Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே – final episode

மனம் உன்னாலே பூப்பூக்குதே – final episode

பூ 26

ஆருத்ரா இருந்த நிலை கண்டு பதறி விட்டான் கோகுல். “ஐயோ” என்று அவள் அருகே சென்றவன் அவள் நிலைகண்டு அதிர்ந்தான்.

“டெலிவரிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கேடா. என்ன டா இது?” என்று துடித்தவன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு காரை நோக்கி விரைந்தான். காரின் முன் இருக்கையில் அவளை அமர வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டவன் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது கைபேசியில் பக்கத்தில் இருக்கும் 24 மணி நேர மருத்துவமனையை தேடலானான்.

வண்டியை அதிவேகமாக செலுத்தி கொண்டிருக்கும்போதும் கியரில் இருந்து அவ்வப்போது கையை விலக்கி மனைவியின் தொடையில் ஆறுதலாக தட்டிக் கொடுத்துக் கொண்டே வாகனத்தை ஓட்டினான்.

மருத்துவமனை வாயிலில் காரை நிறுத்திவிட்டு அவளை கையில் ஏந்திக்கொண்டு அவன் உள்ளே செல்ல அங்கிருந்த செவிலியர்களும் வார்ட் பாயும் அவளை சக்கர நாற்காலியில் அமர வைத்து உள்ளே அழைத்துச் சென்றனர். காரை அதன் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு அவளை எங்கே அழைத்துச் சென்றார்கள் என்று விசாரித்து அவன் ஓடிய போது அங்கிருந்த மருத்துவர் அவளது மருத்துவ அறிக்கையை வினவினார்.

ஏற்கனவே அவள் ஊருக்கு கிளம்பும் போது அவளுக்கு அது அனைத்தையும் கொடுத்து விட வேண்டும் என்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று தன்னுடைய கைப்பேசியில் அதை புகைப்படமாக எடுத்து வைத்திருந்ததால் அதனை மருத்துவரிடம் காட்டினான்.

“இன்னும் டெலிவரி டேட் வரலையே! அதுக்குள்ள பெயின் எப்படி வந்துச்சு? ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தாங்களா? பிபி வேற தாறுமாறா இருக்கு. நாங்க ஸ்கேன் பண்ணி குழந்தையோட பொசிஷனை வச்சு தான் நார்மல் டெலிவரியா, சிசேரியனானு சொல்ல முடியும்.” என்று மருத்துவர் அவனிடம் கூறிவிட்டு உள்ளே சென்றார்.

அவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. கை, கால்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் முழுவதுமாக ஒரு மாதம் இருக்கும் நிலையில் மனைவி இந்நிலையை அடைய தான் காரணம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.

கருத்தரித்த சில நாட்களிலேயே அவள் ‘பிரசவத்தை சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம் நான் உங்களுடனே இருக்கிறேன்’ என்று கேட்டதெல்லாம் இந்த நிமிடம் அவன் கழுத்தை நெரிப்பது போல நினைவுக்கு வந்து சித்திரவதை செய்தது.

அன்றிலிருந்து இந்த நாளுக்காக அவள் பயப்பட்டிருக்க வேண்டும். அவளது பயத்தை தான் வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டது எத்தனை பெரிய தவறு? என்று இன்று அவள் இருந்த நிலையை எண்ணி தன்னைத்தானே சபித்துக் கொண்டான்.

பாட்டிக்கோ தன் பெற்றோருக்கோ தகவல் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் கூட அவனுக்கு தோன்றவில்லை. மனம் முழுவதும் ‘ஆருத்ரா ஆருத்ரா’ என்று ஜெபித்துக் கொண்டே இருந்தது.

அவன் எண்ணமெல்லாம் மனைவியை சுற்றியே இருந்தது குழந்தையை பற்றி அவன் ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை. அவளுக்கு இத்தனை மன வலியை கொடுத்து இந்த சூழ்நிலைக்கு தள்ளிய தன்னை சிந்தித்துக் கொண்டிருந்தானே ஒழிய வேறு எதையும் அவன் சிந்திக்க மறுத்து விட்டான்.

அரை மணி நேரத்திற்கு பிறகு வந்த மருத்துவர் “பனிக்குடம் உடைந்துவிட்டது. வலியும் தொடர்ச்சியாக இருக்கிறது. குழந்தைக்கு கழுத்தில் கொடி சுற்றவில்லை. தலையும் இறங்குவதற்கு தயாராகவே இருக்கிறது. தொடர்ச்சியான வலியில் சுகப்பிரசவமே ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது. கடைசி நொடியில் ஏதேனும் பிரச்சனை வந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்வதாக இருக்கும்.” என்று கூறிவிட்டு அவர் அவளை லேபர் வார்டுக்கு மாற்றினார்.

அவளை அழைத்துச் செல்லும் போது அவளது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு

“பயப்படாதடா ஒன்னும் ஆகாது. நீ நல்லபடியா என்கிட்ட வந்துடுவே” என்று வாயில் வந்ததை எல்லாம் சொல்லி அவளை தைரியப்படுத்த முயன்ற கோகுலின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவளை உள்ளே அழைத்துச் சென்றதும் ஒரு செவிலியர் அவனிடம் அவளது நகைகளை கொண்டு வந்து கொடுத்தார். மோதிரம், இரண்டு வளையல்கள், காதில் அணிந்திருந்த சின்ன கல் தோடு, அத்தோடு அவள் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்த அவன் கட்டிய மாங்கல்யம்.

இறுக்கமாக அதனை கைகளில் பற்றி கொண்டவன் அவளது ஒவ்வொரு வலியின் அலறலுக்கும் உள்ளே நடுங்கிக் கொண்டிருந்தான்.

இடையில் செவிலியர் ஓடி வர மருத்துவர் என்னவென்று பார்க்க வந்தார். அவளது ரத்த அழுத்தம் அதிகமாக ஏறிக் கொண்டிருப்பதை கண்டவர் ‘இப்படியே சென்றால் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும்’ என்று அவளிடம் சற்று அதட்டலாகவும், சமாதானமாக இருக்கும் படியும் கூறிக் கொண்டிருந்தார்.

வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கோகுலின் மனம் குற்ற உணர்வில் குன்றி போனது.

‘தன்னால்தான் தன்னால்தான் தன் மனைவிக்கு இத்தனை வலியும் வேதனையும். அறுவை சிகிச்சை வேறு செய்வதானால் இன்னும் எத்தனை வலிகளை அவள் தாங்க வேண்டும்?’ என்று நினைக்கும் போது தன்மீதே அவனுக்கு வெறுப்பு உண்டானது.

ஆனால் அவனை அதற்கு மேல் சிந்திக்கவிடாமல் மருத்துவர் அவனை அவள் அருகில் சென்று பேசி சமாதானமாக இருக்கச் செய்யுமாறு பணித்தார்.

அவனும் அவள் கைகளைப் பற்றி கொண்டு அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்தபோது சொன்ன வார்த்தைகள் கூட இப்போது வெளியே வர மறுத்தது. அவன் கண்களில் தெரிந்த குற்ற உணர்ச்சியும் அவனிடம் மன்னிப்பு வேண்டி நின்ற விழிகளும் அவளை அந்த சூழ்நிலையிலும் பாதித்துவிட வலிக்கு இடையில்,

“ஏ பப்பாளிப்பழம் ஏன் இப்படி அழுகற? எனக்கு தானே வலிக்குது?” என்று அவனை கேலி செய்ய முயன்றாள்.

அவளது பேச்சை கேட்ட செவிலியர் சிரித்தபடி “அவங்கள சமாதானம் பண்ண சொன்னா அவங்க உங்களை சமாதானம் பண்ற மாதிரி நடந்துக்கிறிங்களே சார்!” என்று தன் பங்குக்கு அவரும் கேலி செய்தார். கண்ணீரை துடைத்தபடி,

“இதுக்கு மேல உன்ன கஷ்டப்படுத்திக்காம நம்ம குழந்தையை பெத்து எடுத்துட்டு நீ வா. ஒரு நொடி கூட உன்னை வருத்தப்பட விடாம நான் பார்த்துக்கிறேன். இது நமக்கு பிறக்கப் போற குழந்தை மேல நான் செய்ற முதல் சத்தியம்.” என்று அவன் அவள் வயிற்றில் கை வைக்க சரியாக அந்த நேரத்தில் எட்டி உதைத்தது குழந்தை.

அவள் ஆ என்று அலறிய நொடியிலேயே செவிலியர் அவளை சோதனை செய்துவிட்டு மருத்துவரை அழைத்தார். அவனுக்கும் பிரசவ அறையில் உடுத்திக் கொள்ளும் உடையை கொடுத்து அவள் அருகில் கைகளை பிடித்தபடி நிற்கச் சொன்ன மருத்துவர் அவளை கீழ்நோக்கி குழந்தையை அழுத்தி தள்ளுமாறு மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்திலேயே சோர்வடைந்தவள் “முடியலை எனக்கு ஆபரேஷனே பண்ணிடுங்க.” என்று அழ ஆரம்பித்தாள்.

“இவ்வளவு வலிக்கும்போது அப்படித்தான் சொல்ல தோணும். ஆனா இந்த ஒரு வலியை நீ கடந்துட்டா வாழ்க்கை முழுக்க முதுகு வலி இல்லாம நீ தப்பிக்கலாம். உன் குழந்தை அதுக்கு உனக்கு எல்லா விதத்துலயும் உதவி தான் செய்யுது. நீ அதுக்கு ஒரே ஒரு தரம் அழுத்தம் கொடுத்து மூச்சை பிடிச்சு வெளியில தள்ள முயற்சி பண்றது தான் அந்த குழந்தைக்கு நீ செய்யப் போற முதல் உதவி. எங்க மூச்சை பிடிச்சுட்டு ஒரு தரம் மூக்கு பார்ப்போம்.” என்று அதட்டலாக அவர் கூற, மிகவும் சிரமப்பட்டு அழுத்தி பிடித்தபடி வயிற்றிலிருந்து கீழ்நோக்கி அவள் அழுத்தம் கொடுக்க வீறிட்டு அழுகையுடன் பூவுலகில் வந்து பிறந்தாள் அவர்களது தேவதைப் பெண்.

“கங்கிராஜுலேசன். பெண் குழந்தை பிறந்திருக்கு. மகாலட்சுமியே உங்க வீட்டுக்கு வந்திருக்கா.” என்று அந்த மருத்துவர் குழந்தையை பரிசோதித்து செவிலியர் கையில் கொடுத்துவிட்டு அவளுக்கு சில தையல்களை போட்டு முடித்தார்.

அவள் கொடுத்த அழுத்தம் கோகுலின் கையில் ஏற்படுத்திய வலியை முதலில் அவனால் தாங்கவே முடியவில்லை. ஆனால் இதைவிட நூறு மடங்கு வலியை தாங்கி தன் மனைவி தன் குழந்தையை பிரசவித்திருக்கிறாள் என்ற எண்ணம் அனைத்தையும் மறக்கடித்தது. அதைவிட ரோஜாக் குவியலாக வந்து சேர்ந்த அவனது மகளின் அழுகுரலும் இந்த உலகத்தையே அவனை மறக்க செய்தது.

அயர்ந்து போய் கண்மூடி கிடந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன், செவிலியர் நீட்டிய மகளை தன் கையில் வாங்கி மனைவியின் கன்னத்தோடு குழந்தையை படுக்க வைத்து இருவருக்குமான பொதுவான முத்தத்தை வழங்கினான்.

“சரி சார் நீங்க குழந்தை எடுத்துட்டு போயி வெளியில் சில செக்கப் எல்லாம் இருக்கு பண்ணிட்டு வாங்க. அதுக்குள்ள நாங்க இவங்களுக்கு எல்லாம் கிளீன் பண்ணிட்டு ரூமுக்கு மாத்திடறோம். நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் நீங்க இங்க இருந்தா போதும் .அப்புறம் நீங்க கிளம்பலாம்.” என்று அந்த செவிலியர் சிரித்த முகமாகவே கூறிவிட்டு ஆருத்ராவை அழைத்துச் செல்ல குழந்தையுடன் மருத்துவம் மருத்துவர் கூறிய பரிசோதனைகளை மேற்கொள்ள எடுத்துச் சென்றான்.

அவர்கள் குழந்தையை பரிசோதிக்கும் போது தான் இன்னும் தன் பெற்றோருக்கோ அல்லது ஆருத்ராவின் பாட்டிக்கோ தகவல் சொல்லவில்லை என்ற உண்மை கோகுலுக்கு உறைத்தது .

உடனடியாக தன் தந்தையை கைபேசியில் அழைத்தவன், “அப்பா எனக்கு பொண்ணு பிறந்திருக்கா.” என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்.

அவன் கூறிய செய்தியில் முதலில் மகிழ்ந்தாலும் அடுத்த நொடியே “அதுக்குள்ள எப்படிடா? ஆருத்ராவுக்கு உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று மருமகளைப் பற்றி விசாரித்தார் ஆதிநாதன்.

“நல்லா இருக்காப்பா.” என்று கூறியவனுக்கு பேச நா எழுவில்லை. நடுங்கிக் கொண்டிருந்த அவன் குரல் ஆதிநாதனுக்கு பல செய்திகளை சொல்லாமலே சொல்லியது.

“சரி சரி நீ ஹாஸ்பிடல் லொகேஷன் அனுப்பு. காலைல நானும் அம்மாவும் அங்க வந்துடுவோம்.” என்று கூறியவராக அவனை வாழ்த்தி விட்டு பேத்தியின் உடல்நலம் குறித்தும் சில கேள்விகளை எழுப்பினார்.

அதன் பின் தான் ஒரு மாதம் முன்னரே பிறந்து விட்ட குழந்தையின் நலன் பற்றி தான் இந்த நிமிடம் வரை சிந்திக்காமல் இருந்தது அவனுக்கு உறைத்தது. நன்றி கூறி தந்தையின் அழைப்பை துண்டித்தவன் அங்கிருந்த செவிலியரிடம் விசாரிக்க,

“குழந்தை அண்டர் வெய்ட் தான் ஆனால் ரொம்ப குறைவா இல்ல. இரண்டு கிலோ 200 கிராம் இருக்கு. இப்போதிலிருந்து கிளம்பும் வரை போட்டோ லைட் வைத்தாலே போதும்.” என்று கூறியவர் “கிளம்பும்போது பரிசோதித்து விட்டு நீட்டிப்பு வேண்டுமா இல்லையா என்பதை பற்றி கூறுகிறோம்” என்றார்.

மற்ற பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நல்லபடியாகவே வந்துவிட நிம்மதியுற்றவன் குழந்தை வாங்கிக்கொண்டு அறை நோக்கி செல்லலானான்.

அவன் வந்ததுமே அங்கிருந்த செவிலியர் குழந்தையை வாங்கி ஆருத்ராவிடம் அமுதூட்டக் கூறினார்.

முதன்முறையாக தன் மார்பில் முட்டி முட்டி பால் குடிக்கும் தன் குழந்தையை விழியாகலாது பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ராவின் உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தாலும் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.

“குழந்தை பிறந்த பச்சை உடம்பு. சும்மா அழாதம்மா. உடம்பு கெட்டுப் போயிடும்.” என்று சற்று மூத்த வயதுடைய அந்த செவிலியர் அவளை உரிமையாக அதட்டினார்.

“என்னோட அம்மா… என்னோட அம்மாவே வந்து எனக்கு பிறந்து இருக்காங்க சிஸ்டர். என் அம்மாவுக்கும் காலுல இப்படி ஒரு மச்சம் இருக்கும்.” என்று குழந்தை காலில் இருந்து மச்சத்தை காட்டி கண்ணீரோடு கூறிய தன் மனைவியை தள்ளி நின்று ரசித்து கொண்டிருந்தவன் விழிகளிலும் கண்ணீரின் சாயல்.

‘எத்தனை எத்தனை மனப்போராட்டங்கள் அவளுக்குள் இருந்திருக்கும்? தன் மனதில் இருப்பதை வெளியிட நெருங்கிய உறவாக அவள் நினைத்த தான் ஒருவனே அவளை புறக்கணித்த கொடுமையை அவனாலேயே இந்த நிமிடம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குழந்தை வயிற்றில் இருக்கும் போது ஒரு நாள் கூட பிறக்கும் குழந்தை என் தாயாகவோ என் தந்தையாகவோ இருக்குமோ என்று கூட அவனிடம் அவள் பகிர்ந்ததில்லை. இத்தனை தூரம் தான் தானும் தன் மனைவியும் நெருக்கமாக இருந்தோமா?

எங்களுக்குள் அந்நியோன்யம் என்பது எந்த அளவுக்கு இருந்தது? தொழில் என்று ஓடிவிட்டு கடமைக்காக அவளோடு மாலையில் நடை பயிற்சிக்கு சென்றேனா? அவளே இது பற்றி பேசவில்லை என்றாலும் தனக்கு ஏன் இது தோன்றாமல் போனது?’ என்று இப்போதும் தன்னைத்தானே அவன் குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தான்.

அந்த செவிலியர் குழந்தையை எப்படி ஏந்த வேண்டும், எப்படி குழந்தைக்கு அமுதூட்ட வேண்டும், எத்தனை முறை கொடுக்க வேண்டும் என்று அவளுக்கு விளக்கமாக கூறிவிட்டு அவளுக்கு உண்ண உணவு மருத்துவமனையில் இருந்தே கொடுக்கப்படும் என்று கூறி அங்கிருந்து விலகிச் சென்றார்.

அவர் சென்ற நொடி சிறிதும் தயக்கமின்றி தன் மனைவியின் காலடியில் அமர்ந்தவன் அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.

“என்ன மன்னிச்சிடுடி” என்று கதறலோடு அவள் கால்களில் அவன் முத்தமிட,

“ஐயோ என்ன பண்றீங்க கி? காலை விடுங்க” என்று  காலை இழுத்துக் கொள்ள அவள் முயன்றாலும் உடலில் இருந்த வலி அதற்கு ஒத்துழைக்கவில்லை.

மிகவும் சங்கடமாக உணர்ந்தவள் கையில் இருந்த குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஒற்றை கையால் எட்டி தன் கணவனின் சட்டையை தோளோடு பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள். மெல்ல அவள் கால்களை கட்டிலில் எடுத்து வைத்தவன் எழுந்து அவள் அருகில் வர அவன் வயிற்றோடு அணைத்து கொண்டவள் ஒரு கையால் குழந்தையை தடவியப்படியே,

“என்ன இப்படி எல்லாம் பண்றீங்க?” என்று சலுகையாக சண்டைக்கு வந்தாள்.

“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் நான் யோசிச்சு இருக்கணும். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் உனக்கு ஆதரவா இருக்கிறதா நினைச்சேன் ஆனா உனக்கு எந்த விஷயத்துக்கு நான் ஆதரவாக இருக்கணுமோ இருக்காமல் போயிட்டேன். என்ன மன்னிச்சிடு.” என்று மீண்டும் ஒருமுறை அவளிடம் அவன் மன்னிப்பு வேண்ட,

“விடுங்கப்பா” என்று அதை புறந்தள்ளினாள்.

இருவரும் குழந்தையின் அழகை வர்ணித்துக் கொண்டு அதை வேடிக்கை பார்த்தபடி மீதி இருந்த இரவை கழிக்க அதிகாலையில் தான் கண்ணுறங்கினாள் ஆருத்ரா.

அவள் தூங்கும் போது ஒரு முறை குழந்தை சிணுங்க அவள் எழுந்து கொள்ளாததால், குழந்தைக்கு பசிக்கிறதோ என்று அவன் மனம் பதறினாலும் மனைவியை எழுப்ப மனம் இல்லாதவனாக குழந்தையை தூக்கி கையில் வைத்துக்கொண்டு அந்த லாபியில் நடந்து கொண்டிருந்தான்.

அவனது வேதனை படிந்த முந்தைய நாள் முகத்திற்கும், இன்று குழந்தையுடன் சிரித்தபடி இருக்கும் இந்த முகத்திற்குமான வித்தியாசத்தை நன்கு உணர்ந்திருந்த அந்த முதிய செவிலியர் அவனிடம் வந்து

“என்ன வைஃப் தூங்குகிறார்களா? குட்டி எழுப்பிடுவாங்கன்னு தூக்கிட்டு வெளியில் வந்துட்டீங்களா?” என்று கேள்வி எழுப்பியபடி அவனது உறவுகள் எப்போது வருவார்கள் என்றும் விசாரித்தார்.

இரவே அவன் பாட்டிக்கு தகவல் சொல்லவில்லை அந்த நேரத்தில் அவரை சங்கடப்படுத்த விரும்பாமல் காலையில் சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்ததால் நினைவு வந்தவனாக குழந்தையை சமாதானம் செய்து தொட்டிலில் விட்டு விட்டு பாட்டிக்கு அழைத்தான்.

அவர் பதறி விடாதவாறு நிதானமாக சூழ்நிலையை எடுத்துக் கூறி அவருக்கு கொள்ளுப்பேத்தி பிறந்திருப்பதை தெரிவித்து அவரை அழைத்து வருவதற்கு அவனே வாகனம் ஏற்பாடு செய்வதாகவும் சொல்லி அவரை பதற வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே அழைப்பைத் துண்டித்தான்.

அவன் பேசிவிட்டு திரும்பிய போது அவனைப் பார்த்தபடியே எழுந்து அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

“நான் கூட பாட்டிக்கு இவ்வளவு இதமா எடுத்து சொல்லி இருக்க மாட்டேன். பரவாயில்ல “என்று அவனைப் பார்த்து அவள் மென்னகை புரிய அவனுக்கு மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கியது.

குழந்தையை எடுத்து அவளிடம் கொடுத்து அமுதூட்ட சொல்லிவிட்டு தன் தந்தையை எங்கே வந்து கொண்டிருக்கிறார் என்று விசாரிக்க வெளியே சென்றவன் வராண்டாவில் தாயும் தந்தையும் வந்து கொண்டிருப்பதை கண்டு மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

தந்தை அவனை கண்டதும் ஆரத்தழுவிக் கொண்டு அவன் தந்தையானதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க, அன்னை அமைதியாக தந்தை பின்னே நின்று கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தான்.

“என்னப்பா இது திருச்சியை விட்டு இவ்வளவு தூரம் தள்ளி இருக்கிற ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கியே! என்ன ஆச்சு?” என்று விசாரித்தபடி அவர் முன்னே வர,

‘கொஞ்சம் இருங்கப்பா அவ பீட் பண்ணின்டு இருக்கா. நான் பாத்துட்டு வந்துடறேன்.” என்று மனைவியின் அறைக்குள் எட்டிப் பார்த்தவன் இன்னும் அவள் அமுது ஊட்டி கொண்டிருந்ததால் வெளியே இருந்த லாபியிலேயே அமர வைத்து அன்னை தந்தையோடு பேசிக் கொண்டிருந்தான்.

எதார்த்தமாக வெளியே வந்தபோது வலி எடுத்து விட்டதாக அவன் சமாளித்துவிட்டு அன்னை முகம் பார்க்க அவரோ அத்தனை மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கவில்லை அமைதியாகவே சுபா அமர்ந்திருப்பதை கண்டவன் மனதில் லேசான உறுத்தல் உண்டானது.

எதையும் காட்டிக் கொள்ளாமல் உள்ளிருந்து ஆருத்ரா குரல் கொடுத்ததும் அன்னை தந்தையே அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றவன், முதலில் மனைவியின் கையில் இருந்த குழந்தையை வாங்கி தன் தந்தையிடம் கொடுத்தான்.

ஆருத்ரா தன் மாமனாரை கண்டவுடன் “அப்பா” என்று உணர்ச்சி பொங்க அழைத்ததும் ஒரு கையில் தன் பேத்தியை வைத்துக் கொண்டவராக வலது கையால் மருமகளின் தலையில் ஆசீர்வதிப்பது போல கை வைத்து அழுத்திக் கொடுத்தார்.

கண்களில் கண்ணீர் பெருக தன் மாமனாரை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. அவரும் தன்னுடைய பேத்தியை கண் நிறைய பார்த்தவர், அந்தச் சின்ன கால்களை அதிலிருந்து குட்டி குட்டி விரல்களை தீண்டி குழந்தை கை கால் அசைப்பதை ரசித்து சிரித்து கொண்டிருந்தார்.

இதையெல்லாம் சற்று தள்ளி நின்று ஏதோ பார்வையாளர் போல பார்த்துக் கொண்டிருந்தார் சுபாஷினி.

“ஏய் சுபா இந்தா உன் பேத்தி வாங்கி பாரு” என்று அவர் தன் மனைவியை அழைத்து குழந்தையை கொடுக்க, வாங்கிக் கொண்ட சுபாஷினி முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை.

வாங்கிக் கொண்டவர் குழந்தையின் முகத்தை பார்த்துவிட்டு அது உடலை முறுக்கிக் கொண்டு அழத் துவங்கியதும் “இந்தாடா” என்று தன் மகன் கையில் கொடுத்து விட்டார்.

அன்னையின் அமைதியும் ஒதுக்கமும் கோகுலுக்கு மனதிற்குள் மணி அடிக்க வைத்தது.

குழந்தை மீண்டும் அழத்துவங்க, “நீ குழந்தைய பாருமா” என்று சொன்னவர் மகனை தோளில் கை போட்டு அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.

சுபாவும் அவர்களை பின்பற்றி வெளியேறியவர், வார்த்தைக்கு கூட தன் மருமகளை எப்படி இருக்கிறாள் என்றோ, மற்ற எந்த  நலவிசாரிப்புகளோ மேற்கொள்ளவில்லை.

இதனை ஆருத்ரா கவனித்தாலும் அதை பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் அவளது கணவன் அப்படி இருக்கவில்லை. வெளியே வந்ததும் சற்று தள்ளி இருந்த காத்திருப்போர் இருக்கையில் அன்னை தந்தையை அமர வைத்தவன் கைகளை கட்டிக்கொண்டு அன்னையைப் பார்த்து என்னவென்று வினவினான். சுபா ஒன்றுமில்லை என்ற தலை அசைக்க சரியாக அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் சந்தானலஷ்மி.

தன் பேத்தியையும் கொள்ளுப்பேத்தியையும் பார்த்துவிட்டு அவர் முகம் எல்லாம் பூரித்து போனது. மனம் நிறைய, வாய் நிறைய வாழ்த்தியவர், அவளுக்காக பத்தியமாக செய்து கொண்டு வந்த கஞ்சியையும் துவையலையும் அவளிடம் கொடுத்து விட்டு குழந்தைக்கு ‘கோரோஜன’மும் கொண்டு வந்திருந்ததை கொடுத்தார்.

வெளியே வந்தவர் சுபாவிடம் உரிமையாக “முதலிலேயே வந்துட்டியே சுபா, குழந்தைக்கு நீயே கோரோஜனம் கொடுத்திருக்கலாமே!” என்று கேட்டுவிட,

சுபாவோ முகத்தை திருப்பிக் கொண்டு “அதெல்லாம் நீங்க தான் செய்யணும். நாங்க வந்தா எங்களை வரவேற்று எங்க பேர குழந்தையை காட்ட வேண்டியது நீங்கதான். நீங்க எங்கள கேக்கறேளே!” என்று ஒட்டாத குரலில் பேச சந்தானலஷ்மி முகம் சுருங்கிவிட்டது.

“எனக்கு உடம்பு சரியில்லைன்னு தானே ஆருத்ரா சென்னைக்கு கிளம்பி வந்தா. வழியிலேயே வலி வந்து இப்படி நடந்து போச்சுன்னு நான் இவ்வளவு பதட்டத்துலையும் அவளுக்கு சாப்பிடவும் குழந்தைக்கு கோரோஜனமும் வாங்கிட்டு தான் வந்திருக்கேன். இதுக்கு மேல இந்த கிழவி என்ன செய்யணும்னு அம்மா நீ எதிர்பார்க்கிற?” என்று சற்று நைந்து போன குரலில் கேட்டார் சந்தானலஷ்மி.

இது ஆதிநாதனுக்கு புதிய செய்தி என்பதால் மகனை உற்று ஒரு முறை பார்த்தவர், சற்றும் தயங்காமல்,

“அவ ஏதோ இவ்வளவு தூரம் பயணம் பண்ண களைப்புல யோசிக்காம பேசுறாம்மா. நீங்க ஒன்னும் நினைச்சுக்க வேண்டாம். நீங்க ஆருத்ரா கூட போயி அவளுக்கு துணையாய் இருங்கோ. நாங்க காலையில நம்ம எல்லாரும் சாப்பிடுவதற்கு சாப்பாடு வாங்கிண்டு வரோம்.” என்று அவரை அறைக்குள் அனுப்பி வைத்தார்.

தன் மனைவியை கண்டிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும்போதே சற்றும் யோசிக்காமல் அவரை கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தான் கோகுல்.

“என்னமா பேசுற? அவங்க வயசானவங்க. அவங்க கிட்ட போயி இப்படி பேசுற? வந்ததுல இருந்து நானும் பார்க்கிறேன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாய், என் குழந்தையை நீ கொஞ்ச கூட இல்ல? ஆருத்ரா கிட்ட எப்படி இருக்கன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல? என்ன தான் உன் மனசுல ஓடறது!” என்று கடுமையாகவே கேட்டு விட்டான்.

“என்னத்த கேட்கணும்? பொண் குழந்தையை பெத்து வச்சிருக்க அவ கிட்ட போயி என்னத்த கேட்கிறது? நல்லா குத்துக்கல் மாதிரி இருக்காளே! பார்த்தா தெரியல, இதை வேற அவ கிட்ட கேக்கணுமா?” என்று முகத்தை சுளித்தபடி சுபா மெதுவாக பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் தீக்கங்குகளின் வெம்மை.

அவன் தன் அன்னையை பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று சுபா உணரவில்லை. ஆனால் தன் மகனின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பதை அட்சர சுத்தமாக புரிந்து கொண்டார் ஆதிநாதன்.

தன் மனைவிக்கு இதற்கு மேல் கண்டிக்கவோ எடுத்து கூறவோ முடியாது என்பதை உணர்ந்து கொண்டவர் மகனை தோளை தட்டி சமாதானம் செய்து வைத்தார்.

அவனை உணவு வாங்கி வரச் சொல்லி அனுப்பியவர் மனைவியை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வையில் என்ன இருந்தது என்று சத்தியமாக சுபாவுக்கு புரியவில்லை புரிந்து இருந்தால் அப்படி ஒரு பேச்சு பேசியதற்கு ஒருவேளை மன்னிப்பு வேண்டி இருப்பாரோ என்னவோ!

மனைவியை அங்கே காத்திருக்குமாறு கூறிவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறியவர் பக்கத்தில் இருந்த குழந்தைகளுக்கான கடையில் தன் பேத்திக்காக பார்த்து பார்த்து சில பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கினார்.

மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவர் தன் மகனிடமும் மருமகளிடமும் பொருட்களை கொடுத்துவிட்டு தாங்கள் கிளம்புவதாக தெரிவித்தார்.

அவர் அப்படி கூறியதும் சந்தானலஷ்மியின் முகம் குழப்பமானது.

“இன்னிக்கு சாயங்காலம் எப்படியும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாளே?” என்று தவிப்போடு அவர் வினவ,

“நீங்க தான் இருக்கேளே! உங்க கொள்ளுப்பேத்திய கூட்டிட்டு போய் வச்சு சீராட்டுங்க. புண்ணியவாஜனை முடிஞ்சதும் சென்னை போறத பத்தி பார்ப்போம்.” என்று கேட்காமலே பதில் அளித்தார் சுபாஷினி.

அவர் பேச்சில் அங்கிருந்தவர்கள் அத்தனை பேர் முகமும் வாடி இருந்தாலும் ஆருத்ரா மட்டும் எதையும் வெளிக்காட்டாமல் தன் குழந்தையை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

மகனின் கையை அழுத்திக் கொடுத்துவிட்டு ஆதிநாதன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

சந்தானலஷ்மி அதுவரை சற்று திடமாக இருந்தவர் அங்கிருந்த நாற்காலியில் துவண்டு போய் அமர்ந்தார்.

“எனக்கு மட்டும் என் பேத்தி, கொள்ளுப்பேத்தி எல்லாம் பார்த்துக்கணும்னு ஆசை இருக்காதா?கூட ஒருத்தர் இருந்து கொஞ்சம் செஞ்சா நானும் எல்லாம் பார்ப்பேன். யாரும் இல்லாதபோ நான் ஒருத்தியா செய்வதற்கு பயமா இருக்கு. அதைவிட எங்க கவனிக்காம ஏதாவது செஞ்சு இவளுக்கு ஏதாவது ஆயிடுமோ, அந்த பயம் தான் ரொம்ப அதிகமா இருக்கு” என்று வாய் விட்டு புலம்பி விட்டார்.

உடனடியாக அவரிடம் வந்து தரையில் அமர்ந்து கொண்டு அவர் கையை பற்றிய கோகுல், “என் மனைவியையும் குழந்தையையும் நான் பார்த்துப்பேன் பாட்டி . நீங்க கவலையே படாதீங்க” என்று அவருக்கு ஆறுதல் கூற,

“நீயும் தான் எப்படி பார்ப்ப?” என்று மனவலியோடு வினவினார்.


“எனக்கு கொஞ்சம் உதவி செய்ங்க பாட்டி கேட்டா, உதவி செய்ய எங்க செல்ல பாட்டி இருக்காங்களே!” என்று அவர் கன்னத்தை அவன் கிள்ளி வைக்க, முகம் சிவந்தவராக “அட போப்பா” என்று நாணினார்.


அன்று மாலை மருத்துவமனையில் இருந்து கிளம்பியதும் நேராக பாட்டியை அழைத்துக்கொண்டு ஜீயபுரம் வீட்டுக்கு வந்து விட்டான் கோகுல்.

“எதுக்குப்பா இங்க திருச்சி வீட்டுக்கு போயிடலாமே! பக்கத்திலேயே எல்லா வசதியும் இருக்.”கு என்று பாட்டி கூறிய போது,

“வசதி இருக்கிறது போலவே குழந்தையை பாக்குறதுக்கு பேசுறதுக்குனு தினமும் பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் வந்துண்டே இருப்பாங்க. உங்களுக்கு உட்காரக்கூட நேரம் இருக்காது. இங்க அப்படி யாரும் அதிகம் வர மாட்டாங்க. உங்களுக்கும் ரெஸ்ட் கிடைக்கும். பின்னாடி ஓடுற காவேரி ஆறும், இங்க இருக்கிற அமைதியும், இப்போ உங்க மூணு பேருக்குமே தேவை.” என்று பெண்கள் மூவரையும் பார்த்து சிரித்து வைத்தான் கோகுல்.

அடுத்து வந்த பத்து நாளும் மனைவியும் குழந்தையும் கோகுல் உள்ளங்கையில் தாங்கினான் என்று சொன்னால் அது மிகையல்ல.

மனைவிக்கு நேரத்திற்கு மருந்து கொடுப்பது, அவள் தையல் ஆறுவதற்காக மருந்து கலந்த வெந்நீர் எடுத்து வைப்பது, மனைவி உறங்க வேண்டும் என்று தாய்ப்பாலை பம்ப் செய்து எடுத்து வைத்துக்கொண்டு மகளுக்கு அவனே பாலூட்டுவது என்று மனைவிக்கும் தன் மகளுக்கும் தாயுமானவனாக இருந்தான் கோகுல்.

ஆருத்ராவுக்கு செய்யும் பிராயச்சித்தம் என்று எண்ணாமல் தன் மனைவியை தான் இப்படித்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியோடு அன்பையும் காதலையும் சரிவிகிதமாக கலந்தே தன் மனைவியையும் மகளையும் கவனித்துக் கொண்டான்.

பாட்டி பத்தியமாக சமைத்துக் கொடுத்துவிட்டு முடிந்தவரை ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது கொள்ளுப்பேத்தியுடன் அளவலாவுவது அவள் கை கால்களை அசைக்கும் போது அருகில் அமர்ந்து கதை பேசுவது என்று சந்தானலஷ்மியும் தன் பேத்தி, கொள்ளுப்பேத்தியை தான் பார்த்துக் கொள்கிறோம் என்ற நிறைவுடன் அங்கிருந்தார்.

அன்று மாலை ஊஞ்சலில் அமர்ந்து கையில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த ஆருத்ராவின் அருகில் அமர்ந்தான் கோகுல்.

அவளுக்கு சத்துபானம் கலந்து அவன் எடுத்து வந்திருக்க, மகளை தான் வாங்கிக் கொண்டு அவளை அதை பருகும்படி பணித்தான்.

ஆனால் அவளோ மகளுடன் சேர்ந்து தன் கணவனின் மார்பில் தலை சாய்த்து கொண்டு அந்த நிமிடத்தை ஆழமாக அனுபவித்தாள்.

இந்த ஒரு வருடத்தில் அவர்கள் இருவருக்கும் ஆன நெருக்கம் பொழுதுகளில் கூட ஏற்படாத ஆழ்ந்த நிம்மதி இந்த நொடி அவளுக்கு கிடைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

அவனும் தன் மகளின் பாதத்தை வருடியபடி தன் மனைவியின் முன்நெற்றியில் முத்தமிட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

கால தேவன் யாருக்கும் காத்திருக்காமல் ஒரு மாதத்தை சட்டென்று விழுங்கிக் கொண்டான். அன்று தன் மகளுக்கு புண்ணியவாஜனை செய்து தன்னோடு சென்னைக்கு அழைத்துச் சென்றான் கோகுல்.

வழியில் பல இடங்களில் நிறுத்தி தன் மனைவியும் மகளும் பத்திரமாகவும் நிம்மதியாகவும் பயணிக்க அந்த பயணத்தை இலகுவாக்கி நேரம் அதிகமானாலும் பரவாயில்லை என்று பார்த்து பார்த்து அழைத்துக் கொண்டு சென்றான்.

இந்த ஒரு மாதம் முழுவதும் கோகுல் தன் மனைவியை மகளையும் பார்த்துக் கொண்ட அழகை கவனித்து இருந்த சந்தானலஷ்மி அவனது வேலை பற்றி அவ்வப்போது கேட்பார்.

“இப்பல்லாம் ஒரு லேப்டாப்பும் இன்டர்நெட்டும் இருந்தால் போதும் பாட்டி. எந்த வேலையும் எங்க இருந்து வேணும்னாலும் நாம செய்யலாம். நேர்ல போய் தான் செய்யணும், நேர்ல பார்த்து தான் பேசணும்னு, எந்த அவசியமும் இல்ல. இதோ ஒரு மாசமா என் ஆபீஸ் வேலை எல்லாம் நான் இந்த கம்ப்யூட்டர்ல இருந்து தான் செஞ்சின்டு இருக்கேன். நீங்க எதுவும் கவலைப்படாதீங்கோ” என்று அவரை அவன் சமாதானம் செய்து விட்டான்.

உள்ளம் குளிர்ந்து போயிருந்தார் சந்தானலஷ்மி. தன் பேத்தியை நல்ல மனிதன் ஒருவன் கையில் ஒப்படைத்து இருக்கிறோம் என்ற நிம்மதி அவருக்கு கிடைத்திருந்தது. தனக்கு பின்னாலும் தன் பேத்தியை கண்ணாக இவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை பிறந்து விட, சென்னைக்கு அவனுடன் தனியாகவே பேத்தியையும் கொள்ளுப்பேத்தியையும் அனுப்பி வைத்தவர், மறக்காமல் சீர் பொருட்கள் அனைத்தையும் அவனது காரின் பின்புறம் அடுக்கி அனுப்ப மறக்கவில்லை.

சென்னைக்குள் வாகனம் நுழைந்தது முதலே ஆருத்ராவுக்கு சின்ன பரபரப்பு இருக்கத்தான் செய்தது. இந்த ஒரு மாதத்தில் தினமும் வீடியோ காலில் அழைத்து ஆதிநாதன் மருமகளிடமும் பேத்தியிடமும் பேசிவிடுவார். சுபா ஒருநாளும் அவளிடம் பேசவில்லை.

இன்னும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எத்தனை நாட்கள் தொடரும் என்று அவள் மனம் லேசாக சலித்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அதனை ஒதுக்கி விட்டாள்.

கோகுலின் கார் நேராக அவள் வாங்கி கட்டிக் கொண்டிருந்த வீட்டின் முன்னால் சென்று நின்றது.

வீடு முழுவதுமாக கட்டப்பட்டு அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதன் அறிகுறி வெளியில் இருந்து பார்க்கும் போதே தெரிந்தது. வாசலில் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டு பலபேரில் அமர்ந்திருப்பதை கண்டவள் குழப்பமான முகத்துடன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கினாள்.

“என்ன கிருஷ் இங்க வந்திருக்கோம்? ஒரே கூட்டமா வேற இருக்கே!” என்று வினவியபடி முன்னே வந்தவள் அங்கே வாசலில் அவளுக்காக காத்திருந்த அவளது தோழி மீரா மற்றும் கேத்தியைக் கண்டதும் உற்சாகமானாள்.

இருவரும் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டதோடு குழந்தையை கொஞ்சி மகிழ்தனர்.

“அட பொண்ணுங்களா என் மருமகளை விடுங்க. என் பேத்தியோட முதல்ல அவ வீட்டுக்குள்ள வரட்டும்.” என்று ஆதிநாதன் குரல் கேட்டதும், தன் மாமனார் இங்கே தான் இருக்கிறார் என்று உணர்ந்து,

“அப்பா” என்று வேகமாக அவரிடம் சென்றாள் ஆருத்ரா. மருமகளுக்கு ஆசி வழங்கியவர் தன் பேத்தியை வாங்கி முத்தமிட்டார். இத்தனை நாட்களில் வீடியோ காலில் பேசிய சில விஷயங்களை நினைவுக்கு வந்து தன் பேத்தியிடம் செல்லம் கொஞ்சியவர் உறவுக்கார பாட்டி ஒருவரை அழைத்து குழந்தைக்கும் அவளுக்கும் ஆலம் சுற்றி உள்ளே அழைத்துச் செல்லுமாறு பணித்தார்.

குழப்பமான முகத்துடன் தன் மாமனாரையும் கணவரையும் மாற்றி மாற்றி பார்த்தவள் சுத்தி இத்தனை பேர் இருக்கும் போது அப்படிக் கேட்பது என்று தயக்கத்தோடு அமைதியாக இருந்தாள்.

இவர்கள் வருகைக்காகவே காத்திருந்தது போல ஆலம் சுற்றி உள்ளே வந்ததும் வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்வு துவங்கப்பட்டது.

தன் மாமியார் அங்கு இல்லாததை கவனித்தவள் இதற்கு மேல் பொறுக்க முடியாமல் “அவங்க எங்க?” என்று தன் கணவரிடம் கேட்டுவிட்டாள்.

ஆனால் அதற்கான பதில் அவளது மாமனாரிடம் இருந்து வந்தது. “அவளுக்கு உடம்பு சரியில்லம்மா
வா நீ வந்து உட்காரு.” என்று தன் மருமகளை துரிதப்படுத்தினார்.

“அது எப்படி? முதல் முதல்ல வீடு கட்டி பால் காய்ச்சறோம், அவங்க இல்லாம எப்படி ஒரு விசேஷம் பண்றது? அதுவும் இல்லாம முதல் முதல்ல குழந்தையை கூட்டிட்டு வந்திருக்கேன். புண்ணியவாஜனைக்கு தான் நீங்க வரல. அதனாலதான் ஜாதகர்ணம் நாமகரணம் கூட பண்ணாம இங்க நான் தூக்கின்டு வந்து இருக்கேன். அவங்க இல்லாம எப்படி என் பொண்ணுக்கு பெயர் வைக்க? பாட்டி வர வேண்டாமா?” என்று உரிமையாக மாமனாரிடம் சண்டைக்கு வந்தாள்.

அவர் சங்கடமான முகத்துடன் அவளை பார்த்துவிட்டு மகன் புறம் திரும்பி “கொஞ்சம் அவளுக்கு புரியறது போல எடுத்து சொல்லு” என்று விட்டு நகர்ந்து சென்றார்.

“என்ன நடக்குது இங்க?” என்று கோபத்துடன் தன் கணவனிடம் அவள் கேள்வி எழுப்ப,

“அம்மாவுக்கு இங்க வர விருப்பமில்லை. போதுமா?நாம இப்போ வீட்டுக்கு பால் காய்ச்சலாமா? பொண்ணுக்கு பெயர் வைக்கலாமா?” என்று இழுத்து பிடித்த பொறுமையுடன் தன் மனைவியிடம் கேட்டான் கோகுல்.

ஆனால் அவளோ பிடிவாதமாக அவர் வந்தால் தான் என்று கூறிவிட்டாள். அவளை புரிந்து கொள்ள முடியாமல் தவிப்புடன் தன் தந்தையிடம் வந்து நின்றான்.

“அவ பிடிவாதமா அம்மா வரணும்னு சொல்றாப்பா” என்று அழுத்தப்படி அவன் கூற,

“நான் அவ கிட்ட பேசுறத நிறுத்தி ஒரு மாசம் ஆச்சு. உனக்கு உன் அம்மா வரணும்னா நீயே கூப்பிடு!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியில் இருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார் ஆதிநாதன்.

கோகுல் தன் மனைவியின் கோரிக்கையை மறுக்க முடியாமல் தன் அன்னையின் கைபேசிக்கு அழைத்தவன் முகவரியை கூறி உடனடியாக கிளம்பி வரும்படி கேட்டுக் கொண்டான்.

சுபாஷினி அங்கே வந்து சேரும் வரை அனைவரும் அமர்ந்து குழந்தையுடன் விளையாடுவது, பேசுவது என்று நேரத்தை கழித்துக் கொண்டிருந்தனர். கேத்தரின் தான் தன் தோழியை திட்டிக் கொண்டிருந்தாள்.

“எப்ப பாத்தாலும் ‘நைநை’ன்ற உன் மாமியார் வரலைன்னு நான் சந்தோஷமா இருந்தா, வேலை மெனக்கெட்டு போன் பண்ணி வர வைக்கிற. நீ எல்லாம் என்ன பொண்ணு?” என்று தன் தோழியை கேட்டவள்,குழந்தையிடம்,

“நீ உன் அம்மா பேச்சைக் கேட்டு வளராத. ஆன்ட்டி உனக்கு எல்லாம் சொல்லி தரேன்.”  என்று குழந்தையோடு கூட்டணி போட முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

வாசலிலேயே தன் அன்னைக்காக காத்துக் கொண்டிருந்த கோகுல் அவர் ஆட்டோவில் வந்து இறங்கியதும், அவரின் தோற்றம் கண்டு துணுக்குற்றான்.

சற்றே மெலிந்து வாடிய முகத்துடன் அவனை நோக்கி வந்தவர் “நான் இப்ப என்ன பண்ணனும்?” என்று கேட்க

“தயவு செஞ்சு உள்ள வந்து என் மனைவியோட மனசு நோகுற படி எதுவும் பேச வேண்டாம். உங்களுக்கு என் பொண்ண தூக்க பிடிக்கலைன்னா கிட்ட கூட வராதீங்க. ஆனா அவ முன்னாடி எதுவும் பேச வேண்டாம். நீங்க வரணும்னு அவ கேட்டுக்கிட்டதால தான் உங்கள கூப்பிட்டேன்.” என்று எங்கோ பார்த்தபடி கூறிவிட்டு விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்று விட்டான்.

ஒரு பெருமூச்சோடு தன் மகனை பின்தொடர்ந்து உள்ளே சென்றார் சுபாஷினி.

தன் மாமியாரை எதிர்நோக்கி வாயிலை அவ்வப்போது பார்த்துக் கொண்டே தன் மகளுடன் அமர்ந்திருந்த ஆருத்ரா மாமியாரின் தோற்றம் கண்டு அதிர்ந்தவளாக சட்டென்று எழுந்து கொண்டாள்.

“எதுக்குடி இப்படி அவசரமா எழுந்துக்கிற? குழந்தை பயந்துக்கிறா பாரு.”என்று மீரா சத்தம் போட்டது கூட அவள் காதில் விழவில்லை.

வேகமாக தன் மாமியாரை நோக்கி வந்தவள் “அம்மா என்ன இப்படி இளைச்சு போயிட்டீங்க? என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? இவர் எதுவுமே என்கிட்ட சொல்லவே இல்லையே!” என்று அவரது நெற்றி, கழுத்தெல்லாம் தொட்டுப் பார்த்தாள் ஆருத்ரா.

அவளது செய்கையில் சுபாஷினி கண்களை விரித்து அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நிற்க மாடியிலிருந்து அங்கு நடப்பதை பார்த்தபடி இறங்கி வந்து கொண்டிருந்தார் ஆதிநாதன்.

அன்னைக்கு முன்னே வீட்டிற்குள் நுழைந்த கோகுலம் மனைவி தன் அன்னையுடன் பேசும் விதத்தைக் கண்டு திகைத்து நின்றான்.

“என்ன ஆச்சு? யாராவது சொல்லுங்க. உடம்பு ஏதும் ரொம்ப முடியலையா? இவ்வளவு இளைச்சு போய் இருக்கீங்களே! ஏம்பா நீங்க அம்மாவை கவனிக்கலையா? எனக்கு வார வாரம் பழம் வாங்கி கொடுத்தீங்க இல்ல, அம்மாவுக்கும் கொடுத்தா என்ன?” என்று உரிமையாக தன் மாமனாரிடம் மாமியாருக்காக அவள் அவரைச் சாடிப் பேசினாள்.

நடப்பது எதையும் நம்ப முடியாமல் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க சுபாஷினி மரத்துப்போன குரலில்

“ஏம்மா தனிக்குடித்தனம் வந்துட்டு, என் பையன பிடிச்சதும் இல்லாம என் கணவரும் என்கிட்ட பேசாத இந்த நிலையை ஏற்படுத்திட்டு, இப்போ என்ன பத்தி இவ்வளவு கவலைப்படுறியே? இதையெல்லாம் என்னன்னு எடுத்துக்கிறது?” என்று அவள் முகத்தையே பார்த்தார்.

“தனிக்குடித்தனமா? என்னம்மா சொல்லறேள்? இந்த வீடு வாங்கும் போது நான் சொல்லி தானே வாங்கினேன்! வாடகைக்கு தான் விடப் போறேன் அப்படின்னு! அப்புறம் ஏன் இன்னும் அதையே நெனச்சுண்டு இருக்கீங்க? இங்க வர்ற விஷயம் கூட எனக்கு தெரியாது. இன்னிக்கு கிராபிரவேசம்ன்னும் எனக்கு தெரியாது. வந்ததும் நீங்க இல்லன்னு உங்கள வரச் சொல்லி கூப்பிட்டேன்.” என்று புரியாத பாவனையில் கணவனை நோக்கினாள்.

அவளின் கரம் பற்றி அருகே அழைத்தவன், “இப்போ விசேஷம் முடியட்டும். நாம அப்புறம் பேசுவோம்” என்று கூற,

“அது எப்படி தனியா நாம இனிமே இங்கதான் இருக்க போறோம்னு சொல்றாங்க அவங்க? இங்க விசேஷத்துக்கு வர கூட இல்ல. எப்படி இந்த விஷயத்தை விட முடியும்?” என்று கணவனிடம் எதிர் கேள்வி கேட்டாள்.

“என்னம்மா ஊர்ல இருந்து சொல்லிக் கொடுத்து கூட்டின்டு வந்துட்டு, இங்க மாத்தி பேசுறியா?” என்று மிகவும் தளர்ந்து போன குரலில் கேட்டால் சுபாஷினி.

“நீங்க முதல் நாள் செஞ்ச அதே விஷயத்தை தான் இன்னைக்கும் செய்றீங்க மா.  எனக்கு காபி பிடிக்கும்னு நீங்களா முடிவு பண்ணிட்டு என் கையில் காப்பிய திணிச்சுட்டு நான் குடிக்கலைன்னு கோவப்பட்டிங்க. உங்களை பிடிக்காம தான் குடிக்காம இருக்கேன்னு நீங்களா முடிவும் பண்ணிட்டீங்க. இப்பவும் அதேதான் செய்றீங்க. இந்த வீடு வாங்கணும்னு முடிவு பண்ணும் போதே நான் சொல்லிட்டு தான் வாங்கினேன். தனியா போகற முடிவு எனக்கு இல்லைங்கிறத தெளிவா தான் நான் சொன்னேன். உங்ககிட்ட ஒன்னு சொல்லிட்டு பின்னாடி போய் ஒன்னு பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கு இருக்கிற உறவு என்றால் பாட்டி, இவரு, அப்புறம் நீங்க ரெண்டு பேரு, இதோ இப்ப இவ. இவ்வளவுதான். உங்க கிட்ட எல்லாம் பொய் சொல்லிட்டு நான் வேற எங்க போக போறேன்?” என்று மாமியாரின் முகத்தை பார்த்து அவள் கேட்டபோது அவள் கண்களில் துளியும் கள்ளத்தனம் இல்லை.

சுபாஷினி குழம்பியவராக “நீ நெஜமாதான் சொல்றியா?” என்று கேட்க,

“அவ நெஜமா சொன்னாலும் இல்லனாலும் நானும் அவளும் இனிமே இங்க தனியா தான் இருக்க போறோம். இது என்னோட கடைசி முடிவு. இதுல மாற்றம் இல்லை” என்று அன்னையிடம் அழுத்தமாகக் கூறினான் கோகுல்.

“இதென்ன அநியாயம்? நீங்களா முடிவு எடுத்துட்டு அதை என் மேல திணிக்கிறீங்க?’ என்று கணவனிடம் கோபமாக வினவினாள் ஆருத்ரா.

“அன்னைக்கு குழந்தையை பார்க்க வந்தப்போ என்னெல்லாம் பேசினாங்கன்னு உனக்கு தெரியாது. நீ கொஞ்சம் அமைதியா இரு. ஏன்… அன்னைக்கு ராத்திரி நீ உன் மனசுல இருந்த எவ்வளவு விஷயங்களை கொட்டினே, உன் மனசு எவ்வளவு பாதிச்சிருந்தா நீ அப்படி பேசி இருப்ப?” என்று தன் மனைவிக்காக மனைவியிடமே வாதாடினான் கோகுல்.

“அன்னைக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது என்று வருத்தத்தில் பேசினாங்க. அது என்ன ரகசியமா? எனக்கு தெரியாம போக? ஹாஸ்பிடல்ல அந்த நாலு சுகரும் என்ன சவுண்ட் ப்ரூஃப்பா? நீங்க வெளியே பேசினது எனக்கு உள்ள கேட்காம இருக்க? எல்லாம் கேட்டுச்சு. நார்மலா முதல் குழந்தை ஆணா பிறக்கணும்னு ஆசைப்படுறதும் பெண் குழந்தையா பிறந்தா வருத்தமா பேசுவதும் இந்த சமூகத்தில் நடக்கிறது தான். இன்னொரு பத்து நிமிஷம் போய் இருந்தா அவங்களே சமாதானமாகி குழந்தை தூக்கி வச்சு கொஞ்சி ‘பார்க்க என் அம்மா மாதிரி இருக்கு, என் மாமியார் மாதிரி இருக்கு’னு ஏதாவது சொல்லி இருப்பாங்க. அதுக்கு இடமே கொடுக்காமல் அவங்களை உடனே அனுப்பி விட்டுட்டீங்களே!”என்று கணவனிடம் அவள் சண்டைக்கு நிற்க முதல் முறையாக சுபாஷினி கண்களை விரித்து தன் மருமகளை நோக்கினார்.

“என்ன பேசுற? முதல் நாள் அவ்ளோ வருத்தப்பட்டியே!” என்று மீண்டும் அவன் அன்று அவள் சண்டையிட்ட நிகழ்வை நினைவுகூர்ந்து,

“நான் ஏற்கனவே ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன். தனியா இருந்தேன். எங்க போறதுன்னு கூட தெரியாம அம்மா வீட்ல போயி அழுகையை அடக்கிட்டு உட்கார்ந்திருந்தேன். நீங்க அங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. திடீர்னு நீங்க வந்தது மட்டும் இல்லாம எதுனால நான் இப்படி இருக்கேன்னு கூட தெரியாத உங்க மனநிலையை பார்த்ததும் நானும் மனுஷி தானே! என்னை அறியாமல் பர்ஸ்ட் அவுட் ஆயிட்டேன். அதுக்காக குடும்பத்தை பிரிச்சுக்கிட்டு தனியா இருக்கணும்னு நான் ஆசைப்பட்டதா உங்ககிட்ட சொன்னேனா? நீங்க தான் இப்படி ஒரு முடிவு எடுத்தீங்கன்னா அப்பா ஏன் இதுக்கு ஒத்துக்கிட்டாரு?” என்று நேராக மாமனாரிடம் சென்று நின்றாள்.

அவரோ இறுக்கமான குரலில், “எனக்கு தெரிஞ்ச என் மனைவியோட குணம் உங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான் பார்த்த குணம் இல்லம்மா. அவ மேல நான் பெரிய மரியாதை வைத்திருந்தேன். நான் சம்பாதித்து கொண்டு வந்த பணத்தை பெருக்கி, இவ்வளவு பெரிய வீடு கட்டி, என் பையன படிக்க வச்சு, எவ்வளவோ பணம் விஷயங்களையும், நான் மனசொடிந்து நின்ன பல நேரங்களில் எனக்கு தோள் கொடுத்த என் மனைவி என்னை பொறுத்த வரைக்கும் பெரிய ஸ்தானத்துல நான் வச்சிருந்தேன். ஆனா மாமியாரா அவன் சில இடங்களில் நடந்து கொண்டது எனக்கு சுத்தமா பிடிக்கல.

குடும்பத்தோட அமைதி கெட்டுடக் கூடாதுன்னு முடிஞ்ச வரைக்கும் நாசுக்காக கண்டிச்சிட்டு ஒதுங்கிட்டு தான் இருந்தேன். ஆனா முதல் முதல்ல பேத்திய கைல வாங்கினப்போ உண்மையிலேயே என் மனசுல அப்படி ஒரு ஆனந்தம். ‘மகாலட்சுமியே நம்ம வீட்டுக்கு வந்துட்டா. என் அம்மா பிறந்துட்டா’ அப்படின்னு என் மனசு அப்படியே துள்ளி குதிச்சுது. ஆனா ஒரு நிமிஷத்துல பொங்குனா பால்ல தெளிச்ச தண்ணி மாதிரி பெண் குழந்தை பிறந்துடுச்சு பேசுனதும், ச்சி இவளும் சராசரி மாமியார் தானா? அப்படின்னு இவ மேல இத்தனை நாள் இருந்த மதிப்பும் சட்டுனு குறைந்து போயிடுச்சுமா.

இவகிட்ட பேசணும்னு கூட தோணல. என்னை என்ன பண்ண சொல்ற?அதான் கோகுல் வந்து நான் தனியா போறேன்னு சொன்னபோது தடுக்க எனக்கு தோணல. வேணும்னா இங்க வந்து பேத்தியை பாத்துக்கலாம்னு என் மனசு நானே சமாதானம் பண்ணின்ட்டேன்.” என்று மகளாக நினைக்கும் தன் மருமகளிடம் விளக்கம் அளித்தார் ஆதிநாதன்.

“நான் ஆசை ஆசையா கல்யாணம் பண்ணிட்டு வந்தது, இருக்கிற இந்த சின்ன கூட்டுக்குள்ள நம்ம எல்லாரும் சந்தோஷமா இருக்கணும். ஒண்ணா இருக்கணும்னு,ஆசைப்பட்டு தானே தவிர சண்டை போட்டு ஆளுக்கு ஒரு திசைக்கு போகணும்னு இல்ல! அம்மா அப்பா இல்லாத எனக்கு அம்மா அப்பாவா உங்க அன்பு கிடைக்கணும் என்பதற்காக தான் எவ்வளவோ சின்ன சின்ன பிரச்சனைகள் வந்த போதும் நான் அத பெரிசு படுத்தவே இல்ல.

முன்னாடி ஒரு தடவை தனியா போகணும்னு எனக்கு கூட தோன தான் செஞ்சது. ஆனால் ஆபீஸ்க்கு போகும்போது நான் ரொம்ப நேரம் யோசித்து பார்த்தேன் ‘தனியா போயிட்டா என்ன நடந்துரும்?  நாங்க ரெண்டு பேரும் என்ன பண்றோம்னு நீங்களும், நீங்க என்ன பண்றீங்களோனு நாங்களும்’ தனித்தனியாக உட்கார்ந்து வருத்தப்பட்டுட்டு தான் இருப்போம். அதுக்கு கோவமா இருந்தாலும் ஒரே வீட்டுக்குள்ள முகத்தை பார்த்துட்டு இருந்திடலாம்னு தோணுச்சு.

அந்த நேரக் கோபம் அடுத்த நேரம் மறந்து போச்சு. அதுக்கப்புறம் ஒரு சில நேரங்களில் நானும் அவங்களும் சிரிச்சு கூட பேசினோம். எல்லாம் இருக்கிறது தானே குடும்பம்! வெட்டிட்டு போறதுக்கு எதுக்கு குடும்பம்? எதுக்கு கல்யாணம்?” என்று பேசிய தன் மருமகளை வேகமாக வந்து அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார் சுபாஷினி.

“என்ன மன்னிச்சிடு ஆருத்ரா. கேட்பார் பேச்சை கேட்டு நான் தப்பா நடந்துட்டேன். நடுவுல அவர் கூட அவங்களோட முகத்தை எனக்கு காட்ட முயற்சி பண்ணினாரு. ஆனாலும் பிறந்து வீட்டில் இருந்தே அவங்க என் சொந்தம்ங்கறதுனால எனக்கு கெடுதல் நினைக்க மாட்டாங்கன்னு நினைச்சு அவங்க சொன்னத நான் நம்பி நீ என் மகனை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறேனு தப்பா நினைச்சு தான், இப்படி எல்லாம் பண்ணிட்டேன். உனக்கு குழந்தை பிறந்த விஷயம் கேள்விப்பட்ட அப்ப நான் உண்மையிலேயே ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் தகவல் சொல்லும் போது “பொண்ணா!” அப்படின்னு அவங்க கேட்கவும் என் மனசுல ஒரு மாதிரியான எண்ணம் விழுந்துடுச்சு, என்னை அறியாமல் தான் அன்னைக்கு கோவத்துல ஏதோ பேசிட்டேன். எனக்கு மட்டும் என் பேத்தி மேல அன்பு இல்லையா என்ன?” என்று சுபாஷினி கண்ணீர் விட,

“அழாதீங்கம்மா நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட எவ்வளவு அன்பா பேசினீங்க? கல்யாணம் முடிஞ்சு வந்த முதல் கொஞ்ச நாள் என்கிட்ட பிரியமா தான் இருந்தீங்க. சில விஷயங்கள் நீங்க வளர்ந்த, நீங்க பழக்கப்பட்ட சூழ்நிலையினால அதே மாதிரி இருந்தீங்களே தவிர என்கிட்ட அன்பு காட்டுவதில் குறை வைக்கலையே! யாரோ ஒருத்தர் உங்க மனச கலைச்சிட்டாங்கன்றது தெரிஞ்சதுனால தான் நானும் பொறுமையா போனேன்.

என் அன்பு என் குணமும் என்னோட ஆசையும் உங்களுக்கு புரிஞ்சிட்டா கண்டிப்பா இந்த குடும்பம் பிரியாது என்கிற நம்பிக்கை உங்களுக்கு வந்துரும் என்பதற்காக தான் நான் பொறுமையா இருந்தேன். இது எல்லாத்தையும் முதல் நாளே என்னால விளக்கி சொல்லி இருக்க முடியும்.

வாய் வார்த்தையால சொல்லி வர நம்பிக்கை ரொம்ப நாள் நிலைக்காது. நீங்களா என்ன பார்த்து தெரிஞ்சுக்கட்டும்னு தான் நான் அமைதியாக இருந்தேன்.” என்று விளக்கிய தன் மருமகளை பெருமை பொங்க பார்த்தார் ஆதிநாதன்.

தன் மனைவியின் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டு” நீ நெஜமாதான் சொல்றியா? எந்தவித மன உறுத்தலும் இல்லாம அம்மா கூட சேர்ந்து அதே வீட்ல இருக்க முடியும் என்று உனக்கு தோணுதா?” என்று கேட்டான் கோகுல்.

“நான் தான் சொன்னேனே! நான் கல்யாணம் பண்ணிட்டு கணவர் மட்டும் வேணும்னு நினைச்சு வரல. அம்மா அப்பாவும் வேணும்னு நினைச்சு தான் வந்தேன். என் அம்மா திட்டி இருந்தா நான் பொறுத்து போயிருப்பேன் இல்ல.” என்று தன் கணவனின் கண்களை நோக்கி அவள் கூறிய போது அவளை இழுத்து அணைத்து ஆரத்தழுவி கொண்டான்.

அவனுக்கும் தன் தாய் தந்தையை வயதான காலத்தில் பிரிந்திருக்க விருப்பமில்லை தான். ஆனால் தன் மனைவியின் மனநிலையும் தனக்கு முக்கியம். ஒவ்வொரு நாளும் தன் வேலையை முடித்துவிட்டு வந்து வீட்டில் என்ன பிரச்சனை நடக்கிறதோ என்று குழப்பத்துடன் தானும் நிம்மதியற்று வாழ முடியாது என்றுதான் தனியாக சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான் கோகுல். ஆனால் அவனது மனைவியோ மிகப்பரந்த தன் மனதை கொண்டு அனைத்தையும் ஒரு நொடியில் மாற்றி விட்டாள்.

சுபாஷினி வாய் ஓயாமல் தன் மருமகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். அவள் அதை பெரிது படுத்தாமல் அவரையும் ஆதிநாதனையும் மனையில் அமர்ந்து கிரகப்பிரவேசத்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டு, குழந்தையின் ஜாதகர்ணம் நாமகரணத்தை தம்பதி சமேதராக கோகுலும் ஆருத்ராவும் அமர்ந்து தங்களின் குட்டி தேவதைக்கு ‘கமலி’ என்று பெயர் சூட்டி நாமகரணம் செய்து, ஆதிநாதனின் தாய் பெயரான ‘சீதாலட்சுமி’ என்ற பெயரை ஜாதகரணம் செய்தனர்.

அதில் ஆதிநாதனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சுபாஷிணியால் இன்னும் நடந்தவைகளை நம்ப முடியாமல் திணறியபடி இருந்தார்.

வந்தவர்களை உபசரித்து அனுப்புவதில் கோகுல், ஆதி, சுபா மூவரும் பிசியாகி விட, குழந்தைக்கு அமுதூட்டி விட்டு உள்ளறையில் அயர்வாக அமர்ந்திருந்த தோழியிடம் வந்தனர் மீராவும் கேத்தரினும்.

மீரா தோழியை மெச்சிதலாக பார்த்து கன்னம் கிள்ளி முத்தம் வைத்தாள். கேத்தரின் இருவரையும் முறைத்துவிட்டு,

“மனசுல பெரிய சரோஜா தேவின்னு நினைப்பு தானே உனக்கு? உன் மாமியார் பேசிய பேச்சுக்கும், செய்த செயலுக்கும் நானாக இருந்தா கண்டிப்பா எப்பவோ தனியா வந்திருப்பேன். இப்ப உன் புருஷன் உனக்காக யோசிச்சு தனியா வராரு, வேண்டாம்னு சொல்ற? மூளை மழுங்கிப் போச்சு டி உனக்கு.” என்று கோபம் காட்டினாள்.

“இல்ல கேத்தி, என் மாமியார் குணம் நல்ல குணம் தான். யாரோ சொன்னதை நம்பி அவங்க இன்செக்யூரிட்டியால இந்த மாதிரி நடந்துக்கிட்டாங்க. அன்னைக்கு பெண் குழந்தை பிறந்தது பத்தி பேசும் போது அவங்க குரலே வெளில வரல. ஏன்னா அது தப்புன்னு அவங்களுக்கும் தோனதான் செய்தது. இதுவே அவங்க வெடுக்குன்னு பேசி இருந்தா அவங்க முகத்தில் கூட முழிச்சு இருக்க மாட்டேன் டி.

நான் சரோஜா தேவி இல்லன்னாலும் அன்புக்கு அடிமை தான். அவங்க இனிமே என்கிட்ட அம்மா பாசம் காட்ட ரெடியா இருந்தா அதுக்கான வாய்ப்பை இழக்க நான் தயாராக இல்ல டி” என்று கூறி தூங்கிக் கொண்டிருந்த தன் மகளை தடவிக் கொடுத்தாள்.

“நீயே அம்மா ஆனதுக்கு பிறகும் நீ அம்மா பாசத்துக்கு ஏங்கறியா டி?* என்று அவளை ஆதுரமாக நோக்கினாள் கேத்தரின்.

“எந்த வயதானா என்ன? அம்மா பாசம் தேவைப்படும். என் மாமியார் முழுசா எனக்கு அம்மாவா இருப்பாங்கன்னு நான் சொல்லல. ஆனா பாதியாவது இருக்க முயற்சி செய்வாங்க தானே! காலி பானைக்கு, குறை குடம் அதிகம் தான் இல்லையா? காலப்போக்கில் அவங்க நிறைய மாறுவாங்க. அன்பும் நிறைய கிடைக்கும். நம்புவோம் டி. அதானே வாழ்க்கை.” என்று சிரித்த தோழியை திட்டத் தோன்றவில்லை அவளுக்கு.

இவளுக்காக பாட்டியிடம் சண்டை போட்டிருக்கிறாள் கேத்தரின். கோகுலிடம் சண்டை போட்டுவிடக் கூடாது என்று தான் வளைகாப்பு நிகழ்வுக்கு வராமல் தவிர்த்தாள். இதோ இன்று தோழியின் முடிவில் அவளுக்கு சம்மதம் இல்லாமல் போனாலும் அவளது மகிழ்ச்சியே பிரதானம் என்று எண்ணினாள்.

“நீ இவ்வளவு சொல்ற, அதுனால பேசாம போறேன். நாளைக்கு உனக்கு கேட்க ஆள் இல்லன்னு உன் மாமியார் ஏதாவது பேசினா இந்த கேத்தரின் வருவா” என்று சொல்ல,

“தாராளமா நீ வாம்மா ஆனா சண்டை போட நான் விட மாட்டேன்” என்று கூறி அவர்களிடம் வந்து அமர்ந்தார் சுபா.

சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு மீராவும் கேத்தரினும் கிளம்ப, வந்தவர்கள் கிளம்பி விட்டதால் கோகுலும் ஆதிநாதனும் கூட அங்கே வந்தனர்.

தூங்கும் குழந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் சுபா மன்னிப்பு வேண்டினார்.

“எங்க இவர் என்கிட்ட பேசாமலே போயிடுவாரோன்னு பயந்திட்டேன் ஆரு. இவனும் தனியா போறேன்னு சொன்னதும் என் தப்பெல்லாம் பூதாகாரமாக தெரிஞ்சுது. இருந்தாலும் இனி எதையும் மாற்ற முடியாதே எல்லாம் போச்சேன்னு மனசு வெறுத்து போய் ஆத்துல உக்காண்டு இருந்தேன்.” என்று சுபா அங்கலாய்ந்தார்.

“போனது போட்டும் மா. நான் தான் சொன்னேனே! நான் இவரை மட்டும் விரும்பி, இவர் வேணும்ன்னு கல்யாணம் பண்ணிக்கல, இவர் உங்களை பிரிய மாட்டேன்னு சொன்ன வார்த்தையை நம்பியும் தான் பண்ணின்டேன்.” என்று கூற,

பெருமையாக தன் மருமகளை நோக்கினார் ஆதிநாதன்.

குழந்தை சிணுங்கியது தன் பேத்தியை மடியில் எடுத்துக் கொண்டு சுபா கொஞ்சத் துவங்க, வெளியில் இருக்கும் அறையில் அமர்ந்து கொண்டார் ஆதி.

வீட்டை நிதானமாக கணவனுடன் சுற்றிப்பார்த்த ஆருத்ரா மாடியில் இருந்த பால்கனியில் வந்து அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“எனக்காக உங்க அம்மாவை விட்டுட்டு வர முடிவு பண்ணிட்டீங்களா?” என்று அவன் தாடையில் இடித்து அவள் வினவ,

“எனக்கு எல்லாமே நீ தானே டி?” என்று அவள் உச்சில் இதழ் பதித்தான் கோகுல கிருஷ்ணன்.

அவள் கண் சிமிட்டி சிரித்து “உன்னை பார்க்கும் போதெல்லாம் அந்த பப்ல கேட்ட பாட்டும், அப்ப பார்த்த உன் முகமும் நினைவுக்கு வரும்.”

‘தரையில் விண்மீன்
வருவதுண்டு வந்தாலும் கண்
அதை பார்ப்பதுண்டு பார்த்தாலும்
கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும்
உன் மனம்

மழையே மனம்
உன்னாலே பூப் பூக்குதே’

“உன்னை பார்த்த உடனே என் மனசுக்குள்ள பூப் பூத்துச்சு. இப்ப வரைக்கும் ஒவ்வொரு நொடியும் பார்க்கும் போதெல்லாம் பூக்குது.”  என்று அவன் மார்பில் தஞ்சமானாள்.

18 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே – final episode”

  1. Avatar

    வாவ் அருமையான பெண் ஆருத்ரா, சுபா இந்த மாதிரி ஒரு மருமகள் கிடைக்க குடுத்து வைச்சிருக்கணும் நீங்க, இந்த காலத்துல கழுத்துல தாலி ஏறின உடனே புருஷன பிரிச்சு தனிக் குடித்தனம் கூட்டிண்டு போற பொண்ணுங்க மத்தில இவள மாதிரி மருமக கிடைச்சது உங்க புண்ணியம், இனிமேலாவது மாமியாரா இல்லாம அம்மாவா நடத்துக்கோங்க

  2. Kalidevi

    Very good ending aaru mudivu vera mari irukjmo starting twist vachi start panitinga sis. But superb ending aaru va last purinjikittanga ava mamiyar ipo ava mansula irukurathum therinjikittanga nalla pesuravanga pesuvanga athellam nama eduthukitta namma life tha pogum athanala ethuva irunthalum inga vachi ketu sanda potu clear panitu samadhanam agidalame aaru ninacha mari pirinji poga ninaikalaye last varai. Congrats

  3. Avatar

    Arumaiyana kathai. Maami character correct ah point out pannirukkeenga aduththavanga pechchu kettu thaan enga pala per nadanthukkuraanga. Azhaghana and niraivaana mudivu. Vazhthukkal 👏👏👍👍👍

  4. Priyarajan

    Wow it’s lovely…… Gokul aaru💕💕💕💕💕💕💕💕💕💕 aadhi appa 👏👏👏👏👏👏subha maami aarambathula konjam athigama react panninalum kadaisila purinjikitangala👌👌👌👌👌👌👌👌👌👌👌 ethana vayasu aanalum amma iruntha athu aayiram madangu palam than….. 💕💕💕💕💕💕💕💕💕💕💕 super super super 👌👌👌👌👌👌👌👌👌

  5. Avatar

    ஆரு கடைசி வரைக்கும் தன் மாமியார விட்டு கொடுக்கவே இல்ல அதுவே அவங்கள மாத்திடுச்சி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
    உண்மையான அன்பு எல்லாவற்றையும் மாற்றம் சக்தி வாய்ந்து.

  6. Avatar

    Wonderful story sis.aaru oda indha decision ah ava point of view la partha thappu sollamudiyathu than avalukku uravu venum than marriage ku outhukita apadi irukum.pothu thaniya varathu la ava virumba matala yae gokul kita annaiku sandai potathu kooda ivan ava mananilamai ah purinchikala than athuvum avaluku irundha pregnancy time la irundha moos swings than annaiku andha alavuku ava reaction irundha thuku karanam aana starting la sonnathu pola aaru eppovum matured than athae pola gokul unmai ah vae nalla husband than pa and aadi avar nijamavae Aaru ku appa than suba avanga ithuku apuram konjam aachum change aana kooda pothum ava aasai pattathu pola anbu kedaikira oru family life avaluku irukum

  7. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    ஜெயலட்சுமி கார்த்திக்
    (அத்தியாயம் – 26 Final)

    இந்த எமர்ஜன்சி சூழ்நிலையை தவிர்கத்தானே… அவ முதல்ல இருந்தே கோகுல் கூடவே சென்னையில இருக்க நினைச்சது.

    இங்கே பாதி ஹஸ்பெண்ட் வேலை, வேலைன்னு வேலைக்கும் போயிடறதோட
    குழந்தை பிறப்புக்காக சடங்கு, சம்பிரதாயம்ன்னு மனைவிங்க அம்மா வீட்டுக்கும் போயிடறதால, நிறைய ஆண்களுக்கு பெண்களோட மெட்டர்னிட்டியோட முழுத்
    தன்மையும், உபாதைகளும் தெரியறதும் இல்லை, புரியறதும் இல்லை. அழகா கையில லட்டு மாதிரி
    குழந்தை வரது மட்டும் தான் தெரியுது. என்னத்தைச் சொல்ல…?

    ஆனா, இப்ப இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருதுன்னு தோணுது. அதுவும் தவிர இந்த மாதிரி கதைகளை படிச்சாலே போதும், இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு கூட, அந்த மாதிரி கன்சீவ்வான நேரத்துல பெண்களுக்கு மனவுளைச்சலும், உடல் உபாதைகளும் ஏற்படுதான்னு
    மிகத் தெளிவா புரியும்.

    அடிப்பாவி மகளே..! இந்த சுபா மாறவே மாட்டாளோ…? இவளும் ஒரு பொம்பிளைத்தான், மகனுக்கு தேடித் தேடி, கட்டி வைச்சதும் ஒரு பொம்னாட்டியைத்தான்.
    இதுல பெண் குழந்தை மட்டும் பேத்தியா பிறக்க கூடாதோ..?
    இது எந்த ஊரு நியாயம் டா சாமி…?

    ஐய்… இந்த கோகுலை எங்களுக்கே ரொம்ப பிடிக்குதே.
    அப்ப ஆருவுக்கு பிடிக்குதுன்னா சும்மாவா. ஆருத்ரா ஒரு விஷயத்துல ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கா. அம்மா அப்பா போனாலும், அக்கறையாவும் ஆசையாவும் பார்த்துக்கிற பாட்டி இருக்காங்க தானே…!

    எல்லாம் இருக்கிறது தானே குடும்பம் ! வெட்டிட்டு போறதுக்கு எதுக்கு குடும்பம் ?
    எதுக்கு கல்யாணம்…?
    வாவ்…! அழகான வரிகள்.

    “கல்யாணம் பண்ணிட்டு கணவர் மட்டும் வேணும்ன்னு
    நினைச்சு வரலை. அம்மா அப்பாவும் வேணும்ன்னு நினைச்சு தான் வந்தேன்…”
    கோல்டன் வார்ட்ஸ்.

    ஆனா, இந்த காலத்து பசங்க அம்மா அப்பாவே ஒரு வார்த்தை ஹார்ஸா சொல்லிடக் கூடாதுன்னு நினைக்குதுங்க
    அது வேற விஷயம்.

    காலி பானைக்கு, குறை குடம் அதிகம் தான். காலப்போக்கில் மாற்றம் வரும்…நம்புவோம்
    நம்பிக்கை தானே வாழ்க்கை..!
    வாவ்..! வாவ்…! அதர் கோல்டன் வார்ட்ஸ். கை தட்டுறது காதுல கேட்குதா சகி..!

    இந்த ரைட்டரோட ஸ்பெஷாலிட்டியே இது தான்.
    எப்படியும் ஹார்ட் டச்சிங் &
    எதார்த்தமான முடிவை கொடுத்துடுவாங்க. யாரையும் விட்டுத் தர மாட்டாங்க. அட.. அவங்களையே விட்டுக் கொடுக்க மாட்டாங்கன்னா…
    பா்ர்த்துக்குங்களேன். அவங்க கதைகளும், எழுத்துகளும் மனசுல அப்படியே நின்னு நிலைச்சிடும்.

    வாழ்க்கைக்கு வேண்டிய முக்கியமான கருத்தை, இதைவிட அழகான யாராலேயும் சொல்ல முடியாது.
    வாழ்த்துக்கள் சகி..!
    👏👏👏
    CRVS (or) CRVS 2797

  8. Avatar

    ஆரம்பம் முதலே இருந்து விறுவிறுப்பாக குறை சொல்லாத அளவுக்கு அழகாக தெளிவாக கொண்டு போனீர்கள்.இன்றைய இளம் தலைமுறையினருக்கு இந்த கதையை படிக்கும் போது நல்ல அறிவுரை தரும் என்று நம்புகிறேன்

  9. Avatar

    மிகவும் அருமை ஆருத்ரா செம்ம கேரக்டர் சொல்ல வார்த்தை இல்லை அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நட்சென்று பதிந்து விட்டார்கள்

  10. Avatar

    Wonderful ending. Romba nalla kathai 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *