அத்தியாயம் – 10
சத்யாவிற்கு இப்படி எல்லாம் காமாட்சி நினைத்து இருக்கிறார் என்று தெரியாது. எப்போதும் போல் அவரின் படபட பேச்சு தானே என்று அதை எளிதாகவே எடுத்துக் கொண்டாள். அதனால் மகிழ்ச்சியோடே கணவன் வீட்டிற்கு செல்லத் தயாரானாள்.
வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்து கிளம்பக் கூடாது என்பதால், வியாழன் அன்று தான் சத்யாவை விட்டு வர நாள் பார்த்து இருந்தனர். காலையில் கிளம்பி மதிய உணவிற்கு அங்கே செல்வது போல புறப்பட்டனர்.
சத்யா சந்திரன் வீட்டிற்கு வரும்போது எல்லோருமே இருந்தனர். எல்லோரும் என்றால் வீட்டுப் பெண்கள், மாப்பிள்ளைகள் அனைவருமே வந்திருந்தனர். கூடவே அவர்கள் குடும்பப் பெரியவர் அந்த பெரியப்பாவும் இருந்தார். சத்யாவிற்கு சிறு யோசனை வந்தாலும், ஏதாவது வேலை என்று வந்திருப்பார். சத்யா வருவது தெரிந்து பார்த்துவிட்டுப் போவார் என எண்ணினாள்.
மற்றபடி வீட்டுப் பெண்களை மாமியார் தான் வரவழைத்திருப்பார். அவருக்குத் தான் தும்மினால் கூட பெண்கள் வரவேண்டுமே. அதனால் வந்திருப்பார்கள் என்று நினைத்தாள்.
சத்யா அவள் பெற்றவரோடு உள்ளே வந்ததும், “நல்லா இருக்கீங்களா மாமா” என்று பெரியவரை விசாரித்தபடி தான் வந்தாள். அவள் பெற்றோரும் “வணக்கம் பெரிய சம்பந்தி” என்றபடி தான் வந்தனர்.
“விசாரிக்கிறது எல்லாம் இருக்கட்டும். முதலில்“ என்று காமாட்சி ஆரம்பித்தர் . பெரியவர் தான் “இப்போவே ஆரம்பிக்கணுமா? அவளோ தொலைவுலர்ந்து வந்திருக்காங்க. பிள்ளைத்தாய்ச்சி பொண்ணு. முதலில் தாகத்துக்கு கொடுத்துட்டு, வயிறு நிறைய வை. பின்னாடி பேசிக்கலாம்” என்றார்.
சத்யாவிற்கு சுருக்கென்று இருக்க, அவள் பெற்றோரோ திடுக்கிட்டு நின்றனர்.
“என்னங்க சமபந்தி விஷயம்?” எனக் கேட்க, பெரியவர் மீண்டும் “ஐயா, முதலில் சாப்பிட்டு வாங்க. உங்க மக இருக்கிற நிலைக்கு நேரத்துக்கு சாப்பிடணும். வயித்திலே இருக்கிற சிசு காத்துக் கிடக்கக் கூடாது” என்றார்.
சத்யாவிற்கும் என்னவோ சரியில்லை என்று தோன்றினாலும், ரொம்பவே பசித்ததால், தன் பெற்றோரைப் பார்த்தாள். அவர்களும் வந்து அமர, அமுதா, அகிலா தான் பரிமாறினார்கள். மாமியார் வந்து பரிமாறனும் என்று எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் சம்பந்தி என்ற முறையில் என்ன வேண்டும் என்று கேட்கவோ, இந்த இந்த பதார்த்தங்களை போடு எனத் தன் மகளுக்குச் சொல்லவோ இல்லை. சொல்லப் போனால், யார் வீடோ என்பது போல கூடத்திலே அமர்ந்து இருந்தார்.
மூவரும் சாப்பிட்டு எழுந்து வரவும், சத்யாவிற்கு ரெஸ்ட் ரூம் சென்று வர வேண்டும் போலிருக்க, மேலே தன் கணவன் அறைக்குச் செல்ல படி ஏற வந்தாள்.
அப்போது காமாட்சி “இந்தா. முதல்ல இங்க வா. பெரியவர் கிட்டேப் பேசி முடிச்சிட்டு என் மவன் ரூமுக்குப் போகலாம்” என்றார்.
சத்யா “இப்போ களைப்பா இருக்கு, மாமா இங்க தானே இருப்பாங்க. கொஞ்சம் கழிச்சு வந்து பேசறேன்” என்றாள். அப்போதும் அவளுக்கு அவர் பஞ்சயாத்துப் பேச வந்திருப்பார் என்ற எண்ணம் இல்லை.
என்ன பெற்றவர்கள் வீட்டில் நடந்ததை மாமா கிட்டே புகார் சொல்லக் கூப்பிடுவாங்க. அவர் பெரியவங்க கொஞ்சம் பார்த்தப் பேசுமான்னு சொல்லுவார். அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ளலாம் என்று மட்டும் தான் நினைத்தாள்.
“இந்தா பார்த்துக்கங்க. உங்க பொண்ணு பெரியவங்களுக்கு என்ன மரியாதை கொடுக்கிறான்னு” என்று காமாட்சி கேட்க, சத்யாவைச் சேர்ந்தவர்கள் திகைத்தனர்.
பெரியவரே மீண்டும் “காமாட்சி, தொட்டதுக்கும் குத்தம் சொல்லிட்டு இருக்காத. இன்னும் விஷயம் என்னனு கூட அவங்களுக்குத் தெரியலை. அதுக்குள்ளே மருமக பேசற எல்லாத்துக்கும் காரணம் தேடிட்டு இருக்க. நீ மொத அமைதியா உக்காரு. பின்னாடி அந்தப் பொண்ணப் பேசலாம்” என்றார்.
சத்யா ஒரு முறை எல்லாரையும் பார்த்துவிட்டு, அமுதாவிடம் “எனக்கு அவசரமா பாத்ரூம் போகணும். இந்த வீட்டிலே போகலாமா இல்லை பக்கத்து வீட்டு அக்கா கிட்டே கேட்டு அங்கே போயிட்டு வரட்டுமா” என்றாள்.
அமுதா பதறிப் போய் “அண்ணி, என்ன இப்படி எல்லாம் பேசறீங்க? அம்மாக்கு ஏதோ கோபம். எப்போதும் போல் அதைப் பெரிசுப் பண்ணிக்கிட்டு இருக்காகங்க. நீங்க மேலே போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு வாங்க.“ என்றாள்.
“நான் மேலே போகலை. இப்போ பின்னாடி மட்டும் போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
சத்யா உள்ளேச் செல்லவும், அமுதா அவள் அன்னையிடம் “அம்மா, நீ பிரச்சினையப் பெரிசாக்கிட்டு இருக்க. அண்ணா வந்த பிறகு பேசிக்கலாம். இப்போ சாதாரணமா பேசி அவங்க கூட இருங்க. பெரியப்பா நீங்களாவது சொல்லுங்க” எனக் கேட்டாள்.
“நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். கேக்க மாட்டிக்கா உங்கம்மா. இன்னிக்கு எது நடந்தாலும் அதை அவ தான் பொறுப்பேத்துக்கணும்” என்று விட்டார் பெரியப்பா.
சத்யா வெளியே கூடத்திற்கு வரவும், தன் பெற்றவர்களோடு நின்று கொண்டாள். அதிக நேரம் நிற்க முடியாது என்று எண்ணியவளாக, தரையில் உட்காரப் போனாள். அகிலா தான் சட்டென்று ஒரு நாற்காலி எடுத்து அவள் அருகில் வைத்தாள். சிறு நன்றியோடு அவளைப் பார்த்தபடி சத்யா அதில் அமர்ந்தாள்.
பெரியப்பா தான் பேச்சை ஆரம்பித்தார். “அம்மாடி மருமகளே, நான் தான் இங்கே இருக்கும்போதே சொன்னேனே. நாடகக்காரங்க பழக்கமெல்லம் வேணாம்னு. அப்புறம் ஏன் அவங்களை வீட்டுக்குக் கூட்டி வச்சு பேசிட்டு இருக்க. நம்மூட்டு சனங்களுக்கு டிவிலே வர எல்லாத்தையும் பார்க்கணும். அதைப் பத்தி புறணி பேசணும். ஆனா நம்ம வீட்டில அவங்க சம்பந்தபட்ட எந்த சமாச்சாரமும் வந்துடக்கூடாது. இது தெரிஞ்சி தானே உன்னை அன்னைக்கே சூதானமா இருந்துக்கோன்னு சொன்னேன். “ என்றார்.
பெரியவர் காமாட்சிக்காக வந்ததாகக் கூறிக் கொண்டாலும், உண்மையில் சத்யாவிற்கு தான் ஆதரவாக இருந்தார். அவரைப் பொருத்தவரை சத்யாவின் செயல்களில் எந்த தவறும் இல்லை. காமாட்சி தான் இல்லாத பூதத்தை நினைத்துப் பயப்படுகிறார்.
பெரியப்பாவின் பேச்சைப் புரிந்துக் கொண்டவளாக “மாமா, இந்த வீட்டிற்கு நான் யாரையும் கூப்பிடலையே. என்னைப் பெத்தவங்க வீட்டிற்கு யார் வரணும், போகணும்னு நான் கூட தலையிட முடியாது. அப்புறம் என் மாமியார் அங்கே வந்து நாட்டாமை பண்ணுவாங்களா?” எனக் கேட்டாள் சத்யா.
பெரியவர் பேசுமுன் காமாட்சி, “உன் அப்பனாத்தா வீட்டிற்கு வரவங்க எல்லாரையும் நான் கேட்டேனா என்ன? உன்னைப் பார்க்க வந்தவங்களத் தான் பேசினேன். அதுவும் அவங்க பேசினதுக்குத் தான் பேசினேனே தவிர, சும்மா யாரையும் பேசலையே. அதுக்கு நீ எப்படிப் பதில் பேசின? அதையும் அவங்க கிட்டேச் சொல்லு ” எனப் பெரியவரைக் காண்பித்தார்.
“சரி. நீங்களும், நானும் பதிலுக்குப் பதில் பேசறது புதுசா என்ன? அதுக்கு இப்போ ஏன் பெரிய மாமாவக் கூப்பிட்டு வச்சு பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கீங்க?”
“எனக்கு நீ திரும்பி நடிக்கப் போவேனு தோணிக்கிட்டே இருக்கு. அப்படி போனா, ஊர் பூரா உன்னைப் பார்க்கும், ஏசும். இதுக்கு முன்னாடி எப்படியோ, இப்போ நீ காமாட்சி மருமக. உன்னைப் பத்தி ஊர் பேசறது எனக்குப் பிடிக்கலை”
சத்யாவின் அப்பா, “சம்மந்திம்மா, என் பொண்ணு நடிக்கப் போனது டிவிலே இல்லை. பரதநாட்டியம், பாட்டுக் கச்சேரி மாதிரி மேடை போட்டு நடக்கிற நாடகத்தில் தான் நடிச்சா. இந்த ஊர் பக்கம் எல்லாம் திருவிழாக்கு நாடகம் போடுவீங்க இல்ல அந்த மாதிரி தான். அதில் என்ன உங்களுக்குப் பிரச்சினை?” எனக் கேட்டார்.
“ஏங்க, பொண்ணப் பார்த்து முடிவு பண்ணும் போதே சும்மா பொழுது போக்கத் தான் நடிச்சுட்டு இருக்கா. கல்யாணத்துக்குப் பிறகு விட்டுடுவான்னு தானே சொன்னீங்க? இப்போ மாத்திப் பேசிட்டு இருக்கீங்க?”
“இப்போவும் சொல்றேன். அவ கிட்டே வேண்டாம்னு சொன்னாக் கேட்டுப்பா. ஆனால் நீங்க அவ செய்யற வேலையைக் குறைவாப் பேசினா, அதைச் செய்யாம விடமாட்டா. இப்போதைக்கு இப்படியே விட்டுடறது நல்லது “ என்றார் சத்யாவின் தந்தை.
“அப்படி என்ன அதிசயமா பொண்ணை வளர்த்து இருக்கீங்கன்னு கேக்கறேன். இவ்ளோ பேசறேன். ஒரு வார்த்தை இனிமேல் நான் நடிக்க மாட்டேன். அது சம்பந்தப்பட்ட யார் கூடவும் பேச்சு வார்த்தை வச்சுக்க மாட்டேன்னு சொல்லறளா. இல்லை நீங்க தான் உங்க பொண்ணுக்கு அப்படிச் சொல்லுன்னு எடுத்துச் சொல்றீங்களா? எதை நம்பி உங்க பொண்ண, என் பையன் கூட வாழ விடறது?”
சத்யாவின் தந்தை ஆடிப்போய் விட்டார். இது என்ன பொண்ணு வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிறதே என்று பதறிவிட்டார்.
சத்யாவின் தந்தை ஈஸ்வரன், “சம்பந்தி அம்மா, உங்க பேச்சுக்கள் சரியில்லை. என் பொண்ணைப் பத்தி எந்த விஷயமும் மறைக்கலை. நீங்க பேசறதைப் பார்த்தா, என் பொண்ணு என்னவோ தப்பான வேலைப் பார்த்த மாதிரி எல்லோருக்கும் தோண ஆரம்பிச்சிடும். கொஞ்சம் வார்த்தைகளைப் பார்த்துப் பேசுங்க” என்றார்.
சந்திரனின் பெரியப்பா “காமாட்சி, நீ கல்யாணம் பேசப் போகும் முன்னே எந்த யோசனையும் இல்லாம, உன் பையன் அழகு, படிப்பு, வேலைக்கு ஏத்த மாதிரி இருக்கணும்னு முக்கியம் கொடுத்து சத்யா பொண்ண கட்டி வச்ச. பட்டணத்தில் படிச்சு, வளர்ந்த பொண்ணு அது பழக்கத்துக்குத் தான் இருக்கும். உனக்கு அந்த வளர்ப்பு சரியாப்படலைனா, இங்ஙன சுத்தி நம்ம சொந்தத்தில் பார்த்துக்கணும். அதை விட்டுட்டு கூட்டிட்டு வந்து அந்தப் பிள்ளைய அசிங்கப்படுத்தக் கூடாது. சத்யா தப்பா எதுவும் செய்யலை. உன் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை ஏடா கூடமா பேசினா நீ சும்மாயிருப்பயா? அதுவும் அவ அப்பா வீட்டில் இருக்கப்ப சண்டை போட்டிருக்க. அதோட சும்மா இல்லாம, ஒண்ணும் இல்லாத இந்த விஷயத்துக்கு, நம்ம நாட்டை உசிரா மதிச்சு போராடிட்டு இருக்க உன் மவன் கிட்டேயும் சொல்லியிருக்க. இதுக்கு மேலேயும் நீ இம்புட்டு செய்யறது நல்லா இல்லை சொல்லிட்டேன்.” என்றார்.
இதைக் கேட்டதும் சத்யா “மாமா, சந்துரு கிட்டே சொல்லிட்டாங்களா? சந்துரு பேசினாரா? என் கிட்டே பேசவே இல்லையே? நான் உண்டாகியிருக்கிற விஷயத்தைக் கூட நாங்க இன்னும் பேசிக்கலை.” என கண் கலங்கக் கூறும்போது அங்கிருந்த எல்லோருக்குமே வேதனையானது.
ஆனால் காமாட்சியோ “பாருங்க பாருங்க, புருஷன் பேரச் சொல்லிப் பேசிட்டு இருக்கா?” என்று அதற்கும் பேசினார்.
தற்போது பெரியவர் காமாட்சியை நன்றாக முறைக்கவே செய்தார்.
பின் “சந்திரனுக்கு உன்னைப் பற்றித் தெரியும்மா. அவனும் ஒரு தடவை தான் போனில் பேசினான். இவங்க உன் வீட்டுக்கு வரும்போது வாங்கிட்டு வந்தது எல்லாமே அவன் தான் சொல்லி அனுப்பினான். பத்து நாள் முன்னாடி அங்கிருந்து ஒரு பையன் லீவுக்கு வந்தான். அவன் கிட்டே ஒரு லெட்டர் கொடுத்து விட்டு உன்னை ஜாக்கிரதையாப் பார்த்துக்கச் சொல்லியும், உனக்குப் பிடிச்சதை எல்லாம் எழுதிக் கொடுத்து, அதை வாங்கி கொடுக்கச் சொல்லியும் எழுதியிருந்தான். உன்னைப் பார்த்துட்டு வந்ததும் காமாட்சி தான் அவசரமாப் பேசணும்னு பொய் சொல்லி அவன் கிட்டே பேசியிருக்கா. இதைப் பற்றி சொல்லப் போனதும் திட்டிட்டு ஃபோனை வச்சுட்டான். அதுக்குப் பிறகு அவன் ஃபோன் பண்ணவே இல்லை” என்றார் .
காமாட்சி விடாமல் “இது எல்லாம் இருக்கட்டும். இப்போ அவ என்ன சொல்றா? கேளுங்க. இல்லாட்டா இப்படியே அவ பெத்தவங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க. என் மவன் நேரில் வரும்போது இரண்டில ஒண்ணு முடிவு பண்ணிடனும்” என்றார்.
இத்தனையிலும் சத்யாவின் மாமனார் லோகநாதன் எதுவுமே பேசாமல் இருந்தார். அது எல்லோருக்குமே கோபத்தைக் கொடுத்தது. சந்திரனின் சகோதரிகள் கூட எவ்வளவோ தங்கள் அன்னையிடம் பேசியும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் கைப்பிசைந்தனர். எல்லோருக்குமே எரிச்சலாக வந்தது. வீட்டு மாப்பிள்ளைகள் மச்சான் இல்லாத இடத்தில் என்ன பேசுவது என்று அமைதியாக இருந்தனர். சந்திரனின் பெரியப்பா மட்டுமே காமாட்சியிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.
சத்யாவிற்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. காமாட்சியின் எதிர்பார்ப்பு தன் சொல்லுக்குக் கட்டுப்படும் தன்னுடைய குடும்பம் போன்று சத்யாவும் இருக்க வேண்டும் என்பதே. ஆனால் சத்யாவின் குணாதிசயம் அப்படிப்பட்டது கிடையாது. தன் செயல்கள் மீது தவறு இல்லாத பட்சத்தில் தன் எண்ணத்தில் நிலையாய் நிற்பாள்.
அதே சமயம் சத்யாவைப் பற்றி அந்த வீட்டினரின் மற்ற உறுப்பினர்களை விட காமாட்சியும் நன்றாகவேத் தெரிந்து வைத்திருந்தார். அதனால் தான் மற்றவர்கள் முன்னால் அவளைக் கட்டுப்படுத்தி வைத்தால் மட்டுமே பிற்காலத்தில் சத்யாவால் தன்னை மீறி ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தார்.
காமாட்சி போன்றவர்களுக்கு ஒரு அபிப்ராயம் ஒருவர் மீது தோன்றினால் அதை மாற்றிக் கொள்வது என்பது எல்லாம் காலத்திற்கும் நடவாத காரியம். காமாட்சியின் இந்த குணத்தை இதுவரை புரிந்துக் கொண்டது இரண்டே பேர் தான். ஒன்று சந்திரனின் தந்தை. மற்றொன்று சத்யா.
ஒருவேளை சந்திரனின் இருப்பிடம் இங்கேயே இருந்திருந்தால் அவனால் கண்டுகொண்டிருக்க முடியும். ஆனால் மனிதர்களைப் புரிந்து கொள்ளும் வயது வரும்போது இராணுவத்தில் சேர்ந்திருக்க, அத்தனை தூரம் அம்மாவைப் பற்றி அறியவில்லை.
மற்ற பிள்ளைகளுக்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாத காரணத்தால் தங்கள் அன்னையின் குணம் பற்றிப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
எல்லோரும் என்ன சொல்வது என்று யோசிக்க சத்யா நேரடியாக பெரியப்பாவிடம் “மாமா, நான் அப்பா வீட்டுக்குக் கிளம்பறேன். சந்துரு வரும்போது நேரில் பேசிக்கலாம். இப்போ அவர் கிட்டே இப்போ யாரும் எதுவும் பேச வேண்டாம்.” என்றாள்.
எல்லோரும் “அவசரப்படாதீங்க. அவங்க சொல்றதை பெரிசா எடுக்க வேண்டாம். சந்திரன் இருந்தாலும் அதைத்தான் சொல்லியிருப்பார்” என்று சத்யாவைச் சமாதானப் படுத்த முயற்சித்தனர்.
சத்யா பதிலுக்கு “இல்லை வேண்டாம். இவங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டற அளவு எனக்கு பொறுமை கிடையாது. நான் பதில் பேசிட்டு தான் இருப்பேன். ஆனா உங்க அம்மாக்கு எதைச் சொன்னாலும் தப்பா தான் தோணும். இந்த நிலைமையில் நான் இங்கேயிருந்தா பாதிக்கப்படப்போறது என்னோட சேர்த்து என் வயித்தில் வளரும் குழந்தையும் தான். குழந்தைப் பிறக்கிற சமயம், அவருக்கும் லீவு கிடைச்சு வர வாய்ப்பு இருக்கு. அப்போ பேசிக்கலாம். அதுவரை நான் அம்மா வீட்டில் இருக்கேன்” என்றாள்.
இப்போதும் காமாட்சி “நான் நினைச்சேன். இதுதான் நடக்கும்னு. இப்போ இவ இங்கேருந்து கிளம்புவா. பின்னாடி என் மவன அங்கே கூட்டிக்குவா. என் கண்ணு மறைவாப் போனதும், அவ இஷ்டத்துக்கு நாடகத்திலே நடிக்கறேன். டிவிலே பாடறேன்னு போவா. அந்த வம்சமே அப்படித்தான் போலிருக்கு. பெரியவங்க நீங்களே என்னனு பேசுங்க” என்றார்.
இதுவரை கூட திருப்பி நடிக்கும் எண்ணம் இல்லாத சத்யாவிற்கு தற்போது செய்தால் என்ன என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பித்து இருந்தது. அப்போதும் அந்த எண்ணத்தைத் தொடர விடாமல், காமாட்சியைத் தவிர்த்து மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தாள்.
“நான் என்ன பண்ணப் போறேன்னு இதுவரை எதுவும் முடிவு செய்யலை. இப்போதைக்குக் குழந்தை பிறந்து, ஸ்கூல் போற வரை வளர்ந்த பின்னாடிதான் எதுவும் முடிவு செய்வேன். அப்போதும் சந்துருகிட்டே கேட்டுத் தான் செய்வேன். ஆனால் இங்கேயிருந்தா இவங்க பேசற பேச்சுக்கு, நான் நாளைக்கேக் கூட நடிக்கப் போவேன் “ என்றாள்.
பெரியவர் “நீ சொல்றதும் சரிதான் மருமகளே. இனிமேல் உன் மாமியார் கிட்டே சந்திரன் பேசிக்கட்டும். நீ நல்லபடியா பிள்ளைப் பெத்து வா.” என்றார்.
காமாட்சி “அதெப்படி நீங்க அவ பக்கம் பேசலாம். நம்ம வீட்டுப் பக்கம் பேசத் தானே உங்களைக் வரச் சொல்லியிருக்கு” என,
“இங்கே பாரு காமாட்சி, நான் வந்தது மருமகப் பொண்ணு பக்கம் பேசத்தான். கல்யாணத்துக்கு மொத நாளு எல்லோரும் பேசினப்போவே இப்படி ஒரு நாள் நீ வந்து நிப்பன்னு தோனிச்சு. அப்போலர்ந்து சத்யாப் பொண்ணையும் கவனிச்சிட்டு தான் இருக்கேன். சத்யா சாதரணாமா தான் இருக்கு. உனக்குத் தான் பிடிவாதம். வாதத்துக்கு மருந்து கொடுக்கலாம். பிடிவாதத்துக்கு மருந்து இல்லை. உனக்கு மருந்து உன் பையன் வந்து கொடுக்கட்டும். இப்போ சத்யா அவ பெத்தவங்களோட் கிளம்பட்டும்” என்று முடித்தார்.
அதற்கு பதிலாக காமாட்சி “அப்படி எல்லாம் விட முடியாது. நாளைக்கு என் புள்ள வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்றது?” என்றார்.
“அப்போ இந்த பஞ்சாயத்தை இப்போ வச்சிருக்கக் கூடாது. உன் புள்ள வந்ததும் பேசியிருக்க வேண்டியது தானே ?” என்றார் பெரியவர்.
இத்தனை நேரம் எதுவுமே பேசாமல், தலையிடாமல் இருந்த லோகநாதன் இப்போது “சம்பந்தி, உங்க பொண்ணை அழைச்சிக்கிட்டு நீங்க கிளம்புங்க. மாமியார், மருமக பிரச்சினைக்குள்ளே எந்நாளும் யாரும் பஞ்சயாத்து பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. ஒருவேளை ஏதோ ஒரு பக்கம் தாங்க முடியாமப்போய் தப்பான முடிவ எடுத்துட்டா, எதுவும் செய்ய முடியாம போயிடும். என் மகன் வந்தபிறகு தனிக்குடித்தனமோ, இல்லை அவன் கூட கூட்டிட்டுப் போறானோ அதை அவன் முடிவு செய்துக்கட்டும். சந்தோஷமா புள்ளையச் சுமக்க வேண்டிய இந்த நேரத்தில், கஷ்டத்தைச் சுமக்கக் கூடாது. அது ரெண்டு பேருக்கும் நல்லது கிடையாது. அதனால் நான் சொல்றபடி கிளம்புங்க.” என்றார்.
இத்தனை நாள் எதற்குமே காமாட்சியை மீறிப் பேசியிராத தங்கள் தந்தையை அதிசயமாகப் பார்த்தனர் அமுதாவும், அகிலாவும்.
சத்யா ஆச்சரியமாகப் பார்த்தாலும், மாமனார் பிரச்சினைகளைத் தவிர்க்க விரும்புகிறார் எனப் புரிந்துக் கொண்டாள்.
“சரி மாமா, ஆனால் உங்க பையன் கிட்டே சொல்லிட்டுக் கிளம்பறேன். அதுக்கு ஏதாவது வழி இருக்கா?” என்று கேட்க, காமாட்சி முகம் பிரகாசமானது.
“அது என்னால் மட்டும் தான் முடியும். வீட்டில் இருந்து அவசரமா எதுவும் சொல்லணும்னா, என் பேரைத் தான் கொடுத்து வச்சிருக்கான் என் மகன். அப்படி அவன் கிட்டே பேசணும்னா நான் மனசு வச்சா தான் நடக்கும்” என்று கொக்கரித்தார் காமாட்சி.
அப்போது வீட்டில் டெலிஃபோன் மணி அடித்தது. வெளியூர் கால் எனத் தெரிய எல்லோரிடமும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. காமாட்சி தான் ஃபோன் எடுத்தார்.
“ஹலோ யாரு?” எனக் கேட்க, “நான் சந்திரன் பேசறேன்” என்றான்.
“இந்நேரத்துக்கு பேசற. வேலையெல்லாம் முடிஞ்சுதா? “ என்றார்.
“இல்லை. வேலைக்கு நடுவில் தான் பேசறேன். அங்கே சத்யா வந்தாச்சா? “ எனக் கேட்டான்.
முகத்தைச் சிணுக்கியபடி “ஆ ஆ. “ என்றார் காமாட்சி.
“அவக் கிட்டே ஃபோனைக் கொடுங்க” என்றான்.
காமாட்சி லேசில் தருவதாக இல்லை. இன்றைக்கு சத்யா இங்கே வரும்போது பெரியவரைக் கூப்பிட்டதுக் கூட கொஞ்சம் பயம் ஏற்படுத்த மட்டும்தான். அதற்காக அவளைப் பெத்தவங்க வீட்டிற்கு அனுப்புகிற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் பெரியவர் சத்யாவிற்கு ஏதுவாகப் பேசவும், காமாட்சியின் பிடிவாதம் அதிகமாகியது.
இப்போது தன் கணவர் வேறு மருமகளுக்கு ஆதரவாகப் பேசவும், இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை தன் பேச்சு தான் எடுபட வேண்டும் என்ற எண்ணம் வலுவாகியது. அதைத் தன் மகன் மூலம் தான் சாதிக்க வேண்டும் என்பதால் சந்திரனிடம் பேச்சை வளர்த்தார்.
“கொடுக்கறேன். நீ அவ கிட்டே நான் சொல்றபடி நடந்துக்கணும்னு கண்டிஷனா சொல்லு”
“ஏன்? என்ன விஷயம்?”
“அதான் அன்னைக்கேப் பேசினேனே. அவ நடவடிக்கை எதுவும் சரியா இல்லை. பழையப் பழக்கத்தை எல்லாம் இன்னமும் தொடர்ந்துட்டு இருக்கா. அது நம்ம குடும்பத்துக்குச் சரிப்படாது. அதனால் நான் என்ன சொல்றேனோ அதைக் கேட்டுக்கச் சொல்லு” என்று காமாட்சி கூறவும், அத்தனை பேரும் அதிர்ந்து பார்த்தனர்.
இதற்கு முன் நடந்த விவாதங்களை நேரில் கேட்டிருந்தால் கூட, காமாட்சியின் இந்த வார்த்தைகள் கேட்பவர்களை சத்யா மீது தவறு இருக்குமோ என யோசிக்க வைக்கும். எங்கேயோ முகம் பார்த்துக் கூட உணர்வுகளை அறிய முடியாத நிலையில் இருக்கும் சந்திரனுக்கு எப்படி இருக்கும்?. முதலில் தன் மனைவியைப் பற்றியப் பேச்சு என்ற வருத்தம். அடுத்து தான் இல்லாத நேரத்தில் என்ன நடக்கிறதோ என்ற பதட்டம் என எத்தனை உணர்வுகளைக் கையாள வேண்டியிருக்கும். இதைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் காமாட்சிப் பேசவும், மற்றவர்கள் உண்மையில் பயந்துதான் போயினர்.
அந்த நிமிடம் நிலைமையைக் கையில் எடுத்த சத்யா சட்டென்று போனைப் பிடுங்கி “சந்துரு, நீங்க எதுவும் வொர்ரி பண்ணாதீங்க. அத்தைக்கும், எனக்கும் எப்போதும் நடக்கும் பிரச்சினை தான். நான் பார்த்துக்கறேன். நீங்க கவலைப்படாதீங்க” என்றாள்.
சத்யாவின் குரல் கேட்டதும், “சத்யா, எப்படி இருக்க? சாரிமா, இங்கே ஃபோன் பேசக்கூடிய சூழ்நிலை இல்லை. கிடைச்ச சந்தர்ப்பத்தில் எப்போதும் போல் நம்ம வீட்டிற்குப் பேசினேன். அப்போதான் விஷயம் சொன்னாங்க. டாக்டர் கிட்டேப் போனியா? குழந்தை வளர்ச்சி, உன்னோட உடம்பு எல்லாம் எப்படி இருக்குன்னு சொன்னாங்களா?” எனப் படபடத்தான்.
சந்திரனின் குரலில் தெரிந்த ஏக்கமும், ஆர்வமும், சத்யாவை வருத்தப்படுத்த, அவனின் கேள்விகளுக்குப் பதில் சொன்னாள். மேலும் சிறிது நேரம் இவர்கள் பேசிக் கொண்டிருக்க, இப்போது காமாட்சி சட்டென்று ஃபோனைப் பிடுங்கினார்.
“தம்பி, நான் சொன்னதை அவகிடடேப் பேசுன்னா, வேறே பேசிட்டு இருக்க. வர வர ரொம்பத்தான் திமிராப் போகுது உன் பொண்டாட்டிக்கு.”
சந்திரன் இப்போது அமைதியாக அன்னைப் பேசியதை உள்வாங்கியவன் சத்யாவிடம் போனைக் கொடுக்கச் சொன்னான். காமாட்சி முகத்தை வெட்டியபடி அவளிடம் கொடுக்க, சத்யா “சொல்லுங்க சந்துரு” என்றாள்.
“என்ன பிரச்சினைன்னு கேட்டு ரெண்டு பக்கமும் கேட்டு சரி செய்யக்கூடிய நிலையில் நான் இல்லை சத்யா. அம்மா கிட்டே உன்னால் இருக்க முடியாதுன்னு தோணினா, குழந்தைப் பிறக்கிற வரைக்கும் உன் அம்மா வீட்டில் இரு. நான் லீவு கிடைச்சு வரும்போது என்ன பண்ணறதுன்னு யோசிக்கலாம்.” என்றான் சந்திரன்.
சத்யாவிற்கு வருத்தமாக இருந்தது. பெற்றோர் வீட்டைத் தன் வீடு என்று திருமணத்திற்குப் பிறகு உரிமை கொண்டாட முடியவில்லை. கணவன் அருகில் இல்லாதபோது அந்த வீட்டிலும் உரிமையாக இருக்க முடியவில்லை.
காமாட்சியை எளிதாக எடைப் போட்டுவிட்டோமோ என்று நினைத்தாள். சந்திரனிடம் பேசி, தான் இங்கேயே இருந்தாலும், காமாட்சியின் எண்ணம் எல்லாம் தன் கை ஓங்கி விட்டது என்பதாகத் தான் இருக்கும். அதைக் கொண்டு சத்யாவிடம் மேலும் வம்பு வளர்க்கவேச் செய்வார்.
இத்தனைப் பிரச்சினைகள் நடுவில், தன் குழந்தைப் பிறப்பை மகிழ்ச்சியாகக் கையாள முடியாது. அதைச் சந்திரனும் உணர்ந்து சத்யாவைப் பிறந்த வீட்டில் இருக்கச் சொல்கிறான்.
சத்யாவும் “சரி சந்துரு. எனக்கும் அதுதான் தோணியது. ஆனால் உங்கக் கிட்டே கலந்துக்காம முடிவு செய்யத் தான் யோசித்தேன்” என்றாள்.
“சரிம்மா, இனி என்னால் எப்போப் பேச முடியும்னு தெரியலை. நான் இப்போ ஃபுல்லா மூவிங் ட்ரூப்லே இருக்கேன். எல்லார் கிட்டேயும் அந்த விவரங்கள் கொடுக்க முடியாது. என்னால் முடியறப்போ லெட்டர் போடறேன். இப்போ இதுக்கு மேலே பேச இங்கே பர்மிஷன் கிடையாது. உடம்பப் பார்த்துக்கோ. குழந்தை நல்லபடியா பிறக்க என்னவோ அதைச் சரியாச் செய். பைமா“ என்று விட்டு போனை வைத்தான் சந்திரன்.
சத்யா எல்லோரையும் பார்த்து விட்டு “அவர் என்னை அப்பா வீட்டில் இருக்கச் சொல்லிட்டார்” எனவும், காமாட்சியின் முகம் சுருங்கிப் போனது. மற்றவர்களுக்கு சிறு வருத்தம் என்றாலும், ஒருவிதத்தில் நல்லது தான் என்றே எண்ணினார்கள்.
-தொடரும்-
ரொம்ப நல்ல அத்தியாயம். வாக்குவாதம் சூடு பிடிக்க எனக்கே ஒரு வித பதற்றமாகத்தான் இருந்தது. என்னாலேதான் போன் பண்ண முடியும்னு காமட்சி சொன்ன போது டேஷன் ஆச்சு. சட்டுன்னு சந்திரன் போன் பண்ணது ரொம்ப பிடிச்சது. நல்ல ட்விஸ்ட். ஒரு மாதிரி நிம்மதியா இருந்தது. கணவன் தூரத்தில் இருக்கும் போது பெண்களின் நிலை ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
நன்றி நன்றி. இந்த எபிசோட் எழுதும் போது இருந்த தயக்கம் எல்லாம் உங்க கமெண்ட் பார்த்ததும் போயே போச்சு. சரியா தான் கொண்டு போறோம்ன்னு ஒரு நிம்மதி. மிக்க நன்றி
இத்தனை பேர் சொல்லியும் என்ன ஒரு பிடிவாதம் இந்த காமாட்சி க்கு, சரியான ராட்சசி 😡😡😡😡😡
கோதை மாவே திட்ட வச்சுட்டாங்க. உங்கள் கமெண்ட் பார்த்து மிகவும் சந்தோஷம். நன்றி மா
Really very much true. Sathya , problems handle pandrathu sari ya iruku.
Mega serial thaakam appove maamiyar gal kita vanthachu nu ninaikiren.
Oru pregnant lady oda mananilai pathi ,maamiyar purinchukalai na enna artham?
Chandran avanga ammavai purinthu vaithu irukanum.
எக்ஸாக்ட்லி. இதுக்கு முன்னாடியும் மாமியார், மருமகள் பிரச்சினைகள் இருந்தாலும், அதில் மகனின் வாழ்க்கை பற்றி கொஞ்சம் சிந்தனை இருக்கும். இப்போது எல்லாம் தன்னாலமே பெரிதாக இருக்கிறது. அதற்கு மெகா சீரியல் தாக்கமும் ஒரு காரணமே. நன்றி நன்றி
Mixture mama spot la onnu kuduththurunthaarunnaa entha amma eppdi vaayaaduma…irritating fellow 🤬🤬🤬🤬
ஹ . ஹ. நான் அப்படி யோசிக்கலையே. நமக்கு இந்த அடிதடி எல்லாம் ஆகாது. அதனால் மிக்சர் மாமாவ அடிக்க விடலை. நன்றி நன்றி
நீ சொல்லி நான் என் கேக்குறதுன்னு ஒரு வீம்பு வரும் அந்த வீம்பு இப்ப காமாட்சி அம்மாவுக்கு வந்திருக்கு இதே வீம்பு சத்தியாவுக்கும் வரும்ன்னு இந்த அம்மாவுக்கு தெரியாம போச்சி பாவம் சந்துரு அம்மாவ பத்தி சரியா தெரியாம அவஸ்தை படபோறான்
எனக்குத் தெரிஞ்சு சந்துருவிற்கு அம்மாவை விட, சத்யாவை சமாளிப்பது தான் கஷ்டமா இருக்குமோனு தோணுது. பார்க்கலாம். மிக்க நன்றி
Realy superb oruthar ennam polave innoruthar ninaikirathu la periya varam than appadi tha chandru sathya va appa veetuku poga sollitan inga iruntha kandipa ethana pesi kamatchi amma kastapaduthum athu endu perkum nallathu illa athe chandru appa sonna ethana nadantha athuku yarum poruppa agavum mudiyathu ne kelambu sathya
சத்யா கிளம்பிட்டா. எல்லோருக்கும் நல்லதுனா ஒரு சில முடிவுகள் எடுக்கிறதில் தப்பே கிடையாது தானே. நன்றி நன்றி
இந்த காமாட்சி தன்னோட பெத்த பையன் வாழ்க்கையை கெடுத்து விட்டுருக்கும்
அப்படித் தான் போல் . மிக்க நன்றி மா