Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்…30

மயங்கினேன் நின் மையலில்…30

தன்னுடைய அப்பா பேசிய வார்த்தைகள் பூர்ணாவின் மனதில் இடியாக இறங்கியது.

Thank you for reading this post, don't forget to subscribe!

பூஜா அங்கிருந்து வெளியே சென்ற பிறகு,  தருணும் அந்த வீட்டிலிருந்து வெளியே போய் விட்டான்.

பூர்ணாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்பொழுது எங்கே போவது யாரிடம் பேசுவது என்றும் புரியவில்லை.

பூர்ணாவோ செய்வதறியாமல் அந்த அறையிலேயே உட்கார்ந்து விட, அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கே வந்தான் கண்ணன்.

பூர்ணாவோ அங்கே கண்ணீரோடு அமர்ந்திருக்க கண்ணனை அங்கே பார்த்தவள் சத்தமாக அழுதே விட்டாள்.

அவள் கதறி அழுவதை பார்த்தவனோ, அவளை சமாதானப்படுத்த தெரியாமல் அவளின் அருகில் போய் உட்கார்ந்தபடியே “அழுகாத பூர்ணா…. இப்போ தான் உனக்கு ஹெல்த் சரி ஆகிருக்கு”  என்று அவளை சமாதானப்படுத்த

“இல்லை யாஷ் உங்களுக்கு தெரியாது. எங்க அப்பா என்ன வார்த்தை சொன்னாங்க தெரியுமா? என்னால அதை தாங்கிக்கவே முடியல. இதுக்கு அப்புறம் அவங்க என்னை பொண்ணாவே ஏத்துக்க மாட்டாங்களா? தெரியாம ஒரு முறை தப்பு பண்ணிட்டேன். ஆனா அந்த தப்புனால என்னை எந்த அளவுக்கு வெறுக்குறாங்க பாத்தீங்களா?”; என்று அவளோ அழுதப்படியே சொல்ல

“எல்லாமே எனக்கு தெரியும் பூர்ணா. எல்லாமே நல்லத்துக்கு தான்னு நினைச்சுக்கோ”  என்று கண்ணன் அவளுக்கு ஆறுதல் சொல்லிட

“என்ன பேசுறீங்க? இது எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும்? உங்களுக்கு புரியுதா??????….  புரியுதா???? எங்க அப்பா என்னை அவங்க பொண்ணே இல்லன்னு சொல்லிட்டாங்க. இது எவ்வளவு பெரிய வலி தெரியுமா?”  என்று சத்தமாக அவனை பார்த்து கத்தியவள் மறுபடியும் தேம்பி தேம்பி அழுத ஆரம்பித்தாள்.

“எனக்கு புரியுது பூர்ணா. ஆனா எல்லா பிரச்சனைக்கும் தீர்வுன்னு ஒன்னு கண்டிப்பா  இருக்கும். உங்க அப்பா அம்மாவும் உன்னை ஒரு நாள் கண்டிப்பா ஏத்துப்பாங்க” என்று  கண்ணன் அவளை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சி செய்தான்.

“இதுனாள் வரைக்கும் நானும் இப்படித்தான் நம்பிட்டு இருந்தேன். ஆனா கொஞ்சம் யோசிச்சு பாருங்க… நான் செத்து பிழைச்சு வந்திருக்கேன். இந்த மாதிரி நிலைமையில கூட என்னை ஏத்துக்காதவங்க இதுக்கு அப்புறம் ஏத்துப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா?”  என்று பூர்ணா சரியாக கேட்டிட அதற்கு என்ன பதில் சொல்வது என்று கண்ணனுக்கு தெரியவில்லை.

அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் தோற்றுப் போனவனோ, இப்பொழுது அவளின் கவனத்தை திசை திருப்ப “இது எல்லாத்துக்கும் மேல உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் இருக்கு பூர்ணா.  அதை கேட்டா நீங்க இதை எல்லாத்தையுமே மறந்துருவீங்க”  என்று சொன்னான்.

“எவ்ளோ சந்தோஷமான விஷயமா இருந்தாலும் அதுக்கு சந்தோஷப்படுற நிலைமையில நான் இப்போ இல்லை யாஷ்” என்று அவள் வெறுமையாக சொல்லிட

“முதல்ல அந்த சந்தோஷமான விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்கோங்க. அதுக்கப்புறமும் நீங்க இதே வார்த்தையை சொல்றீங்களான்னு நானும் பாக்குறேன்”  என்று அவனும் புன்னகையோடு சொல்ல

“என்ன….?”  என்று ஆர்வமே இல்லாமல் ஒற்றை வார்த்தையில் கேட்டாள் அவள்.

“உங்களோட இந்த எல்லா பிரச்சனைக்கும், உங்களோட எந்த கனவு காரணமோ அந்த கனவு நிறைவேற போகுது பூர்ணா…” என்று கண்ணன் சொல்லிட

“என்ன சொல்றீங்க? எனக்கு எதுவுமே புரியல” என்று எதுவும் புரியாதவளாய் கேட்டாள் பூர்ணா.

“நீங்க உங்களோட காதலுக்காக ஓடி வந்ததால தானே உங்க வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனையும்.  ஆரம்பத்துல வேணும்னா அந்த காதல் கைகூடாம போயிருக்கலாம். ஆனா இப்ப அந்த காதல் நிறைவேற போகுது.”  என்று சொன்னவனும் அவள் முகத்தை  பார்த்தபடியே “என்ன பூர்ணா உங்களுக்கு இன்னும் புரியலையா? அடுத்த வாரம் உங்களுக்கும் கிஷோருக்கும் கல்யாணம். தருண் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாரு” என்று சந்தோஷமாக சொன்னான்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கண்ணன் சொல்வது சந்தோஷமான விஷயம் தான். ஆனால் அந்த விஷயம் இப்பொழுது பூர்ணாவிற்கு சந்தோஷமாக இருக்கிறதா? இல்லை  பயமாக இருக்கிறதா? என்று அவளுக்கே தெரியவில்லை.

இப்பொழுது கண்ணன் பூர்ணாவிற்கு துணையாய் தருண் வீட்டில் இருந்தான்.

தருணை பிரிந்து வந்த பூஜாவின் மனநிலையை இப்பொழுது கண்டிப்பாக விவரிக்க முடியாது.

தருணை நினைத்து வருத்தப்படவும் முடியாமல், வருத்தப்படாமல் இருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆரம்பத்தில் தருணுடனான இந்த கல்யாணம் அவளுக்கு பிடிக்கவில்லை என்று இருக்கும் பொழுது,  இப்பொழுது மெய்யரசனின் இந்த செயல் அவளுக்கு சந்தோஷமாக தானே இருக்க வேண்டும்?

ஆனால் ஏனோ இப்பொழுது அவளால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.

அதே சமயம் தருணை நினைத்து அவளால் வருத்தப்படவும் முடியவில்லை.  அவனை நினைத்து வருத்தப்படுவதற்கு இவள் யார்?

மெய்யரசன் ஹாலில் தூங்கிக் கொண்டிருக்க, பார்வதியும் பூஜாவும் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

இல்லை இல்லை பூஜா மட்டும் தூங்காமல் அவளுடைய மனதுடன் போராடிக் கொண்டிருக்கிறாள்.

அப்பொழுது  அவளுடைய போனுக்கு குறுஞ்செய்தி வந்ததற்கான ஒரு சத்தம் கேட்டிட,

கொஞ்சம் கூட ஆர்வமே இல்லாமல் போனை எடுத்து அந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.

அந்த குறுஞ்செய்தி வந்திருந்த எண்ணை பார்த்தவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை.

ஆம் தருண் தான் பூஜாவின் வீட்டு மொட்டை மாடிக்கு வர சொல்லி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தான்.

“என்ன இது? தருண் நம்பர்ல இருந்து மெசேஜ் வந்திருக்கு. அதுவும் நம்ம வீட்டு மொட்டை மாடிக்கு வர சொல்லி…. எதுவும் புரியலையே” என்று அவள் யோசித்து கொண்டிருக்க அதற்குள்  அவனிடமிருந்து அழைப்பு வந்தது.

போன் சத்தம் கேட்டவளோ, வேகவேகமாக போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு மெதுவாக எழுந்து வெளியே வந்தாள்.

ஆம்… அவளின் பெற்றோர்கள் இருவரும் தருண் மேல் அதீத கோபத்தில் உள்ளார்கள், அப்படி இருக்கும் பொழுது தருண் இங்கு வந்திருப்பது…. அவளுக்கு போன் செய்வது எல்லாம் அவர்களுக்கு தெரிந்தால் தருணின் நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும் என்பதை உணர்ந்தவளோ யாருக்கும் தெரியாமல் மெதுவாக மொட்டை மாடிக்கு செல்ல தயாரானாள்.

“இவரு உண்மைய சொல்றாரா? இல்ல பொய் சொல்றாரா?”  என்று யோசித்தபடியே ஒரு வழியாக மொட்டை மாடிக்கு வந்தவளோ, அங்கே தருண் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அவளுடைய கண்ணை அவளாலேயே நம்ப முடியவில்லை.

அவனை அங்கு பார்த்தவளுக்கு ஓடி சென்று அவனை அணைக்கவே தோன்றியது.  ஆனாலும் அவன் அவளிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் அவளின் மனதில் கேட்டுக் கொண்டே இருந்தது.

வேகமாக அவன் அருகில் ஓடியவளோ “எதுக்காக இங்க வந்திருக்கீங்க? எனக்கு எதுவுமே புரியல.  நீ இந்த வீட்டிலிருந்து வெளியே போன்னு சொல்லியிருந்தா நானே டீசண்டா வெளியே போய் இருப்பேனே. அதுக்கு எதுக்காக எங்க அப்பா அம்மாவை வர வச்சு அவங்க கூட அனுப்பி வச்சீங்க? எதுக்காக என்னை இவ்ளோ கஷ்டப்படுத்துறீங்க?” என்று மனது பொறுக்காமல் அவனிடம் சண்டை போட்டாள்.

அவனும் அதற்கு அமைதியாகவே இருக்க, அவன் பேசிய இன்னொரு வார்த்தை அவள் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

இதற்கு மேலும் அவளுடைய கடந்த காலத்தை அவனிடம் இருந்து மறைப்பது பெரிய தவறு என்பதை உணர்ந்தவள் “நீங்க சொன்னது சரிதான் தருண்… நான் உங்ககிட்ட உண்மையா இல்ல தான்… அதை நானே ஒத்துக்கிறேன்.  உங்ககிட்ட எல்லாத்தையும் ஓப்பனா சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் தேவைப்பட்டுச்சு.  இப்ப அந்த ஸ்பேஸ் போதும்னு நினைக்கிறேன்.  நீங்க நினைச்சது உண்மைதான். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி  ஒருத்தரை …..”  என்று அவள் உடைந்த குரலில் கண்ணீரோடு சொல்லிக் கொண்டிருக்கும்  போது சரியாக தருண் போனில் அலாரம் சத்தம் கேட்டிட, என்ன சத்தம் என்று யோசித்தவள் அவள் பேச வந்ததை நிறுத்திவிட்டு தருணின் முகத்தை பார்க்க ஆரம்பித்தாள். அவனோ தன் கையில் இருந்த போனின் திரையை பார்க்க அது நள்ளிரவு 12 மணியை காட்டியது.

அப்பொழுது தன்னுடைய பக்கத்தில் இருந்து ஒரு சிறிய பரிசை எடுத்து அவள் முன்பு நீட்டிவன் “ஹாப்பி பர்த்டே பூஜா…..” என்றான்.

அவள் கண் முன்னே நடக்கும் விஷயம், அவன் மூளையை சென்றடையவே, அவளுக்கு சில நொடி தேவைப்பட்டது. அங்கு என்ன நடக்கிறது என்பதே அவளுக்கு புரியவில்லை.

நேற்று நடந்த கலவரத்திலும், வருத்தத்திலும், இன்று அவளுடைய பிறந்தநாள் என்பதை மறந்து விட்டாள்.

அவளோ சிலை போல் அப்படியே நிற்க, அவளுடைய கையை பிடித்து அந்த பரிசை அவள் கை மேல் திணித்தாள்.

“என்ன தருண் இங்க நடக்குது? எனக்கு எதுவுமே புரியல. பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு. தயவு செஞ்சு எனக்கு எல்லாத்தையும் சொல்லுங்க. நீங்க இப்படி நடந்துக்கிடத்துக்கு எல்லாம் பின்னாடி கண்டிப்பா ஏதாவது ஒரு பெரிய காரணம் இருக்கும்னு தோணுது. அது என்ன காரணம்ன்னு என்கிட்ட தெளிவா சொல்லுங்களேன்” என்று அவள்  கெஞ்சிட

“கண்டிப்பா சொல்றேன் பூஜா…. இதை முதல்ல ஓப்பன் பண்ணி பாருங்க.”  என்று அவன் அவளிடம் கெஞ்சும் குரலில் கேட்டிட

அவன் சொன்ன வார்த்தைக்காக,  சிறிதும் சந்தோஷம் இன்றி, கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் அந்த பரிசை பிரிக்க ஆரம்பித்தாள்.

அந்த பரிசை பிரித்து பார்த்தவளுக்கு ஏற்கனவே இருக்கும் குழப்பம் இன்னும் அதிகமாகியது.

அதில் “P”  என்று அவளுடைய பெயரின் முதல் எழுத்தை டாலராக இருக்கும் செயின் தான் இருந்தது.

ஆம்… அந்த செயின் மெய்யரசன் தன்னுடைய இரண்டு மகள்களுக்கு முதல் முதலாக ஒரே டிசைனில் “P” என்று இருவரின் பெயரின் முதல் எழுத்தையும் குறிக்கும் விதமாக வாங்கி கொடுத்து.

பூர்ணா அந்த செயினை இன்னும் அவள் கழுத்தில் அணிந்திருக்கிறாள். ஆனால் பூஜாவிடம் அந்த செயின் இல்லை.

அந்த செயினை அந்த பாக்ஸில் இருந்து வெளியே எடுத்தவள் “இந்த செயின் உங்ககிட்ட எப்படி தருண் வந்தது? இந்த செயின் தான் நான் நாலு வருஷத்துக்கு முன்னாடியே வித்துட்டேனே” என்று அவள் கேட்க

“நீங்க இந்த செயினை எதுக்காக வித்தீங்க பூஜா?”  என்று அவன் கேட்க

“ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஆக்சிடெண்ட் ஆகி உயிருக்கு போராடிட்டு இருந்தாங்க. அந்த டைம்ல ஹாஸ்பிட்டல்ல பணம் கட்டியாகணும்ன்னு சூழ்நிலை. வேற வழியே இல்லாம கழுத்துல இருந்த செயினை வித்து அந்த ஹாஸ்பிட்டல்ல பணம் கட்டினேன்”  என்று அவள் சொல்லிட

“அவங்க என்னோட அப்பா அம்மா தான் பூஜா…” என்று கலங்கிய கண்களோடு சொன்னான் அவன்.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்…30”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *