Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 19

மனம் உன்னாலே பூப்பூக்குதே 19

பூ 19

தன் மகனை வெளியே அழைத்து வந்த ஆதிநாதன் கண்டிப்பான பார்வையுடன்,

“என்ன பண்ணி வச்சிருக்க டா? அந்த பொண்ணு கிட்ட எதுக்கு உன்னோட பழைய காதலியை பத்தி எல்லாம் நீ பேசுற?ஏற்கனவே இந்த பிரச்சனை வந்தபோது அந்த பொண்ணு ‘நான் அத பெருசா எடுத்துக்கல’ன்னு சொல்லிட்டால்ல.

இப்படி ஒரு பொண்ணு சொல்றது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? எல்லாரும் பழைய விஷயங்களை சொல்லி குத்தி காட்டி பேசுற காலத்துல அந்த பொண்ணு அதை அறவே தவிர்க்கிறது அவளோட மனமுதிர்ச்சியை காட்டுது.

இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும். அப்படி இருக்கிறப்ப நீ எதுக்காக அந்த பானுவை பத்தி ஆருத்ரா கிட்ட கம்பேர் பண்ணி பேசின்டுருக்க? நல்லா வாழனும்னு உனக்கு ஆசை இல்லையா?” என்று பல்லை கடித்துக் கொண்டு தன் கோபத்தை விழுங்கியவராக மகனை துளைத்து எடுத்தார்.

“இல்லப்பா நான் வேணும்னு பண்ணல. நான் இந்த விஷயத்தை பேச ஆரம்பிக்கும்போது அவ இப்படி ஒரு விஷயத்தை பத்தி பேசவே வேண்டாம்ன்கிற மாதிரி நிறுத்தினா. அந்த விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறமும் அதை பத்தி பேசாம அதை தவிர்த்துட்டா. யாருமே அப்படி செய்ய மாட்டாப்பா.

அவ ஏன் அதை பேச வேண்டாம்னு சொல்றான்னு எனக்கு புரியவே இல்ல. அதனால தான் ஒரே ஒரு தரம் முழுசா அதை பத்தி பேசிட்டா என் மனசுலயும் எந்த குழப்பம் இல்லாம இருக்குமேன்னு நினைச்சேன். இன்னைக்கு அவகிட்ட ஆபீஸ் போகும்போது முக்கியமான வேலை இருக்கறத சொல்லிட்டு தான்பா போனேன். அப்படி இருந்தும் ரெண்டு தடவ போன் பண்ணினதும் எனக்கு அந்த பானு செஞ்ச டார்ச்சர் தான் ஞாபகத்துக்கு வந்தது. எதார்த்தமா பேசும்போது என்னை அறியாமல் தான்பா அந்த வார்த்தையை நான் விட்டுட்டேன். வேணும்னு நான் அவளை காயப்படுத்த சொல்லல.” என்று தன் பக்கத்தை விளக்க முயற்சி செய்தான் கோகுல கிருஷ்ணன்.

“உன் மூஞ்சி… நீ வேணும்னு வார்த்தைய விட்டியோ இல்லையோ, முதல்ல பழசை மறந்து தொலை. ஒரு பொண்ண தப்பா திட்டக்கூடாதுன்ற ஒரே காரணத்துக்காக தான் அவளை எதுவுமே சொல்லாம இருக்கேன்.

அதெல்லாம் ஒரு பொண்ணா? நீயே உன் தப்ப உணர்ந்து அந்த பொண்ணு வேண்டாம்னு ஒதுங்கி வந்தப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா ஆருத்ராவை அவ கூட கம்பேர் பண்ணி உன் வாழ்க்கையை நீயே கெடுத்துன்டுடுவ போல இருக்கு.

உங்க அம்மா ஏற்கனவே ஆருத்ராவை அப்பப்ப ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கா. நானும் பொம்பனாட்டிங்க விஷயத்துல தலையிடக்கூடாதேனு ஒதுங்கி அமைதியா இருக்கேன்.

இன்னிக்கி ஆருத்ராவுக்கு உங்க அம்மா மேல மட்டும் இல்ல உன்  மேலயும் கோபம் வந்துடுத்து. ஆரம்பத்துல நானும் அந்த பொண்ணு தான் ஒட்ட மாட்டேங்கறான்னு நினைச்சேன். ஆனா நீ தான் இன்னும் அந்த பொண்ணு கிட்ட ஓட்டலை போல இருக்கு.

உன் அம்மாவும் அவளை ஏதாவது சொல்லி நெருங்கவே விட மாட்டேங்கறா. ரெண்டு பேரும் பேசாம இருந்தீங்கன்னாலே குடும்பம் அதுபாட்டுக்கு நல்லா இருக்கும். பழசை பேசி உள்ளத கெடுத்துக்காதே. போய் உன் அம்மாவுக்கு ஒரு பூசைய போட்டுட்டு வரேன். வரவர வந்த பொண்ணுக்கு சொல்லித்தரதை விட வீட்ல உள்ளவங்களுக்கு தான் நிறைய சொல்லித் தர மாதிரி எனக்கு தோன்றது.” என்று சலித்தவராக வீட்டினுள் நுழைந்தார்.

அவருக்கு மருமகள் இத்தனை சந்தோஷமான ஒரு விஷயத்தை கூறியும் வீட்டில் அந்த சந்தோஷத்தை நிலைக்க விடாமல் செய்த தன் மனைவி மற்றும் மகனின் செய்கையில் மிகவும் மனம் வெறுத்துப் போயிருந்தார்.

இந்த நொடியில் இத்தனை நாட்கள் ஆருத்ரா பொறுமையாக இருந்தது அவருக்கு ஆச்சரியமான விஷயமாக தோன்றத் துவங்கியது. எந்தப் பெண் தன் கணவனின் முதல் காதலை அப்படியே ஒதுக்கிவிட்டு வாழ வந்திருக்கும் வாழ்வை மட்டுமே பெரிதான ஏற்றுக் கொள்வாள் ?அப்படியான பெண்கள் சொற்பம் தான். கண்டிப்பாக சில நேரங்களில் பழைய விஷயங்களை சுட்டிக்காட்டும் குணம் நிறைய பெண்களிடம் இருக்கவே செய்கிறது. ஏதேதோ யோசனையில் தத்தளித்துக் கொண்டிருந்தவர் மனைவி கோபமாக தங்கள் படுக்கை அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு எரிச்சலோடு

“புருஷன் பொண்டாட்டி ரூமுக்குள்ள என்னமோ பேசின்டு போறாங்க. நீ என்னத்துக்கு கதவை தட்டி சண்டைக்கு போன?” என்று காட்டமாக வினவினார்

“ஏங்க… அவ நம்ம பையன் கூட சண்டை போட்டுன்டு இருக்கா. சத்தம் வெளியே வரைக்கும் கேக்கறது. கேட்டும் என்னனு விசாரிக்காம இருக்கச் சொல்றேளா?” என்று அவரும் இணையான கோபத்துடன் சண்டைக்கு வர,

“நீ மட்டும் அமைதியா இருந்திருந்தனா அவாளுக்குள்ள பிரச்சனையை அவாளே பேசி தீர்த்துன்டு, அவ பிள்ளையாண்டுருக்கிற விஷயத்தை சந்தோஷமா நம்ம கிட்ட கார்த்தால சொல்லிருப்பா. தேவையில்லாத நீ அவா பிரச்சனைக்குள்ள போகப் போய் தான் அவன் மேல இருந்த கோவத்துல அந்த பொண்ணு சிதர்தேங்காய் மாதிரி போட்டு உடைச்சிட்டா. நீயே யோசிச்சு பாரு நமக்கு ஒரே ஒரு பையன் தான். அவனுக்கு கல்யாணம் ஆகி அவனுக்கு ஒரு வாரிசு வருது.

இது எவ்வளவு பெரிய சந்தோஷம்?இத நாம எப்படி கொண்டாடியிருக்கணும்? இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடனே நாம எப்படி துள்ளி குதிச்சிருக்கணும்… அப்படியான ஒரு சந்தோஷத்த உன்னோட கோவத்தாலையும் அவசர புத்தியாலயும் மொத்தத்தையும் கெடுத்துட்டியே! அதை நாம தான் கெடுத்துட்டோம்ன்னுட்டு கூட புரியாத அளவுக்கு நீ இப்ப பேசின்டு இருக்கிறத பார்க்க தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு சுபா. உன்னன்ட இத நான் எதிர்பார்க்கவே இல்ல.” என்று ஆற்றாமையுடன் கூறினார்.

“என்ன நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணின்டு இருக்கேள்? புருஷன் பொண்டாட்டி பிரச்சினை வெளிய கேட்காத அளவுக்கு அவ பேசி இருந்திருக்கணும். எட்டு ஊருக்கு கேக்கற மாதிரி என் பையன் கூட சண்டை போட்டா, என்னன்னு கேக்க மாட்டேனா ?அந்த நேரத்துல எனக்கு பொறுமையா பதில் சொல்றத விட்டுட்டு, அவ பெரிய இவ மாதிரி உங்க கிட்ட வந்து ‘அப்பா’ ன்னுட்டு சொல்லி என்ன என்னவோ பேசறா. இப்போ என்னை மரியாதையே இல்லாம வாங்க போங்கன்னு மட்டும் தான் பேசுறா அவ. அவ பண்ற எதுவுமே உங்க கண்ணுக்கு தெரியலையா?”  என்று கோபத்தில் சத்தமாக பேசத் துவங்கினார்.

“இப்ப நீ என்கிட்ட கத்தின்டு இருக்கியே அவ கதவை தட்டி எதுக்கு சண்டை போடுறேள்ன்னு கேட்டா உனக்கு அசிங்கமா இருக்காது? அப்படித்தானே அவளுக்கும் இருந்திருக்கும்? அவ ஏதோ மனசுல இருந்தத அவ ஆம்படையான் கூட பேசிகிட்டு இருக்கா. நீ போய் கதவை தட்டி கேள்வி கேட்டா, அவளுக்கு கோபம் வரும்ல்ல?” என்று தன் மருமகளுக்கு ஆதிநாதன் சார்பாக பேசவும் சுபாவுக்கு கோவம் கூடியதே தவிர சற்றும் குறையவில்லை.

“இப்படியே அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டே இருங்கோ. அவ அவனை கூட்டிட்டு தனிக்குடித்தனம் போக போறா. அங்க போய் அவனை என்ன டார்ச்சர் பண்ணாலும் உங்களுக்கு தெரியப் போறதில்ல. நீங்க உங்க நாட்டு பொண்ணு நல்லவன்னு சொல்லின்டே திரிய போறேள். உங்க பையன் தான் கஷ்டப்படப் போறான்.” என்று கோபத்தில் வேகமாக பேசினார் சுபா.

“இங்க பாரு அவா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுத்து. அவன் தான் ஆம்படையான். அவன் தான் ஆத்துக்காரி. அவா அடிச்சிக்கிறா சேர்ந்து இருக்கா.  நம்ம கிட்ட வந்து சொல்லாத வரைக்கும் அவா விஷயத்துல தலையிடப்பிடாது . அதுதான் பெரியவாளா நமக்கான மரியாதை. அதைத் தாண்டி நீ போய் பேசினதே தப்பு. நீ பேசினா அவ பதில் பேசாமயே இருப்பாளா?

இத்தனை நாள்ல அவ அந்த மாதிரி பதில் பேசினதே இல்ல. அப்படியான சூழ்நிலை உருவாக நீதான் காரணம். உன் பையன் அறிவே இல்லாம அவனோட பழைய காதலியோட அவளை சேர்த்து வச்சு பேசினா, அவ என்ன உன் பையன கொஞ்சுவாளா?
சண்டை போட தான் செய்வா. அது அவாளுக்குள்ள விஷயம். அவா பேசி சரி பண்ணிப்பா.  இதுதான் நீ அவங்க  விஷயத்தை தலையிடற கடைசி தடவையா இருக்கணும். நான் இந்த குடும்பத்தில் எந்த சண்டை சச்சரமும் இல்லாம நிம்மதியா இருக்கணும்னு என் கோபத்தை எல்லாம் குறைச்சு முடிஞ்ச வரைக்கும் இனிமையா பேசுறத பழக்கமாக்கி வச்சின்டுருக்கேன். என்ன கோபப்படுத்தி கத்த வச்சுடாதே!” என்று கூறிவிட்டு சென்று படுத்து விட்டார்.

அங்கே கோகுலின் அறையில் காட்சி வேறு விதமாக இருந்தது. அவன் தந்தையிடம் பேசிவிட்டு வருவதற்குள் மாத்திரையின் உபயத்தால் உறக்கத்துக்குச் சென்று இருந்தாள் ஆருத்ரா. அவளை எழுப்புவதா வேண்டாமா என்று தவிப்புடன் அவன் அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்தான்.

தன்னுடைய மடத்தனமான செயல் புரிந்தாலும் அவள் ஏன் தன் பழைய காதலைப் பற்றி ஒரு முறை காது கொடுத்து கேட்க மறுக்கிறாள் என்ற கேள்வி மட்டும் தொக்கியே நின்று கொண்டிருந்தது.

சில விஷயங்களை அப்படியே விட்டு விட்டு செல்வது எதிர்கால வாழ்வுக்கு நல்லது என்று ஆருத்ரா சொல்வது புரிந்தாலும், தன் மனதில் உள்ளதையும் தனக்கு நடந்ததையும் அவள் கேட்க மறுப்பது ஏனோ அவனை குடைந்து கொண்டே இருந்ததால் வந்த வினை தான் இன்று அவளையும் பானுவையும் ஒப்பிட்டு தான் பேசியதற்கான காரணம் என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டிருந்தான் கோகுல கிருஷ்ணன்.

ஆனால் அவள் கோபப்பட்டது சரிதான். எந்த ஒரு பெண்ணுக்கும் தன் கணவன் இப்படி பேசுவது மகிழ்ச்சியை தராது. அதைவிட அவள் சொல்ல வந்த விஷயம் அவர்கள் வாழ்வின் முக்கியமான அந்த தருணத்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை . அதை இப்படி சங்கடமான சூழ்நிலைக்கு கொண்டு சென்ற தன் கிறுக்குத்தனத்தை நோகாமல் அவனால் இருக்க முடியவில்லை.

ஒருவேளை அவள் கோபப்பட்டு பேசிக் கொண்டிருந்தாலும் சிறிது நேரத்தில் சமாதானமாகி தன்னிடம் கருவுற்று இருப்பதை கூறி இருப்பாள். ஆனால் அன்னை தங்கள் விஷயத்தில் தலையிட்டதால் அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டிருந்ததை எண்ணி அவனுக்கு முதன்முதலாக அன்னையின் மேல் சொல்லத் தெரியாத அளவுக்கு கோபம் வந்தது.

இதுவே பெரிய விஷயமாக இல்லாமல் இருந்திருந்தால் அன்னையின் செயலை அவன் பெரிதாக எண்ணி இருக்க மாட்டான். பொறுத்து கூட போயிருப்பான் ஆனால் தேவையில்லாத அன்னையின் தலையிட்டால் தன்னிடம் அவள் கூற வேண்டிய அந்த அழகான தருணத்தை தான் இழந்து விட்டதாக எண்ணி மிகவும் வருத்தம் கொண்டான்.

அவன் தன் எண்ணங்களுக்குள் உழன்று கொண்டே அமர்ந்திருந்தவன் அப்படியே உறங்கிப் போக, காலை நான்கு மணி அளவில் எங்கோ கேட்ட மணியின் ஓசையின் காரணமாக விழிப்பு தட்டி தன்னைச் சுற்றி நோக்கினான்.

ஆருத்ரா இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டவன் மெல்ல அவளுக்கு அருகில் வந்து அவளை அணைத்தபடி படுத்துக் கொண்டான்.

உறக்கத்தில் கூட தன் கணவனின் அருகாமையை உணர்ந்த ஆருத்ரா அவனை உரசியபடி இன்னும் வாகாக அவன் நெஞ்சத்தில் தலை வைத்து உறங்க துவங்கியதும் அவள் இதழில் நெளிந்த சிறு புன்னகையும் அவள் தன் மீது எத்தனை பிரியத்தை வைத்திருக்கிறாள் என்பதை அவனுக்கு சொல்லாமல் சொல்லியது.

இரவில் இருந்ததை விட ஆயிரம் மடங்கு குற்ற உணர்ச்சிக்கு ஆளானவன் மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டு “சாரிடா தெரியாம பைத்தியக்காரத்தனமாக பேசிட்டேன் என்ன மன்னிச்சிடு” என்று தூங்கும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான்.

அவளோ நல்ல உறக்கத்தில் இருக்க, அவளுடைய வயிற்றில் தன் கரத்தை பதித்து “ஓய் ஜூனியர் நீங்க என்ட்ரி கொடுத்த அன்னைக்கே அப்பாவுக்கு பெரிய ஆப்பா வச்சிட்டீங்களே! அப்பா பாவம் இல்லையா? கொஞ்சம் எனக்காக அம்மாகிட்ட ரெகமெண்ட் பண்ணி அவங்க கோவத்தை மட்டும் காத்துல பறக்க விட்ருங்க. ப்ளீஸ்” என்று தன் குழந்தையிடம் தனக்காக சமாதான தூது செல்லும்படி வேண்டிக் கொண்டிருந்தான் கோகுல கிருஷ்ணன்.

இப்போது அவன் கரம் தன் மீது பட்ட சூட்டுக்கு கண் விழித்த ஆருத்ரா அவனது பேச்சில் லேசாக உதித்த புன்னகையுடன்

“அங்க அப்ளிகேஷன் போட்டு எந்த யூஸ்சும் இல்லை இங்கே அப்ளிகேஷன் போட்டாலாவது ஏதாவது கன்சிடர் பண்ணுவேன்.” என்று தூக்க கலக்கத்தில் அவனிடம் கூறினாள்.

அவள் தன்னிடம் பேசவே மாட்டாளோ என்ற பயத்தில் தத்தளித்து கொண்டிருந்தவனின் மனம் அவளது இந்த பேச்சை கேட்டதும் சொல்லத் தெரியாத அமைதிக்குச் சென்றது.

அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் “சாரி ருத்துமா. ஐ அம் சோ சாரி. நான் ஒரு இடியட். ஏதேதோ மனசுல குழப்பிக்கிட்டு உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன. நீ எவ்வளவு ஆசையா இந்த விஷயத்தை என்கிட்ட சொல்றதுக்கு கால் பண்ணி இருப்ப? அத புரிஞ்சுக்காம ஆபீஸ் டென்ஷன் பழைய விஷயங்கள வச்சு எனக்குள்ள நானே ஏதேதோ நெனச்சு உன்ன கஷ்டப்படுத்திட்டேன்.” என்று மன்னிப்பு வேண்டினான்

“விடுங்க கிருஷ். அத பத்தி பேச வேண்டாம். நானும் நேத்து ரொம்ப கோபப்பட்டுட்டேன். உன்கிட்ட பேசிக்கொண்டே இருக்கும் போது அவங்க வந்து என்ன கேள்வி கேட்டதும் எனக்கு என்ன ஆச்சுனே தெரியல படபடபடன்னு பேசிட்டேன்.”என்று கூறிவிட்ட எழுந்து அமர்ந்து கொண்டாள்.

“எல்லாத்துக்கும் நான் சாரி கேட்டுக்கறேன். இத காம்பன்செட் பண்ண உனக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லு நீ எதைக் கேட்டாலும் செய்வதற்கு நான் தயாரா இருக்கேன்.” என்று அவளுக்கு வாக்கு கொடுத்தான்.

“பாருடா என் வீட்டுக்காரரு எனக்காக என்ன வேணா செய்வாராமே! இது நல்லா இருக்கே! எனக்கு இப்ப எதுவும் வேண்டாம். நான் வேணுங்கும்போது கேட்பேன் அப்போ எந்த சாக்கும் சொல்லாம அதை செய்து கொடுத்தால் போதும்.” என்று சலுகையாக கேட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஒரு நிமிடம் கோகுல கிருஷ்ணனுக்கு ‘அவ்வளவுதானா சண்டை முடிந்து விட்டதா? இதற்கா இரவெல்லாம் தான் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தோம்? எங்கே கோபத்தில் நம்மை விட்டுச் சென்று விடுவாளோ? என்றெல்லாம் மனம் துடித்த துடிப்பு எல்லாம் தேவையற்றதாக தன்னிடம் இத்தனை அன்பை இவள் பொழிய காரணம் என்ன? என்று மீண்டும் புத்தி அவனை கேள்வி கேட்டது.

அடுத்த நொடியே ‘போதும் நீ தேவையில்லாம என்ன குழப்புனதுனால தான் நான் ஆருத்ரா கூட சண்டையே போட்டேன். அவ பானு விஷயத்தை பேச வேண்டாம்னு நினைக்கிறான்னா அது எனக்கு நல்லது தானே! பேசாம இருந்தா வாழ்க்கை சந்தோஷமா தானே இருக்கும்! அப்படியே இருக்கட்டும். இப்ப சண்டை வேண்டாம்னு அவ சமாதானமா போறான்னா இதுக்கும் நான் சந்தோஷம்தான் படணும். நீ எதுக்கு மறுபடியும் மறுபடியும் கணக்கு போட்டு என்னை குழப்பி விட பாக்குற?’ என்று மனம் மூளையுடன் சண்டையிட்டது.

ஆருத்ரா அவன் நெஞ்சில் தலை சாய்த்திருந்தவள் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.

அவள் தலையை வருடியபடி அமர்ந்திருந்த கோகுலுக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாக விளங்கியது கோவமோ சண்டையோ எந்த பெரிய விஷயமும் ஆருத்ராவுக்கு பெரிதல்ல. அவளைப் பொருத்தவரை சந்தோஷம் என்பது இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இருப்பதும், மன்னித்து மறப்பதும் தான். இதனை புரிந்து கொண்டாலே நிம்மதியாக வாழ முடியும் என்பதை அவளுடைய செய்கை காட்டுகிறது.

ஆனாலும் தான் செய்த மடத்தனத்தை ஓர் இரவில் அவள் தூக்கி எறிந்து விட்டு தன்னிடம் பேசியதை எண்ணும்போது அவனுக்கு மலைப்பாக தான் இருந்தது. தான் இப்படி இருக்க முடியுமா? தன்னிடம் இந்த குணம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

காலையில் எழுந்த ஆருத்ரா நிதானமாக குளித்து அலுவலகத்திற்கு தயாராகி நேராக சமையலறைக்குச் சென்று அவளுக்கு மட்டும் அவல் ஊற வைத்து வடித்து  அதில் கேரட்,வெங்காயம், தேங்காய், உப்பு சேர்த்து சாப்பிட்டுவிட்டு கிளம்பி விட்டாள்.

சுபாஷிணியிடம்  ஒரு வார்த்தையும் பேசவில்லை. கோகுல் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

‘ஒருவேளை தூக்கக் கலக்கத்தில் நம்மிடம் பேசி விட்டாளோ? கண் விழித்ததும் ஏதும் பேச வில்லையே!’ என்று உழன்று கொண்டிருக்க,

“அப்பா ஆபிஸ் கிளம்பறேன் பா.” என்று ஆதியிடம் கூறிவிட்டு,

“வர்றேன் கிருஷ்” என்று அவனிடம் கூறிச் செல்ல, அவன் முகத்தில் ஆயிரம் மின்னல் ஒளி வீசியது.

“என்ன டா மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிடுறா, நீ பல்லைக் காட்டிண்டு நிக்கற?” என்று சுபா மகனிடம் வந்தார்.

“அவ இத்தனை நாளும் நாங்க தனியா இருக்கும் போது மட்டும் தான் கிருஷ்ன்னு கூப்பிடுவா. எப்ப நீ எங்க தனிமைக்குள்ள மூக்கை நுழைச்சிட்டியோ, அப்பறம் அவ வெளில பேர் சொல்லி கூப்பிடுறத நீ எப்படிம்மா தப்பு சொல்ல முடியும்? வா வந்து டிபன் போடு. எனக்கும் ஆபிசுக்கு நேரமாச்சு.” என்று சலிப்பாக பதிலளிக்க, ஆதி பல்லிடுக்கில் சிரிப்பை அடக்கினார்.

அன்று அலுவலகம் சென்ற ஆருத்ராவை அணைத்துக் கொண்டு வாழ்த்தினாள் கேத்தரின்.

“இன்னிக்கு நான் பெர்ப்பியூம் போடல. உன் வாண்டு வாந்தி எடுக்க வைக்காது”என்று கண்களை சுருக்கிக் கூற ஆருவின் முகம் விகசித்தது.

மீரா அவளது மாத்திரையை நினைவு படுத்தவே எடுத்து போட்டுக் கொண்டு வேலையைத் துவங்க தன் கணினியை ஆன் செய்தாள்.

கம்பெனியின் எச்.ஆரிடமிருந்து மெயில் வந்திருந்தது.

இதற்கு முன் செய்த பிராஜெக்டில் அவளது வேலையை பாராட்டி கிளைன்ட் கம்பெனிக்கு மெயில் அனுப்பியதாகவும், அவளது வேலையை பாராட்டி கம்பெனி அவளுக்கு இன்செண்டிவ் இந்த மாதம் அதிகரித்து தருவதாகவும், அடுத்த முறை ஆன் – சைட் வாய்ப்பு வந்தால் தவறாமல் சென்று கம்பெனியின் நன்மதிப்பை உயர்த்தும் படியும் வந்திருந்தது.

படித்தவள் இதழ்களில் சிறு முறுவல் மலர்ந்திட, இன்செண்டிவ் தொகை சற்று கூடுதலாகவே இருந்தது.

இந்த வருடம் வருமானவரி தாக்கல் செய்யும் பொழுதே அவளை ஏதாவது முதலீடு செய்யும்படி அறிவுரை வழங்கி இருந்தது அவளது கணக்கை தணிக்கை செய்யும் குழு.

பங்குகளில் கணிசமான தொகையை ஏற்கனவே முதலீடு செய்திருந்ததால் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்திருந்தவளுக்கு வீட்டின் ரோலர் கோஸ்டர் நிலைமை காரணமாக அது மறந்தே போயிருந்தது.

இன்றைய இன்சென்டிவ் மெயிலை பார்த்ததும் மீண்டும் முதலீடு ஞாபகம் வர என்ன செய்யலாம் என்று கணினியை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

பின்னால் வந்து நின்ற ராம்ஜி “மெயிலை பார்த்து அப்படியே உட்கார்ந்து இருந்தா அடுத்த தடவை இன்ஸன்டிவ் வராது” என்று எரிச்சலுடன் கூற பொறுமை பறந்தவளாக,

“இங்க பாருங்க ராம்ஜி நான் என் வேலையை சரியா தான் செய்துட்டு இருக்கேன். ஏதாவது தப்பு இருந்தா வந்து பேசுங்க. என் வேலை ஏதாவது பெண்டிங் இருக்கா? இல்லல்ல! ஆபீஸ் மெயில் தான் செக் பண்ணிட்டு இருக்கேன். பர்சனல் வேலை எதுவும் பார்க்கலையே! அப்புறம் என்ன குத்தல் பேச்சு? இதெல்லாம் இதோட நிறுத்திக்கங்க. நீங்க ஹைரார்கில எனக்கு மேல இருந்தாலும் பிரண்ட்லியா பேசுறீங்கன்னு உங்க மேல ஒரு மரியாதை வைத்திருந்தேன். அதை கெடுத்துக்காதீங்க.” என்று கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்க திரும்பி அமர்ந்தாள்.

முகம் சிறுத்து ராம்ஜி திரும்பிச் செல்லும் வேளையில் அவனை பார்த்து நக்கலாக சிரித்து வைத்தாள் கேத்தரின்.

மதியம் உணவு இடைவெளியில் கேண்டினில் உணவை வாங்கிக் கொண்டு பெண்கள் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஆருத்ராவின் உடல்நிலை பற்றி இரு பெண்களும் கேட்டுவிட்டு வீட்டிலிருந்து உணவு எடுத்து வராதது ஏன் என்று கேள்வியை முன்வைக்க அமைதியாக பதிலளிக்காமல் இருந்தாள் ஆருத்ரா.

“இங்க பாரு எனக்கு உன் வீட்டில் என்ன பிரச்சனைன்னு எல்லாம் தெரியாது. ஆனா வயித்துல இருக்க குழந்தைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுக்கணும். இந்த கேன்டீன் சாப்பாடு எல்லாம் வேண்டாம். வீட்டிலிருந்து தயிர்சாதமா இருந்தாலும் பரவால்ல எடுத்துட்டு வா. இல்லன்னா நாளிலிருந்து உனக்கு நான் சாப்பாடு எடுத்துட்டு வந்துருவேன்.” என்று மிரட்டினாள் மீரா.

பேச்சை மாற்ற நினைத்த ஆருத்ரா காலையில் வந்த மெயில் பற்றி கூறி முதலீடுகளைப் பற்றி யோசனை கேட்டாள்.

“டாக்டர் நேத்து நீ அலையக்கூடாது என்று சொன்னாங்கல்ல? பேசாம பக்கத்திலேயே ஏதாவது வீடு வாங்கறதுக்கு ஏற்பாடு பண்ணு. இதை டவுன்பேமெண்டாக கட்டிட்டா மாச மாசம் இஎம்ஐ கட்டிடலாம். அலைச்சலும் குறையும்.நல்ல முதலீடாகவும் இருக்கும்.” என்று சாப்பிட்டுக் கொண்டே கேத்தரின் யோசனை கூற அவளை சட்டென்று அடித்தாள் மீரா.

“அவ மாமனார் மாமியாரோட கூட்டு குடும்பமா இருக்கா. தேவை இல்லாம எதையாவது சொல்லி குழப்பி விடாதே!” என்று கண்டிப்புடன் கூற,

“அய்யய்ய நான் ஒன்னும் குடும்பத்தை பிரிக்க ட்ரை பண்ணலம்மா, ஏற்கனவே கல்யாணத்துக்கு நகை எல்லாம் எடுத்தாச்சு அவளோ முதல்லையே ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணிட்டா. அதான் வீடு வாங்குனா சரியா இருக்கும்னு சொல்ல அப்படியே ஹெல்த் ரீசனையும் சொன்னேன்.நான் ஏன் அவளை தனியா வர சொல்ல போறேன்? என்று பதில் கொடுத்து கேத்தரினை பார்த்து மென்மையாக சிரித்தாள் ஆருத்ரா .

“ஆக்சுவலி நல்ல ஐடியா தான். வீடு வாங்கினா நான்தான் வந்து இருக்கணும்னு அவசியம் இல்லையே! வாடகைக்கு விட்டுட்டா அந்த ரெண்ட் வாங்கி இ.எம்.ஐ.க்கு பே பண்ணிடலாம். தேங்க்யூ கேத்தரின்.” என்று முத்துப்பற்கள் தெரிய சிரித்தவளுக்கு தெரியவில்லை இதை வீட்டில் சொன்னதும் ஏற்படப்போகும் பிரச்சனை என்னவென்று.

16 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 19”

    1. Avatar

      காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக ஆகிவிடும் போல இருக்கு

  1. Kalidevi

    kandipa erkanave ava ,mamiyar thaniya kutitu poga pora sollitu irukanga ithula ava just invest pana tha yosikura papom next ena nadakuthunu gokul purinjikitta pothum

  2. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 19)

    அட போடா…! நீ இடியட்டுன்னு எனக்கு முன்னாடியே தெரியுமே,
    அதுவே உனக்கு இப்பத்தான் தெரியுதா…இட்ஸ் டூ லேட்.
    பார்த்தியா..? இப்பக் கூட அவ ராத்திரி நடந்ததை அப்படியே டீல்ல விட்டாக்கூட, நீ தான் பெரிய பூதக்கண்ணாடி வைச்சு
    மறுபடியும், மறுபடியும் கணக்கு போடற. ஏன் டா டேய்…! நீ ஆடிட்டர்ன்னா அது உன்னோட.
    அதுக்காக புருசன் பொண்டாட்டி விஷயத்துல கூட பழங்கணக்கு, புதுக்கணக்குன்னு கணக்குப்
    போட்டு தணிக்கை ரெடி
    பண்ணனுமா என்ன..?
    போடா , போ டா கூமுட்டை..!

    ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம் டா..! உன்னாலயோ, இல்ல உங்கம்மாவாலேயோ, இல்ல உங்கப்பாவாலயோ… யாராலேயும் இன்னொரு ஆருவா நிச்சயமா மாற முடியாது. அவளுக்கு நிகர் அவ மட்டும் தான், க்ரேட் மாஸ்டர்பீஸ்.

    நான் நினைச்சேன்…! என்னதான் விடிய, விடிய, ராமாயாணம் கேட்டாலும், சீதைக்கு ராமன் யாருன்னு கேட்டா சித்தப்பான்னு… சொல்றதோட அது என் தப்பாப்பான்னு தான் நம்மளை க்ராஸ் கொஸ்டின் கேட்பாங்க நம்ம மிஸர்ஸ் சுபாஷினிஆதி.
    பார்த்திங்களா, காலையிலேயே டிபனுக்கு எதுக்கு பெயரை சொல்லி கூப்பிடறான்னு கச்சேரியை ஆரம்பிச்சிட்டாங்க.
    இனி ராவுக்கு இருக்கவே இருக்கு இன்சென்டிவ் வீடு பத்தின டிபேட். அநேகமா
    கச்சேரி அப்பத்தான் களை கட்டும்ன்னு நினைக்கிறேன்.
    என்னதான் இருந்தாலும் காலையில ஆஃபீஸ் போற டென்ஷன் இருக்கும் தானே எல்லாருக்கும்…? வாங்க, வாங்க
    நாமளும் அவங்க வீட்டு டின்னருக்குப் போய் ஜாலியா கை நனைக்கிறதோட, ஜோலியை முடிச்சிட்டு வரலாம் வாங்க. ஸோ…. டோண்ட் மிஸ் இட்..! ர

    ரணகளம் & கதம் களம் எல்லாம் ஜோரா ஆரம்பிக்கட்டும், கச்சேரி களை கட்டட்டும்.
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    சூப்பர், வீடு வாங்கப்போறேன்னு சொன்னதும் தனியா போகப் பிளான் பண்றான்னு ஆரம்பிக்க போகுது

  4. Avatar

    Veedu vanga pora nu sonna panchayathu definite ah vedika than poguthu krish nu sonnathukae kalai la sandai aachi ithula veedu nu night ku poi sonna kacheri confirm o confirm aanalum indha krish yosichi mandai ah kozhapikirathu la entire ah thappu nu.solla mudiyathu oru vela ava maturity ah la venam nu solli irukala illa avalukae vishayam therinchi iruku ah nu theriyala

  5. Avatar

    அச்சச்சோ அந்தத் தாய்க்கிழவி நேத்து தான் தனி குடுத்தனத்தை பத்தி பேசுச்சு இப்ப இன்னைக்கு வீடு வாங்கறேன்னு சொன்னா அந்த அம்மா ஆடு ஆடுன்னு ஆடப்போகுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *