Skip to content
Home » மாண்புறு மங்கையே – 6

மாண்புறு மங்கையே – 6

தன் அன்னையின் நெஞ்சில் முகத்தை அழுத்திக் கொண்டு அழுது கரைந்தாள் சுடர். அலைபேசி திரையின் வழியே தன் முகத்தை கண்டு மனம் வெகுண்டவளால் அழ மட்டுமே முடிந்தது.

“மா, என் வாழ்க்கையே போச்சு. இனி எப்படி மா நான் வெளிய போவேன் எல்லாத்தையும் எப்படிமா ஃபேஸ் பண்ணுவேன்…?” மகள் கேட்கும் கேள்வியால் பெத்த வயிற்றில் வலி வந்து போனது.

“எல்லாரோட பார்வையும் வேற மாதிரில மா இருக்கும். என் முகத்தை பார்க்கவே அருவருப்பு படுவாங்களே.சிலர் பயந்து போவங்களே, எப்படி மா இந்த சமுகத்துல என்னை ஏத்துப்பாங்க? இனி என்னால் சாதாரணமா இருக்க முடியுமா? எல்லாத்துலையும் என்னை ஒதுக்கி வைப்பாங்களே!” கதறினாள்.

‘தன் மகள் சுடரா இது?’ என்பது போல தன் மேல் நம்பிக்கையற்று கரைகிறாளே? எத்தனை தைரியமான பெண்ணிவள், சமூகத்தை கண்டு அஞ்சுகிறாளே? எதையும் சமாளிப்பேன் என்று திறம்பட பேசும் தன் பெண்ணின் மன நிலமையும் மாற்றி விட்டதே!

அவளைக் தேற்ற, அவளது அழுகையை நிறுத்த வழி தெரியாது தவித்து போனார் தெய்வானை. நம்பிக்கையும் தைரியம் மனதில் நிறைந்திருந்தாலும் இந்த விபத்திற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

“சுடர் மா, நீயா இப்படி பேசுற? நீ தைரியமான பொண்ணு டா. மத்தவங்க பார்வைக்காகவா பயப்படுற? மத்தவங்க பார்வை என்னைக்கும் ஒரே மாதிரி இருக்கிறதில்ல. அவங்க பார்வை மாறுபடத்தான் செய்யும். அவங்களை நினைச்சு உன்னை நீயே ஏன்மா வருத்திக்கற? உன் மேல பரிதாபப்படுவாங்க ஒழிய, உனக்காக யாரும் இருக்க போறதில்லை. அவங்க உன் கூட வரப் போறதும் இல்லை. நீ அவங்களை பத்தி ஏன் கவலை பட்டு உன்னை நீயே கஷ்டபடுத்திக்கற?” எனக் கேட்டு தன் மகளை காண, விசும்பிக் கொண்டே தன் அன்னையைக் கண்டாள்.

“என்னடா, உன்னை சமாதானம் செய்ய, நான் சொல்லல. உன்னை இப்படி பண்ண காரணமென்ன இது போல துவளனும் தான். நீயும் அவங்க எண்ணத்துக்கு மதிப்பு கொடுக்கறது போல தான் யோசிக்கற? வெளியே யார் என்ன சொன்னா என்ன? எப்படி பார்த்தா என்ன? உன் வாழ்க்கை அவங்க பார்வையிலும் பேச்சுலையும் தான் இருக்கா? அவங்களால தான் நீ வாழ்றீயா? உன் எண்ணத்தை மனசையும் மாத்து மா. போ வெளிய போயிட்டு வா. கலைய கூட்டிட்டு வெளிய போ, கோயில் தான் திறந்திருக்கே, போயிட்டு வா.” என்றார்.

ஏதோ சமாதானமானவள் போல், வெளியே செல்ல தயாரானாள். கலையை அழைத்து கோயிலுக்கு போகச் சொன்னார் தெய்வானை.

மாஸ்க் அணிந்தவள், முகத்தை முக்காட்டு போட்டு ஒரு பக்கமாய் மறைத்தாள். இருவரும் நடந்து வெளியே வந்தனர். அவள் முகத்தை மறைத்திருந்ததால், அமிலம் பட்ட இடம் தெரியாமல் போனது. அருகே உள்ள கண்ணன் கோயிலுக்கு சென்றனர். கண்ணன் கோயிலுக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் அவள் முகத்தில் அமில வீச்சு நடந்தது.

அந்தப் பேருந்து நிறுத்தத்தை பார்த்தவாறு வந்தாள், “அக்கா, அங்க ஏன் பார்க்கற? அதை கெட்ட கனவா நினைச்சி மறந்திடுக்கா. கோயிலுக்கு போறோம் நல்லதை நினைச்சிட்டு வா அக்கா.” என்று அழைத்து போனாள். வாசலில் அமர்ந்த பாட்டியிடம் துளசியை வாங்கி கோயிலுக்குள் சென்று இருவரும் கண்ணனை சேவித்தனர். கோயிலுக்கு வந்தவர்கள், அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு நகன்றனர். தலையில் முக்காடு போட்ட படி இருக்கும் சுடரைக் கண்டு சிலர் முனங்கிக் கொண்டே போனார்கள்.

அவர்களை கடந்தே கோயிலை சுற்றி வந்தவள், வெளியே செருப்பை மாட்டினாள். “பாப்பா, இப்ப உன் உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டார் அப்பூக்கார பாட்டி.

“நல்ல இருக்கேன் பாட்டி. ரொம்ப நன்றி பாட்டி, யாரோ எவரோ நினைக்காம, உதவி பண்ணி என்னை ஹாஸ்பிடல் சேர்த்தீங்க. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது பாட்டி.” என்றாள்.

“என்ன மா இப்படி சொல்லிட்ட? ஐயோ! அம்மானு நீ துடிச்ச துடிப்ப பார்த்ததும் எப்படி மா யாரோ எவரோனு நினைக்க தோணும். வீட்டுல எனக்கும் பொம்பள பிள்ளை இருக்குமா.. உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு. இந்த ஊர் உலகத்தை நினைச்சிட்டு இருக்காத கையில் பட்ட தீகாயம் போல நினைச்சி அடுத்த வேலை பாருமா. வீட்டுல முடங்கிடாத, என் பக்கத்து வீட்டு சுகந்தி, அவளுக்கும் அவ புருஷனுக்கும் தகராறு சண்டை போட்டவன், அவ மேல மண்ணெண்ணைய ஊத்தி நெருப்பை பத்த வச்சிட்டான் மா. நாங்க தான் அணைச்சி மருத்துவமனைக்கு கூட்டுட்டு போனோம். பாவம் உடம்பு முழுக்க தீகாயம் கொஞ்ச நாள் வீட்டோட கிடந்தா, அப்றம் வயிறு காயவும் வெளி ஜனங்களை நினைக்காம வேலை வெட்டின்னு பார்க்க போயிருச்சு, நீயும் வீடே கத்தினு இருக்காம வேலைக்கு போ தாயி.” என்று அவரும் அறிவுரை வழங்கினார்.

இருவரும் வீட்டுக்கு வர, அங்கே அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் கிரிக்கேட் விளையாடினார்கள்.

“கலை அக்கா, வா விளையாடலாம்.” ஒருவன் அழைக்க, “அக்கா நீயும் வா சேர்ந்தே விளையாடலாம்.” அவளையும் அழைக்க, குழந்தைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அக்கா, நீ மட்டும் வா, சுடர் அக்கா வேணாம்.” என்றான் ஒருவன். சுடரும் கலையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ஏன் டா எங்க அக்காவை வேணாங்கற?” கோபமாக கேட்டாள் கலை.

“இல்ல, அக்கா மூஞ்சி பார்த்தால் நீங்க எல்லாரும் பயப்படுவீங்க, நைட் தூங்க மாட்டீங்க. அக்கா கூட சேரக் கூடாது அம்மா சொன்னாங்க.” என்று ஒருவன் அப்படியே சொல்ல, சுடருக்கோ மேலும் தன்னை கூர் போட்டது போல இருந்தது. கலைக்கோ கோபம் உச்சிக்கு சென்றது.

“எங்க அக்கா முகத்தை பார்த்தா பயந்து தூங்க மாட்டீங்களா? முடி வெட்டணும், கையில் மெஹந்தி போடணும், கல்யாணத்துக்கு போறோம் அலங்காரம் பண்ணி விட்டு சுடர், ஒவ்வொன்னுத்துக்கும் எங்க அக்காவயே தேடி தேடி வந்தீங்க, இப்ப மட்டும் என்ன வந்துச்சாம்? சைக்கிள் ஓட்டி நீ கீழே விழுந்த போது உன் முகத்துல காயம் பட்டுச்சே, உடனே நாங்க என்ன பயந்தா போனோம். எங்க அக்கா தானே டா தூக்கிட்டு ஹாஸ்பிடல் போனா? அந்த நன்றி கூட கொஞ்சமாச்சும் இருக்கா உங்களுக்கு? எங்க அக்காக்கு என்ன பேயா பிடிச்சிருக்கு? முகத்துல ஆசிட் பட்டுருச்சு, அதுக்காக எங்க அக்காவையே வேணாபீங்களா?” என்று சத்தம் போட்டாள்.

“கலை எதுவும் நீ பேச வேணாம். வா வீட்டுக்குள்ள போலாம்.” அவளை இழுக்க, “இருக்கா ரெண்டுல ஒன்னு தெரிஞ்சே ஆகணும். அப்ப இதுவரைக்கும் நீங்க முகத்தை பார்த்து தான் பழகுனீங்களா? என்ன மனுஷ ஜென்மமோ நீங்க எல்லாரும்.” என்று கத்தினாள். அந்தக் குழுந்தைகளுக்கு எதுவும் விளங்க வில்லை ஆனால், சுற்றத்தாருக்கோ, குழந்தைகளை வைத்து தங்களை தான் சாடுக்கிறாள் என்று புரிய தலையை தொங்க போட்டனர்.

“போங்க டா இங்க இருந்து, நீ வாக்கா.” என்று உள்ளே அவளை இழுத்து சென்றாள்.

“என்ன கலை இப்படி பேசிட்ட? குழந்தைங்களுக்கு என்ன தெரியும்? அவங்க வீட்டில சொன்னதை தானே கேட்பாங்க.” என்றவளை இடைவெட்டியவள்,

“அதே தான் நானும் சொல்லுறேன், வீட்டில் சொல்லிக் கொடுக்கிறத தானே பேசுவாங்க. அதை நல்லதா சொல்லிக் கொடுத்தா தான் என்ன? முகத்தை பார்த்தா பயப்படுவனாம் நைட் தூங்க மாட்டானாம். எல்லா பேய் படத்த பார்த்து பயந்த போற பிசாசு குட்டிங்க மாதிரி நைட் தூங்காம உட்கார்ந்திருக்கும், அப்ப தெரியாதாமா?” என்னும் போதே தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினாள். வீட்டே கதியென அடைப்பட்டாள்.

வீட்டில் இருந்தால் மேலும் மனஅழுத்தம் கூடும் என்பதற்காகவே வெளியே அழைத்து சென்றால் அந்தச் சமுகத்தின் பார்வை அதைவிட மன அழுத்தத்தை கொடுத்து விடுகிறது.


அந்த நிகழ்வு நடந்து நாட்கள் வாரங்களாக, தன்னறையிலே அடைந்து கிடந்தாள் சுடர். எவ்வளவு சொல்லியும் அழைத்தும் வெளியே வராதவள் தன் அறையே கதியென இருந்தாள்.

அவளை பார்க்க, ரித்திக்கும் வதனாவும் வந்திருந்தாலும் அறையை விட்டு வெளியே வராது உள்ளே இருந்தாள். தெய்வானை அழைத்தும் வர மறுத்து விட்டாள்.

“வதனா, நீ தான் அவளோட இன்ஸ்பிரஷன், நீ சொன்னால் கண்டிப்பா கேட்பா. போய் கூப்பிடு.” என்றான் ரித்திக்.

“ஆமாமா, உன்னை பார்த்து தான் தைரியத்தையும் தன்னம்பிக்கையை வளர்த்தாள். கண்டிப்பா நீ சொன்னால் கேட்பா மா.” அவரும் சொல்ல எழுந்து உள்ளே சென்றாள். சுடரோ விழி மூடி அமர்ந்திருந்தாள்.

“மேடம் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த அறைக்குள்ளே அடைஞ்சு கிடக்க போறீங்க?” என்று பின்னே கைகளை கட்டிக் கொண்டு அவளது முகத்தை பார்த்து கேட்டாள் சந்திரவதனா. அந்த முகத்தில் என்றும் அவள் காணும் கம்பீரம் இன்றும் குறையாது பிரதிபலிக்க, அவளை ஒரு நொடி இமைக்காது பார்த்தாள் சுடர்.

“ஆசிட் முகத்துல தானே பட்டது. உன் திறமையில இல்லையே. இந்த ஆசிட்டால உன் முகத்தோடு சேர்ந்து உன் திறமையும் வெந்து போயிடல. இன்னும் ஏன் டி இந்த அறைக்குள்ளே அடைஞ்சு கிடக்க, நான் உன் முகத்தை பார்த்து வேலைப் போட்டு கொடுக்கல, உனக்குள்ள இருக்க திறமையை பார்த்து தான் கொடுத்தேன். இந்த நாலு சுவத்துல முடங்கிட்டால் உன் அழகு முகம் திரும்ப வந்திடுமா…?

எப்படி டி மனசு வருது, உன் அப்பா காசுல சாப்பிட, உன் அம்மா பணிவிடையில இருக்க? என் சுடர் அப்படியா? தன் தேவைக்கு தானே பார்க்கிறவளாச்சே இப்படி உட்கார தான் உனக்கு பிடிச்சிருக்கா?

உன்னை போல ஆசிட் பட்ட பெண்கள் வாழலையா? பொண்ணுக்கு தேவை அழகான முகம் இல்ல, பெண்களுக்கு தன்னம்பிக்கையும் திமிரு தான் அழகு. அது தான் தேவையும் கூடன்னு நீ தானே சொல்லுவ, உன் திமிரும் தன்னம்பிக்கை எங்க? உன் முகத்தோட போயிருச்சா. ஊருக்கு தான் உன் உபதேசமா உனக்கு இல்லையா…? உன்னை பார்த்து தான் நம்ம கடையில் வேலை செய்ற அத்தனை பெண்களும் தன்னம்பிக்கையோடு வாழ்றாங்க. நீ முடங்கிப் போய், அதை உடைச்சிடாதே. உன்னை முடக்கி போடுற விஷயத்திலிருந்து வெளிய வா…” என்று அந்த அறையே அதிரும் படி கத்தினாள்.

“மேம், என்னால் முடியும் தோணல. இனியும் முன்ன போல தன்னம்பிக்கையோடு வாழ முடியும் நம்பிக்கை இல்லை மேம்…” அமிலத்தால் வெந்திருந்த அவளது வதனத்தில் கண்ணீர் தடம் பதிய,

“அப்போ இதுனால் வரைக்கும் உன் முகம் தான் உன் நம்பிக்கையா? உன் பேச்சுக்களும் செயல்களும் வெறும் வார்த்தைகள் தானா? முட்டாள்… முகம் போனால் உன் நம்பிக்கைய நீ இழந்திடுவீயா.

அழகா இருக்கிற பொண்ணுங்கனால தான் சாதிக்க முடியுமா…? சாதிக்க தேவை முகம் தான் எந்த வள்ளுவரும் சொல்லல. தினமும் உன் கனவை எண்ணி பெருமையா சொல்லுவீயே, அந்தக் கனவையும் சேர்த்து இந்த நாலு சுவத்துக்குள்ள அடைஞ்சுக்கிட்டீயா..?

நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். நீ இல்லேன்னா எனக்கு இன்னொருத்தி கிடைப்பா. உனக்கு எப்படி..? எத்தனை நாட்களுக்கு முடங்க போற… அப்பா காசுலே வாழ முடிவு பண்ணிட்டீயோ, சொந்தம்மா கடை வைக்க கூட அப்பாகிட்ட காசு வாங்க கூடாதுன்னு நினைக்கற ஆள் தான், இப்ப மூணு வேலையும் அவர் காசுல சாப்பிடுறன்னு நியாபகம் இருக்கா? இப்போ தான் உன்னை பார்க்க அசிங்கமா இருக்கு.” என்றவள் முகம் சுளிப்பத்தைக் கண்டு வெட்கிப் போனாள் கலைச்சுடர்.

“மேம், அப்படி பார்க்காதீங்க. என்னால அந்தப் பார்வை ஏத்துக்க முடியல…” தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“எனக்கும் கூட உன்னை அப்படி பார்க்க இஷ்டம் இல்லை சுடர். உன் முடிவு என்னை அப்படி பார்க்க வைக்கிது. இதுக்கு மேல உன் விருப்பம்…” என்றவள் வெளியே செல்ல, கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து முதன் முதலாக முகம் சுளித்தாள்.

அவள் கோபமாக வெளியே வருவதை பார்த்தனர் அனைவரும். “வாங்க வீட்டுக்கு போலாம்.” என்று எதுவும் பேசாமல் வெளியே சென்றாள். அவளை தொடர்ந்து அவனும் சென்றான்.

எல்லார் முகத்திலும் ஏமாற்றம் வலி தெரிந்தது. யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவளுடைய பேச்சி சுடரைப் பாதித்து.

கண்ணாடியில் சென்று தன் முகத்தை பார்த்தாள். வதனா பேசின வார்த்தைகள் காதுக்குள் ரீங்கார மிட்டன. தன் அக்கா கருப்பென்று சொல்லி, கல்யாணம் தடைப்படுவதை கூறிக் கொண்டிருந்தாள் தன்னோடு வேலை செய்யும் ஒருத்தி. அதையும் கூட வேலை செய்யும் சக பெண்களும் கேட்டு கொண்டிருந்தனர்.

“பாவம் எங்க அக்கா, இனி எனக்கு கல்யாணமே நடக்காது விரக்தியில பேச ஆரம்பிச்சட்டா! வீட்டுல எல்லாரும் இவளால தான் என் கல்யாணம் தடைப்படுதுன்னு சொல்லி அவள மேலும் கஷ்டப்படுத்துறாங்க.” என்று வருத்தம் கொண்டாள்.

“இங்க பாரு குறை யாருக்கு தான் இல்லைன்னு சொல்லு. எல்லாருக்கும் குறை இருக்கும். ஆனா, அதிகமா பேசப்படுறது பெண்களோட குறைகளை தான். அதுக்காக எல்லாம் உன் மனசை தளர விடாத. உங்க அக்காவ வீட்டுலே முடங்கி கிடக்காம வேலைக்கு போகச் சொல்லு. கண்டிப்பா, உங்க அக்காவோட நிறத்த பார்க்காம, மனசை பார்க்கற மாப்பிள்ளையா வந்து அமையும்…” என்று அவளுக்கும் ஆறுதல் அளித்தாள் சுடர். இப்போது அவளுக்கு குழந்தையே பிறந்து விட்டது, அதை எண்ணியவளுக்கு தன் மேல் சிறு வெறுப்பு வந்தது. ‘ஊருக்கு தான் உபதேசமா? உனக்கு இல்லையா?’ என்று மீண்டும் மனசாட்சி கேட்க, அவளிடம் பதில் இல்லை.

அமிலம் பட்ட இடத்தை விரலால் வருடினாள். ‘உனக்காக, நான் ஏன் என்னையே முடக்கிக்கனும்?’ என்றவள் ஒரு முடிவெடுத்தவளாக முறுவலித்தாள்.

“ஏன் அப்படி பேசுன? என் மேல உள்ள கோபத்தை என்கிட்டயே காட்டிருக்கலாம். எதுக்கு அவகிட்ட ஹார்ஷா நடந்து கிட்ட?”

“யார்கிட்ட எப்படி பேசணும் எனக்கு தெரியும். யார்கிட்ட கோபத்தை காட்டனும் கூட எனக்கு தெரியும். அவளுக்கு பக்கத்துல உக்காந்து ஆறுதல் சொன்னால் கண்டிப்பா உரைக்காது, அதுனால தான் ஹார்ஷா நடந்துக்கிட்டேன். கண்டிப்பா நாளைக்கு வேலைக்கு வருவா.” என்றவள் சாலையில் விழியைப் பதித்தாள்.

அழகாய் அந்தக் காலைப் புலர, தன் அறையிலிருந்து தயாராகி வெளியே வந்தாள் சுடர். நிச்சயம் அவள் புதிய சுடர் தான். வேலைக்கு போவது போலவே கிளம்பி வந்தாள்.

“அப்பா, அம்மா இனி எப்பயும் போல நான் வேலைக்கு போறேன்.” என்றவளை கண்டு அனைவரது கண்களும் கலங்கின.

7 thoughts on “மாண்புறு மங்கையே – 6”

 1. Avatar

  சூப்பர் சூப்பர்!!… வதனா, சுடர் ரெண்டு பேருமே அசத்திட்டாங்க!!!..

 2. CRVS 2797

  எனக்குத் தெரியும்…. சுடர்விழிங்கற பேருலேயே சுடர்ன்னு … ஒளியை அர்த்தமா வைச்சுக்கிட்டு முடங்கிப் போயிடுவாளா என்ன…?
  ஆனா, என்னோட சந்தேகம் என்னவென்றால் ஆசிட் அடிக்கச் சொன்னது வதனாவா..? ரித்திக்கா…???

 3. Kalidevi

  Good sudar yarum namma face alaga irukuratha vachi pesuarangana avanga ethuku kunam tha epovum nallathu apadi pakahuravanga kitta pesu. Inum yar adika sonnathu therilaye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *