Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்.. 25

மயங்கினேன் நின் மையலில்.. 25

தருண் பூஜாவை பற்றி கேட்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவனோ, என்ன பேசுவது என்று தெரியாமல்  “நீங்க என்ன கேட்கிறீங்க தருண்? எனக்கு எதுவுமே புரியலையே” என்று எதுவும் தெரியாதவன் போல் நடித்தான்.

Thank you for reading this post, don't forget to subscribe!

“இல்ல கண்ணன்… நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல. எனக்கு எல்லாமே ஓரளவு புரிஞ்சிருச்சு. ஆனா அதை உங்க  வாயால தெளிவா சொல்லணும்னு எதிர்பார்க்கிறேன்” என்று கேட்டான் தருண்.

“இல்ல இல்ல தருண்… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமே இல்லை. பூஜா உங்க கிட்ட என்ன சொன்னா?” என்று கேட்டான் கண்ணன்.

“பூஜா என்கிட்ட எதுவுமே சொல்லல. அதே சமயம் என்னால அவகிட்ட எதையும் கேட்கவும் முடியாது. இதை போய் நான் பூஜா கிட்ட கேட்டா அவங்க இதை எப்படி எடுத்துப்பாங்கன்னு எனக்கு தெரியல. அதனால தான் உங்ககிட்ட கேட்கிறேன். நீங்க கண்டிப்பா உண்மையை சொல்லுவீங்கன்னு நம்புறேன்” என்று தருண் சொன்னதும் கண்ணனுக்கு எதுவும் புரியவில்லை.

“இவர் கேட்கிறதெல்லாம் பார்த்தா, பூஜா இவர் கிட்ட எதுவுமே சொல்லலைன்னு தான் நினைக்கிறேன். ஆனா பூஜா சொல்லாம இருக்கும் போது நாம சொல்லிட்டா அது அவளோட வாழ்க்கைக்கு எதுவும் ஆபத்தா ஆகிறதா?  அது மட்டும் இல்லாம தருணோட குணத்தை பத்தி எனக்கு எதுவுமே தெரியல. நான் சொல்ற விஷயத்தை அவர் எப்படி புரிஞ்சுப்பாரு? எப்படி எடுத்து பாருன்னு எனக்கு தெரியல. அதனால கூட பூஜா இன்னும் உண்மைய சொல்லாம இருக்கலாம். அதே சமயம் இவர் இவ்வளவு ஸ்ட்ராங்கா கேட்கிறதா பார்த்தா கண்டிப்பா அவருக்கு  எங்க மேல சந்தேகம் வந்து இருக்கு. இதுக்கு மேலயும் நாம உண்மைய சொல்லாம  இருந்தா கண்டிப்பா பூஜா பத்தி தான் தப்பா நினைச்சுப்பாரு.  நல்லதோ கெட்டதோ உண்மையை சொல்லிடலாம். இப்போ உண்மைய சொல்லாம இருந்தா மட்டும் எதுவும் மாறப் போறது கிடையாது. தருணோட சந்தேகம் இன்னும் அதிகமா தான் ஆகும்” என்று தன் மனதில் முடிவெடுத்தவனோ பூஜாவை பற்றி தருணிடம் சொல்ல துணிந்தான்.

“அது ….வந்து… தருண் நீங்க நினைக்கிறது எல்லாமே உண்மை தான். நானும் பூஜாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சோம். ஒரு வருஷமோ இல்லை ரெண்டு வருஷமோ இல்ல. கிட்டத்தட்ட எட்டு வருஷம்….  நானும் பூஜாவும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம். ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். ஆனா வேலைக்கு வரும்போது மட்டும் ரெண்டு பேருக்கும் வேற வேற இடத்துல கிடைச்சிருச்சு. ஆனாலும் எங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த காதல் கொஞ்சம் கூட குறையவே இல்லை. ஆனா விதி வசத்தால எங்க அண்ணனுக்கும் பூர்ணாவுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகி, பூர்ணா ஓடிப்போய்ட்டாங்க.  அப்படி இப்படின்னு எல்லா விஷயமும் கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள நடந்து முடிஞ்சிருச்சு. உண்மையை சொல்லனும்னா உங்களுக்கும் பூஜாவுக்கும் கல்யாணம் ஆகும் போது நான் அந்த கோவிலில் தான் இருந்தேன். பூர்ணா  என் கூட தான் இருக்காங்கன்னு சொல்றதுக்காக தான் நான் பூஜாவுக்கு போன் பண்ணிட்டே இருந்தேன். ஆனா பூஜா உங்க கூட கல்யாணம் நடக்க போறதால என் கூட பேச முடியாது. இதுக்கப்புறம் என் கூட பேசவே மாட்டேன், அது ரொம்ப தப்புன்னு சொல்லி, நான் சொல்ல வந்ததை கூட கேட்காம உங்க கல்யாண விஷயத்தை பத்தி மட்டும் சொல்லிட்டு போனை வச்சுட்டா. பூஜா சொன்ன விஷயம் எனக்கு பெரிய ஷாக்கா இருந்தது.  உடனே நான் அவசர அவசரமா கிளம்பி வந்தேன்.   அதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. நீங்க பூஜா கழுத்துல தாலி கட்டுறதை நான் என் கண்ணால பார்த்தேன். அந்த நிமிஷமே ஏண்டா உயிரோட இருக்கோம்ன்னு தான் தோணுச்சு. அந்த அளவுக்கு அந்த விஷயம் எனக்கு வலியா இருந்தது. ஆனால் எங்க காதல் மேல சத்தியமா சொல்றேன் தருண், உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் பேசிக்கணும்ன்னு நினைச்சது கூட இல்லை. அதே சமயம் பேசிக்கவும் இல்லை. நானும் பூஜாக்கு போன் பண்ணி என்ன தொந்தரவும் பண்ணல. பூஜா என் கிட்ட கடைசியா போன்ல பேசினது உங்க கல்யாணத்துக்கு முன்னாடி தான். நானும் இதுக்கு அப்புறம் பூஜாவை எந்த தொந்தரவும் பண்ணக்கூடாது, அவள் வாழ்க்கையில இருந்து மொத்தமா விலகனும்ன்னு நினைச்சு தான் இவ்வளவு நாள் அவ கிட்ட பேசாம இருந்தேன். ஆனா இப்போ பூர்ணாக்காக நான்  போன் பண்ண வேண்டியதா ஆகிடுச்சு.”  என்று பூஜாவை பற்றி சொல்லி முடித்தான் கண்ணன்.

கண்ணன் எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகும் தருண் அமைதியாகவே இருந்தான்.  அவனுடைய அந்த அமைதி கண்ணனுக்கு பயமாக இருந்தது.

“தருண்.. பூஜா ரொம்ப நல்ல பொண்ணு. அவளை நல்லா பார்த்துப்பீங்கன்னு  நம்புறேன். இதுக்கு அப்புறம் பூஜாவை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன். நான் தொந்தரவு பண்ணாலும் கூட, பூஜா என் கூட பேச விரும்ப மாட்டா. இந்த கல்யாணம் அவளுக்கு   பிடிக்காம   நடந்ததா இருக்கலாம்.   அது இரண்டாவது விஷயம். ஆனால் இதுக்கு அப்புறம் பூஜா என் கூட பேசறதை  எப்பவுமே விரும்ப மாட்டா. இந்த எட்டு வருஷத்துல நான் அவளை புரிஞ்சுகிட்ட விஷயம் இதுதான்.  இதுக்கு அப்புறம் பூஜா எப்பவுமே உங்க மனைவி தான். இதுக்கு அப்புறம் உங்க வாழ்க்கையில் நான் எப்போதுமே குறுக்க வரமாட்டேன். அது மட்டும் இல்லாம இந்த கல்யாணம் பூஜா விருப்பத்தை கேட்டு நடக்கலை. அப்படி இருக்கும் போது அவளையும் நீங்க எந்த விதத்திலும் தப்பு சொல்ல முடியாது.  அதனால அவளோட மனசை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. இவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் தருண். கடைசியா உங்ககிட்ட ஒன்னே ஒன்னு ரெக்வஸ்ட்டா கேக்குறேன். என்னை காதலிச்சா அப்படிங்கற ஒரே காரணத்துக்காக பூஜாவை தண்டிச்சுறாதீங்க. பூஜாவோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும். அவளை எப்பவுமே சந்தோஷமா பாத்துக்கோங்க தருண்” என்று சொன்ன  கண்ணன், தருணின் இரு கைகளையும் பிடித்த படியே கண்ணீர் விட்டுக் கொண்டு கெஞ்சினான்.

கண்ணனின் இத்தகைய வார்த்தைகள் தருணின் மனதில் ஆழமாக பதிந்தது.

கண்ணன் பேசிய வார்த்தைகளை வைத்தே அவர்கள் இருவரின் காதலும் எத்தகையது என்பதை புரிந்து கொண்டால் தருண்.

“சரி கண்ணன் நீங்க சொல்ற எல்லா விஷயமும் புரியுது. எல்லாத்துக்கும் மேல உங்களுக்கு பூஜாவை பத்தி எந்த அளவுக்கு தெரியுமா, அதே அளவுக்கு எனக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது அவங்களோட கடந்த காலத்தை வச்சு நான் என்னைக்குமே அவங்களை நடத்த மாட்டேன்” என்று சொன்னான் தருண்.

தருணின் இத்தகைய வார்த்தைகள் கண்ணனுக்கு ஆறுதலாகவே இருந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் தருண்… நீங்க இவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுப்பீங்கன்னு  நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல. உங்ககிட்ட பூஜா இதை பத்தி எல்லாம் சொல்லி இருப்பான்னு தான் நினைச்சேன். ஆனா அவளோட சூழ்நிலையும் எனக்கு புரியுது. எந்த மாதிரி ஒரு சூழ்நிலையில அவளோட கல்யாணம் நடந்ததுன்னு எனக்கே தெரியும். அப்படி இருக்கும் போது அவளால  இந்த கல்யாண வாழ்க்கைக்கு பழகவே கொஞ்ச நாள் ஆகும். அதுக்கு அப்புறம் உங்ககிட்ட பொறுமையா அவளோட கடந்த காலத்தை பத்தி சொல்லலாம்னு நினைச்சிருப்பா.  அதனால நீங்க பூஜாவை தப்பா எடுத்துக்காதீங்க” என்று பூஜாவுக்காக பேசினான் கண்ணன்.

“நீங்கள் சொல்லலைன்னாலும்  நான் கண்டிப்பா பூஜாவை தப்பா எடுத்துக்க மாட்டேன். எனக்கு இன்னும் ஒரே ஒரு ரெக்வெஸ்ட் கண்ணன்”  என்று கேட்டான் தருண்.

“என்ன தருண் சொல்லுங்க” என்று கண்ணன் கேட்டதும் “உங்க கிட்ட உங்களோட கடந்த காலத்தை பத்தி கேட்டேன்ன்னு பூஜாவுக்கு தெரிய வேண்டாம். தெரிஞ்சா அவங்களுக்கு   ரொம்ப கஷ்டமா இருக்கும். அதுமட்டுமில்லாம நான் சந்தேக பட்டு கேட்ட மாதிரி ஆகிரும்.  எனக்காக இதை மட்டும் பண்ணுவீங்களா?” என்று கேட்டான் தருண்.

“கண்டிப்பா… நான் சொல்ல மாட்டேன்” என்று தருணுக்கு வாக்குறுதி கொடுத்தான் கண்ணன்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த இடத்திற்கு பூஜா வந்துவிட்டாள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு இவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. கண்ணனை பற்றி தெரிந்திருக்குமா என்ற பயத்துடன் அவர்களை நோக்கி வந்தாள்.

பூஜா அங்கே வருவதை பார்த்த தருணும் “வாங்க பூஜா…. பூர்ணாவை பத்தி தான் பேசிட்டு இருக்கோம். எப்படி பூர்ணாக்கும் கிஷோருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம். கண்ணனை பார்க்க ரொம்ப நல்லவரா தான் தெரியுறாரு. பூர்ணா கல்யாணத்துல ஏதாவது உதவி வேணும்ன்னா  கேட்க சொல்லி இருக்காரு” என்று புன்னகைத்தபடியே பூஜாவை  பார்த்து சொன்னான் தருண்.

இதை கேட்ட பின்பு தான் அவளுக்கு   அப்பாடா…… என்பது போல் இருந்தது. அவர்களை நெருங்கி வந்த பூஜா தருணை பார்த்து “பூர்ணாவை நம்ம வீட்டுக்கே  கூட்டிட்டு போயிடலாமா? அதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே? ஏன்னா அப்பா அம்மா இன்னும் அக்கா மேல கோவமா தான் இருப்பாங்க. இந்த நிலைமையில அவளை பார்த்தா கூட அவங்க மனசு இறங்குவாங்களான்னு எனக்கு தெரியல.  அக்கா மேல இன்னும் கோபப்படுவாங்க.  அப்படி இல்லன்னா அக்காவோட இந்த நிலைமையை பார்த்து உடைஞ்சு போய்டுவாங்க. அதனால அக்காவுக்கு குணமாகிற வரைக்கும் நம்ம வீட்டிலேயே இருக்கட்டும். அதுக்கு அப்புறம்  எங்க வீட்ல இதை பத்தி பேசலாம்” என்று சொன்னாள்.

“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல பூஜா.  பூர்ணா நம்ம வீட்டிலேயே இருக்கட்டும். ஓகேவா? நானும் கண்ணனும்  டாக்டரை பார்த்து பேசி பூர்ணா  ஹெல்த் பத்தி விசாரிச்சிட்டு வர்றோம்.  எப்போ அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு கேட்கிறோம்” என்று சொன்னான் தருண்.

இதைக் கேட்ட பூஜாவோ “நாம ரெண்டு பேரும் போகலாம். கண்ணன் இதுவரைக்கும் நமக்காக பண்ண உதவியே போதும். இதுக்கு அப்புறமா அவரோட வேலையை அவர் பார்க்கட்டும். பூர்ணாவை நாம ரெண்டு பேரும் பார்த்துக்கலாம்” என்று தருணை பார்த்து சொன்னவளோ, கண்ணனை பார்த்து “நீங்க கிளம்புங்க கண்ணன். நாங்களே பூர்ணாவை பாத்துக்கிறோம். நீங்க இதுவரைக்கும் பூர்ணாவுக்கு பண்ண உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்”   என்று  கண்ணனை அங்கிருந்து போக சொன்னாள்.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்.. 25”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *