Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 21

மனம் உன்னாலே பூப்பூக்குதே 21

பூ 21


ஆருத்ரா மாமியார் காட்டும் கோபத்தை அலட்சியம் செய்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று மரியாதைக்கு எந்த குறைவும் வைக்காமல் அமைதியாக நடந்து கொண்டாள். கோகுல் தன்னுடைய புதிய அலுவலகத்திற்கு இருவரை வேலைக்கு அமர்த்தி வாடிக்கையாளர் சேவையை அதிகரித்திருந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு மாதம் கடந்து விட அடுத்த மருத்துவ பரிசோதனைக்கு அன்று வரச் சொல்லி மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்திருந்தது. முதல் நாள் இரவு கோகுலிடம் அதை தெரிவித்தவள் அவனால் வர முடியுமா? என்று வினாவினாள்.

“என்ன இப்படி கேட்டுட்ட? நான் கண்டிப்பா வந்துடறேன். 11 மணிக்கு தானே அப்பாயின்மென்ட்? நேரா ஹாஸ்பிடல் வந்துடுறேன். நீ ஆபீஸ்ல இருந்து அங்க வந்துருவ தானே?” என்று அக்கறையோடு அவன் கேட்ட போது அவன் மேல் இருந்த சின்னச் சின்ன வருத்தங்கள் கூட மறைந்து போனது அப்பாவைக்கு.

அன்று நடந்த நிகழ்வுக்காக அடிக்கடி அவன் மன்னிப்பு கேட்டதுடன் தந்தையிடம் அவளே வீடு விஷயமாக பேசியதற்கு தன் விருப்பமின்மையை தெரிவித்ததற்கும் வருத்தம் தெரிவித்து இருந்தான்.

அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஆதிநாதன் தான். அன்று இரவு சுபா கோபத்தில் ஏதேதோ பேசிவிட ஆதி மனைவி மேல் கோபம் கொண்டு,

“அந்த பொண்ணு தெளிவா எனக்கு தனியா போக விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா. நீ தேவை இல்லாம அவளை சீண்டி சீண்டி உன் பையன கூட்டின்டு போக வச்சுடாதே. எண்ணம் போல் வாழ்க்கை ன்னு பெரியவா சொல்லுவா. உன் பையன் உன் கூட சேர்ந்து இருக்கணும்னு நீ நெனச்சேன்னா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ. முன்னாடி நீ இப்படி கிடையாது. திடீர்னு ஏன் இப்படி மாறினேன்னு எனக்கு தெரியல சுபா.” என்று சற்று காட்டமாகவே சொல்லிவிட்டவர், மறுநாள் மகனை தனியே சந்தித்து,

“இங்க பாரு கோகுல் நேத்து பழம் சாப்பிடும் போது எதார்த்தமா தான் வீட்டு விஷயம் பத்தி பேச்சு வந்தது. நான் தான் அப்பார்ட்மெண்ட் வேண்டாம் இடம் வாங்கி வீடா கட்டிக்கலாம் அப்படின்னு சொன்னேன். அந்த பொண்ணு நினைச்சிருந்தா ‘இல்லல்ல என் விருப்பப்படி நான் என்ன வேணா செஞ்சுப்பேன்’அ?ன்னு சொல்லிருக்கலாம். ஆனா அவ அப்படி சொல்ல.

நான் சொன்ன கருத்துக்கு மரியாதை கொடுத்து ‘சரிப்பா விசாரிச்சு சொல்லுங்கோ’ன்னு சொன்னா.எனக்கும் ‘இந்த எண்ணமெல்லாம் வேண்டாம் மா அதான் இவ்வளவு பெரிய வீடு இருக்கு அந்த பணத்தை வேறு எதிலயாவது போடு’ன்னு சொல்லி இருக்க முடியும் நான் ஏன் சொல்லல தெரியுமா?

சொந்தமா சம்பாதிச்சு தனக்கு ஒரு நிழலா வீடு வாங்கிக்கணும் என்கிறது ஒவ்வொரு மனுசனோட மிகப் பெரிய ஆசை. அதை இந்த வயதிலேயே நிறைவேத்திக்கிற அளவுக்கு திறமையும் அறிவும் பொறுமையும் அந்த பொண்ணு கிட்ட இருக்குறதுனால தான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கா. அது மட்டும் இல்ல, இப்போ அவ பிள்ளையாண்டு இருக்கா. இந்த நேரத்துல அவ மனசுல சின்னதா கூட ஒரு வருத்தம் வர்றத நான் விரும்பல.

என் அம்மா, தான் பிள்ளை பிள்ளையாண்டு இருக்கும்போது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வந்து ரொம்ப மன உளைச்சலில் கஷ்டப்பட்டதா நான் வளர்ந்ததுக்கு அப்புறம் நிறையவே சொல்லி இருக்கா. அதனாலதான் சுபா உன்ன வயித்துல வெச்சுண்டு இருக்கும்போது என் அம்மா அவளை தாங்கு தாங்குன்னு தாங்கினா. ஆனா இன்னைக்கு சுபா அந்த மறந்துட்டு ஆருத்ராவை ஏனோ இப்படி பேசின்டு இருக்கா. என்னால முடிஞ்ச வரைக்கும் நான் அவளை கண்டிச்சுட்டேன்.

இதுக்கு மேல அவள கண்டுச்சா இந்த குடும்பம் உடைஞ்சு போய்டும்.
ஆருத்ராவும் ரொம்ப பொறுமையா தான் இருக்கா. அதனால நீயும் ஏதாவது அவளை சீண்டி அவ பொறுமையை சோதித்து பார்க்காதே. அந்த பொண்ண எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியா வச்சுக்க முடியுமோ வச்சுக்கோ. அதுதான் உனக்கும் அவ வயித்துல இருக்குற உன்னோட குழந்தைக்கும் ரொம்ப நல்லது.

அம்மா வயித்துல இருக்குற குழந்தை என்னெல்லாம் கேக்கறதோ அத்தனை அறிவையும் கொண்டுதான் பிறக்குமாம். அதனால உன் குழந்தை உன் மேலையோ இல்ல உன் அம்மா மேலையோ வருத்தம் இல்லாமல் பிறக்க வேண்டிய சூழலை நீதான் உருவாக்கணும். அம்மா செய்றது தப்புன்னு அவகிட்ட சண்டைக்கும் போக வேண்டாம், ‘நீ என் அம்மாவை பொறுத்து போ’ன்னு ஆருத்ராவை கஷ்டப்படுத்தவும் வேண்டாம். அவளை நல்லா வச்சுக்கோ.” என்று நீண்ட அறிவுரையை வழங்கி விட்டு வந்தார்.

அன்று முதல் மாலையில் முடிந்தவரை நேரத்தோடு வீட்டிற்கு வரும் கோகுல் முன்இரவு நேரத்தில் மனைவியுடன் சாலையில் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக்கி இருந்தான்.

முடிந்தவரை வீட்டு விஷயங்களை தவிர்த்துவிட்டு வேறு விஷயங்களை பேசுவதும், சிரிப்பதுமாக ஆருத்ராவை நல்லவிதமாக பார்த்துக் கொண்டான். அவனது இந்த செய்கைகளால் மிகவும் மனம் உருகி போயிருந்தாள் ஆருத்ரா.

மாமனார் அவள் நேரத்திற்கு உணவும் மருந்தும் எடுத்துக் கொண்டாளா என்பதை உறுதி செய்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தார். கணக்கு வழக்கு இல்லாமல் பழங்கள்,காய்கறிகள், சத்தான உணவு வகைகள், உலர் பழங்கள் என்று அவளுக்கு வேண்டியதை தேடித் தேடி வாங்கி வந்து குவித்தார்.

சுபாவுக்கு இவர்கள் இருவரும் செய்வதும் பிடிக்கவில்லை என்றாலும் ஆருத்ரா வயிற்றில் இருக்கும் தங்கள் வீட்டின் வாரிசு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவளுடன் எந்த சண்டையும் போடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்து கொண்டார். ஆனால் யாருமில்லாத நேரத்தில் ஜாடையாக பேசுவதை அவர் நிறுத்தவில்லை.

ஆருத்ராவுக்கு அவர் அவளுடைய பாட்டி சீர் கொண்டு வராதது பற்றி பேசும்போது கோபம் கட்டுக்கடங்காமல் வந்து விடும். ஆனாலும் மாமனாரையும் கணவனையும் மனதில் வைத்து எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விடுவாள்.

குறுகிய காலத்திலேயே கோகுல் கம்பெனியில் வருவாய் அவன் நினைத்ததை விட அதிகமாகவே வந்துவிட மனைவியிடம் அவளுடைய பணத்தை வீட்டின் முதலீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளும்படி சொல்லிவிட்டான். ஆருத்ராவும் எந்த வெளிப்பூச்சும் இல்லாமல் அவன் கூறியவுடன் ‘சரி ‘ என்று ஏற்றுக் கொண்டவள் மாமனாருடன் சில இடங்களையும் சென்று பார்த்து ஒன்றை உறுதி செய்து விட்டும் வந்திருந்தாள்.

எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டு மருத்துவமனை காத்திருப்பு இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

பத்து நிமிடம் முன்பாகவே அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டதாக கூறி இருந்தான் கோகுல்.

அவன் வந்ததும் அவன் கையைப் பற்றிக்கொண்டு மருத்துவரை சந்திக்க சென்றாள் ஆருத்ரா.

அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கண்ட மருத்துவர்,

“முகம் பளிச்சுன்னு இருக்கு. ஆனா டெஸ்ட் ரிசல்ட்ல எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் கம்மியா இருக்கே! நல்லா தூங்கணும் மா. நேரத்துக்கு சாப்பிடு, இன்னும் 4 மாசம் போனதும் இங்க பிசியோதிரபிஸ்ட் இருப்பாங்க. அவங்க சில எக்சர்சைஸ், யோகா எல்லாம் சொல்லித் தருவாங்க. அது உங்களுக்கு டெலிவரிக்கு உதவியா இருக்கும்.” என்று கூறி மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.

அடுத்த மாதத்தில் ஸ்கேன் செய்து கொள்ளலாம் என்று கூறி விட ஆசையாக குழந்தையை பார்க்க வந்த கோகுல் சற்று ஏமாற்றம் அடைந்தான்.

“போன மாசமே ஸ்கேன் எடுக்கலையே மேடம்?” என்று அவன் தயங்க,

“இங்க உள்ளதுல அல்ட்ராசவுண்ட் பார்த்துட்டோம். அதான் ஸ்கேன் சென்டர் போய் எடுக்குற ஸ்கேனை அடுத்த மாதம் எடுக்க சொன்னேன். சரி ஆசையா இருப்பீங்க போல!
இப்ப இங்கேயே ஸ்கேன் பாருங்க.” என்று அவள் வயிற்றில் ஸ்கேன் கருவியை ஜெல் வைத்து நகர்த்தியபடி திரையில் கருப்பையைக் காட்டினார்.

அவளுக்கு மூன்று மாதங்கள் முடிவுற்று இருந்ததால் குழந்தையின் வளர்ச்சியும் இதயத் துடிப்பையும் காட்டியபோது கோகுல் கண்களில் கண்ணீர் அரும்பியது.

மனைவியின் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டான். மருத்துவருக்கு நன்றி கூறி இருவரும் விடை பெற்றனர்.

மிகவும் சோர்வாக உணர்ந்த ஆருத்ரா, அலுவலகம் செல்லாமல் வீட்டிற்கு சென்று விட முடிவு செய்ததும், அவனும் அவளுடன் வீடு வந்து சேர்ந்தான்.

அந்த நேரத்தில் மகனையும் மருமகளையும் சுபா எதிர்பார்த்திருக்க வில்லை. கையில் இருந்த கைபேசியை சட்டென்று அணைத்து விட்டு வெளியே வந்தார்.

இவர்கள் வருவதை ஆதிக்கு அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்ததால், வெளியே சென்றிருந்தவர் இவர்கள் வரும் நேரத்தில் சரியாக வீடு வந்து சேர, மனைவியின் நடவடிக்கையை கவனித்து விட்டார்.

இருவரும் மருத்துவமனையில் நடந்ததை, மருத்துவர் கூறியதை சொல்லவும், ஆதி மகிழ்ச்சியுடன் இருவரையும் வாழ்த்தினார்.

சுபா மருமகளை ஓரப் பார்வை பார்த்து,

“நான் தான் இப்பல்லாம் ஒன்னும் சொல்றது இல்லையே! அப்பறம் என்னவாம்? உடம்பை கவனிக்க சொல்லு” என்று கூறிவிட்டு விலகிச் சென்றார்.

அவர் சண்டைக்கு வராததே மிகுந்த ஆறுதலை கொடுத்திருக்க, மூவரும் அமர்ந்து வரப்போகும் குழந்தைக்கு என்னென்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்று பட்டியல் போடத் துவங்கினர்.

ஒரு வாரத்தில் சந்தானலஷ்மி பேத்தியை பார்க்க கார் நிறைய சீர் பொருட்களுடன் வந்து சேர்ந்தார்.

அவர் வந்து பார்க்கவில்லை என்று அடிக்கடி ஜாடை பேசிய சுபாவுக்கே அவர் வந்து இறங்கிய நிலை கண்டு சங்கடமாக போய் விட்டது.

அவர் இரு மாதங்களுக்கு முன் கீழே விழுந்து நடக்க முடியாமல் இருந்திருக்கிறார். பேத்தியிடமும் அதை அவர் தெரியப்படுத்தவில்லை. அவள் நல்ல செய்தி கூறியவுடன் வர இயலவில்லையே என்று நெஞ்சு விம்மிக் கிடந்தவர் மருத்துவர் பயணம் செய்யலாம் என்று கூறியவுடன் கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் கிளம்பி வந்து விட்டார்.

வந்தவர் தான் பேத்தியிடம் சுபா சரியாகப் பேசாமல் இருப்பதைக் கண்டு மனம் பொறுக்காமல் அவரை கேள்விகளால் துளைத்து விட்டார்.

“நீ பொண்ணு கேட்டு வரும்போது என்ன சொன்ன சுபா? அம்மா இல்லாத பொண்ணுக்கு நான் அம்மாவா இருப்பேன்னு சொன்ன. இப்ப என் குழந்தை வயித்துல உங்காத்து வாரிசை சுமந்து நிக்கறா. ஆனா நீ அவளை முழு மனசா கவனிக்கிறியா? அன்னைக்கு நீ போன் பண்ணி அவளைப் பத்தி குறை சொன்ன போது கூட என் பேத்தி மேல தப்பு இருக்கும்ன்னு நினைச்சு நான் அவளை கண்டிச்சு தான் இங்க அனுப்பி வச்சேன்.

நான் இல்லாம அவ தைரியமா வாழணும்ன்னு அவ ஆசை தெரிஞ்சும் நான் அவளை ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வச்சேன். இந்த கல்யாணம் வேண்டாம்னு அவ சொன்னப்ப நான் தான் பையன் நல்ல பையன், அவன் அம்மா அவ்வளவு அன்பா பேசறான்னு அவளை ஒத்துக்க வச்சேன். அவளோட ஃப்ரெண்ட் ஒரு பொண்ணு கூட போன் பண்ணி என்கிட்ட சண்டை போட்டா.  ‘இப்ப இனிக்க இனிக்க பேசுற மாமியார் நாளைக்கு அவளை படுத்தினா என்ன செய்வீங்க பாட்டி’ன்னு. அப்ப கூட சுபா நல்ல விதமா தான் பேசுறா. நான் அவளை நம்பி எனக்கப்பறம் என் பேத்தியை நன்னா பார்த்துக்க விசாரிச்சு தான் முடிவு எடுத்தேன். என் முடிவு எப்பவும் தப்பா போனதில்லைன்னு அவ்வளவு ஆணித்தனமா சொன்னேன்.

ஆனா இப்ப என் கணிப்பு தப்போன்னு சந்தேகம் வர்றது.” என்று வருத்தமாக கூறினார்.

கோகுல் சங்கடமாக பாட்டியை பார்த்துக் கொண்டிருக்க, அவர் நியாயமாக பேசுவதாக எண்ணி அமைதி காத்தார் ஆதி.

சுபா என்ன பதில் சொல்லி இருப்பாரோ, ஆனால் ஆருத்ரா பாட்டியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“ஏன் பாட்டி இப்படி பேசற? நான் எப்பவாவது அவங்களை பத்தி உன்கிட்ட குறை சொன்னேனா? நீ வரலைன்னு சண்டை போட்டேனா ? இல்ல தானே! அவங்க என்னை நல்லா தான் பார்த்துக்கறாங்க. நீ மனசை போட்டு குழப்பிக்காம இரு.” என்று சமாதானம் செய்தாள்.

பேச்சு பின் திசை மாறி அவளது வளைகாப்பு பற்றி வந்து நின்றது

“இங்க வச்சு வளைகாப்பு, சீமந்தம் பண்ணிடலாம். அப்பறம் குழந்தைக்கு புண்ணியவாஜனை பண்ணிட்டு நிதானமா உங்க சவுகரியம் போல இங்க அனுப்பினா போரும்.” என்று சுபா கூறியதும் ஆருத்ரா கணவனைப் பார்க்க,

அவனோ அன்னை சொன்னதை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவிப்புடன் இருந்தான்.

“உங்களால பார்த்துக்க முடியுமா அம்மா?” என்று ஆதி நாதன் வினைவியதும்,

“அதெல்லாம் என் பேத்தியையும் கொள்ளுப் பேரனையும் தங்கமா பார்த்துப்பேன்” என்று வேகமாக பதில் கொடுத்தார் சந்தானலஷ்மி.

பேசி, சிரித்து, உணவை முடித்துக் கொண்டு மாலையே அவர் திருச்சிக்கு கிளம்பி விட,

அன்றிலிருந்து கணவனை எப்படி பிரிந்திருப்பது என்று பயமும் கவலையும் ஆருத்ராவை  பிடித்துக் கொண்டது.

சில நேரங்களில் அவள் அதனை வெளிக்காட்டிப் பேசினாலும் அதனை கோகுல் புரிந்து கொள்ளவில்லை.

“எல்லாரும் போறது தானே டா. நான் அடிக்கடி உன்னை திருச்சில வந்து பார்க்கறேன்.” என்று கூறியவன், அவளை இதழ் ஒற்றியோ, நகைச்சுவையாக பேசியோ சமாதானம் செய்து விடுவான்.

நாட்கள் ஏரோப்பிளேன் வேகத்தில் பறந்தது.

அலுவலகத்தில் தோழிகள் இருவரும் அவளை தாங்கினார். வீட்டில் ஆதி நாதன் அன்புடன் கவனித்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் முகம் திருப்பிய சுபா கூட இப்பொழுது அவளுக்கு நேரத்திற்கு உணவை கொடுக்கும்போது சின்ன சிரிப்பை உதிர்த்துக் செல்கிறார்.

எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருப்பதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் ஆருத்ரா.

இறைவன் என்பவன் நாம் நினைப்பதை அப்படியே நடத்திக் கொடுக்கும் வல்லமை படைத்தவனாக இருந்தாலும் அத்தனை எளிதில் அதை செய்து விடுவது இல்லையே!

அன்று அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பிய ஆருத்ரா வயிற்றில் வலி எடுக்கவே மிகவும் பயந்து போனாள்.

ஆறு மாதம் நிறைந்த வயிற்றை தடவியபடி, “அம்மா வலிக்குது” என்று அவள் கதற, ஆதியும் கோகுலும் பதறிக்கொண்டு அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.

13 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 21”

  1. Avatar

    அச்சோ எல்லாம் நல்லா போயிட்டு இருக்கறச்சே இது என்ன சோதனை?

  2. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 21)

    எனக்கென்னவோ… ஆருத்ரா எல்லாரையும் புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு, மத்தவா அவளை புரிஞ்சுக்கலையோன்னு தோணுது. இல்லைன்னா, திரும்ப, திரும்ப ஆதி அப்பா
    இப்படியா அட்வைஸ் மழையா பொழிவாரு.

    அது சரி, அந்த சுபா மாமி அப்படி யாரு கிட்ட போன்ல பேசிட்டிருந்து, இவங்களைப் பார்த்தவுடனே அவசர அவசரமா டிஸ்கனெக்ட் பண்ணாப் போலன்னு தெரியலையே.

    ஆருத்ரா தனியா பாட்டி கூட போய் பிரசவ நேரத்துல இருக்க பயப்படறாளா..? இல்லை, கணவனை பிரிஞ்சு போக சங்கடப்படறாளா…? ஆனா,
    இங்கேயிருந்தா சுபா மாமி
    அந்த தீட்டு, இந்த தீட்டுன்னு சொல்லி மனசை உடைப்பாளே..
    அதானே பயமாயிருக்குது.

    அச்சோ..! இப்ப ஆறாவது மாசமே எதுக்கு வலி வரணும் ?
    ஓவர் ஸ்ட்ரெஸ்ஸா, இல்லை ஸ்ட்ரெய்ன்னா..?
    😮😮😮
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    அந்த சுபா மாமியை தவிர மத்த எல்லாமே நல்லபடியா போய்கிட்டு இருக்குன்னு சந்தோஷப்பட்டா இது என்ன திடீர்னு அவளுக்கு வலி வந்திருக்கு அது எதனாலன்னு தெரியலையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *