Skip to content
Home » மாண்புறு மங்கையே – 18

மாண்புறு மங்கையே – 18

ரொம்ப நன்றி மேடம் நாங்க வர்றோம்.” கதிரை கைதாங்கலாக அழைத்து சென்றான் கார்த்திக். வெளியே வந்தவர்கள் சிறையாகி இருக்கும் மூவரையும் பார்க்க, மூவரும் தலைகுனிந்து நின்றனர்.

கதிரும் கார்த்திக்கும் செல்ல, அவர்கள் பார்த்தவாறே நின்ற முத்து மனதிற்குள் ஆயிரமுறை அவளிடம் மன்னிப்பு வேண்டினான். அவளது காதல் கிடைக்க வில்லை என்றாலும் அவளது மன்னப்பு என்றாவது ஒரு நாள் கிடைத்தாலே போதும் என்றானது அவனுக்கு.

“ஏன் டா முத்து, நீ காதலிக்கறத சொல்லல…?”

“சொன்னா மட்டும் என்னடா ஆகிட போகுது? நான் அவளுக்கு சரியானவன் கிடையாது. அவளுக்கு துரோகம் பண்ணிட்டு அவகிட்டயே காதலிக்கிறேன் சொன்னா எப்படி டா இருக்கும்? எனக்கும் அந்த ரித்திக்கும் என்ன வித்தியாசம்? என் காதல் கடைசி வரைக்கும் தெரியாமலே போகட்டும். அந்தக் கார்த்திக் தான் அவளுக்கு சரியானவன், அவன கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கட்டும்.” என்றவனின் உதடுகள் முறுவலுடன் உரைத்தாலும் உள்ளுக்குள் ஆயிரம் யானைகள் சேர்ந்து மிதிக்கும் போது உண்டாகும் வலியில் தான் அவனும் துடிக்கிறான்.

தன் தாயின் மடியில் தலை வைத்து அழுது கரைந்து தன் பாரங்களை இறக்க முயற்சித்தாள். பூவின் இதழை விட அவள் மனது எவ்வளவு மென்மையோ! அவ்வளவு கனத்தை சுமக்கிறது. சின்ன வயதில் அவள் காணும் முதல் துரோகமல்லவா இது.

“மேம் மேம்…” என்றழைத்தாலும் உள்ளுக்குள் உடன் பிறவா சகோதரியாக தானே பார்த்தாள். அவளே பெரும் துரோகத்தை இழைத்த பின் யாரை நம்புவதென கேள்வி இனி அடிக்கடி எழும் என்பதையும் மறுக்க முடியுமா?

இந்தக் துரோகம் என்ன காகிதத்தில் எழுதி காற்றில் பறக்கவிட்டு மறக்கும் படியான செயலா? உடம்பில் பச்சை குத்துவது போல, காலத்திற்கும் அழியாதது. மறக்க நினைத்தாலும் முடியாது.

முதுகில் குத்தி நெஞ்சை கிழித்தெடுப்பதே, துரோகம். அந்த மென்மையான இதயத்தை வன்மையாக கிழித்தெடுத்த துரோகத்தின் எதிர்பாராத வலியை நொடிக்கு ஒரு முறை எண்ணி எண்ணி வலியில் துடிக்கிறாள் அம்மாது.

கோவமாக வீட்டிற்கு வந்தவள், தன்னறைக்கு சென்று பட்டென சாத்திக் கொண்டு கத்தி கரைந்தாள். அவளால் அதை தவிர என்ன செய்ய முடியும்…?

ஆரஞ்சம்மாளும் தெய்வானையும் மதியும் மூவருமாக அவளது அறை கதவை தட்டி பார்த்து விட்டனர். ஆனால் திறக்கவே இல்லை. “என்னாச்சு டா சுடர், ஏன் கதவை திறக்க மாட்ற? கதவை திறடா அம்மாகிட்ட என்ன நடந்தது சொல்லு…” எனத் தட்டிய வாக்கிலே பதற்றத்தோடு கேள்வி கேட்க, அவளிடம் பதிலில்லை.

வேகமாக மதியோ காரத்திக்கை அலைப்பேசியில் அழைக்க, அவனோ வந்து கூறுவதாக போனை வைத்தான். மீண்டும் கதவை தட்ட, திறந்தவள் தன் அன்னையை கட்டி அழுதாள்.

“என்ன மா ஏன் அழற? எதுக்குடா அழற? அங்க என்ன நடந்தது சொல்லுடா…?” எனக் கேட்க, நெஞ்சடைக்க அவளால் வாய்பேச முடியவில்லை.

“ஏத்தா, பிள்ளை கிட்ட எதையும் கேட்காத அதுவே துன்பத்தில இருக்கு, நீயும் கேட்டு ஏதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிட போகுது. விடுத்தா பிள்ளைக்கு துணையா இரு நீ வாடி.” மதியை அழைத்து வெளியே வந்தார்.

அவளது தலையை கோதி, கண்ணீரை துடைத்தவாறு தானும் அழுதார் தெய்வானை. மனம் பதைபதைக்க, மகளின் நிலையை காண முடியாமல் தவித்தார்.

“அம்மா, உனக்கு யாராவது துரோகம் பண்ணிருக்காங்களாமா?” தன் தாயின் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்து கேட்டாள்.

“நிறைய டா. சில நம்பின உறவுகளே, பண்ணிருக்காங்க. சில சொந்தக்காரங்களே நல்லது செய்றேன்னு அவங்க சுயநலத்தை காட்டி போயிருக்காங்க டா. மனுசனா பிறந்த எல்லாருமே கண்டிப்பா துரோகத்தை சந்திக்காம இருந்ததே இல்ல டா.” அவளது தலைய கோதிய படியே அவளது கேள்விக்கு பதில் சொன்னார்.

“நம்பினவங்க எனக்கும் துரோகத்தை இழைத்துட்டாங்க மா. முதல் முறையா அந்த வலியை அனுபவிக்கறேன் மா. மூச்சு முட்டுது மா, என்னால அதை நினைக்க நினைக்க தாங்க முடியலமா.” குரல் தழுதழுக்க கூறினாள்.

“யாரு டா என் பொண்ணுக்கு துரோகம் பண்ணது. என் பொண்ணுக்கு துரோகம் பண்ண யாருக்குடா மனசு வந்தது?”

“அக்கா, அக்கா… நினைச்சிட்டு இருந்த அந்த வதனா தான் மா எனக்கு துரோகம் பண்ணினா.” அவள் கூற நம்ப முடியாமல் அதிர்ந்தார்.

‘இரண்டு மணி நேரத்துக்கு முன் தான் சுடர் தனக்கு தங்கை என்றாளே அவளா தன் மகளுக்கு துரோகம் இழைத்தாள்?’ நம்ப முடியாமல் தனக்குள்ளே கேட்டுக் கொண்டார் தெய்வானை.

“வதனா வா, என்னடா சொல்லுற? வதனா என்ன பண்ணாள்?” எனக் கேட்க, நடந்த அனைத்தையும் கூற நெஞ்சை பிடித்து அதிர்ந்து விட்டார்.

“அவளா உன் முகத்தை இப்படி ஆக்கினது? வதனாவா இதுக்கெல்லாம் காரணம்? என்னால நம்ப முடியல டா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உன்னை தங்கை சொன்னாளே மா. அவளா? அந்த தம்பி இவ்வளவு செய்யுதேனு, நம்ம மேல உள்ள அக்கறை பாசத்துனால தானே நினைச்சோமே மா, அதுக்கு பின்னாடி இப்படி ஒரு எண்ணம் இருக்கும் எண்ணலேல டா, மனுசங்க யாரு நல்லவங்க கெட்டவங்க தெரியாது காலத்துல இருக்கோம் டா. உதவி செய்தால் கூட அதுல அவங்க பல ஆதாயத்தை தானே தேடிக்கறாங்க.”

“உண்மை தான் தெய்வானை யாரு எவருனே தெரியாத நமக்கு இவ்வளவு உதவி செய்யும் போதே நாம தான் சுதாரிச்சு இருக்கணும். ஆனால் எல்லாரும் நல்லவங்கனு நம்பினது நம்ம தப்பு புத்தில அடிச்சது போல சொல்லாம சொல்லிட்டாங்க மா.” கதிரும் அவர்களுடன் சேர்ந்து அழுக ஆரம்பித்தார்.

“நாம யாருக்கு என்னங்க துரோகம் செய்தோம். நாம உண்டு நம்ம வேலை உண்டு இருக்கற நமக்கா இப்படி நடக்கணும்? என்னால அந்தப் பொண்ணு பண்ணத ஜீரணிக்க முடியலங்க.” கண்ணீர் விட்டனர் இருவரும்.

“இப்போ ஏன் எல்லாரும் எழவு விழந்தது போல அழறீங்க? போதுந்த்த, போதும் மாமா இனி நாம அழவே கூடாது. அழறதுனாலே எல்லாம் மாறிடுமா? இல்ல கலை முகம் தான் திரும்ப வந்திடுமா? அவளுக்கு நடந்த துரோகத்துல இருந்து நாம தான் அவளை வெளிய கொண்டு வரணும். நீங்களே அழுதா, அவளை எப்படி தேத்துவீங்க? இப்போ இருக்க ஆறுதல் அவளுக்கு நாம தான் மறந்திடாதீங்க. நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளிய போங்க நான் அவகிட்ட பேசணும்.” என்றதும் இருவரும் கண்களை துடைத்து கொண்டு வெளியேறினார்கள்.

அவளருகில் அமர்ந்தவன் வழிந்த கண்ணீரை துடைத்தான். “உன்னால் இந்த துரோகத்த தாங்கிக்க முடியாது தான். ஆனா, என்ன நடந்ததோ அதை ஏற்க பழகு கலை. வலியை ஏத்துக்கோ, மாற்ற முடியாத விஷயத்தை அப்படியே ஏத்துக்கறத தவிர நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது மா. இந்தத் துரோகம் நமக்கு ஒரு பாடம், அதை கத்துக்க பழகு கலை. இது உனக்கு புதுசு தான். ஆனா, இது போல பல துரோகங்கள் சந்திக்க நேரலாம், மனுஷன் ஒரு கலப்படம் மா, நல்லது கெட்டது கலந்து தான் இருக்கும், 100% நல்லவனோ கெட்டவனோ இங்க இல்லை. முன்னேறி போகணும் எண்ணம் இருந்தால் இதையெல்லாம் கிடப்புல போட்டு அடுத்த அடிய எடுத்து வைக்கணும் கலை.

ஒருத்தன் நிலையா நிக்கிறானா? அவன் பல முறை சரிந்து விழுந்து எழுந்ததுனால தான். எப்படி நீ இந்த முகத்தை ஒரு பாஸிட்டிவ் மாத்த நினைக்கறீயோ அதே போல இந்த துரோகத்தையும் பாரு.” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க அவனை அணைத்துக் கொண்டாள்.

6 thoughts on “மாண்புறு மங்கையே – 18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *