Skip to content
Home » மாண்புறு மங்கையே – 12

மாண்புறு மங்கையே – 12

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் கேத்ரீனும் ஒருவள். குறும்படத்தில் நடித்து வந்த இவளுக்கு, வெள்ளித்திரையில் ஹீரோயின்னாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. அதில் தன் திறமையைக் காட்டி, கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தாள். சமீப காலமாக அவளுக்கு பட வாய்ப்புகள் குமிந்தன. புது படம் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் படப்பிடிப்புக்காக, சிங்கப்பூருக்கு வந்திருத்தனர் படக் குழுவினர். படமெல்லாம் எடுத்து முடித்த தருவாயில், கொரோனா காரணமாக, ரயில் மட்டும் விமானப் பயணத்தை ரத்து செய்து இருந்த வேளையில். வெளியூரில் பணிப்புரிந்த இந்திய மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதில் ஊரடங்கு வேற போட்டு விட, உணவுக்கும் தங்குவதற்கும் தவித்தனர் மக்கள். அந்தப் படக்குழுவினர்களும் அங்கே மாட்டிக்கொண்டனர்.

சிங்கப்பூரில் அவளுக்குகென்று வீடொன்றிருக்க, அங்கே தங்கிக் கொண்டாள். தன்னோடு வந்த படக்குழுவினரை அருகே இருந்த கெஸ்ட் ஹாவுஸில் தங்கிக் கொள்ள சொன்னாள். அனைவரும் அவரவர் குடும்பத்தை பிரிந்து வாடிய நிலையில் இருந்தனர்.

அக்குழுவில் ஒருவன் தான் கார்த்திக், சினிமா துறையில் சிறந்த ஒப்பனைக் கலைஞர்களுள் ஒருவன். இந்தப் படத்திற்கும் அவன் தான் ஒப்பனை கலைஞர். அவனும் இவர்களுடன் சேர்ந்து மாட்டிக்கொண்டான்.

தெய்வானையின் அண்ணன் ராமநாதனின் மகன் தான் கார்த்திக். ராமநாதனும் சினிமா துறையில் புகழ் பெற்ற ஒப்பனை கலைஞர் தான். சிறந்த ஒப்பனைக் கலைஞர் என்று நிறைய விருதுகளை வாங்கி இருக்கிறார். தந்தை வழியே இவனும் பின்பற்ற, சினிமா துறையில் இவனுக்கும் பேர் உண்டு.

தந்தை இறந்து விட, தாய் ரோகிணி, தங்கை கனிஷ்காவை இவன் பார்த்து கொள்கிறான். கனிஷ்கா பேஷன் டீசைனிங் படிக்கிறாள்.

ரோகிணியை தன்னோடு இருக்கச் சொல்லி கதிரின் குடும்பம் கெஞ்சினாலும் மகனின் வேலையைக் காரணம் காட்டி சென்னைக்குச் சென்றுவிட்டார். அதனால், விசேஷ நாட்கள் என்றால் மதுரைக்கு வந்து விடுவார்கள்.

சென்னையில் கொரோனா அதிகரிக்க, கதிர் அவரை அலைபேசி வழியாக எவ்வளவு அழைத்தும் வரவில்லை. ரோகிணிக்கு, யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்ற எண்ணமிருக்க, ‘இங்கே இருந்துக் கொள்கிறோம்’ என்று சமாளித்தார்.

மகனுமின்றி மகளுடன் தனியாக ஊரடங்கைக் கழித்தார். மேலும் இப்போது அனைத்தும் திறந்து விட ஆரம்பிக்க மூச்சுவிட்டது போல இருந்தது அவருக்கு. மகனின் வரவுக்காக காத்திருக்கார்.

இருப்பத்தி எட்டு வயது நிரம்பிய கார்த்திக்கிற்கு கலைச்சுடரை தான் கட்ட வேண்டும் என்று ரோகிணிக்கு ஆசை. அவளது கனவுக்காக தள்ளிப் போட்டிருந்தனர் அவர்களின் திருமணத்தை.

ரோகிணி, சுடரை சென்னைக்கு அழைக்க, அவளோ மறுத்து விட்டாள். ‘எப்படியும் உங்க வீட்டுக்கு தான் வர போறேன். கொஞ்ச நாள் அம்மா, அப்பா கூட இருந்துகிறேனே அத்த’ எனச் செல்லம் கொஞ்ச, அவரும் ‘சரி’ என்றார்.

‘மாமியார் மருமகள் சண்டை எல்லாம் இங்க பார்க்க முடியாது போல’ பாவமாக கார்த்திக் சொல்ல, “எதுக்கு சண்டை போடணும்? இவ என் மருமக இல்ல மக. என் மக கூட நான் ஏன் சண்டை போடணும்…? அவ எது சொன்னாலும் நான் சரினு தான் சொல்லுவேன்.” என்று கன்னத்தில் முத்தம் வைக்க, அதை ஏக்கமாகப் பார்த்தான். அவளோ, அவனுக்கு பழிப்பு கட்டினாள்.

கார்த்திக்கிற்கு, சுடர் என்றால் உயிர். அவன் அவளுக்காகவே வாழ்கிறான். சின்ன வயதிலிருந்தே இவனுக்கு இவள் என்று முடிவு பண்ணினாலும்… அவள் மேல் காதல் வந்தது, அவள் பூப்பெய்தி பின் சடங்கு செய்ய, அவனை அருகில் மாப்பிள்ளையாய் நிற்க வைத்த கணத்தில் தான். அன்று காதலில் விழுந்தவன் தான் இன்னும் எழவில்லை. கொரோனா, மற்றும் ஊரடங்கு இல்லை என்றால் இந்நேரம் அவர்களுக்கு நிச்சியம் முடிந்திருக்கும்.

ஆனால் எல்லாம் விதி, கொரோனாவால் இழந்ததும் கிடைத்ததும் பல இங்கு. எல்லாம் எதிர்பாராதவை தான். இதோ இன்று கூட விமானம் மற்றும் ரயில் இயங்க அனுமதியளிக்க, இதோ சின்ராசை கையில் பிடிக்க முடியவில்லை. ஆனால் கலைச்சுடரால் கிடைக்க போகும் அதிர்ச்சியை அறியாமல் வானில் பறந்து கொண்டிருக்கிறான்.

சுடருக்கு நடந்த ஆசிட் விச்சை, ரோகிணிக்கும் கார்த்திக்கும் கதிர் சொல்லவில்லை. சொன்னால் பயந்து போவார்கள் ஊரடங்கு தளர்ந்த பின் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டனர். ஆனால் அவன் வந்து என்ன ஆட்டம் ஆடப்போகிறானோ?

“மேடம்… மேடம்…” எனத் துள்ளிக் குதித்து ஓடிவரும் கார்த்திக்கை அதே மகிழ்ச்சியோடு ஏறிட்டாள் கேத்ரீன்.

அவள் சினிமா துறைக்கு வந்த பின் கார்த்திக்கிடம் நல்ல நட்பு கிடைத்தது. அவளது அழகு மட்டும் உடல் எடை குறையாமலும் அதே நேரம் கூடாமல் இருக்க அறிவுரைச் சொல்லுவான்.

வீட்டிலும் சரி வேலையிலும் அவளுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்க, இவனிடம் பத்து நிமிடம் பேசினால் எல்லாம் மறைந்து மாயமாக போகிடும் என்பாள். அப்படித்தான் இருவருக்குள்ளும் நட்பு வளர்ந்தது. அவள் எவ்வளவு சொல்லியும் அவன் மேடமை விடமாட்டான். வயதில் சின்னவள் என்று கூறியும் பார்த்தாள். முடியவே முடியாது என்றான். அவளும் விட்டுவிட்டாள்.

கேத்ரீனின் மாமா ஜேம்ஸ், அவளுக்கு மேனேஜராக அவளுடனே இருக்கின்றார். சிறுவயதில் தாய் தந்தை இழந்த அவளுக்கு எல்லாம் அவர் தான். அவள் ஆசைப்பட்டது போலவே படிக்க வைத்தார். நடிக்கணும் என்றாள் இதோ, அவளும் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருத்தியாக இருக்கிறாள். ஜேம்ஸ்க்கு ஒரு ஆண் பிள்ளை தான் பத்து வருடங்களுக்கு பின் பிறந்தான் டேவிட். டேவிட்டின் படிப்பு செலவெல்லாம் இவள் தான் பார்த்துக் கொள்வாள். இவளது அத்தைக்கு அதாவது ஜேம்ஸ் மனைவிக்கு கேத்ரீனை பிடிக்காது, ஆனால் அவளது பணத்தின் மீது தான் பாசம் அதிகம். எப்போதும் அவளை திட்டிக் கொண்டே இருப்பவர், கையில் பணத்தை கொடுத்ததும் இளிக்க ஆரம்பித்தார். அவருக்கு அவள் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் கையில் காசு கிடைத்தால் போதும். ஆனால் ஜேம்ஸ் அப்படி இல்லை மருமகள் என்றால் உயிர், அவளுக்காக என்னவேணும் என்றாலும் செய்வார்.

அடிக்கடி பிரச்சனை பண்ணும் அத்தையிடமிருந்து அவளை காப்பாற்றுவது கார்த்திக்கும் ஜேம்ஸூம் தான்.

“என்ன கார்த்திக் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க? என்ன விஷயம்?”

“மேடம் இந்தியாக்கு போகப் போறோம்.” என்றான் சந்தோசத்தின் உச்சிக்கே சென்று, “நிஜமாவா…!” எனக் கேட்ட அவளையும் அவனது மகிழ்ச்சியில் இணைத்துக் கொண்டான்.

“எஸ், நாம இந்தியா போறோம். இப்போ தான் எனக்கு உயிரே வருது. ஃபரஸ்ட் பிளைட்ட புக் பண்ணி மதுரைக்கு போகணும்.” என்றான்.

“ஏன் மதுரைக்கு? சென்னைக்கு போகலையா? அம்மா, தங்கச்சிய பார்க்காம ஏன் மதுரைக்கு போறீங்க கார்த்திக்?”

“இல்ல மேடம், அம்மா, கனி நேத்து வரைக்கும், என் கிட்ட பேசுனாங்க. ஆனால் கலை(அவனுக்கு மட்டும்) எங்கிட்ட சரியா பேசல, ஏதோ அவளுக்கு பிராபலம் போல தோணுது. முதல்ல மணிக்கணக்கா பேசுவோம். ஆனா கொஞ்ச நாளா? அவ சரியில்ல, பத்து நிமிசம் பேசிட்டு வச்சிடுறா. என்ன ஏதுன்னு தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்றவன் வருந்த,

“இல்ல கார்த்திக் அவங்களுக்கு வேற யார் கூடவாது ஆஃபேர்.” அவனது முறைப்பில் முடிக்க முடியாமல் நிறுத்தினாள்.

“என் கலை அப்படி பண்றவ இல்ல. அவளை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம பேசாதீங்க மேடம்.” பல்லைக் கடித்தப்படியே கூறினான்.

“சாரி கார்த்திக்.” தலைகுனிய அங்கிருந்து சென்று விட்டாள்.

“சரளாக்கா, கொடைக்கானல்ல இருக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு முத்துவோட போட்டோ அனுப்ப சொல்லித் தேட சொன்னேனே, சொல்லிட்டீங்களா?”

“எஸ் மேடம், எல்லா ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டேன். நான் ஒண்ணு கேக்கட்டுமா மேடம்?”

“எனக்கா கேளுங்க?”

“இந்தக் கேஸ்ல க்ளுவே கிடைக்கல, சம்பந்தம் இல்லாத முத்துவ ஏன் தேடி அலையணும் சொல்லுங்க?”

“என்னக்கா பண்ண? பொதுவா ஆசிட் கேஸ்ன்னா மோஸ்ட்லி காதல் விவகாரமா தான் இருக்கும். ஆனால், இந்தப் பொண்ணு கேஸ்ல அப்படி எதுவுமே இல்லயே. அந்தப் பொண்ண யாரும் டார்ச்சரும் பண்ணல, வேலைக்கு போற இடத்துல பிரச்சனையும் பண்ணல்ல, அப்றம் யாருக்கா இதை பண்ணிருப்பா? நானும் அந்தப் பொண்ணு இருக்க ஏரியா, அவ வேலை பார்க்கற இடம்னு ஒன்னு விடாம விசாரிச்சு பார்த்துட்டேன். எந்தக் க்ளுவும் கிடைக்கல. நீங்க சொன்னீங்களே, இந்தக் கேஸ்க்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லைனு, சம்பந்தம் இருக்கு அக்கா. பஸ் ஸ்டேண்ட்ல ரெக்கார்டடான, வீடியோல, ஆசிட் அடிச்சவன் முகம் மறைச்சிருந்தாலும், அவனோட பாடி ஷேப்பும் முத்துவோட ஷேப்பும் ஒன்னு போல இருக்கு. சோ, அவனை விசாரிச்சா, தான் விடைக் கிடைக்கும். இல்லேன்னா மறுபடியும் மொதல இருந்து ஆரம்பிக்க வேண்டியது தான். சந்தேகப்படும் படி அவ சர்கில் யாருமில்லை. ஆனாலும் அப்படி சொல்லவும் முடியல, ரொம்ப கிரிட்டிக்கலான கேஸ்க்கா.” என்று புலம்ப ஆரம்பித்தாள். ஆனால் அவள் சரியான பாதையில் தான் செல்கிறாள் என்பதை அவளறிய வில்லை.

மதுரை ராஜா முத்தைய்யா மன்றம் மட்டுமல்லாது அதனை சுற்றி இருந்த ஏரியா முழுவதுமே வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்து இருந்தன.

திருவிழாவைப் போல சொந்த பந்தங்கள் கூடிருந்த வேளையில் ஓரமாக முகத்தை மறைத்த வண்ணம் இருந்தாள் சுடர். மணப்பெண்ணை இன்னும் மண்டபத்திற்கு அழைத்து வராததால் முன்னமே வந்தவர்கள், மணப்பெண் அறையில் காத்திருந்தனர்.

வேட்டுச் சத்தம் காதைப் பிளக்க, மணப்பெண் வருவதாக கூறிச் சென்றனர். மணப்பெண்ணை ஆர்த்தி எடுத்தி அழைத்து வந்து அறைக்குள் விட்டனர். சிறு குசலம் விசாரித்து விட்டு, வேலையைத் தொடர்ந்தாள் கலைச்சுடர்,

ஆனால் அவளால் வேலையை சரிவர செய்ய முடியவில்லை. முகத்தை ஒரு பக்கம் மறைத்துக் கொண்டே வேலைச் செய்தாள். யாராவது ஏதாவது சொல்வார்களோ என்ற அச்சம் அவளுக்குள் இருக்க, கையெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. காவியாவும் வித்யாவும் எவ்வளவு சொல்லியும் அவளால் நிதானமாக இருக்க முடிய வில்லை.

“அக்கா, நான் ஒன்னு சொல்லட்டுமா?” என முன்னே அமர்ந்த மணப்பெண், கண்ணாடி வழியே சுடரைப் பார்த்து கேட்டாள்.

“சொல்லும்மா”

“நீங்க ஒரு காஃபி குடிச்சிட்டு ப்ரீயாகிட்டு வாங்களேன். அப்றம் உங்க முகத்தை, நீங்க மறைக்க வேணாம். ஐ ஆம் சூயர் உங்களை இங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீங்க நெர்வஸாகாம மேக்கப் போட்டு விடுங்க, நீங்க நெர்வஸாகி மேக்கப் சொதப்பி மாப்பிள்ளைக்கு என்னை அடையாளம் தெரியாது மாதிரி பண்ணிடாதீங்க. பாவம் நான் மட்டும் தான் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க இருக்கற ஜீவன்.” என்று பீல் பண்ணுவது போல சொல்லி சுடரை சிரிக்க வைத்தாள்.

சுடரும் தயக்கத்தை கலைத்து விட்டு, அவளுக்கு ஒப்பனைகள் செய்ய ஆரம்பித்தாள். அலங்காரம் முடிய, அழகு தேவதையாய் ஜொலித்தாள் மணப்பெண். நிச்சயம் முடிந்து, மணமக்கள் இருவரும் மேடையில் சேர்ந்து நின்றனர்.

அறையில் இருந்தவாறே, அவர்களை பார்த்தனர் மூவரும், “பணக்கார பொண்ணுங்களுக்கு தான் இந்த மாதிரி ஹான்சமான பசங்க கிடைப்பாங்க டி. நமக்கெல்லாம், கருவாடும் கரிக்கட்டையுமாத்தேன் கிடைக்கும்.” என அலுத்துக் கொண்டாள் காவியா.

“பச், உண்மை தான் டி. அப்படியே வெள்ளையா இருந்தாலும் வயசானவனா தான் இருப்பான் நம்ம தலையெழுத்து டி.” என வித்யாவும் அவளோடு இணைந்து கொள்ள,

“தோற்றமோ வயதோ முக்கியம் இல்லடி, மனசையும் குணத்தையும் தான் பார்க்கணும். இந்த அழகு, எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான், இந்த அழகெல்லாம் போனாலும் காதலிக்கறான் பாரு, அப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்கணும் டி.” என்றாள்.

“எப்படி உன் மாமா பையன் கார்த்திக்கை போல வா…?” எனக் கேட்டு நக்கல் செய்ய, அவளது முகம் மாறியது. அதே நேரம் அலை பேசி அழைக்க, அதில் கார்த்திக் பெயரை கண்டு எடுத்தவள் பேச, அங்கே சொல்ல பட்ட விஷயத்தை கேட்டு அதிர்ந்தாள்.

8 thoughts on “மாண்புறு மங்கையே – 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *