Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… 26

மயங்கினேன் நின் மையலில்… 26

பூஜா அங்கிருந்து கிளம்ப சொன்னதும், வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பினான் கண்ணன்.

Thank you for reading this post, don't forget to subscribe!

நாட்களும் கடந்தது. பூர்ணாவை தன்னுடைய வீட்டில் வைத்து நன்றாக பார்த்துக் கொண்டாள் பூஜா. எவ்வளவோ முறை பார்வதி பூஜாவை பார்க்க வர அடம் பிடித்தும் பூஜாவோ அதை மறுத்துக் கொண்டே இருந்தாள். நேரம் கிடைக்கும் பொழுது  பார்வதியையும் மெய்யரசனையும்  அவளே போய் பார்த்துக் கொண்டு வருவாள்.

தருணுக்கும் தன்னுடைய நண்பனின் உதவியால் வேறு ஒரு கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது..

பூர்ணாவிற்கு உடல் நலமும் தேறிவிட்டது. இருந்தாலும் இயல்பாக   நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததால்,  பூஜாவே தன்னுடைய அக்காவை பார்த்துக் கொண்டாள்.

அதிகமாக இருந்த போக்குவரத்து நெரிசலே அது காலை நேரம் என்பதை காட்டிக் கொடுத்தது.

எல்லோரும் அவசர அவசரமாக தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தார்கள் செழியனும் தான்.

அன்று செழியன் எப்பொழுதும் போல் அலுவலகம் வர, அவனது பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் ஜமுனா.

ஜமுனாவை பார்த்தவனோ அதிர்ச்சி அடைய “நீங்க இங்க எப்படி வந்தீங்க?” என்று கேட்டான்.

“ஆமா நீங்க தான் வேலை பார்த்து தரேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டே இருந்தீங்க. அதனால தான் நானே உங்க கம்பெனியில வேலை ரெடி பண்ணீட்டு வந்துட்டேன்”  என்று இரு கண்களையும் ஒன்றாக சிமிட்டியபடியே சொன்னாள் ஜமுனா.

“உங்களோட இன்டென்ஷன் என்னன்னு எனக்கு இப்போ வரைக்குமே தெரியல.  நடக்கிறது நடக்கட்டும்” என்று ஜமுனாவை பார்த்து சொன்னவனும் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

மணி காலை 11:30 ஐ தாண்டி விடவே, தன்னுடைய மடிக்கணினியை மூடி வைத்தவளோ செழியனை பார்த்து “செழியன் போய் காபி குடிச்சிட்டு வரலாமா?” என்று கேட்டாள்.

“உங்களுக்கு காபி குடிக்கணும்னா நீங்க போங்க. என்னை எதுக்கு கூப்பிடுறீங்க?” என்று அவனும் கணினியின் திரையை பார்த்தபடியே கொஞ்சம் கடுப்பாகவே பேசினான்.

“காபி குடிக்க போலாமான்னு தானே கேட்டேன்? அதுக்கு எதுக்கு இவ்ளோ கடுப்பா பதில் சொல்றீங்க? எனக்கு இந்த ஆபீஸ் புதுசு.  எனக்கு இங்க உங்களை தவிர வேற யாரையுமே தெரியாது. அதனால சும்மா ஒரு கம்பெனிக்கு தான் கூப்பிட்டேன்.  ஒரு சின்ன ஹெல்ப் கூட பண்ண மாட்டீங்களா? ஏன் எப்போ பார்த்தாலும் இப்படி சிடு சிடுன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க?” என்று அவளோ அப்பாவி போல் முகத்தை வைத்தபடியே கேட்டாள்.

அவள் சொல்வதும் சரிதான் என்பதே உணர்ந்தவனோ “சரி வாங்க போலாம்” என்றான்.

செழியனுக்கு காபி குடிக்கும் பழக்கம் எல்லாம் இல்லை என்றாலும், ஜமுனா அழைப்பதால் அவளுடன் போனான்.

இருவரும் அந்த காபி ஷாப்பில் அமர்ந்து கொண்டிருக்க, ஜமுனாவே காபி வாங்குவதற்காக எழுந்து போனாள். செழியன் காபி குடிக்க மாட்டான் என்பதை அறியாதவளோ அவனுக்கும் சேர்த்து இரண்டு கப் காபி வாங்கிக் கொண்டு வந்தாள்.

செழியனும் மேஜையில் உட்கார்ந்தபடியே, போன் பார்த்து கொண்டிருக்க, காபி கப்பை வாங்கிக் கொண்டு வந்தவளோ, ஒரு காஃபியை அவனை நோக்கி நீட்டினாள்.

“அச்சச்சோ…. சாரி ஜமுனா… எனக்கு காபி குடிக்கிற பழக்கம் இல்ல. உங்க கிட்ட காபி ஆர்டர் பண்ண போகும் போதே சொல்லனும்ன்னு நினைச்சேன்.  மறந்துட்டேன்” என்று செழியன் சொல்லிட

“ரெண்டு காபி வாங்கிட்டேனே…. இப்போ திருப்பி கொடுத்தா கூட வாங்க மாட்டாங்க. என்ன பண்றது?” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவளோ, அவளுடைய காஃபியை குடிக்க ஆரம்பித்தாள்.

ஜமுனா தன்னுடைய காபியை முழுவதும் குடித்து முடிக்கும் போது, செழியனோ இன்னொரு காபி வீணாக போகிறதே என்று நினைத்த அதை எடுத்து பருக நினைத்தான்.

அவனோ அந்த இன்னொரு காபி கப்பில் கை வைத்து எடுக்க, அதை பார்த்த ஜமுனாவோ “என்ன பண்றீங்க?” என்று கேட்டாள்.

“இல்ல…. நீங்க ரெண்டு காபி வாங்கிட்டீங்க…  இப்போ இது வேஸ்டா தான போகும்?  சரி இன்னைக்கு ஒரு நாள் தானே… குடிச்சுரலாமேன்னு தான் …..” என்று அவன் சொல்ல

“உங்களுக்கு தான் காபி பிடிக்காதே”  என்று அவள் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தியபடியே கேட்க

“இல்ல தெரியாம  எனக்கும் சேர்த்து வாங்கிட்டீங்க. பணம் கொடுத்து தான வாங்கி இருப்பீங்க? அதனால தான்… சாப்பாடு வேஸ்ட் பண்றது ரொம்ப தப்பு” என்று அவன் சொல்ல

“உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை நீங்க செய்ய வேண்டாம். எனக்கு காபி ரொம்ப பிடிக்கும். சோ இந்த   கப் காஃபியையும் நானே குடிக்கிறேன்” என்று சொன்னவளோ அவன் கையில் இருந்த காபி கப்பை வாங்கி விட்டாள்.

அவளின் அத்தகைய நடவடிக்கையை பார்த்து எதுவும் புரியாதவனோ “நீங்க தான் ஆல்ரெடி காபி குடிச்சிட்டீங்களே?’ என்று கேட்க

“ஏங்க…. இந்த கப்ல ஒரு 50ml காபி இருக்குமா? நான் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் காஃபி குடுத்தா கூட குடிப்பேன். இந்த ரெண்டு கப் காபியை குடிக்க மாட்டேனா?”  என்று சொல்லியபடியே செழியனுக்கு வாங்கி வந்த அந்த இன்னொரு கப் காஃபியையும் அவளே குடித்து விட்டாள்.

அவளின் அத்தகைய நடவடிக்கையை பார்த்தவனோ, நீண்ட நாளுக்கு பிறகு புன்னகை செய்தான்.

அதன் புன்னகையை கவனித்தவளோ “நீங்க தான் காபி குடிக்க மாட்டீங்களே… அப்புறம் எதுக்கு காபி குடிக்க என்கூட வந்தீங்க?” என்று கேட்டிட

“நான் காபி குடிக்க எல்லாம் வர்ல… நீங்க கூப்பிட்டீங்களேன்னு உங்களுக்கு கம்பெனி கொடுக்க தான் வந்தேன்” என்று சொன்ன செழியன் “சரி கிளம்பலாமா? என்று  கேட்டதும் சரி என்பது போல் தலையை அசைத்தவளோ அவள் இருக்கையில் இருந்து எழுந்தாள்.

அவள் எழுந்தபோது “ஜமுனா… காபி ரொம்ப  குடிக்காதீங்க.  கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க” என்று அவளுக்கு அறிவுரை சொன்னான்.

“பார்றா… நம்ம ஆளு அக்கறையா எல்லாம் பேசுறாரு”  என்று மைண்ட் வாய்ஸில் பேசி கொண்டவளோ “உங்களுக்கு என்னை பத்தி சரியா தெரியலை.  இன்னைக்கு முழுசும்   என்னை சாப்பிடாம இருன்னு சொன்னா  கூட நான் சாப்பிடாம இருப்பேன்.  ஆனா டீ காஃபி குடிக்காம இருன்னு சொன்னா நான் கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டேன். அப்படி இருக்க என்கிட்ட போய் இப்படி சொன்னா எப்படி?” என்று அவள் சிரித்துக் கொண்டே செல்ல

அதை பார்த்தவனும் சிரித்துக் கொண்டான்.

இருவரும் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்ததும், ஜமுனாவை நோக்கி வந்த பெண் ஒருவள் “ஜமுனா உங்களை மேனேஜர் கூப்பிடுறாரு”  என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்தாள்.

ஜமுனாவும் மேனேஜரை பார்க்க அவருடைய அறைக்கு போனாள்.

“எக்ஸ் க்யூஸ் மீ சார்… மே ஐ கம் இன்…” என்று  அந்த அறையின் கதவை தட்டியபடியே அவள் உள்ளே நுழைய “எஸ்…. கம்மிங்… ” என்று சொன்ன மேனேஜரோ அவள் வருவதை பார்த்ததும்  சில கோப்புகளை எடுத்து அவளை நோக்கி நீட்டினார்.

அந்த கோப்புகளை ஜமுனா தன் கையில் வாங்கியதும் “நீங்க செய்ய வேண்டிய வேலை எல்லாம் இந்த ஃபைல்ஸ்ல இருக்கு.  இன்னும் ஒன் வீக்ல நீங்க இந்த வேலையை முடிச்சு கொடுக்கணும். உங்களுக்கு இதுல ஏதாவது டவுட் அப்படின்னா உங்க டீம் லீட் கிட்ட கேட்டுக்கோங்க” என்று சொன்னார்.

“ஓகே சார்…. என்னோட டீம் லீடர் யாரு?” என்று ஜமுனா கேட்க

“செழியன் தான்”  என்று சொன்னார் அவர்.

“பார்றா….  விதி கூட நமக்கு இவ்வளவு உதவி பண்னுது. கலக்குங்க ஜமுனா… கலக்குங்க”  என்று தன் மனதில் சொல்லிக் கொண்டவளோ அந்த கோப்புகளை வாங்கிக் கொண்டு தன்னுடைய இருக்கையை நோக்கி நடந்தாள்.

அவனை பார்த்தபடியே நடந்து கொண்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவள், அந்த   ஃபைலை திறந்து கூட பார்க்காமல் செழியனை நோக்கி நீட்டி, “செழியன்…. இதுல எனக்கு டவுட்  இருக்கு…. சொல்லி கொடுங்க” என்றாள்.

அவனும் அந்த ஃபைலை தன் கையில் வாங்கி விட்டு “என்ன டவுட்? சொல்லுங்க?”  என்றான்.

“நான் தான் அந்த பைலை இன்னும் திறந்து கூட பாக்கலையே… எனக்கு அந்த  ஃபைல் ஃபுல்லாவே டவுட்டு தான். எனக்கு எல்லாமே நீங்க தான் சொல்லிக் கொடுக்கணும்” என்று அவள் சொன்னதும்

“அப்போ உங்களோட ஒரு மாச சம்பளத்தை எனக்கு கொடுத்துடுவீங்களா?”

“என்னோட சம்பளத்தை நான் எதுக்கு  கொடுக்கணும்?”  என்று அவளோ தன் புருவத்தை சுருக்கியபடியே கேட்க

“அப்புறம்… ஏதாவது சின்ன டவுட்னா கூட சொல்லிக் கொடுக்கலாம். இந்த ஃபைல் ஃபுல்லா நானே பண்ணனும் போல… உங்க வேலைய நான் பண்ணீட்டு இருந்தா அப்புறம் என் வேலையை யார் பண்ணுவா?  ஒழுங்கா நீங்களே பார்த்து பண்ணுங்க. ஏதாவது டவுட் அப்படின்னா மட்டும் கேளுங்க. எல்லா வேலையும் என் தலையில போடாதீங்க” என்று அவன் ஸ்ட்ரிக்காக சொல்லி விட்டான்.

“அட வேலைன்னு வந்துட்டா  நம்ம ஆளு ஸ்ட்ரீட்   ஆபிசர் போலயே…”  என்று தன் மனதில் நினைத்தவளும் அந்த ஃபைலை வாங்கிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

அன்று காலை காபியில் ஆரம்பித்து லஞ்ச், ஈவினிங் காபி என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் செழியனையே அழைத்துக் கொண்டு போனாள் ஜமுனா.

சில முறை செழியன் மறுத்தாலும் ஏதாவது பேசி அவனை அழைத்துச் சென்று விடுவாள்.

அன்று மாலை வேலை முடிந்ததும் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தார்கள். ஜமுனாவோ தன்னுடைய வேலையை முடித்துவிட்டு செழியனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

ஆனால் அவனோ கிளம்புவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இன்னும் தன்னுடைய கணினி முன்பு உட்கார்ந்து சின்சியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளோ தன்னுடைய கைக்கடிகாரத்தையும், செழியனின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக செழியன் வேலையை முடித்து எழுந்திருக்க, இவளும் வேகவேகமாக தன்னுடைய கைப்பையையும் மொபைலையும் எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

அவள் பரபரப்பாக எழுந்திருப்பதை கவனித்தவனும்  “என்ன?” என்பது போல் பார்த்தான்.

“இல்ல….  நான் இன்னைக்கு ஸ்கூட்டி எடுத்துட்டு வரல…. அதனால உங்க வண்டியிலேயே என்னை வீட்ல டிராப் பண்றீங்களா?”  என்று சிறு குழந்தை போல முகத்தை வைத்தபடியே கேட்டாள்  அவள்.

“உங்களை டிராப் பண்றதுக்கு டிரைவர்க்கு ஓகே அப்படின்னா  எனக்கும் ஓகே தான்” என்று செழியன் சொல்லிட

“எந்த டிரைவருக்கு? கார் டிரைவர்க்கா?” என்று அவள் கேட்க

“கவர்மெண்ட் பஸ் டிரைவருக்கு” என்று அவன் சொன்னதும்

“எனக்கு புரியலையே செழியன்”  என்று அவளோ புரியாமல் கேட்டிட

“நான் டெய்லியும் ஆபீஸ்க்கு கவர்மெண்ட் பஸ்ல தான் வந்துட்டு போயிட்டு இருக்கேன்.  அப்படி இருக்கும்போது உங்களை வீட்டுல டிராப் பண்ணனும்னா நான் போற பஸ் டிரைவர் அண்ணா கிட்ட தான் கேட்கணும். நான் வேணும்னா அவருக்கு போன் பண்ணி கேட்டு சொல்லட்டுமா? எனக்கு டிரைவர் அண்ணா தெரிஞ்சவர் தான்” என்று செழியன் சொன்னதும் அவளுடைய மொத்த ப்ளானும் பிளாப் ஆகிவிட்டது.

“செழியன் அப்படி சொன்னதும், அவளின் முகமும் சுருங்கி போய்விட, அதை கவனித்தவனோ தன் மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்… 26”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *