Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 22

மனம் உன்னாலே பூப்பூக்குதே 22

பூ 22

ஆண்கள் இருவரும் ஆருத்ராவின் துடிப்பை கண்டு பதறி மருத்துவமனைக்கு விரைய,

சுபா கூறிய எதையும் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

அவர்கள் அவளுடன் மருத்துவமனை கிளம்புவதைக் கண்டு அவரும் உடன் சென்றார்.

கோகுல் மருத்துவமனையை ஒருவழியாக்கி விட்டான். மருத்துவர் அவளுக்கு உடல் சூடு திடீரென அதிகரித்திருக்கும் என்று கூறி மருந்து கொடுத்தபோது அவளது இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதை கவனித்தார்.

“என்னம்மா இது, வலிச்சது என்னவோ சூடுனால, எதுக்கு பிபி இப்படி ஏறி இருக்கு? இவ்வளவு இருக்கறது நல்லது இல்லம்மா. நான் தான் ஸ்ட்ரெஸ் ஆகாதன்னு சொன்னேனே!” என்று கண்டித்தார்.

“இல்ல டாக்டர்…” என்று அவள் சமாளிக்க,

“நான் ஆரம்பத்தில் இருந்து சொல்றேன். வேலையை விட்டுட்டு வீட்ல நிம்மதியா ரெஸ்ட் எடுன்னு, கேட்டா தானே!” என்று கிடைத்த இடைவெளியில் சுபா பேச,

“மேடம் அந்த பொண்ணு நாலு வருஷமா வேலை செய்யறா, அதுல இத்தனை நாள் இல்லாத ஸ்ட்ரெஸ் இன்னிக்கு வந்துடப் போறது கிடையாது. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சு சரி பண்ணுங்க. இந்த காலத்துல டெலிவரி வரை வேலைக்கு போற பொண்ணுங்க இருக்காங்க.” என்று சற்று எரிச்சலுடன் கூறிவிட்டு அகன்றார்.

மகனை அவளிடம் மனம் விட்டுப் பேசச் சொல்லி விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார் ஆதிநாதன்.

“என்னாச்சு ருத்தும்மா? ஏன் என்ன டென்ஷன் உனக்கு?” என்று அவள் கையை ஆதரவாக பற்றிக்கொண்டான் கோகுல்.

“எனக்கு டெலிவரி சென்னையில பார்க்கலாம் பா. எனக்கு திருச்சி போக விருப்பம் இல்ல.”என்று அழுத்தமாக உரைத்தாள்.

அவளது பேச்சு சட்டென்று புரியாமல் விழித்தான் கோகுல்.

“அதுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கே டி. அதுக்குள்ள அதை ஏன் உன் தலைல போட்டு உருட்டிகிட்டு இருக்க?” என்று லேசான எரிச்சலோடு கேட்டான்.

“என்னப்பா இப்படி சொல்றீங்க?” என்று சிணுங்கினாள்.

அவள் மனதில் ஏதேதோ குழப்பிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், “அதெல்லாம் எதுவும் யோசிக்காத ருத்தும்மா. பாரு இப்ப ஹாஸ்பிட்டல் வர்ற நிலைமை வந்துடுச்சு. மனசை ஃப்ரீயா விடு” என்று சமாதானம் செய்தாலும் அவள் சென்னையில் இருக்கட்டும் என்று ஒரு வார்த்தையை அவன் சொல்லவில்லை.

அவள் இருந்த நிலையில் அதனை கவனிக்கவும் இல்ல. தன் மனக்கவலையை கூறிவிட்டோம் இனி கணவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பி அமைதியானாள்.

நான்கு நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்து விட்டு அலுவலகம் சென்றவளை கேத்தி திட்டித் தீர்த்தாள். மீரா அவளுக்கு ஆதரவாக அருகே அமர்ந்து சமாதானம் செய்தாள்.

“உனக்கு திருச்சி போக பிடிக்கலன்னா வாயை திறந்து சொல்லிட்டு வேலையை பாரு டி. உன்னை என்ன கழுத்தை பிடிச்சா வெளில தள்ளப் போறாங்க? எதையோ மனசுல போட்டு எல்லாரையும் ஏன் டி படுத்தி எடுக்க?” என்று கேத்தி திட்ட,

மீரா அவளை நிறுத்தி, “இங்க பாரு டி அப்படியெல்லாம் நான் போக மாட்டேன்னு சொல்ல முடியாது. முறைன்னு ஒன்னு இருக்குன்னு சொல்லுவாங்க. அவங்க பாட்டிக்கும் அவளை வச்சு பார்த்துக்க ஆசை இருக்கலாம். என் அக்கா வளைகாப்பு முடிஞ்சு எங்க வீட்டுக்கு வந்து தான் நிம்மதியா இருந்ததா சொல்லுவா. நம்ம வீடுன்னு அம்மா வீட்டுல ஒரு சுவாதீனம் இல்லாம அக்காடான்னு உட்கார முடியும். மாமியார் வீட்டில் முடியுமா? சும்மா எதையாவது பேசாத கேத்தரின்.” என்று கண்டித்தாள்.

“ஏய் என்ன டி பேசுறீங்க? அவ உயிரும் உணர்வும் உள்ள மனுஷி, அவளுக்கு அவ புருஷன் கூட தான் இருக்கணும்னு விருப்பம் இருந்தா அதை ஏன் தடை சொல்லணும்?” என்று கேட்க,

“காரணம் சொன்னாலும் உனக்கு புரியாது விடு” என்று பேச்சு முடித்துக் கொண்டாள் மீரா.

ஆனால் இதையெல்லாம் கேட்ட ஆருத்ரா மேலும் துவண்டு போனாள்.

“ஏன் ஆரு, இங்க உன் மாமியார் தான் அடிக்கடி முகம் காட்டுறாங்கல்ல, நீ பாட்டி வீட்டுக்கு போயிட்டா அந்த தொல்லை இருக்காது, பாட்டிகூட தினமும் கோவிலுக்கு போகலாம். நினைச்ச நேரம் தூங்கி எழலாம். ஆபிஸ் வேலையும் செய்ய  உனக்கு தொந்தரவு இருக்காது தானே! இப்படி யோசி. சும்மா எதையோ நினைச்சு உடம்பை கெடுத்துக்காத.” என்று அறிவுரை வழங்கினாள்.

ஆனால் ஆருத்ராவுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாக தோன்றவில்லை. பாட்டியுடன் கோவிலுக்கு போவது ஒரு நாள் நடக்கும். பின் பாட்டி கால் வலி என்று வர மாட்டார். பக்கத்தில் உள்ள மாமிகள் எல்லாம் ஏதாவது கேள்வி கேட்ட வண்ணம் இருப்பார்கள். இதெல்லாம் விட மாலையில் கைபிடித்து நடக்கும் கணவன் இல்லாமல் தனிமையில் திருச்சியில் என்ன செய்வது என்று அவள் மனம் விம்மியது.

எப்படியும் தன்னை கணவன் திருச்சி அனுப்ப மாட்டான் என்று முழுமையாக நம்பினாள் ஆருத்ரா.

அடிக்கடி நடைபயிலும் போது அவனிடம் கேட்டும் வைப்பாள். அவன் சமாளிப்பாக பதில் கூறினானே தவிர உறுதியாக ஏதும் கூறாதிருந்தான்.

நாட்கள் அமைதியாக கடந்து போனது. வளைகாப்பும் சீமந்தமும் நடத்த சந்தானலஷ்மி நாள் பார்த்து கூறியதும் அந்த வேலைகள் துரிதமாக நடக்கத் துவங்கியது.

இத்தனை சுற்று முறுக்கு, மைசூர்பாகு, அதிரசம், தேன்குழல், இத்தனை எண்ணிக்கையில் வேண்டும். நெருங்கிய உறவினருக்கு கொடுக்க இத்தனை தனியே வேண்டும் என்று சுபா பட்டியல் தயாரித்து பாட்டிக்கு கொடுக்க ஆருத்ராவுக்கு கோபம் வந்துவிட்டது.

*ஏன் இதெல்லாம் இங்க உள்ள கேட்டரிங்ல சொன்னா செய்து தர மாட்டாங்களா? நான் பணம் கொடுத்துட்டு போறேன். ஏன் பாட்டியை திருச்சியில் இருந்து கொண்டு வர சொல்றீங்க?” என்று முதல் முறையாக சண்டை போடும் த்வனியில் பேசினாள்.

“இங்க பாரு இதெல்லாம் சாஸ்திரம். உனக்கு ஒன்னும் தெரியல, பேசாம இரு.” என்று சுபா சூடாக பேசவும்,

“பாட்டிக்கு வயசு எண்பதுக்கு மேல ஆறது. அவங்க அலைஞ்சு திரிஞ்சு இதெல்லாம் வாங்க முடியுமா? வயசனவங்களை கஷ்டப்படுத்துற அது சாஸ்திரம் இல்ல சங்கடம்.” என்று முகம் காட்டி சென்றுவிட்டாள்.

சுபா ஆதிநாதனிடம் சென்று புகார் கூற, அவரோ மனைவியை ஏற இறங்க பார்த்தார்.

“அன்னிக்கு அவங்க வந்தப்ப எப்படி இருந்தாங்க. இதெல்லாம் இங்க சொல்லி அவங்களை கூட பணம் கொடுக்க சொல்லி இருக்கலாம் சுபா. ஆருத்ரா கேட்ட விதம் தப்புன்னாலும் கேட்ட விஷயம் தப்பில்ல.” என்று எழுந்து சென்று விட்டார்.

அடுத்த இரண்டு நொடியில் சுபாவின் கைபேசியில் இருந்து அழைப்பு சென்றிருந்தது.

“பாருங்க மன்னி, நான் சொன்னேனோன்னோ, எவ்வளவு தான் நான் நல்லவளா இருந்தாலும் இவ என் ஆத்துக்காரர், என் பையன் எல்லாரையும் எனக்கு எதிராகவே திருப்பிவிட்டுட்டா.” என்று நடந்தவற்றை விளக்கினாள்.

அந்த பக்கம் என்ன பதில் வந்ததோ அது சுபாவுக்கு தெரியாது. ஏனெனில் அவளது கைபேசி ஆதிநாதனின் காதில் இருந்தது.

“சும்மா விடாதே டி சுபா. அவா பாட்டிக்கு போன் போட்டு பொண்ணு வளர்த்த லட்சணம் பாருன்னு நன்னா நாலு கேள்வி கேளு.” என்று ஏற்றி விட்டுக் கொண்டிருந்தது வேறு யாருமில்லை சாட்சாத் அந்த மங்களம் தான்.

“ஏன் க்கா நான் உன் குடும்பத்து குடியை கெடுத்தேனா என்ன? எனக்கு இருக்கறது ஒத்தப் பையன். அவன் வாழ்க்கையில வந்து விளையாடறேளே! இதெல்லாம் நன்னா வா இருக்கு. நீங்க அவளுக்கு இன்னொரு வகையில் அண்ணா பொண்டாட்டியா இருந்தாலும் என் ஒன்னு விட்ட அக்கா இல்லையா? இப்படியா பண்ணுவேள்?” என்று கோபத்துடன் கேட்டார் ஆதிநாதன்.

அந்த பக்கம் ஒரு சத்தமும் இல்லை. பின் மெதுவாக, “நானா ஒன்னும் உன் ஆத்துக்காரிக்கு சொல்லிக் கொடுக்கல நாதா. அவளே தான் கேட்டா. அவ என்ன குழந்தையா நான் சொல்றத கேட்டு அப்படியே நடக்க. முதல்ல உன் ஆத்திக்காரியை சரி பண்ணு. அப்பறம் என்னை கேள்வி கேட்கலாம்.” என்று அழைப்பை துண்டித்து விட்டார்.

அவர் பேசியதை ஆதிநாதன் லவுட் ஸ்பீக்கரில் போட, மங்களம் பேசியதைக் கேட்டு சுபா வாய் பிளந்தார்.

“பார்த்தியா? உன்னை சரி பண்ணனுமாம். பண்ணிடலாமா? நான் ஏற்கனவே சந்தேகப்பட்டேன் சுபா. நீ இப்படி எடக்கு மடக்கா யோசிக்கிற ஆள் இல்லையே! ஏன் இப்படி ஆனன்னு. பார்த்தா எல்லாமே அவா உனக்கு போட்ட ஸ்க்ரூவா? முதல்ல உனக்கும் ஆருவுக்கும்  அவ வந்தப்போ ஏதோ புடவை பிரச்சனை வந்ததில்ல! அதை வச்சு தானே நீ அவள்ட்ட முகம் காட்டிண்டே இருந்த? அவாத்து பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலன்னு அக்கா உனக்கு ஸ்க்ரூ போட்டு உனக்குன்னு இருக்குற மாட்டுப்பொண்ணை ஒட்ட விடாம பண்றா சுபா. இது கூட புரியாத மட சம்பராணியா நீ? உன்னை இப்படி நான் நினைச்சதே இல்ல சுபா.” என்று வருத்தம் தெரிவித்து வெளியேறினார்.

மருமகள் வந்தது முதலே அவ்வப்போது வருத்தம் தெரிவிப்பார் தான். அதிலும் ஒரு இணக்கம் இருக்கும். என் மனைவி இப்படி செய்யலாமா என்று உரிமை கோபம் இருக்கும். ஆனால் இன்றோ விட்டேற்றியாக சுபாவிடம் அவர் பேசிவிட்டு செல்லவே சுபாவின் மனம் துடிக்க ஆரம்பித்தது.

நம்முடைய உலகம் என்பது நாம் நேசிக்கும் மனிதர்கள் தானே! எத்தனை மனவருத்தங்கள் இருந்தாலும் கடைசியில் நாம் தோள் சாய்வது அவர்களிடம் தானே!  அப்படியான தன் கணவன் இன்று காட்டியிருக்கும் வெறுமை சுபாவை அசைத்துப் பார்த்தது.

‘நாம தான் தப்பு பண்ணிட்டோமோ? அன்னைக்கே அவ புடவை விஷயத்தை மன்னி குடைஞ்சு குடைஞ்சு கேட்கறச்சே கோகுல் கொடுத்த புடவையை கட்டுண்டு வந்தான்னு சொல்லியிருக்கப் பிடாதோ? ‘உன் பையனை அதுக்குள்ள கைக்குள்ள போட்டுண்டா உன் நாட்டுப்பொண்ணு’னு என்னை கிளப்பி விட்டு இன்னிக்கு வரையிலும் என் குடும்ப நிம்மதியை கெடுத்து மன்னி குளிர் காயாறாளா? என்னால நம்பவே முடியலையே! ‘ என்று சுபா மனதிற்குள் குழப்பிக் கொண்டிருந்தார்.

ஆதிநாதன் அதன் பின் வந்த நாட்களில் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருந்தார். வளைகாப்பு சீமந்ததிற்கு அழைக்கச் செல்லும் போது மரியாதைக்கு மங்களம் வீடு செல்ல வேண்டி வந்தது.

“எங்க நாட்டுப்பொண்ணுக்கு சீமந்தம் பண்றோம். எல்லாரும் வரணும்.” என்று மரியாதைக்கு அழைக்க,

“உன் பையனுக்குன்னு சொல்லுங்கோ. பையன் தான் முதல்ல.” என்று பைத்தியம் போல அவர் பேச,

“சபைல உக்காண்டு சீமந்தம் பண்ணிக்க போறது அவா ரெண்டு பேரும் தான். பிள்ளையாண்டு இருக்கிறது என் நாட்டுப்பொண்ணு தானே! அவ எனக்கு பொண்ணு மாதிரி.” என்று முகத்தில் அடித்தது போல கூறி விட்டார் ஆதிநாதன்.

அவரின் பேச்சில் மங்களத்தின் முகம் விழுந்து விட்டது.

இப்படியும் அப்படியுமாக சீமந்தந்தின் முதல் நாள் உதகசாந்தி நடந்து கொண்டிருந்தது.

சந்தானலஷ்மி பாட்டியின் கண்களில் நீர்க்கோலம். தன் பேத்தியின் அழகு முகத்தை பார்த்தவருக்கு தான் மகன் இதனைப் பார்க்கக் கொடுத்து வைக்காமல் போனானே என்று பெற்ற மனம் வெதும்பியது.

கலச ஜலத்தை அவள் மீது ஊற்றி உதகசாந்தி முடிந்ததும் உடை மாற்ற அவளது அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள் ஆருத்ரா.

மீரா அவளது துணைக்கு வந்தவள் ஈரப் புடவையை வாங்கி ஓரமாக போட்டுவிட்டு தோழியின் முகத்தையும் தலை முடியையும் நன்றாக துடைத்து விட, அவள் கைகளை பற்றிக்கொண்டு,

“பாட்டி ஊருக்கு நாளைக்கு சாயங்காலம் கிளம்பலாம்ன்னு சொல்றாங்க மீரா. இவர் எதுவுமே பேசாம நிக்கறார். நான் வேணா அப்பா கிட்ட பேசிப் பார்க்கவா?” என்று குழந்தை போல தவிப்புடன் வினவினாள் ஆருத்ரா.

“இங்க பாரு ஆரும்மா, இப்ப நீ ஊருக்கு போ. பாட்டி கூட இரு வாரம் இருந்துட்டு கூட அண்ணாவை கூட்டிட்டு வர சொல்லி போன் பண்ணு. இப்பவே போக மாட்டேன்னு அடம் பிடிக்க நீ குழந்தை இல்ல டா.” என்று பொறுமையாகக் கூறினாள்.

“நீ சொல்றது புரியுது. ஆனா ஊருக்கு போனதுக்கு அப்பறம் கூட்டிட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டா நான் என்ன பண்றது?” என்று கண்களில் நீர் கோர்க்க அவள் கேட்டபோது மீராவின் இதயம் தோழிக்காகத் துடித்தது.

“நீ அங்க போயிட்டு கேளு. அவங்க ஒதுக்கலன்னா உனக்காக நான் சண்டை போடுறேன். சரியா?” என்று முகம் வழித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஆருத்ரா புடவை மாற்றி சபைக்கு சென்று விட மீராவின் எண்ணமெல்லாம் இத்தனை தூரம் சாஸ்திரம் பார்க்கும் மனிதர்கள் அவளது மனதை பார்க்க மறுப்பது ஏன் என்று புரியாது அமர்ந்திருந்தாள்.

மறுநாள் அதிகாலையில் வளைகாப்பு. இரவு நன்றாக தூங்கி எழும்படி பாட்டி அவளது கன்னத்தை வருடிக் கொடுக்க,

புன்னகையுடன் படுக்கைக்கு சென்று கண்களை மூடிக்கொண்டாள்.

மறுநாள் நிகழ்வுக்கு யாரையோ சரிபார்க்க சென்றிருந்த கோகுல் மனைவி தூங்குவதை பார்த்து,

“சீக்கிரம் வந்து உன்னோட பேசிட்டு இருக்கணும்னு நினைச்சேன் ருத்தும்மா. கேட்டரிங் ஆள் சொதப்பிட்டான். போய் பார்த்து எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு வர்றேன். நீ தூங்கிட்டியே!” என்று அவள் அருகே படுத்துக் கொண்டு அவள் நெற்றியில் செல்லமாக முட்டினான்.

அப்பொழுது வயிற்றில் குழந்தையின் அசைவு அவனுக்கு தெரியவே,

“அட குட்டி நீங்க முழிச்சு தான் இருக்கீங்களா?  அம்மா தான் அப்பா வற்றத்துகுள்ள தூங்கிட்டாளா? நாளைக்கு நீங்க அம்மா கூட கொள்ளு பாட்டி வீட்டுக்கு போயிடுவீங்க. அப்பா சீக்கிரமே உங்களை பார்க்க வருவேன். அம்மாவை ரொம்ப உதைக்காம இருங்க.” என்று வயிற்றில் வருடிக் கொண்டே பேசினான்.

அவனது தொடுகையில் கண் விழித்தவள் வாகாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டு,

“நாளைக்கு ஊருக்கு போறேன். சீக்கிரமே என்னை கூட்டிட்டு வந்துடணும்.”என்று குழறலாக கூறிவிட்டு கண்ணயர,

‘இது கூட நல்ல ஐடியா தான்’ என்று எண்ணிக் கொண்டான்.

ஏனெனில் ஒரு வாரமாக அன்னையிடம் இதே விஷயத்துக்கு அவன் மல்லுக்கு நிற்பது யாருக்கும் தெரியாது.

அவன் ஆருத்ரா அவனுடனே இருக்க வேண்டும் என்று சொல்ல, சபாவோ சாஸ்திரம் சம்பிரதாயம், வழக்கம் என்று அவனை ஒரு வழியாக்கினார். குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமென்றால் தான் சொல்வதை கேட்கும்படி அழுத்தமாக அவர் உரைத்ததால் வேறு பேசாமல் விலகினான்.

உங்கள் நல்லதிற்காக தான் சொல்கிறோம் என்று பெரியவர்கள் அழுத்தம் கொடுத்து பேசும்போது நம்மை அறியாமல் மனதில் சிறு பயம் வந்து புகுந்து கொள்கிறது. அவர்கள் இதையெல்லாம் ஏற்கனவே பார்த்தவர்கள். அவர்கள் பேச்சை மீறி செய்து நாளை ஏதேனும் தவறு நடந்துவிட்டால் நம்மை நாமே மன்னிக்க முடியாது போய்விடும் என்ற எண்ணம் தான் இன்று வரையிலும் பல வீடுகளில் பெரியவர்கள் சொல்வதை பொறுத்து போகும் பிள்ளைகளின் மனநிலை.

கோகுல் மனதிலும் அதே போல எண்ணம் வந்துவிட, ஆருத்ராவை சமாதானம் செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான். பாட்டி வீட்டிற்கு தானே செல்கிறாள், சில நாட்களில் சமாதானம் ஆகி விடுவாள் என்று சாதாரணமாக எடை போட்டு விட்டான்.

ஆனால் பெற்றோரை இழந்த, உடன்பிறந்தவர்களும் இல்லாத, வயது முதிர்ந்த பாட்டியிடம் இருப்பதை விட, தன் புகுந்த வீட்டில், தன் மாமியார் மாமனாருக்கு மத்தியில், தன் கணவனுடன் இருக்கும் பாதுகாப்பை ஆருத்ரா வேண்டினாள் என்பதை புரிந்து கொள்ளாது போனான் கோகுல்.

அவன் செய்த இந்த சிறு பிழை அவனது வாழ்வில் புயலை வீச வைக்கப் போகிறது என்று அறியாது மனைவியை அணைத்து கண்ணயர்ந்தான் .

14 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 22”

  1. Kalidevi

    kandipa inga iruntha aaru ku nallathu avanga vayasu aanavanga tedirnu vali vantha ena pana mudium erkanave avaluku anga pidikala vera ithula ppadi solli vai adacha ena panrathu ithunala aaru gokul ku prachanai vara kudathu

  2. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 22)

    நானும் முதல்ல இருந்து இதையேத்தான் சொல்லிட்டிருக்கேன். எனக்கு புரியறது கூட கோகுல் கிருஷ்ணா ஃபேமிலிக்கு புரியலை. அவ பாட்டிக்க வீட்டுக்கு போக பயப்பட காரணம். அங்கப்போனா, யாரும் இல்லாம தனியா இருக்கணும். தவிர, ஆத்திர அவசரத்துக்கு கூட எண்பது வயசு பாட்டியால என்ன பண்ணிட முடியும்ங்கற சந்தேகம் தான் காரணம்.
    அவளோடது நியாயமான பயம் தான். தவிர, பிரசவ நேரத்துல புருசன் பக்கத்துல இருக்கணும்ன்னு நினைக்கிறது ஒவ்வொரு கன்ஸீவ்வான பொண்ணோட எதிர்பார்ப்பு இல்லையா.
    ஆனா, அதை இந்த புருசன்காரன்ல இருந்து
    மாமியா, மாமனார், பாட்டி யாருமே புரிஞ்சுக்க மாங்டேங்குறாளே அது ஏன்….?
    இப்ப ஆரு என்ன செய்வா..?

    😯😯😯
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    Aaru ku patti nallathuku than hostel ah serthanga nu moolai ku purinchalum ennaku thevai ah na nerathula anbu ah ivanga kudukala apadinu ippo varaikkum oru varutham iruku atha ava mathikka vum illa athae pola gokul vishyathula yum nadathudumo nu than thonuthu gokul kum ava kooda vae irukanum.aasai irundhalum kozhandhai ku nallathu nu onnu solli yae avan vai ah adachitangala ah la aana atha ava accept pannipa nu thonaliyae

  4. Avatar

    சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் மனிதன் அவனவன் செளகரியத்துக்காக உருவாக்கனது ஆரு மனச புரிஞ்சிக்காம கோகுல் முட்டாள்தனமாக நடந்துக்கறான்

  5. Avatar

    பாவம் அங்க போனா பாட்டி வயசானவ, இவ தனியா இருக்கணும்னு பயப்படறா, அவ மனச புரிஞ்சுக்காம சாஸ்திரம், சம்பிரதாயம்னுண்டு, பாண்டிய இங்க வரவழைச்சுக்கலாமே.

  6. Avatar

    எல்லாரும் சாஸ்திரம் சம்பிரதாயங்களை பாக்கறா … அவளோட மனநிலைய பார்க்கலை

  7. Avatar

    என்ன இப்படி எங்களை பயமுறுத்துகிறீர்கள்.கெடுதலாக எதையும் சொல்லி விடாதீர்கள்

  8. Avatar

    சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் மனுஷனால உருவாக்கப்பட்டது தான், அதை அதே மனிதனுக்காக மாற்றி வைப்பதில் எந்த தவறும் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *