவனின் கால்களிற்கு இடையே திரும்பி அமர்ந்து மார்பில் தலைசாய்க்க, ஆதரவாய் அணைத்துக் கொண்டான்.

“உன்னோட அப்பாக்கிட்ட விசயத்தைச் சொல்லிட்டியா ஹனி.?”

“அவரோட செகண்ட் வொய்ஃப்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டேன். அவங்க சொல்லிடுவாங்க.”

“நீ, நேர்ல போய் பார்க்கலயா அவரை.?”

“டிஸ்டென்ஸ் மெயிண்டெயின் பண்ணுறது தான் நல்லது. அவரோட பிஸினஸுக்கு நான் ஸ்யூரிட்டியா மாற விரும்பல. உன்னோட பேரண்ட்ஸ் என்ன சொன்னாங்க.?”

“அப்பா ஓகே சொல்லிட்டாரு. அம்மா தான், கொஞ்சம் கோபமா இருக்காங்க‌‌. சமாதானம் பண்ணிடலாம். நான் பார்த்துக்கிறேன்.”

“ம்ம்..” என்றவள் சற்றே முகத்தை நகர்த்தி அவனின் சட்டைக் காலரை விலக்கி கழுத்தில் இதழ் பதிக்க, “யூ ஆர் டீஸிங் மீ, ஹனி.” என உள்ளே போன குரலில் மொழிந்தான் கீர்த்தி.

மெலிதான புன்னகையுடன் விலகி ஆடவனின் ‌முகம் பார்த்தவள், “லவ் யூ‌ கேவி.”

“ஐ டூ லவ் யூ ஹனி! சரி, லஞ்சுக்கு எங்க போகலாம்.?”

“என்னோட வீட்டுக்கு‌‌. பானுக்கிட்ட ரெடி பண்ண சொல்லி இருக்கேன்.”

“ஓகே! கொஞ்சம் என்னோட மடியில இருந்து எழுந்துக்கிறியா.? டென் மினிட்ஸ்ல ஒரு அப்பாய்ன்மெண்ட் இருக்கு. வொர்க்கை முடிச்சிட்டு வந்திடுறேன்.”

“கேவி, எனக்கும் டாட்டூ போடணும்.”

“என்ன போடப் போற.?”

“எனிதிங்!”

சின்னதாய்ச் சிரித்தவன், “எந்த ஐடியாவும் இல்லாம எதுக்குப் போடணும்னு ஆசைப்படுற?”

“உன் கையால போட்டுக்கணும்.”

“ஹோ! போட்டுட்டா போச்சு! எங்க.?”

தனது வலதுபக்க இடைப்பகுதியில் இருந்த உடையை விலக்கிக் காட்டினாள் லவனிகா.

இரண்டு சென்டிமீட்டர் அளவிற்கு பளிச்சிட்ட அவளின் இடையில் இரண்டு விரல்களால் கோடு வரைந்தவன், “லஞ்ச் முடிச்சிட்டு, உன் வீட்டுல வச்சு போடலாம்‌‌. இப்ப, நான் போய் வேலையைப் பார்க்கிறேன்!” என்று பாவையின் நெற்றியில் இதழை ஒருமுறை ஒற்றி எடுத்துவிட்டுச் சென்றான், கீர்த்தி.

தனது உடையைச் சரிசெய்து கொண்டு கண்ணாடித் தடுப்பின் வெளியே பார்த்த லவனிக்கு, தனது வாகனத்தின் மீது சாய்ந்து நின்றிருந்த மகிழ்ந்தனைக் கண்டதுமே மனம் சோர்ந்து போனது‌.

இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது, அவனோடு இயல்பாக பேசி. பானுவைப் பற்றித் தனக்குத் தெரியும் என அவன் உரைத்த அந்த நாளிற்குப் பின்னர், இரு பெண்களாலுமே மகிழ்ந்தனுடன் இயல்பாக உரையாட முடியவில்லை‌.

ஆனால் அவன், எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தான் இருந்தான். இவர்கள் எதிர்வினை செய்யவில்லை என்றாலும், தன்னை தன்னிலையிலேயே வைத்திருந்தான்.

இங்கு வரும்பொழுது கூட, “கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி அடிக்கடி ரெண்டு பேரும் தனியா சந்திக்கிறது நல்லதில்ல மேடம்!” என்று உரைத்தான்.‌ இவள்தான், காதில் விழாதது போல் வந்துவிட்டாள்.

வீட்டில் இருந்து கிளம்பும் முன்னரும், “பானுமா, கண்ணப்பன் ஐயா ரெண்டு நாளைக்கு வேலைக்கு வரமாட்டாராம். ஃபோன் போட்டாங்க!” எனப் பேசி விட்டுத்தான் வந்தான். ஆனால், அவள் லவனியை விடவும் பாராமுகம் காட்டிக் கொண்டிருந்தாள்.

அன்றைய தினம் மாலையில் கோவிலிற்குச் சென்றிருந்த பானுமதி, வீட்டிற்குத் திரும்ப வெகுநேரம் ஆகிவிட்டது.

லவனி கீர்த்திவாசனுடன் வெளியே சென்றிருக்க, எஜமானியிடம் கைப்பேசியில் விபரத்தைச் சொல்லி ‌விட்டு அவளைத் தேடிச் சென்றான் மகிழ்‌.

கோவிலில் பானுவைக் காணாது, வெளியே பூக்கடை வைத்திருக்கும் பெண்ணை விசாரிக்க‍, “அந்தப் பிள்ள கிளம்பி போய் அரைமணி நேரம் ஆச்சுப்பா. என்னனு தெரியல, இன்னைக்கு அது முகமே சரியில்ல. உடம்புக்குச் சரியில்லயோ என்னவோ? ஆட்டோ பிடிச்சுப் போச்சு!” என விபரம் உரைத்தார் அவர்.

இரண்டு ஆண்டுகள் பழக்கம் என்பதால், பானுவைச் சுற்றி இருக்கும் பலரும் அறிவர்.‌

வேலையில் சேர்ந்த மூன்று வார புரிதலில், இயன்ற வரை பானுவை அறிந்தவர்கள் அனைவரையும் தேடிப்பிடித்து ‘அவள் எங்கே சென்றிருக்கக் கூடும்?’ எனக் கேட்டு அறிந்தான்.

விபரம் தெரிந்து வந்து சேர்ந்த லவனி, “ஓ காட்!” எனத் தன்னையே நொந்து கொண்டாள்.

அருகே இருந்த கீர்த்தி, “ஹனி, என்ன விசயம்.?”

“இன்னைக்கு பானுவோட ஹஸ்பெண்ட் அவளை விட்டுட்டுப் போன நாள் கேவி. எனக்கு விசயம் தெரிஞ்சதுல இருந்து, இந்த டேட்ல நான் அவளைத் தனியா விட்டதே இல்ல. இந்த டைம் உன்கூட வெளிய வந்ததால, அதை மறந்துட்டேன்‌‌.”

“ரிலாக்ஸ்! ஒன்னும் இல்ல. அவளைக் கண்டுபிடிச்சிடலாம்!” என்றவன் மகிழ்ந்தனோடு இணைந்து தேடுதலில் இறங்கினான்.

விடியலில் அவளைக் கண்டு அறிந்தனர், இருவரும்.‌

முன்பு கணவனுடன் அவள் வாழ்ந்த வீட்டின் இடிந்து கிடந்த பகுதியின் முன்பு அமர்ந்து இருந்தாள்.

அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ளனர் என்று மாநகர நிர்வாகிகள், அங்கிருந்தவர்களை வெளியேற்றி அவர்களது இருப்பிடத்தை இடித்துத் தள்ளி இருந்தனர்.

அதற்கு முன்னரே பானுவின் கணவன் அவளை விட்டுச் சென்றிருக்க, வசிப்பதற்கு இடம் இல்லாது, அன்றைய தினத்தில் இருந்து வேலை செய்யும் லவனிகாவின் இல்லத்திலேயே தங்கிக் கொண்டாள்.

கண் நிறைந்த காதலன், குடும்பத்தாரை எதிர்த்து அவனைக் கரம் பற்றி இருந்தாள். பெண் வீடு, ஆண் வீடு என இருபக்கம் இருந்தும் எவ்வித ஆதரவும் அவர்களிற்குக் கிட்டவில்லை. தங்களின் சுய முயற்சிலேயே, வாழ்வைத் துவங்கினர்.

வசதி வாய்ப்பில்லை என்றாலும் மகிழ்ச்சிக்குக் குறைவின்றி ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாய் வாழ்ந்து வந்தனர். அவை எல்லாம் ஒன்றரை வருடம் மட்டுமே நீடித்தது‌. பின்னர் ஓர்நாள் இரவில் அவன் திடீரென காணாமல் போனான். பானுவின் வாழ்வும் அவளைவிட்டுப் போய்விட்டது‌.

“பானுமா!” என மகிழ்ந்தன் அவளின் எதிரே சென்று கரம் பற்ற முயல, வெறுமையாய் அவனை நோக்கினாள்.

“தனியா இருக்கிற பொண்ணுக்கிட்ட இப்படித்தான் நடந்துப்பியா நீ?” என அடிக்குரலில் கேட்டவளைக் கண்டு அவனின் மனம் கலங்கிட, “வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். ஹனி உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா.”என்று அழைத்தான் கீர்த்தி.

எஜமானியின் வருங்கால கணவனிடம், மறுப்பு சொல்லும் துணிவு அவளிற்கு இருக்கவில்லை. அதனால் எழுந்து கிளம்பினாள்.

மகிழ்ந்தன் ஓடிச்சென்று வாகனத்தை இயக்கினான்.

பத்து நிமிட பயணத்தில் ஓர் இடத்தில் நிறுத்தியவன், “சார் நீங்க முன்னாடி வீட்டுக்குப் போங்க. நான் பானுமாவை அப்புறம் கூட்டிட்டு வர்றேன்!” என்றிட, “மகிழ், என்ன இது‌?” என உயர்ந்த குரலில் வினவினான் கீர்த்தி.

“சார், நான்‌ தப்பு பண்ணுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா.? ஒரு மணி நேரத்துல வீட்டுல இருப்பேன். அப்படி நான் வரலனா, என்மேல போலீஸ்ல புகார் கொடுங்க!” என உரைக்க, எதுவும் பேசாது இறங்கிக் கொண்டான் அவன்.

பானு நடப்பது ஒன்றும் புரியாது, “ஏய், என்ன செய்யிற.?” என மகிழ்ந்தனை அதட்டிவிட்டு, “அவன்தான் ஏதோ கிறுக்குத் தனம் செய்யிறான்னா, நீங்களும் ஏன் சார் இப்படி?” என்று கெஞ்சலாய் கீர்த்தியைப் பார்த்தாள்.

“அவனைத் தெரியும் தான உனக்கு‍? தப்பு செய்யக் கூடிய ஆள் இல்ல. ஒன் ஹவர்தான? போயிட்டு வா. எதுவும் பிரச்சனைனா கால் பண்ணு!” என தைரியம் சொல்ல, லவனியின் வாகனம் மகிழின் வேகத்தில் சாலையில் பறந்தது.

“என்னடா செய்யப் போற.?” என்ற அவளின் வினாவிற்கான பதிலாய், ஒரு சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, “வாங்க பானுமா‌‌.” என அழைத்தான்.

“எங்க.?” என்றவளின் தொண்டை வறண்டு போயிருக்க, எச்சில் விழுங்கினாள்.

மகிழ்ந்தனை, பாம்பு என்று அடிக்கவும் இயலாது பழுது என விலக்கவும் முடியாது தவிப்புடன் எதிர்கொண்டாள்.

“உங்களை யாரும் இல்லாத இடத்துக்கு ஒன்னும், நான் கூட்டிட்டு வரல. இங்கேயும் ஆளுங்க எல்லாம் இருக்காங்க, பாருங்க. எதுவும் ஆகாது, பயப்படாம வாங்க!” என்றவன் இம்முறை அவளின்‌ அனுமதியைப் பெறாது, கோபத்தில் சிவந்த முகத்தையும் கருத்தில் கொள்ளாது, பாவையின் கரத்தைப் பற்றிக் கொண்டு நடந்தான்.

காலை நேரத்திலும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது அப்பகுதி.

“கொஞ்சம் இங்க நில்லுங்க!” என அவளை விட்டுவிட்டு, அங்கிருந்த ஒரு கடையினுள் சென்றான்.

“வாடா நல்லவனே! என்ன காலையிலயே தரிசனம் தந்திருக்க.?” என பிரபா வினவிட, “ஒருத்தரைக் கூட்டிட்டு வந்திருக்கேன் சார். உங்க உதவி வேணும்!”

“நீயே இப்பத்தான் வேலைக் கிடைச்சு இங்க இருந்து போயிருக்க.‌ அதுக்குள்ள உதவினு ஆரம்பிச்சிட்டியா.? இல்லாதவன் எல்லாம் வள்ளல் ஆகணும்னு நினைக்கக் கூடாதுடா!”

“இல்லேனா என்ன.? இருக்கிறதைத் தரப் போறோம்.”

“அதுசரி! அப்படி என்ன வச்சிருக்க தர்றதுக்கு?”

“உங்களைத்தான் தரப் போறேன் சார்.”

“நான் பத்து பைசாக்குக்கூட பெறாத ஆளு! என்னோட தேவை யாருக்கு இருக்கப் போகுது.?”

“பானுமாக்கு!” என்றவன் திரும்பிப் பார்க்க, கடையின் வாயிலில் நின்று பிரபாகரனைப் பார்த்திருந்தாள் அவள்.

“பானுமா, நேத்து போன சார் இன்னைக்கு வந்துட்டாரு. எப்பவும் உள்ளுக்குள்ள வலியோட, வெளிய அதை மறைக்கிறதுக்குக் கோபமா பேசிக்கிட்டு உங்களை நீங்களே இனிமேலும் காயப்படுத்திக்காதீங்க. சரியா.? இன்னைக்கு வேலைக்கு வர்றீங்களா? இல்ல, நான் மேடம்கிட்ட நீங்க லீவுனு சொல்லிடவா.?” என வினவ, பொங்கி வந்த அழுகையுடன் மகிழ்ந்தனின் இருகைகளையும் பற்றி அதில் தனது முகத்தைப் புதைத்தாள் பாவை.

பிரபா, அதிர்ச்சியில் இருந்து மீள முடியாது, அங்கிருந்து ஓடி ஒளியவும் வழி இல்லாது சிலையென அவர்களைப் பார்த்திருந்தான்.

“பானுமா, ஒரு மணி நேரத்துல வீட்டுல இருப்பேன்னு சொல்லி இருக்கேன். இப்ப கிளம்புனா தான் சரியா இருக்கும்!” எனத் தீவிரமாய் உரைக்க, அழுகையை விழுங்கிக் கொண்டு நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்தாள்.

“என்ன பானுமா?”

“உனக்கு எப்படித் தெரியும்.?”

“சாரோட பர்ஸ்ல உங்க ஃபோட்டோவைப் பார்த்திருக்கேன். காதலினு சொன்னாரு.”

“அப்புறம்‌ ஏன் இவ்வளவு நாளா என்கிட்ட சொல்லல.?”

“ரெண்டு வருஷம் ஆச்சு இல்ல.? இப்பவும் சார்மேல உங்களுக்குப் பிரியம் இருக்கான்னு தெரியல. ஒருவேள நீங்க மனசு மாறி இருந்தா‌? தூரமாகுற உறவுகள், சில தருணங்கள்ல நீர்த்துப் போக வாய்ப்பிருக்கு. அதான், உங்கக்கிட்டப் பழகி தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா சொல்லலாம்னு காத்திருந்தேன்.”

“உனக்கு நான்‌ என்ன திருப்பிச் செய்யப் போறேன்‌?”

“நல்ல காரசாரமா மிளகு ரசம் வச்சுக் கொடுங்க போதும். இப்ப நேரமாகுது‌, கிளம்புறேன். சார், பானுமாவைப் பார்த்துக்கோங்க!” என்றுவிட்டு வெளியே வர, அடுத்த இரண்டாம் நொடி சப்பென்று அறையும் சத்தம் கேட்டது.

“பிரபா சார் பாவம்‌. மன்னிச்சிருங்க சார், என்னை!” எனத் தனக்குத்தானே உரைத்தபடிக் கிளம்பினான்.

கண்ணப்பன் பானுவைப் பற்றி‌ உரைத்த யாவும், நினைவின் அலைகளாய் வந்தது.

“எப்படி ஜோடினு தெரியுமா? அந்தப் பிள்ளையோட முகம் வாடுனாலே தவிச்சுப் போயிடுவான் அவன். கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிட்டான்‌.

யார் கண்ணு பட்டுச்சோ, திடீர்னு அந்த ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. பிரபா தம்பிக்கு ரெண்டு காலும் போயிடுச்சு. பானுவோட நிலைமையை சொல்ல முடியல. புருஷனை, புள்ள மாதிரி தூக்கிச் சுமந்தா‌. அவனைத்‌ தனியா விட்டுட்டு போக முடியாம அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கு வேலைச் செஞ்சு சம்பாதிச்சா‌. அந்த காசு கையுக்கும் வாயிக்குமே பத்தல.

அது‌ கஷ்டப்படுறதைப் பார்த்துச் சகிக்காம, நான்தான் லவனி பாப்பாக்கிட்டப் பேசி இங்க வேலை வாங்கிக் கொடுத்தேன். நாலு மாசம் நல்லா போச்சு. ஒருநாள் திடீர்னு சொல்லாம கொள்ளாம பிரபா தம்பி எங்கேயோ போயிடுச்சு. பானு உடைஞ்சு போயிடுச்சு. இன்னைக்கு வரைக்கும் மீளல.”

“இவ்வளவு நல்ல மனைவியை விட்டுட்டு அவரு ஏன்யா அப்படிப் போகணும்.?” என மகிழ்ந்தனிற்கு அனுமானம் இருந்தாலுமே அதைப்பற்றிக் கேட்க, “நான் பிரபாக்கிட்ட பழகி பார்த்த வரைக்கும். தன்னால பானு கஷ்டப்படுறாளே? நாம அவளுக்குப் பாரமாகிட்டோமேனு நினைச்சுதான் போயிருப்பான்.‌ மத்தபடி‌ வேற எந்த காரணமும் இருக்க முடியாது!” என்று உறுதியாய் உரைத்தார் முதியவர்‌.

கண்களை மூடி படுத்திருந்த மகிழ்ந்தனின் மார்பில், பெயரை பதித்து முடித்து அவ்விடத்தை துடைத்து விட்டான் கீர்த்தி.

தள்ளி அமர்ந்து அவர்களைப் பார்த்திருந்த லவனி, “யாரோட பேர் மேன் இது.?”

“நான் கட்டிக்கப் போற பொண்ணு மேடம்.”

அவள் வியப்புடன், “ரியலி.?”

அவன் சிரிக்க, “லவ் மேரேஜா அரேஞ்ச் மேரேஜா..?”

“காதல் திருமணம் தான்!”

“பார்றா? எப்ப லவ் ஸ்டார்ட் ஆச்சு உங்களுக்குள்ள?” எனக் கீர்த்தி வினவ, “தெரியல சார்.‌ ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே இருக்கும்னு நினைக்கிறேன்.”

லவனி, “வாவ்! அப்ப ஸ்கூல் டேஸ்லயே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா.?”

“இருக்கலாம்.”

“சரி, எப்ப எங்களுக்கு உன்னோட லவ்வரைக் காட்டப் போற.?”

“ஊருக்குப் போறப்ப, கூட வாங்க மேடம். காட்டுறேன்!” என்றவனிடம் பானுவும் பிரபாவும் அவனது காதல் கதையைக் கேட்டனர்.

“பக்கத்து பக்கத்து வீடு சார், நாங்க‌. எனக்கு இரண்டு மாசம் இளையவ‌. தவழ்ந்தது, உட்கார்ந்தது, நின்னது, நடந்ததுனு எல்லாமே ஒன்னாதான் செஞ்சோம். ஒரே ஸ்கூல், ஒரே கிளாஸ்.‌ பன்னெண்டாவது வரை ஒன்னாவே படிச்சோம்.

அப்பா இறந்துட்டதால, மேல படிக்க வழி இல்லாம நான் இங்க வேலைக்கு வந்துட்டேன். அவ பாலிடெக்னிக் படிச்சிட்டு, கூல் டிரிங்ஸ் கம்பெனில கணக்கு எழுத போனா.

ஊருக்குப் போகும் போதெல்லாம், என்னைப் பார்க்கிறதுக்காக வாசல்ல காத்துட்டு இருப்பா. ஒரு தடவைக் கேட்டா, ஒன்னா வளர்ந்தோம்ல அதேமாதிரி கடைசி வரைக்கும் ஒன்னா வாழுவோமானு.? நானும் சரினு தலையை ஆட்டிட்டு வந்துட்டேன்.

ஊருல, எனக்காக கடை ஒன்னு பார்த்துட்டு இருக்கா. ஸ்டேஸ்னரி பொருளை வாங்கிப் போட்டு வியாபாரம் பண்ணலாம்னு எண்ணம். எட்டு வருஷம் வேலை பார்தத அனுபவம் இருக்கிறதால, எப்படியும் ஓட்டிடலாம்னு நம்பிக்கை இருக்கு. கடையை வாங்க பணம் வேணும்ல‌? அதான் ரெண்டு பேரும் சேர்ந்து உழைச்சிட்டு இருக்கோம்.

எல்லா நல்லபடியா நடந்துட்டா, ஊருக்கே போயிடுவேன். அவளைக் கட்டிக்கிட்டு, கூடவே இருந்திடுவேன்.” எனக் கண்களில் கனவு மிதக்க உரைத்த மகிழ்ந்தன், தற்போது நால்வருக்கும் புதியவனாய்த் தெரிந்தான்.

கைப்பேசி ஒலித்தது, அவளின் பெயரைத் திரையில் தாங்கியபடி!

செவியோடு இணைத்த ஆடவன், “எனக்கு வேலை கிடைச்சிடுச்சு முத்தம்மா. சம்பளத்தை வாங்கிட்டுத்தான் உன்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். நேத்துதான் மேடம் காசு கொடுத்தாங்க. நான் நாளைக்கு ஊருக்கு வர்றேன் என்ன.?” என்றிட,

மறுபுறம் இருந்தவள், “பஸ் ஸ்டாண்டுக்கு வந்து உனக்காக காத்திருக்கேன் மாமா‌‌.” எனப் பதில் தந்து பேச்சை முடித்தாள்.

அவனைப் பார்த்திருந்த பானு, “அவ்வளவு தானா, பேசி முடிச்சிட்டியா.?”

“ஃபோன்ல இதுக்கு மேல பேச என்ன இருக்கு.?”

“அடப்பாவி! இதெல்லாம் எப்படி லவ்ல சேரும்.? என்ன செய்யிற, சாப்பிட்டியா? இப்படி எதுவும் கேட்கல.?”

அவன் சிரித்து, “அப்படி எங்களுக்குப் பழக்கம் இல்ல. நேர்ல தான் பார்த்துக்குவோம். அவ்வளவா பேசிக்கக்கூட மாட்டோம். சும்மா பக்கத்துல உட்கார்ந்து இருந்தாலே போதாதா.?‌ அதுதான் சந்தோஷம்! எங்களுக்கு அதுவே போதும்!”

“அதுசரி, அப்புறம் எதுக்கு இந்த டாட்டூ எல்லாம்.?”

“இது அவளுக்கா! இந்த அஞ்சு மாசமும் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்து, அவதான் அம்மாவைப் பார்த்துக்கிட்டா. அதுக்கு ஈடா எதைத் திருப்பித் தர முடியும்? அதான்! பார்த்தா, சந்தோஷப்படுவா இல்ல.?” என்றபடி அவன் தனது மார்பில் இருந்த அவளின் பெயரை சற்றே கழுத்தை வளைத்துப் பார்த்தான்.

பார்வையில் பட்ட கணத்தில் அவனுள்ளுமே மகிழ்ச்சியை ஊற்றெடுக்க வைத்தது, அந்தப் பெயர் பதிவு.

மகிழ்ச்சிக் கொள்வதற்குக் காரணம் தான் தேவையா.? இல்லை‍, எங்கேனும் தேடிச் செல்லத் தான் வேண்டுமா.? எதிரே இருப்பவரைப் பார்த்து நாம் சிந்தும் சிறு புன்னகை, இருவருக்குமே மகிழ்ச்சியைப் பெருக்கித் தரும் சுடரொளி‌ அல்லவா?

என்றும் மகிழ்ந்திருப்போம் உள்ளும் புறமும்.

12 thoughts on “மகிழ்ந்திரு-20 (முடிவுற்றது)”

    1. Devi ma yenna sollanney theriyala….arumaiyana kathai kuduththurukkeenga…. Full and full positive vibes la kathai padikkurappo namakkullayum oru positive thoughts varuthu..ethu pola pala nalla nalla kathaigal yezhutha vazhthukkal 🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍

  1. Wow very nice story pa romba arumaiya erundhuchu feel good story 👍👌😍 author yaarunu therila but congrats 🎉

  2. Banu praba flashback feel panna vaikkuthu.
    Magilndhan super character 👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    Lavani boldana panna irukanga .kv eppad Lavanya love panna vachan 😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉

  3. First நானும் மகிழ் a..thappa நினைச்சிடேன்…. ஆனா…பிரபா கூட பானுவ… சேர்த்து வச்சது செம்ம..,பிரபா- பானு லவ் ஸ்டோரி அருமை…. அப்புறம் நம்ம மகிழ் யோட காதல் கதை…. பொறந்ததுல இருந்தே…லவ் வாம்…..😆😆பட் nice ya….
    Keerthivasan – lavanika rendu perum வாழ்க்கைல வலிகளை சந்திச்சி கடைசில காதலித்து ஒன்னா சேர்தாங்க. Prabaa-banumathy காதலித்து , ஒன்னா வாழ்ந்து அப்புறமா…பிரிந்து…மீண்டும் ஒண்ணா ஆகிட்டாங்க….magizh – muththamma பிறந்ததிலிருந்தே லவ்🤪😎….superla….அதிகமாக பேசாம… மனசால பேசி புரிஞ்சிக்கும் காதலர்கள்…. அருமையான கதை sis…..superb…👌👌👌🎉🎉💐💐💐💕💕❤️❤️❤️🌹🌹💖💖💖

  4. Kalidevi

    magizh un character ena nu purinjika last ah therinjika mudinjithu superb ending banu ma mela etho oru vitha pasam tha katra nu therinjalum athuku pinnadi prabha nu kandu pidichi avanga kuda serthu vachita ithu tha unmaiyana pasam love .santhosatha thedi poga venam namale atha amachikanum crt than aana ellarum apadi iruka mudiyathe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *