பூ 25
ஆற்றின் சலசலப்பு அவன் மனதின் சலசலப்புக்கு இணையாக ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் அவனை அழைத்த மீரா தங்கள் அலுவலக நண்பர்கள் யாரையும் அவள் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அழைத்தால் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பதற்றத்துடன் கூறினாள்.
வாழ்வே சூனியம் ஆனது போல உணர்ந்தான் கோகுல். அப்படியெல்லாம் மனைவி தன்னை விட்டுச் சென்று விட மாட்டாள் என்று மனம் அவனை தைரியம் கொள்ளச் சொன்னாலும் ஓரத்தில், ஒருவேளை அன்னையின் செயல்கள், தான் அவளின் ஆசையை புறக்கணித்தது, ஒரு நாள் முழுவதும் தொடர்பு கொள்ளாமல் இருந்தது என்று அவளை கோபத்தில் ஆழ்த்தி தன்னை வெறுத்துப் போக செய்திருக்குமோ?
இந்த நிமிடம் வரையிலும் மனைவி என்று மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த அவன் உள்ளம் அவள் தன்னை விட்டுப் போயிருந்தால் என்ற எண்ணம் பிறந்ததும் அவனை படபடக்க வைத்தது. காதலை தொலைத்த வலியை அவனுக்கு பரிசாக வழங்கியது.
ஒரு நொடியில் அதை உணர்ந்ததும், காதலா? இது எப்போதிலிருந்து? அன்று பானுவிடம் பேச அவளை அனுப்பி வைத்த போது தவறாக நினைப்பாளோ, வாழ்க்கை பறிபோகுமா என்று தானே உள்ளம் பதறியது? ஆனா இன்று ஏதோ உயிர் வலியாக கொல்லும் உணர்வுக்குப் பெயர் தான் காதலா?
தன் மனைவியை தான் நேசிப்பது அறிந்த ஒன்று தான் என்றாலும் அதன் அளவை இப்பொழுது தான் உணர்கிறான்.
கண்களை மூடி கடவுள் அனைவரையும் வேண்டிக்கொண்டவன் மூளையில் மணி அடிக்க, காரை எடுத்துக் கொண்டு காற்றை விட வேகமாக செல்லத் துவங்கினான்.
அங்கே மனம் நொந்து கண்கள் மூடிப் படுத்திருந்த ஆருத்ராவுக்கு தான் செய்திருக்கும் வேலையின் அளவு தெரியாமல் இல்லை. பின்விளைவுகள் புரியாமல் இல்லை. ஆனால் அவள் மனம் படும் பாட்டை யாருமே உணராத போது அவளுக்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.
கண்ணீர் வரவா வரவா என்று இமையோரம் எட்டிப் பார்க்க துடித்தது.
முயன்று அதனை அடக்கினாள். அவள் கண்ணீரில் கரைந்தால் பிள்ளைக்கு தான் வளர்ச்சி பாதிக்கும் என்று மனதை திடப் படுத்திக் கொள்ள முயன்றாள். கைக்கெட்டும் தொலைவில் கைபேசி கிடந்தது.
பாட்டி வீட்டை கடந்ததும் அதனை அணைத்து வைத்தாயிற்று. குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் தன்னை யாரும் தேடப் போவதில்லை. அதற்குள் ஏதாவது ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இரவு உணவு வாங்க கடைக்குச் செல்ல எண்ணி வாசலுக்கு வந்தாள்.
வாசலில் அவள் கணவன் காரில் சாய்ந்து நின்று அவள் வருவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை அந்த நேரம், அந்த இடத்தில் எதிர்பாராத ஆருத்ராவுக்கு மழுக்கென்று கண்களில் கண்ணீர் வெளியேறியது.
இத்தனை நேரம் இறுக்கிப் பிடித்திருந்த மனது சட்டென்று அவள் வசம் இழந்து அவனிடம் செல்ல துடித்தது. ஆனால் இறுக்கமாக வந்து அமர்ந்து கொண்டாள்.
மெல்ல அவளைத் தொடர்ந்து அந்த வீட்டினுள் நடந்து வந்த கோகுலுக்கு இதற்கு முன் அந்த இடத்தில் அவர்கள் இருவரும் கழித்த அழகான தருணங்கள் நினைவில் வந்து போனது.
ஆம் ஆருத்ரா ஜீயபுரத்தில் இருக்கும் அவளது பூர்வீக வீட்டில் தான் இருந்தாள்.
திருச்சியிலிருந்து கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தவளுக்கு உடனே சென்னையில் எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை ஏதாவது தீர்மானமான முடிவு எடுக்கும் வரை பாட்டிக்கு தொந்தரவு கொடுக்காமல் ஜீயபுரத்தில் இருந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இங்கே கிளம்பி வந்து விட்டாள்.
நான்கு நாட்கள் பாட்டியோடு சேர்ந்து இருப்பதால் அவருக்கு இன்னும் ஒன்றும் உடல் நலிவடைந்து விடாது தான். ஆனால் அவரை வருத்துகிறோம் என்ற அவளது எண்ணம் அவள் உடலை உருக்கி விடும். அவள் வருந்துவதை பார்த்து அவரும் தன் நலனை கெடுத்துக் கொள்வார் என்றேதான் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
ஆனால் கோகுல் அங்கு வருவான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனிடமிருந்து ஒளிந்து கொள்ளும் எண்ணமெல்லாம் அவளுக்கு இல்லை தான் ஒதுங்கி இருக்க நிழல் இல்லாமல் நிற்கிறோமோ என்று மனம் துடித்த போது தான் அன்னை தந்தை வாழ்ந்த வீட்டில் சென்று சில நாட்கள் இருந்தால் மனதிற்கு நிம்மதியாக இருக்குமே என்ற எண்ணம் பிறந்தது.
அவள் ஊஞ்சலில் அமர்ந்து சுவரை வெறுத்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்ட கோகுல் மனைவியின் தோள் மீது கை வைத்தான்.
இதுவரை ஆருத்ரா கோபம் கொண்டு அவன் பார்த்ததில்லை அவளது வருத்தம் அழுகையை பார்த்திருக்கிறான் அவன் அன்னை செய்யும் போது அவள் எரிச்சல் படுவதையும் பார்த்திருக்கிறான் ஆனால் இன்று அவளின் முழு கோபத்திற்கும் ஆளானவனாக அதனை கண்டதும் அவனுக்கே உள்ளே குளிர் எடுத்தது.
அவன் கை அவள் தோளில் பட்டவுடன் இடது கையால் சட்டென்று அவன் கையை தட்டி விட்டாள். தட்டிய வேகத்தில் ஊஞ்சலின் மரப்பலகையில் அவன் கை சென்று மோதியது. அது ஏற்படுத்திய வலியை விட தன் மனைவி தன்னை ஒதுக்குவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“ருத்தும்மா ப்ளீஸ் டா என்கிட்ட பேசு” என்று அவள் தாடையை தொட்டு முகத்தை தன்னை நோக்கி திருப்ப முயன்றான்.
ஊஞ்சலின் சங்கிலியை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
“என்ன பேசணும்? எதுக்கு பேசணும்?”என்று காட்டமாக அவள் கேட்டபோது என்ன பதில் சொல்வது என்று கோகுலுக்கு தெரியவில்லை.
“நீ என் மேல கோவமா இருக்க. எனக்கு தெரியும். நான் போன் பண்ணலன்னு தானே கோவப்படுற? அன்னைக்கு என்ன ஆச்சுன்னா?’ என்று அவன் அவளுக்கு விளக்கம் கொடுக்க முன்வந்தான்.
அவன் முகத்துக்கு நேரே கையை நீட்டி நிறுத்துமாறு சைகை செய்தாள்.
“நீங்க எங்க இங்க?” என்று ஒட்டுதல் இல்லாமல் அவள் கேட்டதும் அவன் நெஞ்சில் வலி பிறந்தது.
“என்ன இப்படி கேக்கற? மூணு நாளா நீ என் போனை எடுக்கவே இல்ல எப்படி இருக்கியோ என்னவோனு ஓடி வந்தேன்.”
“உங்களை யாரு கூப்பிட்டது? நீங்க வந்தது உங்க அம்மாவுக்கு தெரியுமா? சொல்லிட்டா வந்திங்க?”என்று நக்கலாக வினவினாள்.
“என்னம்மா இப்படி பேசற?”
“பேசாம என்ன செய்யறது? முதல் தடவை அவங்க என் மேல கோவப்பட்டது அந்த புடவைக்காக தான். அவங்க கொடுத்த புடவைய புடிக்கலனாலும் கட்டிக்கிட்டு போய் நின்றிருந்தா அன்னைக்கு அந்த பிரச்சனையே வந்து இருக்காது. நீங்கதான் வேற புடவை எடுத்துக் கொடுத்து கட்ட சொன்னீங்க அதுக்கு அவங்க திட்டினாங்க.
திட்டினதோட அன்னைக்கு அந்த பிரச்சனை முடிந்திருக்கும். நடுவில் வந்து நான் தான் கட்ட சொன்னேன் அப்படின்னு எல்லாத்தையும் உங்க தலையில போட்டுகிட்டதா நீங்க நினைச்சீங்க. ஆனா பெரியவங்க அப்படி பாக்க மாட்டாங்க நான் தான் உங்களை இப்படி பேச வச்சேன் நினைப்பாங்க.
சரி அவங்க என்னவோ நெனச்சிட்டு போகட்டும். அதுக்கப்புறம் வீட்ல நடந்த எதுவுமே நான் பெருசு படுத்தல. அவங்க என்கிட்ட பேசாததும் நான் அவங்க கிட்ட பேசாததும்னு என்ன நடந்திருந்தாலும் நான் உங்ககிட்ட ஒரு நாளும் வந்து கம்ப்ளைன்ட் பண்ணல.
அவங்க ஆரம்பத்துல இருந்தே சாஸ்திரம் சம்பிரதாயம் நாங்க ஆர்தடாக்ஸ் ஃபேமிலின்னு பேசிட்டு தான் இருக்காங்க. அதெல்லாம் எனக்கும் தெரியும். என்னோட சிந்தனைகள் வேற. என்னக்காவது அதை உங்க யார் மேலயாவது நான் திணிச்சிருக்கேனா?
சரி அவங்க தான் அன்னைக்கு கிளம்பும்போது நீங்க என்ன பார்த்து வழி அனுப்ப கூடாதுன்னு சொன்னாங்க. சாஸ்திரமாகவே இருக்கட்டும். நீங்க அதை ஃபாலோ பண்றவராவே இருந்துட்டு போங்க. எனக்கு அதுக்காக உங்க மேல கோவம் இல்லை.
முதல் நாளும் நடுராத்திரி வரைக்கும் காத்துகிட்டு இருந்தேன் நீங்க வீட்டுக்கு வரல. காலைல வளைகாப்பு சீமந்தம்னு ரொம்ப பிசி. அதுக்கப்புறம் என் கூட ஏதாவது பேசுறதுக்காகவாது ரூமுக்கு வருவீங்கன்னு நான் காத்துக்கிட்டு இருந்தேன். அப்பவும் வரல.
கிளம்பறதுக்கு முன்னாடி வாயைத் திறந்து நானே உள்ள வாங்கன்னு கூப்பிடுறேன், அப்பவும் நீங்க வரவே இல்லையே!
உங்க அம்மா ‘நேரம் ஆகுது அப்புறம் போன்ல பேசிக்கோ’ன்னு சொன்னதும் கம்முனு தான உட்கார்ந்து இருந்தீங்க?
அவ்வளவு தூரம் அம்மா பேச்சை கேட்கிறவரு, எதுக்கு முன்னாடி எனக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு அவங்ககிட்ட பேசினீங்க நான் கேட்டேனா உங்ககிட்ட?” என்று கோபமாக சண்டையிட்டாள்.
“நான் சொல்ல வர்றதை கேளு ப்ளீஸ் அம்மா சாஸ்திரம், சம்பிரதாயம், கர்ப்பமா இருக்குற பொண்ணு கிளம்பும்போது புருஷன் போய் வழி அனுப்ப கூடாது அப்படின்னு சொல்றாங்க. எந்த விஷயம் பேசினாலும் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன், குழந்தையுடைய நல்லதுக்கு தான் சொல்றேன், நல்லபடியா அவ பெத்தெடுத்து வர வேண்டாமா?அப்படின்னு கேட்கும் போது என் மனசுல நீயும் குழந்தையும் நல்லபடியா என்கிட்ட திரும்பி வந்தா போதும் அப்படின்னு மட்டும் தான் தோணுச்சு” என்று கண் கலங்க கூறினான்.
“திரும்பி வந்தா மட்டும் போதுமா? மனசுல சந்தோஷம், நிம்மதி, நம்ம புருஷன் நமக்கு இருக்காருங்கிற தைரியம். இது எதுவும் தேவையில்லையா? நான் என்ன உங்கள மலைய பெரட்டி போடுங்கன்னு கேட்டேனா? ஆரம்பத்துல இருந்து டெலிவரியை சென்னைல வச்சுக்கலாம் நான் உங்க கூடவே இருக்கேன்னு எவ்வளவு கேட்டேன்?
அப்ப எல்லாம் அப்புறம் பேசலாம், அப்ப பாக்கலாம், அப்படின்னு என் வாய அடைச்சீங்கல்ல. பாட்டி ‘நான் பாத்துக்குறேன்’னு சொன்னதும் ஈன்னு பல காமிச்சுட்டு அனுப்பி வச்சிட்டீங்க? அவங்க வயசை யோசிச்சு பாத்தீங்களா? ஒருவேளை அவங்களுக்கு உடம்பு முடியாம போயிருக்கும் போது எனக்கு வலி வந்தா எப்படி நான் ஆஸ்பத்திரிக்கு போவேன்னு ஏதாவது யோசனை வந்துச்சா உங்களுக்கு?
எனக்கு அப்பா அம்மா இல்லைன்னு தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? டெலிவரி நேரத்துல 80 வயசுக்கு மேல இருக்க பாட்டி பாத்துப்பாங்க அப்படின்னு எந்த நம்பிக்கையில அனுப்பி வச்சீங்க? அவங்களே கேட்டிருந்தாலும் உங்க அம்மாவே சொல்லி இருந்தாலும் ‘என் பொண்டாட்டிய நான் நல்லா பாத்துப்பேன் இங்கேயே இருக்கட்டும்’ என்று ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை சொன்னீங்களா?” என்று கூர்வாளாக ஒவ்வொரு வார்த்தையும் அவன் இதயத்தில் குத்துவது போலவே பேசினாள்.
“நான் சொன்னேன்மா. ஆனா தல பிரசவம் தாய் வீட்டில் நடக்கிறது தான் முறை. அவங்க பாட்டியே பார்த்துக்குறேன்னு சொல்லும்போது இல்ல நாங்க பார்த்துக்கிறோம்ன்னு சொன்னா தப்பா நினைப்பாங்க. அவங்களுக்கு மரியாதை கொடுக்கலன்னு நினைப்பாங்கன்னு அம்மாதான் சொன்னாங்க.” என்று அவசரமாக அவன் மறுத்தான்.
“அம்மா அம்மா அம்மா… எல்லாத்துக்கும் அம்மா. அப்புறம் எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி? என்னைக்காவது அவங்களா நானான்னு உங்கள நான் கேள்வி கேட்டு இருக்கேனா? சொல்லுங்க.” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.
“நீ இவ்வளவு கோவப்படுற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்னு தெரியல ருத்தும்மா.”
“நீங்க என்ன செஞ்சீங்கன்னு நான் கேட்கல. நீங்க என்ன செய்யலைன்னு நான் சொல்றேன் புரியுதா?”
அவன் அமைதியாக தலையசைக்க,
“என்ன புரிஞ்சது? என் வலி புரிஞ்சுதா? என் பயம் புரிஞ்சுதா? உங்க கிட்ட பாதுகாப்பு தேடி உங்களோடு ஒட்டிக்கிட்டே இருந்தேன் அது புரிஞ்சுதா? நீங்க இருக்கீங்க என்ன பாத்துப்பீங்கன்னு நம்பி இருந்தேனே அது புரிஞ்சுதா? சொல்லுங்க” என்று மேலும் சட்டையை பிடித்து உலுக்கியவள் அவன் மார்பிலேயே சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
“அழாதடா. இப்பவும் சொல்றேன் அம்மா சொன்னாங்களேன்னு நான் எதையும் செய்யல. உனக்கு நல்லது குழந்தைக்கு நல்லதுன்னு அவங்க சொன்னதை நம்பி மட்டும்தான் நான் செய்தேன். இதுக்கு ஏன்டா உனக்கு இவ்வளவு கோபம்? என்கிட்ட ஒரு வார்த்தை பேசி இருக்கலாம்.” என்று மன வருத்தத்துடன் அவன் கேட்க
“அதுக்குத்தானே உன்னை உள்ள வான்னு கூப்பிட்டேன் வந்தியா? சொல்லு வந்தியா?” என்று நெஞ்சில் சரமாரியாக குத்தினாள்.
“எங்க உள்ள வந்து உன்கிட்ட பேசினா உன்ன போக விட மாட்டேனோனு எனக்குள்ள பயம் இருந்துச்சு.” அவன் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் சட்டென்று கன்னத்தில் இறங்கிவிட்டது.
ஆருத்ராவுக்கு அவனிடம் கோபத்தை பிடித்து வைத்துக் கொள்ள விருப்பமில்லை தான். ஆனால் அவள் மனது இந்த சில நாட்களில் என்ன மாதிரியான ரண வேதனையை அனுபவித்தது என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆற்றாமை கோபத்தை விட முடியாமல் தவிக்க வைத்தது.
“நீ பாட்டி வீட்ல இருந்து கிளம்பனும்னு முடிவு பண்ணி இருந்தேயானா நேரா நம்ம வீட்டுக்கு வந்து இருக்கலாம் இல்லயா?” என்று உரிமையாக கேட்ட கணவனை முறைத்து விட்டு நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளியவளாக நகர்ந்து படுக்கையறை நோக்கி செல்லத் துவங்கினாள்.
“ஏய் ருத்தும்மா நில்லு” என்று அவள் பின்னோடு ஓடியவன் அவள் கையைப் பற்றியதும் சட்டென உதறிவிட்டாள்.
“போன்னு அனுப்பி விட்ட உங்க வீட்டுக்கு எப்படி வந்து நிற்கிறதாம்?” என்று எரிச்சல் நிறைந்த குரலில் கேள்வி எழுப்பினாள்.
“அப்பா உன்ன திருச்சில இருக்க முடியலன்னா சென்னைக்கு வந்துட சொன்னதா என்கிட்ட சொன்னாரே!” என்று சிந்தனையோடு கேட்ட அவனை பக்கத்தில் இருந்த நோட்டை வைத்து நன்றாக ஒரு அடி வைத்தாள்.
“ஆமா சொன்னாரு அப்படி சொன்னதும் நான் அங்க வந்து நிக்க முடியுமா? அவரு அன்பா தான் கூப்பிட்டாரு. நான் இல்லைன்னு சொல்லல. அவரோட உறவே உன்னை வச்சு தான் அப்படிங்கும்போது நீ கூப்பிடாம நான் எப்படி அந்த வீட்டுக்கு வர முடியும்?” என்று உச்சபட்ச கோபத்தில் கேள்வி எழுப்ப,
“என்னடி உங்க வீடு, அந்த வீடுன்னு பேசுற அது உன்னோட வீடும் தான். நம்ம வீடுன்னு சொல்லுடி” என்று பொறுமை இழந்தவனாக அவளிடம் சொல்லியதும் மேலும் கோபமடைந்தவள்,
“என் வீடா? நம்ம வீடுன்னு நான் நினைக்கணுமா? அந்த மாதிரி நான் நினைக்கிற அளவுக்கு தான் அங்க எல்லாம் நடந்ததா? அந்த வீட்ல நான் வர்றதுக்கு முன்னாடி இருந்த பொருளை அழகுக்காக கூட ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்ற எனக்கு அனுமதி இல்லை. ‘சமைக்கல வீட்டு வேலை செய்யல’ன்னு சொல்லுவாங்க சமைக்கலாம்னு கிச்சனுக்கு போனா ஒன்னு எனக்கு முன்னாடி சமைச்சு வச்சிருப்பாங்க, இல்லனா ‘ஒன்னும் சமைக்க வேண்டாம் போ’ அப்படின்னு சொல்லுவாங்க. அவங்களையும் மீறி சமைச்சுட்டா அதுல தண்ணிய ஊத்துறது, இல்ல நல்லாவே இல்லன்னு குறை சொல்றது.
ஒரு நாள் உடம்பு வலிக்குதுன்னு உடம்பு சரியில்லன்னு காலையில பத்து நிமிஷம் லேட்டா எந்திரிக்க முடியாது. ஒன்னு படபடன்னு ரூம் கதவை தட்டி விடுவாங்க இல்லன்னா சத்தமா ஸ்டீரியோல பாட்டு போட்டு எழுப்பி விட்டுடுவாங்க. ஆபீஸ்ல ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் வீட்ல ஒரு விசேஷம் இருந்ததுன்னா நாள் கிழமைன்னா எனக்கு அது பிடிக்குதோ இல்லையோ அரை நாள் லீவ் போட்டோ,இல்ல பெர்மிஷன் போட்டோ வீட்ல இருந்து அவங்களுக்கு எல்லாம் செஞ்சாலும் எல்லாத்தையும் குறை.
என் துணிமணி வைக்கிற இடத்தைத் தவிர அந்த வீட்ல நான் புழங்கற இடம் என்று எதுவுமே இல்லை. அப்புறம் அந்த கட்டடத்தை நான் எப்படி என்னோட வீடுன்னு நினைப்பேன்னு நீங்க எதிர்பார்க்கிறிங்க.
நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப்போகுது இந்த ஒரு வருஷத்துல எத்தனை நாள் எல்லாரும் பேசி சிரிச்சு சந்தோஷமா இருந்திருக்கோம்? கர்ப்பமா இருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட ஒதுக்கி தானே வச்சிருந்தாங்க. சண்டை போடறத நிறுத்தி இருந்தாலும் குத்தி காட்டுறத நிறுத்தலையே!
அப்பா எனக்காக அவங்க கிட்ட எவ்வளவு சண்டை போட்டடிருக்காருன்னு எனக்கு தெரியும். அப்படி சண்டை போடணும்னு நான் எதிர்பார்க்கல ஆனா எனக்கு ஆறுதல் சொல்றதுக்கு கூட நீங்க வரலையே! நான் அதை தானே எதிர்பார்த்தேன்?
உன்கிட்ட கிடைக்காத ஆறுதல வேற யார் கிட்ட நான் எதிர்பார்க்க முடியும்?” உடைந்தவளாக பேசினாள் ஆருத்ரா.
“சரி தப்பு தான். வா வீட்டுக்கு போகலாம்” என்று அவள் கையைப் பிடித்தான்.
“உங்க அம்மா நான் வந்தா ஒன்னும் சொல்லாம இருப்பாங்களா?” என்று அழுத்தமாக வினவினாள்.
“இரு” என்று கைபேசியை எடுத்தவன், அன்னையை அழைத்து,
“அம்மா நான் ஆருத்ரா வை அங்க சென்னை கூட்டின்டு வரேன்” என்று சொல்ல,
“எதுக்குடா? அவ பாட்டி தான் பாத்துக்குறேன்னு சொல்லி கூட்டின்டு போய் இருக்கா இல்ல. நீ போய் எதுக்காக கூட்டின்டு வரணும்னு நினைக்கிற? ஒரு தரம் சொன்னா உனக்கு புரியாதா?” என்று கோபமாக வினவினார்.
“அம்மா அவளுக்கு நம்மள விட்டா யாருமா இருக்கா? நம்ம கூட வந்து இருக்கட்டும்.” என்று வேகமாக பதில் அளித்தான்.
“உன் நல்லதுக்கு தான் சொல்றேன். கேட்டா கேளு கேட்கலைன்னா நாளைக்கு வந்து ‘ஐயோ அம்மா நீ சொன்ன, நான் தான் கேட்காம போயிட்டேன். இப்ப இப்படி ஆயிடுத்து பாரு’ ன்னு வருத்தப்படாதே” சற்று நக்கலாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
ஒரு நிமிடம் கோகுலிடம் தடுமாற்றம் தெரிந்தது அவன் பதில் எதுவும் சொல்லாமல் அழைப்பை துண்டித்து விட,
கணவனை எள்ளலாக ஒரு பார்வை பார்த்தவள், “அவ அன்னைக்கே சொன்னா, நான் தான் நம்பல. நம்பாததோடு பலனை இதோ… இந்த நிமிஷம் அனுபவிக்கிறேன்.” என்று கூறியவர் குரலில் வலி அப்பட்டமாக தெரிந்தது.
“யாரு?” என்று திணறியபடி கேட்ட கோகுலுக்கு இனி அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.
“வேற யாரு? உங்கள நல்லா தெரிஞ்சு வச்சு இருந்தாளே உங்க முன்னாள் காதலி பா…னு… ” என்று இழுத்துக் கூறினாள்.
“பானு…” என்று கோகுல் விழிக்கத் துவங்கினான்.
“அவன நம்பி கல்யாணம் பண்ணிக்காத. ஒரு நாள் இல்லனா ஒரு நாள், உன்னை விட்டுட்டு அவங்க அம்மா முந்தானையை புடிச்சிட்டு போயிருவானு சொன்னா. ஆனா அவ வாய் வார்த்தையா சொன்னதை விட நான் கண்ணால பார்த்த ஒரு விஷயத்தை நம்பி எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கடைசில நான் கண்ணால பார்த்தது பொய்யாகி அவ சொன்னதுதானே உண்மை ஆயிடுச்சு.”என்று விரக்தியாக சிரித்தாள்.
“என்ன சொல்ற நீ? என்ன பார்த்த? பானு என்ன சொன்ன? எனக்கு ஒண்ணுமே புரியல. அதை ஏன் இப்ப பேசுற?” என்று கோகுல் தன் மனைவியும் முகமாற்றம் ஒட்டாத பேச்சில் பயந்தவனாக அவளை உலுக்கினான்.
“அன்னைக்கு மட்டும் பாட்டி போன் பண்ணாங்கன்னு உடனே கிளம்பி இருந்தேன்னா, ஒருவேளை மத்த எல்லாரையும் ஓடவிட்ட மாதிரி உன்னையும் ஓடவிட்டு இருப்பேன். ஆபீஸ்ல பார்ட்டி இருக்கேனு அன்னைக்கு அந்த பப்புக்கு வந்தேன் பாத்தியா நானா இழுத்து விட்டுக்கிட்டதுதான்.”என்று மீண்டும் சென்று ஊஞ்சலில் அமர்ந்தாள்.
அவள் எண்ணங்கள் அந்த நாளை நோக்கி பயணிக்க துவங்கியது
பாட்டி தனக்கு மாப்பிள்ளை பார்த்து இருப்பதாக சொன்னதும் எழுந்த கோபத்திற்கு உடனே திருச்சி சென்று சண்டையிட தான் தயாராக இருந்தாள். ஆனால் தனது பதவி உயர்வு, ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் முடிந்ததால் அதற்கான வெற்றி கொண்டாட்டம் என்று எப்பொழுதும் டீம் அவுட்டிங் செல்லும் அவர்கள் கூட்டம் அன்று ஒரு பப்பில் முன்இரவு நேர டிஜே நிகழ்ச்சிக்கு சென்றது.
அங்கிருந்த ஒலி சற்று நேரத்திற்கெல்லாம் ஏற்கனவே கோவத்திலும் ஆத்திரத்திலும் இருந்த ஆருத்ராவுக்கு தலைவலியை கொடுத்து விட, எப்பொழுதும் நண்பர்களோடு மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருப்பவள் அன்று அனைவரையும் விட்டு ஒதுங்கி தனியே அமர்ந்திருந்ததோடு அங்கிருந்து கிளம்பி விடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் பார் டேபிளுக்கு அருகே இருக்கும் இருவர் அமரும் இருக்கைகளில் ஏதோ பேச்சு சத்தம் தமிழில் தெளிவாகக் கேட்டது.
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு என்னை வேண்டான்னு சொல்ற?” அந்தப் பெண் கோபத்துடன் எதிரில் இருந்த ஆண்மகனிடம் கேட்டுக் கொண்டிருக்க,
அவனோ நிதானமான குரலில் “நான் உன்ன வேண்டாம்னு சொல்லல. நீ தான் என்னையும் என் குடும்பத்தையும் வேண்டாம் என்று முன்னாடியே சொல்லிட்டு பிரேக் அப் பண்ணின. இப்போ எனக்கு கல்யாணம் பேசுறாங்கன்னு தெரிஞ்சதும் நீ திரும்பி வந்துருக்க. போனவ போனவளவே இருக்க வேண்டியதுதானே!” என்று கேட்டு வைத்தான்.
“கோபத்துல சொல்றது தான். நீ உன் அம்மா என்ன சொன்னாலும் தலைய தலைய ஆட்டுற அதனாலதான் அன்னைக்கு அப்படி சொன்னேன்” என்று அலட்சியமாக பதிலளித்தாள்.
“நமக்குள்ள சரிவராதுன்னு நீ தான் ஒதுங்கி போன. அது அப்படியே இருக்கட்டும். எனக்கு மறுபடியும் அதை புதுப்பிச்சுக்க எண்ணம் இல்ல.” சொல்லிவிட்டு அவன் எழுந்து கொள்ள முயல,
“இப்படி பண்ணாத. நீ எனக்கு வேணும். உன் அம்மாவை தான் எனக்கு புடிக்கல. நாம மேரேஜ் பண்ணி தனியா போயிடலாம்.” எப்படியாவது அவனை அமர்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் படபடவென்று பேசினாள்
“சாரி என் அம்மா அப்பாவை விட்டுட்டு தனியா வர்ற ஐடியா எனக்கு இல்ல. அதுவும் இல்லாம என்னை வேண்டான்னு சொல்லிட்டு போனவங்க எனக்கு வேண்டாம்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அவள் பற்றி இருந்த கையை விடுவித்தான்.
‘பரவாயில்லையே இந்த காலத்திலும் சுயமரியாதையோடு குடும்பத்தை விட்டு வர மாட்டேன் என்று சொல்லும் ஆண் பிள்ளையும் இருக்கிறானே!’ என்று ஆருத்ரா எண்ணிக்கொண்டு எதார்த்தமாக அவன் முகம் பார்த்தாள்.
அப்போது ஆரஞ்சு வண்ண விளக்கொளி அனைத்து பக்கத்திற்கும் வட்ட வட்டமாக வந்து சென்று கொண்டிருக்க அவன் முகத்தில் ஒரு வட்டம் விழுந்து நகர்ந்தது.
ஆரஞ்சு வண்ணம் அவன் முகம் தெரிந்தவுடன் ‘பப்பாளிப்பழம் போல இருக்கிறான்’ என்று எண்ணிக் கொண்டாள். மனதின் மூலையில் ‘இப்படி ஒருத்தனை பார்த்திருந்தா கூட ஓகே தான் இந்த பாட்டி என்ன பண்ணி வச்சி இருக்காங்ளோ?’ என்று எண்ணிக் கொண்டிருந்தவள் முற்றிலும் தன் தலைவலி எல்லாம் மறந்து போயிருந்தாள்.
குடும்பத்தை விட்டு வரமாட்டேன் என்று அவன் சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் பாட்டி பார்த்த மாப்பிள்ளை அவன் தான் என்று தெரிந்தும் அவன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தவன் என்று தெரிந்தும் அவன் நிராகரித்த விதத்தை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதம் கூறினாள்.
அந்த விளக்கின் ஒளியில் அவன் முகம் தெரிந்ததும் அந்த அழகு முகம் அவள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்தது. பார்த்தவுடன் பிடித்த அவனது பேச்சும் அவனது முகமும் பாட்டி கேட்டவுடன் திருமணத்திற்கு தலையசைக்க வைத்தது. பானு வந்து என்ன நடந்தாலும் கடைசியில் அவன் அன்னை பின்னால் சென்று விடுவான் என்று சொன்னபோது தன்னிடம் பேசிய சுபாவின் பேச்சை நம்பியும் ‘இவ்வளவு திடமாக தன் குடும்பத்தை எண்ணும் ஒருவன் தான் மனைவியான பின்னால் தன்னை எளிதில் விட்டு விட மாட்டான்’ என்ற நம்பிக்கையும் தான் அவள் பேச்சை புறக்கணிக்க வைத்தது.
தாய் தந்தை இல்லாத அவளுக்கு சிறு கூடு போல குடும்பம் அமையப்போகிறது என்று குதூகலத்துடன் இருந்தாள். அதனால் தான் ஆரம்பத்தில் கோகுல் அதிகம் பேசாத போது அவள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
காதல் தோல்வி கண்ட ஒரு ஆண் மகன் பேச நாள் எடுத்துக் கொள்வான் ஆனால் தன்னையும் தன் அன்பையும் புரிந்து கொண்டால் கண்டிப்பாக அவளும் தன் மீது அன்பு செலுத்துவான் என்று நம்பிக்கையோடு ஆருத்ரா காத்திருந்தாள்.
சில நேரங்களில் அவளுக்கே அவளுடைய செயல் பைத்தியக்காரத்தனமாக தோன்றியதுண்டு.
இன்னொருத்தியை காதலித்தவன் எப்படி மனம் மாறி தன்னை நேசிப்பான் என்று தன் மனம் நம்புகிறது என என கேள்விகள் எழுவதுண்டு, மனதின் நம்பிக்கை என்பது நடக்கும் செயல்களை வைத்து அல்லவே! அவை நாம் அன்பு கொண்டுள்ள மனிதர்களை வைத்து அல்லவா!
அப்படித்தான் கோகுலை முழு முதலாக நம்பினாள். வீட்டின் எந்த சலசலப்பிற்கும் சண்டை போடாமல் அவள் கடந்ததும் இது தன் குடும்பம் என்ற எண்ணத்தில் தான். கல்லும் மண்ணும் வைத்துக் கட்டிக்க கட்டிடம் குடும்பம் ஆகிவிடாது அன்பும் பொறுமையும் வேண்டும் என்று எத்தனையோ நாள் அவளுக்கு அவளே ஆறுதல் கூறிக்கொண்டு அந்த வீட்டில் உலா வந்திருக்கிறாள்.
அது அவளுக்காக தான் என்றாலும் அவள் நம்பியது சுபாவை அல்ல தன் கணவனை! ஒன்றுமில்லாத புடவைக்கெல்லாம் இவளுக்காக பேசியவன் தன் குழந்தையை பெற்றெடுக்க தன்னுடனே இருக்க வேண்டும் என்று கேட்கும் மனைவிக்காக தன் தாயிடம் ஒரு வார்த்தை கூட பேசாத அவன் மௌனம் அவள் மனதைச் சுட்டது.
கடைசி கடைசியாக பாட்டியுடனே பிரசவ காலத்தில் இருந்து விடலாம் போகும் முன் தன் கணவனிடம் ஆறுதல் தேடி அவன் நெஞ்சத்தில் தன் தலை சாய்த்து கொள்ள வேண்டும் என்று தோன்றிய அந்த சில நொடிகளையும் தன்னிடம் இருந்து மாமியார் பறித்த போது அதற்கும் அவன் காட்டிய அமைதி தான் அவளை வெகுவாக பாதித்தது.
பெரிய பெரிய விஷயங்களுக்கு குடும்பத்தில் சண்டை எத்தனை பெரிதாக வந்தாலும் கடைசியில் ஏதோ ஒரு முடிவை பேசி எடுத்து விடலாம். ஆனால் நுண்ணியமான உணர்வுகள் நொறுக்கப்படும் போது அதனை சமாதானம் செய்து கொண்டு அந்த குடும்ப அமைப்பில் வாழ்வது என்பது அத்தனை எளிதாக சாத்தியப்படுவதில்லை.
அப்படியே உறவு தொடர்ந்தாலும் அங்கே உரிமைகொள்ள மனம் தடுமாறுகிறது. அப்படி ஒரு சூழலில் தான் ஆருத்ரா எப்படி அந்த வீட்டிற்கு செல்ல முடியும் என்று தவித்து தன் தாய் வீடு தேடி ஜீயபுரத்திற்கு வந்து விட்டாள்.
ஆருத்ரா அவனிடம் இது அனைத்தையும் கூறிய போது கோகுலுக்கு தான் செய்தது ஒரே ஒரு சிறிய விஷயம் என்று இத்தனை நாட்கள் எண்ணிக்கொண்டிருந்த எண்ணம் சுக்கு நூறாக உடைந்து எந்த இடத்தில் தாங்கி நிற்க வேண்டுமோ அங்கு தாங்காமல் போன தவறு புரிந்தது.
மிகப்பெரிய பொருளை ஒரு சிறு பொருள் வைத்து நகர்ந்து விடாமல் நிறுத்தி இருப்பார்கள். பார்க்க சின்னதாக இருக்கும் அந்த பொருள் தான் அத்தனை பெரிய பொருளை தாங்கி நிற்கிறது. இவ்வளவு பெரிய பொருள் இருக்கும்போது எதற்கு அந்த சின்ன பொருள்? என்று அதனை எடுத்து விட்டால், அந்த பெரிய பொருள் நிற்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிடும்.
அதுபோலத்தான் பெரிய பெரிய விஷயங்களை தன் மனைவிக்கு செய்து கொடுத்திருக்கிறோம் இந்த சிறிய விஷயத்தை செய்யாவிட்டால் என்ன என்று புறக்கணிக்கப்படும் சிறு சிறு விஷயங்கள்தான் அந்த பெரிய விஷயங்களை தாங்கி நிற்கிறது என்பதை பலர் அறிவதில்லை.
அந்த சின்ன விஷயங்கள் பறிக்கப்படும் போது பெரிய விஷயங்கள் அனைத்தும் மனதில் இருந்து நகர்ந்து வெளியே சென்று விடுகிறது.
‘இத்தனை செய்தவனை இப்படி பேசுகிறாளே’ என்று மனம் குமையும் பலரும் அந்த சிறிய விஷயம் தான் இத்தனையையும் தாங்கி நின்றது என்ற உண்மையை புரிந்து கொள்வதில்லை.
புரிந்து கொண்டு தன் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்று விட வேண்டும் என்று தூணில் தலை சாய்த்து நின்றிருந்தவன் ‘ அம்மா ‘ என்ற அவள் வீறிட்ட சத்தத்தில் பதறித் திரும்பினான்.
அங்கே ஊஞ்சலில் அடிவயிற்றை பிடித்தபடி ஆருத்ரா கதற அவள் கால்களின் ஓரம் நீர் நிரம்பி இருந்தது.
Realistic of many people👍👍
Nice
இப்போதாவது புரிஞ்சுதா?
அடடா பனி குடம் உடைஞ்சிடுத்தா?
அருமையான பதிவு
Emotions are narrated very effectively.Good story
செம்ம…. அருமையான பதிவு….
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Rombhavae azhaga na pathivu aaru oda unarvu kuviyal than sollanum ava ketathu niyam than gokul avan enga thavara vittan ippo than puriyuthu
அருமையான பதிவு … எல்லா பெண்களுக்கும் இருக்கற சராசரியான ஆசை ஆனால் எங்கும் நிறை வேறுவதில்லை
ellaroda manasula iruka aathangam iniku aaru vai vitu gokul kitta sollita nijama evlo periya vishayam irunthalum oru chinna vishayam seiyalana athu tha nikum athu tha aaru solrathu yar vanthu ninalum oru kalayanathuku aparam husband support venum oru ponnuku athu kedaicha periya varam athu
Arumai 👌👌👌👌💕💕💕💕💕
Correct ah sonninga👌👌👌👌💕💕💕💕💕
அருமை
இங்கு பல ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்
Semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma sis
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
அருமை அருமை அருமை அருமை
அவர்களின் பிள்ளை வந்த பிறகாவது வசந்தம் பூக்கும் அவளின் வாழ்வில்