Skip to content
Home » மாண்புறு மங்கையே – 10

மாண்புறு மங்கையே – 10

வதனா அழகு நிலையத்தில் வேலை செய்பவர் தான் முத்தம்மா. இவர் ***ஏரியாவிலிருந்து தான் வருவார். அங்கு தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு என அதிகம் நடக்கும். அங்கு தான் ரவுடி செல்லாவின் ஆட்சியும் நடக்கிறது.

செய்தித்தாளில் வரும் மதுரையில் நடக்கும் கொள்ளை, கொலை, கற்பழிப்பு செய்தியை வாய் விட்டு படித்தால் போதும், உடனே தனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல போலீஸை விட அதி வேகமாகக் கண்டறிந்து சொல்லி விடுவார் முத்தம்மா.

அப்படி ஒரு நாள் ஒரு பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்த செய்தியை வதனா வாய்விட்டு படிக்க, முத்தம்மாவின் வாய் சும்மா இருக்காமல், அவர்கள் இருக்கும் இடத்தையும் இவர்கள் தான் அதை செய்திருப்பார்கள் என்றும் சொல்லிவிட்டார். அன்று அவர் சொல்லிய இடத்தை நினைவு கூர்ந்தவள், தன்னை முழுவதுமாக மறைத்து விட்டு தான் அவ்விடம் சென்றாள்.

அந்த ஏரியாவிற்கு வந்ததும் முதலில் பார்த்தது செல்லில் யாரிடமோ கத்திக் கொண்டிருக்கும் மாரியை தான் அவனை பின்னின்று அழைத்தாள் வதனா, “இங்க, செல்லா எங்க இருப்பார்?” எனக் கேட்டாள்.

“செல்லா வா! அவரை தேடி எதுக்கு வந்திருக்கீங்க?” என சந்தேகமாக கேட்டான்.

“அவர உங்களுக்கு தெரியுமா? நீங்க அவருக்கு என்ன வேணும்?” கேட்டவளின் குரலில் ஒரு படபடப்பு இருந்தது.

“நான் அவர் கிட்ட தான் வேலை பார்க்கிறேன். என்ன விஷயம் சொல்லுங்க…?” என்றான்.

சுற்றும் முற்றும் பார்த்தவள், “அவர்கிட்ட என்னை கூட்டிட்டு போங்க?” எனவும் அவனும் “வாங்க” என்று செல்லாவிடம் அழைத்து சென்றான்.

செல்லாவின் இடத்திற்கு இருவரும் வந்தனர். மாரி, படைகளுடன் அமர்ந்திருந்த செல்லாவிடம் காதில் ஏதோ சொல்ல, அவனும் வதனாவை பார்த்து “சொல்லுங்க, எதுக்கு என்னைத் தேடி வந்தீங்க?”

“அது… அது…” உள்ளுக்குள் எழுந்த பயத்தை சிரமப்பட்டே மறைத்தாள், ‘போயிடலாமா?’ எனக் கூட எண்ணம் தோன்றியது அவளுக்கு.சுற்றி இருந்த ரவுடி கும்பலை பார்த்து அச்சம் வேறு.

“சொல்லுங்க எதுக்கு வந்தீங்க?”

“எனக்கு ஒரு பொண்ணு மேல ஆசிட் அடிக்கணும், எவ்வளவு பணம் வேணும்ன்னாலும் தரேன். செஞ்சு கொடுப்பீங்களா?”

தாடையை சொறிந்தவாறு அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்த செல்லா, “எவ்வளவு பணம் கொடுப்பீங்க மேடம்?”

“எவ்வளவு வேணும்ன்னாலும் தரேன். அவள் முகத்தில ஆசிட் அடிக்கணும் அதுபோதும்.” என்றாள்.

பலமாக யோசித்தவன், “எதுக்காக அடிக்கனும் மேடம்…?” எனக் கேட்க, “அவ அழக வச்சி, என் வாழ்க்கையவே அழிச்சிட்டா.” ஆதங்கமாய் சொன்னவளை கண்டு ஒரு நிமிடம் அமைதியாக பார்த்தவன், “ஓ.. கள்ளக் காதலாக…!” என்றான்.

“சொல்லுங்க யார் இத பண்ணுவா? எவ்வளவு பணம் வேணும்?” அவள் கேட்கவும் முந்திக் கொண்டு மாரி,

“அண்ணே இத நானே பண்றேனே ! முத்துவோட அக்காக்கு ஆபரேஷன் பண்ண பணம் வேணும். இது நான் பண்றேன், அந்தப் பணத்தை எனக்கு கொடுங்க அண்ணே.” என மாரிச் சொல்ல, தாடையை தடவியவன் மற்றவர்களை பார்க்க அவர்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை.

“ஐஞ்சு லட்சமும் அந்தப் பொண்ணோட போட்டோவ கொடுங்க இவன் முடிச்சிடுவான்.” என்றான்.

“இந்தாங்க இதை அட்வான்ஸ் வச்சிக்கங்க மீதிய வேலை முடிச்சதும் கொடுக்கிறேன்.” ஒரு லட்ச ரூபாயை அவனிடம் கொடுத்தாள். அவனது அலைபேசி எண்ணை வாங்கியவள், அவனது புலனத்தில் சுடரின் புகைப்படத்தை அனுப்பி வைத்தாள்.

சுடரின் முகத்தை பார்த்த, செல்லா “மேடம், இந்த பொண்ணா, உங்க வாழ்க்கைய கெடுத்துச்சு…? என்னால நம்ப முடியலையே.” என யூகித்து கூற,

“தேவை இல்லாதத பேசாதீங்க, எப்போ வேலைய முடிப்பீங்க, அத சொல்லுங்க? இல்ல பணத்தை வாங்கிட்டு ஏமாத்திடுவீங்களா?”

“மேடம், பார்க்கற வேலை தப்பா இருக்கலாம், ஆனால் செய்ற நாங்க ஏமாத்த மாட்டோம். வேலை முடிச்சிட்டு இவன் சொல்வான். விஷயம் உங்க காதுக்கு வந்திடும். அப்றம் மீதிய அவன்கிட்ட கொடுத்திடுங்க. ஆமா, மேட்டர் முடிச்சதும் பணம் தராம ஏமாத்த மாட்டீங்க தானே?”

“இல்ல இல்ல கண்டிப்பா கொடுத்திடுவேன்.”

“கொடுக்கல, அப்றம் நீங்க வேற செல்லாவ பார்ப்பீங்க…!” எச்சரிக்கை செய்ய பயத்துடன் அவ்விடம் விட்டு சென்றாள். ஒரு வாரத்தில் செல்லாவின் ஆளான மாரி , முத்துவின் உதவியோடு சுடரின் மீது ஆசிட்டை அடித்து முழுப் பணத்தை வாங்கிக் கொண்டான்.

பின் அக்காவின் ஆபரேஷனுக்கு பணத்தை கட்டி விட்டு முத்துவும் மாரியும் கொடைக்கானலுக்கு கிளம்பி விட்டனர். அவர்கள் சென்று தலைமறைவாக போவதை வதனாவிடம் செல்லா சொல்ல, அதுவும் அவளுக்கு சரியென பட, செல்லாவின் உதவியுடன் கொடைக்கானலில் வசிக்கின்றனர்.

நடந்தவை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் மனமென்னும் நீதி மன்றத்தில் மனசாட்சி அவளை குற்றவாளியாக்கி நிறுத்த, மூளையோ அவ்வபோது அவளுக்காக வாதடி ஜாமீன் வாங்கி தந்தது.

ரித்திக் ஹாலில் அமர்ந்து பாடல் கேட்டுக் கொண்டிருந்தான். அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன்னறைக்கு விரைந்தவள் உடை மாற்றி, சமையலறைக்கு செல்லவிருக்க அவளை தடுத்தான்.

“வதனா…!” என்று அவனுக்கெதிரே இருந்த இருக்கையை காட்டி அமரச் சொன்னான். அவளும் அமர்ந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் நேராக பார்த்துக் கொள்ளவில்லை.

“சுடரை வேலைய விட்டு நிறுத்திடு வதனா…!” என்றான். அவனது இந்த மொட்டையான கூற்று அவளுக்கு விளங்க வில்லை. சந்தேகமாக அவனிடம், “எதுக்கு? எதுக்கு நான் அவளை வேலை விட்டு நிறுத்தனும்…?”

“அவ கஷ்ட படுறத என்னால தாங்கிக்க முடியல. அவ என்ன தான் சிரிச்சு, சமாளிச்சாலும் உள்ளுக்குள்ள அவ படுற வேதனை என்னால புரிஞ்சுக்க முடியது. சோ ப்ளீஸ் நீயே அவளை வேலைய விட்டு அனுப்பிடு ப்ளீஸ்.” என்றான்.

அதைக் கேட்டு அவளிடத்தில் ஒரு விரக்தி சிரிப்பு… ‘மனைவியின் வலி வேதனை புரியாதவன் காதலிக்காக கரைகிறான்…’ என எண்ணியவள் ரித்திக்கிடம் திரும்பி, “உங்க கண்ணுக்கு முன்னாடி வேதனை படுற மனைவி தெரியல, ஆனால் காதலிய நினைச்சா மட்டும் வலிக்கிதுல கிட்ட தட்ட ஆறு மாசமா ஒருத்தி வலி, வேதனை, கண்ணீரோட கரையிறாளே அவளை நினைச்சு கொஞ்சம் கூட உங்களுக்கு வருத்தம் இல்லேல ரித்திக். ஏன் ரித்திக் மாறிட்டீங்க? என்னால பிள்ளைய தானே பெத்துக்க முடியாது. மத்தப்படி என்னாலையும் செக்ஸ் மூலமா உங்களை சந்தோசப்படுத்த முடியும்.

ப்ளீஸ் ரித்திக் இப்பயும் எதுவும் கெட்டு போகல இதெல்லாத்தையும் மறந்திடுங்க ரித்திக், நீங்களும் நானும் பழையபடி நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கலாம். நாம இங்க இருக்க வேணாம். எங்கயாவது போயிடலாம், என்னோட எல்லாம் பார்லரையும் சுடர் பேருக்கு எழுதி வச்சிடுறேன். ப்ளீஸ் ரித்திக் என்னோட வந்திடு…!” அவன் முன்னே அமர்ந்து மண்டியிட்டு கைகளை பற்றி அழுதாள்.

“மறுபடியும் ஆரம்பிக்காத வதனா, எனக்கு உன் மேல லவ் இல்லை. நான் சுடரை தான் லவ் பண்றேன். அவ கூட தான் வாழனும் ஆசைப்படுறேன். நீ என்னை விட்டு போயிடு. நீ என்கூட இருந்தால் கண்டிப்பா என்னை அவ ஏத்துக்க மாட்டா. என் வாழ்க்கையில் இருந்து மொத்தமா போயிடு. உனக்கு காம்பென்சேஷன் வேணா கூட அதிகமா தரேன். என்னை விட்டு போயிடு வதனா.” என்றவனும் கத்த, அதைக் கேட்டு அவள் இன்னமும் உயிரோட இருக்கிறாள் என்றால் அதிசயம் தான்.

“போக மாட்டேன் ரித்திக், நான் போக மாட்டேன். உங்கள விட்டு போக மாட்டேன். உயிரோட உணர்வோட கலந்த காதலை நீங்க வேணா மறக்கலாம் ஆனால் என்னால முடியாது. உங்களை என்னால யாருக்கும் விட்டு தர முடியாது. அப்றம் நான் போனா சுடர் ஏத்துப்பானு சொன்னீங்கள, அவ எப்பயும் உங்களை ஏத்துக்க மாட்டாள். அவளுக்கு கூட நம்ம காதலும், நாம வாழ்ந்த வாழ்க்கையும் புரியும். ஆனா உங்களுக்கு ஏன் புரியல? நான் உங்களை விட்டு போனாலும் சுடர் உங்களை ஏத்துக்கவே மாட்டாள். என்னை போல நீங்களும் அந்த வலிய அனுபவிக்கத்தான் போறீங்க ரித்திக். அப்ப நான் உங்க கூட இருக்க மாட்டேன். என் காதல் தான் உண்மையானது, நீங்க உங்க தப்பை நினைச்சு வருத்தப்படுவீங்க, அப்போ நான் உங்க கூட இருக்க மாட்டேன்… இது நடக்கும்.” என்று அழுது கொண்டே அறைக்கு சென்றாள்.

நீள்விருக்கையில் விழுந்தவனின் இதயத்தை வதனாவின் கண்ணீர் சுட்டது. ‘ஏன் சுடருடன் வாழக் கூடாது?’ என்று மூளை வினவ, ‘வதனாவின் அன்புக்கு என்ன குறை?’ எனக் கேட்டது மனது.

‘வாழ்க்கை ஒரு முறை தான் இஷ்டப்படி வாழ்வதில் என்ன தவறு?’ மூளை ஆரம்பிக்க, ‘அடுத்தவரை கஷ்டபடுத்தி வாழ்வது தவறு’ என்றது மனது.

“உன் வாழ்க்கை, உன் சந்தோசம் தான் உனக்கு முக்கியம், மத்தவங்க எப்படியும் போகட்டும்.’ என்றது மூளை.

“வதனா, மற்றவளா? உயிருக்கு உயிராக நேசித்தவள் உன்னுயிரை சுமந்தவள். தாய்மை இழந்தாலும் உன்னை நெஞ்சில் சுமப்பவள் அவளை வேண்டாம் என்று சொல்ல எப்படி தான் உனக்கு மனம் வந்தது…?” என மனமும் எதிர்கேள்வி கேட்க, பட்டிமன்றம் போல அவனுக்குள்ளே, மாத்தி மாத்தி எண்ணங்கள் உதித்து அவனை குழப்பி தலைவலியை கொடுக்க, தலைவலி தாளாமல் குடிக்கச் சென்றான்.

மிலானி, அரிசி மண்டியில் இருக்கும் செல்லாவைப் பார்க்க வந்திருந்தாள். மிலானியை பத்தியும் அவள் தற்போது எடுத்திருக்கும் கேஸ் பத்தியும் அறிந்து தான் வைத்திருந்தான் செல்லா. அவள், முத்துவை சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதிலிருந்து, அவன் தன்னுடன் வேலை செய்ததால் தன்னையும் விசாரிக்க வருவாள் என்று அறிந்து வைத்திருந்ததால் தைரியமாக அவள் முன் அமர்ந்திருந்தான்.

“சொல்லுங்க மேடம், என்ன விஷயமா வந்திருக்கீங்க?”

“உங்ககிட்ட வேலை பார்க்கற முத்துவை பத்தி தான் விசாரிக்க வந்திருக்கேன். எங்க அவன்?”

“அவனா? அவன் இங்க இல்ல மேடம், அவனுக்கு வேலை கிடைச்சுது அங்க போயிட்டான்னு பசங்க சொன்னாங்க. முதல்ல என்கிட்ட வேலை பார்த்தான். இப்போ கொஞ்ச நாளா, இங்க வரது இல்ல வேற வேலைய தேடிக்க போறேன் போயிட்டான் மேடம்.” என்றான்.

“இப்போ அவன் உங்ககிட்ட வேலை பார்க்கல, இதுக்கு முன்னாடி உங்ககிட்ட என்ன வேலை பார்த்தான்…?” எனக் கேட்கவும்,

“அரிசி லோடு ஏத்துறது, இறக்கறது, கஷ்டமர் கிட்ட கொடுக்கறதுனு ஆள் பத்தலேன்னா, அவனை கூப்பிடுவேன் மேடம், அப்போ துணைக்கு வருவான். மத்தபடி, எங்கிட்டயே அவன் முழு நேர வேலை எல்லாம் பார்க்க மாட்டேன். பசங்க கூட சுத்துவான் அவ்வளவு தான் மேடம்…!”

“அவன் கொடைக்கானல்ல, எங்க இருக்கான் உங்கள்ல்ல யாருக்காவது தெரியுமா?” என செல்லா பின்னாடி நிற்கும் அவனது அடியாட்களை பார்த்து கேட்டாள்.

செல்லாவும் திரும்பி தன்னாட்களை பார்க்க, அவர்களும் “தெரியாது” என்றனர்.

“சரி, அவனை பத்தி எதுவும் தகவல் வந்தால் எனக்கு சொல்லுங்க…” என்று அங்கிருந்து சென்றாள். அவள் சென்றதை உறுதி படுத்திய ஒருவன், செல்லாவிடம் “அண்ணே, முத்து தான் இது செஞ்சான்னு எப்படிண்ணே கண்டுபிடிச்சாங்க…?” என்று பயத்தில் கேட்டான்.

“முத்து, அந்தப் பொண்ணுகிட்ட ஒரு நாள் வம்பு பண்ணிருக்கான், அந்தப் பொண்ணு அவனை போலீஸ்ல ஒப்படச்சிருக்காள். அந்தக் கோபத்தில பண்ணிருக்கலாம்னு அவனை சந்தேகத்தின் பேருல தான் தேடுறாங்க. ஆனால், அவன் தான் பண்ணிருக்கான்ற உண்மை தெரிய வந்தால், அவனோடு சேர்ந்து நானும் மாட்டுவேன். போலீஸ், அவனை தேடுற விஷயம் அவனுக்கு தெரியக் கூடாது. அப்படி தெரிந்தால் அவனை சரண்டர் ஆகாமல் பார்த்துக்கங்க, ஏன்னா அவன் கொஞ்சம் சரியில்ல.” என்று எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றான்.

அந்தப் பரபரப்பான காலை வேளையில், கைகளை பிசைந்து நேரத்தை மாறி மாறி பார்த்திருந்தவாறு வங்கியில் அமர்ந்திருந்தாள் கலைசுடர். இரண்டு இரண்டு நபர்களாகத்தான் உள்ளே அனுமதித்தனர்.

வந்தவள் ‘மேனேஜரை பார்க்க வேண்டும்’ என்று சொல்ல, அவளை காத்திருக்க சொன்னார்கள். வங்கி முழுவதும் ஏசியின்றி இருக்க, அவளுக்கு வியர்த்து கொட்டியது. அதனை துடைத்தவாறு அமர்ந்திருந்தாள்.

“மேடம், உங்களை மேனேஜர் சார் கூப்பிடுறார்.” ஒருவன் வந்து சொல்ல, அவளும் அனுமதி கேட்டு உள்ளே சென்றாள். வந்த விஷயத்தை அவளும் சொல்ல, அவரது இளக்காரமான பார்வையை அறிந்தும் பொறுமை காத்தாள்.

பின் அவரும் கேள்விகள் பல கேட்க, பதில் சொல்லிக் கொண்டே வந்தாள். அவளிடம், அவளது மாஸ்க்கை கழட்ட சொல்ல, கழட்டியவளின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தவர், “இந்த முகத்தை வச்சு தான் பியூட்டி பார்லர் ஆரம்பிக்க போறீங்களா?” எனக் கேட்டதும் கொதித்து போனாள் சுடர்.

9 thoughts on “மாண்புறு மங்கையே – 10”

 1. CRVS 2797

  அட போடா கிறுக்கா…! தொழில் செய்ய பணமும், புத்திசாலித்தனமும் இருந்தா போதும் அதற்கு எதுக்கு அழகு..?

 2. Avatar

  Indha maadhri lan kelvi kekuravan melayae acid oothanum nu thonudhu….indha rithik nenicha kaandu agudhu sis….avanuku edhavadhu oru mudivu pannunga…..

 3. Avatar

  வதனா, ரித்திக் ரெண்டு பேரை நினைச்சாலும் இரிட்டேட்டிங்கா இருக்கு!!… சுடர் இன்னும் எவ்வளவு கஷ்டப்படனுமோ???

 4. Avatar

  மூகம் எப்படி இருந்தா என்ன அவளுக்கு திறமை இருக்கான்னு பார்க்காம எத பாக்கறா பக்கி பைய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *