பூர்ணா ஓடிப்போய் திருமணம் நின்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்க்கே பூஜாவின் குடும்பத்திற்கு சில நாட்கள் தேவைப்பட்டது.
இந்த சில நாட்களில் பூஜா எவ்வளவோ முறை கண்ணனுக்கு போன் செய்து பார்த்தாள்.
ஆனால் அவனும் பூர்ணா மேல் உள்ள கோபத்திலும், பூஜாவின் குடும்பத்தின் மேல் உள்ள கோபத்திலும் அவளிடம் பேசுவதை மறுத்தான்.
பூஜா விடாமல் அவனுக்கு போன் செய்து தொந்தரவு செய்ய, வேறு வழி இல்லாமல் ஒரே ஒரு முறை மட்டும் அவளின் அழைப்பை எடுத்துப் பேசினான்.
அவன் அழைப்பை ஏற்றதும் ஒரு நொடி திடுக்கிட்டவள் “ஏன் கண்ணா இவ்வளவு நாள் போனை எடுக்கல?” என்று கலங்கிய கண்களோடு கேட்டாள்.
“போனை எடுத்து என்ன பேச சொல்ற?” என்று அவனும் கோபமாக பதில் அளிக்க
“உனக்கு என் மேல என்ன கோபம்? நான் என்ன பண்ண? இதுல என்னோட தப்பு என்ன இருக்கு?” என்று அவளோ அப்பாவியாய் கேட்டாள்.
“பொய் சொல்லாத பூஜா. உனக்கு கண்டிப்பா எல்லாமே தெரிஞ்சிருக்கும். உன்னோட மனசாட்சியை தொட்டு சொல்லு, உங்க அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு உனக்கு தெரியாதா?” என்று அவன் கேட்க
“தெரியும் கண்ணா… ஆனா….” என்று அவள் உண்மையை சொல்ல வர, அதை தவறாக புரிந்தவனோ “அப்போ தெரிஞ்சுக்கிட்டே தான் என் அண்ணனோட வாழ்க்கையை வீணாக்குனீங்களா?” என்றவனின் கோபம் இன்னும் அதிகமாகியது.
“டேய் நான் சொல்ல வர்றதை கொஞ்சம் பொறுமையா கேளுடா.. எங்க அக்காவுக்கு அவளோட கேரியர்ல பெரிய கனவு இருக்கு. அதுக்காக தான் இப்படி பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன்” என்று அவளும் அவனுக்கு உண்மையை புரிய வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும், அவன் அதை புரிந்து கொள்ளும் நிலைமையில் இல்லை.
“நீங்க எல்லாரும் சேர்ந்து பண்ண காரியத்துனால எங்க அண்ணனோட மனசு எப்படி உடைஞ்சு போயிருக்கும் தெரியுமா? கல்யாணம் நின்னதுல அவன் ரெண்டு நாலு ரூம்ம விட்டு வெளியேவே வரல. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் மேல ஆக போகுது, இன்னும் கூட அவன் ஆபீஸ் போக கூட வெளியே வரல. அந்த அளவுக்கு உடைஞ்சு போய் இருக்கான். நீங்க எல்லாரும் சேர்ந்து பண்ண தப்புக்கு எங்க அண்ணனை பலியாடா ஆகிட்டீங்க இல்ல. அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா? அவன் மட்டுமா? எங்க குடும்பமே இப்போ ஊர் முன்னாடி தலை குனிஞ்சு தான் நிக்குது. ஒவ்வொருத்தவங்க ஒவ்வொரு மாதிரி பேசுறாங்க. ஆனா இது எல்லாத்துக்கும் நீயும் உடைந்தையா இருக்க பார்த்தியா? அதை தான் என்னால தாங்கிக்கவே முடியல” என்று அவன் வருத்தமாக சொன்னான்.
“இங்க பாரு கண்ணா…. நான் உங்க குடும்பத்தோட நிலைமையை புரிஞ்சுக்கிறேன். ஆனா மண்டபத்துல எல்லார் முன்னாடியும் நீ என்னை பத்தி என்ன பேசனேன்னு நியாபகம் இருக்கா? எவன் கூட சுத்துனாலோ தெரியலைன்னு சொன்னியே… அதைவிட ஒரு காதலிச்ச பையன் ஒரு பொண்ணுக்கு பெரிய பரிசு கொடுத்து விட முடியாது” என்று அவளோ வலியுடன் சொல்ல
“ஆமா… நான் சொன்னது உண்மை தான? என் கூட சுத்திட்டு இருக்க உன்னை எப்படி எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்? இப்போ தான் எனக்கும் எல்லாமே புரியுது. இந்த மாதிரி தானடி உங்க அக்காவும் இருந்திருப்பாங்க. நீ எப்படி என்னை லவ் பண்ணிட்டு சுத்துனியோ, அதே மாதிரி தான் உங்க அக்காவும் எவனை லவ் பண்ணிட்டு ஓடி போனாங்களோ” என்று அவன் சொன்ன வார்த்தையை காதால் கூட கேட்க முடியாதவன் பதில் பேச வார்த்தை இன்றி போனை வைத்து விட்டாள்.
பூஜாவோ இன்னும் அவன் கொடுத்த வலியில் இருந்தே வெளியே வர முடியாமல் அழுது கொண்டிருக்க, அப்பொழுது உள்ளே வந்தார் மெய்யரசன்.
தன் அப்பா உள்ளே வருவதை கவனித்தவளோ, தன்னுடைய இரு கண்களையும் துடைத்து விட்டு “என்னப்பா…” என்பது போல் பார்க்க
சுற்றி வளைக்க விரும்பாதவரோ நேரடியாக சொல்ல ஆரம்பித்தார்.
“பூஜா… அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன். நாளைக்கு உனக்கும் அவனுக்கும் ஒரு சின்ன கோவில்ல கல்யாணம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பெரிய பணக்காரங்க. இருந்தாலும் நம்ம குடும்பத்தோட நிலைமை… பூர்ணா ஓடி போனதை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நாளைக்கு கோயில் சிம்பிளா கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டாங்க. ஆனா ரிசப்ஷன் மட்டும் கிராண்டா வைப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்த முடிவை அப்பா உன்கிட்ட கேட்டு எடுக்கவே இல்ல. எனக்கு இந்த முடிவு சரின்னு படுது. நீயாவது அப்பா பேச்சை கேட்க போறியா? இல்ல நீயும் யார் கூடவாவது ஓடிப் போக போறியா?’ என்று அவரும் அவளை காயப்படுத்த
அப்போது அங்கே வந்த பார்வதியோ “எங்க… ஏற்கனவே பண்ண தப்பை மறுபடியும் பண்ண வேண்டாங்க. ஏற்கனவே பூர்ணா சம்மதத்தை கேட்க்காம இந்த கல்யாண ஏற்பாடு பண்ணி தான் இந்த அளவுக்கு வந்து நிக்குது. இப்போ பூஜாவையும் கட்டாயப்படுத்துனா எப்படிங்க? கொஞ்ச நாள் போகட்டும்” என்று சொல்ல..
“ஹோ… நீயும் இதுல கூட்டா… உன்னோட பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்ணீட்டு வர்ற. கொஞ்ச நாள் விட்டா இவளும் ஓடி போயிருவா. கொஞ்சநஞ்சம் இருக்க மானம் மரியாதையும் போய்டும். அதுக்கு அப்புறம் நீயும் நானும் சேர்ந்தே போய் சேர வேண்டியது தான்” என்று மெய்யரசன் சொல்ல
தன் அப்பா சொல்வதை கேட்டு வருந்தியவளோ “அப்பா… தயவு செஞ்சு அப்படி எல்லாம் பேசாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். நாளைக்கே நீங்க சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்குறேன்ப்பா” என்று கண்ணனை நினைத்து வந்த கண்ணீரை துடைத்தபடியே சொன்னாள்.
இது கண்ணன் மேல் இருக்கும் கோபத்தில் எடுத்த முடிவு இல்லை. தன் குடும்பத்திற்காக இத்தகைய முடிவை எடுத்திருக்கிறாள்.
அவளின் இத்தகைய முடிவினால் பின்னாளில் அவள் அனுபவிக்க போகும் கஷ்டங்களை அறிந்திருக்கவில்லை.
அடுத்த நாள் காலை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அதிக அளவில் அலங்காரங்கள் இல்லாமல் பூஜாவின் குடும்பமானது திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தது.
பூஜாவோ எவ்வித ஒப்பனைகளும் செய்து கொள்ளாமல், அவளுடைய அறையில் குறுகி போய் உட்கார்ந்திருந்தாள்.
ஆனால் ஏனோ கண்ணனிடம் இதை பற்றி சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
அப்போது அங்கே வந்த பார்வதியோ “என்னடி நேத்து உங்க அப்பா கிட்ட வீர வசனம் எல்லாம் பேசிட்டு இப்போ கிளம்பாம உட்கார்ந்துட்டு இருக்க?” என்று சொன்னவரோ, பூஜாவிற்கு என்று மாப்பிள்ளை வீட்டில் வாங்கி கொடுத்த திருமண புடவையை அவளுக்கு கட்டி விட ஆரம்பித்தார்.
“உங்க கல்யாணத்தை எந்த அளவுக்கு விமர்சையா நடத்தனும்ன்னு ஆசை பட்டேன் தெரியுமா? ஆனா இப்போ பாரு அவசர கல்யாணம் மாதிரி பண்ண வேண்டி இருக்கு” என்று பார்வதி புலம்பியவாறே அவளுக்கு புடவை கட்டி கொண்டிருக்க, அவளோ அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள்.
“அதுக்கு தான் நேத்தே உங்க அப்பா கிட்ட கொஞ்ச நாள் போகட்டும்ன்னு மறைமுகமா சொன்னேன். ஆனா நீ தான் உங்க அப்பாக்காக சம்மதிச்சுட்ட” என்று சொன்னதும் அவளோ தன் அம்மாவை பார்த்து புன்னகை செய்துவிட்டு திருமணத்திற்கு தயாராகிவிட்டாள்.
அந்த புன்னகையில் இருக்கும் வலியை பார்வதி புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.
பூஜாவின் குடும்பமும் நெருங்கிய சில உறவினர்களும் மட்டும் திருமணம் நடக்கும் கோவிலுக்கு போனார்கள்.
பூஜா மணமேடைக்கு போகும் சில நிமிடங்களுக்கு முன்பு கண்ணனிடம் இருந்து அவளுக்கு போன் வந்தது.
அவனின் எண்ணை பார்த்ததும் அவளுக்கு நிராகரிக்கவே தோன்றியது. இருந்தாலும் அவளுக்கு ஏதோ தோன்றவே போனை எடுத்து பேசினாள்.
அவளோ “ஹலோ” என்பதோடு நிறுத்தி கொள்ள
“பூஜா… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டி… மீட் பண்ணலாமா?” என்று அவனோ பரபரப்பாக கேட்டான்…. அவள் இப்போது இருக்கும் சூழ்நிலை அறியாமல்….
அவனின் இந்த பரபரப்பான பேச்சில் என்ன என்று கேட்கவே தோன்றியது. இருந்தாலும் வேறு ஒருவனை திருமணம் செய்யும் நேரத்தில் காதலுடன் பேசுவது தவறு என்பதை உணர்ந்தவள்
“சாரி… கண்ணா உன்னை மீட் பண்ண வர்றது மட்டுமில்ல. இப்போ உன் கூட பேசுறதே தப்பு. ஏன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வேற ஒருத்தருக்கு மனைவியாக போறேன்.” என்று சொன்னவளோ அந்த கோவிலில் அவளுக்கு நடக்கும் திருமணத்தை பற்றி அவனிடம் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவனோ தன்னுடைய வண்டியை எடுத்து கொண்டு பூஜாவின் திருமணம் நடக்கும் கோவிலுக்கு கிளம்பினாள்.
மணமேடையில் பூஜா அமர்ந்ததும் சில நொடிகளில் மாப்பிள்ளை வந்து அமர்ந்தான்.
அவளுக்கோ கண்களில் கண்ணீர் நிரம்பி இருக்க தலை நிமிர்ந்துகூட மாப்பிள்ளையின் முகத்தை பார்க்க முடியவில்லை. அவள் பார்க்கவும் விரும்பவில்லை.
புரோகிதர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொன்னதும் மாப்பிள்ளை பூஜா கழுத்தில் தாலி கட்டினான்.
அப்போது அவளோ இமை மூடி அழுக, அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் அவள் கண்ணை விட்டு விலகி மாப்பிள்ளை கையில் விழுந்தது.
அவளின் கண்ணீரை அவன் உணரவும் தவறவில்லை, அவள் அழுவதை அவன் பார்க்கவும் தவறவில்லை.
சரியாக தாலி கட்டும் சமயத்தில் அந்த கூட்டத்திற்குள் நுழைந்த கண்ணன், பூஜாவின் கழுத்தில் வேறு ஒருவன் தாலி கட்டுவதை தன்னுடைய இரு கண்களால் பார்த்துவிட்டான்.
ஒரு காதலனுக்கு இதை விட ஒரு வலி ஏது?
இப்போது அக்கினியை சுற்றி வலம் வர மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் மணமேடையை விட்டு எழுந்திருக்கும் போது தான் பூஜா மாப்பிள்ளையின் முகத்தை பார்த்தாள்.
“தருண் சார்….” என்று அதிர்ச்சி அடைந்த்தாள்.
Ithu ena ippadi oru twist
Thank you for your comment sis😇😇😇. More twists are waiting sis❣️❣️❣️
Nice epi😍