Skip to content
Home » மனதில் விழுந்த விதையே-11

மனதில் விழுந்த விதையே-11

அத்தியாயம்-11

Thank you for reading this post, don't forget to subscribe!

   சாக்ஷி பிறந்த நாளில் எப்பொழுதும் அவள் வீடு அல்லலோலப்படும். அப்படியில்லை என்றால் பீச்,தியேட்டர், எம்.ஜி.எம் குயின்ஸ் லேண்ட் என்று எங்கையாவது நாள் முழுக்க ஊர்ச்சுற்றி திரிவார்கள் இந்த ‘பெண்டாஸ்டிக் போர்’ குழு. சாக்ஷி என்றில்லை இந்த நால்வரில் யார் பிறந்தநாளும் இப்படி தான் கொண்டாடி மகிழ்வார்கள்.

  மிருதுளா ‘காசில்லைடி’ என்று மறுத்தாலும் மற்ற மூவரும் பகிர்ந்து கூட்டி சென்றிடுவார்கள். திலகா மறுத்தாலும், ‘உங்களுக்கு பத்து பைசா செலவுயில்லை ஆன்ட்டி. எங்க பிரெண்டை மட்டும் அனுப்புங்க’ என்று அழைத்து சென்றிடுவார்கள்.

   இன்றோ அம்ரிஷ் இருக்கும் இடம் அனுமதி கேட்டு கார்டனை அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

   இரண்டு மரங்களுக்கு நடுவே பெரிய வண்ண போர்வையை பேக்கிரவுண்ட் போல கட்டினார்கள். பலூன், பூக்கள் என்று அதில் ‘டேப்’ உதவியோடு ஒட்டினார்கள். கீழே பெரிய ‘கார்பெட்’ விரித்தார்கள். இதெல்லாம் மென்பனி, தமிழ், அம்ரிஷ் மேற்பார்வையில் பணியாட்கள் செய்து முடித்தார்கள்.

   சமையலை மறுபக்கம் ‘கேஸ் ஸ்டவ் எடுத்து வைத்து சமைத்து ‘பப்பே’ முறையில் அடுக்கி அலங்கரித்தார்கள். அதற்கு மிருதுளா, சஹானா, ஆதேஷ் மூவரோடு பணியாட்களும் சேர்ந்து சமைத்தார்கள். ஆதேஷ் தான் அடிக்கடி காய்கறி வெட்டும் போது கேரட் பச்சையாய் சுவைத்தான். சமையலில் நிறை குறை ஆராய்கிறேன் என உணவு தயாராகியதும் தட்டில் வைத்து சுவைத்தான்.

    சாக்ஷியை வெளியே வரக்கூடாதென்று வீட்டுக்குள் வேதாந்த் கூட கதையளக்க விட்டிருந்தனர்.

   வேதாந்த் கிடைத்த தனிமையில் “எத்தனை நாளைக்கு இந்த கண்ணாம்பூச்சி? கையில காசு இருக்கறவரை கொடைக்கானலை சுத்தியிருப்பிங்களா? பிறகு மிருதுளாவை எப்படியும் அவங்க வீட்ல விடுவிங்க தானே? அதுக்கு பிறகு என்னைக்காவது ஒருநாள் அந்த அரசியல்வாதி ராஜபாண்டியன் உங்க பிரெண்ட் கழுத்துல தாலி கட்டினா என்ன பண்ணுவிங்க. எப்பவுமே நீங்க கூடயிருக்க முடியாது.
  அதோட தாலி கட்டி தான் முறையா வாழ்க்கையை ஆரம்பிப்பாங்கனு நம்பிட முடியாது. உங்களுக்கு தெரியாம, உங்க பிரெண்ட் மிருதுளாவை, கையை காலை கட்டி ரூம்ல அடைச்சி ரேப் பண்ணி வாழ்ந்தாலும் தடுக்க முடியாது.

   ஒன்னு உங்க பிரெண்ட் மிருதுளா தைரியமா அவங்க அப்பா சித்தி அந்த அரசியல்வாதியை பேஸ் பண்ணணும். அதுக்கு அவங்களை தயார் செய்யுங்க. எத்தனை நாளுக்கு ஓடி ஒளியறது? எத்தனை நாளைக்கு நீங்க உங்க பிரெண்ட்ஸ் காப்பாத்தறது?” என்றதும் சாக்ஷியோ பெருமூச்சில் வேதாந்தை ஏறிட்டாள்.

     தன் முகத்தில் புரண்ட முடியை ஒதுக்கி “நாங்க நினைச்சது ஒன்னு. ஆனா நடந்தது வேற.
   நாங்க ஏதோ சாதாரண ஆளுக்கு கட்டிக்கொடுக்கறாங்கனு நினைச்சி தான் இப்படி பத்து நாள் கொடைக்கானல் ட்ரிப் போயிட்டு வருவோம்னு பிளான் போட்டது.
   மிருதுளா எங்களிடம் ராஜபாண்டியன் ஒரு அரசியல்வாதினு சொல்லலை. அவளை அவங்க சித்தி யாருக்கோ இரண்டாதாரமா கட்டிக் கொடுக்கறாங்கனு மட்டும் தான் புலம்பிட்டுயிருந்தா.
   ஒருவேளை எங்களிடம் சொன்னா பயந்துடுவோம்னு மறைச்சி சூசைட் ட்ரை பண்ண நினைச்சிருப்பா. மத்தபடி தைரியம் என்பதெல்லாம் அவ சின்ன வயசுலயே தொலைச்சிட்டா.
  இந்த யானைகுட்டி கால்ல சங்கிலி கட்டி வச்சிடுவாங்க. அது நிறைய தடவை ஓடிப்போக ட்ரை பண்ணி முடியாம சலிச்சி போயிடும்.
   பெரிய யானை ஆனப் பிறகும் ஓடிப்போக முயற்சி பண்ணாது. மிருதுளா அந்த கேட்டகிரி.

   சாக கூட ரெடி, ஆனா வாழ பயமாயிருக்கு நினைக்கறா. நாங்க நிறைய தடவை சொல்லியாச்சு. என்ன செய்யறது.

  இந்த டிஸ்னி மூவில சிண்ட்ரெல்லாவை காப்பாத்த ஒரு இளவரசன் வருவானே. அது மாதிரி யாராவது ஒருத்தன் அவனா வந்து நான் இருக்கேன் வான்னு அன்பு செலுத்தினா தான் உண்டு.
    கதைகள்ல வர்ற ஹாப்பி எண்டிங் நம்ம வாழ்க்கையில நடக்காதே.” என்று வருந்தினாள்.

   இன்று அவள் பிறந்த நாள். சோகமாகவும் வேதாந்த் மனம் பொறுக்கமாட்டாது “ஏங்க கதைகளில் சாத்தியமில்லாத விஷயம். நாலு பொண்ணுங்க ஸ்டேஞ்சரோடு ஸ்டே பண்ணறிங்க. இதுவே நடக்கும் போது, இளவரசன் வரமாட்டானா?” என்று கூறவும், “இளவரசன் எல்லாம் வரவேண்டாம். உங்களோட அட்வைஸ் மாதிரி, அவளா சுயமா தனிச்சு முடிவெடுத்து தனித்து வந்தாலே போதும். எங்க மூன்று பேரோட அட்வைஸ் அது தான். எதுவரை போகுதோ அதுவரை என்ன தான் நடக்குதுனு பார்க்கலாம்” என்று கூறியவளின் விழிகளை ரசனையோடு பார்த்தான்.

   “லஞ்ச் ரெடி” என்று மென்பனி சஹானா குரல் யானையின் மணியோசை போல கூச்சலாய் வந்தது.
  
     தமிழோ வேதாந்த் அருகே வந்தவன், “என்னடா டாக்டர் கடலை போட்டு முடிச்சிட்டியா?” என்று கிசுகிசுக்க, வேதாந்த் பதறியவனாக திருட்டு முழி விழித்தான்.

   “பதறாத பதறாத நான் மட்டும் தான் கண்டுபிடிச்சிருக்கேன். மத்தவங்களிடம் மாட்டுற வரை ப்ரீயா இரு” என்று தட்டிக்கொடுத்து செல்லவும் ‘அப்படிலாம் எதுவும் இல்லைடா’ என்று பேச்சுக்கு கூட வாய் வார்த்தையாக கூறவில்லை வேதாந்த்.

     மதியம் கார்பெட்டில் எட்டு சேரை போட்டு, மடக்கும் விதமான மேஜையில் உணவை சாப்பிட ஆரம்பித்தார்கள்.

     ஆதேஷ் அவனது போனில் புகைப்படத்தை எடுத்தான். மென்பனி, சஹானா இருவரும் அவரவர் போனில் புகைப்படத்தை எடுத்தார்கள்.

மிருதுளா சமையலை புகழ்ந்து பாராட்டி சாப்பிட்டார்கள். தமிழ் சாதாரணமாக பாராட்ட, அம்ரிஷும் புகழ்ந்தான்.

   அதன் பின் அம்ரிஷ் நடித்த படத்தின் பிளஸ் மைனஸை கலந்துரையாடி சாப்பிட்டார்கள்.
   அம்ரிஷிடம் ‘உங்களுக்கு நீங்க நடித்த படத்துலயே எது பிடிச்ச படம்? எந்த ஹீரோயினை ரொம்ப பிடிக்கும்? எந்த ஹீரோயினோட கிசுகிசுவை ரொம்ப ரசித்திங்க.?

   படப்பிடிப்பில சண்டைக்காட்சில அடிப்பட்டிருக்கா? இதுவரை எத்தனை இன்டர்வியூ கொடுத்திங்க? லவ் லெட்டர்ஸ் தோராயமா எத்தனை வந்திருக்கும். அதுல ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா நடந்ததை பகிருங்க’ என்று கலகலப்பாக இரு குழுவும் பொழுதை கழித்தனர்கள்.

      மாலை ஆனதும் கேக் தயாரிக்கின்ற பேர்வழி என்று சஹானா, மென்பனி ஆரம்பித்தார்கள்.

  ஓவனில் செய்வதால் வீட்டுக்குள் சென்றிருந்தனர்.

    வெளியே பனி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் இடங்களை ஆக்கிரமித்தது.

    ஆனாலும் இளைஞன் இளைஞிகள் பனியை பொருட்படுத்தாமல் இருந்தார்கள்.

     வண்ண விளக்கின் உதவியால் மாலை ஆறுமணி கூட அவர்கள் போர்வையால் செய்த பேக்கிரவுண்ட், வெளிச்சமாய் தெரிய அங்கே கூடி கேக் கட் நடைப்பெற்றது.
  
   என்னதான் நேற்றிரவு பன்னிரெண்டுக்கு கேக் கத்தரித்தாலும், மாலை நேரம்  கேக் கட் செய்து முடித்தாலே பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதாக முடிவடையும்.

    கேக் கட் செய்து ஊதி அணைத்து ஊட்டி விட்டு முகத்திலேயே கேக் பேஸியல் செய்து என்று ஆளாளுக்கு விளையாடி மகிழ, அன்றைய நாள் இனிமையாகவே கழிந்தது.

   மறக்க முடியாத நாளாக ஆண்கள் வாழ்வில் இடம் பிடித்தது எனலாம்.

   இரவு உணவை மட்டும் வெளியே ஆர்டர் கொடுத்தனர். வீட்டு தோட்டத்திலேயே ‘ஃபயரை’ உருவாக்கி தீயில் வெப்பமூட்டி குளிரை விரட்டினார்கள். அப்படியிருந்தும் ஸ்வெட்டர் அணிந்த கைகள் நடுங்கியது.
    இதற்கு மேல் வெளியே இருந்தால் சரிவராதென்று வீட்டுக்குள் இருக்கும் ‘ஃபயர் பிளேஸில்’ கூட்டமாய் அமர்ந்தனர்.

  நேற்று போல நடனமாட நினைத்தார்கள். ஆனால் இன்றைய ஸ்பெஷலாக, வெள்ளிதிரை நாயகன் அம்ரிஷ் மற்றும் இன்று பிறந்த நாள் கொண்டாட்டத்தின் நாயகி டான்ஸர் சாக்ஷி இருவரும் ஆடவேண்டும் என்று ஆதேஷ் அறிவிப்பு உதிர்க்க, அம்ரிஷ் “யா சூர்” என்று நடனமாட எழுந்தான்.

  சாக்ஷியோ தோழிகளை பார்க்க, “கமான் சாக்ஷி, ஆக்டர் அம்ரிஷ் கூட டான்ஸ் பண்ணப்போற. வீட்டுக்கு போய் பிரச்சனை எல்லாம் சால்வ் ஆனதும் வீடியோவை நீ இன்ஸ்டால போட்டா டிரெண்டிங் ஆகிடுவ” என்று சஹானாவும் ஊக்குவித்திட, சாக்ஷி வேதாந்தை பார்வையிட்டாள்.

   “பெர்த்டே கேர்ள் டான்ஸ் பண்ணி பார்க்க ஆவலாயிருக்கு” என்றான்.

   அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆடினார்கள். அடிக்கடி நெருக்கமாய் வந்து செல்ல, ஆதேஷ் இருவரையும் புகைப்படம் எடுத்தான். மணி பதினொன்றரை ஆனதும், நேற்று போல ஹாலில் உறங்காமல் பெண்கள் தங்களுக்கான அறையில் சென்று படுத்தனர்.

ஆண்களுமே தங்கள் அறைக்கு வந்தனர்.

   அனைவரும் உறங்க, ஆதேஷ் மட்டும் நகம் கடித்தபடி, அம்ரிஷின் போனை எடுத்து ட்விட்டர் பக்கம் சென்றான்.

  மடமடவென இஷா அவள் காதலனோடு கைப்பிடித்து தோளில் சாய்ந்த புகைப்படத்தை போட்டு அதற்கு கேப்ஷனாக, ‘I thought the woman who married me was an angel. I realized too late that the girl was a demon.’ என்று பதிவிட்டான்.

   அடுத்த பதிவாக ‘Soon I will get a legal divorce from my wife.  So now I am celebrating with my friends’ என்று பதிவை போட்டு அதில் சாக்ஷி மென்பனி, மிருதுளா, சஹானா இவர்களோடு ஆடிபாடி எடுத்த புகைப்படத்தில், பெண்களின் முகங்களை ஸ்மைலி வைத்து மறைத்து பதிவேற்றினான்.

    இந்த இரண்டையும் அம்ரிஷ் போனில் அவன் கணக்கு மூலமாக பதிவேற்றி விட்டப்பின்னரே, “என் பிரெண்ட் பதிலடி தரலைனா என்ன. இப்ப சாவுடி” என்று இஷாவை திட்டிவிட்டு படுத்து கொண்டான்.

   இரவில் இளைஞன் இளைஞிகள் அதிகமாக உறக்கமின்றி சோஷியல் மீடியாவில் செலவழிக்கின்றார்கள். புள்ளிவிவரம் அப்படி தான் அறிவிக்கிறது. அதிலும் நைட் ஷிப்ட் என்று இரண்டு மடங்கு சம்பளம் வாங்குபவர்கள் பேய்களுக்கு சொந்தம் என்பது போல கொட்ட கொட்ட விழித்திருப்பார்கள்.

  சாதாரண செய்தியே காட்டுத்தீ போல பரவும். இன்றோ நடிகன் மீது குற்றம் சாட்டிய நடிகரின் மனைவிக்கு எதிராக அம்ரிஷ் போட்ட பதிவு என்று வேகவேகமாய் பரவியது. ஒவ்வொருத்தரும் லைக் கமெண்ட்ஸ் என்று தட்டிவிட்டார்கள்.

    இதில் இந்த கடவுளை இருபது பேருக்கு ஷேர் செய்தால் நல்லது நடக்கும் என்பது போல அம்ரிஷ் போட்ட இருபதிவுகளும் ஷேர் ஆனது.

   இஷாவும் இதனை காண நேர்ந்தது. பதிலுக்கு பதில் இப்படி செய்வானென்று இஷா கனவிலும் நினைக்கவில்லை. அம்ரிஷ் தன்னிடம் அன்பாகவும் காதலோடும்  மென்மையான சுபாவம் கொண்டிருந்தான். அதனால் எந்த பழி தூக்கி போட்டாலும் பொருத்து போகும் புத்தர் என்று தான் நினைத்திருந்தாள்.

  தற்போது அவள் காதலனோடு எடுத்த புகைப்படம் வெளியாக, அம்ரிஷை நாயகன் என்று குறைத்து மதிப்பிட்டு குறை சொன்ன கும்பல் அப்படியே இஷாவை திட்டி தீர்த்தது.

   அம்ரிஷ் பதிவுகள் நிறைய பேரை சின்றடைந்தது. நூறு ஆயிரமாக,  ஆயிரம் பத்தாயிரமாக, பத்தாயிரம் லட்சம் கணக்காக என்று பரவியது.

  கருத்துக்களுக்கு உள்ளே கருத்துவாதம் என்று சூடுப்பிடித்தது.

  இதை அறியாத அம்ரிஷோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

   நாளைய விடியல் அம்ரிஷிற்கு தலைவலி உண்டாக்கலாமென்று அவன் இரவு நீண்டிருந்தது.

-தொடரும்.
-Praveena Thangaraj
 

2 thoughts on “மனதில் விழுந்த விதையே-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *