“செழியன் கல்யாணத்துக்கும் பூர்ணா கல்யாணத்துக்கும், என்ன சம்பந்தம் தருண்?” என்று பூஜா புரியாமல் கேட்டிட,
Thank you for reading this post, don't forget to subscribe!“பூர்ணாவை பத்தி தப்பான எண்ணங்கள் மட்டும் தான் செழியன் வீட்ல இருக்கவங்க மனசுல ஓடிட்டு இருக்கும். இந்த நேரத்துல இன்னுமே அவங்க கோவமா தான் இருப்பாங்க. ஒருவேளை செழியன் கல்யாணம் முடிஞ்சுட்டா பூர்ணா மேல இருக்க கோவம் கொஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கு. அந்த சமயத்துல பூர்ணா சூழ்நிலையை அவங்களுக்கு பேசி புரிய வைக்கலாம்னு கண்ணன் நினைக்கிறாரு” என்று தருண் சொல்ல,
“இதுக்கு அப்புறம் பூர்ணாவை பத்தி கண்ணன் வீட்ல என்ன நினைச்சா நமக்கு என்ன தருண்? இதுல என்ன இருக்கு? அவங்க யாரு பூர்ணாவுக்கு?” என்று பூஜா புரியாமல் கேட்க
“அவருக்கு பூர்ணா மேல ஒரு நல்ல தாட் இருக்கு. நிறைய அக்கறை இருக்கு. அதனால பூர்ணாவை யாரும் தப்பா நினைச்சுட கூடாதுன்னு நினைக்கிறாரு” என்று தருண் சொன்னதும்
“என்னவோ தருண்… நீங்க என்னமோ சொல்றீங்க… எனக்கு எதுவுமே புரியல. ஆனா கொஞ்சம் சீக்கிரம் அக்காவோட கல்யாணத்த பத்தி யோசிங்க. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்” என்று அவளோ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்து புன்னகைத்தவனும் “சரி பூஜா கிளம்பலாமா? பூர்ணா வீட்ல தனியா இருப்பாங்கல்ல?” என்று சொன்னதும், எதுவும் பேசாமல் சில நொடி அமைதியாக இருந்தவள் “தருண்…..” என்று எதையோ சொல்ல அவனை அழைத்தாள்.
அவள் தன்னுடைய கடந்த கால காதலைப் பற்றியும், கண்ணனை பற்றியும் தான் சொல்ல வருகிறாள் என்பதை முன்பே யூகித்தவன் “சொல்லுங்க பூஜா…” என்றான்.
“இல்ல தருண்…. அதை உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல… சொன்னா, நீங்க என்னை எப்படி எடுத்துப்பீங்கன்னும் தெரியல. நம்ம கல்யாணம் எந்த மாதிரி ஒரு சூழ்நிலையில நடந்ததுன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கும் போது……..” என்று அவளும் தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாமல் தவித்தாள்.
அவளுடைய தவிப்பு அவனுக்கு புரியவே “பூஜா…. ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ் ஆகுங்க. நாம எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல வீட்டுக்கு போகணும். இந்த மாதிரி நிலைமையில பூர்ணாவை ரொம்ப நேரம் தனியாக விடுறது நல்லது கிடையாது” என்று சொன்னான் தருண்.
அவளும் வேறு வழி இன்றி சரி என்பது போல தலையை மட்டும் ஆட்டினாள்.
இருவரும் வீட்டிற்கு போக காரில் ஏறும் பொழுது தருணுக்கு ஒரு போன் வந்தது.
அந்த போனை அட்டென்ட் செய்து காதல் வைத்தவனும்
“ஹோ….சரியா பண்ணி முடிச்சிட்டீங்களா?” என்று தருண் கேட்க
அதற்கு எதிர்முனையில் இருந்தவர் ஏதோ பதில் சொல்ல
“ஓகே வெயிட் பண்ணுங்க…. உடனே வந்துடறேன்” என்று சொன்னபடியே போனை வைத்தான்.
அவன் போனில் பேசியதை கேட்டவளோ “என்னாச்சு தருண்? வேற ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?” என்று கேட்க,
“ஆமா பூஜா…. தப்பா எடுத்துக்காதீங்க. ரொம்ப முக்கியமான வேலை. நீங்க ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடுறீங்களா? நான் வேலையை முடிச்சுட்டு நைட்டுக்குள்ள வீட்டுக்கு வந்துடுறேன்” என்று சொன்னான் தருண்.
“பரவால்ல தருண்…. நீங்க கிளம்புங்க. நானே வீட்டுக்கு போயிக்கிறேன்.” என்று சொன்ன பூஜாவோ அங்கிருந்து கிளம்ப சில அடி எடுத்து வைத்தவள், அப்பொழுது தான் ஏதோ நினைவு வந்தவளாய் அவன் புறம் திரும்பி நடக்க,
அவள் தன்னை நோக்கி வருவதை உணர்த்தவனா “என்னாச்சு பூஜா” என்று கேட்டான்.
“இல்ல தருண்…. உங்க கூட வந்ததுனால கேஷ் எதுவும் எடுத்துட்டு வரல. சம்டைம்ஸ் ஆட்டோல கேஷ் தான் கேப்பாங்க. ஆட்டோக்கு……” என்றவள் அவனிடம் வாய் விட்டு பணம் கேட்க கூட தயங்கினாள்.
அவளின் அத்தகைய முக பாவனைகளை கவனித்தவன் “என்னதான் படிச்ச பொண்ணுங்களோ? புருஷன் கிட்ட காசு கேட்க கூட இவ்ளோ தயங்குகுறாங்க. கடவுளே…. கடவுளே….” என்று தன் மனதில் நினைத்து கொண்டவன், அவனுடைய பர்சிலிருந்து 500 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்த அவளை நோக்கி நீட்டினான்.
“இல்ல தருண்… எனக்கு 100 ரூபாய் போதும். வீட்டுக்கு போறதுக்கு ஆட்டோக்கு அவ்வளவு தான் கேப்பாங்க” என்று அவளோ அந்த பணத்தை வாங்க மறுக்கவே
“அடக்கடவுளே…. இந்த பூஜா ஏன் தான் இப்படி இருக்கா? கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட மூணு மாசம் ஆச்சு. ஏன் இன்னும் இப்படி பண்றான்னு தெரியல. என்னோட பர்ஸை புடுங்கி அவளே பணம் எடுத்துட்டு போகணும். ஆனா இவள வச்சுக்கிட்டு…..” என்று தன்னுடைய மைண்ட் வாய்ஸ் பேசியவன் “என்கிட்ட சேன்ஜ் இல்லை பூஜா. ஐநூறு ரூபாய் நோட்டு மட்டும் தான் இருக்கு. பரவால்ல…. இந்தாங்க.” என்று சொல்லியபடி அவளை நோக்கி நீட்டினான்.
அவளும் வேறு வழியில்லாமல் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
பூஜா அங்கிருந்து ஆட்டோவில் கிளம்புவதை உறுதி செய்தவன், தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து பறந்தான்.
பூஜாவோ அன்று இரவு உணவை சமைத்துவிட்டு, தன் அக்காவுக்கும் உணவை ஊட்டி முடித்து, தருணுக்காக காத்திருந்தாள்.
ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் தருண் வீட்டிற்கு வரவில்லை.
அப்பொழுது பூர்ணா, ஹாலில் உட்கார்ந்து இருக்கும் பூஜாவின் மொபைலுக்கு போன் செய்தாள்.
பூர்ணாவின் எண்ணை திரையில் பார்த்ததும், அவளோ போனை அட்டன்ட் கூட செய்யாமல் நேராக எழுந்து அவள் இருக்கும் அறைக்கு நடந்தாள்.
அங்கே பூர்ணாவோ கையில் போனோடு அமர்ந்திருக்க, “என்ன ஏதாவது வேணுமாக்கா?” என்று கேட்டபடியே அறைக்குள் நுழைந்தாள் பூஜா.
“இல்லடி… இன்னும் தருண் வந்த மாதிரி தெரியலையே.. அதனால தான் கூப்பிட்டேன். ரொம்ப லேட் ஆயிடுச்சு. எப்பவும் இந்த நேரத்துக்கு வந்துருவாருல்ல?” என்று பூர்ணா கேட்க
“ஆமாக்கா…. அவர் ஆபீஸ் முடிஞ்சு ஈவ்னிங்கே வந்துட்டாரு. மறுபடியும் அவருக்கு ஏதோ போன் வந்ததுன்னு கிளம்பி போனாரு. எங்க போனாருனு எனக்கு தெரியல. போன் பண்ணாலும் போன் எடுக்க மாட்டிராரு” என்று பூஜா சொல்ல
“சரி பூஜா… உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க வந்து உட்காறியா?” என்று பூர்ணா கேட்டதும் “சொல்லுக்கா….” என்ற படியே படுக்கையில் அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.
“இல்லடி… உன்னோட பாஸ்ட் பத்தி எனக்கு தெரியும். ஆனா இதுக்கு அப்புறம் உன்னோட வாழ்க்கை தருண் தான் ஆகிருச்சு. தருணை பார்த்தா மோசமானவரு மாதிரி தெரியவே இல்லை. கண்ணனை மாதிரி அவரும் நல்லவரா தான் தெரியுறாரு. அதுக்காக நீ அவர்கூட சேர்ந்து தான் வாழனும்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் அதே சமயம் நீ தருணை பத்தி உன்னோட மனசுல என்ன நினைக்கிற?” என்று பூர்ணா வெளிப்படையாக கேட்டு விட்டாள்.
“அக்கா எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. அதை நான் ஏத்துக்கிறேன். அதுக்காக அவரை என்னால ஹஸ்பண்டா ஏத்துக்க முடியல. அதே சமயம் அவரை நான் வெறுக்கவும் இல்லை. ஏன்னா அவரு எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவ்வளவு தான். எல்லா இடத்திலும் என்னோட மனசை புரிஞ்சு நடந்துக்கிட்டாரு. அதனால நானும் அவருக்காக எல்லா இடத்திலும் அவர் கூடவே நிக்குறேன். எங்களுக்குள்ள வெறும் பிரண்ட்ஷிப் மட்டும் தான் இருக்கு” என்று பூஜா சொல்லிட
“நீங்க ரெண்டு பேரும் நல்லா பிரண்ட்ஸா இருக்கீங்கன்னு நான் இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே கண்டுபிடிச்சிட்டேன். ஆனா அதையும் தான்டி இன்னும் நிறைய இருக்கு. இல்ல அத பத்தி நீ என்ன நினைக்கிறன்னு தான் கேட்டேன்” என்று பூர்ணா கேட்க
“என்னோட எதிர்காலத்தை பத்தி இப்போதைக்கு என் மனசுல எந்த பிளானும் இல்ல. உனக்கு இப்போ உடம்பு சரியாகனும். தருணுக்கு நல்ல வேலை அமையனும். உனக்கு உடம்பு சரியானதும் நானும் வேலைக்கு போகணும். இது மட்டும் தான் இப்ப என் மனசுல இருக்கு. மத்தபடி நான் அவர் கூட சேர்ந்து வாழுவேணான்னு எல்லாம் எனக்கு தெரியல” என்று பூஜா தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி எந்த வித திட்டமும் இல்லாமல் பேசினாள்.
“என்னடி இப்படி சொல்ற? அப்போ நீ சொல்றத எல்லாம் பார்த்தா….நீ இன்னும்…. கண்ணனை….” என்று பூர்ணா இழுக்க
பூர்ணா கேட்க வரும் விஷயத்தை புரிந்து கொண்ட பூஜாவும், அந்த வார்த்தையின் மீது அதிக கோபத்தோடும் அருவருப்போடும், “அக்கா…… என்ன பேசுற நீ….. தருண் என்னோட கழுத்துல தாலி கட்டும்போது, கண்ணனோட ஞாபகத்தையும், காதலையும் குழி தோண்டி புதைச்சுட்டேன். இதுக்கு அப்புறமும் நீ இதை பத்தி பேசினா எப்படி? இப்போ தருண் என்னோட மனசுல இருக்காரா இல்லையான்னு கேட்டா எனக்கு தெரியாது. அதே சமயம் என்னால உறுதியா சொல்ல முடியும்…. கண்ணன் இப்போ என் மனசுல இல்லன்னு… உனக்கு உண்மையாவே என் மேல பாசம் இருந்தா, இதுக்கு அப்புறம் இந்த மாதிரி அருவருப்பா எல்லாம் பேசாத. இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும்” என்று தான் அக்காவை எச்சரிக்கை செய்துவிட்டு அங்கிருந்து வெளியே போனாள் பூஜா.
பூஜா அந்த அறையில் இருந்து கிளம்பியதும் பூர்ணாவும் “பரவால்ல என்னோட தங்கச்சி நல்ல முடிவு தான் எடுத்து இருக்கா. பூஜாவோட இந்த முடிவுதான் அவளோட வாழ்க்கைக்கு நல்லது. எல்லோருக்கும் முதல் காதல் வெற்றியை தராது. அது பூஜா விஷயத்துல உண்மைதான். அவ நினைச்ச வாழ்க்கை கிடைக்கலைன்னாலும் கிடைச்ச வாழ்க்கையை நல்லா வாழனும்ன்னு ஆசைப்படுறேன். ஏன்னா அவளோட முதல் காதல் அவளுக்கு கைகூடாமல் போனதற்கு நான் தான் காரணம். பூஜா தருண் கூட சந்தோஷமா வாழ்றதை நானும் பார்க்கணும்.” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
பூஜாவோ தருணுக்காக சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இரவு இரண்டு மணி ஆகியும் தருண் வீட்டிற்கு வரவில்லை. தருனுக்கு பூஜா எவ்வளவோ முறை போன் செய்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் பூஜாவுக்கு பயம் அதிகமாகியது.
“என்ன ஆச்சு தருணுக்கு? இந்த மூணு மாசத்துல ஒரு நாள் நைட் கூட வீட்டுக்கு வராம இருந்ததே இல்லையே. ஆனா இன்னைக்கு ஏன் வரல. வீட்டுக்கு வர லேட் ஆகும்னு தெரிஞ்சா ஒரு போன் பண்ணியாவது சொல்லலாம். அட்லீஸ்ட் நான் பண்ற போனையாவது அட்டன்ட் பண்ணி லேட் ஆகும்ன்னு சொல்லலாம். ஆனா இவரு ஏன் எதுவுமே பண்ண மாட்றாரு? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஒருவேளை…. தருணுக்கு கிஷோர்னால எதுவும் ஆபத்தா?” என்று இரவு முழுவதும் தருண் பற்றியே நினைத்து கொண்டிருந்தாள் பூஜா.
Super😍