Skip to content
Home » மாண்புறு மங்கையே – 1

மாண்புறு மங்கையே – 1

மங்கை 1

வானத்தில் ஏழ்பரியோன் எழுந்தருள, எல்லிநாதனின் எல்லி நகையாடல் போல அனைவரின் தூக்கத்தைப் பறித்து வெண்பற்களை காட்டி பளீரென சிரித்துக் கொண்டிருந்தான்.

வட்டமடிக்கும் வட்டமுகத்துக்காரியின் கொண்டை உயர, கூப்பாடு போட்டு எழுப்பி விடும் கடிகாரமெல்லாம் காலத்தோடு மாறி போய் கைப்பேசி வழியே மாடர்ன் கூப்பாடுக்கு செவி சாய்க்காமல் மீண்டும் உறக்க நிலையில் அலைபேசியைப் போட்டுவிட்டு உறங்க ஆரம்பித்தாள் கலைமதி.

“அடியே ஒன்னு எழுந்திரி, இல்லன்னா மொத்தமா அலாரத்தை ஆஃப் பண்ணு. ரெண்டும் இல்லாம ஏன்டி என் தூக்கத்தை கெடுக்கற…? நேத்து நையிட் லேட்டா தான்டி வந்து தூங்கினேன். ப்ளீஸ் பப்ளு அதை ஆஃப் பண்ணு.” என பாதி தூக்கத்தில் புலம்பினாள் கலைச்சுடர்.

அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத மதி உறக்கத்தைத் தொடர, மீண்டும் உறக்க நிலையிலிருந்து எழுந்து சத்தமிட்டது அவளது அலைபேசி. அதை அணைக்காது இருந்தவளின் மேல் கடுப்பு வர, அவள் மேலமர்ந்து, தலையணையை வைத்து முகத்தை அழுத்தினாள்.

“மா… உன் பொண்ணு என்னை கொல பண்றா… சீக்கிரமா வாம்மா, அம்மா கடைசியா உன் முகத்தை பார்த்துக்கிறேன் மா, அப்பா… அப்பா… நீயும் வா ப்பா, கடைசியா உன் முகத்தையும் பார்த்துக்கிறேன். என் கிழவி நீயும் வா, உன் முகத்தையும் பார்த்துக்கிறேன். அப்றம் அக்கா, உன் முகத்தையும் கடைசியா பார்த்துட்டு செத்து போயிடுறேன் அக்கா. அப்றம் அப்றம் என் க்ரஷ் முகத்தையும் பார்த்துக்கிறேன் அக்கா.” என்று பிதற்றினாள் மதி.

“க்ரஷா… அது யாரு டீ…?” தலையணையை எடுத்து கேள்வி கேட்டவளை கீழே தள்ளிவிட்டு அமர்ந்தாள். “அப்படி சொன்னா தானே, நீ விடுவ! அதான் அப்படி சொன்னேன்.” கலைந்த முடியை அள்ளி முடிந்து ஒழுங்காக அமர்ந்தாள் மதி.

“பொய் சொல்லாத.. உண்மைய சொல்லு, இல்ல எல்லாரையும் கூப்பிட்டு ஏலம் போடுவேன்.” அவளை மிரட்ட, “போடு, அப்படியாவது என் காதலை புரிஞ்சு என்னையும் அவனையும் ஒன்னு சேர்க்கட்டும். எனக்கும் வேலை ஈசியா இருக்கும்ல…” என்றவளின் காதை திருகியவள்,

“பேச்சை பாரு, காதலாம் சேர்த்து வைக்கணுமா…! இன்னும் நீ லெஃப்ட் ஷூவ ரைட்லையும் ரைட் ஷூவ லெஃப்ட்லையும் போடுற ஆள். காதல் கத்திருக்கான்னு பேசிட்டு இருக்க, இந்த மாதிரி பேசறத நிறுத்திட்டு படிக்கிற வழியை பாரு எக்ஸாம் வர போகுது.”

“எக்ஸாமா, போக்கா நீ வேற… நீ நியூஸ் பார்ப்பீயா? இல்லையா? எக்ஸாம் இருக்கு ஆனால் இல்லைன்னு போயிட்டு இருக்கு. படிக்க உட்காந்தா இல்லைன்றானுங்க, சரி படிக்க வேணாம் நினைச்சா இருக்குன்றானுங்க, பாவம் அவனுங்களே கன்ஃபியூஸ்ல இருக்காங்க. அதனால அவனுங்க ஒரு முடிவுக்கு வரட்டும் அப்றம் இந்த படிப்பை பார்த்துக்கலாம் நான் முடிவு பண்ணிட்டேன்.” இன்றையை பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மனநிலை இதுவாகிப் போனது.

“அப்றம் ஏன் டி அலாரம் வச்சி சாகடிக்கிற என்னை?” என்றவளை பார்த்து இளித்து வைத்தவள், “அது அப்படியே ஃபிக்ஸ் ஆகிருச்சுக்கா, மாத்தணும் நினைக்கிறேன் மறந்து போயிடுறேன்.” என்றவளை கொலை வெறியோடு பார்த்தவள் அடிக்க துரத்திட, இருவரும் மெத்தையைச் சுத்தி சுத்தி விளையாடினார்கள்.

காலையில் வாக்கிங் சென்று வீடு திரும்பிய கதிர்வேல் வியர்வையில் குளித்திருக்க, அவர் கையில் துவலையைக் கொடுத்து, கையில் அவருக்காக ஆவி பறக்க காஃபியோடு நின்றார் கதிர்வேலின் தெய்வானை.

காஃபியை வாங்கி நாசியில் நுகர்ந்து வாசனை உள்ளிழுத்தவர், பிறகு நாவினால் ருசிக்க ஆரம்பித்தார். அவரது காலை, மனைவியின் வனப்பு நிறைந்த வதனமும், அவர் கையாலான காஃபி இது போதுமென்றிடுவார் கதிர்வேல்.

அவரது செய்கையை ரசித்த பின் தான் அடுத்த வேலை எல்லாம் என்பது போல தான் கதிர்வேலின் ஆசை வனிதை தெய்வானையும். இருவரது இந்த அன்பு அந்நியோன்யத்திற்கு பிறந்த காதல் பரிசுகள் தான் கலைச்சுடர், கலைமதி.

கலைச்சுடர், இருபத்தி ஐந்து வயது நிரம்பிய பெண். பள்ளி பருவம் முடிந்ததும் அழகுக்கலை படிப்பை எடுத்து நான்கு வருடத்தில் அத்தனை கோர்ஸை படித்து முடித்தவள், மதுரையில் ஒரு பிரபலமான அழகு நிலையத்தில் வேலை செய்கிறாள். அவளது கனவெல்லாம் தான் வேலை செய்யும் அழகு நிலையம் போல் சொந்தமாக ஒரு அழகு நிலையம் வைக்க வேண்டும் என்பது தான்.

பிடித்தமான வேலையைச் செய்யும் வாய்ப்பு இங்கு எத்தனை பேருக்கு வாய்க்கும். மனநிறைவான வேலையை செய்து வரும் இவளுக்கு ஒரே ஒரே மன நெருடல் என்றால் லோனுக்காக அலைவது தான்.

கதிர்வேல் கடன் வாங்கி பணம் தருவதாக கூறினாலும், அதனை அவள் மனம் ஏற்க மறுத்தது. சொந்தக் காலில் யார் தயவுமின்றி நிற்க வேண்டும். சம்பாரிக்க ஆரம்பித்திலிருந்து தன் தேவைகளையும் அவளே பார்த்துக்கொண்டும் குடும்பத்திற்கு கொடுத்தும் வந்தாள்.

கல்லூரியில் தமிழ் பேராசிரியராக வேலைச் செய்கிறார் கதிர்வேல். வருமானம் ஐந்து இலக்கில் கிடைத்தாலும் பாதி செலவை இவளும் தான் பார்க்கிறாள்.

இப்போ இதோ கொரோனா காலத்தில் அழகு நிலையங்கள் முடங்கி போயிருக்க, கதிர்வேலின் சம்பளமே அக்குடும்பத்துக்கு பூஜிக்கிறது. இருந்தாலும் அவளுக்கு மனம் கேட்கவில்லை தந்தை பணமென்றாலும் அவளுக்கு ஒட்டவில்லை. தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு அவ்வபோது வரும் திருமண விசேஷகங்கள் என்று அவளை அழைத்தால் சென்று விடுவாள். தனிப்பட்ட முறையிலும் சரி அழகு நிலையத்திலிருந்து அழைத்தாலும் சரி சென்று வருவாள். அதில் கிடைக்கும் சொச்சம் கூட வீட்டில் கொடுத்து விடுவாள்.

கலைமதி, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அப்பாவி மாணவி. பரீட்சை இருக்குமா இருக்காதா, இருக்காதுன்னு நம்பலாமா நம்ப கூடாதா…? என்று வடிவேல் பேய் இருக்கா இல்லையா என்று மீம்ஸ் போட்டு கேட்கும் மாணவர்களின் ஒருத்தி.

கலைச்சுடர் பிறந்து ஏழு வருடத்திற்குப் பிறகு பிறந்தவள். வீட்டில் யார் செல்லமென்றால் சுடரை தான் சொல்வார்கள். மூன்று வருடங்கள் கழித்து பிறந்த மகராசி கொஞ்சம் செல்லம்.

சுடரைக் கண்டால், ‘தன் தாயை போல என் பிள்ளை’ என்பார் கதிர்வேல். ஆம் அவரது அன்னை ஆரஞ்சம்மாளை போலத்தான் இருப்பாள். அந்தக் காலத்தில் அழகி போட்டி வைத்தால் நிச்சயம் ஆரஞ்சை அடிச்சிக்க முடியாது. தன் அண்ணனுக்காக பொண்ணு கேட்டு வந்தவர் ஆரஞ்சை கண்டதும் முடிவை மாற்றிக் கொண்டு அவரே கட்டிக் கொண்டதாக கூறி வெட்கப் படுவார் ஆரஞ்சம்மாள். இன்று வரை திடமாக இருக்கிறார் அவர். ஆனால் தாத்தா தான் முன்னே சென்று விட்டார்.

மதியோ, அவள் அன்னை போல் கொஞ்சம் பூசினார் போல் இருப்பாள். அதுனால தான் அவளை ‘பப்ளு’ என்பாள்.

அக்காவை போல ஸ்லிம்மா இருக்க வேண்டும் அக்காவை போல அழகாக இருக்க வேண்டும் என்பாள். அதற்கு வழி, சுடர் சொன்னாலும் சரி சரியென இரவு முழுவதும் தலையாட்டி கேட்பவள் காலையில் மனம் மாறி போய்விடும் எழுந்துக்க மாட்டாள். “போக்கா” என்று கூறி விடுவாள்.

சுடரும் தலையில் அடித்துக் கொள்வாள். மதியின் தோழிகள் எல்லாம் சுடரின் ஃபேண்ஸ் அவளிடம் சில பல குறிப்புகள் கேட்டு அதை ஃபாலோவ் செய்வார்கள். அக்கம் பக்கத்தினர் அவளிடம் தான் அழகு குறிப்புகள் கேட்பார்கள். சில நேரங்களில் வீட்டையே அழகு நிலையமாக மாத்தி விடுவாள். மெகந்திலியிருந்து முடி திருத்துவது வரைக்கும் அவளே செய்வாள்.

கொரோனா காலத்தில் அருகே இருக்கும் சிறுவர்களுக்கு முடித்திருத்தம் செய்து விட்டாள். கைகொடுக்கும் தன் தொழிலை என்றுமே படியளக்கும் சாமி என்பாள்.

அழகு கலை அறிந்தவள் தான், ஆனால் தன்னை ஒரு போதும் அலங்கரித்து கொள்ள மாட்டாள். பாலின் நிறம் கொண்டவள், வானவில்லாய் வளைந்த கருநிற புருவம், ரோஜா இதழ்கள் பொறாமை பட்டு போகுமளவு பால் ரோஸ் நிறத்தில் உதடுகள்.

‘வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாய்ங்களா வெயிலுக்கு கட்டாம வளர்த்தாய்ங்களா…’ பாடலை பாடி பலரும் இவள் பின்னால் சுத்தியது உண்டு. ஆனால் காதல் செய்வதற்கோ, அவளுக்கு நேரமில்லை. தன் கனவை நோக்கி செல்பவளுக்கு இதெல்லாம் வேண்டாத வேலை என்பாள். இதுவே கதிர்வேலின் குடும்பம்.

காஃபியை பருகியவாறு காலைச் செய்தித்தாளை புரட்ட எங்கும் எதிலும் கொரோனா. சுமார் ஒன்றை ஆண்டுகளாக கொரோனா தான் எல்லா நாடுகளுக்கும் தலைப்பாக இருக்கிறது.

அறையிலிருந்து ஓடி வந்தவர்கள் கதர்வேலை சுற்று சுற்றி ஓட, “ஏய் பப்ளு ஒழுங்கா எங்கிட்ட வந்துட்டேன்னா ஒரு அடியோடு ஓவர். நானே பிடிச்சேன், உன் மண்டை மேல கொண்டை போல பொடச்சுக்கும் ஒழுங்கா வந்திடு…!” என்று மிரட்ட அவளுக்கு போக்கு காட்டிக் கொண்டு இருந்தவளால் கொஞ்ச நேரத்துக்கு மூச்சி வாங்கிட தந்தையின் அருகே அமர்ந்து ‘டைம் அவுட்’ என்றாள்.

இது வழக்கமான ஒன்று தான் குண்டாக இருப்பதால் அவளால் முடிந்த மட்டுமே ஓடுவாள். பிறகு மூச்சு வாங்க, ‘டைம் அவுட்’ என்று அமர்ந்திடுவாள். அது தான் சரியான நேரமென்று சுடர் அவளை தாக்கி விட்டுச் செல்வாள். அவள் பக்கத்தில் அமர்ந்தவள் தன் தூக்கத்தை கலைத்ததற்கு நான்கு குட்டுகள் வைத்து விட்டாள்.

“ப்பா… பக்கத்துலே உட்கார்ந்து இருக்கீயே சொல்ல மாட்டீயா…?” தலையை தேய்த்தவாறு தந்தையிடம் வினவ, “இதென்ன இன்னைக்கு நேத்தா நடக்குது கண்டுக்க, தினமும் தானே நடக்குது. சொல்லி என்ன ஆகப் போது அதான் பார்த்துட்டு வழக்கம் போல அமைதியா இருக்கேன்.” அமர்த்தலாக மொழிபவரை முறைத்தவள்

“இப்படி பொறுப்பில்லாம பேசுறீயேப்பா நீ. இவ அடிச்சி என் பாடி டேமேஜ் ஆச்சுன்னா, நீ தான் டௌரி அதிகமா கொடுக்கணும் ஞாபகம் வச்சுக்க.” என்று விரலை நீட்டி எச்சரிக்கை செய்தாள்.

“பரவாயில்லை, பப்ளு, அதிகமா டௌரி கேட்டா, உன்னை கொடுக்காம அப்பாவே வைச்சுப்பேன் செல்லம்.” என்று கன்னத்தை பிடித்து கொஞ்ச, ஆ- வென வாயை பிளந்தாள்.

“காலம் முழுக்க ஒளவையாரான உன்னை பத்திரிமா பார்த்துப்போம் பப்ளு.” அவள் இந்தப் பக்கக் கன்னத்தை கொஞ்ச,

“அடப்பாவிகளா…! நல்லா வருவீங்க அப்பாவும் பொண்ணும். எங்க இந்த வீட்டு மருமக, எம்மோய் எம்மோய் இதுங்க பேசுறத கேட்டீயா…” என்று சத்தம் போட,

“கேட்டேன் டீ கேட்டேன், எனக்கும் அதான் சரின்னு படுது. பொண்ணு மாதிரியா நீ இருக்க, டௌசரையும் சட்டையும் போட்டு ஆம்பள கணக்காக இருந்தா, பொண்ணு பார்க்க வர்றவனெல்லாம் பொண்ண காட்ட சொன்னா, பையனை காட்டுறீங்களானு தான் கேட்பாங்க. கொஞ்சம் பொண்ணா நடந்துக்கோ டீ.” என்றும் காலையில் பாடும் சுப்ரபாதத்தை ஆரம்பிக்க,

“யூ டூ ப்ரூட்ஸ்… குடும்பமா இது…?” என்று கேட்க, மூவரும் சிரிப்பை அடக்க, சிரமப் பட்டனர்.

அவளை வாரி இழுத்து கன்னத்தில் இதழ் பதித்து, “என் செல்லம், அப்பா உன்னை விடுவேனா, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தயவு செய்து கூட்டிட்டு போயிடுங்கன்னு சொல்லுவேன்.” என்றதும் மீண்டும் முறைக்க, மூவரும் சிரிப்பை நிறுத்தவே இல்லை.

சுடருக்கு நேரமாக, அறைக்குச் சென்று குளித்து விட்டு, நீல நிற லாங் சுடிதாரை உடுத்தியவள், தனக்கு தேவையானதை பையில் எடுத்து வைத்து கொண்டாள். திருமணம் என்பதால் மேக் அப் கிட்டை ஒரு முறை பரிசோதித்து விட்டு வெளியே வர, அவளுக்காக தோசை சாம்பார் வடை என தெய்வானை அடுக்கி வைத்தார். அதனை விழுங்கியவள் தந்தையிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

ரோஸ்கலரும் பச்சை கலருமாக நிறைந்த பண கட்டுக்களை அவன் முன்னே வைத்தான் அவனது தோழன்.

“உனக்கு ஏது மச்சி இவ்வளவு பணம்…?” அதிர்ச்சியில் கேட்டான்.

“அக்காக்கு ஆப்ரேஷன் பண்ணனும் சொன்னீயே… அதுக்கு தான் டா, அட்வான்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். இதை முதல் கட்டி ஆப்ரேஷன் பண்ண சொல்லுவோம் அப்றம் மொத்த பணத்தை கட்டுவோம்.”அமர்த்தலாக மொழிபவனை விழி அகற்றாமல் பார்த்தான்.

“இவ்வளவு பணம் கொடுத்தது யாருடா…? எதுக்கு டா கொடுத்தாங்க…?” இன்னும் அந்த அதிர்ச்சியில் மீள முடியாமல் கேட்டான்.

“மச்சி, ஒரு சம்பவம் பண்ணனும். அதை கட்சிதமா முடிச்சா, மொத்த பணமும் வந்திடும்.” என்றான்.

“என்ன சம்பவம் பண்ணனும்…?”

“மச்சி, ஒரு பொண்ணு மேல ஆசிட் அடிக்கணும்.”

“டேய், எவ்வளவு ஈஸியா சொல்லுற…? அந்தப் பொண்ணோட வாழ்க்கைய நினைச்சு பார்த்தீயா? ஒரு பொண்ணோட சாபத்துக்கு ஆளாக வேணாம்.” என்றான்.

“அடேங்கப்பா, எப்போ இருந்து சார் திருந்துனீங்க…? தாலிச் செயினை அக்கும் போது தெரியலையா பொண்ணோட சாபம் பாவம் எல்லாம்… இத்தெல்லாம் பார்த்தால் வாழ முடியுமா? நமக்கு தேவை அக்காவோட உயிரும் வாழ்க்கையும் அதை மட்டும் நின.”

ஒரு புறம் அக்கா, மறுபுறம் முகமறியாத பெண் என யோசிக்க, “நான் அடிக்கிறேன் டா வண்டியை மட்டும் ஓட்டு, பாவம் என் கணக்குல வரட்டும்.” என்று அவனை அழைத்து சென்றான்.

இருவரும் தலையில் கைகுட்டையை கட்டி, முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர்.

தன் வீட்டிலிருந்து கிளம்பி வந்தவள், வழியே இருக்கும் பெருமாள் கோயிலுக்குள் நுழைந்து அவரது தரிசனத்தை கண்டு வேண்டிக் கொண்டு, பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தனது ஸ்கூட்டியில் ஏதோ பிரச்சனை என்று சர்வீஸ்க்கு கொடுத்திருந்தவள், பேருந்தில் தான் சென்றுக் கொண்டிருந்தாள்.

பேருந்து நிறுத்தத்தில் அவள் ஒருவள் மட்டுமே நின்றிருந்தாள். ஆங்காங்கே என மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அவள் பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததை ஒருவன் மூலம் தெரிந்துக் கொண்டவர்கள், வண்டியை எடுத்துக்கொண்டு அங்கே விரைந்தனர்.

பின்னே அமர்ந்தவன் கையில் ஆசிட் குடுவையை வைத்து இருக்க, முன்னே அமர்ந்தவன் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவன், அவளை நெருங்க வண்டியின் வேகத்தை குறைந்தான். யாரும் பார்க்கிறார்களா? என்று பார்த்துக்கொண்டே அருகில் நெருங்க, பின்னே அமர்ந்தவன் குடுவை திறந்து வைத்தாலும் பயத்தில் கை நடுங்க, அவனது பயத்தை கண்ட முன்னிருப்பவன் அதை பிடுங்கி, அவளை நெருங்கி, “ஹலோ…” என்றழைத்தான்.

மாஸ்க் அணிந்திருந்தவள், அதனை விலக்கித் திரும்ப, அவன் முகம் கண்டு உறைந்தவனின் மூளை எப்பவோ கட்டளை கொடுத்திருக்க, தடுக்க முடியாமல் ஆசிட்டை முகத்தில் ஊத்தினான்.

“அம்மா… அம்மா… அம்மா…” என அவளது அலறல் அப்போது தான் செவி வழியே மூளையை எட்ட, அவளை காப்பாத்த இறங்க எத்தனித்தவனை தடுத்து வேகமாக வண்டியை உயிர்பிக்க சொன்னான் பின்னே அமர்ந்தவன். அவனும் மனமின்றி வண்டியை எடுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு பறந்து போனான்.

அவளோ, கீழே விழுந்து எரிச்சல் தாளாமல் கதறித் துடித்தாள். வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றவன் யாருமில்லா இடத்தில் வண்டியை நிறுத்தியவன், பின்னே இருந்தவனின் சட்டையைப் பற்றி,

“டேய் யாரு டா, அவ மேல ஆசிட் அடிக்க சொன்னது? என் கையாலே நான் விரும்பிற பொண்ணு மேலயே ஆசிட் அடிக்க வச்சிடீங்களே டா.” என்று தன் கையைப் பார்த்து புலம்பியவன் வண்டியை ஒரு குத்துவிட்டு அதை ஓங்கி எத்தி, தன் கோபத்தைக் காட்டி நின்றான்.

13 thoughts on “மாண்புறு மங்கையே – 1”

 1. Kalidevi

  Oru ponnu neenga ketu marutha udane acid adichita sari aeiduma ungaluku ena adichitu poiduvinga adika sonnavanum adutha ponna parthutu poiduvan ava evlo kastatha anupavikanum theriuma vazhkai fulla ah

 2. CRVS 2797

  அடப்பாவிங்களா..! எவனோ சொன்னான்ங்கறதுக்காக…
  இப்படி அப்பாவி பொண்ணுங்க மேல அடிக்கிறிங்களே…
  உங்களுக்கு அதுக்கு என்னடா ரைட்ஸ் இருக்குது…???

 3. Avatar

  Story super sis…. ungaloda writing semma….nalla tana poitrundhuchu adhukulla ipadi pannitinga writer ji…. waiting for next ud

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *