Skip to content
Home » மாண்புறு மங்கையே – 5

மாண்புறு மங்கையே – 5

கடந்த வந்த நினைவலைகளில் சிக்கி தவித்தவள், மகிழுந்து சட்டென நின்றதும் அதலிருந்து மீண்டாள். தன் கண்களை சுழற்றியவள், தனது வலது புறத்திலிருந்து ரித்திக் மகிழுந்தின் கதவை திறந்து கொண்டு இறங்கியதும் தனது இடது புறம் பார்க்க, அங்கே ஒய்யாரமாக அவளது வீடிருந்தது.

மகிழுந்தை விட்டு இறங்கியவள் வீட்டிற்குள் நுழைந்தாள். தன் அறைக்கு சென்ற ரித்திக், ஒரு குளியலைப் போட்டு விட்டு வேறுடை மாற்றி, நாசியில் முகக்கவசம் ஒன்றை அணிந்து வெளியே வந்தான்.

அவனை ஆராய்ந்தாள், அவனோ எங்கோ கிளம்புவதற்கு தயாராகி இருந்தது போல் இருந்தது.

“எங்க போறீங்க ரித்திக்?” சந்தேகம் கொண்டு வினவினாள் வதனா. “கமிஷனர் ஆபீஸ் போறேன்.” என்றான் கார் சாவியை எடுத்துக் கொண்டு.

“எதுக்கு அங்க போகணும்?” மீண்டும் அவனை கேள்வியால் தடுத்தாள்.

“என்ன பேசுற நீ, சுடர் முகத்தில ஆசிட் அடிச்சிருக்காங்க. அது யாருன்னு தெரிஞ்சு, அவனுக்கு தண்டனைக்கு வாங்கி கொடுக்க வேணாமா? அவன் யாருன்னு தெரியணும் எனக்கு.” என பற்களை நறநறவென கோபத்தில் கடிக்க, கண்களிரண்டும் சிவக்க நின்றான். அவனது இந்தக் கோபம் புதிதாக இருந்தது அவளுக்கு.

“நீ எதுக்கு அவளுக்காக இதெல்லாம் பண்ற? சுடரோட அம்மா அப்பா பார்த்துப்பாங்க ரித்திக். நீ ஏன் இதுல தலையிடுற?” எனக் கேட்கவும், யாரோ ஒருவன் மேல் இருந்த கோபம் வதனாவின் மேல் திரும்பியது.

“என்ன பேசுற வதனா நீ. சுடர் உன் தங்கைனு சொல்லுவ, உன் தங்கைக்கு ஒன்னுன்னா, இப்படித்தான் சொல்லுவீயா…! நீ எப்படியோ போ. சுடர் நான் காதலிக்கிற பொண்ணு. அவளுக்கு ஒன்னுன்னா எனக்கு துடிக்கும். அவளுக்காக இதென்ன இன்னமும் செய்வேன்.” நரம்புகள் புடைக்க பேசியவனை வலியோடு கண்டு விரக்தியில் சிரித்தாள்.

“இதெல்லாம் ஒரு பொண்டாட்டியா நான் கேட்க எவ்வளவு கொடுத்து வச்சுருக்கணும்ல ரித்திக்! உங்களுக்கு அந்த அளவு இடம் கொடுத்துட்டேன்ல…” என்றவள் விழிகளில் நீர்வழிய கேட்க, அவனிடம் பதில் இல்லை.

“அவளோட முகத்தை பார்த்து தானே உங்களுக்கு காதல் வந்தது. இப்போ தான் அது சிதைந்து போச்சே, இன்னும் அவள் மேல் உங்களுக்கு காதல் இருக்கா ரித்திக்?” முகத்தைப் பார்த்து காதலித்தவன் தானே, அவள் முகம் சிதைந்ததுமே தன்னிடம் வருவான் என்றெண்ணியது பேதை மனம்.

ஆனால் அவனோ, “வதனா…” குரலிலொரு அழுத்தம் இருந்தது. “நீ இப்படி பேசுவேன்னு நான் நினைக்கல வதனா. அவளோட முகத்தை பார்த்து மட்டும் நான் காதலிக்கல. அவளை எனக்கு முழுதாக பிடிக்கும். அவ முகம் சிதைந்தது எனக்கு பெருசா தெரில. அவள் எப்படி இருந்தாலும் நான் அவளை அக்ஸப்ட் பண்ணிப்பேன். அதான் உண்மையான காதல்.” அவன் எடுத்துரைக்க, மீண்டும் விரக்தியில் சிரித்தாள்.

‘நீயெல்லாம் இதை சொல்லுறீயே டா’ என்பது போல அவனை கேலிப் பார்வை பார்த்தவள், “உண்மையான காதல்… எது ரித்திக் உண்மையான காதல்? கட்டின மனைவி குறையோட இருந்தும், காதலியோட குறையை பார்க்காமல் அவளை அப்படியே ஏத்துக்கிறதா?” வார்த்தைகளால் குத்திக் காட்டினாள். அவனுக்கு அதுவோ செருப்பால் அடித்தது போல் இருந்தது.

“இதை, நீ எனக்கு ஆக்சிடென்டான போதும் சொன்ன. இப்போ சுடர் முகம் பாதிச்சதுனால சொல்லுற, இன்னும் எத்தனை பேர்…?” என்று கேள்விக் கனைகளை தொடுக்க, அது ஒவ்வொன்றும் அவனை துளைத்தன.

“பதில் சொல்லு ரித்திக், இதே போல நானும் குறையோடு இன்னும் உன் மனைவியா தான் இருக்கேன். என் மீது இருந்த காதல் எங்க போச்சு?” அவளது கூர்மையான விழிகள் அவனை கூர்போட, பேசற்று போனான். உதாசீன பார்வையோடு தன் அறைக்குச் சென்றுவிட, அவனோ அப்டியே அமர்ந்து விட்டான்.

அதே நேரம் இங்கோ கதிரை அழைத்து பேசினார் அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர். “சொல்லுங்க சார்…” என்று அவர் முன் அமர்ந்தார் கதிர்.

“உங்க பொண்ணைப் பத்தி தான் மிஸ்டர் கதிர் பேசணும். கெட்டதிலும் நல்லது நடக்கும் சொல்லுவாங்களே அது போல தான் உங்க பொண்ணுக்கும் நடத்திருக்கு. ஆசிட் கண்ணுல படல சோ கண்ணுல எந்த பாதிப்பும் இல்ல. முகத்துல கூட முழுசா ஆசிட் படல. கோரசிவ்வான ஆசிட் இல்லாதததால பாதிப்பு ரொம்ப கம்மிதான். ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணலாம். அதுக்கு முன்ன அவங்க மனதை திடப் படுத்துங்க கொஞ்ச நாளைக்கு அவங்க போட்டோவையோ இல்ல கண்ணாடியையோ பார்க்க விடாதீங்க. இந்த சூழ்நிலை அவங்க மேல் உள்ள ஹோப்பை இழந்திடுவாங்க. இப்போ நீங்க, உங்க ஃபேமிலி தான் அவங்களுக்கு ஆறுதலாக இருக்கணும். அவங்க வெளிய வரவே பயப்படுவாங்க, நான் சொல்லனும் இல்ல நீங்க புரிஞ்சிருப்பீங்க நினைக்கறேன்.” என்றார் அம்மருத்துவர்.

“எப்பயும் எங்க பொண்ணுக்கு நாங்க சப்போர்ட்டா தான் டாக்டர் இப்போம். நீங்க சொல்லனும் இல்லை. நாங்க அவளை தேற்ற முயல்றோம். ரொம்ப நன்றி டாக்டர்.” அங்கிருந்து வந்தவர், தன் மகள் இருக்கும் அறையை நோக்கி நகர்ந்தார்.

அங்கே கலைமதியின் பேச்சு தான். தெய்வானையும் கதிரும் மகளை காண திரனற்று போனார்கள். அங்கே மருந்துகளுக்கு அப்பாற்பட்ட, சக்தியாக இருந்தாள் மதி, அங்கிருக்கும் சூழ்நிலையைப் புரிந்து ஓரளவு அதை மாற்ற எண்ணினாள்.

“நீ வேற அக்கா, கையில் சானிடைசர் கொடுத்தா, நம்ம பயலுக தீர்த்தமா நினைச்சு குடிக்கிறானுங்க. கொரோனா தோடு, கொரோனா சேரி, கொரோனோ வடை, மாஸ்க் பரோட்டா. கொரோனாக்கு மருந்து கண்டுபிடிக்காம என்ன என்ன கண்டுபிடிக்கிறான் பாரேன்.” அவள் போனில் வரும் கொரோனா மீம்ஸ் எல்லாம் காமெடியாக சொல்லி, சுடரை சிரிக்க வைத்தாள்.

தன் தமக்கையை பார்த்ததும் மொத்தமாக உடைந்து போனாள் மதி. அவளது அக்கா தான் அவளுக்கு உலக அழகி. அந்த முகத்தில் மட்டுமே இயற்கையான அழகு இருக்கிறதென்று எண்ணிக் கொண்டு இருப்பவள். அதுவே வெந்து சிவந்திருக்க அவளால் ஜீரணிக்க முடியவில்லை. மடையை திறந்த வெள்ளம் போல் அன்னையை அணைத்து அழுதுவிட்டாள்.

“அம்மா, அக்கா… அக்கா… என் அக்காவோட அந்த முகம் எங்கம்மா? ஏன் மா அக்காக்கு இப்படி நடந்துச்சு? யாருமா இத செஞ்சா? யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது நினைக்கிறவ மா அவ, அவ முகத்தை போய் எப்படி மா மனசு வந்தது அவனுங்களுக்கு…” சுடர் மயக்கத்தில் இருந்த போது அன்னையை கட்டி அணைத்து கதறி விட்டாள்.

“இங்க பாரு மதி, நாமளும் அழுதுட்டு இருந்தால் அக்கா உடைஞ்சு போயிடுவா. அவ முன்னாடி நாம அழக் கூடாது. அவளை தேற்ற நாம தான் இருக்கோம். நாமளும் அவ முன்னாடி அழுதால் நல்லா இருக்குமா சொல்லு? அவ எழுந்ததும் அவளை சிரிக்க வை, அவளை வெளியே கொண்டு வா மதி. அவ முன்னாடி அழாத…” கதிர் மதியை சமாதானம் செய்தார்.

“சரிப்பா, நான் அக்காக்கு நல்ல ஃபிரண்டா இருப்பேன். அவ முன்னாடி அழ மாட்டேன்.” என்று கண்களை துடைத்தாள் மதி. அவளை அணைத்து முத்தமிட்டார் கதிர்.

அதன்படி தான் அவளும் சுடரைச் சிரிக்க வைத்து கொண்டிருந்தாள். அதை பார்த்தவாறு தெய்வானை அமர்ந்திருந்தார்.

இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்து பின் அவளை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்தனர் இல்லத்திற்கு. அவளுக்கு இப்படியானதால் அவளை பார்க்க வந்தனர் அக்கம் பக்கத்தினர். காரிலிருந்து இறங்கியவளின் முகத்தை மூடவில்லை. அப்டியே அழைத்து வர, சிலர், அவள் முகத்தை கண்டு பயந்தனர்.

சிலர் முகம் சுளித்தனர். தன்னோடு நிற்கும் பிள்ளைகளின் கண்களை மறைத்தனர். இதையெல்லாம் அவள் பார்க்காமல் இல்லை. வாசலில் நிற்க, அவளை ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்தார் ஆரஞ்சியம்மாள்.

அவள் முன் யாரும் புலம்ப வேணாமென்று முன்கூட்டியே சொல்லிருந்தார் கதிர். அதன் படியே அவரும் அமைதியாக, அதே சமயம் கண்ணீர் விட்டுக்கொண்டும் இருந்தார். தன்னறைக்கு வந்து மெத்தையில் படுத்துக் கொண்டாள். சற்றுமுன் அனைவரின் பார்வையும் அவளுக்கு வந்து போனது.

உள்ளுக்குள் தன் முகத்தை எண்ணி பயமிருக்க கண்களில் நீர் வடிந்தன. அவள் தலைமாட்டில் அமர்ந்தார் தெய்வானை.

“மனசுல எதையும் போட்டு கொழப்பிக்காத சுடர் மா. எப்பயும் மனிதனோடு வாழ்க்கையில் நல்லது மட்டும் தான் நடக்கும்னு சொல்ல முடியாது. ஒரு மனுசன, திடமாக்க கடவுள் சில சோதனைகளை தரத்தான் செய்வான். நாம, நம்ம மனசை திடப்படுத்திக்கிட்டு அந்த சோதனையில் மீண்டு வர முயற்சி செய்யணும். மத்தவங்க பார்வையை எண்ணிப் பயப்படாத, அது என்னைக்கும் ஒரே மாதிரி இருக்காது. மத்தவங்க பார்வை நினைச்சு உன்னை நீயே வருத்திக்காத சுடர் மா. உன் அம்மா, அப்பா, மதி, பாட்டி, வதனா, ரித்திக் சார் இவங்க பார்வை எப்போதும் மாறாது. நீ நிம்மதியாக இருமா.” என்று நெற்றியில் முத்தம் வைக்க, அவரை கட்டிணைத்து அவருக்குள் புதைந்து போனாள்.

வெகுநேரம் கழித்தே உறங்கி போனாள். அவளை உறங்க வைத்தபின் வெளியே வந்தவரை ஏறிட்டனர் கதிரும் மதியும்.

“எதுவும் சொன்னாளா தெய்வானை?” மகளின் மனதிலுள்ளதை தெரிய கேட்டார்.

“எதுவுமே சொல்லலங்க, அழுதாள் கொஞ்ச நேரம் அப்படியே தூங்கிட்டா. மத்தவங்க பார்வை நினைச்சி தான் பயப்படுறா!” என்றார் அவள் மனதை படித்தது போல் கலங்கிய விழிகளுடன் குரல் கமறியது அவருக்கு.

“தெய்வானை, இப்ப நீ ஏன் அழற?” கதிர் அவரை அணைக்க, “முடியலங்க, அவ முன்னாடி சாதாரணமா இருக்க முடியல. பெத்தவளா அவளை பார்த்ததும் நிறைய யோசிக்க தோணுது. நம்ம பிள்ளையோட எதிர்காலத்தை நினைக்கும் போது.” அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

“தெய்வானை, ஒரு நல்ல அம்மா அப்பாவா, நம்ம கடமை நிறைய இருக்கு. நீயும் நானும் இப்போ அவளை தேத்த வேண்டிய கடமையில இருக்கோம். நீயே அழுதால் சரி வருமா? அவளோட எதிர்காலத்தை பற்றி கவலைபடாத, தீர்வு கிடைக்கும். யாரும் அவ முன்னாடி இதை பத்தி பேச வேண்டாம் பரிதாபமும் பட வேண்டாம். எப்பயும் போலவே அவளை பார்க்கணும். அவ மனசுல இருக்க தன்னம்பிக்கையை இழக்காமல் பார்த்துக்கணும் அவ முன்னாடி இப்படி இருக்க கூடாது யாரும்.” கட்டளையாகவே உரைத்தார்.

“என் பேத்தியோட முகத்தை பார்த்து பாசம் காட்டல டா, அவ தைரியமானவ. அவளுக்கு நாங்க ஆதரவாக தான்டா இப்போம். நீ சொல்லனும் இல்ல. இருந்தாலும் பொண்ணுங்க எங்க வலி எப்படி கரைக்க, அதான் என் மருமக அழறா!” தன் மருமகளுக்காக பரிந்து வந்தார் ஆரஞ்சம்மாள்.

“சரிம்மா. அதுக்காக அவ முன்னாடி அழ வேணாம்.” என்றார். குடும்பம் மொத்தமும் அமைதியே கதி என்றானது. இரண்டு நாட்கள் செல்ல, ரித்திக் மட்டும் வந்திருந்தான் அவளைக் காண, வெண்ணெய்யில் செய்தது போல இருக்கும் அவளது வதனம் அமிலம் பட்டு, சிவந்து இறுகிப் போயிருந்தது. துறு துறுவென அலையும் விழிகள் எங்கோ பார்த்து நிலைத்து நின்றன. ஓயாது பேசும் வாய் கூட சோர்ந்து போய் கிடந்தது.

“என்ன சுடர்மா மௌன விரதமா? எத்தனை நாளைக்கு?” என்று பேச்சுக் கொடுக்க, அவளோ அமைதியை தத்தெடுத்தது போலவே இருந்தாள்.

“என்ன வாய்க்கு ரெஸ்ட்டா மேடம்!” மீண்டும் மெல்ல இதழை மட்டுமே விரித்தாள் பதிலின்றி.

“இது சரி வராது, உனக்கு எல்லாம் வதனா தான் கரெட். அவளை வர சொல்லுறேன்.” என்றான் கேலியாக,.

“வதனாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் தம்பி.” என்றார் தெய்வானை அவனுக்கு காஃபியை கொடுத்தவாறே.

“இல்லம்மா, நான் இங்க ஒரு விஷயமா தான் வந்தேன். அதான் அவளை கூட்டுட்டு வரல, அங்கிள் எனக்கு கமிஷனரை தெரியும். அவர்கிட்ட பேசி ரெக்வஸ்ட் பண்ணி ஆக்ஷன் எடுக்கச் சொல்லுவோம். இத செஞ்சது யாருன்னு கண்டிப்பா கண்டுபிடிச்சு தண்டனை வாங்கி தரணும். அதுக்காக உங்களை பார்க்க தான் வந்தேன்.” என்றான் காபியைப் பருகியவாறு.

அவரும் உடன் செல்ல, இருவருமாக கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று பேசி கம்பிளைன்ட் கொடுத்து விட்டு வந்தனர்.

இன்றோடு கொடைக்கானல் வந்து ஒருவாரமானது முத்துவுக்கும் மாரிக்கும். இருக்க இடமும், மூன்று வேளையும் உணவும் கிடைக்க, வேலையின்றி, வெட்டியாக ஊர் சுற்றி அடைவதிலே அவர்கள் பொழுது ஓடின.

அவனது எண்ணம் முழுக்க சுடர் மட்டுமே இருந்தாள். அவளது பேர் கூட தெரியாமல் காதலை வளர்த்தவன், அவளது துன்பத்திற்கு மேலும் அவனே காரணமானான்.

“முத்து, என்னடா ஒரு வாரமா பேசாம, கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு இருக்க, முகம் கொடுத்து கூட பேச மாட்டீகிற, என் மேல் கோபமா?” மாரி தன் நண்பணின் ஒதுக்கத்தை கண்டு கேட்க,

“என் மேல தான் டா கோபம், அக்காவ பத்தி யோசிச்சு இத பண்ணினேன். அவளும் நல்லாகிட்டா, ஆனால் நான் செத்துடேன் டா. உயிர் வரை வலிக்கிது மாரி. நான் காதலிச்ச பொண்ணோட முகத்துலே ஆசிட் அடிச்சிட்டேன் டா அதுவும் என் கையால.” தன் மீது ஆத்திரம் பொங்க, கோபத்தில் கத்தி அழுதான்.

“சாரி மச்சான், அக்கா பத்தி யோசிச்சேனே தவிர, ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பத்தி நினைக்காத சுயநலவாதி ஆகிட்டேன்.” அவனும் வருந்த,

“மாரி, நீ மாடனுக்கு போன் பண்ணு, எப்படியாவது இதை செய்ய சொன்னது யாருன்னு கண்டு பிடிக்கணும்?” என்றான்.

“மச்சான், செல்லாக்கு தெரிஞ்சா, கொலைப் பண்ணிடுவான் டா. வேணாம் மச்சான்.” அவன் பயம் கொள்ள,

“பச்…” அவனிடம் போனை பறித்து மாடனை அழைத்தான், அவனிடம் போனில் அனைத்தையும் கூறி முடித்தான். அவனும் செய்வதாகக் கூறி போனை வைத்தான்.

“யாரு இதை செய்ய சொன்னானுங்களோ, அவனுக்கு என் கையால் தான் டா சாவு.” என்றான்.

இங்கோ, தன் அலைபேசி அடித்து அமர, யாரென்று பார்த்தவள் கம்பெனி காலாக இருக்க மீண்டும் மேசையில் வைக்கச் சென்றவள், அந்தக் கருந்திறையில் தெரிந்த தன் முகத்தை கண்டு பயந்து போனாள்.

அலைபேசியிலுள்ள படப்பிடிப்பி மூலம் தன முகத்தை பார்த்தவளுக்கு அழுகை பீறிட்டது. “நோ” அலைபேசியை வீசியவள் சத்தமாக அழத் தொடங்கினாள். அனைவரும் பதறியடித்துக் கொண்டு வர, முகத்தை மூடி கீழே மண்டிட்டு அழுகும் சுடரை கண்டு அதிர்ந்தனர்.

“சுடர் மா, என்னாச்சி மா? ஏன் மா அழுகற, என்னமா ஆச்சு?” தெய்வானை, அவளை அணைக்க, “அக்கா, உனக்கு என்ன அக்கா ஆச்சு?” அவளும் மண்டியிட்டு அமர்ந்தாள்.

முகத்தை மூடிக் கொண்டே, “என் முகத்தை என்னாலே பார்க்க முடியலம்மா, இனி என் முகத்தை போல, என் வாழ்க்கையும் ஆகிடுமே. என்னால இனி எப்படி வாழ முடியும்? எப்படி என்னால மனுசங்கள பார்த்து பேச முடியும்? இனி எப்படிமா மத்தவங்க பார்வைய சமாளிக்க போறேன்.” என்று கதறினாள் சுடர்.

10 thoughts on “மாண்புறு மங்கையே – 5”

 1. CRVS 2797

  அச்சோ….! டாக்டர் சுடரி கிட்ட கண்ணாடி எதுவும் கொடுக்காதேன்னு சொன்னாரு. ஆனா, செல்போனை கொடுக்க வேண்டாம்ன்னு சொன்னாரா…???

  1. Avatar

   Evlo naal tan sis mugatha paarka irukamudiyum ennaiku irundhalum oru naal paarthutan aganum face panni tan aganum sis….adhuku mattum kadavul thairiyam kudutha podhum nu iruku

 2. Avatar

  Indha rithik ah paarthalae kovam ah varudhu….indha muthu yaaru panna sonnadhu nu kandupudipana ila ivan police kita maatuvanannu therila…. super super sis…

 3. Priyarajan

  Kaalam kadantha gnanam yaarukkum udhavathu maari….. Ithanai naal paartha mugam illaingum pothi kodumaiya than irukkum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *