Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 24

மனம் உன்னாலே பூப்பூக்குதே 24

பூ 24

இரண்டு நாட்களில் பாட்டி வீட்டில் இருந்து கிளம்பி விட வேண்டும் என்று எண்ணிய ஆருத்ராவுக்கு எங்கு செல்வது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

அவர்கள் திருச்சி வந்து சேர்வதற்கு முன்பாகவே ஆதிநாதன் மருமகளை அழைத்து பயணம் பற்றி விசாரித்ததோடு கிளம்பும் நேரத்தில் மகனை வெளியே வரக்கூடாது என்று தன் மனைவி கூறியதற்காக மிகவும் வருந்திருந்தார். அவளை மனதில் எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவளுக்கு ஒரு வேளை திருச்சியில் இருக்க சிரமமாக இருந்தால் தன்னை அழைக்குமாறும் தான் வந்து மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து விடுவதாகவும் அவர் கூறிய போது அவள் கண்களில் கண்ணீர் அரும்பியது.

வீட்டிற்கு வந்ததும் பாட்டி கூறியது போலவே வெண்ணீர் வைத்து அவளது காலை அதில் அமர்த்தி சற்று நேரத்திற்கு காலில் இருந்த வீக்கம் வடிந்துவிட்டது. ஆனாலும் வலைதளங்களின் உதவியோடு இனி என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை ஆராயத் தொடங்கினால் ஆருத்ரா.

அதன் விளைவாக பல பெண்களும் தங்களுடைய முதல் பிரசவத்தைப் பற்றி பகிர்ந்த பதிவுகளை பார்க்க நேர்ந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். ஒருவர் போல மற்றவருக்கு அமையும் என்று சொல்லிவிட முடியாது.

பெண் உடல் என்பது அவளது தனிப்பட்ட உடற்கூற்றின் வெளிப்பாடாகவும் அவளுக்குள் உற்பத்தியாகும் ஹார்மோன்களின் செயல்பாட்டால் மாறுபடுவதாகவும் இருக்கும். அதை இந்த சூழலில் ஆருத்ரா உணர்ந்து கொள்ளவில்லை.

பலரும் தங்களுக்கு கடைசி நேரத்தில் சிரமம் ஏற்பட்டதாகவும், குழந்தையை அறுவை சிகிச்சை மூலமாகவே இவ்வுலகிற்கு கொண்டு வந்ததாகவும் எழுதி இருக்க, பலரோ தங்களுக்கு சுகப்பிரசவம் தான் என்றும் ஆனால் 10 மணி நேரம் 12 மணி நேரம் வலியால் துடித்து மிகவும் சிரமப்பட்டு குழந்தையை கையில் ஏந்தியதாகவும் எழுதி இருப்பதை படிக்க படிக்க ஆருத்ராவின் மனதில் இயல்பான முதல் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரசவ பயம் நெஞ்சை கவ்வியது.

பாட்டியிடம் அமர்ந்திருக்கும் போது சாதாரணமாக இதைப் பற்றி அவள் பேச முயல பாட்டியோ “கண்டதையும் படிக்காத. சாமி பாட்டு கேளு. ஸ்லோகம் சொல்லு. மனச அமைதியா வச்சுக்கோ. நல்லதா கேளு. கோவில்ல கதாகாலட்சேபம் நடக்குது அதை போய் வேணா பாத்துட்டு வா. அந்த தகர டப்பாவை தூக்கி போடு” என்று சட்டென்று கூறிவிட்டார்.

தன் மனதில் இருந்த பயத்தை அவள் வெளிப்படுத்த இருந்த ஒரே உறவான பாட்டியும் அதனை புரிந்து கொள்ளவில்லை என்று மேலும் துவண்டு போனாள்.

அடுத்த நாள் மதியம் வரையிலுமே கோகுல கிருஷ்ணன் அவளை கைபேசியில் அழைக்காமல் போயிருக்க அவள் மனது விம்மி துடித்தது. வெளியே வந்து தன்னை வழி அனுப்பவில்லை அதற்கு கூட அவனது அன்னை கூறிய சாஸ்திர சம்பிரதாயம் காரணமாக இருக்கலாம் ஆனால் தன்னை அழைத்து தான் நன்றாக வந்து சேர்ந்தோமோ என்ற நலத்தை கூட விசாரிக்காத அவனின் போக்கு அவள் மனதை மேலும் நோகடித்தது.

மாலை 3 மணி அளவில் அவன் அவளை கைபேசியில் அழைத்த போது ஒரு நிமிடம் மனதிற்குள் பரவசம் எழுந்தாலும் அடுத்த நொடியே நேற்று அனுப்பியவளை இன்று விசாரிக்கும் விசாரிக்க அழைக்கும் அவனின் பாங்கு பிடிக்காமல் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாள்.

மூன்று நான்கு முறை சில நிமிட இடைவெளியில் அழைத்தவன் அவள் எடுக்காது போகவே பாட்டியின் கைபேசிக்கு அழைத்தான்.

பாட்டியின் கைபேசி ஒலி கேட்டவுடனே அமைதியாக கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள். பாட்டி அழைப்பை ஏற்றது அவள் காதுகளில் நன்றாகவே விழுந்தது. ஏதோ பேசியபடி தன்னுடைய அறை நோக்கி பாட்டி வருவதை கவனித்துக்கொண்டு இருந்தாலும் கண்களை திறக்காமல் அமைதியாக படுத்திருந்தாள்.

அறை வாயிலுக்கு வந்தவர் பேத்தி கண்ணுறங்குவதாக எண்ணி, “அவ தூங்கறாப்பா. நேத்து கார்ல ரொம்ப நேரம் உட்கார்ந்து வந்தது அவளுக்கு கால் எல்லாம் வீங்கி போயிடுத்து. ஏற்கனவே ரெண்டு மூணு நாளா மூச்சு ரொம்ப வாங்கறா. அதுதான் ரொம்ப சோர்ந்து போயிட்டா போல. போன் அடிக்கிற சத்தம் கூட அவளுக்கு கேட்டிருக்காது. நல்லா தூங்குறா.” என்று அவனிடம் பதில் பேசிக்கொண்டே திருப்பிச் செல்வது அவள் காதுகளில் நன்றாக விழுந்தாலும் கண் திறந்து பாட்டியிடமிருந்து கைப்பேசியை வாங்கி பேசவோ அல்லது மீண்டும் கோகுலே அழைக்கும் எண்ணத்திலோ ஆருத்ரா இல்லை.

அவள் இந்த திருமணத்தை எந்த நோக்குடன் செய்து கொண்டாள் என்பது இந்த நிமிடம் வரை உலகில் அவள் மட்டுமே அறிந்த ரகசியமாகும். மனம் தான் மிகவும் ஆசைப்பட்டு செய்த ஒரு விஷயத்தை இன்று ரணப்பட்டு கிடப்பதை எண்ணி தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டது.

மூன்று நாட்கள் அப்படியும் இப்படியும் ஆக நெட்டி தள்ளினாள். அவளை விட பாட்டி தான் மிகவும் சோர்ந்து போனார்.

ஏற்கனவே நடமாட்டம் குறைந்து இருந்தவர் பேத்தியின் வருகையினால் நடமாட வேண்டிய கட்டாயத்தில் அங்கும் இங்கும் வீட்டினுள் நடந்தபடியே இருந்தார். அவள் தூங்குவது அவளுக்கு உணவு கொடுப்பது மாத்திரை எடுத்துக் கொண்டாளா என்ன கவனிப்பது என்று அவள் எவ்வளவோ மறுத்தும் அவள் மீது அக்கறை காட்டுகிறேன் என்று இன்னுமே தன் உடல் நிலையை கெடுத்துக் கொண்டார்.

மூன்றாம் நாள் மாலை வாயிலில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ராவுக்கு ஏனோ மனமெல்லாம் கசந்து வழிந்தது. கோகுல கிருஷ்ணனின் எந்த அழைப்பையும் அவள் ஏற்கவில்லை, பாட்டியின் கைபேசிக்கு அவன் அழைக்கும் போதெல்லாம் கண்களை மூடிக்கொண்டும் அல்லது குளியலறை சென்றும் அதனை தவிர்த்தபடியே இருந்தாள்.

இப்படி எத்தனை நாட்கள் கண்ணாமூச்சி விளையாட முடியும்? இந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. யோசித்து விட்டு வீட்டிற்குள் திரும்பியவள் பாட்டி சற்று தள்ளாட்டமாக நடந்து வருவதை கண்டு பயந்து போனாள்.

வேகமாக பக்கத்து வீட்டில் இருக்கும் மாமாவுக்கு கைபேசியில் அழைத்ததும் அவர் அந்த பகுதியில் இருக்கும் மருத்துவரை உடனடியாக அணுகி வீட்டிற்கு வர வைத்தார்.

பாட்டிக்கு சர்க்கரையின் அளவு மிகவும் கூடி இருப்பதாகவும், இதே நிலை நீடித்தால் அவர் உடல்நிலை மிகவும் சீர்கெட்டு விடும் என்றும் போதிய உணவும் ஓய்வும் அவருக்கு தேவை என்று சொல்லியவர். நிறைமாதமாக நிற்கும் ஆருத்ராவை ஒரு பார்வை பார்த்து,

“நீங்கதான் அவங்கள கவனிச்சுக்கணும் போல இருக்குமா. கவனமா இருங்க. என் நம்பர் வச்சுக்கோங்க. எனி டைம் கால் பண்ணுங்க. பத்து நிமிஷத்துல வந்துடுவேன்.” என்று அவர் கூறிய போது நிம்மதியாக இருந்தாலும் அதற்குப்பின் யோசித்தபோது அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்பது அவளுக்கு உறைத்தது.

தனக்கு பிரசவ வலி எடுக்கும் போது ஒருவேளை பாட்டிக்கும் உடல்நலம் இல்லாமல் போனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் தான் உதவி கேட்க வேண்டும். இன்று உதவி கேட்பதற்கு தான் எத்தனை தயங்கினோம் நாளை இது போன்ற சூழல் உருவானால் என்ன செய்வது என்று யோசித்தபோது ஏற்கனவே இருந்த பயங்கள் பேய்களாக மாறி அவள் மனதை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றலாம். ஆனால் அந்த சூழ்நிலையில், அந்த மனநிலையில், யாரும் இல்லாத தனிமையோ, ஆதரவாக இருக்க வேண்டியவர்கள் இல்லை என்ற வருத்தமோ, எந்த மாதிரியான எண்ணங்களை கொடுக்கும் என்று மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

காலை எழுந்த உடனேயே முடிவாக பாட்டியை அமர்த்தி தானே வீட்டில் இருந்த விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தாள். ஆனால் பழக்கம் இல்லாத வேலையும் ஏற்கனவே சோர்வுற்று இருந்த மனமும் உடலும் அவளை அத்தனை எளிதாக அதனை செய்ய விடவில்லை.

‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது போல செய்து பழகிய வேலைகள் எளிதாக எந்த சூழலிலும் கை வந்துவிடும். ஆனால் என்றோ செய்யும் பழக்கமற்ற வேலைகள் நமக்கு முக்கியமான நேரத்தில் கை வராமல் சொதப்புவதோடு நம்மை பெரும் சங்கடத்திற்கும் ஆளாக்கிவிடும்.

வீட்டு வேலைக்கும் சமையலுக்கும் ஆள் இருந்தாலும் பாட்டி அவ்வப்போது அவளுக்கு பழங்கள் கொடுப்பது பழச்சாறு கொடுப்பது ஏதாவது புதிதாக சமைத்து தருகிறேன் என்று சமையலறையில் உருட்டுவது என்று மூன்று நாட்களாக பேத்திய கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்து கொண்டிருந்தவர் முதல் நாள் முடியாமல் படுத்து விட, அந்த வேலையை பேத்தி எடுத்துக் கொண்டு பாட்டிக்கு மருந்து தருகிறேன், அவருக்கு பத்திய உணவு சமைக்கிறேன் என்று சமையலறையை உருட்டினாள்.

அவளுக்கே மதியத்திற்கு மேல் இதெல்லாம் சரிவரும் என்று தோன்றவில்லை .தான் இங்கே இருந்து அவரையும் சிரமப்படுத்தி தானும் பயத்துக்குள்ளாகி சூழ்நிலையை இன்னும் மோசமாக்கிக் கொள்ளாமல் அவர் உடல் நலனை காப்பதோடு தானும் நல்லபடியாக பிள்ளை பெற்றெடுக்க சென்னைக்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் உறுதியானது.

எந்த ஒரு பயமும் ஆரம்பத்தில் ஒரு உறுதியை எடுக்க வைக்கும். சூழ்நிலைகள் மாறும் போது வெளிப்பார்வைக்கு இதை சமாளித்து விடலாம், இப்படி மாற்றிக் கொள்ளலாம், இதை நாமே சரி படுத்திக் கொள்ளலாம் என்று மனதை நாம் சமாதானம் செய்து வைத்தாலும்…

முதலில் எடுத்த உறுதியிலேயே அந்த மனம் தொங்கிக் கொண்டிருக்கும். ஏதோ ஒரு சூழ்நிலை மாற்றத்தில் நாம் சமாளிக்க தடுமாறும் போதெல்லாம் ‘நான் தான் சொன்னேன் இதையே செய்வோம்’ என்று மனம் குரங்காக முதலில் எடுத்த உறுதியிலேயே பற்றிக்கொண்டு பாடாய்படுத்தும்.

அதனால் தானோ என்னவோ ‘மனிதனின் மனம் குரங்கு’ என்று சொன்னார்களோ பெரியவர்கள்!

மீண்டும் சென்னை சென்று விட வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் உதித்து விட எங்கே செல்வதென்று சிந்திக்க தொடங்கினாள்.

மாமனார் அழைத்தார் என்று புகுந்த வீட்டுக்கு சென்றுவிட அவள் மனம் இடம் தரவில்லை. அதே நேரம் மாமனாரின் அறிவுரைப்படி இடம் வாங்கி வீடு கட்ட தொடங்கியதில் வீட்டின் கட்டுமானம் முழு வடிவம் பெற்று இருந்தாலும் இன்னும் பூச்சு வேலைகள்,உள் வேலைகள், மின்சார இணைப்பென்று பல விஷயங்கள் பாக்கி இருந்தது.

தன் தோழியான மீராவோ இன்னும் பெற்றோரோடு தான் இருக்கிறாள். அவர்கள் வீட்டில் சென்று தங்குவது சாத்தியமில்லை. கேத்தி ஆருத்ரா குடியிருந்த பழைய வீட்டில் தான் தற்போது இருக்கிறாள் அங்கே சென்று வேண்டுமானால் தங்கலாம். ஆனால் அது சரியான முடிவா என்ற கேள்விக்கு குழப்பம் தான் பதிலாக கிடைத்தது.

ஒரு நிமிடம் மனம் துவண்டு போய் தனக்கென்று ஒரு நிழல் இல்லாத ஆதரவற்ற சூழல் சூழ்ந்து கொண்டது போல அவள் மனம் வெகுவாக வலியை உணர்ந்தது.

பெற்றவர்கள் இருந்திருந்தால் தான் இப்படி துடிக்கும்படி விட்டிருப்பார்களா? என்ற கேள்வி நெஞ்சே வெடித்து விடும்படி அழுகையோடு வெளிவந்தது.

அவளின் இத்தனை மன சஞ்சலத்திற்கும் காரணம் கர்ப்ப காலத்தில் தாயின் அரவணைப்பும் தந்தையின் அக்கறையும் இல்லாது தவிப்பது தான். அதை கணவனின் அருகாமையில் உணர்ந்து கொண்டு தன்னை சமாளித்துக் கொண்டிருந்த அவளை மீண்டும் தனியே அனுப்பி அவளது தைரியத்தை அசைத்து பார்த்து விட்டனர்.

தனியாக ஹாஸ்டலில் வளர்ந்து, படித்து, வேலைக்கென தனியே சென்று தங்கி, அத்தனை சாதனைகளையும் செய்தவளுக்கு பிள்ளை பெற்றுக் கொள்வது பெரிய விஷயம் இல்லை என்று மற்றவர்களுக்கு தோன்றலாம்.

ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவர் தைரியமாக இருந்து விட முடியாது. சில நேரங்களில் சாய்ந்து கொள்ள தோளும், பிடித்துக் கொள்ள விரலும் தேவையாக இருக்கும். அது தான் விரும்பும் நபரிடம் இருந்து கிடைக்காத போது தைரியங்கள் எல்லாம் பஞ்சாய் பறந்து விடும்.

ஆருத்ரா அந்த நிலையில்தான் அமர்ந்திருந்தாள். தாயின் மடி அவளுக்கு தேவையாக இருந்தது. பாட்டியின் மடியில் சென்று படுத்துக் கொண்ட பொழுது அவள் தலையை கோதி விட்டவர்,

“பாட்டியால உன்ன பாத்துக்க முடியலையேடா கண்ணு” என்று மனதில் இருந்த வருத்தத்தை வெளியிட்ட போது, தானும் சிரமப்பட்டு பாட்டியையும் சிரமப்படுத்துவதோடு அவர் மனம் வருத்தம் கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டோமே என்று அனைத்தையும் தன் தலையிலேயே போட்டுக் கொண்டாள்.

எழுந்து அவரது கைகளை பற்றி கொண்டவளாக, “இதுக்குதான் நான் சென்னையிலேயே இருக்கலாம்னு நெனச்சேன். நீங்கதான் நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு சொன்னீங்க. நீங்க ஆசைப்பட்டு கூப்பிடும் போது வரமாட்டேன்னு சொல்ல கூடாதுன்னு கிளம்பி வந்தேன். வந்ததுக்கு நாலு நாள் உங்க கையால சாப்பிட்டு, உங்க மடியில படுத்து, நான் சந்தோஷமா இருந்துட்டேன். உங்களுக்கும் உடம்புக்கு முடியல நான் இருந்து உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன். அப்பா சென்னைக்கு வேணும்னாலும் வந்து இருன்னு போன்ல சொன்னாரு. நான் ஆபீஸ் வேலைய பாத்துன்டு அங்கேயே இருக்கட்டுமா? குழந்தை பிறக்கிற நேரத்துல நீங்க அங்க வரீங்களா?” என்று பொறுமையாக வினாவினாள்.

“என் பேத்திக்கு பிள்ளை பேரு பார்க்க முடியாத அளவுக்கு கைலாகாமல் போயிடுத்தே எனக்கு. அவ்வளவு ஜம்பமா அன்னைக்கு கூட்டிட்டு வந்துட்டு, இப்போ உன்னை திருப்பி அனுப்பினால் எல்லாரும் சிரிக்க மாட்டாளா?” என்று வருத்தத்துடன் அவர் அவளைப் பார்க்க,

“சிரிக்கிறவா உங்களையும் என்னையும் உடம்புக்கு முடியாத போது வந்து பார்த்துக்க போறதில்ல. அப்புறம் அவாளை பத்தி என்ன யோசனை? நான் இன்னைக்கு நைட் சென்னை கிளம்புறேன் பாட்டி. நீங்க இந்த ஒரு மாசம் நல்லா ரெஸ்ட் எடுத்து உடம்பை கவனிங்கோ.”என்று கூறிவிட்டு எழுந்து சென்றாள்.

போகும் பேத்தியை மனத்தாங்கலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சந்தான லட்சுமி.

தன்னுடல் சோர்வுறுகிறது. இதற்குமே பேத்தியின் கடமையை தன்னால் தள்ளி வைக்க முடியாது என்றுதான் அவசரமாக அவளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். இன்று அவளுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் எனும்போது தன்னால் முடியவில்லை என்ற இயலாமை அம்முதிய பெண்மணியை மன வருத்தத்திற்கு ஆளாக்கி இருந்தது.

‘ஆனால் பிடிவாதமாக தானே பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அவர் எண்ணவில்லை. இருக்கும் சூழலை கெடுத்துக் கொண்டால் வயிற்றுப் பிள்ளைக்காரி நாளை சிரமத்திற்கு ஆளாகலாம் . அல்லது தன்னுடைய கொள்ளு பேரனோ பேத்தியோ பிறக்கும் சமயத்தில் அதை பார்க்க தான் இல்லாமல் கூட போகலாம். அது போன்றதொரு சூழ்நிலையை தன் பிடிவாதத்தால் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. இயன்ற வரையில் யாருக்கும் சிரமம் கொடுக்காத வாழ்வை வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்.’ என்று எண்ணியவர் தன் பேத்தியின் முடிவுக்கு எதிர்த்து எதுவும் சொல்லவில்லை.

மாலையில் தன் பயணப் பையுடன் கிளம்பிய பேத்தியை கண்டதும் அவர் கண்கள் கலங்கின.

“உன்னை பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு செய்ய முடியாம போயிடுத்து” என்றதும்,

“இதுக்கு மேலயும் நீங்க தான் செய்யணும்னு எதிர்பாத்தா நான் தான் மோசமானவ பாட்டி. உடம்ப பாத்துக்கோங்க.” என்று அனைத்து அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

எப்போதும் போல அவள் முத்தமிட்ட இடத்தை துடைத்துக் கொண்டவர் அவளுக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி அனுப்பி வைத்தார்.

வாடகை காரில் பேத்தி ஏறி கார் கண்ணில் இருந்து மறையும் வரை வாசலில் நின்று இருந்தவரை என்னவென்று கேட்டு வந்த அக்கம் பக்கத்தினருக்கு பதில் சொல்ல முடியாமல் சின்ன திணறலோடு,

“அவ ஆத்துக்காரர் அவள சென்னைக்கு வர சொல்லிட்டார்.” என்று மேம்போக்கான பதிலை கூறியவர் உள்ளே சென்றுவிட்டார்.

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் வீட்டு வாசலில் வந்து நின்ற கோகுலை கண்டதும் அவருக்கு திக்கென்று இருந்தது.

“என்னப்பா நீ இங்க வந்து நிக்குற?” என்று எடுத்தவுடன் அவனிடம் அவர் கேள்வி எழுப்ப அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மூன்று நாட்களாக மனைவி தன் அழைப்பை ஏற்காததால் கோபத்தில் இருக்கிறாள் என்று அவளை சமாதானம் செய்ய அவசரமாக சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்டு வந்தவனுக்கு வாசற்படியில் வைத்து அதிர்ச்சி காத்திருந்தது.

“என்ன பாட்டி என்ன சொல்ல வரீங்க?” என்று அவன் விழிக்க ஆருத்ரா அங்கிருந்து கிளம்பிச் சென்று இருப்பதை அவனுக்கு கூறியவர்

“உங்களிடம் சொல்லாமலா கிளம்பினா? உங்களுக்குள்ள என்ன நடக்கறது? என் பேத்திய சந்தோஷமா பாத்துப்பேள்ன்னு நம்பி தானே கல்யாணம் பண்ணி கொடுத்தேன். உங்க அம்மா ஒரு பக்கம் அவளை வார்த்தையால குத்துறா நீங்க அவளோட சந்தோஷமா தான் இருக்கீங்கன்னு நான் ஏதோ ஆறுதலா நெனச்சேன். உங்ககிட்ட கூட சொல்லாம கிளம்பி இருக்காளா குழந்தை? அய்யோ!” என்று பாட்டி பதறவுமே நிலைமையை புரிந்து கொண்டான்.

“அச்சோ பாட்டி அவ இங்க இருந்து கிளம்புனது எனக்கு தெரியும். அவளை கூட்டிட்டு போக தான் நான் வந்தேன். ஆனா வர வழியில லேட் ஆகவும் நீ எதிர்ல வா நான் உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன் வழியை மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு. சரி வந்ததும் வந்துட்டோம் உங்கள பாத்துட்டு போகலாம்ன்னு ஆத்துக்கு வந்தேன்.இதோ உங்க முன்னாடி அவளுக்கு போன் பண்ணி அவளை வெயிட் பண்ண சொல்றேன் பாருங்க” என்று பொறுமையாக கூறிவிட்டு தன் கைபேசி எடுத்தவன்,

அவர் கண் முன்னே ஆருத்ராவிடம் பேசுவது போல பேசிவிட்டு” இவ்வளவு தூரம் வந்துட்டு உங்கள பாக்காம போனா மரியாதையாக இருக்குமா? அதான் வந்தேன். என்ன பார்த்ததும் பயந்துட்டேளா?” என்று சமாதானம் செய்துவிட்டு

“அவ எனக்காக பைபாஸ் கிட்ட காத்துண்டு இருக்கா. நான் வரட்டுமா?” என்று சொல்லிவிட்டு விடைபெற்றான்.

பேத்திக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நம்பிய அம்மூதாட்டி பேரனை இன்முகமாக வழி அனுப்பி வைத்தார்.

சென்னையில் இருந்து அன்னையிடம் சண்டை போட்டுக்கொண்டு தங்களுடைய காரை எடுத்து திருச்சி கிளம்பி அதிகம் எங்கும் நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டு வந்திருந்தான் கோகுல கிருஷ்ணன். எப்படியாவது மனைவியை சமாதானப்படுத்தி விட வேண்டும் என்று அவன் எண்ணியிருக்க,

அவன் எண்ணத்தை பொய்யாக்கி அவளோ சென்னை கிளம்பி விட்டாஅ
ள் என்றதும் அவனால் எதுவும் யோசிக்க இயலவில்லை. ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பியவன் ஆற்றுப் பாலத்தின் மீது ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடுகின்ற காவிரி நீரை பார்த்தபடி நின்று விட்டான்.

இருள் கவிழ்ந்திருந்த வேளையில் நீரின் சலசலப்பும் சுற்றி இருக்கும் மின்னொளியால் நீரில் தெரியும் வெளிச்சக் கீற்றுக்களும் ஆளை நகர்த்த முயலும் வலுவான காற்றும் அவன் மனதை சமன்படுத்த முயற்சித்தது.

ஆனால் மனைவி எங்கே என்ற கேள்வி அவன் மனதைப் பிடித்து ஆட்ட எப்படியும் கைப்பேசியில் அழைத்தால் எடுக்க மாட்டாள் என்று தெரிந்தவனாக தன் தந்தைக்கு அழைத்தான்.

ஆருத்ரா அவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் சென்னை வருவதாக எதுவும் சொல்லவில்லை என்பதையும் அவர் மூலம் அறிந்து கொண்டவன் மலைப்புடன் அடுத்து மீராவுக்கு போன் செய்தான்.

அந்த நேரத்தில் அவனுடைய அழைப்பை எதிர்பார்த்து இருக்காது மீரா ஆருத்ராவுக்கு என்னவோ குழந்தை பிறந்து விட்டதோ என்று குழப்பத்தில் அழைப்பை ஏற்றவள் “சொல்லுங்க அண்ணா” என்றதும் கேட்க வேண்டிய கேள்விகளை கடகடவென கேட்டு வைத்தான்

ஆனால் எதிர் முனையில் அவன் எதிர்பார்த்த பதில் கிடைக்காமல் கோபமே பதிலாக வந்தது.

“என்ன பண்ணி வச்சிருக்கீங்க அண்ணா? அவ பேபி கன்ஃபார்ம் ஆன நாளில் இருந்து உங்க கூடவே தான் இருக்கணும் டெலிவரி டைம்ல இங்க உங்க பக்கத்துல தான் இருக்கணும்னு ஏதோ மந்திரம் சொன்ன மாதிரி சொல்லிக்கிட்டே இருந்தா. அப்படி சொன்னவளை ஊருக்கும் அனுப்பிவிட்டு போகிறப்ப வழியும் அனுப்பாமல் அதுக்கப்புறம் போன் பண்ணாம அவளை என்ன பாடு படுத்தி வச்சிருக்கீங்க” என்று கோபத்துடன் சண்டைக்கு வர,

“மா நான் செஞ்ச எந்த தப்பையும் நியாயப்படுத்த விரும்பல. என்னோட சூழ்நிலையை காரணம் ஆக்கி தப்பிக்கவும் நினைக்கல. எனக்கு இந்த நிமிஷம் என் பொண்டாட்டி எங்கன்னு தெரியணும். அவ்வளவுதான் உன்னால உதவ முடியுமா?” என்று கேட்கும்போதே அவன் குரல் மிகவும் கம்மி விட்டது.

இவனை திட்டியும் தான் என்னவாக போகிறது என்று சலித்துக் கொண்டவளாக மீரா அவளுக்கு தெரிந்த விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

“பாட்டிக்கு முன்ன போல உடம்பு சுகமா இல்ல. அவளை பார்த்துக்குறது சிரமம்னு அவளுக்கு நல்லாவே தெரிஞ்சது. அதனாலயும் போக மாட்டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தா. நான் தான் போயிட்டு போன் பண்ணு அண்ணா உன்ன வந்து பத்து நாள்ல எப்படியும் கூட்டிட்டு போயிடுவாருன்னு சமாதானம் பண்ணினேன்.இப்ப அவ உங்களுக்கும் போன் பண்ணல, உங்க அப்பாவுக்கும் சொல்லல, எனக்கும் போன் பண்ணல. எங்கேயோ போயிட்டானா நான் என்னென்ன நினைக்கிறது? இருங்க நான் வேணா கேத்தரினுக்கு கால் பண்ணி பார்க்கிறேன்.” என்று எரிச்சலுடன் கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் கைபேசியை  அணைத்தாள்.

தான் அவளிடம் அந்த ஒரு நாள் பேசாதது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்ந்து கொண்ட கோகுலகிருஷ்ணனுக்கு இத்தனை மாதங்களாக அவள் தன்னுடைய பயத்தை எடுத்துக் கூறியும் அவள் நிலையிலிருந்து எண்ணிப் பார்க்காத தனது முட்டாள் தனத்தை நொந்து கொண்டான்.

அன்னை கூறிய உங்களது நன்மைக்குத்தான் என்ற வார்த்தைக்கு அடிபணிந்திருக்கக் கூடாதோ என்று காலதாமதமாக அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போது அவனுடைய மனையாள் யாருமற்ற தனிமையில் இருட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

17 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 24”

  1. Avatar

    அச்சோ இந்த நிலைமைல அவள தனியா தவிக்க விட்டுட்டீங்களே,
    கோகுல் உனக்கு அறிவே இல்ல, இந்த சுபாவ நாலு அப்பு அப்பணும் இதால தான் வந்துது

  2. Avatar

    Aaru an blame panna maten aana pregnancy mood swings oda serthu ava iyal ba yosikira nilamai ah mathiduchi than sollanum.athae pola gokul avan nallavan than aana situation ku thanguthu avan react panra matran na ra varutham than practical ah yosichi pakka num la oru vayasana patti yaru help um illa ma epudi oru pregnant lady ah parthuka mudiyum nu

  3. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    ஜெயலட்சுமி கார்த்திக்
    (அத்தியாயம் – 24)

    உண்மை தான்..! எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவர் தைரியமாக இருந்து விட முடியாது. சில நேரங்களில் சாய்ந்து கொள்ள ஒரு தோளும், பிடித்துக்கொள்ள விரலும் தேவையாக இருக்கும். அதுவும் அது தான் விரும்பும் நபரிடம் இருந்து அத்தகைய பற்றுக்கள், ஆதரவுகள் கிடைக்காதபோது
    மனதிலிருந்த தைரியங்கள் பஞ்சாய் பறப்பதோடு, உடலும் மனதும் சோர்ந்து விடுகிறது.

    நல்லா கேளுங்க பாட்டி…! மூஞ்சிலயே காறித்துப்புங்க.
    தாய், தகப்பன் இல்லாத பொண்ணுன்னு தெரிஞ்சுத் தானே கட்டிக்கிட்டு வந்தாங்க.
    அம்மா, அப்பாவா இருந்து பார்த்துக்கலைன்னாலும்..
    அட்லீஸ்ட் சகமனுஷியா பார்த்திருக்கலாம் தானே..?
    போகட்டும் தன் குடும்பத்து மருமகளை கோயிலைக் கட்டி கும்பிடலைன்னாலும், தன் குடும்பத்து வாரிசை சுமக்குறவளை கொஞ்சம் சிரத்தையெடுத்துட்டாவது
    பார்த்திருக்கலாம் தானே..?
    அதை விட்டு வயசான பாட்டி
    கிட்ட பொறுப்பை தட்டி கழிக்கிறது எந்தவிதத்துல
    நியாயமோ தெரியலை…?
    வர வர மனுசத்தன்மையே இல்லாம போயிடுச்சு.

    பொண்டாட்டி கிளம்பி முழுக்க ஒரு நாளானப்பிறகு, இப்ப தேடி வரானா…? இப்ப தேடட்டும்.

    அநேகமா, ஆருத்ரா கேத்ரின் வீட்டுக்குத்தான் போயிருப்பாளோ என்னவோ..?
    😴😴😴
    CRVS (or) CRVS 2797

  4. Avatar

    இது எல்லாத்துக்கும் அந்த சுபா தான் காரணம். … கோகுல் உனக்கு அருமையான பொண்டாட்டி கிடைச்சும் விட்டுட்டு இப்ப தவிச்சு என்ன பலன்‌… அவளோட மனசு உடைச்சிட்டான்…

    1. Avatar

      ஏப்பா கோகுல் சாவகாசமாக வர்ற இப்போ மட்டும் எதுக்கு வந்த உங்கம்மா பேச்சை கேட்க வேண்டியதெதானே 🤨🤨ஆரு எங்க போனாளோ🙄

  5. Avatar

    தாய் தகப்பன் இல்லாது வளர்ந்த பெண்ணை தாயாக தாங்க வேண்டாம் அட்லீஸ்ட் அவளோட உணர்வுகள கொஞ்சமாவது உணர முற்ப்பட்டிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *